Wednesday, October 27, 2010

மழை எப்ப‌டி பெய்யும்?



ம‌ழை எப்பொழுது பெய்தாலும் தீஷுவின் ம‌ழை ப‌ற்றிய‌ கேள்விக‌ளை எதிர்கொள்ள‌ வேண்டியிருக்கும். ம‌ழை எவ்வாறு பெய்கிற‌து என்ப‌தை ஒரு சிறு ப‌யிற்சியின் மூல‌ம் செய்து காட்ட‌லாம் என்று நினைத்தேன்.

மிக‌வும் சூடான‌ நீரை ஒரு க‌ண்ணாடி பாட்டிலில் எடுத்துக் கொண்டோம். பாட்டிலை மூடாமல் பாட்டிலின் மூடியை திருப்பி வைத்தேன். மூடியின் மேல் ப‌குதியில் ஐஸ் கட்டிக‌ளை வைத்து விட்டோம். த‌ண்ணீரிலிருந்து வரும் நீராவி மூடியின் அடி ப‌குதியை அடைந்த‌வுட‌ன், மேலுள்ள‌ ஐஸ் க‌ட்டிக‌ளால் குளிர்ந்து, ம‌ழை போல் மீண்டும் பாட்டியினுள் சொட்ட‌த் தொட‌ங்கும் என்று நினைத்தேன். சிறிது நேரத்திற்கு ஒன்றும் ந‌ட‌க்க‌வில்லை. தீஷுவிற்கு பொறுமை போய்விட்ட‌து. ஒன்றும் புரிய‌வும் இல்லை. சில‌ நிமிட‌ங்க‌ள் க‌ழித்து த‌ண்ணீர் சொட்ட‌த் தொட‌ங்கிய‌து.

தீஷு கேட்டாள், "இப்ப‌த்தான் ம‌ழை ஆர‌ம்பிச்சு இருக்கா அம்மா, இனிமேல் தான் சோ னு பெய்யுமா?" இர‌ண்டு சொட்டு சொட்டுன‌தே பெரிய‌ விஷ‌ய‌ம், இதில் எங்கிருந்து சோ னு பெய்ய‌?

Tuesday, October 26, 2010

வாங்க!!! விளையாடலாம் 27/10/10

எல்லா குழ‌ந்தைக‌ள் போல் தீஷுவிற்கும் க‌தைக‌ள் இஷ்ட‌ம். தின‌மும் த‌ந்தையிட‌ம் க‌தை கேட்டு தூங்கும் ப‌ழ‌க்க‌ம் அவ‌ளுக்கு உண்டு. ஒரு நாள் க‌தை கேட்காம‌ல் தூங்கி,அவ‌ளை அறியாம‌ல் பாதி தூக்க‌த்திலிருந்து எழுந்து இன்னைக்கு க‌தை சொல்ல‌வில்லை என்று அழுத‌ ச‌ம்ப‌வ‌ம் அவ‌ள் கதைக‌ள் மீது கொண்டுள்ள‌ ப‌ற்றுக்குச் சான்று.

ஒரு க‌தை புத்த‌க‌ம் ப‌டித்த‌ப்பின் அந்த‌ புத்த‌க‌த்தை அடிப்ப‌டையாக‌க் கொண்டு, வ‌ரைத‌ல், போன்ற‌ செயல்முறைக‌ள் நாங்க‌ள் இது வ‌ரை செய்த‌தில்லை. கார‌ண‌ம் என் சோம்பேறித்த‌ன‌ம். ஆனால் தீஷுவிற்கு ச‌மீப‌ கால‌மாக‌ க‌தையில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ந‌டித்துக் காட்டுவ‌தில் விருப்ப‌ம் வ‌ந்திருக்கிற‌து.

அவ‌ளிட‌ம் Hiccups for elephant என்ற‌ புத்த‌க‌ம் உள்ள‌து. அதில் ம‌ற்ற‌ வில‌ங்குக‌ள் தூங்கும் பொழுது யானைக்கு விக்க‌ல் வ‌ந்து விடும். ஒவ்வொரு வில‌ங்காக‌ தூக்க‌த்திலிருந்து எழுந்து, விக்க‌ல் நிற்ப‌த‌ற்கு ஒவ்வொரு வ‌ழிமுறை கூறும். விக்க‌ல் நிற்காது. இறுதியில் எலியின் உத‌வியால் விக்க‌ல் நின்றுவிடும். அனைத்து வில‌ங்குக‌ளும் மீண்டும் தூங்க‌ ஆர‌ம்பிக்கும் பொழுது யானைக்கு தும்ம‌ல் ஆர‌ம்பித்து விடும். தீஷு மிக‌வும் பிடித்த‌ புத்த‌க‌ம். ஒரு நாள் நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, "அம்மா, நான் தான் யானை" என்று விக்க‌த் தொட‌ங்கினாள். என‌க்கு புரிந்து விட்ட‌து. நான் குதிரையாக‌ மாறி ந‌டிக்க‌த் தொட‌ங்கினோம். அத‌ன் பின் எந்த‌ புத்த‌க‌ம் ப‌டித்தாலும் அதை ந‌டித்து காட்ட‌ முடியும் என்றால் தீஷுவும் நானும் புத்த‌கத்திலிருந்த‌ பாத்திர‌ங்க‌ளாக‌ மாறி மாறி ந‌டித்துக் காட்டுவோம்.

ந‌டித்துக் காட்டுவ‌தால் 2 ந‌ன்மைக‌ளை என்னால் க‌ண் கூடாக‌ காண‌முடிகிற‌து.

1. க‌ற்ப‌னை ச‌க்தி வ‌ள‌ர்கிற‌து. சிங்க‌ம் என்றால் சிங்க‌ம் போல் ந‌ட‌ப்ப‌து, கர்ஜிப்ப‌து என்று தானே சிங்க‌மாக‌ மாறி புத்த‌க‌த்தில்லாத வ‌ர்ணணைக‌ளையும் செய்வ‌து.

2. தீஷுவிற்கு மிக‌வும் கூச்ச‌ சுபாவ‌ம். அவ‌ளுக்கு ந‌டித்துக் காட்டுவ‌து பிடித்து இருப்ப‌தால், ஆர்வ‌த்தின் கார‌ண‌மாக‌ பிற‌ர் இருப்ப‌தை க‌ண்டு கொள்ளாம‌ல் செய்கிறாள். அவ‌ளின் கூச்ச‌ சுபாவ‌ம் அந்த‌ நேர‌த்தில் வெளிப்ப‌டுவ‌து இல்லை.

உங்க‌ள் குழந்தையுட‌ன் சேர்ந்து செய்த‌தை உங்க‌ள் த‌ள‌த்தில் எழுதி அந்த‌ இடுகையின் முக‌வ‌ரியை கீழுள்ள‌ "Click to enter" என்ற லிங்க்கை அழுத்தி லிங்கியில் இணையுங்க‌ள்.

Tuesday, October 12, 2010

வாங்க!!! விளையாடலாம் - 13/10/2010

Play dough paint

செய்முறை Preschool art by Mary Ann Kohl புத்தகத்தில் படித்தது.

தேவையான பொருட்கள்

1. மைதா - 1 கப்
2. தண்ணீர் - 1 கப்
3. உப்பு - 1 கப்

சென்ற முறை செய்த பெயிண்ட் தண்ணிராக இருந்தது. இது சற்று கட்டியாக இருந்தது.

தீஷுவே அனைத்தையும் அளந்தாள். அனைத்தையும் கலந்தால் (அவளுக்கு மாவு கையில் ஒட்டுவது மிகவும் பிடிக்கும்) தயிர் பதத்திற்கு வரும். பெயிண்ட் போல் தண்ணீர் போல் இல்லாமலும், களிமண் போன்று கட்டியாக இல்லாமலும் இருந்தது. அந்த நேரத்தில் போன் வந்தால் எடுக்க வேண்டாம். போன் எடுக்கும் நேரத்தில் மீதி இருந்த தண்ணீர் மீண்டும் சேர்க்கப்பட்டு எங்களது போல் சற்று தண்ணீராக மாறும் வாய்ப்புகள் அதிகம்.



மூன்று தனித்தனி பாத்திரத்திற்கு மாற்றி கலர் சேர்த்தோம். தீஷுவிற்கு கையில் எடுத்து மறுபடியும் அதே பாத்திரத்திற்கு ஊற்றி விளையாடுவது மிகவும் பிடித்திருந்தது. நான் கெச்சப் பாட்டிலில் ஊற்றி விளையாடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் கையிலும், ஸ்பூனிலும் விளையாட தீஷுவிற்கு பிடித்திருந்தது. கையில் தடவி வெவ்வேறு கலர்களில் கையை பேப்பரில் அச்சு எடுத்தாள். ஸ்பூனில் சிறிது சிறிதாக எடுத்து பேப்பர் முழுவதும் வைத்தாள். (என் அம்மாவின் கமெண்ட் : வடகம் ஊத்தச் சொன்னால், நல்லா செய்வாள் போலிருக்கே.). பின் கெச்சப் பாட்டிலில் ஊற்றி இரண்டு மூன்று முறை இழுத்துப்பார்த்தாள். ஒரு பூ வரைந்தாள்.






கெச்சப் பாட்டிலில் தீர்ந்தவுடன், தீஷுவே சிறிது தண்ணீர் சேர்த்தாள். அப்பொழுது இழுத்துததும் தண்ணீராக கொட்டியது. உடனே தெளிக்க ஆரம்பித்தாள். தரை முழுவதும் தெரிக்க ஆரம்பித்தவுடன், வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று விட்டேன். நான்கு ஐந்து பேப்பரில் கலர் கலராகத் தெளித்து மாடர்ன் ஆர்ட் உருவாக்கினாள். அனைத்தும் தீர்ந்த பின் கீழே விரித்திருந்த செய்தி தாளில் வடிந்திருந்ததை எடுத்துப் போட்டுக்கொண்டிருந்தாள். வீட்டிற்கு வெளியே குளிரும் தரையில் அமர்ந்து செய்தி தாளை பிரண்டிக் கொண்டிருக்கும் எங்களையும் எங்கள் வீடு இருந்த கோலத்தையும் பார்த்து எங்களைக் கடந்த அனைவரும் ஒரு சிரிப்பு சிரித்து வைத்தனர்.






தீஷு மிகவும் விருப்பமாக செய்தாள். மறுநாள் ஞாயிறு காலை எழுந்தவுடன், மீண்டும் செய்ய வேண்டும் என்றாள். முதல் நாள் செய்ததே காயாமல் இருந்தால் செய்யப்போவதை காய வைக்க இடம் இல்லாத காரணத்தால் செய்ய முடியவில்லை. A word of caution: காய்வதற்கு டிசைனைப் பொருத்து இரண்டு மூன்று நாட்கள் ஆகின்றன.



Extension:

ஒரு இடத்தில் சிறிது பெயிண்டைக் கொட்டி வெவ்வேறு பொருட்கள் கொண்டு இழுத்தால் அழகிய படங்கள் உருவாகும். பழைய சீப்பின் பற்கள், பழைய டூத் பேஸ்ட் ப்ரெஸ், ஐஸ் கிரீம் குச்சி, பொம்மை கார் டயர் முதலியன என்னால் யோசிக்க முடிகிறது.
குழந்தையின் ஆர்வத்தை வெகு நேரம் தக்க வைக்க முடிந்தது.

உங்க‌ள் லிங்கை இங்கே ஏற்றுங்க‌ள்

Powered by Linky Tools

Click here to enter your link and view this Linky Tools list...

Sunday, October 10, 2010

Linky உபயோகப்படுத்துவது எப்படி?

சென்ற பதிவில் உங்கள் இடுகையை லிங்க்கில் ஏற்றுவது பற்றி எழுதியிருந்தேன். லிங்க் நான் உபயோகித்தது இல்லை. கூகுளில் தேடிய பொழுது கிடைத்தது. இப்பொழுது இரண்டு முறை இணைத்துப் பார்த்தேன். உபயோகப்படுத்துவது எளிது.அதன் விளக்கம்.

1. என் பதிவில் "Click here to enter" என்று ஒரு லிங்க் உள்ளது. அதை கிளிக் செய்தால், லிங்கி பேஜிற்கு எடுத்துச் செல்கிறது.




2. அதில் link to என்ற ஆப்ஷனில் உங்கள் இடுகையின் முகவரியைக் கொடுக்கவும். Caption or Title என்ற ஆப்ஷனில் உங்கள் தலைப்பைக் கொடுக்கவும்.

3. முடித்தப்பின் From web என்ற பட்டனை அழுத்தவும். அதில் உங்கள் பதிவிலுள்ள / தளத்திலுள்ள சில படங்கள் வரும். அவற்றில் இந்த இடுக்கைக்கு ஏற்ற படத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

அவ்வளவு தான். என் பதிவில் இடுகையை இணைந்து விடும். அடுத்த முறை லிங்கியில் Blog hop என்ற ஆப்ஷன் உபயோகப்படுத்தப் போகிறேன். எனக்குப் புரிந்த வரை இணைக்கும் அனைவரின் இடுக்கையிலும் இந்த் லிங்க் தோன்றும். அடுத்த முறை செய்து பார்த்தால் என் புரிதல் சரியா என்று தெரியும்.

லிங்க் பற்றி சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

Tuesday, October 5, 2010

வாங்க!!! விளையாடலாம்

என் குழந்தை எல்லா சினிமா பாட்டும் பாடும், எல்லா சீரியல் பெயரும் தெரியும் என்று பெருமை அடித்துக் கொள்ளும் அம்மாக்களை நாம் பார்த்து இருக்கிறோம். இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் டிவி பார்க்கக் கூடாது. வேகமாக வளரும் அவர்கள் மூளையில், டிவியில் வேகமாக மாறி மாறி வரும் காட்சிகள் பதிந்து, பின்னாளில் அதே வேகத்தை அவர்கள் வாழ்க்கையிலும், பள்ளியிலும் எதிர்பார்த்து, கிடைக்காததால் அவர்கள் அடையும் எதிர்பலனை இங்கு காணலாம்.

அதே போல் குழந்தைகள் விளையாட வேண்டிய அவசியத்தை இங்கு காணலாம். தீஷுவிடம் அப்பா உன்னோட என்னவெல்லாம் செய்வார் என்றவுடன், அவள் சொன்னது,"கதை சொல்லுவார், யானை மாதிரி, தவளை மாதிரி, குதிரை மாதிரி போக சொல்லுவார்... என்று லிஸ்ட் நீண்டது. அம்மா என்னவெல்லாம் செய்வார் என்றவுடன் ஒன்னுமே செய்ய மாட்டாள் என்றாள். அவளுக்கு அவள் வயதுக்குப் பிடித்தது கதை கேட்பதும், விளையாடுவதும்.

யாரும் வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் நான் தீஷுவுடன் கழிக்கும் என் நேரத்தைப்பதிவதன் சொந்த காரணங்கள் - ஒன்று பின்னாளில் தீஷு படித்துப் பார்ப்பாள், மற்றொன்று பதிவு எழுதி நாளாகிவிட்டாது என்பதால் எதையாவது புதிதாக யோசிக்கத்தூண்டும் எண்ணம். Childhood is a journey, not a race. நம் குழந்தையின் பயணத்தில் நாமும் பங்கு கொள்ளலாமே.

நம் குழந்தையை மகிழ்விக்க அவர்களுடன் சேர்ந்து ராக்கெட் ஸைன்ஸ் பற்றி பேச வேண்டாம். கையைப் பிடித்துக் கொண்டு வாக்கிங் போனால் போதும். குழந்தையின் டிவி நேரத்தைக் குறைத்து, அவர்களுடன் நம்முடைய நேரத்தைச் செலவிட்டு, அதை பதிவோம். நாம் எல்லாம் சேர்ந்து செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.

சேர்ந்து செய்வதற்கு என்னுடைய ஐடியா:

1. குழந்தையுடன் செய்த ஏதாவதை ஒன்றை தங்கள் தளத்தில் பதிய வேண்டும். குழந்தையுடன் சேர்ந்து செய்தது எதுவாகவும் இருக்கலாம். வாசித்தது, பேசியது, விளையாண்டது, குதித்தது, சமைத்தது, நடந்தது என எதுவாகவும். குழந்தை வயது வரம்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

2. ஒவ்வொரு புதன் கிழமையும் நான் வாங்க, விளையாடலாம் என்ற தலைப்பில் ஒரு பதிவு போடுவேன். பதிவின் முடிவில் ஒரு லிங்க் வைத்திருப்பேன். அந்த வாரம் முழுவதும் அந்த லிங்க்கில் நீங்கள் உங்கள் தளத்தில் பதிந்த இடுகையில் லிங்க்கை ஏற்றலாம். அதனால் நீங்களும் புதன் கிழமை தான் பதிவு போட வேண்டும் என்பது இல்லை. அந்த வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் பதிந்து, உங்கள் இடுகையை லிங்க்கில் ஏற்றலாம்.

3. உங்கள் இடுகையின் முடிவில் dheekshu தளத்தில் இணைத்திருப்பதைத் தெரிவித்தால், இங்கு வந்து பிறருடைய லிங்கையும் படிக்க அனைவரும் வசதியாக இருக்கும்.

நாம் இந்த சிறு முயற்சியின் மூலம், பிறரையும் பங்கு கொள்ள செய்து வளமான தலைமுறை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த முயற்சியை வேறு விதமாக செய்யலாம் என்று தோன்றினால் சொல்லுங்கள்.மாற்றிக் கொள்ளலாம்.

லிங்க் பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள். எனக்கும் இது தான் முதல் முறை. தெரிந்த வரை சொல்லுகிறேன். இந்த பதிவின் முடிவிலும் லிங்க் இருக்கிறது. ஏதாவது ஒரு பதிவை பதிந்து லிங்க் எவ்வாறு வேலை செய்கிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் இடுகையை இந்த லிங்கில் ஏற்றுங்கள்

Monday, October 4, 2010

ச‌மைய‌ல் அறையிலிருந்து



தீஷுவிற்கு ப‌ள்ளியில் காரெட் கிரேட்டிங் (Carrot grating) சொல்லிக் கொடுத்திருக்கிறார்க‌ள். அதிலிருந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். காரெட், துருவி, ஒரு கிண்ண‌ம் முத‌லியன‌ கொடுத்தேன். அவ‌ளாக‌வே செய்ய‌த் தொட‌ங்கினாள். அழுத்தி செய்ய‌த் தெரிய‌வில்லை. ஆனால் ஆர்வ‌மாக‌ செய்தாள். பாதி காரெட் ம‌ட்டுமே செய்ய‌ முடிந்த‌து. துருவிய‌ காரெட் கொண்டு காரெட் சாத‌ம் செய்து கொடுத்தோம்.





தீஷு ஒரு நாள் காலை ஆறு ம‌ணிக்கே எழுந்து விட்டாள். நான் ச‌மைக்கும் பொழுது அவ‌ளுக்கு இந்த‌ செய‌ல் முறை கொடுத்தேன். எண்ணெய் வ‌டிக்க‌ட்ட‌ ப‌ய‌ன்ப‌டும் க‌ரெண்டியையும் ஷு லேஷும் எடுத்துக் கொண்டேன். ஷுவில் லேஷ் க‌ட்டுவ‌து போல் செய்ய‌ வேண்டும். முதலில் மேல் புற‌மாக‌ நூலை இழுத்து, பின் கீழை விட‌ வேண்டும், மீண்டும் மேல் எடுத்து வ‌ர‌ வேண்டும். வ‌ரிசையாக‌ அனைத்து ஓட்டைக‌ளையும் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ செய்ய‌ வேண்டும் என்று நினைக்க‌ வில்லை. ஆனால் தீஷுவே வ‌ரிசையாக‌ செய்தாள். என் உத‌வி மிகுதியாக‌ தேவைப்ப‌ட்ட‌து. நூலை மேலிருந்து கீழ் கொடுக்க‌ வேண்டுமா அல்ல‌து கீழிருந்து மேல் கொடுக்க‌ வேண்டுமா என்று அவ‌ளுக்கு ஒவ்வொரு முறையும் ச‌ந்தேக‌ம். காலை வேளையில்லாம‌ல் ம‌ற்றொரு பொழுதில் செய்திருந்தால் இன்னும் அதிக‌ நேர‌ம் செய்திருப்பாள் என்று நினைக்கிறேன். இது கை க‌ண் ஒருங்கிணைப்புக்கு ஏற்ற‌து.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost