Showing posts with label Painting. Show all posts
Showing posts with label Painting. Show all posts

Monday, February 3, 2014

காபி பெயிண்ட்டிங் (Coffee Painting)



நானும் என் கணவரும் காபி பிரியர்கள் இல்லையென்றாலும் தினமும் இரண்டு முறை குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள். என் கணவர் ஃபில்டர் காபி அருமையாக தயார் செய்வார். நான் போட்டால் டிகாஷ‌ன் இறங்காது. :)). அதனால் இன்று வரை எங்கள் வீட்டு காபி டிபார்ட்மென்ட் அவரிடம் தான் உள்ளது. இங்கு வந்த புதிதில் ஃபில்டருக்கான நல்ல காபிப் பொடி கிடைக்கவில்லை. ப்ரூ உபயோகித்துக்க் கொண்டே, பல காபிப் பொடிகளை முயற்சித்துக் கொண்டிருந்தார். ஃபில்டருக்கான பொடி கிடைத்தவுடன், ப்ரூவை நிறுத்திவிட்டார். கால் பாட்டில் ப்ரூ, அதிக நாள் ஆனதால் கட்டியாகி இருந்ததை சமீபத்தில் கவனித்தோம். தூக்கிப் போடவா என்றவரிடம், பெயிண்ட்டிங் முயற்சித்துப் பார்க்கிறேன் என்றேன். இணையத்தில் தேடினேன். சரியான செயல்முறை கிடைக்கவில்லை. இரண்டு மூன்று முயற்சிகளில் எப்படி செய்வது என்று எங்களுக்குப் பிடிபட்டது. மிகவும் எளிதானது.


தேவையான பொருட்கள்

1. இன்ஸ்டெண்ட் காபிப் பொடி
2. பேப்பர்
3. பெயிண்ட்டிங் ப்ரஸ்

செயல்முறை

1. நமக்குப் பிடித்த ஒரு படத்தை பேப்பரில் வரைந்து கொள்ளவும்.  கனமான பேப்பரில் செய்தால் நன்றாக இருக்கும். கனமான பேப்பர் இல்லாத்தால் நான் பிரிண்ட் அவுட் எடுக்கப் பயன்படும் பேப்பரில் தான் செய்தேன்.

2. காபிப் பொடியில், தண்ணீர் கலந்து டிகாஷன் தயார் செய்து கொள்ளவும். சற்று கட்டியாக இருக்க வேண்டும். முதலில் நான் மிகவும் தண்ணீராக தயார் செய்து விட்டேன். உபயோகப்படுத்த முடியவில்லை.

3. முதலில் படத்தின் மேல் வரைந்து கொள்ளவும்.

4. படத்தினுள் மிகவும் சிறிய அளவில் எடுத்து, நிரப்பவும்.

5. எங்கெங்கு ஷேடிங் தேவையோ, மீண்டும் அங்கே நிரப்பவும்.

தீஷுவிற்கு வெறும் காபி கலரில் இருந்தது பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். வேறு கலர் சேர்க்கலாமா என்று கேட்டு கொண்டியிருந்தாள். கால் மணி நேரத்தில் ஒரு படம் முடித்து விடலாம்.

மிகவும் தண்ணீரான டிகாஷன்

இரண்டாவது முயற்சியில் ஒட்டகச்சிவிங்கி



காயும் முன் தூக்கிப் பார்த்தப் பூக்கள்




Wednesday, June 12, 2013

ந‌டைபாதை ஓவிய‌ம்

போன‌ வ‌ருட‌க் கோடை விடுமுறையின் பொழுது, தீஷுவின் வகுப்பிலுள்ள‌ குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் பெற்றோர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒவ்வொரு பார்க்கில் சந்தித்து வ‌ந்த‌ன‌ர். முடிந்த‌வ‌ர்க‌ள் போக‌லாம். குழந்தைகளைப் பார்க்கில் விளையாட விட்டு பெற்றோர் பேசிக் கொண்டிருப்பர். ஒரு திங்க‌ள் எங்க‌ள் வீட்டின் அருகிலிருந்த‌ பார்க்கில்  காலை ப‌த்திலிருந்து ப‌ணிரெண்டு வ‌ரை ச‌ந்திப்பு. ச‌ம்மு பச்சிள‌ம் குழ‌ந்தை. தூங்க‌ வைத்து விட்டு சென்றால், அவ‌ள் எழுந்து விட்டாள் என் அம்மா போன் செய்தால் 5 நிமிட‌ங்களில் வ‌ந்து விட‌லாம் என்று முடிவு செய்தேன். ச‌ரியாக‌, ப‌த்து ம‌ணிக்குக் கிள‌ம்பி, வீட்டிலிருந்து வெளியேறப் போகிறோம், ச‌ம்மு விழித்து அழ‌த் தொடங்கினாள். அவள் மீண்டும் தூங்கும் பொழுது ம‌ணி ப‌ணிரெண்டு. எல்லாரும் போயிருப்பாங்க‌ என்றாள் தீஷு அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு. யாரும் இல்லாவிட்டால் ப‌ரவாயில்லை, நாம் இருவ‌ரும் விளையாடுவோம் என்று தீஷுவை அழைத்துக் கொண்டு கிள‌ம்பினேன். கொளுத்தும் வெயிலில் அவ‌ளால் விளையாட‌ முடியாது என்று தோன்றிய‌து.சோள‌ மாவு, க‌ல‌ரிங், பெயிண்ட் பிர‌ஸ் , த‌ண்ணீர், சில காலி பாட்டில்கள் எடுத்துக் கொண்டேன்.

எதிர்பார்த்த‌து போல் வெயிலில் அவ‌ளால் விளையாட முடிய‌வில்லை. ‍சோள‌ மாவைத் த‌ண்ணீரில் க‌ரைத்து, க‌ல‌ரிங் சேர்த்து (பால் போன்ற பதத்தில்), சிமெண்ட் த‌ரையில் வ‌ரைய‌ச் செய்தேன். த‌ண்ணீர் ஃப‌வுண்ட‌ன் அருகிலுள்ள த‌ரையைத் தேர்ந்தெடுத்தோம். சுத்த‌ம் செய்வ‌தும் எளிதாக இருந்த‌து. த‌ண்ணீரை ஊற்றி விட்டால் போதுமான‌தாக இருந்த‌து. என‌க்குச் சோள‌ மாவு த‌ண்ணீரில் போய்விடும் என்று தெரியும் ஆனால் க‌ல‌ரிங் த‌ரையில் க‌ரையாக்கி விடுமோ என்று பய‌ம் இருந்த‌தால், முத‌லில் ஒரு சிறு ப‌குதியில் வ‌ரைந்து, த‌ண்ணீர் ஊற்றி அழித்துப் பார்த்தோம். இட‌ம் ப‌ளிச்சென்று ஆன‌தால் தொட‌ர்ந்தோம்.





எப்பொழுதும் போல் தாளில் சிறிய இடத்தில் வரைவதற்கு பதில், ஒரு எல்லையற்ற பெரிய இடத்தில் வரைந்ததில் தீஷுவிற்கு மகிழ்ச்சி. பள்ளி திறந்தவுடன், கோடையில் செய்த பிடித்தமான நிகழ்ச்சியைப் பற்றி எழுதும் பொழுது, இதைத் தான் எழுதியிருந்தாள். 

மொட்டை மாடி அல்ல‌து ந‌டைப்பாதைக‌ளில் பெயிண்ட் செய்து விளையாட விரும்பினால், சோள மாவில் தண்ணீர் கலந்து  முய‌ற்சிக்க‌லாம‌. கலரிங் சேர்ப்பதாக இருந்தால், முதலில் சிறு ப‌குதியில் வரைந்து  கரையாக்குகிறதா என்று பார்த்து விட்டுத் தொட‌ருங்க‌ள். ‌



Monday, May 20, 2013

க‌ண் க‌ட்டி வித்தை..

நியூ ஜெர்ஸியில் இருந்த‌ பொழுது லைப்ரேரியில் குழ‌ந்தைக‌ளுக்குக் கதை சொல்லும் நிக‌ழ்ச்சி ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. ச‌ற்று பெரிய‌ குழ‌ந்தைக‌ளுக்கான‌தால் தீஷுவால் அப்பொழுது நிக‌ழ்ச்சியில் க‌ல‌ந்து கொள்ள‌ முடிய‌வில்லை. நான் புத்த‌க‌ம் எடுத்துக் கொண்டிருந்தேன். க‌தை ப‌டித்து முடித்த‌வுட‌ன் குழ‌ந்தைக‌ள் வ‌ரைய‌த் தொட‌ங்கின‌ர். அப்பொழுது அவ‌ர்க‌ள் கொடுத்த‌ செய‌ல்முறை விள‌க்க‌த்தைக் கேட்டேன். இப்பொழுது அதை வைத்து நாங்க‌ள் செய்தோம். கை 3D மாதிரி இருக்கும்.





தேவையான‌ப் பொருட்க‌ள் :

1. வெள்ளைப் பேப்ப‌ர்

2. க‌ல‌ர் பேனாக்க‌ள்

செய்முறை:

1. கைக‌ளை விரித்து பேப்ப‌ரில் வைத்து பென்சினால் வ‌ரைய‌ வேண்டும்.

2.க‌ல‌ர் பேனாவால் நேர் கோடுக‌ள் வ‌ரைய‌ வேண்டும்.

3. கையின் உள்ளே வ‌ரையும் பொழுது நேர் கோட்டை ச‌ற்றே மேல் வ‌ளைத்து க‌விழ்ந்த‌ "U" போல் வ‌ரைய‌ வேண்டும்.

4. விர‌ல்க‌ளின் உள்ளும் வ‌ளைந்த‌ கோடுக‌ள் வ‌ரைய‌ வேண்டும்.

5. முழு பேப்ப‌ரையும் கோடுக‌ளால் நிர‌ப்ப‌ வேண்டும்.



எளிதான‌ செய‌ல்முறை. சிறுவ‌ர்க‌ளுக்கும் ஏற்ற‌து.

Tuesday, May 14, 2013

முத‌ல் ஓவிய‌ முய‌ற்சி

தீஷுவின் பிற‌ந்த‌ நாள் அன்று ஓவிய‌ம் செய்யும் பொழுது, ச‌ம்முவையும் இணைக்க‌லாம் என்று நினைத்திருந்தேன். ச‌ம்மு அனைத்தையும் வாயில் வைப்ப‌தால் அவ‌ளுக்காக‌ வீட்டில் பெயிண்ட் செய்ய‌ வேண்டும். அன்று என‌க்கு நேர‌மில்லை. அத‌னால் நேற்று வீட்டில் செய்த‌ பெயிண்ட் வைத்து ஓவிய‌ம் செய்தோம்.

 ச‌ம்முவின் வ‌ய‌திற்கு ஏற்ற‌து விர‌ல் ஓவிய‌ம். விர‌ல்க‌ளால் வ‌ரைவ‌து. தொடுத‌ல் உண‌ர்ச்சிக்கு ஏற்ற‌து. 


 பெயிண்ட் செய்ய‌ தேவையான‌ பொருட்கள் :

1. Corn flour - அரை க‌ப்

 2. குளிர்ந்த‌ நீர் - கால் க‌ப்

 3. கொதிக்கும் நீர் - ஒரு க‌ப்

 4. Food colouring

செய்யும் முறை :

1. குளிர்ந்த‌ நீரில் Corn flour - ஐ முத‌லில் க‌ரைத்துக் கொள்ள‌ வேண்டும்.

2. பின்பு சிறிது சிறிதாக‌ கொதிக்கும் நீரை ஊற்றிக் க‌ல‌க்கிக் கொண்டே இருக்க‌ வேண்டும்.

3. தேவையான‌ ‍அளவிற்கு கட்டியான‌வுட‌ன் கொதிக்கும் நீர் க‌ல‌ப்ப‌தை நிறுத்தி விட‌ வேண்டும். நான் இங்கு தவ‌று செய்துவிட்டேன். மிக‌வும் க‌ட்டியாகி விட்ட‌து.

4. க‌ல‌ரிங் சேர்க்க‌ வேண்டும்.

Love என்று டேப்பால் நானும் தீஷுவும் எழுதி வைத்திருந்தோம். சிறிது பெயிண்ட் எடுத்து கான்வ‌ஸில் போட்டுக் கொடுத்தோம். தொட்ட‌வுட‌ன் ச‌ம்முவிற்கு பிடிக்க‌வில்லை. எழுந்து சென்று விட்டாள். மீண்டும் சிறிது நேர‌த்திற்கு பின் திரும்ப‌ வ‌ந்து தொட்டுப் பார்த்தாள். பிடிக்க‌வில்லை. முத‌ல் ஓவிய‌ முய‌ற்சி இனிதே இவ்வாறு முடிந்த‌து.



 தீஷு ‌ பெயிண்ட்டை வைத்து விளையாண்டு கொண்டிருந்தாள். விர‌ல்க‌ளால் ஏதோ ஒன்று வ‌ரைந்திருக்கிறாள் ப‌ட்டாம்பூச்சி என்று நினைக்கிறேன்.



ச‌ம்மு சாப்பிட்டு முடித்த‌வுட‌ன், மீத‌மிருக்கும் உண‌வை, அது திர‌வ‌ நிலையிலிருந்தால், விளையாட‌ கொடுப்ப‌து என் வ‌ழ‌க்க‌ம். கீழேயும் மேலேயும் கொட்டி தேய்த்து வ‌ரைந்து கொண்டிருப்பாள். அத‌னால் இது அவ‌ளின் முத‌ல் முய‌ற்சி என்று சொல்ல‌ முடியாது.

சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் மீதமிருந்த‌ க‌ஞ்சியை வைத்து ஸ்டூலில் கொட்டி அவ‌ள் செய்த‌ முதல் ஓவிய‌ம்.





த‌யிர் வைத்து ச‌ப்புக் கொட்டிக் கொண்டு அவ‌ள் செய்த ஓவிய‌ம்.



அடுத்த‌ முறை ச‌ற்று த‌ண்ணீராக‌ பெயிண்ட் வைத்து முய‌ற்சி செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.


Monday, May 6, 2013

புள்ளிக‌ள்

புள்ளிக‌ள் இணைத்து கோல‌மிடலாம். புள்ளிக‌ள் ம‌ட்டுமே வைத்து ஓவிய‌ம்? Pointillism என்கிற‌ ஓவிய‌ முறை புள்ளிக‌ள் ம‌ட்டுமே வைத்து ஓவிய‌ங்க‌ள் வ‌ரைவ‌தாகும். கூகிளில் தேடிப் பார்த்தால் சில‌ ஓவிய‌ங்க‌ள் பிர‌மிக்க‌ வைக்கின்ற‌ன‌.

முன்பு நாங்க‌ள் Ear buds(காதில் அழுக்கு எடுக்க‌ உத‌வுவ‌து) கொண்டு இந்த‌ முறையில் ஒரு ஓவிய‌ம் வ‌ரைந்திருக்கிறோம். அதைப் ப‌தியவில்லை என்று நினைக்கிறேன். இப்பொழுது நாங்க‌ள் க்ரையான் கொண்டு செய்தோம்.



தேவையான‌வை :

1. ப‌ழைய‌ க்ரையான் (மேலுள்ள‌ பேப்பரை எடுத்து விட‌ வேண்டும்)

 2. விள‌க்கு அல்ல‌து மெழுகுவ‌ர்த்தி

செய்முறை :

1. ஒரு பேப்ப‌ரில்  பென்சிலில் ஒரு ஓவிய‌த்தை வ‌ரைந்து கொண்டோம்.

2. க்ரையானை தீயில் (விள‌க்கு அல்ல‌து மெழுகுவ‌ர்த்தி) காட்டி உருக‌ச் செய்து, வ‌டியும் க்ரையானில் (புள்ளியில்) ஓவிய‌ம் செய்தோம்.

 3. மிக‌வும் எளிது. ஆனால் ச‌ரியான‌ நேர‌த்தில் க்ரையானைப்  பேப்ப‌ர் மேல் கொண்டு செல்ல‌ வேண்டும். அது ப‌ழ‌குவ‌த‌ற்கு சிறிது நேர‌ம் எடுத்த‌து.



தீ, பேப்பர் அருகில் இருப்ப‌தால், க‌வ‌ன‌ம் மிக‌வும் தேவை. நாம் குழ‌ந்தையின் அருகில் முழு நேர‌மும் இருக்க‌ வேண்டும். ந‌ல்ல‌தொரு அனுப‌வ‌ம்.

தீஷு ஸ்கேலினால் அள‌க்க‌ மிக‌வும் சிர‌மப்ப‌ட்டாள். அத‌னால் ஒரு இன்ச் ச‌துர‌ங்கள் உருவாக்க‌ச் செய்தேன். கோடுக‌ள் இணையும் இட‌ங்க‌ளில் ஸ்டிக்க‌ர் ஒட்ட‌ச் சொன்னேன். ஒன்று விட்டு ஒன்றில் ஒட்ட வேண்டும்.


ஸ்கேல் உப‌யோக‌ப் ப‌ழ‌க்கிய‌ மாதிரியும் ஆயிற்று, அவ‌ளுக்கு ஒரு ஆர்ட் ஒர்க் செய்த‌ திருப்தியும் உண்டாகிற்று.



Thursday, April 11, 2013

மெழுகு ஆறு

சிறிதான‌ அல்ல‌து வ‌ண்ண‌ம் தீட்ட‌ முடியாத‌ க்ரையான்ளைத் தூக்கிப் போட‌ ம‌ன‌ம் ஒப்புவ‌தில்லை. முன்பே க்ரையான்க‌ளை உருக்கி உருமாற்றியுள்ளோம். இந்த‌ முறையும் உருக்கினோம், ஆனால் உருமாற்றாம‌ல் பேப்ப‌ர் மேல் வைத்து உருக்கி மெழுகினால் வண்ண‌ம் தீட்டினோம். அழ‌கிய‌ ஓவிய‌ங்க‌ள் கிடைத்த‌ன. ஐடியா இணைத்தில் எடுத்த‌து. நான் ச‌ற்று மாற்றியுள்ளேன்.

க்ரையானுக்குத் த‌மிழ் வார்த்தைத் தெரிய‌வில்லை. தெரிந்த‌வ‌ர்க‌ள் செல்லுங்க‌ளேன்.

தேவையான‌ப் பொருட்க‌ள்

1. க்ரையான்க‌ள்  (Crayons)

2. ஹேர் டிரைய‌ர் (Hair dryer)

3. ஒரு அக‌ல‌மான‌ அட்டைப் பெட்டி (மெழுகு த‌ரையில் வ‌டியாம‌ல் இருக்க‌)

 செய‌ல்முறை:

1. க்ரையான்க‌ள் மேலுள்ள‌ காகித‌த்தை எடுக்க‌ வேண்டும். எடுக்க‌ க‌டின‌மாக‌ இருந்தால், சிறிது நேர‌ம் வெந்நீரில் போட்டால் எளிதாக‌ எடுக்க‌ வ‌ரும்.

2. ஒரு அட்டை பெட்டியில் காகித‌த்தை வைத்து, நான்கு ஓர‌ங்க‌ளில் டேப்பினால் ஒட்ட‌வும்.

3. ஒரு க்ரையானை எடுத்துப் பேப்ப‌ரின் ந‌டுவில் வைத்து டேப்பினால் ஒட்ட‌வும். ஒட்டாம‌ல் விட்டால் ஹேர் டிரைய‌ர் காற்றில் க்ரையான்  ஓடும். உருக்குவ‌து க‌டின‌ம்.

4. ஹேர் டிரைய‌ரை ஹையில் வைத்து க்ரையான் நோக்கி வைத்திருக்க‌வும்.

5. அரை நிமிட‌த்திற்குள் க்ரையான் உருகத் தொட‌ங்கும்.


6. இப்பொழுது க்ரையான் மேலுள்ள‌ டேப்பை எடுத்து விட‌வும்.

7. க்ரையான் காற்றினால் பேப்ப‌ரில் இங்கும் அங்கும் ஓடி வண்ண‌ம் தீட்ட‌த் தொட‌ங்கும்.

8. முழுதாக‌ உருகிய‌வுட‌ன் ம‌ற்றொரு வண்ண‌த்தில் க்ரையான் எடுத்து இதே போல் செய்யவும்.


9. இறுதியில் பேப்ப‌ரை அட்டையிலிருந்து எடுக்க‌வும்.

இர‌ண்டாவ‌து முறை


இரண்டாவ‌து ஓவிய‌த்திற்கு பேப்ப‌ரின் மேல் ப‌குதியில் எல்லா க்ரையான்க‌ளையும் டேப்பினால் ஒட்டி, டிரைய‌ர் கொண்டு உருக்க‌வும். டேப்பை இறுதியில் எடுத்தால் போதும். ஒரே இட‌த்திலிருந்து க்ரையான்க‌ள் உருகும். அந்த‌ ஓவிய‌மும் அழகாக‌ இருக்கிற‌து.


செய்துப் பார்த்துச் சொல்லுங்க‌ளேன்!!!

Wednesday, July 11, 2012

ச‌ர்க்க‌ரை பாகு பெயிண்டிங்

சர்க்கரையை த‌ண்ணீரில் க‌ரைத்து பாகு செய்து, அத‌னைக் கொண்டு பெயிண்டிங் முய‌ற்சித்தோம்.

இர‌ண்டு டீ ஸ்பூன் ச‌ர்க்கரையுட‌ன் (மிக‌வும் சிறிய‌ அள‌வில் போதும்) இர‌ண்டு டீ ஸ்பூன் த‌ண்ணீர் சேர்த்து, ஒரு சில நொடிக‌ள் அடுப்பில் வைத்தோம். ச‌ர்க்கரை க‌ரைந்து த‌ண்ணீர் சிறிது க‌ட்டியான‌வுட‌ன், அடுப்பிலிருந்து எடுத்து ஆற‌விட்டோம். பாகு ரெடி. மிக‌ சிறிது அள‌வு பாகு இருந்தால் போதும்.

பெயிண்டிங் செய்வ‌த‌ற்கு,

1. க‌றுப்பு க‌ரையான் (Black Crayon) கொண்டு ஒரு பட‌ம் வ‌ரைந்து கொண்டோம்.

2. பாகில் சிறிது அள‌வு எடுத்து ஒரு சொட்டு ஃபுட் க‌ல‌ரிங் க‌ல‌ந்து கொண்டோம்

3. காதில் அழுக்கு எடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் பட்ஸ் (cotton buds) கொண்டு க‌ல‌ர் செய்தோம்.


4. முழு காகித‌த்தையும் க‌ல‌ர் செய்ய மிக‌ குறைந்த அள‌விலேயே‌ பாகு தேவைப்ப‌ட்ட‌து.


மிக‌ அழ‌கான‌ பெயிண்டிங் இப்பொழுது எங்க‌ள் வ‌ர‌வேற்ப‌ரையை அல‌ங்க‌ரித்துக் கொண்டிருக்கிற‌து.




Tuesday, December 6, 2011

ஓவிய‌ப் போட்டி

தீஷுவின் ப‌ள்ளியில் போட்டிக‌ள் அறிவித்து இருந்தார்க‌ள். அதில் தீஷுவின் ஓவிய‌த்திற்கு முத‌ல் இட‌ம் கிடைத்திருக்கிற‌து!! ஓவிய‌ப் போட்டி, புகைப்ப‌ட‌ம் எடுத்த‌ல், வீடியோ எடுத்த‌ல், க‌ட்டுரை எழுதுத‌ல் போன்ற‌ போட்டிக‌ள் என் நினைவில் உள்ள‌ன. நான் இது க‌லிஃபோர்னியாவில் ம‌ட்டும் ந‌டைபெறுவ‌து என்று நினைத்திருந்தேன். ஆனால் என் தோழியிட‌ம் பேசும் பொழுது தான் ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளிலும் ந‌டைபெற்ற‌தை அறிந்து கொண்டேன். ஒவ்வொரு வ‌ருட‌மும் ந‌டைபெறுகிற‌து. இந்த‌ வ‌ருட‌த்திற்கான‌ தீம் - Diversity

நேற்று மாலை அனைத்து ஓவிய‌ங்க‌ளும் பார்வைக்கு வைக்க‌ப்ப‌ட்டு இருந்த‌ன. K - 2 (கிண்ட‌ர் கார்ட‌ன் முதல் இர‌ண்டாவ‌து வ‌குப்பு வ‌ரை)பிரிவில் தீஷுவின் ஓவிய‌ம் இருந்தது. அந்த‌ பிரிவில் கிட்ட‌த்த‌ட‌ட‌ நாற்ப‌து ஓவிய‌ங்க‌ள் வ‌ரை இருந்த‌ன‌.

நான் தீஷுவிட‌ம் அனைத்து போட்டிக‌ளையும் விள‌க்கிவிட்டு என்ன செய்கிறாய் என்றவுட‌ன், ப‌ட‌ம் வ‌ரைவ‌தாக‌வும், புகைப்ப‌டம் எடுப்ப‌தாக‌வும், ஒரு க‌தை எழுதுவ‌தாக‌வும் சொன்னாள். டைவ‌ர்ஸிட்டி என்றால் என்ன‌ என்று விள‌க்கிய‌வுட‌னே, அவ‌ள் சொன்ன‌து ‍ ஒரு அர‌ண்ம‌னையும், ஒரு வான‌வில்லும் வ‌ரைய‌ வேண்டும். எவ்வாறு அது டைவ‌ர்ஸிட்டி என்று கேட்ட‌வுட‌ன், அர‌ண்ம‌னை அமைப்பில் நிறைய க‌ல‌ர்க‌ளும், வ‌டிவ‌ங்க‌ளும் இருக்கின்றன, ஆனால் அது ஒரே க‌ட்டிட‌ம். அதே போல் வான‌வில்லில் நிறைய‌ க‌ல‌ர்க‌ள் இருந்தாலும் இது ஒன்று தான் என்றாள்.

1. உன‌க்கு என்ன‌ பிடிக்கிற‌தோ அதே வ‌ரை என்றேன். அர‌ண்ம‌னை பென்சிலில் வ‌ரைந்து, மார்க்க‌ரால் பென்சில் மேல் வ‌ரைந்து, ஆயில் பாஸ்ட‌ல் கொண்டு க‌ல‌ர் செய்தாள்.

த‌லைப்பு என்ன எழுத‌ வேண்டும் என்ற‌வுட‌ன், "Diversity in shapes - Beautiful castle" என்றாள்.

விள‌க்க‌ம் என்ற‌வுடன், "Diversity is in castle because it has lots of colours and shapes, but it is one building" என்றாள்






2. அடுத்து வான‌வில் வ‌ரைவ‌த‌ற்கு, ச‌ற்று வித்தியாச‌ப்ப‌டுத்த‌லாம் என்று வாட்ட‌ர் க‌ல‌ரில் செய்ய சொன்னேன். முத‌லில் ப‌ச்சை நிற‌ம் கொண்டு புல் வ‌ரைய‌ சொன்னேன். வானவில்லை பென்சிலில் வ‌ரையாம‌ல் நேராக‌வே வ‌ரைய‌ செய்தேன். இத‌ன் மூல‌ம் வான‌வில்லின் வ‌ண்ண‌ங்க‌ள் ஒன்றோடு ஒன்று க‌ல‌ந்து ந‌ன்றாக இருக்கும் என்று தோன்றிய‌து. வான‌வில்லை முடித்த‌வுட‌ன் நீல நிற‌ம் அடித்து விட்டோம். காய்ந்த‌வுட‌ன் மேக‌மும் சூரிய‌னும் வ‌ரைய‌ வேண்டும் என்று விருப்ப‌ப்ப‌ட்டாள். ஆகையால் அதையும் வ‌ரைந்தாள்.

த‌லைப்பு : Diversity in colours - Amazing rainbow

விள‌க்க‌ம் : Single colour rainbow would have been beautiful, but the different colours make the rainbow amazing







3. அடுத்து அவ‌ளுக்கு வித‌ வித‌ மீன்க‌ள் வ‌ரைய‌ தெரியும் என்றாள். ஆகையால் மீன்க‌ளும், சில பூக்க‌ளும் பென்சிலில் வ‌ரைந்து, அயில் பாஸ்ட‌ல் கொண்டு வ‌ண்ண‌ம் தீட்டி, அத‌ன் மேல் நீல‌ நிற‌ வாட்ட‌ர் க‌ல‌ர் அடித்து விட்டோம். இது முன்ன‌மே ஓவிய‌ர் ப‌ற்றி ப‌டித்த‌ பொழுது செய்த செய்முறை தான். இந்த‌ ஓவிய‌த்திற்கு ப‌ள்ளியில் முத‌ல் இட‌ம் கிடைத்திருக்கிற‌து.

த‌லைப்பு : Diversity in species - Deep sea life

விள‌க்க‌ம் : Diversity in shapes, colours and sizes of different fishes and plants make the ocean life beautiful











4. ம‌ர‌ங்க‌ளில் க‌ல‌ர் க‌ல‌ர் இலைக‌ளை புகைப்ப‌டமாக‌ எடுக்க‌ வேண்டும் என்றாள். ஆனால் அந்த‌ வார‌ம் ம‌ழை பெய்து கொண்டிருந்ததால் வ‌ரைந்து விட‌லாம் என்றேன். இரு ம‌ர‌ங்க‌ள் அயில் பாஸ்ட‌ல் கொண்டு வ‌ரைந்து க‌ல‌ர் செய்து கொண்டாள். கீழ் ப‌குதியில் ப‌ச்சை நிற‌மும், மேல் ப‌குதியில் நீல நிற‌மும் வாட்ட‌ர் க‌ல‌ர் கொண்டு தீட்டினாள். காய்ந்த‌வுட‌ன் சாதார‌ண பெயிண்ட்டால், பிர‌ஸ் பின் ப‌குதி கொண்டு சிவப்பு, ம‌ஞ்ச‌ள், பச்சை ம‌ற்றும் ஆரெஞ்ச் கொண்டு புள்ளிக‌ள் வைத்து விட்டோம்.

த‌லைப்பு : Diversity in colours - Fall trees

விள‌க்க‌ம் : Diversity in leaf's colours make the fall trees and season beautiful and complete





ப‌ள்ளியில் எடுத்த‌ இர‌ண்டு புகைப்ப‌ட‌ங்க‌ள் த‌விர‌ இணைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ற்ற‌ ப‌டங்க‌ள் எடுத்த‌து. அவ‌ள் ஓவிய‌ங்க‌ளின் த‌லைப்பு ம‌ட்டும் எழுதினாள். நான் விள‌க்க‌ங்க‌ள் எழுதினேன்.

தீஷுவின் ஓவிய‌த்திற்கு முத‌ல் இட‌ம் கிடைத்த‌தில் எங்க‌ளுக்கு ம‌கிழ்ச்சி.

Thursday, August 18, 2011

ஓவிய‌ர் & ஓவிய‌ம் - 6

ஜாக்ஸ‌ன் பால‌க் (Jackson Pollock) ப‌ற்றி இந்த‌ முறை ப‌டித்தோம். அமெரிக்காவில் 1912 யில் பிற‌ந்த‌ இவ‌ர், உருவ‌மில்லாம‌ல் ப‌ட‌ம் வ‌ரைவ‌தில் வ‌ல்ல‌வ‌ர். இவ‌ர் பெயிண்ட்டில் பிர‌ஸ்ஸை ந‌னைத்து, கான்வாஸ்ஸில் தெளித்தோ, வ‌டித்தோ ப‌டங்க‌ள் உருவாக்கினா‌ர். சில‌ ப‌ட‌ங்க‌ளை பெயிண்ட் ட‌ப்பாவிலிருந்து நேர‌டியாக‌ கொட்டியும் உருவாக்கியுள்ளார். இவ‌ரின் லாவெண்ட‌ர் மிஸ்ட்(Lavendar Mist) என்ற புகைப்ப‌ட‌த்தை எடுத்துப் ப‌டித்தோம்.

ஓவிய‌த்தை உருவாக்குவ‌த‌ற்கு

1. முத‌லில் பெயிண்ட்டில் த‌ண்ணீர் க‌ல‌ந்து, பிர‌ஸ்ஸினால் தெளித்துப் பார்த்தோம். ஆனால் தீஷுவிற்கு அதில் விருப்ப‌மிருக்க‌வில்லை. ப‌ட‌த்தில் க‌ல‌ர் அட‌ர்த்தியாக‌ இல்லை என்றாள்.


2. ஆகையால் கான் மாவையும்(Corn Flour) த‌ண்ணீரையும் ச‌ரி அள‌வில் க‌ல‌ந்து கொண்டோம்.

3. அதில் பெயிண்ட் சேர்த்துக் கொண்டோம்.



4. தெளித்த‌ பொழுது க‌ல‌ர் ந‌ன்றாக தெரியாவிட்டாலும் எளிதாக‌ தெளிக்க‌ முடிந்த‌து.

5. தீஷு தெளித்த‌து ம‌ட்டும் போதாது. வீடும் வ‌ரைய வேண்டும் என்று ஆசைப்ப‌ட்டாள். எங்க‌ள் ஓவிய‌ம்.




Wednesday, July 27, 2011

ஓவிய‌ர் & ஓவிய‌ம் - 5

இந்த‌ முறை எங்க‌ள் ஓவிய‌ர் & ஓவிய‌ம் வாசிப்பிற்கு நாங்க‌ள் எடுத்துக் கொண்ட‌து ‍ஜேம்ஸ் விஷ்ட்ல‌ரின் (James Whistler) த‌ ஃபாலிங் ராக்கெட் ஓவிய‌ம் (The falling rocket). அமெரிக்காவில் பிற‌ந்த‌ இவ‌ர், ஒருவ‌ர் இவ‌ரின் ஓவிய‌த்தை இகழ்ந்த‌தால் அவ‌ர் மேல் கோர்ட்டில் கேஸ் போட்டு அனைத்து சொத்தையும் இழ‌ந்த‌வ‌ர். இவ‌ரின் முழு விவ‌ர‌ம் இங்கே காண‌லாம்.

ஓவிய‌ம் இருட்டில் ஒரு மாத்தாப்பு வெடிப்ப‌து போல் இருந்த‌து. நாங்க‌ள் பின்பற்றிய‌ வ‌ழிமுறை:

1. காகித்தை இர‌ண்டாக‌ பிரித்துக் கொண்டோம். கீழ் ப‌குதி சிறிய‌தாக‌ இருக்க‌ வேண்டும். அந்த‌ ப‌குதி த‌ண்ணீர் ப‌குதி

2. பாத்திர‌ம் துல‌க்க‌ ப‌ய‌ண்ப‌டும் ஸ்பான்ச்சால் ஒரு சில‌ இட‌ங்க‌ளில் சிவ‌ப்பு, ஆரென்ச் பெயிண்ட் கொண்டு ஒற்றி எடுக்க‌வும். இது மாத்தாப்பு வெடிக்கும் பொழுது வ‌ரும் எபெக்ட்டுக்காக‌.

3. பேப்ப‌ர் இருக்கும் அதே க‌ல‌ர் பெயிண்ட் எடுத்துக் கொள்ள‌வும். ஸ்பான்ச்சால் பெயிண்டில் தேய்த்து, கோட்டிற்கு மேல் ப‌குதியில் க‌ட்டிட‌ங்க‌ள் போல் ச‌துர‌மாக‌ வ‌ரைய‌ வேண்டும். கீழ் ப‌குதியிலும் அதே பேல் செய்ய‌ வேண்டும். கீழ் ப‌குதி மேலுள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ளின் பிர‌திப‌‌லிப்பு.



4. ஒரு ப‌ஞ்சில் வெள்ளை பெயிண்ட்டை எடுத்து மேல் ப‌குதியில் புகை போல் வ‌ரைய‌ வேண்டும்



5. அத‌ன் மேல் ப‌ல் துல‌க்க‌ ப‌ய‌ன்ப‌டும் பிர‌சைக் கொண்டு சிவ‌ப்பு ம‌ற்றும் ஆரெஞ்ச் பெயிண்ட‌ ஸ்பெரே செய்து விடவும்.

எங்க‌ளின் ஓவிய‌ம்

Monday, July 11, 2011

ஓவிய‌ர் & ஓவிய‌ம் - 4

ட‌ச் ஓவிய‌ரான‌ வான் கோ (Vincent Van gogh) ப‌ற்றிப் ப‌டித்தோம். இவ‌ர் ப‌ல்வேறு வேலைக‌ளில் தோல்வி க‌ண்டு, பின் ஓவிய‌ர் ஆன‌வ‌ர். ம‌ன‌ நோயால் ப‌திக்க‌ப்ப‌ட்டிருந்த‌ இவ‌ர் த‌ற்கொலை செய்து கொள்ளும் முன் ஒரே ஒரு ஓவிய‌ம் ம‌ட்டுமே விற்றுயிருந்தார். இன்று இவ‌ரின் ஒவ்வொரு ஓவிய‌த்தின் விலையும் கோடிக‌ளில்.

இவ‌ரின் ஸ்டாரி நைட் (Starry Night) என்ற‌ ஓவிய‌த்தை எடுத்துப் ப‌டித்தோம்.

1. முத‌லில் பெயிண்ட்டில் சிறிது கோந்து க‌ல‌ந்து கொள்ள‌ வேண்டும்.

2. ப‌க்க‌தை மூன்றாக‌ பிரித்து(நேர் கோடாக‌ போடாம‌ல்), ந‌டு ப‌குதியில் சிறு சிறு ம‌ர‌ங்க‌ள் வ‌ரைந்து கொள்ள‌வும். மேல் ப‌குதியில் சுருள் சுருளாக‌ மேக‌ங்க‌ள் வ‌ரைந்து கொள்ள‌வும்.

3. மேல் ப‌குதியில் வெள்ளை, ஊதா கொண்டு வான‌/மேக‌ம் வ‌ரைய‌வும்



4. வ‌ரைந்த‌ பெயிண்டின் மேல் போர்க்(fork) கொண்டு மேலும் சுற்றி விட‌வும்.



5. கீழ் ப‌குதியிலுள்ள‌ ம‌ர‌ங்க‌ளுக்கு, ப‌ச்சையும் ப்ர‌வுணும் தீட்ட‌வும். ப்ர‌ஸின் பின் ப‌குதியைக் கொண்டு ப‌ச்சை பெயிண்ட்டை சுற்றிவிட‌வும்.

ந‌டு ப‌குதியில் மீதியுள்ள‌ இடங்க‌ளில் ம‌ஞ்ச‌ளும் ஆரெஞ்சும் தீட்ட‌வும்.

6. கீழ் ப‌குதியில் பச்சை தீட்டி, போர்க் கொண்டு நீள‌வாக்கில் இழுக்க‌வும்

தீஷுவின் ப‌ட‌ம்.


Wednesday, June 15, 2011

ஓவிய‌ர் & ஓவிய‌ம் - 1

"It took me four years to paint like Raphael, but a lifetime to paint like a child " - Picasso.

குழ‌ந்தைக‌ள் ஓவிய‌ம் வ‌ரைவ‌து அவ‌சிய‌ம் என்ப‌து என் க‌ருத்து. அவ‌ர்க‌ளால் தான் எப்படி ஓவிய‌ம் வ‌ர‌ போகிற‌தோ என்ற‌ ப‌ய‌ம் இல்லாம‌ல் செய்ய முடியும். மேலும் த‌ங்க‌ளுடைய‌‌ உழைப்பின் ப‌ல‌னை உட‌னே பார்ப்ப‌தால், ம‌கிழ்ச்சியும், தன்ன‌ம்பிக்கையும் அடைவ‌ர். அவை இர‌ண்டும் குழந்தைக‌ளின் ம‌ன‌ வ‌ள‌ர்ச்சிக்கு மிக‌வும் முக்கிய‌ம்.

வெகு நாட்க‌ளாக‌ நானும் தீஷுவும் ஓவிய‌ம் வ‌ரைந்தாலும், அவை அனைத்தும் இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்ற‌ வ‌ழிமுறைக‌ள் இல்லாத‌வை. இப்பொழுது தீஷுவிற்கு ஐந்து வ‌ய‌தான‌ நிலையில், சில வ‌ழிமுறைக‌ள் சொல்லிக் கொடுக்க‌லாம் என்று முத‌லில் நினைத்தேன். ஆனால் ஒரு ஓவிய‌ர் எவ்வாறு வ‌ரைந்திருக்கிறார் என்று ப‌டிப்ப‌த‌ன் மூல‌ம் ஓவிய‌த்தைப் ப‌ற்றியும், ஓவிய‌ர் ப‌ற்றியும் ஒரு சேர‌ க‌ற்றுக் கொள்ள‌லாம் என்று தோன்றியது. லைப்ரேரியில் தேடிய‌ பொழுது

1. Discovering Great Artists: Hands-On Art for Children in the Styles of the Great Masters by MaryAnn F.Kohl

2. The Usborne Art Treasury by Rosie Dickins

புத்த‌க‌ங்க‌ள் கிடைத்த‌ன‌. என்ன‌ எதிர்பார்த்தேனோ எவை அனைத்தும் இர‌ண்டு புத்த‌க‌ங்களிலும் இருக்கின்ற‌ன‌. ஓவியர் பற்றி ஒரு சிறு குறிப்பு ம‌ற்றும் அவ‌ரின் ஒரு ஓவிய‌த்தை எவ்வாறு குழந்தைக‌ள் வ‌ரைய‌லாம் என்ற‌ வ‌ழிமுறை. நாங்க‌ள் முத‌லில் ப‌டித்த‌து Paul Klee, ஆனால் அது த‌ந்தைய‌ர் தின‌த்திற்கான‌ ப‌ரிசு. அடுத்த‌ வார‌ம் அதைப்ப‌ற்றி எழுதுகிறேன்.

இப்பொழுது ப‌திவ‌து ர‌ஷ்சிய‌ ஓவிய‌ர் கான்டின்ஸ்கி (Wassily Kandinsky). முழு விவ‌ர‌ம்.முத‌லில் ஓவிய‌ரைப் ப‌ற்றி ப‌டித்துவிட்டு, அவ‌ர‌து ஓவிய‌ம் வ‌ரைந்தோம்.
ஓவிய‌ம‌ வ‌ரைவ‌த‌ற்கான‌ வ‌ழிமுறை:


1. ப‌க்க‌த்தை 12 பாக‌மாக‌ பிரித்துக் கொள்ள‌ வேண்டும்.

2. ஒவ்வொரு பாக‌த்திலும் இடைவேளி விட்டு வெவ்வேறு க‌ல‌ர்க‌ளில் வ‌ட்ட‌ங்க‌ள் ஆயில் பாஸ்ட‌லால் (oil pastel) வ‌ரைந்து கொள்ள வேண்டும்




3. அத‌ன் மேல் ஒவ்வொரு பாக‌த்திலும் வெவ்வேறு க‌ல‌ர்க‌ளில் வாட்ட‌ர் கல‌ரை தீட்ட‌ வேண்டும்.





கான்டின்ஸ்கியின் ஓவிய‌ம்



தீஷுவின் ஓவிய‌ம்



Courtesy : google images

Tuesday, September 28, 2010

Tie dying

மருந்து கொடுக்க பயன்படும் dropper மூலம் தண்ணீர் ஒரு கிண்ணதிலிருந்து மற்றொரு கிண்ணத்திற்கு மாற்றும் பயிற்சி முன்பே செய்திருக்கிறோம். இப்பொழுது சற்று வித்தியாசப்படுத்தி எங்களிடமிருந்த மீன் பொம்மையின் குழி பகுதியில் தண்ணீரை விட வேண்டும். டிராப்பர் மூலம் தண்ணீர் மற்றும் பொழுது எழுத பயன்படும் விரல்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. மேலும் அகலமில்லாத பகுதியில் தண்ணீர் மாற்றும் வேலை கை கண் ஒருங்கிணைப்புக்கும் ஏற்றது.



தீஷு விருப்பமாக செய்தாள். அவளின் ஆர்வத்தைத் தக்க வைக்க சிறிது கலர் கலந்து சிகப்பு கலர் மற்றும் பச்சை கலர் தண்ணீர் கொடுத்தேன். அவள் மீனை நிறைத்தவுடன், அதன் மேல் டிஸ்யூ பேப்பர் போட்டு கலர் தண்ணீரை எடுத்தோம். டைய் (dye effect) போல் அழகாக வந்திருந்தது. பச்சையிலிருத்து பிரிந்திருந்த நீலம் என பார்க்க அழகாக இருந்தது.



ஒரு மாண்டிசோரி பயிற்சியை பெயிண்டிங் ஆக மாற்றியதில் எனக்கு சந்தோஷம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost