Friday, November 21, 2014

உலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ

எல்லாரும் எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது. 

ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்டிருக்கிறது, ஏதாவது ஒரு பதிவு போட வேண்டும் என்று யோசித்தால், என்ன எழுதுவது என்றே தெரியவில்லை.  அதனால் ஒரு வீடியோ பதிந்திருக்கிறேன். இது தீஷு தன் பள்ளியில் நடந்த போட்டிக்குத் தயாரித்த வீடியோ. முதல் பரிசு பெற்று இருக்கிறது. வீடியோவிற்கான தீம் "The world would be a better place if".



தான் படித்த ஒரு புத்தகத்திலிருந்து கான்செப்ட் எடுத்து இருக்கிறாள். அனைத்து பகுதிகளையும் அவளே செய்தாள் என்றால் அது பொய். எங்களின் உதவி தேவைப்பட்டது. அனிமேஷன், கணினியில் படங்கள் உருவாக்க (சூரியன், மரம், பழம், வீடு), பேச என்று கற்று கொண்டாள். அவள் பேச்சை இணைத்தது, அதை வீடியோவாக மாற்றியது என்று அனைத்தையும் என் கணவர் செய்தார். அதையும் அவளே செய்திருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.

இந்த வீடியோவிற்கு பள்ளியில் முதல் பரிசு கிடைக்கிறது. டிஸ்ட்டிரிக் லெவலுக்குச் சென்று இருக்கிறது. அங்கும் பரிசு கிடைத்தால் சொல்லுகிறேன். வீடியோவைப் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்


Sunday, August 10, 2014

அப்டேட்ஸ்

 விபத்துப் பற்றிய பதிவில் கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்! இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டியிருக்கிறோம். கார் இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாத சின்ன ஊரில் இருப்பதால், மூன்று நாட்களில் புது கார் வாங்கி விட்டோம். சம்மு மறந்து விட்டாள் என்று நினைக்கிறேன். தீஷு தான் எப்போதாவது பேசிக் கொண்டிருப்பாள். எனக்குத் தான் எந்த கார் பக்கத்தில் வந்தாலும் பயமாக இருக்கிறது. என்னால் இப்பொழுது நடக்க முடிகிறது. வலது காலில் வீக்கமும் வலியும் இன்னும் இருக்கின்றன‌. ஆனால் குறைந்து கொண்டு இருக்கின்றன‌. முழுவதும் சரியாக ஒன்று இரண்டு வாரங்கள் ஆகலாம். 


போலிஸ் ரிப்போர்ட் வந்துவிட்டது. ஒரு பெண் ஓட்டியிருக்கிறார். ஒரு நொடி கீழே பார்த்தேன், வண்டி அடுத்த லேன் போய் இடித்துவிட்டது என்று குறிப்பிட்டு இருக்கிறார். எங்களை இடித்து விட்டு, இரண்டு மைல்கள் சென்று நிறுத்தி, அரை மணி நேரத்திற்கு பிறகு அவரே போலிஸை அழைத்து இருக்கிறார். அவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போலிஸ் ரிப்போர்ட்டில் இருக்கிறது. அவற்றைப் பார்த்தவுடன் கோபமாக வந்தது. ஆனால் போலிஸை அழைக்கும் முன், அந்த அரை மணி நேரம் எங்களை விட அவர் பயந்திருப்பார், கலங்கியிருப்பார் என்று நினைத்தவுடன் பாவமாக இருந்தது. அவர் மீது hit and run முத்திரை வேறு விழுந்திருக்கிறது.

விபத்து பற்றி போதும். நல்ல விஷயங்களை பேசுவோமா? நான் மீண்டும் சென்ற வாரம் வேலையில் சேர்ந்து விட்டேன். நானும் என் கணவரும் ஒரே கம்பெனியில் தான் இது வரை வேலை செய்திருக்கிறோம். இப்பொழுதும் ஒரு பில்டிங் தான். ஆனால் நான் அவருக்கு client. வீட்டிலும் அதையே சொல்லி அவரை வெறுப்பேற்றுவதே எனக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. குழந்தைகளை என் தோழி பார்த்துக் கொள்கிறார். அவரிடம் ஏற்கெனவே பழகி இருப்பதால், குழந்தைகளுக்கு சிரமமாக இல்லை. புதிய சூழ்நிலையை எளிதாக பழகிக் கொண்டார்கள்.  

எங்கள் தொட்டித் தோட்டத்தை உங்களிடம் காட்ட வேண்டும். 

புதினா தான் எங்கள் முதல் செடி


அப்புறம் கொத்தமல்லி

வெந்தயம்

வெந்தய அறுவடை



பீன்ஸ்


வளர்ந்து வரும் தக்காளி செடி
அடுத்த வருட கோடையில் எங்கள் தொட்டித்தோ ட்டத்தை விரிவாக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை.  விரிவு செய்தால் எழுதுகிறேன். 


Monday, July 28, 2014

ஒரு விபத்தும், மன அமைதியும், வேண்டுகோளும்..

கடந்த சனி எங்களுக்கு எப்பொழுதும் போல் தான் விடிந்தது. பக்கத்திலுள்ள ப்ரிமாண்ட் சென்று சாப்பிட்டு விட்டு, இந்திய மளிகை வாங்கி வரலாம் என்று பதினொறு மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். கிளம்பி ஐந்து நிமிடங்களில் ஹைவே அடைந்தோம். எப்பொழுதும் ஒரு மணி நேரம் பயணித்தாலும் தூங்காத சம்மு ஐந்து நிமிடங்களில் தூங்கி இருந்தாள். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஏய் என்று என் கணவர் கத்தும் சத்தம் மட்டுமே எனக்குக் கேட்டது. இடது பக்கத்தில் ஒரு வெள்ளை ராட்சச அளவில் ஒரு வண்டியின் ஒரு ஓரம் மட்டுமே தெரிந்தது. எங்கள் கார் சுற்றத் தொடங்கியது. தாறுமாறாக ஓடியது. ஒர சுவற்றில் மோதியது. மோதிய வேகத்தில் திரும்பி வந்தது, அதுவாகவே நின்றது. ஐந்து விநாடிகள் தான்.

காரின் உள்ளே முழுவதும் புகை. கதவைத் திறந்தேன். வெளியில் இருபது பேர் நின்று இருந்தார்கள். உதவுவதற்காக தங்கள் காரிலிருந்து இறங்கியவர்கள். ஒருவர் நான் இறங்குவதற்கு ஏதுவாக கையை நீட்டினார். என் குழந்தைகளைப் பாருங்கள் என்று கூறி பின்னால் கையை நீட்டினேன். அதற்குள் என் கணவர் இறங்கி அவர்களை கார் சீட்டிலிருந்து இறக்கி இருந்தார். என் வலது காலில் சிறிது வலி. நடக்கச் சற்று சிரமமாக இருந்தது. இடித்த வண்டி ஓடி விட்டது. 

இறங்கியவுடன் மற்ற மூவரையும் கண்டவுடன், உண்மையாகச் சொல்லுகிறேன் மனதில் அப்படி ஒரு அமைதி. இடித்த வேகத்தில் முழித்த சம்மு புகையைப் பார்த்து பயந்திருந்தாள். தீஷு பயத்தில் அழுது கொண்டிருந்தாள். அவர்களை அணைத்துக் கொண்டு தண்ணீர் கொடுத்தேன். யாருக்கும் பெரிய வெளி காயங்கள் இல்லை. யாரோ போலிஸை அழைத்தார்கள். இரண்டு நிமிடங்களில் போலிஸ் வந்தனர். ஆம்புலன்ஸ் வந்தது. எங்களுக்கு ப்ரஷர் போன்றவற்றை செக் செய்து விட்டு ஆம்புலன்ஸ் சென்றுவிட்டது. என்ன நடந்தது என்று பின்னால் இருந்து பார்த்தவர்கள் போலிஸில் தெரிவித்தார்கள். இரண்டு லேன்கள் ஒரே நேரத்தில் கடக்க முயற்சி செய்திருக்கிறார் இடித்தவர். எங்கள் காரை கவனிக்கவில்லை. இடித்து விட்டு சென்றுவிட்டார். 

கார் கதவை அழுத்தி மூடாதே, கார் கண்ணாடியில் ஒரு கீர‌ல் வந்துவிட்டது என்று பார்த்து பார்த்து வைத்திருந்த கார் எங்கள் கண் முன், முன் பாகம் முற்றும் இழந்து சிதறி கிடந்தது. ஆனால் மனதில் ஒரு ஓரத்திலும் வலி இல்லை. என் குழந்தைகளை அணைத்துக் கொள்ளவே தோன்றியது. டிராபிக் ஜாமாகி அனைவரும் எங்களைப் பார்த்துக் கொண்டே சென்றாலும், அதை யோசிக்கக் கூடத் தோன்றவில்லை. வீட்டிற்கு எப்படி செல்வது, சென்றவுடன் குழந்தைகளுக்கு என்ன சாப்பிடக் கொடுக்கலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன். வெளியில் சாப்பிட ப்ளான் இருந்ததால் ஒன்றும் சமைத்திருக்கவில்லை.

விபத்து முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. என் வலது காலில் சுலுக்கு இருக்கிறது. டாக்டர் முறிவு இல்லை என்று சொல்லிவிட்டார். உடம்பில் ஒவ்வொரு பாகமும் வலிக்கிறது. மூச்சு விட்டால் கூட ஏதோ பாகத்தில் ஒரு வலி. தீஷுவிற்கு சொல்லத் தெரியும். திடீரென்று எங்கோ ஒரு இடத்தில் வலிக்கிறது என்று சொல்லுகிறாள். அப்புறம் சரியாகி விடுகிறது. அது பரவாயில்லை. சம்முவிற்கு சொல்லத் தெரியுமா என்று கூட தெரியவில்லை. ஆனாலும் இந்த விபத்துக் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம். அந்த ஐந்து விநாடிகளில் எங்கள் வாழ்க்கை எப்படியோ மாறி போய் இருக்கலாம். இவ்வளவு தான் வாழ்க்கை. இப்படியொரு நிலையில்லாத வாழ்க்கைக்குத் தான் நாம் இப்படி அலட்டிக் கொள்கிறோம்.

விபத்திற்குப் பின், எங்கள் முன் இருக்கும் முக்கிய சவால், எங்கள் குழந்தைகளின் மன நிலையை மாற்றுவது. கார்ல புகை போயிடுச்சா என்று கேட்கும் சம்முவையும், இனிமே கார்ல ஏற மாட்டேன் என்று இருக்கும் தீஷுவையையும் சமாளிக்க வேண்டும். அவர்களை சிறிது சிறிதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

விபத்தைப் பின்னால் இருந்து பார்த்தவர்களின் கூற்றுப்படி, எங்கள் கார் 360 சுற்றி இருக்கிறது. ஓரத்தில் மோதி, மோதிய வேகத்தில் சற்று பின்னால் வந்து நின்று இருக்கிறது. எங்களுக்கு சிறு கீரல் கூட இல்லாமல் காப்பாற்றிய எங்கள் கார், தூக்கிப் போடும் நிலையில் இருக்கிறது. கார் இவ்வளவு சிதைந்து இருந்தாலும், உள்ளே எங்களைக் காத்தவை - சீட் பெல்ட், கார் சீட், ஏர் பாக். இப்பொழுது இந்தியாவிலும் 100 கி.மி வேகத்திலும் செல்லும் சாலைகள் வந்துவிட்டன். ஆனால் எத்தனை பேர் கார் சீட் அணிகிறோம், எத்தனை பேர் குழந்தைகளை கார் சீட்டில் அமர வைக்கிறோம், எத்தனை காரில் ஏர் பாக் இருக்கிறது? அனைவருக்கும் வேண்டுகோள் - சீட் பெல்டை அணியுங்கள், குழந்தைகளை மடியில் வைப்பதே தவிருங்கள். 

எங்களின் வாழ்க்கைப் பற்றிய பார்வையை கண்டிப்பாக இந்த விபத்து மாற்றி இருக்கிறது. 


Sunday, May 18, 2014

ஹவாயி (Hawaii)

தீஷு பிறந்தநாளிற்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல!

ஹவாயி! தீஷுவின் கோடை விடுமுறையில் (ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தோம். தீஷுவின் பிறந்தநாளை அங்கு கொண்டாடினால் என்ன என்று தீடீரென்று ஒரு யோசனை தோன்ற, விரைந்து காரியத்தில் இறங்கினோம். ஹவாயியில் எட்டு தீவுகள் இருந்தாலும், முக்கியமாக நான்கு தீவுகளுக்குத் தான் மக்கள் அதிகமாக செல்கின்றனர். நாங்கள் தேர்ந்தெடுத்தது குவாயி(Kauai).

டிக்கெட், தங்கும் இடம், வாடகை கார் என்று அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன் இணையத்தில் பதிவு செய்து விட்டாலும், எங்கெல்லாம் செல்ல வேண்டும் என்று  ப்ளான் செய்வது கடினமாக இருந்தது. ஆனால், எப்படியோ இணையத்தின் உதவியுடனும், சில புத்தகங்களின் உதவியுடனும் பார்க்க வேண்டிய இடங்கள் அனைத்தையும் பார்த்து விட்டோம். 
எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.




















Tuesday, May 13, 2014

ஆட்டிசம்



பிரியாவும் நானும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தோம். கல்லூரியில் வேறு வேறு  டிபார்ட்மென்ட். படிப்புக்குப் பின் நாங்கள் தொடர்பில் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் ஃபேஸ்புக் மூலம் மீண்டும் சந்தித்துக் கொண்டோம். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர் என்றும் மகளுக்கு ஆட்டிசக் குறைபாடு உள்ளது என்றும் அவர் ஃபேஸ்புக் பதிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

ஏப்ரல் மாதம் ஆட்டிச விழிப்புணர்வு மாதம். அப்பொழுது தன் அனுபவத்தை பிரியா ஒரு இணையதளத்தில் பகிர்ந்து இருந்தார். தன் மகனும் பாதிக்கப்பட்டு இருந்தார் எனவும் தெரப்பிகளுக்குப் பிறகு வெளி வந்து இப்பொழுது ஆறாம் வகுப்பு நன்றாகப் படிக்கிறார் என்று எழுதி இருந்தார். மகள் தெரப்பிகளினால் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார் என்றும் எழுதி இருந்தார். அவர் மகள் பற்றி எழுதி இருந்த ஒரு சில விஷயங்கள் மிகவும் ஆச்சரியமூட்டின‌. அந்தக் குழந்தை, அனைவரின் பிறந்தநாளையும் அவர்கள் ஐடி கார்டில் பார்த்து, நினைவில் வைத்து, மாத ஆரம்பத்தில் பரிசு அனுப்புகிறாளாம். எந்த தேதியைச் சொன்னாலும் அதன் கிழமையைச் சொல்லி விடுகிறாளாம். அபார ஞாபகசக்தி!

இரண்டு விஷயங்கள், எனக்கு பிரியாவைப் பற்றி எழுத வேண்டும் என்று தூண்டின. ஒன்று பள்ளியில் (integrated school) சேர்க்க பிரியாவும் கணவரும் பட்டக் கஷ்டங்கள். இரண்டு, பள்ளியிலும் மற்றும் பொது இடங்களிலும் மற்றவர்களால் அந்தக் குழந்தைகளும் குடும்பத்தவருக்கும் ஏற்படும் நிராகரிப்புகளும் வேதனைகளும். சில இடங்களில் கண்ணீர் வருவதைத் தடுக்க முடியவில்லை.  

பிரியாவின் மகள் நடனம் ஆடியதையும் பாடியதையும் வீடியோகளில் பார்க்தேன். மகன் செய்த வாகனம் ஒன்றின் புகைப்படம் பார்த்தேன். அவர்களின் பலத்தை அறிந்து அதற்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். பிரியா கடக்கின்ற பாதை கரடு முரடாக இருந்தாலும், அவரின் நம்பிக்கையும், தன் இரு குழந்தைகளின் கரம் பற்றி அவர் அழைத்துச் செல்லும் விதமும் வியக்க வைக்கின்றன‌. அன்புடனும் நம்பிக்கையுடனும் பயிற்சிக் கொடுத்தால், பிரியாவின் குழந்தைகள் போல் மற்ற குழந்தைகளும் ஜொலிப்பார்கள் என்று நம்பிக்கை வருகிறது

பிரியாவின் எழுத்து கண்டிப்பாக பலரை சென்ற‌டைந்து, அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கும். என்னால் மேலும் இருவருக்காவது நம்பிக்கை கொடுக்கும் என்ற ஆசையில் அவரின் எழுத்துகளை பகிர்ந்து இருக்கிறேன். 

அவரின் படைப்பின் முகவரி : http://thealternative.in/inclusivity/living-with-autism-a-family-in-the-spectrum/ 

Hats off to you Priya! I wish your kids a bright and happy future!

Thanks google for the image.

Monday, May 5, 2014

பிறந்தநாள்

தீஷுவிற்கு, வரும் எட்டாம் தேதி, எட்டாவது பிறந்த நாள். இது அவளுக்குத் தங்கப் பிறந்தநாள். வயதும் பிறந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பிறந்தநாள், தங்கப் பிறந்தநாள். 

அவளின் எட்டாவது பிறந்தநாளில் அவளைப் பற்றிய‌ விஷயங்கள் : 

1. கடவுளிடம், உனக்குத் தங்கை வேண்டும் என்று கேட்டாயா அல்லது தம்பி வேண்டும் என்று கேட்டாயா என்று கேட்ட தோழியிடம், எனக்குத் தங்கை வேண்டும் என்று கேட்டேன் என்று பதில் கூறினாள் தீஷு. எனக்குத் தம்பி வேண்டும் என்று வேண்டினேன் என்றாள் தோழி. ஏன் என்று தீஷு கேட்டதற்கு, அப்பொழுது தான் தம்பிக்கென்று தனி பொம்மைகள் இருக்கும். அவன் தனியாக அதில் விளையாடுவான், நான் தனியாக என் பொம்மைகளுடன் விளையாடுவேன் என்றாள். அதற்கு தீஷு, , "I didn't want to play alone with toys. I wanted to play together with my sister even without any toys" என்றாள். இது தான் என் அன்பு தேவதை தீஷு. 

2. தீஷுவிற்கு ஒரு வேலையை பல தடவை ஞாபகப்படுத்த வேண்டும். இரண்டு வேலையை ஒரே நேரத்தில் சொன்னால், ஒன்றை முடித்து விட்டு, அடுத்ததை மறந்து விடுகிறாள். அவளுக்கு ஞாபகப்படுத்துவதற்கு நானும் என் கணவரும் எத்தனையோ வழிமுறைகளை முயற்சித்து விட்டோம். எதுவும் அவளிடம் பலிக்கவில்லை. அவளாகவே திருந்தவேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக ஞாபகப்படுத்துவதை விட்டுவிட்டோம். அவள் முழுதாக மறந்து, கடைசி நிமிஷத்தில் நான் ஞாபகப்படுத்தி, அவளுடன் நானும் சேர்ந்து போராடி வேலைகளை முடிக்க வேண்டி உள்ளது. கடைசி நிமிட ஞாபகப்படுத்தலை நிறுத்து, இரண்டு முறை ஆசிரியரிடம் தண்டனை வாங்கினாள் என்றால் அடுத்த முறை அவளாகச் செய்வாள் என்று என் கணவர் கூறுகிறார். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அடுத்த பிறந்தநாளுக்கு முன் தன் ஞாபக மறதியை குறைத்துக் கொள்ளுவாள் என்று நினைக்கிறேன். 

3. "அம்மா, பாப்பா அழுகிறா பாருங்க"

"அம்மா, சம்முக்கு மருந்து போடுவ‌தற்கு முன்னால, நான் கேக்கிறேன். நீங்கள் போட மாட்டேன், சம்முவுக்கு மட்டும் தானு சொல்லுங்க. அவளுக்கு மட்டும் தான் ஸ்பெஷலா போட்டு விடுறீங்கனு நினைச்சு, அழாம போட்டுக்குவா"

"அம்மா, நீங்க வேலைக்குப் போனீங்கனா நான் ஸ்கூலுக்குப் போகாம, சம்முவோட டைகேர்ல போய் அவளைப் பார்த்துக்கிடுவேன். அங்க இருக்கிறவங்களுக்கு எதுக்கு அழுகிறானு எப்படித் தெரியும்?"

-‍ இதெல்லாம் தீஷுவின் பொன்முத்துகள். 

எவ்வளவு அழகாத் தூக்குகிறாள், எவ்வளவு நல்லாப் பார்த்துக்கிறாள் என்று பிறரிடம் தன் தங்கைப் பாசத்திற்கு பல பாராட்டுப் பத்திரங்கள் வாங்கி இருக்கிறாள். 

4. புதிதாக கற்றுக் கொடுக்கும் விஷயத்தை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், பழகிய புது விஷயத்தை, மீண்டும் மீண்டும் தானாக முயற்சித்து மேலும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற கனல் குறைவு.  பழக்கம் இல்லாமல் பழகிய விஷயத்தை சில நாட்களில் மறந்து போய்விடுகிறாள். மீண்டும் முதலிருந்து ஆரம்பிப்போம். பயிற்சி எவ்வளவு முக்கியம் என்று அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

5. மெக்ஸிக்கோவிலிருந்து வந்திருக்கும் ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாத குழந்தைக்கு, இரண்டு மாதங்கள் சைகை மொழியில் டீச்சர் சொல்லுவதை வகுப்பிலும், குழந்தைகள் சொல்லுவதை விளையாட்டு/சாப்பாடு நேரங்களிலும் விளக்கியிருக்கிறாள். நான் டீச்சர் கான்பெரன்ஸ் சென்று இருந்த பொழுது, டீச்சர் மிகவும் பாராட்டினார்கள். பல நேரங்களில் உதவும் குணத்தை அவளிடம் பார்த்து இருக்கிறோம். அவ்வாறு அவள் இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி!

6. எப்பொழுது பார்த்தாலும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறாள். புத்தகம் என்றால் வெறும் கதை புத்தகம். வந்தவுடன், புத்தகத்தை எடுத்து விடுவதால், என்னிடம் பேசுவதற்குக் கூட நேரம் இருப்பதில்லை. ஹோம்வொர்க் போன்ற மற்ற விஷயங்களில் விருப்பம் இருப்பதில்லை. கதை புத்தகம் இல்லாத மற்ற புத்தகங்களில் சுத்தமாக ஆர்வம் இருப்பதில்லை. தப்பு என்று சொல்லவில்லை ஆனால் ஒரே மாதிரி புத்தகங்களை படிப்பது அவள் வளர்ச்சிக்கு சரியா என்று புரியவில்லை. மற்ற புத்தகங்களில் ஆர்வம் உண்டாக்குவதற்காக நூலகத்திலிருந்து  சில‌ புத்தகங்களை எடுத்து வந்து அவள் புத்தகங்கள் இருக்கும் இடத்தில் வைத்தல், நாங்கள் படித்தல் போன்று செய்தாலும், அவள் பக்கத்தில் நோ ரியாக்ஷ‌ன்!  

7. விளையாடும் பொழுது, டைம் அவுட் சொல்லி பூச்சியை ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது, அவுட் செய்த குழந்தையிடம், கிட்டத்தட்ட சண்டைக்கு நின்றதால் அனைத்து குழந்தைகளும் விளையாட முடியாமல் போய் இருக்கிறது. நான் தவறு செய்யாத பொழுது எதற்காக அவள் சொல்லுவதை எல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிற வீம்பு. நீ செய்த‌து சரி என்றால் யார் சொன்னாலும் எதிர்த்து நில் என்று சொல்லவா அல்லது நண்பர்களுக்காக சில நேரங்களில் விட்டுக் கொடுத்தால் தப்பில்லை என்று சொல்லவா என்று புரியாமல் நாங்கள் தான் குழம்பிப் போகிறோம். 

இது தான் தீஷு. அன்பு, கோபம், பொறுமை, பொறாமை போன்று அனைத்துக் குணங்களும் கொண்ட ஒரு இளம் பெண்ணாக மாறி வருகிறாள். நல்ல குணங்களை வளர்த்து கெட்ட  குணங்களை குறைந்து, ஒரு நல்ல பெண்ணாக அவள் வளர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்! அவள் ஒரு நல்ல மனிதாபிமான மிக்கப் பெண்ணாக வளர, அவள் பிறந்த நாளில், உங்கள் ஆசிகளை வழங்க வேண்டுகிறேன்! 

Happy Birthday chellam!

Monday, April 7, 2014

ரகசிய வாழ்த்து..

அப்பாவின் பிறந்தநாளுக்கு என்ன பரிசளிக்கலாம் என்று தீஷு இரண்டு மாதங்களாக (ஆம்!) தலையை உடைத்துக் கொண்டிருந்தாள். கடந்த‌ வாரயிறுதியில் அப்பாவுக்குப் பிறந்தநாள். வியாழன் வரை ஒன்றும் செய்திருக்கவில்லை (தலையை உடைத்ததைத் தவிர!). அப்பாவுக்குத் தெரியாமல் கடைக்குச் சென்று கேக் வாங்கி பிறந்தநாள் அன்று வெட்ட வேண்டும் என்று சொன்னாள். சரி என்றேன். 

அப்பாவுக்கு ஓவியங்கள் பிடிக்காது அதனால் அறிவியல் கணிதம் உபயோகித்து ஒரு வாழ்த்து சொல்லப் போகிறேன் என்று ஒரு சின்ன பெட்டியையும் காகித்தையும் வைத்து 2 மணி நேரம் ஏதோ செய்து கொண்டிருந்தாள். ஒரு நேரத்தில் பொறுமை இழந்து என்ன செய்யிற என்றேன். வாழ்த்து எழுதியிருந்த காகித்தைக் காத்தாடி போல் மடித்து, பெட்டியில் வைத்து மூடி, பெட்டியை திறந்தவுடன், மடித்திருந்த‌ காகிதம் விரிந்து வெளியே வந்து வாழ்த்து சொல்வது போல் செய்து கொண்டிருக்கிறேன் என்றாள். 

ஒட்டப்பட்டிருந்த காகிதம் செங்குத்தாக நிற்க முடியாமல் பெட்டிக்குள் விழுந்த‌தால் அட்டைகளை ஒட்டி வைத்து ஒரு பூகம்பத்தை பெட்டிக்குள் நிகழ்த்தியிருந்தாள். அவளின் ஐடியா வேலை செய்யவில்லை என்று வருத்தத்தில் இருந்தாள். 

அவள் வருத்தத்தைப் போக்குவதற்காக ஒரு வாழ்த்து அட்டை செய் என்றவுடன், அப்பாவுக்குப் பெயிண்ட்டிங் பிடிக்காது என்றாள். உன் அப்பாவையே பெயிண்ட்டிங் செய்ய வைக்கலாம் வா ஒரு ரகசிய வாழ்த்து அட்டை செய்தோம்.

ஒரு வெள்ளைத்தாளில் வெள்ளை க்ரையானால்(Crayon)  எழுதச் சொன்னேன். எனக்கு வேலை இருந்ததால் அவள் என்ன எழுதினாள் என்று கவனிக்கவில்லை. தாளும் க்ரையானும் வெள்ளையாக என்பதால் பார்த்தவுடன் எழுத்துகள் தெரியவில்லை.

பிறந்தநாள் அன்று பரிசளித்ததும், அவள் அப்பா சூரிய வெளிச்சத்தில் வைத்து படிக்கப் பார்த்தார். வாட்டர் கலர் வைத்து வண்ணம் தீட்டினால், நன்றாக எழுத்துகள் தெரியும் என்று அவள் அப்பாவை வண்ணம் தீட்டச் செய்தாள். பெயிண்ட்டிங் பிடிக்காத அப்பாவை பெயிண்ட்டிங் செய்ய வைத்தோம். 

நான் மணிக்கணக்கில் நேரம் செலவளித்து பெயிண்ட்டிங் செய்து காட்டினால், பார்க்காமலே நன்றாக இருப்பதாகச் சொல்லும் அவர், தன் பெண் சொன்னவுடன் வாட்டர் கலரால் வண்ணம் தீட்டத் தொடங்கிவிட்டார். வாட்டர் கலர் செய்தவுடன், க்ரையான் பெயிண்ட்டை தடுத்து வெளியே தெரிய ஆரம்பித்தது. 


வாழ்த்தில் இருந்தது இது தான் :

Dear Appa, 
Happy Birthday! I am very happy to be your daughter. Thank you for teaching HTML. 
Love, 
Dheekshitha.



குழந்தை ஸ்பெஷல் வாழ்த்து அட்டை, சர்பரைஸ் கேக் என்று பண்ணும் பொழுது நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அன்று மதியம் சமையல் ‍ சாதமும் ரசமும் (மட்டும்) செய்தேன். :‍)))

Wednesday, March 26, 2014

தமிழில் தான் பேசுகிறோமா?

தீஷு தமிழ் படித்துக் கொண்டிருந்தாள். சோளம் என்றால் என்ன என்றாள். சோளக்கருது என்றேன். அப்படினா என்றாள். அப்பொழுது தான் புரிந்தது நாங்கள் சோளத்தை கார்ன் என்று சொல்லுகிறோம் என்று. சிறு வயதில் சோளக்கருது என்று சொன்னது கார்ன் என்று எவ்வாறு மாறியது என்று யோசிக்கத் தொடங்கினேன். பதில் கிடைக்கவில்லை.

அப்படி எத்தனை வார்த்தைகளை மாற்றி இருக்கிறோம் அல்லது மறந்து இருக்கிறோம் என்று நாங்கள் பேசும் பொழுது கவனிக்கத் தொடங்கினேன். 

என் கவனிப்பைச் சொல்லுவதற்கு முன் அதற்கு முதல் நாள் நடந்த ஒரு சின்ன உரையாடல். எங்கள் தோழியர் வட்டத்தில் தெலுங்கு பெண் ஒருவர் இருக்கிறார். அவரிடம் சக்கரைக்கு தெலுங்கில் என்ன என்று ஒரு தோழி கேட்டதற்கு பஞ்சதாரா என்று சொல்லுவிட்டு, இப்பொழுது யாரும் பஞ்சதாரா என்று சொல்லுவது கிடையாது.யார் அவ்வளவு பெரிய வார்த்தையை உபயோகப்படுத்துவார்கள் என்றார். நான் உடனே நகைச்சுவைக்காக நயன்தாராவை எப்படி சொல்லுவீர்கள் என்றவுடன், நயன்தாரா தான் என்றார்கள். அது மட்டும் பெரிய வார்த்தை இல்லையா என்று சிரித்தோம். மற்றொரு தோழி இப்படி அடுத்த தலைமுறைக்குக் கடத்தாத‌ வார்த்தைகள் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து போகும் என்றார்கள். 

இப்பொழுது என் கவனிப்புக்கு வருவோம். நாங்கள் பேசுவதும், அடைப்புக்குறிக்குள் இருப்பது நான் சிறுவயதில் பேசியதும்.

1. ப்ரஷ் பண்ணு (பல் தேய்)
2. ஸிஸர் (கத்திரிக்கோல்)
3. ஸிலிப்பர்(செருப்பு)
4. ஸ்டவ் (அடுப்பு)
5. வெயிட் (காத்திரு)
6. டேஸ்ட் (ருசி)
7. ஸ்வீட் (இனிப்பா)
8. டைம் ஆகிடுச்சி (நேரம் ஆகிடுச்சி)
9. பனானா (வாழைப்பழம்)
10. டேட்ஸ்(பேரீச்சம் பழம்)
11. காஷூ (முந்திரி பருப்பு)

இது காலையில் பள்ளிக்குக் கிளம்பும் முன் ஒரு சில நிமிடங்கள் நடந்த உரையாடல்களில் நான் கவனித்தது. தோழி கூறியது போல் எத்தனை வார்த்தைகளைக்  கடத்தத் தவறி இருக்கிறேன். 

வீட்டில் தமிழில் தான் பேசுவோம் என்று பெருமையாக நான் சொல்லுவது உண்டு. ஆனால் பேசுவது தமிழ் தானா என்கிற சந்தேகம் வரத் தொடங்கி உள்ளது. 


Sunday, February 23, 2014

சம்மு டைம்ஸ் 23-2-2014


1. தீஷு, ஹிந்தி புத்தகத்தை ஷோபாவில் வைத்திருந்தாள். சம்மு, என்னிடம் எடுத்து வந்து, "அம்மா, இந்தா 'தும்' (तुम) புஃக், எடுத்து உள்ள வை"

2.  தீஷு காலையில் அப்பொழுது தான் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டிருந்தாள். சம்மு அவளிடம் ஓடி, "அக்கா, நீ தமிழ் ஹோம்வொர்க் செய்யப் போறீயா?" என்றாள். வாரம் ஒரு முறை மட்டும் தான் தமிழ் வீட்டுப்பாடம் என்பதால், என்ன கிழமை என்று தீஷு யோசித்து, "இன்னைக்கு இல்லை,  இவ வேற சும்மா" என்றாள் கடுப்புடன்.

3. காந்த ஃப்ளாஸ்டிக் பூஜ்ஜியத்தை எடுத்து இது என்ன என்றேன் சம்முடன், யோசிக்காமல் சொன்னாள், "- 2 (minus 2)"

4. சமையலறையில் வந்து அலமாரிகளை எண்ணிக் கொண்டிருந்தாள், "1, 2,3..", முடித்தவுடன் என்னிடம்,"10 மில்லியன் இருக்கு" என்றாள்.

5. "அம்மா, எனக்கு முருகன் சாப்பிடக் கொடு" என்றாள். சுட்டிக் காட்டியது முறுக்கை.

6. கோயிலில் அப்பா, "சாய் பாபா" என்றவுடன் "ஹாய் பாபா" என்று திரும்ப சொன்னாள்.

7. இரண்டு வயது செக்கப்பிற்கு டாக்டரிடம் கூட்டிப் போகும் முன்,"ஒரு ஆன்ட்டி உன் வெயிட், தலை, ஹையிட் எல்லாம் அளப்பாங்க..நீ சிரிச்சிக்கிட்டே இருக்கணும்" என்று சொல்லி வைத்தேன். பத்து நிமிடம் கழித்து, அவளுக்கு ஷூ போட்டுக் கொண்டே, என்ன செய்வ‌ என்றவுடன், அழுத்தம் திருத்தமாக‌ "அழுவேன்" என்றாள்.    



Thursday, February 20, 2014

பிடிக்கவில்லை ஆனால் செய்ய வேண்டி உள்ளது...

I do NOT like to do it. But I am supposed to do it -

 இந்தப் பொன் முத்துகளை உதிர்த்தது என் இரண்டு வயது சின்னப் பெண்.

அர்த்தம் புரிந்து சொல்லியிருப்பாள் என்று தோன்றவில்லை. ஆனால் அவளுடைய வாழ்க்கையிலும் விருப்பமில்லாமல் கடமைக்காகச் செய்ய வேண்டியது உள்ளது என்று தெரிந்து கொண்டேன் :))


Friday, February 14, 2014

காகிதப்பூக்கள்

 MuhilNeel தளத்தில் அவர்கள் செய்த பூக்களின் படம் போட்டுயிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன், தீஷுவிற்குப் பிடிக்கும் என்று தோன்றியது.

இணையத்தில் தேடி வீடியோ பார்த்தோம். பூக்கள் செய்வது மிகவும் எளிது. ஒரே தாளில் செய்யவில்லை என்பதாலும் கோந்து உபயோகிப்பதாலும், இதை ஒரிகமி என்று சொல்லமுடியாது.

பூக்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. வெவ்வேறு அலங்காரங்களுக்கு உபயோகப்படுத்தலாம். நாங்கள் செய்த பூக்களை படம் எடுக்கும் முன்,குழந்தைகள் எங்கோ பத்திரப்படுத்திவிட்டார்க்ள் :)) தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.. ..

நாங்கள் பார்த்த வீடியோ




Tuesday, February 11, 2014

தங்கள் ஆதரவை வேண்டி!!

என் நண்பர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க  ஆங்கில வலைப்பதிவு ஆரம்பித்துள்ளேன். தள முகவரி : www.sparklingbuds.blogspot.com

மேலும் இரு தளங்களுக்கும் சேர்த்து ஒரு முகப்புத்தகப் பக்கம் தொடங்கி உள்ளேன். முகவரி : https://www.facebook.com/dheekshuPoonthalir

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு தளங்களிலும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.    ஒரு தளம் வைத்திருந்த பொழுதே மாதத்திற்கு ஐந்து பதிவு போடுவேன். இப்பொழுது இரண்டு. சுத்தம்!! :))

பூந்தளிருக்கு அளித்த ஆதரவை புதிய‌ தளத்திற்கும் தாங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 


Monday, February 3, 2014

காபி பெயிண்ட்டிங் (Coffee Painting)



நானும் என் கணவரும் காபி பிரியர்கள் இல்லையென்றாலும் தினமும் இரண்டு முறை குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள். என் கணவர் ஃபில்டர் காபி அருமையாக தயார் செய்வார். நான் போட்டால் டிகாஷ‌ன் இறங்காது. :)). அதனால் இன்று வரை எங்கள் வீட்டு காபி டிபார்ட்மென்ட் அவரிடம் தான் உள்ளது. இங்கு வந்த புதிதில் ஃபில்டருக்கான நல்ல காபிப் பொடி கிடைக்கவில்லை. ப்ரூ உபயோகித்துக்க் கொண்டே, பல காபிப் பொடிகளை முயற்சித்துக் கொண்டிருந்தார். ஃபில்டருக்கான பொடி கிடைத்தவுடன், ப்ரூவை நிறுத்திவிட்டார். கால் பாட்டில் ப்ரூ, அதிக நாள் ஆனதால் கட்டியாகி இருந்ததை சமீபத்தில் கவனித்தோம். தூக்கிப் போடவா என்றவரிடம், பெயிண்ட்டிங் முயற்சித்துப் பார்க்கிறேன் என்றேன். இணையத்தில் தேடினேன். சரியான செயல்முறை கிடைக்கவில்லை. இரண்டு மூன்று முயற்சிகளில் எப்படி செய்வது என்று எங்களுக்குப் பிடிபட்டது. மிகவும் எளிதானது.


தேவையான பொருட்கள்

1. இன்ஸ்டெண்ட் காபிப் பொடி
2. பேப்பர்
3. பெயிண்ட்டிங் ப்ரஸ்

செயல்முறை

1. நமக்குப் பிடித்த ஒரு படத்தை பேப்பரில் வரைந்து கொள்ளவும்.  கனமான பேப்பரில் செய்தால் நன்றாக இருக்கும். கனமான பேப்பர் இல்லாத்தால் நான் பிரிண்ட் அவுட் எடுக்கப் பயன்படும் பேப்பரில் தான் செய்தேன்.

2. காபிப் பொடியில், தண்ணீர் கலந்து டிகாஷன் தயார் செய்து கொள்ளவும். சற்று கட்டியாக இருக்க வேண்டும். முதலில் நான் மிகவும் தண்ணீராக தயார் செய்து விட்டேன். உபயோகப்படுத்த முடியவில்லை.

3. முதலில் படத்தின் மேல் வரைந்து கொள்ளவும்.

4. படத்தினுள் மிகவும் சிறிய அளவில் எடுத்து, நிரப்பவும்.

5. எங்கெங்கு ஷேடிங் தேவையோ, மீண்டும் அங்கே நிரப்பவும்.

தீஷுவிற்கு வெறும் காபி கலரில் இருந்தது பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். வேறு கலர் சேர்க்கலாமா என்று கேட்டு கொண்டியிருந்தாள். கால் மணி நேரத்தில் ஒரு படம் முடித்து விடலாம்.

மிகவும் தண்ணீரான டிகாஷன்

இரண்டாவது முயற்சியில் ஒட்டகச்சிவிங்கி



காயும் முன் தூக்கிப் பார்த்தப் பூக்கள்




Tuesday, January 28, 2014

குழந்தை ஓவியர்களின் படைப்புகள் புத்தகத்தில் இடம்பெற..

Quarry Books என்னும் international publisher தங்கள் "1000 Kids Art Ideas" புத்தகத்திற்காக குழந்தைகளின் படைப்புகளை (art projects) கேட்டு இருக்கிறார்கள். இ‍-மெயிலில் டிஜிட்டல் கோப்பாக இணைத்தால் போதும். அனுமதி இலவசம். ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டும் என்றாலும் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் புத்தகத்தில் (e-book அல்ல‌) இடம்பெறும்.

அவர்கள் தளத்திலிருந்து


1000 Kids Art Ideas is announcing a call for entries: educators, parents, home schoolers, community groups, and caregivers, help us inspire others by submitting digital photos of hands-on art projects by children ages 3-11 (preschool through 5th grade).

We are interested in all types of art projects but especially ones that use every day materials in new ways, explore individual creative expression for people of all ages, and are fun! Have you created a sculpture using sponges? Painted with mailing tubes? We want to see your dynamic and exciting art and design!

Winners will be published in 1000 Kids Art Ideas which will feature 1000 unique and inspiring ways to be creative with the budding artists in our lives.


மேலும் விவரங்களும் அனுப்பவேண்டிய முகவரியும் இந்தப் படிவத்தில் உள்ளது. கடைசி நாள் 15-2-2014.

 

Monday, January 27, 2014

ஞாபகசக்தியை அதிகரிக்க..

ஞாபகசக்தியை அதிகரிக்க நாங்கள் மேற்கொள்ளும் வழிமுறையைப் பற்றியது அந்த இடுகை. தீஷுவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் நினைவுப்படுத்த வேண்டும். ஒரு எக்சல் ஷீட்டில் ஒவ்வொரு கிழமைக்கும் அவளுக்கான வேலைகளை எழுதி, பிரிண்ட் அவுட் எடுத்து ஃப்ரிஜ் கதவில் ஒட்டி வைத்திருக்கிறேன். ஆனால் தினமும் அந்தப் பேப்பரைப் பார் என்று நினைவுப்படுத்த வேண்டும் :((. ஒரு வேலை முடித்து விட்டு இன்னொரு வேலை செய் என்று இரண்டு வேலைகள் ஒரே நேரத்தில் கொடுத்தால், முதல் வேலை முடித்தவுடன் இரண்டாவது வேலையை மறந்துவிடுகிறாள். இந்த வயதில் இது சகஜம் தான் என்று டாக்டர், டீச்சர் எல்லோரும் சொல்லிவிட  நிம்மதி அடைந்தேன். ஆனால் ஒரு நாள் பள்ளியிலிருந்து புத்தகப்பையை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டாள் :((. அவள் ஞாபகசக்தியை அதிகரிக்க சில வழிமுறைகளை மேற்கொள்ள ஆரம்பித்து இருக்கிறோம்.

1. மோனோபோலி (Monopoly) ‍நம் ஊரில் பிஸ்னஸ் போன்ற விளையாட்டுகள் விளையாடுதல் : தாம் வாங்கிய இடங்களில் பெயர்களை நினைவில் வைத்திருந்து வாடகை வாங்க வேண்டும். அவள் வாடகை கேட்கவில்லை என்றால் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிடுவேன். ஆனால் அனைத்து இடங்களில் பெயர்களையும் நினைவில் வைத்து இப்பொழுது இந்த விளையாட்டில் நல்ல முன்னேற்றம்(!).

2. இரண்டு வேலைகளை செய்யப் பழக்குதல் : என் கணவரும் தீஷுவும் விளையாடும் இந்த விளையாட்டு ‍ இரண்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்தல். உதாரணத்திற்கு எளிமையான கணிதக் கணக்குகளை கேட்டுக் கொண்டே அவள் முதுகில் தட்டிக் கொண்டேயிருப்பார். கணக்குகளுக்கு விடைகளை அளித்துக் கொண்டே வர வேண்டும் மேலும் இறுதியில் எத்தனை முறை தட்டினார் என்று சொல்ல வேண்டும்.

3. www.Lumosity.com : இது என் கணவரின் யோசனை. கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் லுமோசிட்டி நரம்பு மண்டல நிபுணர்கள் (Neuro Scientists) வடிவமைத்தது என்று சொன்னவுடன் சற்று நம்பிக்கை பிறந்தது. சில தினங்களாக தினமும் ஒரு முறை விளையாடுகிறாள். நாங்கள் கம்ப்யூட்டரில் விளையாண்டது இல்லை. ஐபாட். கம்ப்யூட்டரிலும் அதே மாதிரி விளையாட்டுகள் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  

4. தூக்கம், பிடித்தமான வேலைகளை இணைந்து செய்தல் : முன்பு அவளை எட்டரை மணிக்கு தூங்கச் சொல்லுவேன். நீயும் வந்து படு என்று நேரத்தைக் கடத்திக் கொண்டே இருப்பாள். அதனால் இப்பொழுது நானும் அவளுடன் சேர்ந்து தூங்கச் சென்று விடுகிறேன். அதே போல் அவள் வேலைகளில் எதிலெல்லாம் இணைந்து செய்ய முடியுமோ அவற்றை இணைந்து செய்கிறோம். அவ்வாறு செய்யும் பொழுது அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவள் இறுக்கம் தளரும் பொழுது அடுத்து செய்ய வேண்டியது நினைவுக்கு வந்துவிடுகிறது. 

 5. Brain Gym Exercises :  கீழே வீடியோவிலுள்ள பயிற்சிகளை இணைந்து காலையில் செய்கிறோம். சூரிய நமஸ்காரம் 10 முறை செய்கிறோம்.



6. மேலும் அதிக தண்ணீர், எண்ணெய், இனிப்பு, ஃபுட் கலரிங் குறைப்பு என்று சமையலிலும் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். சுடோகு, குறுக்கொழுத்து, விடுகதைகள் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவது உண்டு. 

இவற்றால் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா என்று முழுமையாகத் தெரியவில்லை ஆனால் பள்ளியிலிருந்து பையை எடுத்து வந்துவிடுகிறாள் :)). உங்கள் குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost