Tuesday, October 29, 2013

மூடிகள்

சில மாதங்களாக பால் பாட்டில் மூடிகளை சேமித்து வைத்திருந்தேன். கிட்டத்தட்ட இருபது இருந்தது. அதை சம்முவின் முன் கொட்டியவுடன், அவள் முகத்தில் ஆச்சரியம் தோன்றி மறைந்தது. உடனே விளையாட ஆரம்பித்தாள்.


அவளாக விளையாண்டது போக நான் விளையாடச் செய்ததை இங்கு தொகுத்திருக்கிறேன். அவள் செய்யும் பொழுது படங்கள் எடுத்தால் அவளுக்குக் கவனச்சிதறல் இருப்பதால், படங்கள் தனியாக எடுத்தேன்.

பல்லாங்குழியில் மூடிகளை போடுதல் : பல்லாங்குழியை மூடி மூடிகளை அடுக்குதல் :உண்டியல் ஓட்டையில் மூடிகள் போகவில்லை என்பதால், நான் துளையிட்ட பெட்டியில் மூடிகளை போடுதல் :


ஊதா நிற மூடிகளை ஊதா பெட்டியிலும் சிவப்பு நிற மூடிகளை சிவப்பு நிற பெட்டியிலும் போடதல் (Colour Sorting):


பெரிய குழந்தைகளுக்கு பாட்டனிங்(Pattern), எண்ணுதல்(Counting), மூடியில் எழுத்துகள் எழுதி வரிசையாக அடுக்கச் செய்தல், மூடியில் எண்கள் எழுதி வரிசையாக அடுக்கச் செய்தல் என பல விளையாட்டுகள் விளையாடலாம்.

Thursday, October 24, 2013

குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1

குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2000‍க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல் எழுதியிருப்பதாக விக்கி சொல்லுகிறது. ஐந்தாவது பாடல் கழுதையும் கட்டெறும்பும் என்ற பாடல் மட்டும் சற்று நெருடலாக இருந்தது.

1. வட்டமான தட்டு

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு

எட்டில் பாதி விட்டு
எடுத்தான் மீதம் கிட்டு
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு

கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு
மொத்தம் தீர்ந்தது எட்டு
மீதம் காலித் தட்டு!


2. அப்பா தந்த புத்தகம்

அப்பா வாங்கித் தந்தது
அருமையான புத்தகம்
அதில் இருக்கும் படங்களோ
ஆஹா மிக அற்புதம்!

யானை உண்டு, குதிரை உண்டு
        அழகான முயலும் உண்டு
பூனை உண்டு, எலியும் உண்டு
        பொல்லாத புலியும் உண்டு

அப்பா வாங்கித் தந்தது
அருமையான புத்தகம்.

குயிலும் உண்டு, குருவி உண்டு
         கொக்கரக்கோ கோழி உண்டு
மயிலும் உண்டு, மானும் உண்டு
         வாலில்லாத குரங்கும் உண்டு

அப்பா வாங்கித் தந்தது
அருமையான புத்தகம்


3. சிரிக்கும் பூக்கள்

வண்ண வண்ணப் பூக்கள் - ‍ நல்ல‌
மணம் நிறைந்த பூக்கள்.
என்னைப் பார்த்துச் சிரிக்கும் - அவை
இனிய நல்ல பூக்கள்.

நீலம், பச்சை, சிவப்பு - இன்னும்
நிறங்கள் பலவும் உண்டு.
காலை நேரம் வருவேன் - ‍ இந்தக்
காட்சி கண்டு மகிழ்வேன்.

பார்க்கும் போதும் சிரிக்கும் - நான்
பறிக்கும் போதும் சிரிக்கும்.
சேர்த்துக் கட்டும் போதும் - அவை
சிரித்துக் கொண்டே இருக்கும்!


4. தூங்கும் விதம்

ஒட்டைச் சிவிங்கி நின்று கொண்டே
   நன்று தூங்கிடும்.
உயரே வௌவால் தலைகீழாகத்
   தொங்கித் தூங்கிடும்.
சிட்டுக் குருவி ம்ரத்தின் கிளையைப்
   பற்றித் தூங்கிடும்.
சின்னப் பாப்பா தொட்டிலுக்குள்
   படுத்துத் தூங்கிடும்.
கண்ணை மூடி நாமெல்லாரும்
   நன்கு தூங்குவோம்.
கண்ணைத் திறந்தபடியே மீனும்
   பாம்பும் தூங்கிடும்.
  என்ன காரணத்தினாலே
   என்று தெரியுமா?
 இவைகளுக்குக் கண்ணைமூட‌
    இமைகள் இல்லையே!


5. கழுதையும் கட்டெறும்பும்

கட்டெறும்பு ஊர்ந்து ஊர்ந்து
கழுதை அருகில் சென்றதாம்.
கழுதைக் காலில் ஏறி ஏறிக்
காது பக்கம் போனதாம்!

காதில் புகுந்து மெல்ல மெல்லக்
கடித்துக் கடித்துப் பார்த்ததாம்.
காள்காள் என்று கழுதை கத்தக்
கட்டெரும்பு மிரண்டதாம்!

காதிலிருந்து தரையை நோக்கிக்
கர்ணம் போட்டுக் குதித்ததாம்.
அந்தச் சமயம் பார்த்துக் கழுதை
அதன் மேல் காலை வைத்ததாம்!

காலில் சிக்கிக் கொண்ட எறும்பின்
கதை முடிந்து போனதாம்.


Monday, October 21, 2013

குழந்தைகள் நுகர்வுச் சந்தை

நான் குழந்தையாக இருந்த பொழுது ஓரிரு பொம்மைக‌ள் தான் வைத்திருந்தேன், தொலைக்காட்சிப் பெட்டி வீட்டில் கிடையாது, புதுத்துணிகள் வெறும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் தான், என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிடுவோம், தொலைபேசி, செல்போன், வீடியோ கேம்ஸ் கிடையாது என்றெல்லாம் உங்கள் குழந்தையிடம் சொல்லிப் பாருங்கள். அப்புறம் எப்படி உயிரோடு இருந்தீர்கள் என்கிற கேள்வி குழந்தையிடமிருந்து வரும். பொருட்கள் இல்லாமல் வாழவே முடியாது என்று பெரும்பாலான இக்கால குழந்தைகள் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் அல்ல பெற்றோர்களாகிய நாம், அரசாங்கம், கம்பெனி முதலாளிகள் மற்றும் ஊடகங்கள். 

தொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன. வெறும் பொம்மைகள், மிட்டாய்கள், பிஸ்கட்கள் போன்ற குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்கள் மட்டும் குழந்தைகளை ஈர்க்கவில்லை. பெரியர்வர்கள் பயன்படுத்தும் கார், செல்போன், தொலைக்காட்சி போன்ற பொருட்களின் விளம்பரங்களும் குழந்தைகளைக் குறிவைக்கின்றன‌. ஏனென்றால் தங்கள் செல்வாக்கால் தங்கள் பெற்றோர்களைக் குறிப்பிட்ட பொருளை வாங்கத் தூண்டுபவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். 8 வயது குழந்தை எந்த கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்று சொல்லுவதையும், 12 வயதில் எந்த கார் வாங்க வேண்டும் என்று சொல்லுவதையும் நாம் சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். எல்லா விஷயங்களும் தெரிகிறது என்று மகிழ்ச்சியும் அடைகிறோம். இதனால் ஏற்படும் தீமைகளை நாம் யோசிப்பதில்லை. 

குழந்தைகள் மனிதர்களை மதிப்பதை விட அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை மதிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். என்னிடம் இது இல்லையென்றால் என்னைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். நிலையில்லா வாழ்க்கையில் இன்று கிடைக்கும் பொருள் நாளை கிடைக்காமல் போனால் எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல் வளர்கிறார்கள். நாம் கேட்ப‌து எல்லாம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள, கிடைக்கவில்லை என்றால் தாழ்வு மானப்பானமை அடைக்கிறார்கள். 

நம்மால் ஊடகங்களையோ, அரசையோ, கம்பெனியையோ எளிதில் மாற்ற முடியாது. ஆனால் நம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் எனும் போது நாம் ஏன் நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது?

எனக்குத் தோன்றும் சில யோசனைகள் : 

 1. நான் இந்தப் பிராண்ட் சட்டை தான் போடுவேன், அந்தப் பிராண்ட் ஷூ தான் போடுவேன் என்று குழந்தைகள் முன்னிலை வாங்கியோ பேசியோ அவர்களை அந்தப் பிராண்ட் அடிமைகள் ஆக்க வேண்டாம். 

 2. புது பொருள் சந்தைக்கு வந்திருக்கிறது. நம் பொருளில் அந்த வசதிகள் இல்லை என்று நாம் உபயோகப்படுத்தும் பொருள்களை மாற்றிக் கொண்டே இருந்தால் குழந்தையும் நாளை அதை முறையில் பயணிக்கும். 

 3. ஒவ்வொரு முறையும் கடைக்குச் செல்லும் பொழுது கண்டிப்பாக வெளியில் சாப்பிடுவோம் என்பதை விட்டு, மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் ஹோட்டல் என்று குழந்தைக்கு புரிய வைத்து, எந்த ஹோட்டல் என்று அவர்களை தேர்ந்தெடுக்கச் சொல்லலாம்.

 4. அவளிடம் அத்தனை டிரெஸ் இருக்கிறது, இவனிடம் இத்தனை பொம்மை இருக்கிறது என்று பிறர் வைத்திருக்கும் பொருளால் தனக்கும் வேண்டும் என்று நினைக்கும் குழந்தையிடம் உனக்கு தேவையென்றால் நாங்கள் கண்டிப்பாக வாங்கித் தருவோம் என்று புரிய வைக்கலாம். மிகவும் தேவையானதை வாங்கித் தந்தால் குழந்தையும் நம்மை நம்பும்.

5.விளம்பரங்களை நம்மால் முற்றிலும் புறக்கணிக்க முடியாது. தொலைக்காட்சி நேரத்தை நாம் குறைத்துக் கொள்வது மூலம் அதன் தாக்கதைச் சற்று குறைக்கலாம. அனைத்து நிகழ்ச்சிகளும் யூடியுப்பில் விளம்பரங்கள் இல்லாமல் வருகின்றன‌. நெட் வசதி இருந்தால், குழந்தைகள் முன்னிலையில் விளம்பரங்களுடன் தொலைக்காட்சியில் பார்க்காமல், குழந்தைகள் இல்லாத பொழுது விளம்பரங்கள் இல்லாமல் கம்ப்யூட்டரில் பார்க்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் :)) 

6.குழந்தைகளுக்கு "தேவைகள்" "விருப்பங்கள்" பற்றிய புரிதலை அதிகரிக்கலாம். சற்று பெரிய குழந்தைகளுக்கு நம் பொருளாதார நிலையையும் புரிய வைக்க முயற்சிக்கலாம்.  கடைகளுக்குச் செல்லும் முன், தேவையான வாங்க வேண்டிய பொருட்களை ஒரு தாளில் எழுதச் சென்று அதை மட்டும் வாங்கலாம்.

7. மகிழ்ச்சி என்பது பொருளில் மட்டும் இல்லை என்பதை புரிய வைக்க வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுடன் நேரம் செலவளிக்கலாம். 

இவை எனக்குத் தோன்றியவை. உங்கள் அனுபங்களை/யோசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். அனைவருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்!!

Wednesday, October 16, 2013

காராமணி


குழந்தைகள் சேர்ந்து விளையாடுதல் என்பது கிட்டத்தட்ட இல்லாத நிலை இங்கு நிலவுகிறது. மாலையில் படிப்பில் பிஸியாக இருப்பார்களோ என்று ஐயத்துடன் சேர்ந்து விளையாட பிற குழந்தைகளை அழைப்பதற்கு சங்கடமாக இருக்கிறது. வீட்டில் சேர்ந்து விளையாடுவது மட்டும் தான் இப்பொழுது இருக்கும் ஒரே வழி. என் இரு குழந்தைகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட ஆறு வயது வித்தியாசம். அவர்களால் சேர்ந்து விளையாட முடியாமா என்று நான் யோசித்தது உண்டு. 

விதிகளோடு விளையாடப்படும் விளையாட்டுகளை இருவரும் சேர்ந்து விளையாட இப்பொழுது முடியாது. ஆனால் பொருட்களை கொடுத்து விட்டு எப்படி வேண்டுமென்றாலும் விளையாடலாம் என்றால் சேர்ந்து விளையாடுகிறார்கள். கடந்த வாரம் மீண்டும் மீண்டும் அவர்களால் விளையாடப்பட்டது  காராமணி.   

ஓட்டையுள்ள பாத்திரத்தை (வெஜிடபிள் ஸ்டீமர்) ஒரு கண்ணாடி தட்டின் மேல் கவிழ்த்து வைத்துவிட்டேன். காராமணியை ஒரு கிண்ணத்தில் கொடுத்தேன். ஒவ்வொரு காராமணியாக எடுத்து ஓட்டைக்குள் போட வேண்டும் என்று சம்முவிடம் கொடுத்தேன். உள்ளே இருக்கும் கண்ணாடி தட்டில் பட்டு ஒரு சின்ன ஒலி வந்தது. இது அவளுக்குப் பிடித்திருந்தது. மாலையில் தீஷு வந்தவுடன் இருவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர். 

தீஷு பல விளையாட்டுகளை தங்கைக்குக் கற்றுக் கொடுத்தாள். 

1. காரமணியை ஓட்டையின் அருகே வைத்துவிட்டு, ஊதி ஓட்டைக்குள் போடுதல்

2. ஒரு காரமணியை வைத்து சுண்டி(கோலி குண்டு விளையாடுவது போல்) போடுதல்

3. கையை சற்று உயர்த்தி ஒட்டைக்குள் போடுதல்

4. நின்று கொண்டு போடுதல்

5. ஒவ்வொன்றாக எடுக்காமல், மூன்று நான்கு எடுத்து அனைத்தையும் போடுதால்.

அரைமணி நேரத்திற்கு மேல் விளையாண்டார்கள். தீஷு டான்ஸ் வகுப்புக்கு நேரமானதால் விளையாட்டு தடைப்பட்டது. சம்மு தன் அக்காவிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டாள்.  

 

Sunday, October 13, 2013

தொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை


பப்புவுக்கு நாலரை வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இருந்தது. அவளோடு சேர்ந்து நானும் டோராவெல்லாம் பார்த்திருக்கிறேன். "குளோரியாவின் வீடு" பப்புவை விட எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும், ஆயாவுக்காக செய்திகளும்,சீரியல்களும்(ஒன்றிரண்டு), வீட்டுக்கு வரும் உறவினர்களுக்காக அவ்வப்போது பாடல் சேனல்களும் ஓடிக்கொண்டுதான் இருக்கும். ஒருசில துள்ளல் பாடல்களுக்கு பப்புவும் குதியாட்டம் போடுவாள். பிறகு, அவளது விளையாட்டை தொடர்ந்து விளையாடச் சென்றுவிடுவாள். ஆனால், அதெல்லாம் அந்த வயதில் பப்புவை அவ்வளவாக டிஸ்டர்ப் செய்யவில்லை.அவளது விளையாட்டின் மீது தான் கவனம் இருக்கும்.


அப்போதெல்லாம் பப்புவை கேர் டேக்கர் வைத்துதான் கவனித்துக்கொண்டேன். அவருக்கோ மதியத்தில் வரும் சீரியல்கள் பார்ப்பதில் வெகுவிருப்பம். மதியம் பப்பு பள்ளியிலிருந்து வந்ததும், சீரியலை பார்த்துக்கொண்டே உணவூட்டுவார் என்று தெரியும். ஆனாலும், சீரியல்கள் பார்ப்பதை தடை செய்யவெல்லாம் நினைத்ததில்லை. தொலைக்காட்சியை, பப்பு ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதும் காரணம்.


ஏதோ ஒரு வாரயிறுதி என்று நினைக்கிறேன். பக்கத்துவீட்டு பெண் வீட்டுக்கு வந்தார். அவரை பார்த்ததும் பப்பு "அவங்க கெட்டவங்க, ஆச்சி?" என்றாள். எனக்கோ அதிர்ச்சி.அவரது காதில் விழுந்துவிடக்கூடாதே என்றும் பதட்டம். இத்தனைக்கும், அவர் எங்களுக்கு நன்கு அறிமுகமானவர். "இல்லையே, ஏன் அப்படி சொல்றே" என்றதும், "அவங்க லிப்ஸ்டிக் போட்டிருக்காங்க.முடி வைச்சிருக்காங்க‌ டீவியில வர்ற மாதிரியே இருக்காங்க" என்றாள்.விசாரித்ததும் உண்மை புலப்பட்டது. "உதிரிப்பூக்கள்" என்றொரு மதிய நேரத்து சீரியல். அதில், குழந்தையை கடத்துவதோ அல்லது ஏதோவொன்று...அதில் வரும் வில்லி கேரக்டர் தலைமுடியை நேர்ப்படுத்தி (ஸ்ட்ரெய்ட்டன்),முகத்தில் மேக்கப்போடு வருமாம்.
பக்கத்துவீட்டுப் பெண்ணும் தலைமுடியை நேர்ப்படுத்தி விரித்து விட்டிருந்ததையும், லிப்ஸ்டிக் போட்டிருந்ததையும், அந்த வில்லி கேரக்டரையும் பப்பு தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறாள். ஒருவரை பார்த்ததும் "கெட்டவர்" என்ற எண்ணத்தை தோற்றத்தை பார்த்து சொல்ல, தொலைக்காட்சி ஒரு சிறுகுழந்தைக்கும் கூட கற்றுக்கொடுத்திருக்கிறது என்பது ஒரு அதிர்ச்சி. அதைவிட, மேக்கப்போடு அல்லது கொஞ்சம் மாடர்னாக தோற்றத்தில் இருந்தாலும் அவர்களை ஸ்டீரியோடைப் செய்வதுபோல் "அவர் நல்லவர் அல்ல" என்ற எண்ணத்தை தோற்றுவிப்பது அபாயகரமானதாக இருந்தது.


சீரியலை தொடர்ந்து பார்க்காவிட்டாலும், அது பப்புவை ஈர்த்திருக்கிறது. முக்கியமாக, குழந்தைகள் தொடர்புடைய எதுவாக இருந்தாலும் அவர்களை ஈர்க்கிறது. இதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். பப்பு, கண்ணகி கதையை அறிந்துக்கொண்டபோது, கண்ணகி மதுரையை எரித்தது அவளுக்கு அறவே பிடிக்கவேயில்லை. "என்னை மாதிரி குழந்தைங்களும் செத்து போயிருப்பாங்களா" என்பதே அவளது கவலையாக இருந்தது. சில வருடங்களுக்கு முன், ஜப்பானில் சுனாமி தாக்கியபோது, 'ஸ்கூல்ல ஆன்ட்டி, குழந்தைங்களோட இருந்தாலும் அலை அடித்துகொண்டு போய்விடுமா? குழந்தைகள் என்ன ஆவார்கள், எப்படி காப்பாற்றப்படுவார்கள் ' என்பதே அவளை வருத்தியெடுக்கும் கேள்விகளாக இருந்தன. இதில், சீரியல்களும் பிஞ்சு மனதில் தங்கள் பங்குக்கு விதை விதைப்பதை அனுமதிக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, சில சமயங்களில், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதும் வழக்கமாகி இருந்தது.


தொலைக்காட்சியை அப்புறப்படுத்தியதற்கு இவை மட்டுமே காரணமில்லை. நான் வேலையிலிருந்து வர தாமதமானால், தொலைக்காட்சி நிறுத்துவாரற்று ஓடிக் கொண்டேயிருக்கும். சுட்டி டீவிதான். "பப்புதான் நிறுத்த விடமாட்டேங்குது" என்று குற்றப்பத்திரிக்கை வாசிப்பார் ஆயா. என்னையும் நிறுத்த அனுமதிப்பதில்லை.விடுமுறை நாட்களில், உறவினர்கள் வந்துவிட்டாலோ தொலைக்காட்சியை கட்டுபடுத்தவே முடியாது. இவையெல்லாம் சேர்த்தே அந்த தைரியமான‌ முடிவை நோக்கி தள்ளின. :‍)


இப்போது கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இல்லை.


ஆரம்பத்தில், நிறைய நேரம் இருப்பது போல் இருந்தது. முக்கியமாக வீடு அமைதியாக இருந்தது. நிறைய பேச்சுகளும்,உரையாடல்களும் இருந்தன. முன்பும் இப்படிதான் என்றாலும், தொலைக்காட்சியே சுத்தமாக இல்லாமல் இருந்து பார்த்தால் நான் சொல்ல வருவதை புரிந்துக்கொள்ளலாம்.


தொலைக்காட்சியை வெறித்துக்கொண்டு அவ்வப்போது தானாகவே சிரித்துக்கொண்டிருக்காமல், சாப்பிடும் நேரத்தில் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். என்ன சாப்பிடுகிறோம் என்று ருசித்து சாப்பிட முடிந்தது. எண்ணங்களை/நிகழ்ச்சிகளை பகிர்ந்துக்கொள்ளுதல் இயல்பாக நடைபெற்றது. வார நாட்களில் கதை கேட்டுக்கொண்டும் , வாரயிறுதிகளில் சிறுவர்மணியின் தொடர்கதை/கதைகளை வாசிப்பதை கேட்டுக்கொண்டோதான் சாப்பிட்டாள். கடந்த சில மாதங்கள் வரை தொடர்ந்தது, இது. (மாயமோதிரம் முடிந்துவிட்டது!)


கைவசம் நிறைய நேரம் இருந்ததால், புத்தகங்கள் வாசித்தோம். வெளியே சுற்றினோம். மாடிக்குச் சென்று நிலவை,வானத்தை,நட்சத்திரங்களை ரசித்தோம். விரைவாக படுக்கைக்குச் சென்று விடுவதால் தூங்கும் நேரமும் பாதிக்கப்படவில்லை. முக்கியமாக குழந்தைகளுக்கு 12 வயது ஆகும்வரையாவது எட்டு மணி நேர தூக்கம் மிக முக்கியம். பப்புவை தூங்கும்போது எப்போதுமே பாதியில் எழுப்பியதேயில்லை. இதில், ஆயா ரொம்ப கண்டிப்பானவர். அவளாகவே எழுந்தால் உண்டு. அதனை இப்போதுவரை கடைபிடித்து வருகிறோம். அதனாலேயே, அதிகாலையில் சன்ரைஸ் பார்க்க செல்வதென்றால் "நீயா எழுந்தா போகலாம்" என்று சொல்லிவிடுவது. வெளியூருக்குச் சென்றாலும் இயன்றவரை இதையே கடைபிடிக்கிறோம்.


ஆனாலும், தொலைக்காட்சிதான் இல்லையேதவிர, குழந்தைகளுக்கான படங்களை பார்க்கிறோம். பொதுவாக, இணையத்தில் விமர்சனம் பார்த்துவிடுவேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை செல்வதுண்டு. கடைசியாக, நாங்கள் பார்த்தது மான்ஸ்டர் யுனிவர்சிடியும்,பாக் மில்கா படமும். அதன்பிறகு ஸ்மர்ஃப் வந்தாலும் நேரம் கிடைக்கவில்லை. அதோடு, ஹார்டு டிஸ்கில், குழந்தைகளுக்கான கார்ட்டுன் படங்கள் சேகரிப்பும் உள்ளது. பப்புவுக்கு பார்த்த படத்தையே பல தடவைகள் பார்க்க வேண்டும். சில சமயங்கள் நானும் உடன் இருக்க வேண்டும். படத்தில் அவளுக்கு பிடித்த இடங்களில் அவளோடு சிரித்து அல்லது அவளை திரும்பி பார்த்து புன்னகைத்து என்று கம்பெனி தர வேண்டும். அதோடு, கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் உண்டு

இவையெல்லாமே, ஒருமணி நேரம் அல்லது ஒன்றரை மணிநேரம் வரை தொடரும். ஆனால், தினமும் அல்ல. வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை. தொலைகாட்சியை தடுக்க முடிந்த அளவுக்கு கம்ப்யூட்டரை தடுக்க முடியவில்லை. வாரயிறுதிகளில்தான் தினம் ஒரு மணிநேரம் ஐபேட் என்ற ஏற்பாடு. ஆனாலும் அது ஒருமணிநேரத்தோடு நிற்பதில்லை. டெம்பிள்ரன்னின் ஓட்டத்தை பொறுத்து அதைத் தாண்டியும் செல்வதுண்டு. ஆனால், பலமாதங்கள் வரை ஐபேட் தொடாமல் இருந்திருக்கிறோம். எனவே ஐபேட் பப்புவின் நேரத்தை விழுங்குவதில்லை.


ஹார்ட் டிஸ்கில், குழந்தைகளுக்கான படங்கள் பார்ப்பதை நாங்களே விரும்பிதான் அனுமதித்திருக்கிறோம். தொலைகாட்சியைப் போல் அதில் கமர்சியல்களோ அல்லது தொடர்ந்து அடுத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமோ வருவதில்லை. முக்கியமாக, விளம்பரங்களின் மாயவலைக்குள் இதுவரை விழாமலிருப்பது நன்மை பயப்பதாகவே இருக்கிறது. (எவ்வளவு நாட்களுக்கென்று தெரியவில்லை!!)


நானும் பப்புவோடு படம் பார்ப்பதோடு சரி.பெரிதாக, ஆர்வமில்லாததால், சினிமாவை பார்ப்பதில்லை. எனவே, நானும் பெரிதாக மிஸ் செய்வதில்லை. தொலைகாட்சி இல்லாததால், எதையும் இழந்ததாகவும் நினைக்கவில்லை. சொல்லப்போனால், நிம்மதியாக இருக்கிறது. இப்போது, எங்கள் வீட்டைப்பார்த்து, பப்புவின் நண்பர்கள் வீடுகளிலும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களும், இங்கு வந்தால் கம்ப்யூட்டரை, தொலைக்காட்சியை தேடாமல் கூடி விளையாடுகிறார்கள்.


இப்படியெல்லாம் இருப்பதால், பப்பு ஏதோ தொலைக்காட்சியே பார்க்காத மகாத்மா என்றெல்லாம் பொருளல்ல. பப்புவுக்கு சோட்டா பீம் ரொம்ப‌ பிடிக்கும். ஊருக்குச் சென்றால் சோட்டாபீம்தான். ஒன்றிரண்டு நாட்கள்தானே என்று பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதோடு, வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு. அவளது இஷ்டத்துக்கு விட்டுவிடுவதால் 'பார்க்கவே விடுவதில்லை' என்ற எண்ணம் பப்புவுக்கு வருவதில்லை. சிலசமயம், யூடியுப்பில் சோட்டாபீமும் பார்ப்பாள். ஆனால், யூட்யூபில் வசதி என்னவென்றால், நேரத்தை விழுங்காது. அரைமணிநேரம் என்றால் அவ்வளவுதான்.


இப்போது, இதை எழுதிக்கொண்டிருக்கும்போது கூட அவள் கம்ப்யூட்டரைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஆனால், என்ன பார்க்கலாம் என்பது நம் கையில் உள்ளது. தொலைக்காட்சியில் அப்படி இல்லை. நாம்/குழந்தைகள் என்ன பார்க்க வேண்டுமென்பதை நாம் முடிவு செய்யும் வகையில் இருப்பதுதான் வசதி. டீவியில் வருவதையெல்லாம் காணலாம் என்பதையோ அல்லது நம் நேரத்தை வேறுயாரோ எடுத்துக்கொள்வதையோ அனுமதிக்க முடியவில்லைமேலும், பப்புவுக்கு எந்த சினிமா நடிகர்களையும் இதுவரை தெரியாது. அவளுக்குத் தெரிந்த ஒரே நடிகர் வடிவேலுதான். அதுவும் பெயரளவில். அவர் எப்படியிருப்பார் என்று கூட தெரியாது. கடைசியாக இருந்த ஒரு கேர் டேக்கர் 'வடிவேலு இப்படி சொன்னார், அப்படி செய்தார்' வடிவேலு ஜோக் சொல்லி உணவூட்டுவார். மற்றபடி, போஸ்டரில் கூட யாரையும் கண்டுபிடிக்க தெரியாது. ஒருமுறை, 'உனக்கு தனுஷ் பிடிக்குமா? சூர்யா பிடிக்குமா' என்று யாரோ கேட்டார்கள். பப்பு ஒரே ஙே! :‍))))


ஏதாவது ஹாபி கிளாசுக்குச் சென்றால், வெளியில் அமர்ந்திருக்கும் மற்ற அம்மாக்களோடு பேசுவதுண்டு. சிலருக்கு, இப்படி தொலைகாட்சி இல்லாமல் வளர்ப்பது உவப்பாக இருப்பதில்லை. நேஷனல் ஜ்யாகிரபி போன்ற சேனல்கள் இருந்தால் குழந்தைகள் எளிதாக கற்றுக்கொள்வார்கள், மேலும், தொலைகாட்சி பார்ப்பதால், மொழியை ஃபாலோ செய்வது எளிதாக இருக்கும் என்றும் சொல்வார்கள். எனக்குதானே தெரியும், இங்கு என்னதால் நேஷனல் ஜ்யாகிரபி இருந்தாலும் ஓடுவது என்னவோ சுட்டி டீவியாகவோ அல்லது நிக்காகவோ தான் இருக்கும் என்று!


எனவே, இப்போதுவரை இப்படி இருப்பது நன்றாகத்தான் இருக்கிறது. இதைத்தாண்டி, 'தொலைக்காட்சி வைத்துக்கொள்ளலாம், அம்மாவை நச்சரிக்கலாம்' என்று பப்புவுக்கு தெரியவில்லையா அல்லது இருப்பதே போதும் என்று புரிந்து ஏற்றுக்கொண்டாளா என்றும் தெரியவில்லை. சமீபத்தில்தான் தெரிய வந்தது, இப்போதெல்லாம் வால்மவுண்ட் ஃப்லாட் ஸ்க்ரீன் டீவிக்கள்தானாமே!! அந்த செலவும் மிச்சம் என்று எண்ணிக்கொண்டேன்.


ஆரம்பத்தில், ஆயாவுக்குத்தான் பொழுது போவது மிகவும் கஷ்டமாக இருந்தது. நாள் முழுக்க தனியாக இருப்பது கஷ்டம்தானே! ஆனால், ஆயா பப்புவுக்காக அட்ஜஸ்ட் செய்துகொண்டார். செய்தி சேனல்களுக்குப் பதில் செய்தித்தாள்கள் வாசித்தார். கதை புத்தகங்கள் வாசித்தார். பப்புவோடு லாப்டாப்பில் டாம் & ஜெர்ரி பார்த்தார். முக்கியமான நேரத்தில் புதிய தலைமுறை செய்திகளை பார்த்தார். ஆங் சான் சூ கி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவந்த போது பார்க்க வேண்டும் என்று ஆயாவுக்கு அவ்வளவு ஆசையாக இருந்தது. நான் பப்புவை சற்றே பெரியவளாக இருந்தபோது ஆயாவுடன் அமர்ந்து மண்டேலா சிறையிலிருந்து வெளிவந்ததை பார்த்தது நினைவுக்கு வந்தது. தொலைக்காட்சியை மிஸ் செய்தது இது போன்ற சமயங்களில்தான்.


ஆனால், இதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்லமுடியாது. வீட்டில் நடைமுறையில் இருப்பதை அனுபவமாக பகிர்ந்துக்கொண்டுள்ளேன். உங்களின் அனுபவங்களையும் கேட்க ஆவலாக இருக்கிறேன். பகிர்ந்துக் கொள்ளுங்களேன்! பதிவு எழுதியே கனகாலம் ஆகிவிட்ட நிலையில், எழுதவைத்த தியானாவுக்கு நன்றிகள்!!

சந்தனமுல்லைக்கு மு(பி)ன்னுரை தேவையில்லை. சித்திரக்கூடம் என்னும் தளத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக எழுதி வருகிறார். தன் மகள்  பப்புவை பல புதிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பல புதிய அனுபங்களைக் கற்றுத் தருபவர். சென்ற மாதம் கூட பழங்குடி மக்களான காணி மக்களுடன் இரண்டு நாட்கள் தங்கி அவர்கள் வாழ்க்கை முறையை அறிந்து வந்துள்ளார்கள். 

Saturday, October 12, 2013

குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள் ‍‍

நாம் வளரும் பொழுது இல்லாத பல விஷயங்களை கடக்காமல் இப்பொழுதுள்ள குழந்தைகள் வளர முடியாது. அவற்றில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நம் குழந்தைகளுக்கு எவ்வாறு அவ்விஷயங்களை கடக்கக் கற்றுக் கொடுக்கிறோம் அல்லது அவர்களை எவ்வாறு காத்து வருகிறோம் என்பதை எழுதலாம் என்று ஒரு குழு இணைந்துள்ளோம். இதுவரை நான், சித்திரக்கூடம் வரையும் சந்தனமுல்லை மற்றும் தேன் மதுரத் தமிழ் முழங்கச் செய்யும் கிரேஸ் இணைந்துள்ளோம். எங்களுடன் இணைய விரும்புவோர் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். 

குழுவின் முதல் இடுகையான அடுத்த இடுகை நாம் அனைவரும் சந்திக்கும் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், ஐபேட் என்ற மின்ன‌ணுசார் கருவிகளின் தாக்கம் பற்றியது. சந்தனமுல்லை தன் அனுபவத்தைப் பகிர்ந்து இருக்கிறார்.

தங்கள் கருத்துகளை அறியவும் ஆவலாக இருக்கிறோம். உங்கள் அனுபங்களையும் எங்களுடன் பின்னூட்டத்தின் மூலம் பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம். நன்றி!!

Wednesday, October 9, 2013

ஒரு நொடி விளையாட்டுக்கள்

என் ஃப்ரெண்டு கேட்டார்கள்,"எப்படி உன் மகள்கள் இருவரும் சமத்தா நீ சொல்லுற படி ஆக்டிவிட்டீஸ் செய்றாங்க‌?"

புகைப்படங்களைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. அதனால் தான் இந்த "Behind the scenes" இடுகை.

1. கண்ணாடி மீன்களை மீன் வடிவத்திலுள்ள ஐஸ் ட்ரேயில் ஒவ்வொன்றாக போட வேண்டும்.அடுத்த நொடி மீன்கள் வாசலில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.


2. பெயிண்ட் தொடப் பிடிக்கவில்லை என்பதால் தண்ணீர் வைத்து பெயிண்ட்டிங் செய்ய வைத்தேன்.அடுத்த நொடி தண்ணீரில் கை வைக்கும் படலம் நடைபெற்றது.


3.பாஸ்தாவை வெஜிடெபிள் ஸ்டீமர் துளைகளில் போட வேண்டும்.


அடுத்த நொடி பாஸ்தாவை கீழே கொட்டி, விளையாட்டுகொலாஜ் செய்யலாம் என்று பேப்பர் ஒட்டி வைத்துவிட்டு, கொலாஜ் பொருட்கள் எடுத்து வருவதற்குள், பேப்பர் கிழிக்கப்பட்டு விட்டது.
காபி பவுடர் பெயிண்டிங். காமெராவை எடுத்து வருவதற்குள் ஆள் எஸ்கேப்


இன்னும் பல படங்கள் இருக்கின்றன. இந்த ஸாம்பிள்ஸ் போதும் என்று நினைக்கிறேன். :). எங்களைப் பொருத்தவரை 1 நிமிடத்திற்கு மேல் செய்யப்படும் ஆக்டிவிட்டீஸ் "வெற்றி" பெற்றவை. 


Monday, October 7, 2013

பாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி

என் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட்டுக்கள் இருப்பினும் நாங்கள் அடிக்கடி விளையாடுவது ‍பசுவும் பாண்டியும். 

சிறு வயதில் விளையாடிய‌ பல்லாங்குழியை வீடு மாறும் பொழுது என் அம்மா யாரிடமோ கொடுத்துவிட்டார்கள். அது மீன் வடிவத்தில் மிக அழகாக இருக்கும். தீஷுவிற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று இப்பொழுது வாங்கினால், நல்ல மரத்தில் கிடைக்கவில்லை. மேலும் மீன் வடிவத்திலும் இல்லை. :((. கிடைத்தை வாங்கிவந்தேன். வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று தீஷுவும் நானும் விளையாண்டோம்.  

பல்லாங்குழி விதிமுறைகளில் ஒவ்வொரு சமுதாய மக்களிடமும் சிறு வேறுபாடுகள் உண்டு. நாங்கள் விளையாடும் முறை இங்கே பகிர்ந்து 
இருக்கிறேன்.

பசுவும் பாண்டியும் 

1. இரண்டு பேர் விளையாடுவது. ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள். ஒவ்வொரு குழிக்கும் ஐந்து முத்துக்கள்.  

2. நம் குழியிலிருந்து முத்துக்களை எடுத்து, இடமிருந்து வலமாக ஒவ்வொரு குழிக்கும் ஒன்று ஒன்றாக போட்டுக் கொண்டே வரவேண்டும். மற்றவர் குழிகளுக்கும் போட வேண்டும். 

3. நம் கையிலிருக்கும் முத்துக்கள் முடிந்தவுடன், அடுத்த குழியிலிருந்து முத்துக்களை எடுத்து அதே முறையில் தொடர வேண்டும்.

4. நம் கையிலிருக்கும் முத்துக்கள் தீர்ந்தவுடன், அடுத்த குழியில் முத்துக்கள் இல்லையென்றால், காலியாக இருக்கும் அந்தக் குழியைத் தடவி, அடுத்த குழியிலிருக்கும் முத்துக்களை (புதையல்) எடுத்து வைத்துக் கொள்ள‌ வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட குழிகள் காலியாக இருந்தால் புதையல் கிடையாது.

5. காலியாகி நிரம்பத் தொடங்கும் நம் குழிகளில், நான்கு முத்துக்கள் சேர்ந்தவுடன், பசு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 

6. ஒருவருடைய குழிகளில் விளையாட முத்துக்கள் இல்லாத பொழுது அந்தச் சுற்று முடிந்து விடும்.

7. மீண்டும் குழிகளில் ஐந்து ஐந்தாக நிரப்ப வேண்டும். ஏதாவது குழியை(களை) நிரப்ப முடியாவிட்டால், குழியை(களை) மூடி விட வேண்டும். விளையாடும் பொழுது இருவரும் அந்தக் குழியில்(களில்) முத்துக்கள் போடக் கூடாது.

8. எப்பொழுது ஒருவருக்கு ஒரு குழியைக் கூட நிரப்ப முடியவில்லையோ, அவர் தோற்றவராவர். விளையாட்டு முடிந்து விடும்.

நம் அனைத்துப் பாரம்பரிய விளையாட்டுக்கள் போல் பல்லாங்குழியிலும் பல நேர் மற்றும் மறைமுக நன்மைகள் உண்டு. நான் நேராக என் குழந்தையிடம் கண்டு கொண்டது ‍ அவள் மகிழ்ச்சி. 

நீங்கள் எவ்வாறு விளையாடுவீர்கள் என்பதையும் சொல்லிச் செல்லுங்களேன்!!

Thursday, October 3, 2013

எங்கள் நேரம் திரும்ப கிடைத்ததுசிறு குழந்தைகளுடன் விளையாடுவது எளிது. அவர்களுக்கு எல்லா பொருளும் புதிதாக இருப்பதால், ஆர்வமாக விளையாடுவார்கள். சம்மு செய்வது பார்த்து தீஷுவிற்கு தானும் செய்ய வேண்டும் என்று ஆசை. என் கூட முந்தி இப்படித்தான் செய்தீங்க‌, இப்பெல்லாம் செய்றது இல்லை என்றாள். அவளுக்கு ஆர்வம் இருக்கும் படி என்ன செய்லாம் என்று யோசித்த பொழுது, ஏன் சம்முவுடன் செய்வதையே சற்று கடினமாக மாற்றி தீஷுவுடன் முயற்சிக்கக் கூடாது என்று தோன்றியது.

சம்முவின் விளையாட்டுப் பொருளையே எடுத்துக் கொண்டேன். துளைகள் உள்ள அட்டையில் கலர் குச்சிகளை மாட்ட வேண்டும். மேலும் சில பஞ்சுகளை கொடுத்தேன்.   

1. முதலில் பஞ்சுகளை கையில் எடுத்து குச்சிகள் மீது வைத்தாள். மிகவும் எளிதானது.

2. பின்பு ஒரு சிறு விளையாட்டு இடுக்கிக் கொண்டு பஞ்சை எடுத்து வைத்தாள்.3. ஸ்பூனில் பஞ்சை எடுத்து குச்சியின் வைக்க வேண்டும். நிறைய கவனம் தேவை.

4. கண்ணை மூடிக்கொண்டு இடுக்கியால் பஞ்சை எடுத்து குச்சியில் வைக்க வேண்டும். கடினம்.

5. கண்ணை மூடிக் கொண்டு ஸ்பூனால் பஞ்சை எடுத்து குச்சியில் வைக்க வேண்டும். மிகவும் கடினம்.  

தீஷு ஒரு மணி நேரத்திற்கு மேலாக விளையாண்டு கொண்டிருந்தாள். நாங்கள் மிகவும் மகிழ்ந்து அனுபவிக்கும் எங்கள் இருவருக்குமான விளையாட்டு நேரத்தை மீண்டும் கண்டுபிடித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி.  
   


Tuesday, October 1, 2013

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதவை

ஃபேஸ் புக்கில் படித்தது.

1. கணவன்-மனைவி சண்டை குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில்,பிறரை பற்றி தேவையில்லாமல்
விமர்சிக்காதீர்கள். 
உதாரணமாக,"உங்கள் பிரெண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்'என்று சொல்ல நேரிடலாம்.

3.தீயசொற்களைப் பேசுவதை தவிருங்கள்.அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும்போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன்,கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே,குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே'என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக
நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப்பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது.
"உங்க டீச்சருக்கு வேறவேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால்,குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து,அவர்கள் படிப்பை பாதிக்கவழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப்போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால்,உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள்.இல்லாவிட்டால், நாளடைவில் 
ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் 
பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தி ல்குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும்."நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்;நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்'என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன்வேலை கூட கிடைக்காது. இந்த மார்க்
வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்'என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடையசெய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது,புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

நன்றி : https://www.facebook.com/rameshsindhupriya

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost