Thursday, May 30, 2013

உங்க‌ளுக்குத் தெரிகிற‌தா?

வரைந்த‌ கையை 3டியில் மாற்றிய‌து தீஷுவிற்கு மிக‌வும் பிடித்திருந்த‌து. மீண்டும் மீண்டும் அதைப் ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தாள். அதே மாதிரி வேறு ஏதாவ‌து செய்ய‌லாம் என்று இணைய‌த்தில் தேடிய‌ பொழுது இந்தத் த‌ள‌ம் கிடைத்த‌து. அதிலிருந்து டெம்பிளேட் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டோம். அந்த‌த் த‌ள‌த்தில் கொடுத்திருக்கும் செய்முறையை அப்ப‌டியே பின்ப‌ற்றினோம். அவ‌ர்க‌ளுக்கு வ‌ந்திருக்கும் எபெஃக்ட் எங்க‌ளுக்கு வ‌ர‌வில்லை. அந்த‌ உருண்டைக‌ள் 3டியாக‌த் தெரிய‌வில்லை என்ற‌தும் தீஷு சென்னாள், "ஒரு க‌ண்ணை மூடிட்டுப் பாருங்க‌ தெரியும்". எப்ப‌டி பார்த்தாலும் என‌க்குத் தெரிய‌வில்லை. உங்க‌ளுக்கு 3டி எபெஃக்ட் தெரிகிற‌தா?

தீஷுவிற்கு க‌ல‌ர் செய்ய‌த் தொட‌ங்கிய‌ சில நிமிட‌ங்க‌ளில் ஆர்வ‌ம் போய் விட்ட‌து. நானும் சேர்ந்து செய்தேன். க‌றும்பு நிற‌த்தில் ஆர‌ம்பித்து, அது காலியாக‌ ஊதாவில் தொட‌ர்ந்தோம். அதே த‌ள‌த்தில் க்யூப் (Cube) 3டி செய்ய‌ வ‌ழிமுறை உள்ள‌து. தீஷுவிற்கு இது க‌டின‌ம் என்று தோன்றிய‌தால் நாங்க‌ள் செய்ய‌வில்லை. விரும்ப‌முள்ள‌வ‌ர்க‌ள் முய‌ன்று பார்த்துச் சொல்லுங்க‌ளேன்!!


Wednesday, May 29, 2013

சுயத்த‌ம்பட்ட‌மன்றி வேறு ஏதும் இல்லை..

இது ஒரு வெறும் சுயத்த‌ம்ப‌ட்ட‌ப் ப‌திவு. எல்லாமே அப்ப‌டித்தான் என்று சொல்லி விடமாட்டீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்.

யானை ஜெரால்டும் சிறிய‌ ப‌ன்றி பிஃக்கியும் ந‌ண்ப‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் அடிக்கும் கொட்ட‌ங்க‌ளை An elephant and piggie Book என்று Mo Willems அவ‌ர்க‌ள் ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ள் எழுதியுள்ளார். இந்த‌ முறை I Broke My Trunk என்ற‌ புத்த‌கத்தை லைப்ரேரியிலிருந்து எடுத்து வ‌ந்திருந்தோம். தீஷு வாசிக்கும் பொழுது ச‌த்த‌மாக‌ ஏற்ற‌ இற‌க்க‌த்தோடு ப‌டித்துக் கொண்டிருந்தாள். அவள் வாசித்த‌தும் க‌தையும் எனக்குப் பிடித்திருந்த‌தால், மீண்டும் ஒரு முறை வாசிக்க‌ச் செய்து ப‌டம் எடுத்தேன். உங்க‌ளுக்கும் பிடித்திருக்கிற‌தா என்று பார்த்து விட்டு சொல்லுங்க‌ள்!!Tuesday, May 28, 2013

Solar Oven

Solar oven  ப‌ற்றி இங்கு ப‌டித்த‌வுட‌ன் செய்ய‌ வேண்டும் என்ற‌ ஆவ‌ல் தீஷுவிற்கு இருந்த‌தோ என்ன‌வோ என‌க்கு இருந்த‌து. இர‌ண்டு வார‌யிறுதியில் வெவ்வேறு பொருட்க‌ள் வைத்து முய‌ற்சித்தோம்.


தேவையான‌ப் பொருட்க‌ள் :

1. பீட்ஸா பெட்டி அல்ல‌து ஷூ பெட்டி அல்ல‌து மூடியுட‌ன் கூடிய‌ அட்டைப் பெட்டி

2. அலுமினிய‌ம் ஃபாயில்

3. பாலீதின் பேப்ப‌ர்

4. கறுப்பு பேப்ப‌ர் (இருந்தால் உப‌யோக‌ப்ப‌டுத்த‌லாம்)

செய்முறை:

1. பீட்ஸா அட்டையைத் திற‌ந்து, உள்ளே முத‌லில் க‌றுப்பு பேப்ப‌ர் வைத்து ஒட்டி விட்டோம்.2. க‌றுப்பு பேப்ப‌ரின் மேல் அலுமினிய‌ம் ஃபாயில் வைத்துவிட்டோம்.3. அட்டையின் மூடியில் 3 இன்ச் ஓர‌ங்க‌ளில் விட்டுவிட்டு மூன்று ப‌க்க‌ங்க‌ளில் வெட்டிவிட்டோம். மூடி எந்த ப‌குதியில் அடிப்ப‌குதியில் இணைந்திருக்கிற‌தோ, அந்த‌ப் பகுதியை வெட்ட‌ வேண்டாம். இப்பொழுது மூடியில் இன்னொரு மூடி இருப்ப‌து போல் இருக்கும்.4. அந்த‌ இன்னொரு மூடியை அலுமினிய‌ம் ஃபாயில் வைத்து க‌வ‌ர் செய்து விட்டோம்.5. அந்த‌ சிறிய‌ மூடியைத் திற‌ந்து வைத்து, வெட்டிய‌ ப‌குதியை பாலீதின் க‌வ‌ரால் மூடி வைத்து விட்டோம்.


6. சோலார் அவ‌ண் ரெடி. வெயிலில் வைக்கும் பொழுது அந்த‌ச் சிறிய‌ மூடியில் (நாம் வெட்டி ஃபாயில் ஒட்டிய‌து) சூரிய‌ ஒளி ப‌டும் ப‌டி வைக்க‌ வேண்டும். சூரிய ஒளி அத‌ன் மேல் ப‌ட்டு reflect ஆகி அவ‌ண்ணுள் வைத்திருக்கும் பொருள் மேல் ப‌ட‌ வேண்டும்.

முத‌ல் வார‌த்தில் இரு கிண்ண‌ங்க‌ளில், ஒரே அள‌வு, ஒரே வெப்ப‌ அள‌வில் த‌ண்ணீர் எடுத்துக் கொண்டோம். ஒன்றை அவ‌ணுள் வைத்து விட்டோம். ம‌ற்றொன்றை வெளியில் வைத்து விட்டோம்.எங்க‌ளிட‌ம் ந‌ம் உட‌ம்பு சூட்டைக் க‌ண்டறியும் தெர்மாமீட்ட‌ர் தான் இருந்த‌து. அதில் ஒர் அள‌வுக்கு மேல் வெப்ப‌த்தை அள‌க்க‌ முடிய‌வில்லை. ஆனால் தொட்டுப்பார்த்தாலே வித்தியாச‌ம் உண‌ர‌முடிந்த‌து.

தீஷு எழுதி வைத்த‌ ரீடிங்க்ஸ்..

Start time 12:36 PM

Little Hotter 1:13 PM  (Outside 34.9, Inside High)

Hot 3:30 PM (Outside 36.0, Inside High)

Burning 3:53 PM

Burning என்று அவ‌ள் எழுதியிருப்ப‌து கிண்ண‌த்தின் சூடு. தண்ணீர் அல்ல‌..:‍))

சென்ற‌ வார‌ம் ஃபிர‌ட் மேல் சீஸ் தூவி வைத்தோம். கிட்ட‌த்த‌ட்ட‌ 50 நிமிட‌ங்க‌ள் வெளியே சென்று விட்டு வந்தோம். சீஸ் உருகி இருந்த‌து.

மொத்த‌த்தில் இது ஒரு வெற்றிக‌ர‌மான‌ சோத‌னை :‍))

Thursday, May 23, 2013

அமெரிக்க‌ப் ப‌ள்ளியில் எனக்குப் பிடிக்காத‌ விஷ‌ய‌ங்க‌ள்..

இன்னும் மூன்று வார‌ங்க‌ளில் தீஷு ப‌ள்ளியில் கோடை விடுமுறை ஆர‌ம்ப‌ம். இந்த‌ இரண்டு வ‌ருட‌த்தில், அவ‌ள் ப‌ள்ளியில் என‌க்குப் பிடிக்காத‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ள்..

1. ப‌ள்ளியில் நட‌க்கும் வ‌ருடாந்திர புத்த‌க‌க் க‌ண்காட்சி ந‌ட‌க்கும் முன் அனைத்துக் குழ‌ந்தைக‌ளும் ஒரு க‌லரிங் பேப்ப‌ர் கொடுப்பார்க‌ள். விருப்ப‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் க‌ல‌ர் செய்து திரும்ப‌க் கொடுக்க‌ வேண்டும். திருப்பிக் கொடுத்த‌ அனைவ‌ரின் பெய‌ரையும் எழுதிப் போட்டு,  இர‌ண்டு பெய‌ர்க‌ள் எடுத்து, அவ‌ர்க‌ளுக்குப் புத்த‌க‌க்க‌ண்காட்சியில் வாங்குவ‌த‌ற்கு ஐந்து டால‌ர்க‌ள் கொடுப்பார்க‌ள். எல்லா குழ‌ந்தைக‌ளும் ஒரு வேலை செய்திருக்க‌ இர‌ண்டு பேரை ம‌ட்டும் அதிர்ஷ்ட‌வச‌மாக‌ தேர்ந்து எடுப்ப‌து ம‌ற்ற‌ குழ‌ந்தைக்கு ஊக்க‌ம‌ளிப்ப‌தாக‌ இல்லை. இந்த‌ முறை தீஷுவின் நெருங்கிய‌த் தோழிக்குக் கிடைக்க‌, என் நிலைமையை யோசித்துப் பாருங்க‌ள்.   ‌


2. வீட்டுப்பாட‌ம் வார‌ம் ஒரு முறை தான். திங்க‌ள் கொடுக்கும் வீட்டுப்பாட‌த்தை வெள்ளி அன்று திருப்பிக் கொடுத்தால் போதும். வீட்டுப் பாடங்க‌ளும் மிகவும் குறைவாக இருப்ப‌தால், தினமும் செய்யும் அவ‌சிய‌ம் இருப்ப‌தில்லை. சிறுது என்றாலும் தின‌மும் கொடுத்தால் தின‌மும் செய்யும் ப‌ழ‌க்க‌ம் ஏற்ப‌டும்.


3. வாசித்துப் ப‌ழ‌குவ‌த‌ற்கு ஒரு இணையத்த‌ள‌ம், க‌ணக்குக்கு ஒன்று என்று Userid/Password ப‌ள்ளியில் கொடுத்துள்ள‌ன‌ர். நான் வெறும் ஹோம் வொர்க்குத் தான் க‌ம்ப்யூட்ட‌ர் பார்க்கிறேன்.. ம‌த்த‌ எதுவும் செய்ய விட‌ மாட்டேங்கிற‌ என்று அவ‌ள் த‌னியாக‌ சில‌ நேர‌ங்க‌ள் பார்ப்பாள். அது போக டீவி தின‌மும் அரை ம‌ணி நேர‌ம்.. வ‌குப்பிலும் க‌ம்ப்யூட்டர். ஸ்கீரின் நேர‌த்தைக் குறைக்க‌ வேண்டும் என்று எண்ணும் எனக்கு இதில் வ‌ருத்தம். இந்த‌ வ‌ருடத்திலிருந்து IPad வேறு வ‌குப்ப‌றைக்கு வ‌ருகிற‌து. வாசித்துப் ப‌ழ‌குவ‌த‌ற்கு ம‌ற்றும் க‌ணித‌ வீட்டுப் பாட‌த்திற்கு புத்த‌க‌ம் ப‌ய‌ன்படுத்தினால் அரை ம‌ணி நேர‌ ஸ்கீரின் நேர‌ம் குறையும்.

4.  ஒவ்வொரு வெள்ளியும் ஒரு க‌ட்டுக் காகித‌ம் வீட்டிற்கு வ‌ரும். அதில் பாதிக்குப் பாதி எக்ஸ்ட்ரா வ‌குப்புக‌ள் ப‌ற்றிய‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள். அப்ப‌டியே தூக்கிப் போடுவோம். ப‌ள்ளியிலிருந்து வார‌ம் ஒரு முறை நிக‌ழ்வுக‌ள் பற்றிய‌ ஒரு இ‍மெயில் வ‌ரும். அதில் ஒரு லிங்க் கொடுத்தால் தேவைப்ப‌டுப‌வ‌ர்க‌ள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள‌லாம்.


5. ஹாலோவின் பார்ட்டி, வால‌ண்ஸ்டே பார்ட்டி, கிறிஸ்தும‌ல் பார்ட்டி  என்று எந்த‌ப் பார்ட்டி ந‌ட‌ந்தாலும் வீட்டிற்கு சிறு சிறு பொருட்க‌ள் ஒரு சிறு பையில் வ‌ரும். அதில் க‌ண்டிப்பாக பென்சில், அழிப்பான், மிட்டாய் போன்ற‌ன இருக்கும். உண்மையாக‌வே வீட்டில் இப்பொழுது ஒரு ஐம்ப‌து பென்சில்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஒன்று கூட‌ நாங்க‌ள் வாங்கிய‌து அல்ல‌.


ம‌ற்ற‌ப் பள்ளிக‌ளில் வேறு மாதிரி இருக்கலாம். தீஷுவின் ஆசிரியையிட‌மும் ஒரு முறை சொல்லியிருக்கிறோம். நிறைய‌ பேர் சொல்கிறார்க‌ள், வ‌ரும் ஆண்டில் சில‌வ‌ற்றில் மாற்ற‌ம் வ‌ரும் என்றார்.  பார்க்க‌லாம்.


Tuesday, May 21, 2013

ப‌ள‌ப‌ள..‌

ஒரு நாள் மாலை நேர‌த்தில் தீஷு ஏதாவ‌து ப‌ண்ண‌லாம், போர் அடிக்கிற‌து என்றாள். தேவையான‌ப் பொருட்க‌ள் எதுவும் நான் த‌யார் நிலை வைத்திருக்காத‌தால் எளிதானப் பொருட்க‌ள் தேவைப்ப‌டும் Aluminium foil ஆர்ட் வெர்க் செய்தோம்.
தேவையான‌ப் பொருட்க‌ள்:

1. க‌ல‌ர் பேப்ப‌ர்

2.  Aluminium foil

செய‌ல்முறை

1. Aluminium foil -யில் (ச‌ப்பாத்தி எடுத்துப் போக‌ உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌து) பென்சிலால் வ‌ரைய‌ வேண்டும்.

2. க‌த்திரி வைத்து வ‌ரைந்த‌ கோடுக‌ளில் வெட்ட‌ வேண்டும். Foil எளிதில் கிழிந்து விடும் என்ப‌தால் க‌வ‌ன‌மாக‌ வெட்ட‌ வேண்டும்.

3. பேப்ப‌ரில் ஒட்ட‌ வேண்டும்.

வெறும் வெட்டி ஒட்டுத‌ல் தான்.  Foil தான் கூடுத‌ல் க‌வ‌ர்ச்சி. பார்க்க‌ மிக‌வும் அழ‌காக‌ இருக்கிற‌து.

தீஷுவிற்கு மிக‌வும் பிடித்திருந்த‌து.‌

Monday, May 20, 2013

க‌ண் க‌ட்டி வித்தை..

நியூ ஜெர்ஸியில் இருந்த‌ பொழுது லைப்ரேரியில் குழ‌ந்தைக‌ளுக்குக் கதை சொல்லும் நிக‌ழ்ச்சி ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. ச‌ற்று பெரிய‌ குழ‌ந்தைக‌ளுக்கான‌தால் தீஷுவால் அப்பொழுது நிக‌ழ்ச்சியில் க‌ல‌ந்து கொள்ள‌ முடிய‌வில்லை. நான் புத்த‌க‌ம் எடுத்துக் கொண்டிருந்தேன். க‌தை ப‌டித்து முடித்த‌வுட‌ன் குழ‌ந்தைக‌ள் வ‌ரைய‌த் தொட‌ங்கின‌ர். அப்பொழுது அவ‌ர்க‌ள் கொடுத்த‌ செய‌ல்முறை விள‌க்க‌த்தைக் கேட்டேன். இப்பொழுது அதை வைத்து நாங்க‌ள் செய்தோம். கை 3D மாதிரி இருக்கும்.

தேவையான‌ப் பொருட்க‌ள் :

1. வெள்ளைப் பேப்ப‌ர்

2. க‌ல‌ர் பேனாக்க‌ள்

செய்முறை:

1. கைக‌ளை விரித்து பேப்ப‌ரில் வைத்து பென்சினால் வ‌ரைய‌ வேண்டும்.

2.க‌ல‌ர் பேனாவால் நேர் கோடுக‌ள் வ‌ரைய‌ வேண்டும்.

3. கையின் உள்ளே வ‌ரையும் பொழுது நேர் கோட்டை ச‌ற்றே மேல் வ‌ளைத்து க‌விழ்ந்த‌ "U" போல் வ‌ரைய‌ வேண்டும்.

4. விர‌ல்க‌ளின் உள்ளும் வ‌ளைந்த‌ கோடுக‌ள் வ‌ரைய‌ வேண்டும்.

5. முழு பேப்ப‌ரையும் கோடுக‌ளால் நிர‌ப்ப‌ வேண்டும்.எளிதான‌ செய‌ல்முறை. சிறுவ‌ர்க‌ளுக்கும் ஏற்ற‌து.

Thursday, May 16, 2013

சின்ன‌ச் செடி..பெத்த‌ ம‌ர‌ம்..

சென்ற‌ வ‌ருட‌ அன்னைய‌ர் தின‌த்திற்கு தீஷு ப‌ள்ளியிலிருந்து ஒரு சின்ன‌ச்  செடி கொண்டு வ‌ந்தாள். அது வ‌ள‌ர்ந்து சூரிய‌காந்தி பூக்க‌ள் வ‌ந்த‌ன. பூக்க‌ள் காய்ந்த‌ப்பின் விதைக‌ளை எடுத்தோம். ஒரு பூவில் 65 விதைக‌ள் இருந்த‌து ஆச்ச‌ரிய‌மாய் இருந்த‌து. தீஷு ப‌ள்ளிக்கு விதைக‌ளை எடுத்துச் சென்று வ‌குப்பிலுள்ள‌ குழ‌ந்தைக‌ளுக்குக் கொடுத்து வ‌ந்தாள்.
இப்பொழுது அந்த‌ச் செடியிருந்த‌ தொட்டியில் ஒரு செடித் தானாக‌ வ‌ள‌ர்கிற‌து. சூரிய‌காந்தி செடி தான். தீஷுவிட‌ம் என்ன‌ செடி என்று கேட்ட‌வுட‌ன், Sunflower plant என்று சொல்லிவிட்டு,

What if, இது ஒரு பெரிய‌ ம‌ர‌மாச்சுனா? என்றாள்‌

என்னாகும்? என்றேன்

நான் தூங்கி எந்திரிக்கிற‌ப்ப‌, என் பெட் மேலே நூல் நூலா இருக்கும்.. என்ன‌டானு பார்த்தா அது அந்த‌ ம‌ர‌த்தின் வேர்.. வேரே ம‌ண்ணுக்கு மேல‌ வ‌ர்ற மாதிரி அது ஒரு பெரிய‌ ம‌ர‌ம். நான் Brush ப‌ண்ண‌ பாத்ரூம் போனா, அங்க‌ டாப்ப‌யே வேர் மூடிறிச்சு..கிட்ச‌ன்ல‌ வேர்.. வீடே தெரிய‌ல‌..

அப்புற‌ம்.. பெரிய‌ ம‌ர‌மாயிருந்தா Birds எல்லாம் இருக்குமே?

ஆம்.. நிறைய இருந்திச்சு.. நான் அவ‌ங்க‌ கிட்ட‌ ஹெல்ப் கேட்டேன்..அந்த‌ வேர் எல்லாம் எடுக்க‌ ஆர‌ம்பித்தோம்..ஆனா வேரெல்லாம் எடுக்க‌ முடிய‌ல‌.. ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌வ‌ங்க‌ கிட்ட‌ ஐடியா கேட்டேன்.. எல்லாரும் அவ‌ங்க‌ ஐடியாவை ஒரு பேப்ப‌ரில் எழுதித் த‌ந்தாங்க‌. அதுல பெஸ்ட் ஐடியா குழி தோண்டி வேர‌ எடுக்கிற‌து. நாங்க‌ எல்லாரும் சேர்ந்து குழியைத் தோண்டி, வேர்க‌ளை எடுத்து, வீட Save‌ பண்ணிட்டோம்.

அந்த‌ ம‌ர‌த்த‌ என்ன‌ பண்ணினீங்க‌?

 அத‌ எடுத்திட்டுப் போய் பார்க்ல‌ திரும்ப‌ Plant ப‌ண்ணிட்டோம்..கிட்ஸ் ஏறி விளையாட‌ வ‌சதியா இருக்குமே என்றாள்..

அவ‌ளேப் பார்த்துக் கொண்டே இருந்தேன். இதே வ‌ய‌சிலேயே இப்ப‌டியே இருந்துவிடேன் க‌ண்ண‌ம்மா அல்ல‌து இதே கற்ப‌னைத் திற‌னோடு வ‌ள‌ரு என்று நினைத்துக் கொண்டே, ந‌ல்ல‌ ஸ்டோரிடா..குட்.. என்றேன்.


ப‌டங்க‌ள் : எங்க‌ள் வீட்டில் வ‌ள‌ர்ந்த‌ பூக்க‌ள். தீஷு எடுத்த‌து.


Wednesday, May 15, 2013

ஒண்ணுக்குள்ள ஒண்ணு

ஒரு நாள் அப்பாவின் ஷுவிற்குள் தீஷுவின் ஷு இருந்த‌து. ம‌ற்றொரு நாள் தீஷுவின் தோழியின் ஷுவிற்குள் ஒரு விளையாட்டுப் பொருள் இருந்த‌து. ஒண்ணுக்குள் ஒண்ணு போட்டுப் ப‌ழ‌குவ‌து ஒரு Stage. ச‌ம்மு த‌ற்பொழுது அந்த‌ நிலையில் இருக்கிறாள் என்று புரிந்த‌து.

அத‌ற்கு த‌குந்தாற் போல் விளையாண்டோம். அவ‌ளின் விளையாட்டுப் பொருளைக் கூடிய‌ ம‌ட்டும் உப‌யோக‌ப்ப‌டுத்தாம‌ல், புதுப்புது பொருட்க‌ளை அவ‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌து என் ஆசை.

ஒரு ட‌ப்பாவில் பேனாக்க‌ளைப் போடுத‌ல்

ஒரு டிஸ்யூ ரோலில் பேனாக்க‌ளைப் போடுத‌ல். ரோல் சின்ன‌தாக இருந்த‌தால் பேனா முழுவ‌தும் போக‌வில்லை. அவ‌ளுக்குத் திருப்தியில்லை. அவ‌ள் கையில் எடுத்து முயற்சித்துப் பார்த்தாள்.ப‌ந்தை ட‌ப்பாவில் போடுத‌ல். பேனா மெலிதாக‌ இருந்த‌தால், அடுத்து நான் தேர்ந்தெடுத்த‌து ச‌ற்று அக‌லமான‌ ப‌ந்து.அந்த‌ப் ப‌ந்தின் ஓட்டையில் பேனாவைப் போடுத‌ல். ப‌ந்தை அவ‌ளைப் பிடித்துக் கொண்டாள்.

ப‌ந்தின் ஓட்டையில் ப‌ஞ்சைப் போடுத‌ல். முத‌லில் சிறிய ப‌ஞ்சுக‌ள் கொடுத்தேன். அத‌னைப் போட்டாள். அடுத்து ச‌ற்று பெரிய‌ ப‌ஞ்சைக் கொடுத்தேன். அழுத்திப் போடும் பொழுது விர‌ல்க‌ளுக்கு வேலை கொடுக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவ‌ளின் ஆர்வ‌ம் புதுப் பொருளான‌ ப‌ஞ்சின் மேல் சென்ற‌து. அத‌னை பிய்த்து பிய்த்து விர‌ல்க‌ளுக்கு வேலை கொடுத்தாள். கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌த்து நிமிட‌ங்க‌ள் பிய்க்கும் வேலையை ம‌ட்டும் செய்தாள்.

இதுப் போல் வெவ்வேறு வ‌டிவ‌ங்க‌ளில் பொருட்க‌ள் கொடுத்து உள்ளே போடுவ‌து செய்கிறோம். அவ‌ளுக்கு ஆர்வ‌ம் இருக்கும் வ‌ரை தொட‌ருவேன்.Tuesday, May 14, 2013

முத‌ல் ஓவிய‌ முய‌ற்சி

தீஷுவின் பிற‌ந்த‌ நாள் அன்று ஓவிய‌ம் செய்யும் பொழுது, ச‌ம்முவையும் இணைக்க‌லாம் என்று நினைத்திருந்தேன். ச‌ம்மு அனைத்தையும் வாயில் வைப்ப‌தால் அவ‌ளுக்காக‌ வீட்டில் பெயிண்ட் செய்ய‌ வேண்டும். அன்று என‌க்கு நேர‌மில்லை. அத‌னால் நேற்று வீட்டில் செய்த‌ பெயிண்ட் வைத்து ஓவிய‌ம் செய்தோம்.

 ச‌ம்முவின் வ‌ய‌திற்கு ஏற்ற‌து விர‌ல் ஓவிய‌ம். விர‌ல்க‌ளால் வ‌ரைவ‌து. தொடுத‌ல் உண‌ர்ச்சிக்கு ஏற்ற‌து. 


 பெயிண்ட் செய்ய‌ தேவையான‌ பொருட்கள் :

1. Corn flour - அரை க‌ப்

 2. குளிர்ந்த‌ நீர் - கால் க‌ப்

 3. கொதிக்கும் நீர் - ஒரு க‌ப்

 4. Food colouring

செய்யும் முறை :

1. குளிர்ந்த‌ நீரில் Corn flour - ஐ முத‌லில் க‌ரைத்துக் கொள்ள‌ வேண்டும்.

2. பின்பு சிறிது சிறிதாக‌ கொதிக்கும் நீரை ஊற்றிக் க‌ல‌க்கிக் கொண்டே இருக்க‌ வேண்டும்.

3. தேவையான‌ ‍அளவிற்கு கட்டியான‌வுட‌ன் கொதிக்கும் நீர் க‌ல‌ப்ப‌தை நிறுத்தி விட‌ வேண்டும். நான் இங்கு தவ‌று செய்துவிட்டேன். மிக‌வும் க‌ட்டியாகி விட்ட‌து.

4. க‌ல‌ரிங் சேர்க்க‌ வேண்டும்.

Love என்று டேப்பால் நானும் தீஷுவும் எழுதி வைத்திருந்தோம். சிறிது பெயிண்ட் எடுத்து கான்வ‌ஸில் போட்டுக் கொடுத்தோம். தொட்ட‌வுட‌ன் ச‌ம்முவிற்கு பிடிக்க‌வில்லை. எழுந்து சென்று விட்டாள். மீண்டும் சிறிது நேர‌த்திற்கு பின் திரும்ப‌ வ‌ந்து தொட்டுப் பார்த்தாள். பிடிக்க‌வில்லை. முத‌ல் ஓவிய‌ முய‌ற்சி இனிதே இவ்வாறு முடிந்த‌து. தீஷு ‌ பெயிண்ட்டை வைத்து விளையாண்டு கொண்டிருந்தாள். விர‌ல்க‌ளால் ஏதோ ஒன்று வ‌ரைந்திருக்கிறாள் ப‌ட்டாம்பூச்சி என்று நினைக்கிறேன்.ச‌ம்மு சாப்பிட்டு முடித்த‌வுட‌ன், மீத‌மிருக்கும் உண‌வை, அது திர‌வ‌ நிலையிலிருந்தால், விளையாட‌ கொடுப்ப‌து என் வ‌ழ‌க்க‌ம். கீழேயும் மேலேயும் கொட்டி தேய்த்து வ‌ரைந்து கொண்டிருப்பாள். அத‌னால் இது அவ‌ளின் முத‌ல் முய‌ற்சி என்று சொல்ல‌ முடியாது.

சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் மீதமிருந்த‌ க‌ஞ்சியை வைத்து ஸ்டூலில் கொட்டி அவ‌ள் செய்த‌ முதல் ஓவிய‌ம்.

த‌யிர் வைத்து ச‌ப்புக் கொட்டிக் கொண்டு அவ‌ள் செய்த ஓவிய‌ம்.அடுத்த‌ முறை ச‌ற்று த‌ண்ணீராக‌ பெயிண்ட் வைத்து முய‌ற்சி செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.


Thursday, May 9, 2013

பிற‌ந்த‌ நாள்

நேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்தோம்.

 ந‌ண்ப‌ர்களின் பெற்றோர்க‌ளுக்கு ஒரு வார‌ம் முன்பு மின் அழைப்பித‌ழ் அனுப்பி, குழ‌ந்தைக‌ளிட‌ம் சொல்ல‌ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். இர‌ண்டு குழ‌ந்தைக‌ள் த‌விர‌ அனைவ‌ரும் தீஷுவின் ப‌ள்ளியில் தான் ப‌டிக்கின்ற‌ன‌ர். ப‌ள்ளியிலிருந்து நாங்க‌ளே குழ‌ந்தைக‌ளை அழைத்து வ‌ந்து விட்டோம். அனைவ‌ரும் வ‌ருகின்ற‌ன‌ர் என்ற‌வுட‌னே, தீஷுவிற்கு தெரிந்து விட்ட‌து. வேறு யார் வ‌ருகிறார்க‌ள், இப்ப‌வே வீட்டிற்கு போக‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வ‌ந்தாள்.

அவ‌ள் ப‌ள்ளிக்குச் சென்ற‌வுட‌ன் வீட்டை அல‌ங்க‌ரித்து வைத்திருந்தோம். வ‌ந்த‌வ‌ளுக்கு ஆச்ச‌ரியம். You are the best Mom என்று க‌ட்டிக் கொண்டாள். சாப்பிட்டு முடித்த‌வுட‌ன் அனைவ‌ரும் சேர்ந்து ஓவிய‌ங்க‌ள் செய்தோம். வித்தியாச‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று பேப்ப‌ரில் செய்யாம‌ல், கான்வாஸில் செய்தோம். ஐந்து முத‌ல் ஒன்ப‌து வய‌து வ‌ரை குழ‌ந்தைக‌ள் இருந்த‌தால், அனைவ‌ரும் செய்ய‌ எளிதான ஓவிய‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று யோசித்திருந்தேன்.

முன்பே நாங்க‌ள் செய்திருந்த‌ ஓவிய‌ம் தான்.

ஓவிய‌ம் செய்யும் முறை

தேவையான‌ப் பொருட்க‌ள்:

1. க‌ன‌மான‌ப் பேப்ப‌ர் அல்ல‌து கான்வாஸ்

2. டேப் ‍ ஏதாவ‌து ஒரு வ‌கை

3. பெயிண்ட்

செய்முறை :

டேப்பை பேப்ப‌ரில் ந‌ம‌க்குப் பிடித்த‌ முறையில் ஒட்டி டிஸைன்க‌ள் உருவாக்க‌ வேண்டும். பின் முழு பேப்ப‌ரில் பெயிண்ட் செய்ய‌ வேண்டும். பெயிண்ட‌ ந‌ன்றாக‌ காய்ந்த‌ பின் டேப்பை எடுத்து விட‌ வேண்டும். பெயிண்ட் டேப்பினுள் செல்லாம‌ல், நாம் ஒட்டின டிஸைன் ம‌ட்டும் பேப்ப‌ரின் ஒரிஜின‌ல் க‌ல‌ரில் இருக்கும்.
 குழ‌ந்தைக‌ள் விரும்பி செய்த‌ன‌ர். கிட்ட‌த்தட்ட‌ அனைவ‌ரும் த‌ன் பெய‌ரின் முத‌ல் எழுத்தை டிஸைனாக‌ வ‌ரைந்த‌ன‌ர். ஒரு குழ‌ந்தை, த‌ன் முத‌ல் எழுத்தையும், த‌ன் த‌ம்பியின் முத‌ல் எழுத்தையும் எழுதி நெகிழ‌ வைத்தது. ஒரு குழ‌ந்தை, ம‌த‌ர்ஸ் டேக்கு, த‌ன் தாய்க்கு ஓவிய‌ம் செய்த‌து. அனைவ‌ரும் சிரித்து, பேசி ம‌கிழ்ந்து செய்த‌ன‌ர். தீஷுவிற்கு வீட்டில் குழுவில் செய்வ‌து இது தான் முத‌ல் முறை.

அனைவ‌ரும் தாங்க‌ள் செய்த‌ ஓவிய‌த்தைச் செல்லும் பொழுது எடுத்துக் கொண்ட‌ன‌ர். மேலும் பெயிண்ட், பிர‌ஸ் ம‌ற்றும் ப‌ரிச‌ளித்தோம்.This is the best Birthday என்றாள் தீஷு அனைவ‌ரும் சென்ற‌ப்பின். பிறந்த‌ நாள் வாழ்த்துக‌ள் க‌ண்ண‌ம்மா!!!

Tuesday, May 7, 2013

நாய் ப‌டும் பாடு

தீஷுவிற்கு வ‌ரும் வெள்ளி அன்று த‌மிழ்ப் ப‌ள்ளியில் தேர்வு. ஆண்டு முழுவ‌தும் ப‌டித்த‌துக் கேட்க‌ப்ப‌டும் என்ற‌ன‌ர். மாட‌ல் கேள்வித் தாள் இருந்த‌து. இதிலிருந்து Dictation வார்த்தைக‌ள் கொடுக்க‌ ஆர‌ம்பித்தேன். இந்த‌ வ‌ருட‌த்தில் ஏற்கென‌வேப் ப‌டித்திருந்த‌ வார்த்தைக‌ள் தான் என்ப‌தால், அவ‌ளைப் ப‌டிக்காம‌ல் எழுதச் சொன்னேன்.


முத‌ல் வார்த்தை "ஏன்". ர‌ன் என்று எழுதினாள். இறுதியில் திருத்திக் கொள்ள‌லாம் என்று அடுத்த‌ வார்த்தை "ஓட‌ம்" என்று எழுத‌ச் சொன்னேன்."ஓ" எப்ப‌டி எழுத‌ வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். உயிர் எழுத்துக்க‌ளை ஒரு முறை எழுதினால் நினைவிற்கு வ‌ரும் என்றேன். அவ‌ளும் எழுத‌த் தொட‌ங்கினாள்.

"ஊ" க்குப் பிற‌கு எழுத‌த் தெரிய‌வில்லை. நான் ஒரு முறை எழுதிக் காட்டினேன். "ஒ" எப்ப‌டி எழுத‌ வேண்டும் என்று சுத்த‌மாக‌ ம‌ற‌ந்திருந்தாள். கையைப் பிடித்துப் ப‌ழ‌க்கும் நிலையில் இருந்தாள்.

 இது போன்ற‌ ச‌ம‌ய‌த்தில் என் கூட‌ப் பிற‌ந்த கோப‌ம் வ‌ரும். ஆனால் தீஷுவிற்கு அது குடுக்க‌ப் போகும் நீண்ட‌ கால‌ ப‌திப்பு தெரியும் என்ப‌தால்,முத‌லில் அட‌க்க‌ப் பார்ப்பேன், இறுதியில் அந்த‌ இட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்து விடுவேன். 10 நிமிட‌ங்க‌ள் க‌ழித்து நான் திரும்ப‌வும் வ‌ந்த‌வுட‌ன், மீண்டும் ஆர‌ம்பிப்போம். அப்பொழுது நான் கோப‌த்தை அட‌க்கும் நிலையில் இருந்தேன். ஒரு வ‌ழியாக‌ தீஷு உயிர் எழுத்துக்க‌ளை எழுதி முடித்தாள்.

பார்க்காம‌ல் மீண்டும் ஒரு முறை எழுத‌ச் சொன்னேன். அ என்று எழுதி மேலே கோடு போட்டாள் ‍ ஹிந்தி எழுதுவ‌து போல். அப்பொழுது தான் புரிந்த‌து. அவ‌ளைத் த‌மிழும் ஹிந்தியும் க‌லந்து க‌ட்டி அடித்துக் கொண்டிருப்ப‌து. "ஏன்" என்ப‌த‌ற்கு ஏன் ர‌ன் என்று எழுதினாள் என்றும் புரிந்த‌து. திருத்தினேன். தீஷுவின் முக‌த்தில் லேசான டென்ஷ‌ன். வ‌ருத்த‌மாக இருந்த‌து.

பார்க்காம‌ல் எழுதி முடித்த‌வுட‌ன், மீண்டும் Dictation ஆர‌ம்பித்தோம். இந்த‌ முறை "அந்த‌" வார்த்தை வ‌ந்த‌து - நாய். தீஷுவும் எழுதினாள். ந‌lய் என்று. த‌மிழ் ந‌டுவில் ஹிந்தி துணைக்கால். பார்த்த‌வுட‌ன் என‌க்குக் கோப‌ம் ம‌றைந்து, சிரிப்பு வ‌ந்த‌து. சிரித்த‌வுட‌ன் தீஷுவிற்கு, அழுகை வ‌ந்து விட்ட‌து. அப்புற‌ம் அவ‌ளை ச‌மாதானப்ப‌டுத்தி, கொஞ்சி மீண்டும் எழுத‌த் தொட‌ங்கினோம். ஒரு சிறு சிரிப்பு எங்க‌ள் இறுக்க‌த்தை அக‌ற்றிவிட்ட‌து.

உண்மையாக‌வே அந்த‌ "நlய்" அங்கிருந்த‌ இறுக்க‌த்தை த‌ளர்த்திய‌து. ந‌ன்றிக‌ள்..

Monday, May 6, 2013

புள்ளிக‌ள்

புள்ளிக‌ள் இணைத்து கோல‌மிடலாம். புள்ளிக‌ள் ம‌ட்டுமே வைத்து ஓவிய‌ம்? Pointillism என்கிற‌ ஓவிய‌ முறை புள்ளிக‌ள் ம‌ட்டுமே வைத்து ஓவிய‌ங்க‌ள் வ‌ரைவ‌தாகும். கூகிளில் தேடிப் பார்த்தால் சில‌ ஓவிய‌ங்க‌ள் பிர‌மிக்க‌ வைக்கின்ற‌ன‌.

முன்பு நாங்க‌ள் Ear buds(காதில் அழுக்கு எடுக்க‌ உத‌வுவ‌து) கொண்டு இந்த‌ முறையில் ஒரு ஓவிய‌ம் வ‌ரைந்திருக்கிறோம். அதைப் ப‌தியவில்லை என்று நினைக்கிறேன். இப்பொழுது நாங்க‌ள் க்ரையான் கொண்டு செய்தோம்.தேவையான‌வை :

1. ப‌ழைய‌ க்ரையான் (மேலுள்ள‌ பேப்பரை எடுத்து விட‌ வேண்டும்)

 2. விள‌க்கு அல்ல‌து மெழுகுவ‌ர்த்தி

செய்முறை :

1. ஒரு பேப்ப‌ரில்  பென்சிலில் ஒரு ஓவிய‌த்தை வ‌ரைந்து கொண்டோம்.

2. க்ரையானை தீயில் (விள‌க்கு அல்ல‌து மெழுகுவ‌ர்த்தி) காட்டி உருக‌ச் செய்து, வ‌டியும் க்ரையானில் (புள்ளியில்) ஓவிய‌ம் செய்தோம்.

 3. மிக‌வும் எளிது. ஆனால் ச‌ரியான‌ நேர‌த்தில் க்ரையானைப்  பேப்ப‌ர் மேல் கொண்டு செல்ல‌ வேண்டும். அது ப‌ழ‌குவ‌த‌ற்கு சிறிது நேர‌ம் எடுத்த‌து.தீ, பேப்பர் அருகில் இருப்ப‌தால், க‌வ‌ன‌ம் மிக‌வும் தேவை. நாம் குழ‌ந்தையின் அருகில் முழு நேர‌மும் இருக்க‌ வேண்டும். ந‌ல்ல‌தொரு அனுப‌வ‌ம்.

தீஷு ஸ்கேலினால் அள‌க்க‌ மிக‌வும் சிர‌மப்ப‌ட்டாள். அத‌னால் ஒரு இன்ச் ச‌துர‌ங்கள் உருவாக்க‌ச் செய்தேன். கோடுக‌ள் இணையும் இட‌ங்க‌ளில் ஸ்டிக்க‌ர் ஒட்ட‌ச் சொன்னேன். ஒன்று விட்டு ஒன்றில் ஒட்ட வேண்டும்.


ஸ்கேல் உப‌யோக‌ப் ப‌ழ‌க்கிய‌ மாதிரியும் ஆயிற்று, அவ‌ளுக்கு ஒரு ஆர்ட் ஒர்க் செய்த‌ திருப்தியும் உண்டாகிற்று.Friday, May 3, 2013

காலை வேளை டென்ஷ‌ன்

இன்று காலையில் தீஷு ப‌ள்ளிக்குக் கிள‌ம்பிக் கொண்டிருந்தாள். குளித்து முடித்து வ‌ந்த‌வுட‌ன், சாப்பிட‌க் கொடுக்க‌ நான் காத்திருக்க‌, அவ‌ள்  ஏதோ செய்து கொண்டிருந்தாள். என்ன‌ ப‌ண்ண‌ற‌ என்று க‌த்திய‌வுட‌ன் (கேட்ட‌வுட‌ன்), உங்க‌ளுக்குப் பிறந்த‌ நாள் கார்டு ப‌ண்றேன்.

September -யில் வ‌ர‌யிருக்கும் பிறந்த‌ நாளுக்கு இந்த‌ நேர‌த்தில் தேவையா என்று கேட்ட‌வுட‌ன் சாப்பிட்டு விட்டு கிள‌ம்பி விட்டாள். அவ‌ள் சென்ற‌ பின்  டேபிளில் பார்த்தேன்.

Happy Birthday mom! I love you very much. I am happy to say you have a present என்று எழுதியிருந்தாள்.காலை வேளை(லை)யில் கிள‌ம்ப‌ வேண்டுமென்று க‌த்தினாலும், பார்த்த‌வுட‌ன் வ‌ருத்த‌மாயிருந்த‌து. நிறைய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள்  இப்ப‌டி ந‌டந்திருக்கிற‌து. கோப‌த்தைக் குறைக்க‌ வேண்டும். நினைப்ப‌தோடு ச‌ரி!!!

Thursday, May 2, 2013

பொம்ம‌லாட்ட‌ம்

ப‌ழைய‌ப் புகைப்பட‌ங்க‌ளைப் பார்த்துக் கொண்டிருந்த‌ பொழுது, இந்த‌ப் ப‌டங்க‌ள் கிடைத்த‌ன. க‌தைக‌ளை உருவாக்க‌ இவ‌ற்றைப் ப‌ய‌ன்ப‌டுத்தினோம்.தேவையான‌ப் பொருட்க‌ள்

1. அட்டைப் பெட்டி

2. க‌தைக் க‌ருவுக்குத் தேவையான‌ப் பிரிண்ட் அவுட் அல்ல‌து வ‌ரைந்த‌ உருவ‌ங்க‌ள்

3. ஐஸ் குச்சிக‌ள்

4. கோடு போடாத‌ வெள்ளைப் பேப்ப‌ர்

5. Light lamp அல்ல‌து ஒளி உருவாக்கும் க‌ருவி ஒன்று

செய்முறை

1. முய‌ல் ம‌ற்றும் ஒரு பைய‌ன் பிரிண்ட் அவுட் எடுத்து, உருவ‌ங்க‌ளை வெட்டிக் கொண்டோம்.

 2. அதில் பின்புற‌த்தில் ஐஸ் குச்சுக‌ள் ஒட்டி விட்டோம்.

3. அட்டைப் பெட்டியின் ந‌டுவில் வெள்ளைப் பேப்ப‌ர் அளவில் ஒரு செவ்வ‌க‌ம் வெட்டி எடுத்து விட்டோம்.


 4. அந்த‌ செவ்வ‌க‌ ஓட்டையில் வெள்ளைத் தாளை ஒட்டி விட்டோம்.5. ஒரு இர‌வில் டேபில் லாம்ப்பை ஆன் செய்து, அத‌ன் முன் பெட்டியை வைத்து விட்டோம்.

6. விளக்கிற்கும் பெட்டிக்கும் இடையில் அந்த‌ பிரிண்ட‌ அவுட் உருவ‌ங்க‌ள் கொண்டு க‌தைக‌ள் உருவாக்கினோம்.7. குச்சியால் முன்னால் பின்னால் ஆட்டி காட்சிக‌ள் உருவாக்கினோம்.

8.  விர‌ல் உருவ‌ங்க‌ள் உருவாக்கினோம்.Fun time!!


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost