Wednesday, February 25, 2009

கிளம்பியாச்சி

நாளைக்கு இங்கிருந்து கிளம்புகிறோம். ஒரு வாரமா பெட்டி அடுக்குகிறோம் அடுக்குகிறோம் அடுக்கிக் கிட்டே இருக்கிறோம். எவ்வளவு பொருட்கள் சேர்த்து இருக்கிறோமா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பொருட்கள் வாங்கிறப்ப எல்லாம் என் கணவர் கேட்பார் "உபயோகமாக இருக்குமா?" என்று. மண்டையை ஆட்டிக் கொண்டே வாங்கியதன் பலன் கிட்டத்தட்ட 20 மூட்டை பொருட்களைத் தூக்கி போட்டு ஆகிவிட்டது. இன்னும் நான்கு ஐந்து மூட்டைகள் போட வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். உணவு பொருட்கள், தீஷு பொம்மைகள் போன்றவை நண்பர்களுக்கு கொடுத்து விட்டோம். அதனால் யாரோ உபயோகப்படுத்துகிறார்கள் என்ற எண்ணம். ஆனால் புது புது டிரெஸ் எல்லாம் தூக்கி போடும் பொழுது மனதில் சங்கடம். நம் நாட்டில் எத்தனையோ பேர் மாற்று துணி இல்லாமல் இருக்கிறார்கள் நாம் எப்படி புதியதைத் தூக்கிப் போடுகிறோமே என்று. வேறு வழியில்லை. ஒவ்வொரு முறையும் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். கடைசியில் அவரையே (கொலு பொம்மை, வழிப்பாட்டு உருவங்கள்) போய் கோயிலில் வைத்து விட்டு வந்து விட்டோம்.

தீஷுவின் பொம்மைகளைக் கொடுக்கும் பொழுது எனக்கே வருத்தமாக இருந்தது. அவள் பார்த்துக் கொண்டே இருந்தாள். நம்ம வேற வாங்கலாம் என்றவுடன் சரி என்று சொல்லிவிட்டாள். எதற்காக இவ்வளவு பொம்மைகள் வாங்கினோம் என்றே எனக்குத் தெரியவில்லை. ஸோபா எடுத்துக் கொண்டு போகும் பொழுது, "அங்கிள் வீட்டில் ஸோபா இல்லையா அம்மா?" என்றாள். ஆமாம் என்றவுடன், எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டாள்.

தீஷுவிற்கு ஒரு வாரமாக உடம்பு சரியில்லை. வாந்தி, ஜலதோஷம், இருமல் என மிகவும் கஷ்டப்படுகிறாள். ஒரு வாரமாக வெறும் விட்டமின் தண்ணி மட்டுமே ஆகாரம். Flightடில் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. அதற்குள் சரியாக வேண்டும் என்று நினைக்கிறேன்.

இருபத்தி எட்டாம் தேதி காலையில் பெங்களூர் வந்து விடுவோம். வந்தவுடன் மதுரை போய்விடுவேன் என்று நினைக்கிறேன். அதற்கு அப்புறம் நெட் கனெக்ஷன் வந்தவுடன் தான் எழுத முடியும். எப்படியும் ஒரு மாதமாகலாம் என்று நினனக்கிறேன். A short break..

Sunday, February 22, 2009

உருப்படியா ஒண்ணு..

என்னுடைய புகைப்படத் திறமைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். முக்கால்வாசி போட்டோவில் தீஷுவின் தலை இருக்காது. அதனால் என் திறமையை நம்பாமல், தீஷு பிறந்தது முதல் குறிப்பிட்ட இடைவெளிகளில் அவளை ஸ்டுடியோவில் போட்டோ எடுக்கும் பழக்கம் வைத்திருக்கிறோம். ஒரு வயது வரை ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எடுத்தோம். அதற்கு அப்புறம் இரண்டு வயது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையென இரண்டு படங்கள் மட்டும் எடுத்தோம். இரண்டு வயதிற்கு அப்புறம் கடந்த ஒன்பது மாதங்களில் எடுக்கவில்லை. அவள் முகத்தில் ரொம்ப வித்தியாசம் இல்லை என்று சமாதானம் செய்துக் கொண்டோம். ஆனால் கிளம்பும் முன்னால் ஒன்று எடுத்து விடலாம் என்று ஒன்று எடுத்தோம். தலை முதல் கால் வரை எடுத்த போட்டோவைப் பார்க்க எனக்கு வித்தியாசமாக இருந்தது. அதனால் ஸ்கேன் செய்து ப்ளாகில் ஒரு உருப்படியான போட்டோ ஒன்று போடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் 10*13 இன்ச் போட்டோவை ஸ்கேன் செய்தால் தலை அல்லது கால் வெட்டப்பட்டது. Shrink செய்துப் பார்க்கவில்லை. சரி.. தீஷுவின் போட்டோ வெட்டுப்பட்டு தான் ப்ளாகில் இருக்க வேண்டும் போல என்று நினைத்துக் கொண்டேன்.



போட்டோ எடுக்க மாலுக்குச் சென்ற பொழுது, டாலை டால் ஸ்டோலரில் வைத்து மாலினுள் தள்ளிக் கொண்டே வந்தாள். அவள் ஸ்டோலரை நான் வெறுமனே தள்ளிக் கொண்டே போனேன்.எதிர் வந்தவர்கள் எல்லாம் என்னைப் பார்த்து சிரித்தப் போது எல்லாம், கேலியாக சிரிக்கிறார்களோ என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் மாலிலிருந்த இரண்டு மணி நேரமும் தூக்கச் சொல்லவே இல்லை. இனிமேல் நடக்கிற மாதிரி எங்க போனாலும், அவ ஸ்டோலரை எடுக்கிறோமோ இல்லையோ, டால் ஸ்டோலர் எடுத்துத்திட்டு போகனும் என நினைத்துக் கொண்டேன்.

Wednesday, February 18, 2009

இப்பொழுது வீட்டில்..

1. தீஷு தன் பொம்மையைப் பற்றி எப்பொழுதும் ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கிறாள். சில நாட்களுக்கு முன் தன் அப்பாவிடம் "ஏன் டாலோட விரலை மடக்க முடியவில்லை" என்றாள். அவள் அப்பாவும் "டாலுக்கு கையில Bone இல்லை என்றார். நேற்று என்னிடம் வந்து "ஏன் டால் பேசல" என்றாள். நான் பதில் சொல்லும் முன் அவளாகவே, "டாலுக்கு வாயில Bone இல்லையா அம்மா" என்றாள்.

2. கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தோம். தீஷுவை அவள் அப்பா சாப்பிட வைத்துக் கொண்டிருந்தார். தீஷு சாப்பிடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். பொறுமை இழந்து "சீக்கிரம் சாப்பிடு.. கிளம்பனும்..அப்பாவுக்கு டைம் இல்ல" என்றார். அசராமல், ஒரு வினாடி கூட தாமதிக்காமல் அடுத்த கேள்வி தீஷுவிடமிருந்து பறந்து வந்தது "அம்மாவுக்கு டைம் இருக்கா?"

3. ஆங்கிலத்தைப் பள்ளியிலும், வெளி இடங்களிலிருந்தும் கற்றுக் கொள்வதால், தீஷுவின் ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பு அமெரிக்கர்களின் உச்சரிப்பு போன்று இருக்கும். வாடர், மாமி(மம்மி), த்ட்டி(thirty) போன்று. ஆனால் இங்கிலீஷ் என்று சொல்லத் தெரியாது. Engeesh என்று சொல்கிறாள்.

4. இந்தியா திரும்புவதற்காக Pack பண்ணிக் கொண்டிருந்தோம். தீஷு முதலில் அவள் பொருட்களை பெட்டியில் வைக்க விடவில்லை. பெட்டியில் வைத்தால் தான் இந்தியா போய் விளையாட முடியும் என்றவுடன், சரி என்று எழுந்து போய்விட்டாள். சிறிது நேரத்திற்கு பிறகு, பாண்ட், shoe எல்லாம் போட்டு கொண்டு வந்து, "I am ready" என்றாள். "எங்க போறடா?" என்றதற்கு "இந்தியாவிக்கு" என்றாள்.

Tuesday, February 17, 2009

எழுத்தறிவித்தவர்கள்

இரண்டு வயதில் தீஷுவை பள்ளியில் விட்ட பொழுது, அந்த இரண்டு வருடங்களில் அவள் என்னைப் பிரிந்திருந்த மணி நேரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முதல் நாள் ஏதோ நாங்கள் இரண்டு பேரும் வெளியே போகிறோம் என நினைத்து பள்ளிக்கு வந்தாள். நான் கிளம்பும் பொழுது தான் அவளுக்கு நான் அவளுடன் இருக்க மாட்டேன் என்று புரிந்தது. அழுதாள். அதற்குள் மிஸ்.கீதா அவளே தூக்கிக் கொண்டு போய் விட்டார்கள். வீட்டிற்கு வந்து கதவைத் திறந்தவுடன், தீஷு இல்லாத வீட்டைப் பார்த்து எனக்கும் அழுகை வந்தது.

அதற்கு அப்புறம் ஒவ்வொரு நாளும் கூப்பிடப் போகும் பொழுது மிஸ்.கீதாவோ, மிஸ்.சீதாவோ அவளைத் தூக்கி வைத்திருப்பார்கள். அவளை கிட்டத்தட்ட மூன்று மணி நேரமும் தூக்கி வைத்திருந்தோம் என்பார்கள். கேட்கவே கஷ்டமாக இருக்கும். ஆனால் இப்பொழுது பள்ளி சூழ்நிலை மிகவும் பிடித்து விட்டது. இப்பொழுது தீஷு தினமும் பள்ளிக்கு போக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். வீட்டிலிருந்தால் நான் ஏதாவது செய்ய சொல்லுவேன் என்ற பயமாகவும் இருக்கலாம். பள்ளி சூழ்நிலையைப் பழக்கப்படுத்தியவர்கள் இவ்விருவர்கள் தான்.

மிஸ்.சீதாவின் முகத்தில் சிரிப்பைத் தவிர வேறு எதையும் பார்த்ததில்லை. ஐந்து ஆறு டீச்சர்கள் இருந்தாலும் மிஸ்.சீதாவை சுற்றி எப்பொழுதும் ஒரே மழலைப் பட்டாளம். தீஷுவிற்கு பின்னாளில் அவளின் முதல் டீச்சர்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்றே இப்பதிவு.

கிளம்பும் முன் தீஷுவின் டீச்சர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். பரிசு வாங்கினோம். ஆனா வாழ்த்து அட்டை மட்டும் தீஷுவை வைத்து செய்ய வைத்தேன். மிஸ்களுக்கு வாழ்த்து அட்டை என்றவுடன் அவளுக்கு ஒரே சந்தோஷம். அட்டையின் முன் பக்கத்தில் வரைறீயா? பெயிண்டிங் செய்றீயா? என்றேன். crayon வைத்து வரைந்து அதன் மேல் பெயிண்டிங் செய்து விட்டாள். நான் மார்பிள் பெயிண்டிங் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவள் பிரஷ் வைத்து செய்ய வேண்டும் என்றாள். ஆகையால் இந்த அட்டைகளைச் செய்தோம். அட்டையில் "Thank you" Dheekshitha என்று நான் எழுத்துக்களைச் சொல்ல சொல்ல எழுதினாள்.



தீஷுவிற்கு பள்ளியை அறிமுகப்படுத்திய, பழக்கப்படுத்திய இவ்விருவருக்கும் என் நன்றிகள்.

Saturday, February 14, 2009

குதிக்கும் தீஷு

தீஷு அவள் அப்பாவின் ஷாக்ஸ்களை மடித்து வைத்த ஆர்வத்தைத் தொடர்ந்து, அவளுக்கு ஹாங்கரில் துணிகளை மாட்டச் சொல்லித் தரலாம் என்று நினைத்தேன். தீஷுவுடைய உடைகளை ஹாங்கரில் தான் மாட்டி வைத்திருக்கிறோம்.ஒரு டாப், ஒரு பாண்ட் என இரண்டையும் ஹாங்கரில் மாட்டச் சொல்லித் தந்தேன். ஹாங்கரில் மாட்டி முடித்தவுடன் அவள் டால் ஹாவுசில் மாட்டி வைத்து விட்டாள்.



மீண்டும் Funnel மூலம் தண்ணீர் பாட்டிலில் தண்ணீன் ஊற்றினோம். சிறிது நேரம் Funnel வழியாக தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அடுத்து நேரடியாக பாட்டிலில் தண்ணீரை ஊற்றினாள். சிறிது தண்ணீர் கீழே கொட்டியது. அவளே ஸ்பாஞ்ச் வைத்து துடைத்து விட்டாள்.



சமையல் அறையிலுள்ள தரையில் ஒவ்வொரு கட்டத்திலும் குதிக்க சொன்னேன். கட்டத்திலுள்ள கோட்டில் கால் படக்கூடாது. கட்டத்தில் குதிதாள். ஆனால் கோடுகளை மிதித்தாள். இரண்டு முறை குதித்தவுடன் சோர்ந்துப் போய் விட்டாள். இனி தினமும் இரண்டு நிமிடங்கள் குதிக்க வைக்கலாம் என்று இருக்கிறேன்.

Friday, February 13, 2009

பெயரை எழுத வா

சென்ற முறை அவள் டீச்சரைப் பார்த்தப் பொழுது, தீஷு ஆங்கில எழுத்திக்களை எழுதுவதால், அவள் பெயரை எழுதப் பழக்கச் சொன்னார்கள். அவள் பெயரிலுள்ள 11 எழுத்துக்களை மனப்பாடம் செய்ய வைக்க எனக்கு விரும்பமிருக்கவில்லை. ஆகையால் 11 சிறிது மூடிகளை (பால் பாட்டில் மூடி) எடுத்து, அதன் அவள் பெயரின் எழுத்துக்களை எழுது, அதை வைத்து அவள் பெயரை உருவாக்க வைத்தேன். இப்பொழுது கடைசி நான்கு எழுத்துக்களைத் தவிர மற்றவற்றை சரியாக வைத்து விடுகிறாள்.

அதை 6 மாதங்களுக்கு முன்னால் செய்துயிருக்க வேண்டும். எழுதும் மார்க்கிரை அதன் சரியான மூடியுடன் பொருத்த வேண்டும். இதன் மூலம் வண்ணங்களின் பெயர்களை அறியவும், கைகளுக்கு வேலையும் கிடைக்கும்.

இந்த ஐடியா முல்லையில் பின்னூட்டத்தால் வந்தது. பல்லாங்குழிப் பற்றி சொல்லியிருந்தார்கள். பல்லாங்குழியில் போடுவது போல் ஒவ்வொரு குழியிலும் ஐந்து கற்கள் போட வேண்டும். நான் கையால் போடலாம் என்று நினைத்திருந்தேன். தீஷு ஸ்பூனால் போட வேண்டும் என்றாள். முதல் நான்கு ஐந்து குழிகள் வரை ஐந்து கற்கள் தான் போட வேண்டும் என்று நினைவூட்ட வேண்டிருந்தது. அதன் பின் அவளாகச் செய்தாள். ஸ்பூனில் ஒரு கிண்ணத்தில் போட்டுத் தான் பழக்கம். சிறிது குழியில் போடுவதற்கு கவனம் அவசியம். நன்றாக செய்தது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது. இதன் மூலம் எண்ணுவதும், கை கண் ஒருங்கினைப்பும் அதிகரிக்கிறது. நன்றி முல்லை.

அதற்கு அப்புறம் கற்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். இரண்டு பென்சில்களை வைத்து கிண்ணத்தைப் பிடித்துக் கொண்டு ஸ்பூனால் கிளறிக் கொண்டிருந்தாள். பென்சில் எதற்கு என்றேன். அது பென்சில் இல்ல அம்மா.. இடுக்கி என்றாள்.

Wednesday, February 11, 2009

மறுபடியும்

தீஷுவிற்கு இரண்டு வயது முதல் அவளோடு ஆக்டிவிட்டீஸ் செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பிற்கும் பொழுது, ஸ்பூன் மூலம் பொருட்களை மாற்றுதல், கலர் பிரித்தல் (Sorting), ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்குக் கொட்டுதல் (Pouring) போன்றவைகள் செய்தோம். அப்பொழுது அவளுக்கு அந்த வயதிற்கு ஏற்றவாறு கவனச் சிதறல் அதிகம். ஸ்பூன் மூலம் மாற்ற சொன்னால் கையால் மாற்றுவாள், தரையில் கொட்டுவாள். பொதுவாக நான் இப்படி செய், அப்படி செய் என்று சொல்ல மாட்டேன். ஒரு முறை செய்து காட்டுவேன். அவள் செய்வதற்கு தயாராகயிருந்தால், செய்ய விட்டு விடுவேன். விளையாண்டால் விளையாட விட்டு விடுவேன். எங்களுக்கான விளையாட்டு நேரம். அவளை டென்ஷன் ஆக்குவதற்கு விரும்பம் இருந்ததில்லை. தம்மால் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை அவளுக்கு ஏற்படுத்தவே விரும்பினேன். ஆனால் இப்பொழுது அதே ஆக்டிவிட்டீஸை எப்படி செய்கிறாள் என்று பார்க்க விரும்பினேன். எத்தனை மாற்றங்கள். கிட்டத்தட்ட 60 கற்களை மாற்ற சொன்னேன். ஒவ்வொன்றாக மாற்றினாள். ஒன்று கூட கீழே விழவில்லை. முடித்தவுடன் உன் turn என்றாள். நான் செய்ய ஆரம்பிக்கும் முன் செய்து காட்டி இப்படி செய்ய வேண்டும் என்றாள். நான் மாற்ற ஆரம்பித்த சிறிது நேரத்திற்கு பிறகு அந்த இடத்தை விட்டு, சற்று தள்ளி அமர்ந்து விட்டாள் (நான் அப்படி தான் செய்வேன்). நான் மாற்றி முடித்தவுடன் "Good Job" என்றாள். கல்லையும் கிண்ணத்தையும் எடுத்து வைத்து விட்டாள். Thanks to Montessori..

வெவ்வேறு வரிசையில் alphabets டைப் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். Flash கார்டில் வெவ்வேறு வரிசையில் alphabets வரும்படி, Flash கார்டு அட்டைகளை கலைத்துக் கொடுத்தேன். பிரிண்ட் அவுட்டில், அட்டையில் வரும் எழுத்தை வட்டம் போட வேண்டும். தீஷு நன்றாக செய்தாள். ஆனால் வட்டத்திற்கு பதில் அந்த எழுத்தை, பிரிண்ட் அவுட்டில் அந்த எழுத்திற்கு கீழே எழுதினாள். அது போல Captial lettersசும் செய்தோம். இது படிக்கும் முறையான இடதுபுறத்திலிருந்து வலதுபுறத்திற்கு கண்களை நகர்த்த பயிற்சியும், எழுத்துக்களை ஞாபகப்படுத்தவும் உதவும்.

Tuesday, February 10, 2009

வெயில் ஞாயிறு

கடந்த ஞாயிறு அன்று குளிர் குறைந்து, சிறிது வெயிலும் இருந்தது. சிறிது நேரத்திற்கு ஸ்வெட்டர் இல்லாமல், குளிர் தாங்கும் படி இருந்தது. நான்கு மாதங்களுக்கு அப்புறம் இப்படி ஒரு வெதரைப் பார்த்தவுடன், தீஷுவை வெளியில் விளையாட அனுமதித்தோம். வீட்டின் முன்புறம் இருந்த பனி மெல்ல உருகி தண்ணீராகிருந்தது. அதில் தீஷு விளையாடும் பொழுது எடுத்த வீடியோ.



லாண்டரி முடித்து, துணிகளை மடிக்காமல் வைத்து விட்டு, சமைத்துக் கொண்டிருந்த பொழுது, இன்னும் சாக்ஸ் வேணும் என்றாள். பார்த்த பொழுது, அவள் அப்பாவின் சாக்ஸைகளை மடித்து வைத்திருந்தாள். மேலும் இரண்டு, மூன்று எடுத்துக் கொடுத்து மடிக்க வைத்து படமாக்கினேன். அவள் முன்னாலிருக்கும் அனைத்தும் அவள் மடித்தது.





ஒரு விளையாட்டு காபி கப்பை நீட்டினாள். விளையாடும் பொழுது அப்ப அப்ப இப்படி நீட்டுவாள், நானும் குடிக்கிறது போல பாசாங்கு செய்துவிட்டு, கப்பைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன். இந்த முறை, குடிக்க போகும் பொழுது, உனக்கு இல்லை என்றாள். வசதியாக என் அருகில் அவள் பொம்மையோடு வந்து உட்கார்ந்து, கப்பை வாங்கி, பொம்மைக்குக் கொடுக்க ஆரம்பித்தாள். அவளாக டம்பளரில் பால் குடிக்க ஆரம்பித்து வெகு நாட்களாகி விட்டன. யார் கொடுத்ததைப் பார்த்தாள் என்று தெரியவில்லை.

Monday, February 9, 2009

கூடில் பஞ்சு

ரொம்ப நாளாக பண்ண நினைத்த ஆக்டிவிட்டி. ஐஸ் ட்ரேவிலோ, முட்டை வைக்க பயன்படும் டப்பாவிலோ செய்யலாம். இடுக்கியினால் பஞ்சை எடுத்து ஒவ்வொரு குழியிலும் போட சொன்னேன். இது கைகளுக்கு வேலையும் , one to one correspondanceசும், கண் கை ஒருங்கினைப்புக்கும் நல்லது. பஞ்சுக்கு பதில் இடுக்கியினால் எடுக்க முடிந்த எந்த பொருளையும் பயன்படுத்தலாம். பஞ்சின் texture குழந்தைகளுக்கு விருப்பமாகயிருக்கும் என்பதால் நான் பஞ்சு பயன்படுத்தினேன். அதே போல் இடுக்கிக்கு பதில் tongsசும் பயன்படுத்தலாம்.

ஜாடிக்கு மூடி பழக்கிப்பின், இந்த ஆக்டிவிட்டி பழக்கலாம் என்று இருந்தேன். இதில் என் கைப்பை பட்டனும், தீஷுவின் கிளிப் பெட்டியின் பூட்டையும் திறக்க, மாட்டச் செய்தேன். கைப்பை எளிதாக இருந்தது. கிளிப் பெட்டி கஷ்டமாக இருந்தது. சிறிது நாட்கள் கழித்து முயற்சி செய்ய வேண்டும்.

கண்ணைக் கட்டி

எப்பொழுதும் பண்ணும் பஸில் தான். சற்று வித்தியாசப்படுத்த ஐந்து பஸில் போர்டுகளைக் கொடுத்தேன். பஸில் பீஸை எடுத்து, அதற்கான பஸில் போர்டைக் கண்டுபிடித்து, அதில் வைக்க வேண்டும். சிரமம் இல்லாமல் செய்தாள்.

12 பீஸ் floor puzzle செய்து கொண்டிருந்தாள். இப்பொழுது 25 பீஸ் பஸில் வரை செய்வதற்கு பொறுமை வந்திருக்கிறது.


இதுவும் முன்பு செய்தது தான். ஆனால் இந்த முறை கண்ணை மூடிக் கொண்டு, இருப்பதில் பெரிய பீஸை கண்டுபிடிக்க வேண்டும். சரியாக செய்தாள். கண்ணைத் திறக்காத என்று ஒவ்வொரு முறையும் ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது.

அதே முறையில் போர்டு பஸிலில் இரண்டு பீஸ்களை மட்டும் எடுத்துக் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டே பொருத்த சொன்னேன். போர்டில் பீஸ் வைப்பதற்கான இடத்தைப் பார்த்து விட்டு, மீண்டும் கண்னை மூடிக் கொண்டுப் பொருத்தினாள். சிறிது நாட்களுக்கு பிறகு கண்ணை மூடிக் கொண்டே, போர்டில் பொருத்தவும் பழக்க வேண்டும்.

Thursday, February 5, 2009

உக்கி போடுங்கப்பா..

நம்ம உக்கி கூட ஒரு வகை யோகாவாம். பெயர் super brain yoga. இந்த வீடியோவைப் பாருங்க..



Dahn yoga பார்க்க வித்தியசமாயிருக்கு..

Wednesday, February 4, 2009

வருகிறோம்

கடந்த நான்கு ஐந்து வருடங்களாக ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும், எங்கள் உறவினர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி "எப்போ திரும்பி வர போகிறீர்கள்?". நாங்களும் ஒவ்வொரு முறையும் அந்த வருட கடைசியில் வந்து விடுவோம் என்போம். கடந்த முறை வந்திருந்த பொழுது, "இனிமேல் எங்க வர போரீங்க" என்று அவர்களே முடிவு செய்து கொண்டார்கள். அப்பொழுது பதில் சொல்லவில்லை. இப்பொழுது திரும்பி வர போகிறோம். இம்மாத கடைசியில் திரும்புகிறோம்.

நாங்கள் இருவரும் லைப்ரேரியை தவிர எதையும் மிஸ் பண்ண மாட்டோம். புத்தகம் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. கிட்டத்தட்ட 20 லைப்ரேரியிலிருந்து ஆன்லைனில் புத்தகங்களை நமது லைப்ரேரிக்கு வரவழைத்துக் கொள்ளலாம். ஆகையால் நமது லைப்ரேரியில் இல்லாத புத்தகங்களையும் படிக்க முடியும். எங்களுக்கு திங்கள் மாலை லைப்ரேரி டைம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது புத்தகம் எடுத்து வந்து விடுவோம். இதே பழக்கத்தை இந்தியா வந்தவுடன் ஆரம்பிக்க வேண்டும். பக்கத்தில் லைப்ரேரி ஒன்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

தீஷுவை பொருத்த வரை அவள் ஸ்கூலையும் மிஸ் பண்ணுவாள் என்று நினைக்கிறேன். நியூஜெர்ஸி வரும் முன் பென்ஸில்வெனியாவில் ஒரு சின்ன ஊரில் இருந்தோம். அப்பொழுது ஒரு பங்களாதேசி ஒருவர் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தார். அவர் குழந்தை பள்ளிக்கு போனவுடன் ஏன் அவன் தோல் வேற கலராக இருப்பதாக மற்ற குழந்தைகள் கேட்பதாக கூறினான் என்றார்கள். மேலும் Single parent, step father போன்றவைகள் என்ன என்று கேட்டதாக கூறினார்கள். தீஷுவிற்கு ஸ்கூல் தேடும் பொழுது, மிகுந்த cultural difference இருக்க கூடாது என்று நினைத்தோம். அவளுக்கு அதை புரிந்து கொள்ளும் வயது இல்லை என்பது எங்கள் கருத்து. அவள் ஸ்கூல் இந்தியன் ஒருவரால் நடத்தப்படுகிறது. ஆகையால் அங்குள்ள 35 குழந்தைகளில் கிட்டத்தட்ட 30 குழந்தைகள் இந்திய குழந்தைகள். நாங்கள் செய்தது சரியா தவறா என்று தெரியாது. ஆனால் தீஷுவிற்கு வித்தியாசம் தெரியாமல் பழகுவதற்கு வசதியாக இருந்தது. அவளுக்கு பள்ளி என்றால் என்ன என்று பழக்கியதற்கு மிஸ்.கீதா மற்றும் மிஸ்.சீதாவிற்கு என் நன்றிகள். தீஷு இந்தியா வருவதற்கு ஆவலாக இருக்கிறாள். தினமும் காலையில் எழுந்தவுடன் என்னைக்கு போகிறோம் என்று கேட்கிறாள். மாற்றங்களை ஏற்றுக் கொள்வாள் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது இந்தியா வருவதாக உறவினர்களிடம் சொன்னதற்கு எதுக்கு இப்ப ரிஸஷன் டைம்ல வாரீங்க? Project முடிஞ்சிருச்சா? திரும்பி போக சொல்லிவிட்டார்களா? என்று கேட்கிறார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்.

Monday, February 2, 2009

வர வர

தலைப்பு யோசிக்கிறதே கஷ்டமாயிருக்கு.


தீஷு கத்திரிக்கோலால் வெட்டினாலும், நேராக வெட்டத் தெரியாது. அதனால் 2 இன்ச் நீளப் பேப்பரில் கோடுகள் வரைந்து, கோட்டின் மீது வெட்ட வைத்தேன். ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவளால் செய்ய முடியவில்லை. சிறிது நாட்கள் கழித்து முயற்சி செய்ய வேண்டும்.



ஒரு படத்தை எடுத்துக் கொண்டு, அந்த படத்தின் மேல் toothpickஆல் ஓட்டைப் போட வேண்டும். மிகவும் கவனம் தேவை. தீஷு ஓட்டைப் போடவே கஷ்டப்பட்டாள். ஆகையால் நான் இருவது ஓட்டைப் போட்டு, அதன் மேல் அழுத்த சொன்னேன். இஷ்டமாக செய்தாள். இதில் எழுதுவதற்கு பயன்படும் அனைத்து விரல்களும் உபயோகப்படுத்தப்படுகிறது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost