Tuesday, June 30, 2009

கை ரேகை

அமித்து அம்மா பதிவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.தீஷுவிற்கு கைரேகையைப் பற்றி சொல்லிக் கொடுக்கலாம் என்று அவள் இரு கைகளையும் வரைந்து கொண்டேன். இங்க் பேடு இல்லாததால், வாட்டர் கலரில் ஒவ்வொரு விரலாகத் தொட்டு, வரைந்து வைத்துள்ள கையில் அந்த விரலுக்குரிய விரலில் வைக்க வேண்டும். தீஷு ஒவ்வொரு விரலுக்கும் கலர்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டுயிருந்தாள். அவளுக்குப் பிடித்திருந்தது. அவள் பாஸ்போர்ட்டுக்கு அவள் கட்டைவிரல் ரேகையை எடுக்கும் முன் நாங்கள் பட்டபாடு ஞாபகம் வந்தது. அனைத்து விரல்களையும் வைத்து முடித்தவுடன், ரேகைகளை Magnifying glass மூலம் காட்ட எண்ணியிருந்தேன். ஆனால் தண்ணீர் மிகுதியாக வாட்டர் கலரில் பயன்படுத்திவிட்டோம் என்று நினைக்கிறேன். ரேகைகளைப் பார்க்க முடியவில்லை. மீண்டும் இங்க் பேடு வாங்கி செய்து பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

சோழிகளை தினமும் ஒரு முறையேனும் உபயோகப்படுத்தி விடுகிறோம். தற்பொழுது ஆட் / ஈவனுக்கு அடுத்து பிரபலம் இந்த விளையாட்டு. இந்த விளையாட்டில் சோழிகளை குவியலாகப் போட்டு விட்டு, அருகிலுள்ள சோழிகளை இடிக்காமல் ஒவ்வொரு சோழியாக எடுக்க வேண்டும். முறை மாற்றி மாற்றி நாங்கள் இருவரும் விளையாடுவோம். தீஷுவிற்கு சோழிகளை குவிக்கும் பொழுது சோழிகள் மிக அருகில் இல்லாத்தது போல் பார்த்துக் கொள்வேன். மிகவும் விருப்பமாக விளையாடுகிறாள். இது கவன ஒருங்கிணைப்புக்கு ஏற்றது.இது இன்று நாங்கள் புதிதாக செய்தது. சோழிகளைக் கண்ணாடி கற்களுடன் சேர்த்துக் கொண்டேன். கண்ணை மூடிக் கொண்டு, சோழிகளையும் கண்ணாடி கற்களையும் பிரிக்க வேண்டும். கண்ணாடி கற்கள் சோழிகளுடன் ஒப்பிடும் பொழுது பெரிதாக இருந்ததால் எளிதாகச் செய்தாள். அதைச் செய்தவுடன், சோழிகளுடன் கிட்டத்தட்ட சோழி அளவேயான பாசிகளைக் கொடுத்துப் பிரிக்கச் சொன்னேன். அதுவும் பிடித்திருந்தது.

Monday, June 29, 2009

இரு கை வட்டம்

தீஷுவிற்கு டிரேஸிங் செய்ய இப்பொழுது மிகுந்த ஆர்வம் இருக்கிறது. ப்ரொஜக்டரில் ஸ்லைட் (தீஷுவைப் பொருத்தவரை இது சி.டி) போட்டு, ஸ்லைட் படத்தைப் பெரிதாக்கி, படத்தை டிரேஸ் செய்வதை விருப்பமாக செய்ததால் நான் டிரேஸிங் பேப்பரால் செய்யக் கொடுத்தேன். கலரிங் செய்வதற்காக பிரிண்ட் அவுட் செய்ய வைத்திருந்த பூவை டிரேஸ் செய்ய வைத்தேன். ஓரளவு பூ வந்திருந்தது.அடுத்து அந்த பூவின் வரை கோடுகளில் (outline) ஸேப்டி பின்னால் ஒட்டைப் போட்டாள். கையில் பேப்பரை வைத்துக் கொள்ள சிரமமாக இருந்ததால் தெர்மோக்கோல் மேல் பேப்பரை வைத்து விட்டேன். விருப்பமாக செய்யவில்லை. ஆனால் பென்சிலால் தெர்மோக்கோலில் வரைய பிடித்திருந்தது. அதை விருப்பமாக செய்தாள்.மாண்டிசோரியின் தெர்மிக் பாட்டில்கள் போல் செய்ய வைக்கலாம் என்று தோன்றியது. பாட்டில்களை சூட்டின் அளவில் பிரிக்க வேண்டும் என்பது அதன் அடிப்படை. ஒரே வகையான ஆறு டம்ளர்களை எடுத்துக் கொண்டு, வெந்நீரை இரு டம்ளர்களிலும், தண்ணீரை இரு டம்ளர்களிலும், குளிர்ந்த நீரை இரு டம்ளர்களிலும் வைத்து விட்டேன். ஒரு டம்ளரைத் தொட்டு பார்த்து, அதன் ஜோடியைக் கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் விருப்பமாக திரும்ப திரும்ப செய்து கொண்டுயிருந்தாள். ஆனால் வெந்நீரில் சூடு தணிய ஆரம்பித்ததும், அதை ஊற்றும் (Pouring) ஆக்டிவிட்டியாக மாற்றிவிட்டாள். அதை மிகவும் விரும்பமாக செய்தாள். சலிக்காமல் டம்ளர்களிலும் பாட்டிலும் மாற்றி மாற்றி ஊற்றுவதை எப்படித்தான் ஒரு மணி நேரம் அவளால் செய்ய முடிந்ததோ.இது ஒரு புத்தகத்தில் படித்தது. இரு கைகளிலும் பென்சிலைக் கொடுத்து வரைய செய்தல். இரண்டு கைகளும் எதிர் திசையில் வரைய வேண்டும். நிறைய வட்டங்கள் வரைந்தோம். ஆனால் சில நிமிடங்களில் ஆர்வமிருக்கவில்லை.

Thursday, June 25, 2009

கவர்ந்த தருணங்கள் 25/06/09

1.
"தீஷு பல் தேய்கிறீயா?"
"கொஞ்ச நேரம் ஆகட்டும்.."
"ஏன்?"
"எனக்கு அப்ப தேச்சாத் தான் சந்தோஷமா இருக்கும்.."

2.
திங்கள் காலை எழுந்தவுடன்,
"இன்னைக்கு ஸ்கூலா?"
"ஆமா.."
"என்னைக்கு எனக்கு அடுத்து லீவு விடுவாங்க?"
(நான் மனதுக்குள்) அதுக்குள்ளேயும் இப்படி நினைக்க ஆரம்பிச்சாச்சா?

3.
சாப்பிடும் பொழுது நானும் என் கணவரும் முக்கியமான விஷயம் பேசிக் கொண்டு இருந்தோம். அவளுக்குப் புரியவில்லை என்றவுடன், "சாப்புடுறப்ப பேசக்கூடாது, Bad habit, பேசாம சாப்பிடுங்க"

4.
வேலை முடித்து உட்காரும் முன்

"பாத்ரூம் போகனுமா?"
"இல்லை.."
"பாத்ரூம் போகனுமா?"
"வேண்டாஆஆஅம்"
உட்கார்ந்தவுடன் 5-10 வினாடிகளில்
"பாத்ரூம் போகனும்"
(கோபமாக)"இப்பத்தான இரண்டு தடவக் கேட்டேன்.."
"வர்றப்பத்தான சொல்ல முடியும்"

5.
அப்பா தன் லஞ்ச் பையையும், தீஷு ஸ்கூல் பையையும் வைத்துவிட்டு வண்டி வரை சென்றுவிட்டனர். நான் எடுத்துக் கொண்டு சென்று
"உங்க இரண்டு பேருக்கும் பையா எடுத்துட்டு போக முடியாதா?"

அப்பா: "தீஷு, நீ ஏன் எடுத்துட்டு வரல?"
தீஷு: "நானும் உன்னைய மாதிரி தான்"
அப்பா: "என்ன என்னைய மாதிரி?"
தீஷு: "உன்னைய மாதிரியே மறந்துட்டேன்.."
அப்பாவால் ஒன்றும் பேச முடியவில்லை.

6.
"அப்பா, நாம டி.வி வாங்கினா இந்த இடத்தில் வைப்போம்"
"சரி"
"அங்க வைச்சா ஃப்ரிட்ச் இடிக்கும், அதனால இங்க வைப்போம்"
"சரி"
"இங்க எறும்பு வீடு இருக்குனு நினைக்கிறேன்..அப்புறம் எறும்பால போக முடியாது.. அதனால இந்த ஸைடு வச்சுடுவோம்"
எங்க வீட்டுல ஒரு டேகரேட்டர் இருக்காருனு நினைச்சிக்கிட்டேன்.

7.
தேதியைக் கிழித்து, தாளைத் தன் டிரெஸ் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே
"ஸ்கூலுக்குப் போயிட்டு வந்து இந்தத் தாளை வச்சி விளையாடுவேன் அப்பா"
"அப்புறம் எதுக்கு ஸ்கூல் டிரெஸுல வச்சு ஸ்கூலுக்கு எடுத்துக்கிட்டு போற?"
இப்படி கேள்வியை எதிர்பார்க்காததால் சற்று யோசித்துவிட்டு
"வீட்டிலேயே வைச்சிட்டுப் போனா எங்கயாவது தொலஞ்சிடுச்சுனா.. அதான் பத்திரமா எடுத்துட்டுப் போறேன்.."

8.
காலையில் எழுந்தவுடன் ஒரு பையன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் படத்தைப் பேப்பரில் பார்த்து,

Drinking Milk
Eating Food
Going School
Eating snacks
Going Sleep

என்று அவளேப் பாட்டை இயற்றி பாடிக்கொண்டிருந்தாள். அவள் மனதில் அன்றைய நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டுயிருந்திருக்கும்.

9.
அடுத்து பிரெஷ் பண்ணும் பொழுது

" Bacteria Bacteria go away"
"Bacteria Bacteria go away"
(Rain Rain go away) டியூனில் பாடினாள்..

Tuesday, June 23, 2009

ஸைலன்ஸ்...

புதுகைத்தென்றலின் ஐடியாப்படி, கார்ட்ஸ் & கவுண்டர்ஸ் செய்வது போல் வரிசையாக 1 முதல் 10 வரையிலான ஃப்லாஷ் கார்டுகளை அடுக்கி, அதன் கீழ் அதன் மதிப்புக்கு ஏற்றவாறு சோழிகளை அடுக்கி ஆட் ஈவன் சொல்லித் தந்தேன். முதலில் கார்டுகளை தரையில் பரப்பி, அதை வரிசைப்படி அடுக்கச் சொன்னேன். 55 சோழிகள் எடுத்து வைத்திருந்தேன். முடித்தவுடன் 1 சோழி எடுத்து ஒன்று எண் ஃப்லாஷ் கார்டுக்குக் கீழ் வைத்தேன். பின் தீஷுவே அனைத்தையும் செய்தாள். பின் ஒன்றை காட்டி ஒன்று தனியாக உள்ளது ஆட் என்றேன். அடுத்ததைச் சொல்லச் சொன்னேன். ஈவன் என்றாள். ஆனால் சோழிகள் அதிகமாக அதிகமாக அவளுக்குச் சொல்லுவதற்கு
நேரமானது. அதனால் ஆட் ஈவன் மாறி மாறி வருவது அவளுக்குத் தெரியவில்லை. பின் நான் அவள் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக மெதுவாக சொல்லிக் காட்டினேன். மாறி மாறி வருது என்றாள். சில நாட்களுக்கு விருப்பமாக செய்வாள். நன்றி தென்றல். இதுப் போல் கைடிங் கண்டிப்பா எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

மாண்டிசோரி ஸைலன்ஸ் கேம் போல் அமைதியாக சில நிமிடங்கள் உட்கார வைக்கலாம் என்று நினைத்தேன். ஸைலன்ஸ் கேமில் அனைத்து குழந்தைகளும் அமைதியாக உட்கார்ந்துயிருப்பர். சிறிது அசைவு கூட இல்லாமல் எங்கும் நிசப்தம். டைரட்டரஸ் ஒரு குழந்தையின் பெயரை மெதுவாக அழைத்தவுடன், அது அடுத்தவருக்குத் தொந்தரவு தரமால் மெதுவாக எழுந்து போய் விடும். இவ்வாறாக அனைத்து குழந்தைகளின் பெயர்களும் அழைக்கப்படும். படித்தவுடன் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கும் சிறு குழந்தைகளுடன் இது சாத்தியமா என்று தோன்றியது. முதல் நாள் மாலை கண்ணை மூடி அமைதியாக உட்கார் என்றால் ஒரு விநாடி கூட இருக்க முடியவில்லை. மறு நாள் காலையும் அதேப் போல் சென்றது. மாலை நான் உட்கார்ந்து இருப்பதேப் போல் சில விநாடிகள் உட்கார்ந்து இருந்தாள். ஆனால் அசைந்து கொண்டே இருந்தாள். தினமும் செய்து சிறிது சிறிதாக பழக்கப்படுத்தலாம் என்று நினைத்திருக்கிறேன். மனதிற்கு அமைதியும், கவன ஒருங்கிணைப்புக்கும் மிகவும் ஏற்றது.

இந்தப் புத்தகத்தில் குழந்தைகள் சூப் கொண்டுவருவதைப் பற்றிப் படித்திருந்தேன். அதேப் போல் தண்ணீரைத் தூக்கி நடந்து வரச் செய்தேன். முதலில் சிறு குழியுள்ளத் தட்டில் தூக்கச் சொன்னேன். சிந்தாமல் கொண்டு வர முடியவில்லை. அதனால் சற்றே பெரிய கிண்ணத்தில் அரை கிண்ணம் மட்டும் தண்ணீர் கொடுத்தேன். சிந்தாமல் கொண்டு வந்தாள். ஆனால் சிறிது விநாடிகளில் வெயிட்டாயிருக்கு என்று கீழே வைத்து விட்டாள்.

நேற்று முதல் முறையாக வரிசையாக இரண்டு இலக்க எண்களை எழுத வைத்தேன். 50 வரை எழுதினாள். அவளுக்கு கை வலித்ததா என்று தெரியவில்லை. ஆனால் எனக்குப் பிஞ்சி கைகளை இதற்கு மேல் உழைக்க
வைக்க விருப்பம் இருக்கவில்லை. போதும் என்று சொல்லிவிட்டேன்.

Monday, June 22, 2009

ஆடன்

சிறு வயதில் புளியங்கொட்டைகளை வைத்து விளையாண்ட ஒத்தையா இரட்டையாவிலிருந்து வந்தது இந்த ஐடியா. பல்லாங்குழி சொல்லிக் கொடுக்க அம்மா வீட்டிலிருந்து சோழி எடுத்து வந்திருந்தேன். அதை வைத்து ஆட் (odd) ஈவன் (even) சொல்லிக் கொடுத்தேன். முதலில் பத்து சோழிகள் எடுத்துக் கொண்டோம். அதில் சிலவற்றை கையில் எடுத்துக் கொண்டு இரண்டு இரண்டாக வைக்க வேண்டும். கையில் ஒன்று மீதமிருந்தால் ஆட் இல்லையென்றால் ஈவன் என்றேன். விருப்பமாக செய்ததால் பத்திலிருந்து சோழிகளை அதிகப்படுத்தினேன். ஆட் என்று சொல்லாமல் ஆடன் என்கிறாள். அவளுக்கு எப்பொழுதும் ஆட் வர வேண்டும் (கையில் மீதம் இருப்பது தான் பிடித்திருக்கிறது போல்).

வெகு நாட்களாக செய்ய நினைத்தது - பாட்டன்ஸ் (Patterns). இரு வகை காயின்ஸ்களை எடுத்துக் கொண்டு, ஒன்று மாற்றி ஒன்றாக சிலவற்றை வைத்து விட்டு தீஷுவைத் தொடரச் சொன்னேன். ஒரளவு செய்தவுடன் ABC பாட்டனுக்கு மூன்றையும் மாற்றி மாற்றி வைத்தேன். செய்கிறாள் ஆனால் என் உதவி தேவைப்படுகிறது.

மூன்று இலக்க எண்கள் வாசிக்கிறாள். சில நேரங்களில் நடுவில் பூஜ்ஜியம் இருந்தால் தப்பு வருகிறது. மற்றபடி ஓகே.

அப்பாவுக்குப் பரிசு

சென்ற தந்தையர் தினத்திற்கு, தீஷு தன் அப்பாவுக்கு 3டி கோலாஜ் செய்ததைக் கொடுத்தாள். அதில் அரிசி போன்றவை இருந்ததால், அவரால் அதை வெகு நாட்கள் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆகையால் அவருக்கு இந்த முறை நல்லதொரு பரிசாக கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.தீஷு 2 வயது முதல் செய்த பெயிண்டிங்களை தேதியிட்டு பத்திரப்படுத்தி வருகிறேன். அதில் சிலவற்றைக் கொடுக்கலாம் என்று எண்ணினேன். முன்பு "Book Making tips" புத்தகத்தில் எவ்வாறு பேப்பர்களை மடித்து புத்தகமாக செய்யலாம் என்ற செயல்முறைகளில் எனக்கு அக்கார்டியன் (Accordion) மிகவும் பிடித்திருந்தது. அது பேப்பரில் விசிறி செய்வதற்கு மடிப்பது போல் மடிக்க வேண்டும். சார்ட் பேப்பரில் மடித்து, அதில் அவளுடைய பெயிண்டிங்களை ஒட்டி விட்டு, தேதியினை எழுதிவிட்டேன். புத்தக வடிவில் ஒட்ட பெயிண்டிங்களை வெட்ட வேண்டியிருந்தது. வெள்ளை ஒரங்களை வெட்டிவிட்டேன்.


அதை முன் பக்கத்திலிருந்து விரித்தால் சிலவற்றையும், பின் பக்கத்திலிருந்து திருப்பி விரித்தால் மற்றும் சிலவற்றையும் பார்க்கலாம். முன் பக்கத்தில் I Love you Dheekshu 2009 என்று எழுத வைத்தேன். பின் அட்டையில் அவளை ஏதாவது வரை என்றவுடன், ஸ்மைலி போட்டு, உடம்பு போட்டு உருவங்கள் வரைந்தாள். நன்றாக வந்திருந்தது. தந்தைக்குப் பிடித்திருந்தது.


Friday, June 19, 2009

பிரமிட் பிலாக்ஸ்

பில்டிங் பிலாக்ஸால் ஏதையாவது கட்டி விளையாடுவது குழந்தைகளுக்குப் பிடித்தமான ஒன்று. ஆனால் தீஷுவின் பிறந்த நாள் பரிசாக அவளுக்கு வந்த பில்டிங் பிலாக்ஸில் இரண்டை அவளால் குறைந்து ஆறு வயது வரை உபயோகப்படுத்த முடியாது. அவ்வளவு கடினமானதாக இருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ள வயது மூன்று. அதனால் பில்டிங் பிலாக்ஸ் தீஷுவிற்கோ வேறு குழந்தைகளுக்கோ வாங்குவதற்கே யோசனையாக இருந்தது. எந்த பொம்மைக்கடைக்குச் சென்றாலும் வாங்குவதற்கு முன் இதை இந்த வயது குழந்தைகளால் உபயோகப்படுத்த முடியுமா என்று யோசிக்க வேண்டி இருந்தது. நாம் வாங்கும் பொம்மைகளின் ரிவியூஸ் எழுதினால் வாங்குபவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காகவே இந்த பதிவு.


இந்தியா வரப் போகிறோம் என்று தெரிந்தவுடன் தீஷுவிற்கு சில நாட்கள் கழித்து தேவைப்படும் பிஸில், புத்தகங்கள் மற்றும் பொம்மைகள் வாங்க ஒரு லிஸ்ட் தயாரித்தேன். அதில் WEDGiTS ஒன்று. ஆனால் கொண்டு வரும் வெயிட் அதிகமாகிவிட்டதால் வாங்கவில்லை. அது தான் இங்கு பிரமிட் பிலாக்ஸ். பில்டிங் பிலாக்ஸ் போன்றது தான். ஆனால் சற்றே வித்தியாசமானது.

இது ஒரு open ended toy. அடுக்கும் பொழுது சிறியது பெரியது வித்தியசமின்றி அடுக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம். எப்படி கட்டினாலும் ஒரு டிஸேன் உருவாவதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. சிறுவர்களின் கைகளுக்கு ஏற்றாற் போல் பெரிதாக இருக்கிறது. பாலன்ஸ் இல்லாமல் விழுந்து அவர்கள் பொறுமையை சோதிப்பதில்லை. 15 பிஸுகளை வைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிஸேன்கள் உருவாக்கலாம். பிலாக்ஸுடன் கொடுக்கப்பட்டுள்ள புக் லெட் உபயோகமாக உள்ளது.

2.5 வயது முதல் உபயோகப்படுத்தலாம். கொடுத்த விலை Rs.210. In general, it is a great alternative to usual blocks.

Wednesday, June 17, 2009

இந்த வாரம்

தீஷு பள்ளிக்குச் செல்வதால் எங்களுக்கு ஆக்டிவிட்டீஸுக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற நேரத்தின் தன்மையைப் பொருத்து நாங்கள் செய்கிறோம். வாசிப்பது, எழுதுவது அல்லது கலரிங் தினமும் செய்கிறோம்.

தன் பெயரை எந்த வித உதவியும் இன்றி எழுதுகிறாள். அவள் கிறுக்கியிருந்த தாளில் தன் பெயரை சரியாக எழுதியிருந்தாள். நான் சொல்லும் இரண்டு இலக்க எண்களை தீஷு நோட்டில் எழுதுகிறாள். அதனால் மெக்னெட்டிக் எழுத்தில் இப்பொழுது 3 இலக்க எண்கள் பயில்கிறோம். 100, 200 போன்று பூஜ்ஜிய எண்களைச் சொல்கிறாள். ஆனால் 785 போன்ற சாதாரண எண்களில் தப்புகள் அதிகமாக இருக்கின்றன.

வாசிக்கப் பழக, மெக்னெட்டிக் எழுத்துகளில் இரண்டு எழுத்து வார்த்தைகள் செய்து பொனிட்டிக்ஸ் முறையில் முயற்சிக்கிறோம். IN, IF, IS, OF, ON, TO, NO, SO, GO போன்ற வார்த்தைகள் வாசிக்க வருகின்றன. http://www.learninga-z.com/யில் வாசிப்பதற்கு எளிதான புத்தகங்களை எடுத்து, புத்தக வடிவில் செய்து அவளுக்கு வாசிக்கக் கொடுத்துள்ளேன். உதாரணத்திற்கு ஒரு பக்கத்தில் பெரிய பூனை படம் போட்டு "The cat" என்று எழுதியிருக்கிறது. எல்லா பக்கத்திலும் The வருவதால் சரியாக சொல்கிறாள். படத்தைப் பார்த்து cat என்று சொல்கிறாள். இம்மாதிரி புத்தகங்களினால் பெரிதாக வாசிக்கப் பழக முடியாது என்றாலும் அவளுக்குத் தன்னால் வாசிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அவைக் கொடுக்கின்றன.

அனைத்து continents பற்றிய பாடல் ஒன்றைப் பழைய பள்ளியில் கற்றுக் கொடுத்துள்ளனர். அதைப் பாடிக் கொண்டேயிருக்கிறாள். ஆகையால் World Map பஸிலை டவுன்லோடு செய்து கண்டங்களைச் சொல்லிக் காட்டினேன். பஸில் போல் வெட்டவில்லை. continents பார்த்து பெயர் சொல்லப் பழகியவுடன் வெட்டலாம் என்று இருக்கிறேன்.

ரைமிங் வார்த்தைகளில் ஆர்வம் வந்திருக்கிறது. பல் என்றால் சல், கல், டல் என்று பொருள் உள்ளதோ பொருள் அற்றதோ வார்த்தைகள் சொல்கிறாள். இதைப் பழக்குவதன் மூலம் ஆங்கில வார்த்தையின் முடியும் எழுத்தைக் கண்டுபிடிக்கப் பழக்கலாம் என்பது என் எண்ணம். முடியும் எழுத்தைக் கண்டுபிடிக்கத் தெரிந்தால், cvc (consonants,vowel,consonants) வார்த்தைகளில் இரண்டு consonantsயும் கண்டுபிடிக்க முடிவதால் vowelயை எளிதாக யூகிக்க முடியும். இது வார்த்தைகள் வாசிக்கப் பழகுவதற்கும், எழுதப் பழகுவதற்கும் உபயோகமாகயிருக்கும்.

Monday, June 8, 2009

மீண்டும் மீண்டும்மெழுகால் ஒரு லைட் கலர் பேப்பரில் வரைந்து அதன் மேல் வாட்டர் கலர் பெயிண்டிங் செய்தால்(பெயிண்ட தண்ணீராக இருந்தால் நன்றாக வருகிறது), மெழுகால் வரைந்தது நன்றாகத் தெரியும். இதை நாங்கள் முன்பே செய்திருக்கிறோம். அதன் பின் இப்பொழுது தான் செய்கிறோம். சென்ற முறை Crayons உபயோகித்தோம். இந்த முறை பயன்படுத்தப்படாமல் இருந்த மெழுகு. தீஷுவே ஒரு படம் வரைந்து அதன் மேல் செய்தாள். என்னை நான்கு ஐந்து படங்கள் வரைய சொல்லி அதன் மேலும் செய்து கொண்டிருந்தாள். மறுநாள் காலை எழுந்தவுடன் அவளாகவே செய்ய ஆரம்பித்துவிட்டாள். குழந்தைகள் விருப்பமாக செய்வார்கள் என்று எண்ணுகிறேன்.

மீண்டும் ஒரு தண்ணீர் ஊற்றும் செயல் முறை. இந்த முறை நான் டம்பளரில் ஒரு டேப் ஒட்டி வைத்துவிட்டேன். நான் டேப் ஒட்டிய அளவு வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். அது அவளுக்கு விருப்பமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இரண்டு முறை செய்தவுடன் ஆர்வமிருக்கவில்லை.அதனால் முறையை மாற்றி செம்பிலிருந்து நான்கு டம்ளர்களுக்கு ஊற்ற வைத்தேன். செம்பில் நான்கு டம்ளர் அளவு தண்ணீர் இருந்தால், தூக்குவதற்கே சிரமப்பட்டாள். ஆனால் இது கொஞ்சம் விருப்பமாக செய்தாள். அவள் ஆர்வமின்மையால் சிறிது நாட்களுக்கு ஊற்றும் செயல்முறைகள் செய்ய வேண்டாம் என்று நினைத்திருக்கிறேன்.

Sunday, June 7, 2009

எரிமலை எப்படி வெடிக்கும்?

நேத்து நல்ல காத்து. உடனே அப்பாவுக்குப் பட்டம் ஞாபகம் வந்திருச்சு. அவர் ஃப்ரெண்டுக்கு எதுக்கோ போன் பண்ண, அவர் தன் மகளுடன் பட்டம் விட்டுக்கொண்டுயிருப்பதைக் கேள்விப்பட்டவுடன் அப்பாவும் தீஷுவும் பட்டம் ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஃப்ரெண்டோட பட்டம் காத்து நிறைய அடிச்சதுனால ஒடிஞ்சு போனது தெரிந்தவுடன், கனமான பாலீத்தின் பேப்பர், மூண்ணு அடுக்கு பேப்பர் என வெயிட்டான பட்டம் தயார். மூன்று மாடி ஏறிப் போய் பட்டத்தப் பறக்க விட்டாத் தான் தெரியுது, வெயிட் பட்டத்தால் வெயிட்டத் தூக்கிக்கிட்டு மேல ஏற முடியவில்லனு. அதுல போட்டோ எடுக்க என்னைய வேற கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. மனந்தளராம வேறொரு பட்டம் ரெடி பண்ணிக்கொண்டு மாலையிலும் போய்விட்டிருக்காங்க. ஏதோ பறந்தது என்றும் கேள்வி. ஆனா மொத்தத்துல பட்டம் பெரிய flap.

Magical school bus ஸீரீஸில் இருக்கிற டைனோஸர்ஸ் புக்கில் எரிமலை (volcano) படம் ஒன்று இருந்தது. தீஷுவிற்குக் காட்டியவுடன், எப்படி வெடிக்கும், உள்ளிருந்து என்ன வரும் என்று ஆயிரம் கேள்விகள். எரிமலைப் பற்றிய ஏதாவது க்ராப்ட் கிடைக்குமா என்று தேடிய பொழுது, எளிதாகவே இருக்கும் ஒன்று கிடைத்தது. பேக்கிங் ஸோடாவை (Baking soda), வினிகருடன் (vinegar) கலந்தால் கர்பன் டை ஆக்சைடால்(cardbon-di-oxide) எரிமலை போல் வரும் என்று தெரிந்தது.அப்பாவும் பொண்ணும் இரண்டு மூன்று வாரங்களாக இதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, நேரமின்மையால் செய்ய முடியாமல் போனது. நேற்று இரவு செய்தனர். ஒரு தட்டில் கிண்ணத்தை வைத்து விட்டனர். இந்த மாவை இதற்காகவே பத்திரபடுத்திருந்தேன். கிண்ணத்தைச் சுற்றி மாவை மலை போல் வைத்து விட்டனர். பின்பு தீஷு இரண்டு ஸ்பூன் பேக்கிங் ஸோடா கிண்ணத்தில் போட்டு விட்டாள். அதில் சிறிது கலரிங் சேர்த்துக் கொண்டாள். அதன் பின் வினிகர் ஊற்றியவுடன் எரிமலை பொங்கியது. தீஷுவிற்கு முதலில் நாங்கள் செயல்முறை விளக்கம் கொடுத்தவுடன் பயந்தாள். பார்த்தவுடன் பயம் நீங்கி விருப்பமாக ஸோடாவையுன், வினிகரையும் ஊற்றி ஊற்றி விளையாண்டு கொண்டிருந்தாள். குழந்தைகளுடன் செய்ய எளிதானது.

Friday, June 5, 2009

என்னைப் பற்றி

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

தீஷு என் மகளின் பெயர். என் இயற்பெயர் தியானா. மிகவும் பிடிக்கும். என் தந்தை வழி பாட்டி வைத்த பெயர். என் பெயரை முதல் முறை கேட்பவர்களுக்குக் குறைந்தது மூன்று முறையேனும் சொல்ல வேண்டும். ஸ்கூலிலும் அப்படித்தான். இதுவரை இந்த பெயர் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை. என் உறவினர் பலர் தன் குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும் என்று விருப்பப்பட்டு ஆனால் குடும்பத்தில் பெயர் குழப்பம் வரும் என்று விட்டுவிட்ட பெயர்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

23-01-2009. வாழ்வில் பல சந்தோஷங்களை தர வல்லதை அழித்த தினம். மறக்க விரும்பும் தினம். ஆனால் ஒவ்வொரு வருடம் மனதைப் பிசைய போகும் தினம். இவ்வளவு கஷ்டத்திலும் எனக்கும் என் கணவருக்கும் மன உறுதி தந்த இறைவனுக்கு நன்றிகள் பல.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும். எழுதியதை விட எப்பொழுதும் பத்து மார்க் வாங்கித் தரும் என் கையெழுத்து.

4.பிடித்த மதிய உணவு என்ன?

சாதம், சாம்பார், உருளைக்கிழக்கு
சாதம், பருப்பு, தக்காளிக்கொச்சி
புளி சாதம், கத்தரிக்காய் குழம்பு
எலும்பிச்சை சாதம், வடை.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இல்லை. எனக்கு பிறருடன் பழகுவதற்கு நேரம் ஆகும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி. ஆனால் அருவியில் குளித்து பத்து வருடங்களாகி விட்டன.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம். அதன் பின் அவர்கள் உடை.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்த விஷயம் : நடப்பது எல்லாம் நம்மைக்கு என்று நம்புவது, கடவுள் நம்பிக்கை, சீக்கிரம் கலங்காத மனது, தீர யோசித்தே ஒரு வேலையில் இருங்குவது.

பிடிக்காத விஷயம்: கோபம், அதீத தன்னம்பிக்கை, பேசி விட்டு யோசிப்பது. கோபம் மிகவும் பிடிக்காத விஷயம். கோபத்தில் என்ன செய்கிறேன், சொல்லுகிறேன் என்று எனக்கேத் தெரிவதில்லை. மாற்றுவதற்கு யோகா வகுப்பிற்குப் போக போகிறேன்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம் : என் மேலும் தீஷு மேலும் கொண்டுள்ள அன்பு. தீஷு பிறந்த பொழுது, எனக்குத் தாய் மட்டுமே செய்ய முடிந்த வேலைகளைச் செய்தவர்.

பிடிக்காத விஷயம் : அதீத அக்கறை. நேற்று தீஷுவை பள்ளியிலிருந்து விட்ட ஒரு மணி நேரத்தில் அழைக்க வேண்டும் என்பதால், வீட்டிற்கு வராமல் பாங்க் போய் விட்டு அழைத்து வருகிறேன் என்றேன். தீஷு பள்ளிக்கு நாங்கள் மூவரும் தான் சென்றோம். பாங்க் தீஷு பள்ளியிலிருந்து 100மீ தொலைவில் உள்ளது. தான் பாங்க் வந்து விடுவதாக சொன்னார். அவர் ஆபிஸ் போக திரும்பவும் யூ டார்ன் எடுக்க டிராபிக்கில் 30 நிமிடங்கள் ஆகும் என்றவுடன் மனதில்லாமல் ஒத்துக் கொண்டார். அடுத்து 100மீ போக அவர் சொன்னது "பாத்து நடந்து போ". இது போன்ற அதீத அக்கறை என் தன்னம்பிக்கையை குறைப்பது போல் உள்ளதால் சில நேரங்களில் பிடிப்பதில்லை.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாரும் இல்லை. யாரை பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும், போனில் பேசினாலே போதும், என் மனம் ஆறி விடும்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

பாட்டில் கிரின் சுடிதார்.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இப்பொழுது ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் அடிக்கடி இப்பொழுது முணுமுணுக்கின்ற பாடல் "கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...". தீஷுவிற்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ஊதா. என் கணவருக்கும் மகளுக்கும் பிடித்த நிறம்.

14.பிடித்த மணம்?

ஜான்சன்ஸ் பேபி பவுடர் : குளித்த முடித்த என் மகளுக்குப் பவுடர் போட்டு விட்டவுடன், அவள் வயிற்றில் முத்தம் கொடுக்கத்தூண்டும் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அமுதா : அவருடைய கவிதைகளும், அவரின் குழந்தைகள் பற்றிய பதிவுகளும் பிடிக்கும்.

சிறு முயற்சி முத்துலெட்சுமி: அவரின் எழுத்து நடை மிகவும் அருமை. தன் பின்னூட்டத்திற்கு வழங்கும் பதிலும் அருமை.

அழைக்க விரும்பும் பதிவர்கள் சந்தனமுல்லை மற்றும் அமித்து அம்மா ஏற்கெனவே எழுது விட்டனர்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

ஆகாய நதி தன் கணவர் மேலும் தன் குழந்தை பொழிலன் மேலும் கொண்டுள்ள அன்பு ஒவ்வொரு பதிவிலும் தெரியும். பொழிலன் அப்டேட்ஸ் அருமை. அதைவிட கர்ப்பிணிகளுக்கு அவர் கொடுக்கும் அனுபவக் குறிப்புகள், நான் இப்படி எதுவும் செய்ததில்லை என்று என்னை யோசிக்க வைப்பவை. அடுத்தவருக்கு உதவுபவை.

17. பிடித்த விளையாட்டு?

தாயக் கட்டை, பிஸ்னஸ், சீட்டு. சிறு வயதில் நொண்டி, கல்லா மண்ணா, கபடி, வாலிபால்.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மிகவும் கதை அம்சம் உள்ள, பாஸிட்டிவ் முடிவுள்ள, இரத்தம் & அருவால் இல்லாத திரைப்படங்கள். திரில்லர்ஸ், துப்பறியும் கதைகள், நகைச்சுவை திரைப்படங்கள் மிகவும் இஷ்டம். Sherlock Holmes கதைகள், Alfred Hitchcock இயக்கிய திரைப்படங்கள்,வசூல் ராஜா போன்ற நகைச்சுவை திரைப்படங்கள் என் சாய்ஸ்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

நாங்கள் படத்திற்கு அதிகம் போவது கிடையாது. திருமணத்திற்கு பிறகு நாங்கள் பார்த்த முதல் படம் தசாவதாரம் (தீஷுவிற்கு அப்பொழுது இரண்டு வயது).அது தான் இப்போதைக்கு கடைசியாகப் பார்த்த படமும். பசங்க படம் பார்க்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

21.பிடித்த பருவ காலம் எது?

இலையிதிர் காலம். இலை உதிர்வதற்கு முன்னால் இருக்கும் வண்ண மாற்றங்கள் அழகு.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

My big book of questions and answers. தீஷுவின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கணக்கில்லை. நல்ல படங்களைப் பார்த்தால் மாற்றுவேன். தீஷுவின் படங்களே மாறி மாறி வரும். வெகு சில நேரங்கள் இயற்கைக்காட்சிகள், பூக்கள் போன்றவை வைத்திருப்பேன்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த் சத்தம் : தீஷுவின் மழலை மொழி, நல்ல பாட்டு

பிடிக்காத சத்தம் : அலரும் தொலைக்காட்சி, இரைச்சலுடன் ஓடும் வண்டி, குக்கர் விசில், அலாரம் (எழுந்திருக்க வேண்டுமே என்று)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

வெகேஷனுக்காக என்றால் கூர்க், கன்னியா கும்ரி (எது தொலைவு என்று தெரியவில்லை)
பிழைப்புக்காக என்றால் யூஸ். அங்கு நையகரா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கு.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வெட்டி பந்தா, புறங்கூறுதல், பொய் சொல்லுதல்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

போக விருப்பம் உள்ளது : வட இந்தியா, சிங்கப்பூர்

போனதில் பிடித்தது : கூர்க்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

அடுத்தவருக்குத் தொந்தரவு தராமல், அடுத்தவரின் தலையீடு இல்லாமல் இருக்க ஆசை

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

அப்படி ஒன்றும் இல்லை.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

நான் பெரிதும் நம்பும் ஒரு வாக்கியம் :

"There are no accidents. Everything is a lesson. Everything has a PURPOSE, A PURPOSE, A PURPOSE "

Life is beautiful. Keep smiling, Keep enjoying.

Thursday, June 4, 2009

கவர்ந்த தருணங்கள் 04/06/09

1. "அம்மா, இன்னைக்கு எங்க ஸ்கூல சாக்லேட் கொடுத்தாங்க"
"எதுக்குக் கொடுத்தாங்க?"
"சாப்பிடத்தான்"

2. "தீஷு, கம்ப்யூட்டர மிதிக்காத"
"ஏன்மா க்ராஷ் ஆகிடுமா?"

3. அவளுக்கும், அவள் அப்பாவுக்கும் பிடித்த விளையாட்டு, ஏதாவது பாட்டை நானா நானா என்று அந்த பாட்டின் மெட்டுலேயே பாடுவர். அடுத்தவர் பாட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். தீஷு ஏதோ மெட்டில் பாடிக் காண்டினாள். அவள் அப்பாவும் நான்கு, ஐந்து முறை முயற்சித்து விட்டு தெரியல என்றார். தீஷு கூலாக "எனக்கும் தெரியல.. சும்மா சொன்னேன்" என்றாள்.

4. தீஷு நான்கு டம்பளர்களை ஒன்றுக்குள் ஒன்றாக போட்டுக் கொண்டிருந்தாள். கடைசி டம்பளர் சரியாக பொருந்தவில்லை. ஏன் என்றதற்கு நீ சொல்லு என்றேன்.
"அது பெருசா இருக்கு.. ஆமா எப்ப சிறுசா ஆகும்"
"எதுவுமே சிறுசா ஆகாது"
"விளக்கமாறு (வீடு கூட்ட பயன்படுத்துவது) சிறுசா ஆகுமா ஆகாதா?"
"???"

Wednesday, June 3, 2009

மருந்துக்கு ஒன்று

தீஷுவிற்கு சல்லடை உபயோகப்படுத்தப் பழக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு முன்னால் சாதம், காய்கறி, எண்ணெய் வடிக்கப் பயன்படுத்தப்படும் கண் தட்டை (நாங்கள் இப்படிச் சொல்லுவோம் - வேறு பெயர் தெரியவில்லை) பழக்க இரண்டு காரணங்கள். ஒன்று - சல்லடையைப் பிடிக்க கைபிடி கிடையாது. ஆகையால் கைகளை விரித்து இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் அசைக்க வேண்டும். தீஷுவிற்கு இவ்வாறு செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இரண்டாவது காரணம் - எங்கள் வீட்டில் சல்லடை இல்லை.


கண்ணாடி கற்களை ரவையில் போட்டு விட்டேன். இரண்டையும் பிரிக்க வேண்டும். கலவையை கண் தட்டில் போட்டு, கைபிடியை சிறிது ஆட்ட வேண்டும். ரவை ஏன் விழுது? கல்லு ஏன் விழல? போன்ற கேள்விகள் கேட்டு அவளே பதிலும் சொல்லி விட்டாள். மிகவும் விரும்பமாக செய்தாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். கீழே சிந்திய ரவையையும் அள்ளி வைத்து விட்டாள். இது கைகளுக்கானப் பயிற்சி. கவன ஒருங்கினைப்புக்கும் ஏற்றது.
தீஷு ஊற்றும் பயிற்சி (Pouring activities) மிகவும் எளிதாக செய்கிறாள். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பாலை ஊற்றி ஆற்ற பழகி விட்டாள். அதன் அடுத்த படி. சிறு பாட்டிலிருந்து ஸ்பூனுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். (சென்ற முறை மருந்து ஊற்றிய பொழுது இந்த ஐடியா தோன்றியது). அப்புறம் ஸ்பூனிலிருந்து கிண்ணத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கு மிகுந்த கவனம் தேவை. முதலில் ஸ்பூன் நிறைந்தவுடன் நிறுத்த முடியவில்லை. அதன் பின் சிறிது சிறிதாக ஊற்றினால் நிறுத்த முடிகிறது என்பதை கண்டுபிடித்து விட்டாள். பாட்டில் காலியானவுடன், கிண்ணத்திலிருப்பதை மீண்டும் பாட்டிலில் ஊற்ற வேண்டும். பாட்டில் வாய் சிறிதாகயிருந்ததால் ஒவ்வொரு முறையும் ஆரம்பிக்கும் பொழுது சிறிது வெளியே ஊற்றினாள். அப்புறம் கிண்ணத்தை நகற்றி சரியாக ஊற்றினாள். இதுவும் மிகவும் பிடித்த செயல்முறை.

திறந்தாச்சு ஸ்கூலு

தீஷுவுக்கு ஜூன் ஒன்று முதல் பள்ளி ஆரம்பித்து விட்டது. அவளுக்கும் மூன்று மாதமாக வீட்டிலிருந்து போர் அடித்து விட்டது. இந்த வாரம் தினமும் ஒரு மணி நேரம் தான் ஸ்கூல். அதன் பின் மெதுவாக அதிகமாக்கலாம் என்றார்கள். தீஷு க்ளாஸில் 25 பேர். அதில் திங்கள் 7 பேர் மற்றும் புதன் 9 பேர் என 16 குழந்தைகளை அழைத்திருக்கிறார்கள் (மொத்தமாக அழைத்தால் அவர்களால் பார்த்துக் கொள்ள முடியாதாம்). மீது உள்ளோர் அடுத்த திங்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன். ஒரு மணி நேரம் தான் போவதால், சில ஆக்டிவிட்டீஸ் செய்ய மட்டும் வைக்கின்றனர். தீஷு தினமும் ஏன் சாங்க்ஸ் பாடல? கதை சொல்லல என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள். இன்று 9 புது குழந்தைகள் வந்ததால் இவளை சென்ற வருடமே பள்ளியில் சேர்ந்த பழைய குழந்தைகள் அறையில் விட்டுவிட்டனர். அங்கு ஏதோ பாட்டு பாடியிருக்கிறார்கள். அவளுக்கு மிகுந்த சந்தோஷம். யாருக்கோ பிறந்த நாள் என்று சாக்லேட்டும் வாங்கி வந்திருந்தாள்.

தீஷுவிற்கு பொதுவாக 9:30 முதல் 12:30 வரை பள்ளி. தீஷுவிற்கு மதியம் தூங்கும் பழக்கம் இருக்கிறது. மாலையில் 2 மணி நேரம் சைக்கிள், பார்க் என்று எங்கள் பொழுது போகும். இனி எங்கள் ஆக்டிவிட்டீஸ்கான நேரம் குறைவு. இப்பொழுது போல் எங்களால் 2 மணி முதல் 3 மணி வரை செலவிட முடியாது. முடிந்தால் தினமும் அரை மணி நேரம் செலவிடலாம் என்று நினைக்கிறேன். எனக்கு இதில் வருத்தம் தான்.

Monday, June 1, 2009

யாம் பெற்ற அறிவு

தீஷுவால் தனக்கு புதிதாகத் தெரிந்த ஒன்றைத் தன் டாலுக்குச் சொல்லித் தராமல் இருக்க முடியாது. எண்கள் வாசிக்கத் தெரிந்தவுடன் தன் டாலுக்குச் சொல்லிக் கொடுக்கும் பொழுது எடுத்த வீடியோ...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost