Showing posts with label ஏழு வ‌ய‌து. Show all posts
Showing posts with label ஏழு வ‌ய‌து. Show all posts

Friday, February 14, 2014

காகிதப்பூக்கள்

 MuhilNeel தளத்தில் அவர்கள் செய்த பூக்களின் படம் போட்டுயிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன், தீஷுவிற்குப் பிடிக்கும் என்று தோன்றியது.

இணையத்தில் தேடி வீடியோ பார்த்தோம். பூக்கள் செய்வது மிகவும் எளிது. ஒரே தாளில் செய்யவில்லை என்பதாலும் கோந்து உபயோகிப்பதாலும், இதை ஒரிகமி என்று சொல்லமுடியாது.

பூக்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. வெவ்வேறு அலங்காரங்களுக்கு உபயோகப்படுத்தலாம். நாங்கள் செய்த பூக்களை படம் எடுக்கும் முன்,குழந்தைகள் எங்கோ பத்திரப்படுத்திவிட்டார்க்ள் :)) தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.. ..

நாங்கள் பார்த்த வீடியோ




Monday, January 27, 2014

ஞாபகசக்தியை அதிகரிக்க..

ஞாபகசக்தியை அதிகரிக்க நாங்கள் மேற்கொள்ளும் வழிமுறையைப் பற்றியது அந்த இடுகை. தீஷுவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் நினைவுப்படுத்த வேண்டும். ஒரு எக்சல் ஷீட்டில் ஒவ்வொரு கிழமைக்கும் அவளுக்கான வேலைகளை எழுதி, பிரிண்ட் அவுட் எடுத்து ஃப்ரிஜ் கதவில் ஒட்டி வைத்திருக்கிறேன். ஆனால் தினமும் அந்தப் பேப்பரைப் பார் என்று நினைவுப்படுத்த வேண்டும் :((. ஒரு வேலை முடித்து விட்டு இன்னொரு வேலை செய் என்று இரண்டு வேலைகள் ஒரே நேரத்தில் கொடுத்தால், முதல் வேலை முடித்தவுடன் இரண்டாவது வேலையை மறந்துவிடுகிறாள். இந்த வயதில் இது சகஜம் தான் என்று டாக்டர், டீச்சர் எல்லோரும் சொல்லிவிட  நிம்மதி அடைந்தேன். ஆனால் ஒரு நாள் பள்ளியிலிருந்து புத்தகப்பையை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டாள் :((. அவள் ஞாபகசக்தியை அதிகரிக்க சில வழிமுறைகளை மேற்கொள்ள ஆரம்பித்து இருக்கிறோம்.

1. மோனோபோலி (Monopoly) ‍நம் ஊரில் பிஸ்னஸ் போன்ற விளையாட்டுகள் விளையாடுதல் : தாம் வாங்கிய இடங்களில் பெயர்களை நினைவில் வைத்திருந்து வாடகை வாங்க வேண்டும். அவள் வாடகை கேட்கவில்லை என்றால் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிடுவேன். ஆனால் அனைத்து இடங்களில் பெயர்களையும் நினைவில் வைத்து இப்பொழுது இந்த விளையாட்டில் நல்ல முன்னேற்றம்(!).

2. இரண்டு வேலைகளை செய்யப் பழக்குதல் : என் கணவரும் தீஷுவும் விளையாடும் இந்த விளையாட்டு ‍ இரண்டு செயல்களை ஒரே நேரத்தில் செய்தல். உதாரணத்திற்கு எளிமையான கணிதக் கணக்குகளை கேட்டுக் கொண்டே அவள் முதுகில் தட்டிக் கொண்டேயிருப்பார். கணக்குகளுக்கு விடைகளை அளித்துக் கொண்டே வர வேண்டும் மேலும் இறுதியில் எத்தனை முறை தட்டினார் என்று சொல்ல வேண்டும்.

3. www.Lumosity.com : இது என் கணவரின் யோசனை. கம்ப்யூட்டர் கேம்ஸ் வேண்டாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் லுமோசிட்டி நரம்பு மண்டல நிபுணர்கள் (Neuro Scientists) வடிவமைத்தது என்று சொன்னவுடன் சற்று நம்பிக்கை பிறந்தது. சில தினங்களாக தினமும் ஒரு முறை விளையாடுகிறாள். நாங்கள் கம்ப்யூட்டரில் விளையாண்டது இல்லை. ஐபாட். கம்ப்யூட்டரிலும் அதே மாதிரி விளையாட்டுகள் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  

4. தூக்கம், பிடித்தமான வேலைகளை இணைந்து செய்தல் : முன்பு அவளை எட்டரை மணிக்கு தூங்கச் சொல்லுவேன். நீயும் வந்து படு என்று நேரத்தைக் கடத்திக் கொண்டே இருப்பாள். அதனால் இப்பொழுது நானும் அவளுடன் சேர்ந்து தூங்கச் சென்று விடுகிறேன். அதே போல் அவள் வேலைகளில் எதிலெல்லாம் இணைந்து செய்ய முடியுமோ அவற்றை இணைந்து செய்கிறோம். அவ்வாறு செய்யும் பொழுது அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவள் இறுக்கம் தளரும் பொழுது அடுத்து செய்ய வேண்டியது நினைவுக்கு வந்துவிடுகிறது. 

 5. Brain Gym Exercises :  கீழே வீடியோவிலுள்ள பயிற்சிகளை இணைந்து காலையில் செய்கிறோம். சூரிய நமஸ்காரம் 10 முறை செய்கிறோம்.



6. மேலும் அதிக தண்ணீர், எண்ணெய், இனிப்பு, ஃபுட் கலரிங் குறைப்பு என்று சமையலிலும் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறோம். சுடோகு, குறுக்கொழுத்து, விடுகதைகள் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவது உண்டு. 

இவற்றால் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா என்று முழுமையாகத் தெரியவில்லை ஆனால் பள்ளியிலிருந்து பையை எடுத்து வந்துவிடுகிறாள் :)). உங்கள் குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Friday, November 22, 2013

கதைகளும் பெயர் எழுத்துகளும்....

கையில் பேப்பரும் பேனாவும் கிடைத்தால் கதை எழுதத் தொடங்கிவிடுகிறாள் தீஷு. அவற்றை என் ப்ரைவேட் ப்ளாகில் சேமிப்பது உண்டு. இந்த வாரத்தில் அவள் எழுதிய இரண்டு கதைகளையும் எங்கள் இருவரின் பெயரிலுள்ள எழுத்துகளுக்கு அவள் எழுதிய வார்த்தைகளையும் இங்கு பதிகிறேன்.

எங்கள் பெயரின் எழுத்துகளுக்கு அவள் எழுதியது

அவள் பெயருக்கு (Dheekshu)

   Sweet Dreams
    Work Hard
             Excellent
            lEarns a lot
loves caKe
             Smart
             Help a lot
             Understand other people's choices


என் பெயருக்கு(Dhiyana)

             Does sweet things
  love in Heart allways
              Is very nice
         plaYs a lot with me
          beAutiful
I give thaNks to my mom
     helps A lot



என் பெயருக்கு அவள் எழுதியதைப் பார்த்ததும் பறக்க ஆரம்பித்துவிட்டேன்.:))

கதைகள்

Rose goes to School



Once upon a time there was a girl named Rose. She was very kind and caring. She was very good at class, outside and home. One day she moved to a new school named ******. She was VERY shy and scared. Her tummy felt like she had ate worms for breakfast when she thought about going to school.



When she got there she didn't know where to go. Luckily she saw someone coming towards her to help. Her name was Daisy. When Daisy was close enough, she asked "Whose class are you and what grade?". Rose replied, "I am in Ms.S's class and I am in second grade.


Soon the bell rang. Daisy had shown Rose her friend Hailey. At recess, Hailey was starting to be mean to Rose. So Daisy left Rose allone and went to Hailey. Rose was all allone again.  

One day Hailey was all allone. Rose wanted to help so she went to Hailey and asked if she wanted to play with Rose. From that day Hailey was nice to Rose. The End

கதையில்அவள் பள்ளியின் பெயரையே பயன்படுத்தியிருந்ததால் படத்திலும் எழுத்திலும் மறைத்திருக்கிறேன்.

Rani and Lakshmi go camping



Once upon a time there were two girls named Rani and Lakshmi. They loved camping. They loved camping because this year they got to do something special. They think they get to set up the fire. 

Rani and Lakshmi always ask if they can go camping. But their parents always say not this week. They say everytime they ask.

Soon summer started and Rani and Lakshmi thought it would be perfect for camping but they knew their parents would say not this week. 

Soon weeks went and days flew by and Rani and Lakshmi told their parents that on next week Sunday they want to go  camping. But their parents said no but may be next month. 

After sometimes, Rani and Lakshmi's parents discussed about going camping. 

 hmmmm....

Finally they said YES.

The END

Happy camping Rani, Lakshmi and your parents. 


எல்லா பக்கங்களுக்கும் கண்டிப்பாக ஒரு படம் இருக்கும். :))

இந்த ஆர்வத்தை தீஷு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை!!

Monday, November 4, 2013

திருடப்பட்ட சில படங்கள்

தான் வளர்ந்தவுடன் ஓவியராவேன் என்று சில முறை தீஷு சொல்லி கேட்டுயிருக்கிறேன். சென்ற வருடம் இன்ஜினியர் என்றும் அதற்கு முன்பு கார் டிரைவர் என்று வருட வருடம் அவள் இலக்கு மாறும் என்பதால் சரி என்பதுடன் நிறுத்திவிட்டேன். ஓவியராக விருப்பம் இருப்பதால் தினமும் பயிற்சி செய்யப் போகிறேன் என்றாள். 

இன்று அவள் புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தேன். ஆர்ட் என்று எழுதி அருகில் இரண்டு இதயங்கள் வரைந்த அட்டையுடன் ஒரு நோட் புக் ஒன்று இருந்தது. ஆர்வம் மிகுதியால் என்னவென்று திறந்து பார்த்தால், மூன்று படங்கள் இருந்தன.


முதல் பக்கத்தில் மாடர்ன் ஆர்ட் என்று ஒரு படம். கீழே அவள் பெயரையும் எழுதியிருந்தாள். 



இரண்டாவது படத்தில் இரு இதயங்கள். ஒன்று வேறொரு காகிதத்தில் வரைந்து ஒட்டியிருந்தாள். இரண்டாவது நேரடியாக புத்தகத்தில் வரைந்திருந்தாள்.


மூன்றாவது இலைகள் இல்லாத மரங்களின் படங்கள். அதன் எதிர்பக்கத்தில் ஒரு சிறு குறிப்பு. அது தான் என்னை மிகவும் கவர்ந்தது. 





அந்தக் குறிப்பு இது தான் : This art is made of blending. We use tissues to make it blend. One thing I know that art is always different because even if we do the same thing it is always different. 

தீஷு தன் எதிர்கால கனவு குறித்து மேலும் பல முறை மாற்றங்கள் செய்வாள் என்பது உறுதி. ஆனால் இப்பொழுது தனக்குள்ள கனவுக்கு அவளாகவே பயிற்சி எடுத்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது!! 

Thursday, October 3, 2013

எங்கள் நேரம் திரும்ப கிடைத்தது



சிறு குழந்தைகளுடன் விளையாடுவது எளிது. அவர்களுக்கு எல்லா பொருளும் புதிதாக இருப்பதால், ஆர்வமாக விளையாடுவார்கள். சம்மு செய்வது பார்த்து தீஷுவிற்கு தானும் செய்ய வேண்டும் என்று ஆசை. என் கூட முந்தி இப்படித்தான் செய்தீங்க‌, இப்பெல்லாம் செய்றது இல்லை என்றாள். அவளுக்கு ஆர்வம் இருக்கும் படி என்ன செய்லாம் என்று யோசித்த பொழுது, ஏன் சம்முவுடன் செய்வதையே சற்று கடினமாக மாற்றி தீஷுவுடன் முயற்சிக்கக் கூடாது என்று தோன்றியது.

சம்முவின் விளையாட்டுப் பொருளையே எடுத்துக் கொண்டேன். துளைகள் உள்ள அட்டையில் கலர் குச்சிகளை மாட்ட வேண்டும். மேலும் சில பஞ்சுகளை கொடுத்தேன்.   

1. முதலில் பஞ்சுகளை கையில் எடுத்து குச்சிகள் மீது வைத்தாள். மிகவும் எளிதானது.

2. பின்பு ஒரு சிறு விளையாட்டு இடுக்கிக் கொண்டு பஞ்சை எடுத்து வைத்தாள்.



3. ஸ்பூனில் பஞ்சை எடுத்து குச்சியின் வைக்க வேண்டும். நிறைய கவனம் தேவை.

4. கண்ணை மூடிக்கொண்டு இடுக்கியால் பஞ்சை எடுத்து குச்சியில் வைக்க வேண்டும். கடினம்.

5. கண்ணை மூடிக் கொண்டு ஸ்பூனால் பஞ்சை எடுத்து குச்சியில் வைக்க வேண்டும். மிகவும் கடினம்.  

தீஷு ஒரு மணி நேரத்திற்கு மேலாக விளையாண்டு கொண்டிருந்தாள். நாங்கள் மிகவும் மகிழ்ந்து அனுபவிக்கும் எங்கள் இருவருக்குமான விளையாட்டு நேரத்தை மீண்டும் கண்டுபிடித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.  
   


Monday, September 30, 2013

சிறு துரும்பும்

குழந்தைகளுக்கு அதிகமாக செலவு செய்து வாங்கிய பொம்மையை விட பொம்மை கட்டி வந்த அட்டைப் பெட்டி மிகவும் விருப்பமான பொருளாக இருக்கும். சம்முவிற்கு பெயிண்ட் அல்லது களிமண் தொடுவதற்கு விருப்பம் இருப்பதில்லை. அவளுக்குப் பழக்கப்படுத்துவதற்காக கார்ன் ஸ்டார்ச் (Corn Starch) கொடுத்தேன். சிறு துரும்பு கதை தான். மிகவும் கவர்ந்திருந்தது. அவளை விட தீஷுதான் மிகவும் சந்தோஷமாக விளையாண்டாள். 

முதலில் கார்ன் ஸ்டார்ச் மட்டும் கொடுத்தேன். சற்று விளையாடி முடித்தவுடன், சிறிது தண்ணீர் கலந்தேன்.





விளையாண்டு முடித்தவுடன், மீதமுள்ள மாவை கீழே போட வேண்டியதில்லை. மீண்டும் தண்ணீர் சேர்த்து விளையாடலாம். நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஒரே மாவை வைத்திருந்தோம். 

பி.கு. விளையாடும் இடம் முழுவதும் மாவாகும் என்பதால் வீட்டிற்கு வெளியே வைத்து விளையாடினோம். கார்ன் ஸ்டார்ச் வழுக்கும்.



Tuesday, September 24, 2013

தாமரைப்பூவும் பட்டாம்பூச்சியும்

சில வேலைகளுக்கு சரியான நுணிக்கமும் அதிக கவனமும் தேவைப்படும். சில வேலைகளை எப்படி செய்தாலும் அவுட்புஃட் நன்றாக இருக்கும். எங்கள் சாய்ஸ் எப்பொழுதும் இரண்டாவது டைப் தான். ஜன்னல் நட்சத்திரகள் பற்றி எழுதியிருந்தேன்.  அது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. செய்வது எளிது. ஆனால் இறுதியில் நட்சத்திர பூக்கள் அழகாக இருக்கும். 




அதே முறையில் இதழ்களை சற்றே மாற்றி ஒட்டி, தாமரைப் பூவும் பட்டாம்பூச்சியும் செய்தோம். பொதுவாக பூ செய்வதற்கு 8 இதழ்கள் தேவை. தாமரைப்பூ மற்றும் பட்டாம்பூச்சி செய்வதற்கு ஐந்து இதழ்கள் போதும். பூ எவ்வாறு செய்தோம் என்பதே என் பழைய பதிவிலிருந்து காபி பேஸ்ட் செய்துள்ளேன். அதிலிருந்து தாமரைப்பூவும் பட்டாம்பூச்சியும் எவ்வாறு செய்துள்ளோம் என்பதே புரிந்து கொள்வது எளிது. 

செய்வ‌த‌ற்கு தேவையான‌வை:

1. க‌ல‌ர் டிஷ்யூ பேப்ப‌ர் (டிரேஸிங் பேப்ப‌ர் போன்று மெலிதாக‌ இருக்கும்)

2. ப‌சை


செய்முறை: 

1. நாங்க‌ள் வாங்கிய‌ டிஷ்யூ பேப்ப‌ர் 20 இன்ச் * 20 இன்ச் இருந்த‌து. அதை 10 இன்ச் * 10 இன்சாக‌ கிழித்துக் கொண்டோம். அள‌வு முக்கிய‌மில்லை. ச‌துர‌மாக‌ இருக்க‌ வேண்டும். 

2. ச‌துர‌ப் பேப்ப‌ரை ஒரு முறை ம‌டித்து வெட்டிவிட்டோம்.  இப்பொழுது ந‌ம்மிட‌ம் ஒரு செவ்வ‌க‌ம் இருக்கும்.


3. செவ்வ‌க‌த்தை மேலும் ஒரு முறை ம‌டிக்க‌ வேண்டும். அழுத்தித் தேய்க்க‌ வேண்டாம். ந‌ம‌க்கு ந‌டுப்புள்ளித் தெரிவ‌த‌ற்காக‌ ம‌டித்து இருக்கிறோம்.



4. ம‌டித்த‌தை விரித்து, ஒரு ஓர‌த்தை ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும்.


  5. அதேப் போல், அடுத்த‌ ஓர‌த்தையும் ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும்.


6. எதிர்ப்புற‌ ஓர‌ங்க‌ளையும் இவ்வாறு ம‌டிக்க‌வும்.

7. ம‌டித்த‌ ஓர‌த்தை மீண்டும் ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும். ஒரு ப‌க்க‌த்திற்கு ம‌ட்டும் செய்தால் போதும். இத‌னை இத‌ழென‌க் கொள்வோம்.


8. ப‌சை கொண்டு தூக்கியிருக்கும் ப‌குதிக‌ளை ஒட்டிவிட‌வும். ஒட்ட‌ வேண்டும் என்று அவ‌சிய‌மில்லை. ஒட்டினால், குழ‌ந்தைக‌ளுக்கு செய்வ‌த‌ற்கு எளிதாக இருக்கும்.

9. ந‌ட்ச‌த்திர‌ம் போல் செய்வ‌த‌ற்கு, ஒரு முறை ம‌ட்டும் ம‌டித்திருக்கும் ஓர‌ங்க‌ளை இணைக்க‌ வேண்டும்.

11. ஒரு இத‌ழின் ந‌டுக்கோட்டில் ம‌ற்றொரு இத‌ழின் ஒரு ப‌க்க‌த்தை வைக்க‌ வேண்டும். பார்க்க‌ப் ப‌டம்.





பூவிற்கு ஐந்து இதழ்களை ஒட்டி, அடுத்த மூன்று இதழ்களை எவ்வாறு ஒட்டினால் தாமரை போல் இருக்கும் என்று பார்த்து ஒட்டினோம். பட்டாம்பூச்சிக்கு ஒரு இதழை மடித்து உடல் போல் செய்து, மற்ற நான்கு இதழ்களையும் இறக்கை போல் ஒட்டி விட்டோம்.




செயல்முறை புரியும் படி இருக்கிறது என்று நினைக்கிறேன். புரியவில்லை என்றால் சொல்லுங்கள் மீண்டும் முயற்சிக்கிறேன். 

தொடர்புடையப் பதிவு : http://dheekshu.blogspot.com/2013/04/blog-post_9370.html


Monday, September 16, 2013

நெய்தல்


ஒரு விஷயம் நமக்குப் பிடித்துவிட்டால், திரும்பத் திரும்ப செய்வோமே? இப்ப தீஷுவிற்கு பிடித்திருப்பது ‍- நெய்தல் (Weaving). என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். பேப்பர் கூடை நெய்யலாம். சற்று வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன்.

தேவையானப் பொருட்கள் :

1. ஒரு இன்ச் அகலமான பேப்பர்

2. கோந்து.

செய்முறை :

1. நெய்தல் செய்வது போல் மேலே கீழே என்று பேப்பரை கோர்க்க வேண்டும். செய்முறை இங்கு உள்ளது.


2.கூடை போல் செய்வதற்கு, அடிப்பகுதி(Base) முடித்தவுடன் பேப்பரை மேல் நோக்கி மடித்து விடவேண்டும். நாங்கள் ஐந்து பேப்பர்கள் குறுக்கவும் நெடுக்கவும் வைத்து அடிப்பகுதி செய்தோம். முடித்தவுடன் மேல் நோக்கி பேப்பரை மடித்து, சுற்றி பகுதி நெய்தோம்.  எளிதாக நெய்வதற்காக ஆங்காங்கே ஒட்டினோம்.



3. கூடை சிறிது லூசாக இருந்தது. மற்றபடி தீஷுவிற்கு இது ஒரு புதிய முயற்சி.



டிஸ்கி : தறி முறையில் செய்த புதிய பாய். இந்த முறை மிகவும் நன்றாக வந்திருக்கிறது.  


Thursday, August 1, 2013

சன்டயல் ‍(சுண்டல் அல்ல)

பழங்காலத்தில் சூரியனின் நிலையைப் பொருத்து நேரத்தைக் கணக்கிடம் முறை இருந்தது. சன்டயல் எனும் கருவியால் சூரியனின் நிலையைக் கொண்டு நேரத்தைக் கிட்டத்தட்ட துல்லியமாகக் கணக்கிட முடியும். அதில் பல வடிவங்களும் சிக்கலான பல கணித முறைகளும் உள்ளன. நாங்கள் எளிய முறையில் முயற்சித்தோம்.

ஒரு பேப்பர் தட்டின் நடுவில் சிறு துளையிட்டு பென்சிலை துளையில் நுழைத்து விட்டோம். வெயில் படும் இடத்தில் பேப்பர் தட்டை வைத்து அதைச் சுற்றி சாக்பீஸால் வரைந்து கொண்டோம்.  தட்டு காற்றில் நகராமல் இருக்க ஒரு கல்லைத் தட்டின் மேல் வைத்திருந்தாலும், ஒரு வேளை காற்றில் நகர்ந்து விட்டால் மீண்டும் சரியான இடத்தில் வைப்பதற்காக தான் வரைந்து வைத்தோம். நாங்கள் சரியாக பனிரெண்டு மணிக்கு ஆரம்பித்தோம். 



பென்சிலின் நிழல் தட்டில் படும் இடத்தை குறித்துக் கொண்டு, நேரத்தை எழுதிக் கொண்டோம். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் நிழல் படும் இடத்தைக் குறித்துக் கொண்டோம். இவ்வாறு தொடர்ந்து 5 மணி நேரம் செய்தோம். ஒவ்வொரு மணி நேரத்திலும் நிழல் நகரும் என்று தீஷுவிற்கு தெரிந்திருந்தாலும், நிழலின் நீளமும் மாறியது ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் நிழல் அதே நேரத்தில் அதே இடத்தில் வரும் என்று கணித்தது நடந்ததில் அவளுக்கு மகிழ்ச்சி. வெவ்வேறு பருவத்தில் மாற்றம் இருக்கும் என்று சொன்னதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெயில் காலம் முடிந்தவுடன் மீண்டும் அதே தட்டைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.

முன்பு ஒரு முறை எங்கள் நிழல் வைத்துச் செய்திருக்கிறோம். ஒரே இடத்தில் நின்று ஒவ்வொறு மணிநேரம் எங்களின் நிழலை வரைந்து இருக்கிறோம். அதில் நேரத்தைக் கணக்கிட முடியவில்லை என்றாலும் நம் நிழலைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு எளிய முறை.

Saturday, July 27, 2013

எரிமலையும் செய்யலாம், பலூனும் ஊதலாம்..

வினிகரில் பேக்கிங் சோடா கலந்தால் கார்பன் டை ஆக்சைடு உருவாகும். அதை வைத்து செய்தவை.

எரிமலை செய்த விதம்

போட்டோவில் கிளிக்கவும்



பலூன் ஊதிய விதம்

பாட்டிலில் வினிகர் எடுத்துக் கொண்டோம். ஊதாத பலூனில் பேக்கிங் சோடா போட வைத்துக் கொண்டோம். பலூனின் வாய் பகுதியை இழுத்து, பாட்டின் வாயில் மாட்டி விட்டோம். பலூனிலிருந்து பேக்கிங் சோடா, பாட்டிலினுள்ள வினிகரில் பட்டதும், கார்பன் டை ஆக்சைடு வெளிப்பட்டு, பலூனை ஊதச் செய்யும்.




இந்த முறை செய்தது

ஜிப் லாக் பாகில் காற்று உருவாவதைப் பார்த்தோம்.

தேவையானப் பொருட்கள்

1 ஜிப் லாக் பேக்

2. வினிகர்

3. பேக்கிங் சோடா

4. டிஸ்யூ பேப்பர்

செய்முறை :

1. ஜிப் லாக் பேக்கில் வினிகரை ஊற்றிக் கொள்ளவும்.

2. டிஸ்யூ பேப்பரில் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளவும்.

3. ஜிப் லாக்கை முக்கால் பாகம் மூடி, இடைவெளியில் டிஸ்யூ பேப்பரை உள்ளே போட்டு, முழுவதுமாக மூடி விடவும்.

4. வினிகரில் பேக்கிங் சோடா பட்டவுடன், கார்பன் டை ஆக்ஸைடு வெளிபட்டு, ஜிப் லாக்கை நிரப்பத் தொடங்கும்.

5. காற்றை நிரப்ப முடியாமல் ஒரு நிலையில் ஜிப் லாக் வெடிக்கும்.

மிகவும் எளிதான செய்முறை. ஆனால் விருப்பமாகச் செய்தோம்.

Friday, June 28, 2013

பேப்பர் கப்

இந்தப் பேப்பர் கப்பில் உணவு பொருட்கள் உபயோகப்படுத்த முடியாது. ஆனால் பார்ப்பதற்கு அழகான‌வும் செய்வதற்கு எளிதானதும் ஆகும்.




தேவையானப் பொருட்கள் :

1. ஒரு கிண்ணம்

2. பாலிதீன் பேப்பர்

3. செய்தித்தாள்

4. கோந்து

5. பெயிண்ட் (விருப்பப்பட்டால்)

செய்முறை :

1. கிண்ணத்தை பாலிதீன் பேப்பர் சுற்றி வைக்க வேண்டும்.


2. செய்தித்தாளை சிறு சிறு துண்டாகக் கிழித்துக் கொள்ளவும்.

3. கோந்தில் 2 : 1 என்ற முறையில் தண்ணீர் சேர்க்கவும்.

4. பேப்பரை கோந்தில் தொட்டு, பாலிதீன் பேப்பர் மேல் ஒட்டவும்.

5. மூன்று லேயருக்குக் குறையாமல் பேப்பர் ஒட்டவும்.

6. 10 - 12 மணி நேரம் காயவிடவும்

7. காய்ந்தவுடன் மெதுவாக எடுத்தால் பேப்பர் கப் எடுக்க வரும்.



8.  விருப்பப்பட்டால் பெயிண்ட் செய்து அலங்கரிக்கலாம்.





நாங்கள் வெளிபுறம் மட்டும் வண்ணம் தீட்டினோம். கனம் இல்லாத பொருட்கள் வைக்க உபயோகப்படுத்தலாம்.

இதே முறையில் நாங்கள் முன்பே செய்திருந்தவை - Light Shade and பறவைக் கூடு

Light Shade


பறவைக் கூடு


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost