Wednesday, July 27, 2011

ஓவிய‌ர் & ஓவிய‌ம் - 5

இந்த‌ முறை எங்க‌ள் ஓவிய‌ர் & ஓவிய‌ம் வாசிப்பிற்கு நாங்க‌ள் எடுத்துக் கொண்ட‌து ‍ஜேம்ஸ் விஷ்ட்ல‌ரின் (James Whistler) த‌ ஃபாலிங் ராக்கெட் ஓவிய‌ம் (The falling rocket). அமெரிக்காவில் பிற‌ந்த‌ இவ‌ர், ஒருவ‌ர் இவ‌ரின் ஓவிய‌த்தை இகழ்ந்த‌தால் அவ‌ர் மேல் கோர்ட்டில் கேஸ் போட்டு அனைத்து சொத்தையும் இழ‌ந்த‌வ‌ர். இவ‌ரின் முழு விவ‌ர‌ம் இங்கே காண‌லாம்.

ஓவிய‌ம் இருட்டில் ஒரு மாத்தாப்பு வெடிப்ப‌து போல் இருந்த‌து. நாங்க‌ள் பின்பற்றிய‌ வ‌ழிமுறை:

1. காகித்தை இர‌ண்டாக‌ பிரித்துக் கொண்டோம். கீழ் ப‌குதி சிறிய‌தாக‌ இருக்க‌ வேண்டும். அந்த‌ ப‌குதி த‌ண்ணீர் ப‌குதி

2. பாத்திர‌ம் துல‌க்க‌ ப‌ய‌ண்ப‌டும் ஸ்பான்ச்சால் ஒரு சில‌ இட‌ங்க‌ளில் சிவ‌ப்பு, ஆரென்ச் பெயிண்ட் கொண்டு ஒற்றி எடுக்க‌வும். இது மாத்தாப்பு வெடிக்கும் பொழுது வ‌ரும் எபெக்ட்டுக்காக‌.

3. பேப்ப‌ர் இருக்கும் அதே க‌ல‌ர் பெயிண்ட் எடுத்துக் கொள்ள‌வும். ஸ்பான்ச்சால் பெயிண்டில் தேய்த்து, கோட்டிற்கு மேல் ப‌குதியில் க‌ட்டிட‌ங்க‌ள் போல் ச‌துர‌மாக‌ வ‌ரைய‌ வேண்டும். கீழ் ப‌குதியிலும் அதே பேல் செய்ய‌ வேண்டும். கீழ் ப‌குதி மேலுள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ளின் பிர‌திப‌‌லிப்பு.



4. ஒரு ப‌ஞ்சில் வெள்ளை பெயிண்ட்டை எடுத்து மேல் ப‌குதியில் புகை போல் வ‌ரைய‌ வேண்டும்



5. அத‌ன் மேல் ப‌ல் துல‌க்க‌ ப‌ய‌ன்ப‌டும் பிர‌சைக் கொண்டு சிவ‌ப்பு ம‌ற்றும் ஆரெஞ்ச் பெயிண்ட‌ ஸ்பெரே செய்து விடவும்.

எங்க‌ளின் ஓவிய‌ம்

Sunday, July 24, 2011

ஐஸ் ஹ‌ண்டிங்

த‌ண்ணீர், ஐஸ் போன்ற பொருட்க‌ளுட‌ன் விளையாட எந்த‌ குழ‌ந்தைக்குத் தான் ஆசை இருக்காது? நாங்க‌ள் முன்பே செய்திருந்த‌ ஐஸ் ஹ‌ண்டிங் மீண்டும் செய்தோம். இப்பொழுது இருக்கும் 94 வெயிலுக்குச் சிற‌ந்த‌ ஒரு ஆக்டிவிட்டி.

ஒரு பாத்திர‌த்தில் அரை பாத்திர‌ம் அள‌வில் த‌ண்ணீர் நிர‌ப்பி, அதில் சிறு பொருட்க‌ளைப் போட்டு உறைய‌ வைத்து விட‌ வேண்டும். அது உறைந்த‌வுட‌ன், மேலும் சிறு த‌ண்ணீர் விட்டு அதில் சிறு பொருட்க‌ள் போட்டு உறைய‌ வைக்க‌ வேண்டும். நான் இர‌ண்டாவ‌து முறை த‌ண்ணீர் ஊற்றும் பொழுது சிறிது க‌ல‌ரிங் சேர்த்துக் கொண்டேன்.



ஐஸ் க‌ட்டியிலிருந்து பொருட்க‌ளை எடுக்க‌ வேண்டும். பொருட்க‌ளை எடுக்க இடுக்கி, Screw driver போன்ற‌ன‌ கொடுத்தேன். தீஷு விருப்ப‌மாக‌ விளையாண்டாள். க‌ல‌ர் ப‌குதியில் இருந்த‌ ஐஸ் மீது பேப்ப‌ர் த‌ட‌வி க‌லரிங் செய்தாள். பொருட்க‌ளை எடுத்த‌ப்பின் இருந்த‌ க‌ல‌ர் த‌ண்ணீரில் சூப் செய்து எங்க‌ளுக்கு ப‌ரிமாறினாள். குழ‌ந்தைக‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ ஒரு விருப்ப‌மான‌ விளையாட்டாக‌ இருக்கும்.

Friday, July 22, 2011

தொகுப்பு

தின‌மும் அரை ம‌ணி நேர‌மாவ‌து ஓவிய‌ம் வ‌ரைய‌ வேண்டும் தீஷுவிற்கு. என்ன‌ செய்ய‌லாம் என்றால் யோசிக்காம‌ல் பெயிண்ட்டிங் என்று சொல்லுகிறாள். இப்பொழுதெல்லாம் பெயிண்ட்டை அவ‌ளிட‌ம் கொடுத்து விட்டு அந்த‌ இட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்து விடுகிறேன்.

அவ‌ளின் ப‌டைப்புக‌ள்

உப்பு, கோந்து, வாட்ட‌ர் க‌ல‌ர்




க‌ட்ட‌ம் வ‌ரைந்து உள்ளே க‌ல‌ர் செய்திருக்கிறாள். ஊதா பேப்ப‌ர் ப‌ச்சை நிற‌மாக மாறியுள்ள‌து.



மீண்டும் வீடும் மேக‌மும்




ஃபைன் கோன் பெயிண்ட்டிங்




வ‌ட்ட‌த்திற்குள்ளும் செவ்வ‌க‌த்திற்குள்ளும் புள்ளிக‌ள்




மார்க்க‌ரால் க‌ட்ட‌ங்க‌ள் வ‌ரைந்து வாட்ட‌ர் க‌லர் வ‌ண்ண‌ம்




தாளை வைத்து அத‌ன் மேல் வ‌ண்ண‌ம்




புரிய‌வில்லை :-)). நான்கைந்து வண்ண‌ங்க‌ளின் க‌ல‌வை




வீடுக‌ள், ம‌ர‌ங்க‌ள், மேக‌ங்க‌ள் ‍வாட்ட‌ர் க‌ல‌ர்


Monday, July 18, 2011

க‌ணித‌ விளையாட்டு ‍- 3

ஒரு தாளில் 1 முத‌ல் 12 வ‌ரை எழுதிக் கொள்ள‌ வேண்டும். விளையாடும் அனைவ‌ருக்கும் த‌னித்த‌னி பேப்ப‌ர். அதே போல் த‌னித்த‌னியாக‌ 12 காய்க‌ள் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். இர‌ண்டு தாய‌க் க‌ட்டையை உருட்ட‌ வேண்டும். ந‌ம் காயை எடுத்து தாய‌க்க‌ட்டைக‌ளில் விழுந்த‌ கூட்டுத்தொகையை நம் காகித்தில் அதே எண்ணின் மேல் வைக்க‌லாம் அல்ல‌து எந்த‌ எந்த‌ எண்க‌ளை கூட்டினால் அந்த‌ எண் வ‌ருமோ, அத‌ன் மேலும் வைக்க‌லாம். உதார‌ண‌த்திற்கு நாம் உருட்டிய‌ எண் 9 என்றால், 9 எண் மீது காய் வைக்க‌லாம், அல்ல‌து 1 மேல் ஒரு காயும் 8 மேல் ஒரு காயும் வைக்க‌லாம் ( 1+8 = 9 என்ப‌தால்), அல்லது 1 மேல் ஒரு காய் + 5 மேல் ஒரு காய் + 3 மேல் ஒரு காய் இப்ப‌டியாக‌. ஒரு எண்ணின் மேல் ஏற்கென‌வே காய் இருந்தால் அத‌ன் மேல் மீண்டும் வைக்க‌க் கூடாது. நாம் உருட்டிய‌ எண்ணை வைக்க‌ முடியாவிட்டால், நாம் விளையாட்டிலிருந்து நீங்கி விட‌ வேண்டும். எத்த‌ணை எண்க‌ள் விடுப‌ட்டுள்ள‌தோ, அது ந‌ம் ஸ்கோர். குறைந்த‌ ஸ்கோர் எடுத்த‌வ‌ர் வெற்றி பெறுவ‌ர். ஆகையால் ஒரு எண்ணை எவ்வ‌ள‌வு பிரிக்க‌ முடியுமா அந்த‌ அள‌வு பிரித்து அதிக‌ எண்க‌ளின் மேல் காய்க‌ள் வைப்ப‌தால் ஸ்கோர் குறையும். இந்த‌ விளையாட்டின் மூல‌ம் ப‌ல எண்க‌ளைக் கூட்ட‌ எளிதாக‌ ப‌ழ‌கிக் கொள்வ‌ர்.

ஐடியா Family Math புத்த‌க‌த்தில் எடுத்த‌து. ஆனால் நான் ச‌ற்று மாற்றியிருக்கிறேன்.

Saturday, July 16, 2011

Giant Bubbles

குழ‌ந்தைப் ப‌ருவ‌த்தில் துணி துவைக்கும் சோப்பைத் த‌ண்ணீரில் க‌ரைத்து, ஸ்ட்ரா(Straw) வைத்து ஊதி முட்டை (த‌ற்பொழுது குழ‌ந்தைக‌ள் கூறுவ‌து Bubbles) விடுவோம். தீஷுவிற்கும் ப‌பிள்ஸ் மிக‌வும் பிடிக்கும்.

அறிவிய‌ல் க‌ண்காட்சியில் ஜெய‌ன்ட் ப‌பிள்ஸ் (Giant Bubbles) என்று இர‌ண்டு க‌ட்டைக‌ளில் இரு க‌யிறுக‌ள் க‌ட்டி அத‌ன் ந‌டுவில் மிக‌ப் பெரிய‌ ப‌பிள்ஸ் வ‌ருவ‌து போல் செய்திருந்த‌ன‌ர். அதை வீட்டில் செய்யலாம் என்று முய‌ற்சித்தோம். மேலும் எப்பொழுதும் போல் ஸ்ட்ரா அல்ல‌து குச்சி வைத்து ஊதாம‌ல், வேறு சில‌ ஊதுவான்க‌ளும் முயற்சித்தோம்.



எங்க‌ளிட‌ம் க‌ட்டைக‌ள் இல்லை. இர‌ண்டு க‌ர‌ண்டிக‌ளை எடுத்துக் கொண்டோம். அவ‌ற்றை உல்ல‌ன் நூல் கொண்டும் இணைத்துக் கொண்டோம். நூலின் இடைவெளியில் ப‌பிள்ஸ் வ‌ரும் என்ப‌து ஐடியா. மேலும் ஒரு பிளாஸ்டிங் மூடியின் ந‌டுப்ப‌குதியில் ஒரு வ‌ட்ட‌ம் வெட்டி எடுத்து ஒரு ஊதுவானும், ஒரு ச‌துர‌ ட‌ப்பாவில் ஒரு ச‌துர‌ ப‌குதையை வெட்டி எடுத்து ஒரு ச‌துர‌ ஊதுவானும் த‌யாரித்துக் கொண்டோம். ச‌துர‌ துளை வ‌ழியாக‌ வ‌ரும் ப‌பிள்ஸ் எந்த‌ வ‌டிவ‌த்தில்‍ இருக்கும் என்று காண‌ ஆசை :-)).

சோப்புக் கல‌வை நாங்க‌ள் முன்ன‌மே வீட்டில் செய்திருக்கிறோம். இப்பொழுது கிளிச‌ரின் இல்லாத‌தால் வெறும் ப‌த்திர‌ம் துல‌க்கும் சோப்பும் (Dish washing liquid) த‌ண்ணீரும் க‌ல‌ந்து சோப்புக் க‌ல‌வை செய்தோம். சோப்பு க‌ல‌வையை ஒரு அக‌ல‌மான‌ பாத்திர‌த்தில் எடுத்துக் கொண்டோம். நூலுட‌ன் க‌ர‌ண்டியை க‌ல‌வையில் வைத்து, வெளியில் எடுத்து, க‌ர‌ண்டியை மெதுவாக‌ எதிர்புற‌த்தில் இழுத்து நூலைப் பிரிக்க‌வும். நூலுக்கு ந‌டுவில் சோப்பு மெல்லிய‌ இழையாக‌த் தெரியும். அத‌ன் மேல் ஊத‌வேண்டும். நாங்க‌ள் உல்ல‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் நூலைப் பிரிப்ப‌த‌ற்காக‌ எளிதாக‌ இல்லை. ச‌ண‌ல் ப‌ய‌ன்ப‌டுத்தி இருந்தால் எளிதாக‌ இருந்திருக்கும்.

மிக‌ப் பெரிய‌ ப‌பிள்ஸ் வ‌ர‌வில்லை. ஆனால் பெரிய‌து வ‌ந்த‌து.

உல்ல‌ன் ஒட்டிக் கொண்டதால் நூலைப் பிரிக்க‌ முடியாத‌தால் வெறும் சிறு இடைவெளியே கிடைத்த்து



மீண்டும் க‌ல‌வையில் விழுந்த‌ ஒரு ப‌பிள்ஸ்




ச‌துர‌ துளை வ‌ழியாக‌வும் வ‌ட்ட‌மே வ‌ரும்




எதிர்பார்த்த‌து போல் வ‌ராவிட்டாலும் ந‌ல்ல‌வொரு முய‌ற்சியாக‌ அமைந்த‌து.

Wednesday, July 13, 2011

க‌வ‌ர்ந்த‌ த‌ருண‌ங்க‌ள் - 07/13/2011

1.நானும் தீஷுவும் பாப் கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

தீஷு, "என‌க்கு ரொம்ப‌ பிடிச்சுருக்கு.. இன்னும் இருக்கா?"

நான், " இன்னும் ஏழு பாக்கெட் இருக்கு"

தீஷு, "ஏன்? ஒன்னு வாங்கினா ஏழு ஃப்ரியா?"


2. தீஷு அவ‌ள் அப்பாவிட‌ம் "உங்க‌ அம்மா நல்ல‌வ‌ங்க‌ளா?"

அவ‌ர் ஆமாம் என்ற‌வுட்ன், "உங்க‌ அம்மானால‌ சொல்லுறீங்க‌ளா அல்ல‌து உண்மையாவா?"


3. தீஷு, "Appa, I am going to kiss you"

அப்பா, "I am going to kick you"

தீஷு " நீங்க‌ என்ன‌ கிக் ப‌ண்ணிட்டு, ஸாரி சொல்லல‌. I am going to call the police"

போனை எடுத்தாள். 911 கால் ப‌ண்ண‌ போகிறேன் என்றாள்.

ஷாக் ஆகிவிட்டோம். ஸ்கூலில் சொல்லிக் கொடுத்து விட்டார்க‌ள் போல் என்று நினைத்து கேட்டால், ஸ்விமிங் பூல்லில் பார்த்தேன் என்றாள். அப்புற‌ம் அவ‌ளை ஸாரி கேட்டு சமாளித்தோம்.

நான் ஒரு நிமிட‌த்தில் உள்ள‌ போக‌ப் பாத்தீங்க‌ளே என்று அப்பாவிட‌ம் சொல்லி சிரித்துக் கொண்டாலும், எப்பொழுது மிர‌ட்ட‌ப் போகிறாளோ என்று ப‌ய‌மாக‌ இருக்கிற‌து.


4. தீஷு க‌தை என்ற‌ பெரிய ஒரு மெகா க‌தை செல்லுவாள். மெகா சீரிய‌ல் போல 90% க‌தை‌ மிஸ் பண்ணினாலும் புரியும். ஒரு நாள் ஒரு ஷூ செல்ல‌ர் என்று ஒரு க‌தை ஆர‌ம்பித்தாள். வித்தியாச‌மான‌ க‌ள‌மாக‌ (!) இருக்கிற‌தே என்று நினைத்தேன். அவ‌ரிட‌ம் ஷூ வாங்க‌ வ‌ந்த‌வ‌ங்க‌ ஊருக்குப் போனாங்க‌. அவ‌ங்க‌ ஊருக்குப் போய் எல்லாருக்கும் போன் பண்ணுனாங்க‌..... என் வாய் ம‌ட்டும் உம் கொட்ட‌, நான் எதையோ யோசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஞாப‌க‌ம் வ‌ர‌, ஷூ செல்ல‌ர்னு சொன்னியே என்ற‌வுட‌ன், "ஆமா அம்மா.. அவ‌ரு வித்த‌ செருப்பத் தான் இவுங்க‌ எல்லாரும் போட்டு இருக்காங்க‌.. அத‌னால‌ தான் அவ‌ர‌ப் ப‌த்திச் சொன்னேன்.".. ஒரு வ‌ருங்கால‌ மெகா சீரிய‌ல் டைர‌க்ட‌ர் எங்க‌ வீட்டில‌ இருக்காங்க‌.. Beware people!!!!!!

Monday, July 11, 2011

ஓவிய‌ர் & ஓவிய‌ம் - 4

ட‌ச் ஓவிய‌ரான‌ வான் கோ (Vincent Van gogh) ப‌ற்றிப் ப‌டித்தோம். இவ‌ர் ப‌ல்வேறு வேலைக‌ளில் தோல்வி க‌ண்டு, பின் ஓவிய‌ர் ஆன‌வ‌ர். ம‌ன‌ நோயால் ப‌திக்க‌ப்ப‌ட்டிருந்த‌ இவ‌ர் த‌ற்கொலை செய்து கொள்ளும் முன் ஒரே ஒரு ஓவிய‌ம் ம‌ட்டுமே விற்றுயிருந்தார். இன்று இவ‌ரின் ஒவ்வொரு ஓவிய‌த்தின் விலையும் கோடிக‌ளில்.

இவ‌ரின் ஸ்டாரி நைட் (Starry Night) என்ற‌ ஓவிய‌த்தை எடுத்துப் ப‌டித்தோம்.

1. முத‌லில் பெயிண்ட்டில் சிறிது கோந்து க‌ல‌ந்து கொள்ள‌ வேண்டும்.

2. ப‌க்க‌தை மூன்றாக‌ பிரித்து(நேர் கோடாக‌ போடாம‌ல்), ந‌டு ப‌குதியில் சிறு சிறு ம‌ர‌ங்க‌ள் வ‌ரைந்து கொள்ள‌வும். மேல் ப‌குதியில் சுருள் சுருளாக‌ மேக‌ங்க‌ள் வ‌ரைந்து கொள்ள‌வும்.

3. மேல் ப‌குதியில் வெள்ளை, ஊதா கொண்டு வான‌/மேக‌ம் வ‌ரைய‌வும்



4. வ‌ரைந்த‌ பெயிண்டின் மேல் போர்க்(fork) கொண்டு மேலும் சுற்றி விட‌வும்.



5. கீழ் ப‌குதியிலுள்ள‌ ம‌ர‌ங்க‌ளுக்கு, ப‌ச்சையும் ப்ர‌வுணும் தீட்ட‌வும். ப்ர‌ஸின் பின் ப‌குதியைக் கொண்டு ப‌ச்சை பெயிண்ட்டை சுற்றிவிட‌வும்.

ந‌டு ப‌குதியில் மீதியுள்ள‌ இடங்க‌ளில் ம‌ஞ்ச‌ளும் ஆரெஞ்சும் தீட்ட‌வும்.

6. கீழ் ப‌குதியில் பச்சை தீட்டி, போர்க் கொண்டு நீள‌வாக்கில் இழுக்க‌வும்

தீஷுவின் ப‌ட‌ம்.


Saturday, July 9, 2011

இக்க‌ரைக்கு..

இக்கரை மாட்டுக்கு அக்க‌ரை ப‌ச்சை என்று எங்க‌ள் பாட்டி அடிக்க‌டி கூறிக் கேட்டியிருக்கிறேன். ச‌மீப‌த்தில் ந‌ன்றாக‌ உண‌ர்ந்தேன்.

நான் த‌ற்பொழுது வாசித்துக் கொண்டிருக்கும் புத்த‌க‌ம் ‍Knowing and teaching elementary Mathematics . அதில் சீன‌ ஆசிரிய‌ர்க‌ளும் அமெரிக்க‌ ஆசிரிய‌ர்க‌ளும் எவ்வாறு அடிப்படை க‌ணித‌த்தைப் புரிந்து வைத்திருக்கிறார்க‌ள் என்ற‌ க‌ருத்துக் க‌ணிப்பும் சீன‌ ஆசிரிய‌ர்க‌ளின் புரித‌ல் சீன‌ மாண‌வ‌ர்க‌ள் க‌ணித‌த்தில் சிறிந்து விள‌ங்க ஒரு கார‌ண‌ம் என்றும் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. அதில் சீன‌ மொழியில் 11 றை ஒரு ப‌த்து ஒன்று, 12 டை ஒரு ப‌த்து இர‌ண்டு என்றும் 20 தை இரு ப‌த்து, 30 தை மூன்று ப‌த்து என்று கூறுவ‌ர் என்று இருந்த‌து. அத‌னால் 11 யில் ஒரு ப‌த்தும் ஒன்றும் இருப்ப‌து தெரிந்த‌தால் க‌ட‌ன் வாங்கி க‌ழித்த‌ல் முத‌லிய‌ன எளிதாக இருக்கின்ற‌து என்றும் இருந்த‌து. இது எளிதாயிருக்கே என்று நானும் எண்க‌ளை கூறி இந்த‌ முறையில் ப‌தில் சொல்ல‌ச் சொன்னேன். உதார‌ண‌த்திற்கு 21 என்றால் இரு ப‌த்து ஒன்று என்று சொல்ல‌ வேண்டும்.

அதை என் க‌ண‌வ‌ரிட‌ம் சொல்லும் பொழுது எண்க‌ளை த‌மிழில் சொன்னேன். இருப‌தை இரு பத்து என்று சொல்ல‌ வேண்டும் என்றேன். அப்பொழுது தான் என‌க்கு புரிந்த‌து. த‌மிழிலும் அவ்வாறே தான் சொல்லுகிறோம். ப‌தினொன்று (ஒரு ப‌த்து ஒன்று) என்று சொல்லும் பொழுதே அதில் ஒரு ப‌த்தும் ஒன்றும் இருக்கிற‌து என்று வெளிப்படையாக‌த் தெரிகிற‌து. த‌மிழில் சொல்லும் பொழுது அத‌ன் புரித‌ல் இல்லை. சீனாவில் சொல்கிறார்க‌ள் என்ற‌தும் அது மேன்மையாக‌ தெரிகிற‌து.

முழு ப‌ல்பு எனக்கு..

Friday, July 8, 2011

க‌ணித‌ விளையாட்டு - 2

ஒரு தாளை (Score Sheet) இர‌ண்டாக‌ பிரித்து ஒன்ஸ், டென்ஸ் என்று எழுதிக் கொள்ள‌வும். தாய‌க்க‌ட்டையை உருண்டி வ‌ரும் எண்ணை ஒன்ஸிலோ, டென்ஸிலோ எழுத‌லாம். டென்ஸில் எழுதும் பொழுது ஒரு பூஜ்ஜிய‌ம் சேர்த்துக் கொள்ள‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு 5 தாம் எண் தாய‌க்க‌ட்டையில் விழுந்திருந்தால் ஒன்ஸில் எழுதும் பொழுது 5 என்றும் டென்ஸில் எழுதும் பொழுது 50 என்றும் எழுத‌ வேண்டும். ஒருவ‌ர் மாற்றி ஒருவ‌ர் இவ்வாறு ஏழு முறை தாய‌க்க‌ட்டையில் உருட்டி எழுதிக் கொண்டே வ‌ர‌ வேண்டும். இறுதியில் கூட்டிப் பார்த்து நூறைத் தாண்டாம‌ல், ஆனால் நூறுக்கு அருகில் பாயிண்ட் வைத்திருக்கிற‌வ‌ர் பெற்றி பெற்ற‌வ‌ர்.

இதில் எப்பொழுது ஒன்ஸில் எழுத‌ வேண்டும், எப்பொழுது டென்ஸில் எழுத‌ வேண்டும் என்று யோசித்து எழுத வேண்டும். கூட்டுத் தொகை நூறுக்கு மேல் போகாம‌ல் பார்த்துக் கொள்ள‌ வேண்டும்.

இந்த‌ விளையாட்டு Family Math என்ற புத்த‌கத்திலிருந்து எடுத்த‌த‌து.


1. Each person takes a turn rolling the dice

2. The number may be written in either the ten's column or the one's column of the score sheet. When a number is entered in the ten's column, "0" is written next to it and as it is in the one's column

3. After each player has rolled the dice seven times, the players add up the numbers

4. The player who is closet to 100 without going over is the winner.

Wednesday, July 6, 2011

நிழ‌ல் உருவங்க‌ள்

எங்க‌ள் வீடு மேற்கு பார்த்த‌து. இப்பொழுது வெயில் கால‌மான‌தால் இர‌வு எட்ட‌ரை ம‌ணி அளவில் தான் சூரிய‌ன் அஸ்த‌ம‌ன‌ம் ஆகிற‌து. மாலை ஆறு ம‌ணியிலிருந்து சூரிய‌ன் ம‌றையும் வ‌ரை எங்க‌ள் வீட்டிலுள் சூரிய‌ வெளிச்ச‌ம் வ‌ரும். அதில் அப்பா அவ‌ர் விர‌ல்க‌ளை வைத்து, நிழ‌ல் உருவங்க‌ள் உருவாக்கி காட்டுவார். தீஷுவும் விருப்ப‌மாக‌ செய்த‌தால், நூல‌க‌த்திலிருந்து Shadow Play என்ற‌ புத்த‌க‌ம் எடுத்து வ‌ந்தோம். எளிதாக‌ நிழ‌ல் உருவ‌ங்க‌ள் உண்டாக்கின‌ர்.



ப‌ருந்து




கிளி




ந‌ரி




ஒட்ட‌க‌ச்சிவிங்கி

Friday, July 1, 2011

எங்க‌ளின் ம‌றுப‌க்க‌ம்

இதுவ‌ரை நீங்க‌ள் புகைப்ப‌டங்க‌ளில் நான் சொல்வ‌தைச் செய்யும் தீஷுவைப் பார்த்திருப்பீர்க‌ள். நானும் எப்பொழுதும் அவ‌ளைப்ப‌ற்றிய‌ ந‌ல்ல‌ விச‌யங்க‌ளை ம‌ட்டும் ப‌திவு செய்திருக்கிறேன். ஒரு பக்க‌ம் ம‌ட்டும் காட்டியிருக்கிறோம். தீஷுவின் ம‌றுப‌க்க‌ம் இந்த‌ ப‌திவு.

தீஷு ஒரு ஷை குழ‌ந்தை. ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் எளிதில் ப‌ழக‌ மாட்டாள். த‌ந்தை, தாய் இருவ‌ரும் அவ்வாறு இருக்கையில் அவ‌ளை குறை கூற‌ முடியாது. பிற‌ந்த‌ ஐந்து மாத‌ங்க‌ள் எங்க‌ள் இருவ‌ரையும் த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ஒர் இரு முறை பார்த்திருப்பாள். ஐந்து முத‌ல் எட்டு மாத‌ங்க‌ள் வ‌ரை இந்தியாவில் இருந்தோம். ஐந்து மாதங்க‌ளில் குப்புற‌ விழுந்தாள். அத‌ன் பின் எட்டு மாத‌ங்க‌ள் வ‌ரை முக‌ம் பார்த்து சிரிப்பாள். பிஸிக்க‌ல் ஆக்டிவிட்டீஸ் எதுவும் செய்ய‌வில்லை. ஒன்பதாவ‌து மாத‌த் தொட‌க்க‌த்தில் த‌வ‌ழ‌த் தொட‌ங்கினாள். ஆனால் வீட்டிற்கு யாராவ‌து வ‌ந்தாலோ அல்ல‌து நாங்க‌ள் யார் வீட்டிற்கு சென்றாலோ அழு‌து கொண்டே இருப்பாள்.

ஒரு வ‌யது முடிந்த‌ நிலையில் டாக்ட‌ரிட‌ம் கேட்ட‌த‌ற்கு, குழ‌ந்தை அடுத்த‌வ‌ரைக் க‌ண்டு அழுவ‌து இய‌ற்கை ம‌ற்றும் 20 மாத‌ம் வ‌ரை ந‌ட‌க்காத‌ குழ‌ந்தைக்கு ம‌ட்டுமே வேறு ப‌யிற்சி கொடுக்க‌ வேண்டும். இப்பொழுது ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார். ப‌தினாங்கு மாத‌ங்க‌ளுக்கு பிற‌கு நட‌க்க‌த் தொடங்கினாள். அப்பொழுதும் பிற‌ குழ‌ந்தைக‌ளை விளையாட்டு இட‌ங்க‌ளில் பார்த்தாலும் அழுவாள் அல்ல‌து எங்க‌ளிட‌ம் வ‌ந்து ஒட்டிக்கொள்வாள். ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளிட‌ம் ப‌ழ‌க்குவ‌த‌ற்காக‌ தொட‌ர்ந்து மாத‌ம் ஒரு முறையாவ‌து விளையாட்டு மைதான‌த்திற்கு அழைத்துச் செல்வோம். ஆனால் அழுகையும் தொட‌ர்ந்த‌து.இது 24 மாத‌ங்க‌ள் வ‌ரை தொட‌ர்ந்த‌து.

ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளுட‌ன் விளையாட‌/பழ‌க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே இர‌ண்டு வ‌யதில் மாண்டிசோரி ப‌ள்ளியில் சேர்த்தோம். முத‌ல் பெற்றோர் ‍ ஆசிரிய‌ர் ச‌ந்திப்பிலே அவ‌ள் டீச்ச‌ர் சொன்ன‌து, அவ‌ளுக்கு ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளைப் பார்த்தால் ப‌ய‌ம். டீச்ச‌ரே முழு நேர‌மும் தூக்கி வைத்து இருக்க‌ வேண்டும். வீட்டினருகே ஓர் குழ‌ந்தையுட‌ன் ம‌ட்டும் விளையாடுவாள். இர‌ண்டே முக்கால் வ‌யதில் மீண்டும் இந்தியா வ‌ந்தோம். முத‌லில் அங்குள்ள‌ குழ‌ந்தைக‌ள் ப‌க்க‌த்தில் வ‌ந்தால் அடிக்க‌த் தொடங்கினாள். ஆர‌ம்ப‌த்தில் நான் டைம் அவுட் கொடுத்தேன். அவ‌ர்க‌ள் இவ‌ளை ஏதாவ‌து செய்து விடுவார்க‌ள் என்று ப‌ய‌த்தில் அடிக்கிறாள் என்று அப்பா சொன்ன‌வுட‌ன், ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளுட‌ன் விளையாடும் பொழுது, என் ம‌டியில் அவ‌ளை வைத்திருந்து, வெறும் பார்க‌க‌ ம‌ட்டும் செய்வோம். ச‌ற்று விளையாட‌ தொட‌ங்கினாள். அத‌ன் பின் அனைவ‌ருட‌னும் பேச‌வும் செய்தாள். மூன்று வ‌ய‌து ஆன‌வுட‌ன் ச‌ரியாகி விட்ட‌து என்று நினைத்தோம்.

இந்தியாவிலிருந்த‌ அந்த‌ இர‌ண்டு வ‌ருட‌மும் இவ‌ளுக்கு வ‌ச‌ந்த‌ கால‌ம். ப‌ள்ளியிலும் ந‌ல்ல‌ ஒத்துழைப்பு கொடுத்த‌ன‌ர். பெரிய‌ ப‌ள்ளியில் சேர்த்தால் ப‌ய‌ந்துவிடுவாள் என்று சிறிய‌ மாண்டிசோரி ப‌ள்ளியில் சேர்த்தோம். டீச்ச‌ர்க‌ள் மிக‌வும் அன்பாக‌ ப‌ழ‌கியதா‌ல் ப‌ள்ளியிலும் சிற‌ந்து விள‌ங்கினாள். ப‌ள்ளியிலும் த‌ன்ன‌ம்பிக்கை மிக‌வும் வ‌ள‌ர்ந்து இருக்கிற‌து என்றும் அவ‌ளை இவ்வாறே வழி ந‌ட‌த்துங்க‌ள் என்று நாங்க‌ள் கிள‌ம்பும் பொழுது சொல்லி அனுப்பின‌ர். எங்க‌ள் வீடும் ந‌ண்ப‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள் சூழ‌ இருந்த‌தால், எப்பொழுதும் ம‌க்க‌ள் சூழ ம‌கிழ்ச்சியாக‌ இருந்தாள். ஒரு உயிர் தோழியும் உண்டு. அப்பொழுதும் ஒரு குழ‌ந்தை வ‌ந்தால் சேர்ந்து விளையாடுவாள். ஒன்று மேல் வ‌ந்தால், அவ‌ளுக்குப் பிடித்த‌ குழ‌ந்தை அவ‌ளுட‌ன் விளையாட வேண்டும். அது ம‌ற்ற‌ குழ‌ந்தையுட‌ன் விளையாட‌ தொட‌ங்கினாள், இவ‌ள் சோர்ந்து த‌னிமைப் ப‌ட்டுவிடுவாள்.

இப்பொழுது மீண்டும் த‌னிமை. இங்கு இர‌ண்டு மூன்று இவ‌ள் வ‌ய‌து குழ‌ந்தைக‌ள் இருந்தாலும், அவ‌ர்க‌ளுட‌ன் விளையாடுவ‌த‌ற்கு விருப்ப‌ம் இருப்ப‌தில்லை. நாங்க‌ள் இப்பொழுது மொழி கார‌ண‌ம் என்று நினைக்கின்றோம். நாங்க‌ள் வீட்டில் த‌மிழில் மட்டும் பேசுவ‌தால், ஆங்கில‌த்தில் உரையாட‌த் தெரிந்தாலும், அவ‌ர்க‌ள் அள‌வுக்கு பேச‌ முடிய‌வில்லை. மீண்டும் யாரிட‌மும் விளையாடுவ‌து இல்லை. யாரும் வீட்டிற்கு வ‌ந்தாலும் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக‌ அவ‌ர்க‌ளுட‌ன் விளையாடுவ‌து இல்லை. அவ‌ர்க‌ள் இருந்தாலும் இவ‌ள் த‌னியாக‌ விளையாடுகிறாள்.

ஒவ்வொரு குழ‌ந்தையும் வித்தியாச‌மானது என்று தெரிந்து இருந்தாலும், ம‌ற்ற‌ ச‌ம‌ வ‌ய‌து குழ‌ந்தையுட‌ன் ஒப்பிடும் பொழுது அவ‌ளுடைய‌ கிராஸ் மோட்டார் ஸ்கில்ஸ் மிக‌வும் க‌ம்மி. இவ‌ள் முன் சொல்வ‌து கிடையாது. ச‌றுக்க‌லில் ஒருவ‌ர் அருகில் நிற்க‌ வேண்டும். ச‌றுக்க‌ல் ப‌டிக‌ளில் ஏறி விடுவாள். ஆனால் மேலிருந்து கீழே ச‌றுக்க‌லில் இற‌ங்குவ‌த‌ற்கு ப‌ய‌ப்ப‌ட்டு நின்று கொண்டியிருப்பாள். இவ‌ள் பின்னால் ஒரு கூட்ட‌ம் சேர்ந்து விட்டும். ச‌றுக்க‌லில் இற‌ங்க‌வும் முடியாம‌ல், திரும்ப‌வும் முடியாம‌ல் அழ‌ ஆர‌ம்பிப்பாள். கூட்ட‌த்தில் ஐந்து வ‌ய‌து குழ‌ந்தை ப‌ய‌த்தில் அழும் பொழுது, எப்ப‌டி ச‌மாதான‌ப்ப‌டுத்த‌வ‌து என்றே தெரியாது. மேலும் இங்கு அவ‌ள் வ‌ய‌து குழ‌ந்தைக‌ளே ச‌ற்று பெரிதாக‌ இருப்ப‌தால், ப‌ய‌ந்து, அவ‌ர்க‌ளுக்கு வ‌ழிவிட்டு, அந்த‌ விளையாட்டு பொருட்க‌ள் ப‌க்க‌மே போக‌ மாட்டாள். சில‌ நாட்க‌ள் சைக்கிள் விருப்ப‌மாக‌ ஓட்டுவாள். அடுத்து சில‌ மாத‌ங்க‌ளுக்கு அதைப் பார்த்தாலே ப‌ய‌ப்ப‌டுவாள்.

நீச்ச‌ல் வ‌குப்பில் சேர்த்து விட்டோம் (இவ‌ள் ஆசைப்ப‌ட்ட‌தால்). முத‌ல் நாள் வ‌ந்த‌ டீச்ச‌ர் பிடித்து விட்ட‌து. ந‌ன்றாக‌ செய்தாள். இந்த‌ எட்டு நாள் வ‌குப்பில் மூன்று நாட்க‌ள் அந்த‌ டீச்சர் வ‌ந்தார். அந்த‌ நாட்க‌ள் ம‌ட்டும் ந‌ன்றாக செய்வாள். ம‌ற்ற நாட்க‌ளில் வ‌ரும் டீச்ச‌ர் கையை விட‌மாட்டாள். கேட்டால் ப‌ய‌ம் என்பாள். ம‌ற்ற‌வ‌ர் வ‌ந்தால் செய்ய‌ மாட்டேன் என்று சொல்லி விட்டாள். எவ்வ‌ள‌வோ எடுத்துச் சொன்னோம். கேட்க‌வில்லை.

இப்பொழுது என்னுடைய‌ ப‌யம் ப‌ள்ளியை எப்ப‌டி ச‌மாளிக்க‌ப் போகிறாள்? இவ‌ளுக்கு அன்பாக‌ பேசும் டீச்ச‌ர் பிடிக்கும். டீச்ச‌ர் பிடித்தால் ப‌ள்ளி பிடிக்கும். டீச்ச‌ர் பிடிக்குமா? மைதான‌த்தில் ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளுக்கு ச‌மமாக‌ விளையாட‌ ச‌ற்று நாளாகும். அது வ‌ரை என்ன‌ செய்வாள்? இங்கு பேசும் ஆங்கில‌ம் த‌னக்கு புரிவ‌தில்லை என்று ஒரு நினைப்பு. அத‌னால் காது கொடுத்து கேட்ப‌து கூட‌ இல்லை. ப‌ள்ளியில் என்ன செய்ய‌ போகிறாள்? மற்ற‌ குழ‌ந்தைக‌ளைப் பார்த்து ப‌ய‌ப்ப‌டாம‌ல் இருப்பாளா? வ‌ரும் ஐந்தாம் தேதி ப‌ள்ளிக்குச் செல்ல‌ போகிறாள். நினைக்க‌ நினைக்க‌ த‌லை சுற்றுகிற‌து. எழுதிய‌து ச‌ற்று ஆறுத‌லாக‌ இருக்கிற‌து.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost