Tuesday, April 28, 2009

முதல் விடுகதை

உன் கிட்ட இரண்டு தான் இருக்கு. ஆனா ஸ்பைடரிடம் எட்டு, ஆக்டோபஸிடம் எட்டு இருக்கு. அது என்ன? - இது தான் நான் அவளிடம் கேட்ட முதல் விடுகதை. சரியாக கால் என்றாள். இனி இது போல் அவளுக்குத் தெரிந்த விஷயங்களை விடுகதை போல் கேட்கலாம் என்று இருக்கிறேன்.



பத்து நாட்களுக்குப் பின் இன்று தான் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆக்டிவிட்டீஸ் செய்தோம். முதலில் எழுதச் சொன்னேன். முன்பு எப்பொழுதும் எழுதிக் கொண்டேயிருப்பாள். ஆனால் இப்பொழுது எழுதுவதற்கு விருப்பம் இருப்பதில்லை. இங்கு வந்தவுடன் கட்டம் போட்ட நோட் வாங்கி கட்டத்திற்குள் எழுதப் பழக்க ஆரம்பித்தேன். எப்பொழுதும் அவள் விரும்புவதை மட்டும் தான் செய்வோம். ஆனால் அவளாகவே எழுதாததால் நானாக நோட்புக் எடுத்துக் கொடுத்தேன். Upper case, lower case, 1 முதல் 25 எழுதினாள். அவள் பெயரை எழுதச் சொன்னேன். அதையும் செய்தாள். அடுத்து அவள் மூவுக்காக காத்திருந்த பொழுது, கட்டத்திற்குள் இல்லாமல் சும்மா எழுதவா என்றாள். எழுது என்றவுடன் எழுத ஆரம்பித்தாள். எழுதினாள் எழுதினாள் எழுதிக்கொண்டேயிருந்தாள். அவள் கட்டத்திற்குள் எழுதுவதற்கு இப்பொழுது தயாராக இல்லை என்பது புரிந்தது. இனிமேல் சில காலங்களுக்கு சாதாரண நோட் மட்டுமே கொடுக்க வேண்டும்.

எழுதி முடித்தவுடன் ஏதாவது தண்ணீ ஆக்டீவிட்டி செய்யலாம் என்றாள். இப்பொழுது தான் காய்ச்சல் சரியாகி இருப்பதால் சிறிது யோசித்தேன். அப்புறம் உடல் எல்லாவற்றையும் பழகிக்கொள்ளட்டும் என செய்ய ஆரம்பித்தோம். தண்ணீரை ஒரு பத்திரத்திலிருந்து மற்றொரு பத்திரத்திற்கு துணியால் மாற்ற வேண்டும். துணியை முக்கி, அடுத்த பத்திரத்திற்கு மேல் வைத்து கையால் பிழிய வேண்டும். கீழே கொட்டும் தண்ணீரையை மற்றொரு துணியால் இறுதியில் துடைத்து விட வேண்டும். இது கை விரல்களுக்கானப் பயிற்சி. முதலில் ஒரு கையால் செய்தாள். அடுத்து இரண்டு கைகளையும் பயன்படுத்தினாள். தண்ணீர் என்பதால் அவளுக்கு நிறுத்த மனமில்லை. நான்கு முறைக்கு மேல் செய்தாள். சின்னஞ்சிறு கை என்பதால் சற்று நேரத்தில் வலிக்கத் தொடங்கி விட்டது. வலிக்குது என்று சொல்லி மனமில்லாமல் நிறுத்தினாள். இனி அடிக்கடி கேட்பாள் என்று நினைக்கிறேன். நடுவில் எப்படி துணியில் தண்ணீர் வருகிறது என்று பல கேள்விகள். முடித்தவுடன் அவளாகவே தரையைத் துடைத்து விட்டு, துணியை காயவும் போட்டு விட்டாள்.




கார்ட்ஸ் & கவுண்ட்டர்ஸ் (Cards & counters) : எண்களின் மதிப்பு ஒரு abstract concept. ஒன்று முதல் பத்து வரை சொல்லும் குழந்தைகளுக்கு, ஒன்றின் மதிப்போ, பத்தின் மதிப்போ தெரியாது. அதை விளக்கவே இது போன்ற செய்முறைகள். இன்று செய்ததைப் பழக்குவதற்கு முன்னால் இதைச் செய்தோம். அதில் எண்ணும் அதன் மதிப்பும் (எண்ணிற்கு ஏற்றாற் போல் வட்டங்கள்) இருக்கும். அடுத்து இந்த முறை. அதற்கு அடுத்து நாங்கள் இன்று செய்தது. Flash cardsல் ஒன்று முதல் பத்து வரை எடுத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் 55 கண்ணாடிக்கற்கள் கொடுத்தேன். பார்த்தவுடன் புரிந்து கொண்டாள். ஒன்று முதல் பத்து வரை அட்டைகளை அடுக்கினாள். அட்டைகளை இடதிலிருந்து வலதிற்கு வைக்க வேண்டும். அதன் பின் அதன் கீழ் அதன் மதிப்பிற்கு ஏற்ப கற்களை வைக்க வேண்டும். நன்றாக செய்தாள்.

அடுத்து காசுகளைப் பிரித்தோம். யாருக்குப் பணம் கொடுத்தாலும் தீஷு தான் கொடுக்க வேண்டும். கொடுக்கும் முன் அது எத்தனை ரூபாய் என்று கேட்பாள். ரூபாய் நோட்டில் பார் என்று ஒவ்வொரு முறையும் சொல்லுவோம். அதன் மூலம் கிடைத்த ஐடியா இது. நான்கு பேப்பரை எடுத்துக் கொண்டு, அவளை ஒன்று, இரண்டு, ஐந்து மற்றும் ஐம்பது என்று எழுதச் சொன்னேன். அடுத்து காசை எடுத்து, எண்ணை வாசித்து (ரூபாய் என சேர்த்து சொல்ல வேண்டும்), அந்த எண் எழுதியிருந்த பேப்பரில் வைக்க வேண்டும். அவளுக்கு எளிதாக இருந்தது.

4 comments:

  1. /*இனி இது போல் அவளுக்குத் தெரிந்த விஷயங்களை விடுகதை போல் கேட்கலாம் என்று இருக்கிறேன்.*/
    நல்லா யோசிக்கறீங்க. இப்படி தான் யாழுக்கு நான் விடுகதை சொல்லிக் கொடுத்து அது ஆர்வக்க்கோளாறுல "கால் இருக்கும் ஆனால் இருக்காது அது என்ன?" அப்படீனு எல்லாம் சூப்பரா விடுகதை போட ஆரம்பிச்சிட்டாள் :-))

    மத்த எல்லா செயல்முறைகளும் கூட அருமை

    ReplyDelete
  2. நல்லாருக்கு ஆக்டிவிட்டீஸ்..எல்லாம்! தீஷூவின் ஆர்வம் வியப்பைத் தருகிறது, அதோடு உங்களின் பொறுமையும்!

    ReplyDelete
  3. சூப்பரா இருக்கு தீஷுவோட ஆக்டிவிடிஸ் :)

    அதிலயும் கீழே சிந்திய தண்ணீரை துடைத்ததும், துணியை காய வைத்தது சூப்பரோ சூப்பர் :)பொறுப்பான குழந்தை:) சுத்தி போடுங்க...

    தீஷூ வயது என்ன?

    ReplyDelete
  4. நன்றி அமுதா.
    //கால் இருக்கும் ஆனால் இருக்காது அது என்ன?"//
    :-)


    நன்றி முல்லை. அவளுக்குத் தினமும் புதிது புதிதாக செய்ய வேண்டும்.

    சிந்திய தண்ணீரைத் துடைப்பதெல்லாம் அவள் மாண்டிசோரி பள்ளியில் கற்றது. தீஷுக்கு மே 8யோடு 3 வயது நிறைவு பெறும்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost