Monday, September 30, 2013

சிறு துரும்பும்

குழந்தைகளுக்கு அதிகமாக செலவு செய்து வாங்கிய பொம்மையை விட பொம்மை கட்டி வந்த அட்டைப் பெட்டி மிகவும் விருப்பமான பொருளாக இருக்கும். சம்முவிற்கு பெயிண்ட் அல்லது களிமண் தொடுவதற்கு விருப்பம் இருப்பதில்லை. அவளுக்குப் பழக்கப்படுத்துவதற்காக கார்ன் ஸ்டார்ச் (Corn Starch) கொடுத்தேன். சிறு துரும்பு கதை தான். மிகவும் கவர்ந்திருந்தது. அவளை விட தீஷுதான் மிகவும் சந்தோஷமாக விளையாண்டாள். 

முதலில் கார்ன் ஸ்டார்ச் மட்டும் கொடுத்தேன். சற்று விளையாடி முடித்தவுடன், சிறிது தண்ணீர் கலந்தேன்.

விளையாண்டு முடித்தவுடன், மீதமுள்ள மாவை கீழே போட வேண்டியதில்லை. மீண்டும் தண்ணீர் சேர்த்து விளையாடலாம். நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரம் ஒரே மாவை வைத்திருந்தோம். 

பி.கு. விளையாடும் இடம் முழுவதும் மாவாகும் என்பதால் வீட்டிற்கு வெளியே வைத்து விளையாடினோம். கார்ன் ஸ்டார்ச் வழுக்கும்.Thursday, September 26, 2013

ரிலாக்ஸேஷன் டைம்

காலையிலிருந்து மாலை வரை பள்ளியில் செலவிடும் குழந்தைகள் மாலை வீட்டிற்கு வந்தவுடன் வீட்டுப்பாடம் அல்லது வேறு வகுப்புக்கள் என பிஸியாகி விடுகிறார்கள். அவர்களுக்கு ஸ்ட்ர‌ஸாக இருக்காதா என்று முன்பு எனக்குத் தோன்றும். ஆனால் இப்பொழுது நாங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறோம். 

காலை 8:20 பள்ளிக்குச் செல்லும் தீஷு 3:00 மணிக்கு வீட்டிற்கு வருகிறாள். வந்தவுடன் பையிலிருந்து அனைத்தையும் எடுத்து வைத்து, உடை மாற்றி, உணவு உண்டு என்று ஒரு மணி நேரம் ஓடி விடும். 20 நிமிடங்கள் வீட்டுப்பாடம், 30 நிமிடங்கள் வாசிப்பு, 10 நிமிடங்கள் மனக்கணக்கு, 30 நிமிடங்கள் இந்தி அல்லது தமிழ் என அடுத்த ஒன்னரை மணி நேரம் படிக்கிறாள். அது போக வாரத்தில் இரண்டு நாட்கள் பாரதநாட்டியம், ஒரு நாள் நீச்சல், ஒரு நாள் தமிழ்ப்பள்ளி என்று நான்கு வார நாட்களில் சுமார் ஒரு மணி நேரம் வேறு வகுப்புக்கள். 

பள்ளி தொடங்கி இந்த ஒரு மாதத்தில் எப்பொழுதும் அவள் பிஸியாக இருப்பது போல் ஒரு உணர்வு. எனக்கு கஷ்டமாக இருந்தது. அவளுக்கு அவளை உணர்வதற்கான நேரத்தையாவது கொடுக்கிறோமா என்று யோசனையாக இருந்தது. தமிழ் மற்றும் இந்தி வாசிப்பை நிறுத்துவது மட்டுமே என்னால் முடிந்த விஷயம். மற்ற படி எதையும் மாற்ற முடியாது. பாரதநாட்டியம் மற்றும் நீச்சலை நிறுத்த தீஷுவிற்கு மனம் இல்லை. அவளை ரிலாக்ஸ் செய்ய வைக்க வேண்டும். நாட்டியம், நீச்சல் கொடுக்கும் ரிலாக்ஸேஸன் போதுமா என்ற கேள்வியும் எழுந்தது. மற்ற அனைத்து குழந்தைகளும் இவளை விட பிஸியாக இருப்பதால் சேர்ந்து விளையாடவும் முடியாது. 

இப்பொழுது கடந்த இரண்டு வாரமாக ஒரு யோசனையை செயல்படுத்துகிறோம். பள்ளியிலிருந்து வந்து சாப்பிட்டு முடித்தவுடன் படிக்க சொல்லாமல் 30 நிமிடங்கள் ஒரு வேலையும் செய்ய வேண்டாம் (Free time) என்றேன். நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை செய் இல்லையென்றால் நான் சிறு வேலைகள் தருகிறேன் என்றேன். ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள். தங்கையுடன் விளையாண்டாள். வீட்டில் ஒரே சிரிப்பு சத்தம். இவ்வளவு நாட்கள் எங்கே இருந்தது இந்தச் சத்த்ம் என்று அவர்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். 

ஒரு நாள் ஸ்கிப்பிங் செய்தாள், ஒரு நாள் போர்டு கேம்ஸ் விளையாண்டாள், ஒரு நாள் தண்ணீர் பலூன் என்று அவள் ஃப்ரி டைம் போகிறது. என்ன செய்ய என்று ஒரு நாள் என்னிடம் கேட்ட‌ பொழுது கண்ணை மூடிக் கொண்டு செஸ் காய்களை அதற்கான இடத்தில் வைக்க வேண்டும் என்றேன். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

  

அரைமணி நேரத்தில் அவளாகவே படிக்க வந்து விடுகிறாள். இந்த ஃப்ரி டைம் அவளுக்கு transition time. மேலும் அரைமணி நேரத்திற்கு ஏதாவது மாண்டிசோரி ஆக்டிவிட்டீஸ் கொடுக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. செய்ய ஆரம்பித்தவுடன் அதைப் பற்றி எழுதுகிறேன்.

உங்கள் குழந்தைகளை எவ்வாறு  ரிலாக்ஸ் செய்ய விடுகிறீர்கள்?

பி.கு : கண்ணை மூடிக் கொண்டு செஸ் காய்களை வைப்பது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. நானும் என் கணவரும் கூட முயற்சித்தோம். 
நாங்கள் வைத்த போர்டின் புகைப்படங்கள் 

நான் வைத்தது
என் கணவர் வைத்தது

Tuesday, September 24, 2013

தாமரைப்பூவும் பட்டாம்பூச்சியும்

சில வேலைகளுக்கு சரியான நுணிக்கமும் அதிக கவனமும் தேவைப்படும். சில வேலைகளை எப்படி செய்தாலும் அவுட்புஃட் நன்றாக இருக்கும். எங்கள் சாய்ஸ் எப்பொழுதும் இரண்டாவது டைப் தான். ஜன்னல் நட்சத்திரகள் பற்றி எழுதியிருந்தேன்.  அது இரண்டாவது வகையைச் சேர்ந்தது. செய்வது எளிது. ஆனால் இறுதியில் நட்சத்திர பூக்கள் அழகாக இருக்கும். 
அதே முறையில் இதழ்களை சற்றே மாற்றி ஒட்டி, தாமரைப் பூவும் பட்டாம்பூச்சியும் செய்தோம். பொதுவாக பூ செய்வதற்கு 8 இதழ்கள் தேவை. தாமரைப்பூ மற்றும் பட்டாம்பூச்சி செய்வதற்கு ஐந்து இதழ்கள் போதும். பூ எவ்வாறு செய்தோம் என்பதே என் பழைய பதிவிலிருந்து காபி பேஸ்ட் செய்துள்ளேன். அதிலிருந்து தாமரைப்பூவும் பட்டாம்பூச்சியும் எவ்வாறு செய்துள்ளோம் என்பதே புரிந்து கொள்வது எளிது. 

செய்வ‌த‌ற்கு தேவையான‌வை:

1. க‌ல‌ர் டிஷ்யூ பேப்ப‌ர் (டிரேஸிங் பேப்ப‌ர் போன்று மெலிதாக‌ இருக்கும்)

2. ப‌சை


செய்முறை: 

1. நாங்க‌ள் வாங்கிய‌ டிஷ்யூ பேப்ப‌ர் 20 இன்ச் * 20 இன்ச் இருந்த‌து. அதை 10 இன்ச் * 10 இன்சாக‌ கிழித்துக் கொண்டோம். அள‌வு முக்கிய‌மில்லை. ச‌துர‌மாக‌ இருக்க‌ வேண்டும். 

2. ச‌துர‌ப் பேப்ப‌ரை ஒரு முறை ம‌டித்து வெட்டிவிட்டோம்.  இப்பொழுது ந‌ம்மிட‌ம் ஒரு செவ்வ‌க‌ம் இருக்கும்.


3. செவ்வ‌க‌த்தை மேலும் ஒரு முறை ம‌டிக்க‌ வேண்டும். அழுத்தித் தேய்க்க‌ வேண்டாம். ந‌ம‌க்கு ந‌டுப்புள்ளித் தெரிவ‌த‌ற்காக‌ ம‌டித்து இருக்கிறோம்.4. ம‌டித்த‌தை விரித்து, ஒரு ஓர‌த்தை ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும்.


  5. அதேப் போல், அடுத்த‌ ஓர‌த்தையும் ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும்.


6. எதிர்ப்புற‌ ஓர‌ங்க‌ளையும் இவ்வாறு ம‌டிக்க‌வும்.

7. ம‌டித்த‌ ஓர‌த்தை மீண்டும் ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும். ஒரு ப‌க்க‌த்திற்கு ம‌ட்டும் செய்தால் போதும். இத‌னை இத‌ழென‌க் கொள்வோம்.


8. ப‌சை கொண்டு தூக்கியிருக்கும் ப‌குதிக‌ளை ஒட்டிவிட‌வும். ஒட்ட‌ வேண்டும் என்று அவ‌சிய‌மில்லை. ஒட்டினால், குழ‌ந்தைக‌ளுக்கு செய்வ‌த‌ற்கு எளிதாக இருக்கும்.

9. ந‌ட்ச‌த்திர‌ம் போல் செய்வ‌த‌ற்கு, ஒரு முறை ம‌ட்டும் ம‌டித்திருக்கும் ஓர‌ங்க‌ளை இணைக்க‌ வேண்டும்.

11. ஒரு இத‌ழின் ந‌டுக்கோட்டில் ம‌ற்றொரு இத‌ழின் ஒரு ப‌க்க‌த்தை வைக்க‌ வேண்டும். பார்க்க‌ப் ப‌டம்.

பூவிற்கு ஐந்து இதழ்களை ஒட்டி, அடுத்த மூன்று இதழ்களை எவ்வாறு ஒட்டினால் தாமரை போல் இருக்கும் என்று பார்த்து ஒட்டினோம். பட்டாம்பூச்சிக்கு ஒரு இதழை மடித்து உடல் போல் செய்து, மற்ற நான்கு இதழ்களையும் இறக்கை போல் ஒட்டி விட்டோம்.
செயல்முறை புரியும் படி இருக்கிறது என்று நினைக்கிறேன். புரியவில்லை என்றால் சொல்லுங்கள் மீண்டும் முயற்சிக்கிறேன். 

தொடர்புடையப் பதிவு : http://dheekshu.blogspot.com/2013/04/blog-post_9370.html


Friday, September 20, 2013

அமெரிக்க எலிமண்டரிப் பள்ளி மாணவர்களுக்கானக் கணிதப் போட்டி

அமெரிக்கா அல்லது கனடாவில் பயிலும் இரண்டாம் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் போட்டியை மாத்னாசியம் என்ற நிறுவனம் டிரைமாத்லான் (Trimathlon) என்ற பெயரில் நடத்துகிறது. அக்டோபர் 19 அல்லது 20 தேதியில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டியில் பங்கு பெற http://mathnasiumtrimathlon.com/ தளத்தில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். பங்கு பெற பணம் செலுத்த வேண்டியதில்லை. தளத்தில் மாதிரி வினாத்தாளும் உள்ளது. 

பங்கு பெறும் அனைத்து குழந்தைகளுக்கும் சர்ட்டிபிகேட் மற்றும் ஒரு கணித ஸாப்ட்வேர் பரிசு உண்டு. மேலும் குழந்தைகள் பெறும் ஒவ்வொரு சரியான விடைக்கும் லோக்கல் ஸ்கூலுக்கு டொனேஷ‌ன் கொடுக்கப்படும். 

இதுவரை நாங்கள் பங்கு பெற்றதில்லை. இந்த முறை முயற்சிக்கப் போகிறோம். நம் பள்ளிக்கு நம்மால் டொனேஷன் கிடைத்தால் சந்தோஷம் தானே..

மேலும் விவரங்களுக்கு : http://mathnasiumtrimathlon.com/   

Thursday, September 19, 2013

என்ன செய்வது? ‍- நானூறாவது பதிவு


ஒரு டைரியைப் போல் தான் பதிவுகள் எழுதத் தொடங்கினேன். ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். பின் தமிழில் தொடர்கிறேன். குழந்தைகளின் ஆக்டிவிட்டீஸ் பற்றிய பதிவுகளுக்கு வரவேற்பு இருக்குமா என்றெல்லாம் ஆரம்பிக்கும் பொழுது யோசிக்கவில்லை. ஐந்தாண்டு காலத்தில் நானூறு பதிவு எழுதியிருக்கிறேன். தொடர்ந்து பதிவு எழுதுபவர்களுக்குத் தெரியும் இது ஒன்றும் பெரிய எண்ணிக்கை இல்லை என்பது. 

எனக்கு ஒரு நாளில் யாருடைய தொந்தரவும் இல்லாமல் கணணிக் கிடைப்பது அரை மணி நேரம் தான். அந்த நேரத்தில் தான் பதிவு எழுத வேண்டும் மற்ற அனைத்து கணணி வேலைகளையும் முடிக்க வேண்டும். சில பதிவுகள் டிராஃப்ட்டிலேயே இரண்டு மாதங்கள் வரை இருக்கும். அப்புறம் அழித்துவிடுவேன். சில பதிவுகள் நான்கு நாட்கள் வரை சிறிது சிறிதாக எழுதியிருப்பேன். அதனால் வாசிக்கும் பொழுது முழுமையை அடையாதது போல் இருக்கும். சற்று வேலை அதிகரித்தாலும் நான் முதலில் நிறுத்துவது பதிவு எழுதுவதைத் தான். 

பின்னூட்டம் எழுதுவதும் அரிது தான். எழுதக் கூடாது என்று இல்லை. முதலில் சொன்னது போல் நேரமின்மை மற்றும் என் குணம். பிறரிடம் எளிதில் என்னால் பேசவோ பழகவோ முடியாது. 

எழுதும் ஸப்ஜெக்ட் ட்ரை, தொடர்ந்து எழுதுவது கிடையாது மேலும் பின்னூட்டம் எழுதுவது கிடையாது என்று ஏகப்பட்ட குறைகள் என்னிடம் இருந்தாலும், பதிவுகள் மூலம் சில நண்பர்களைப் பெற்று இருக்கிறேன். நிறைய பேரிடம் பதிவுகள் சென்று அடையாவிட்டாலும் பலர் தொடர்ந்து பின்னூட்டம் எழுதி என்னை உற்சாகப்படுத்துகின்றனர். அவர்களுக்கு என் நன்றிகள்.

நானூறு பதிவுகள் வரை எழுதியாகி விட்டது. தொடர்ந்து இந்தத் தளத்தில் எழுத வேண்டுமா என்கிற எண்ணம் சிறிது நாளாக என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. எழுதுவதை நிறுத்திவிடலாமா? ஆங்கிலத்தில் தொடரலாமா? ப்ரைவேட்டாக மாற்றிவிடலாமா? அல்லது அவ்வப்பொழுது நேரம் கிடைக்கும் பொழுது மட்டும் எழுதலாமா? எனக்குக் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?  

Updated : இடைவெளிகள் இருந்தாலும் தொடர்ந்து எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். கருத்துரையிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!! 

Monday, September 16, 2013

நெய்தல்


ஒரு விஷயம் நமக்குப் பிடித்துவிட்டால், திரும்பத் திரும்ப செய்வோமே? இப்ப தீஷுவிற்கு பிடித்திருப்பது ‍- நெய்தல் (Weaving). என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தாள். பேப்பர் கூடை நெய்யலாம். சற்று வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன்.

தேவையானப் பொருட்கள் :

1. ஒரு இன்ச் அகலமான பேப்பர்

2. கோந்து.

செய்முறை :

1. நெய்தல் செய்வது போல் மேலே கீழே என்று பேப்பரை கோர்க்க வேண்டும். செய்முறை இங்கு உள்ளது.


2.கூடை போல் செய்வதற்கு, அடிப்பகுதி(Base) முடித்தவுடன் பேப்பரை மேல் நோக்கி மடித்து விடவேண்டும். நாங்கள் ஐந்து பேப்பர்கள் குறுக்கவும் நெடுக்கவும் வைத்து அடிப்பகுதி செய்தோம். முடித்தவுடன் மேல் நோக்கி பேப்பரை மடித்து, சுற்றி பகுதி நெய்தோம்.  எளிதாக நெய்வதற்காக ஆங்காங்கே ஒட்டினோம்.3. கூடை சிறிது லூசாக இருந்தது. மற்றபடி தீஷுவிற்கு இது ஒரு புதிய முயற்சி.டிஸ்கி : தறி முறையில் செய்த புதிய பாய். இந்த முறை மிகவும் நன்றாக வந்திருக்கிறது.  


Monday, September 9, 2013

எங்கள் பச்சைக் களிமண் பிள்ளையார்

கலிஃபோர்னியாவிலுள்ள கோயில் காலெண்டர் படி ஞாயிறு அன்று விநாயகர் சதுர்த்தி. பிள்ளையார் வாங்க 1 மணி நேரம் பயணம் செய்து இந்தியன் ஸ்டோர் போக வேண்டும். அலுப்பாய் இருந்தது. நாமே ஏன் பிள்ளையார் செய்ய முயற்சிக்கக் கூடாது என்று களிமண் வாங்கலாம் என்று நினைத்தேன். பின் அதையும் ஏன் வீட்டிலேயே செய்யக் கூடாது என்று பலவாறு யோசனைக்குப் பிறகு வேலையில் இறங்கினேன். எங்கள் பச்சைப் பிள்ளையார் மைதா மாவில் உருவானார்.

இது தான் முதல் முயற்சி. நான் செய்த களிமண்(!) மிகவும் மிருதுவாக இருந்ததால் காது சரியாக நிற்கவில்லை. தலையும், உடம்பும் ஒருவாறு பிள்ளையார் போல் தோன்றினாலும், காலும் கையும் சரியாக வரவில்லை. இருந்தாலும் விடாமல் பிள்ளையாரின் ஒரு கையை அருள்பாவிப்பது போல் செய்து, மற்றொரு கையில் லட்டைக் கொடுத்துவிட்டோம். கண்களுக்கு மிளகு வைத்துவிட்டொம்.

பிள்ளையார் மட்டும் தனியாக இருந்ததால் மூஞ்சூறும் செய்தோம். பிள்ளையாருக்கு இலையில் லட்டு மற்றும் ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை களிமண்ணியேலே படைக்கப்பட்டது. 

முழு குடும்பமும் விருப்பப்பட்டு செய்ததால் Family Tradition - னாக‌ மாற்றலாம் என்ற யோசனை இருக்கிறது. வருடாவருடம் எங்கள் கைவண்ணத்தில் விதவித பிள்ளையார் உருவாகப் போகிறார்.  :-))


பூஜைக்குப் பின்


அனைவரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!!

 

Friday, September 6, 2013

நான் கண்காணிக்கப்படுகிறேன்

நான் என் வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, யாராவது என்னைத் தொடர்ந்து கவனித்தால் எனக்குப் பிடிக்காது. கவனிப்பது என்றால் என்னைப் பார்த்துக் கொண்டேயிருப்பது. அப்படி பார்ப்பவர்களை நான் கடிந்து கொள்வதும் உண்டு. நானும் சம்முவும் இருக்கும் பொழுது, அவள் விளையாண்டு கொண்டிருப்பாள். நான் என் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பேன். ஒன்னரை வயது குழந்தை என்னை கவனித்து என்ன செய்துவிடும் என்று நானும் கண்டுகொள்ளுவதில்லை. 

இரு வாரங்களுக்கு முன்பு சமையல் அறையில் சிறிது தண்ணீர் கொட்டி இருந்தது. உள்ளே வராதே தண்ணீர் கொட்டியிருக்கு என்றவுடன், சம்மு நேரே சென்று, நான் துடைக்கும் துணியை எடுத்து வந்து துடைக்கத் தொடங்கினாள். நான் துடைப்பதை என்றோ பார்த்திருக்கிறாள். நேற்றும் அதே போல், கார்ப்பெட்டில் தண்ணீர் கொட்டியவுடன், நேரே சென்று துணி எடுத்து வந்து துடைக்கத் தொடங்கினாள். குழந்தைகள் நம் செயல்கள் மூலம், பேச்சின் மூலம், சூழ்நிலையின் மூலமும் கற்கிறார்கள் என்பதை தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். 

ஒருமுறை தீஷுவிடம் தூங்குகிறாயா என்று கேட்டதற்கு, இரண்டு நிமிடங்கள் கழித்து தூங்குகிறேன் என்றாள். இப்பொழுது வராத தூக்கம் இரண்டு நிமிடங்கள் கழித்து உனக்கு வந்துவிடுமா என்று கேட்டதற்கு, இரண்டு நிமிடம் என்று சொன்னவுடன், அடுத்த வேலைக்குப் போய்விடுவீர்கள் அதனால் 20 நிமிடங்கள் கழித்து தான் அடுத்த முறை தூக்கத்தைப் பற்றி எப்பொழுதும் கேட்பீர்கள் என்றாள். ஒரு முறை கூட நான் அவ்வாறு செய்ததை நான் உணர்ந்தது இல்லை. என் நடவடிக்கைகளை கவனித்து இருக்கிறாள். 

இப்பொழுது என்னால் கடிந்து கொள்ளமுடிவதில்லை. ஆனால் என் செயல்கள் கண்காணிக்கப்படுவதால், நான் என்ன செய்கிறேன் என்று அடிக்கடி யோசித்துக் கொள்கிறேன்.   

Wednesday, September 4, 2013

செய்ததும் செய்ய நினைத்ததும்..

சம்மு ஐஸ்ஸை வைத்து விளையாண்ட மறுநாள் காய்ச்சல் வந்து, இரு தினங்களில் சரியானலும், பசியின்மையால் ஒரு வாரம் அவதிப்பட்டு, இன்று மீண்டும் ஜலதோசம். தீஷு பள்ளிக்குச் சென்றவுடன் சம்முவுடன் நேரம் செலவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இரு வாரங்களாக உடம்புப்படுத்துவதால் நினைத்தப்படி விளையாட முடிவதில்லை. சில நாட்களாக நாங்கள் செய்ததும், செய்ய நினைத்தும் இந்தப் பதிவு. இவை கண் கை ஒருங்கிணைப்புக்கு ஏற்ற விளையாட்டுகள்.

கேரெட் ஜூஸ் பெயிண்ட்டிங் சம்முவிற்கு ஸேப் ஸாட்டர்ஸ் (Shape sorters) வடிவங்களைப் பிரித்து அதன் குழி வழியே போடுவது கடினமாக இருந்தது. அதனால் ஷூ டப்பாவில் ஒரு வட்டம் வெட்டி, அதில் அனைத்து வடிவங்களும் போட்டு பழகினோம்.காய்களை உண்டியலில் போட வேண்டும். இது அவளுக்குச் சிறிது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.ஒரு கண்ணாடி பாட்டிலில் காய்களைப் போட வேண்டும். இது அவளுக்குப் பிடித்திருந்தது.


ஒரு கோப்பையிலிருந்து மற்றொரு கோப்பைக்கு மாற்ற வேண்டும். சற்று கடினம்.


டியூபில் காய்களைப் போட வேண்டும். 
  

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost