Monday, October 7, 2013

பாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி

என் சிறு வயதில் என் பாட்டியுடன் சேர்ந்து பல்லாங்குழி விளையாண்டு இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. பல்லாங்குழியில் பல விளையாட்டுக்கள் இருப்பினும் நாங்கள் அடிக்கடி விளையாடுவது ‍பசுவும் பாண்டியும். 

சிறு வயதில் விளையாடிய‌ பல்லாங்குழியை வீடு மாறும் பொழுது என் அம்மா யாரிடமோ கொடுத்துவிட்டார்கள். அது மீன் வடிவத்தில் மிக அழகாக இருக்கும். தீஷுவிற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று இப்பொழுது வாங்கினால், நல்ல மரத்தில் கிடைக்கவில்லை. மேலும் மீன் வடிவத்திலும் இல்லை. :((. கிடைத்தை வாங்கிவந்தேன். வெகு நாட்களுக்குப் பிறகு நேற்று தீஷுவும் நானும் விளையாண்டோம்.  

பல்லாங்குழி விதிமுறைகளில் ஒவ்வொரு சமுதாய மக்களிடமும் சிறு வேறுபாடுகள் உண்டு. நாங்கள் விளையாடும் முறை இங்கே பகிர்ந்து 
இருக்கிறேன்.

பசுவும் பாண்டியும் 

1. இரண்டு பேர் விளையாடுவது. ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள். ஒவ்வொரு குழிக்கும் ஐந்து முத்துக்கள்.  

2. நம் குழியிலிருந்து முத்துக்களை எடுத்து, இடமிருந்து வலமாக ஒவ்வொரு குழிக்கும் ஒன்று ஒன்றாக போட்டுக் கொண்டே வரவேண்டும். மற்றவர் குழிகளுக்கும் போட வேண்டும். 

3. நம் கையிலிருக்கும் முத்துக்கள் முடிந்தவுடன், அடுத்த குழியிலிருந்து முத்துக்களை எடுத்து அதே முறையில் தொடர வேண்டும்.

4. நம் கையிலிருக்கும் முத்துக்கள் தீர்ந்தவுடன், அடுத்த குழியில் முத்துக்கள் இல்லையென்றால், காலியாக இருக்கும் அந்தக் குழியைத் தடவி, அடுத்த குழியிலிருக்கும் முத்துக்களை (புதையல்) எடுத்து வைத்துக் கொள்ள‌ வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட குழிகள் காலியாக இருந்தால் புதையல் கிடையாது.

5. காலியாகி நிரம்பத் தொடங்கும் நம் குழிகளில், நான்கு முத்துக்கள் சேர்ந்தவுடன், பசு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 

6. ஒருவருடைய குழிகளில் விளையாட முத்துக்கள் இல்லாத பொழுது அந்தச் சுற்று முடிந்து விடும்.

7. மீண்டும் குழிகளில் ஐந்து ஐந்தாக நிரப்ப வேண்டும். ஏதாவது குழியை(களை) நிரப்ப முடியாவிட்டால், குழியை(களை) மூடி விட வேண்டும். விளையாடும் பொழுது இருவரும் அந்தக் குழியில்(களில்) முத்துக்கள் போடக் கூடாது.

8. எப்பொழுது ஒருவருக்கு ஒரு குழியைக் கூட நிரப்ப முடியவில்லையோ, அவர் தோற்றவராவர். விளையாட்டு முடிந்து விடும்.

நம் அனைத்துப் பாரம்பரிய விளையாட்டுக்கள் போல் பல்லாங்குழியிலும் பல நேர் மற்றும் மறைமுக நன்மைகள் உண்டு. நான் நேராக என் குழந்தையிடம் கண்டு கொண்டது ‍ அவள் மகிழ்ச்சி. 

நீங்கள் எவ்வாறு விளையாடுவீர்கள் என்பதையும் சொல்லிச் செல்லுங்களேன்!!

22 comments:

  1. எங்கள் ஊரில் விளையாடுவது சற்றே வித்யாசமான முறை..கடந்த வருடம் அது பற்றிய ஒரு தனிப் பதிவே எழுதி இருக்கிறேன். நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்! :)

    இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு இப்படியான விளையாட்டுக்கள் அறிமுகம் கூட இல்லாது போவது வருத்தம் தரும் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகி தங்கள் வருகைக்கு. தங்கள் இடுகைகளை படித்துப் பார்த்தேன். உங்களுக்குத் தெரிந்த பல்லாங்குழி விளையாட்டுகளைப் பற்றி எழுதுங்கள். அனைவரும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்..

      Delete
  2. நூறாவது பின்தொடர்பவரை பெற்றமைக்கு வாழ்த்துகள் :)

    ReplyDelete
    Replies
    1. நூறாவது பின்தொடருபவராக ஆனதற்கு நன்றிகள் பிரபாகரன் :-))

      Delete
  3. நம்ம வீட்டிலும் ஒரு பல்லாங்குழி இருக்கு. எவர்சில்வர். மதுரையில் 24 வருசத்துக்கு முந்தி வாங்கினேன்.

    மகள் சின்னவளா இருக்கும்போது அவளுடைய தோழிகளுக்கு எப்படி விளையாடணுமுன்னு சொல்லிக்கொடுப்பாள். இதை விளையாடன்னே கூட்டம் வரும் நம்மூட்டுக்கு.

    இன்னும் தாயக்கட்டை, பம்பரம், கேரம்போர்டுன்னு பலதும் நம்மவீட்டுலே இருக்கு. கூட ஆடத்தான் ஆளில்லை இப்போ:(

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம் உங்கள் வருகைக்கு.. எவர்சில்வரில் காய்களைப் போடும் பொழுது நல்ல அருமையான சத்தம் வருமே. கேட்க நல்லா இருக்கும்..

      Delete
  4. ஆறு முத்து,பன்னிரண்டு முத்து இதில் பாதி சேர்ந்தால் பசு.
    கட்டாடம்.-எழுமுத்து .நான்குமூலையில் ஏழு முத்து சேர்ந்தால் போடக்கூடாது. குழியில் முத்து போட்டுமுடியும் போது கடைசி முத்து மூலையில் ஏழு சேர்ந்த குழியில் முடிந்தால் ஆட்டக்காரருக்கு அந்த குழி முத்து சொந்தம். எதி ஆட்டக்காரர் கட்டிய குழியில் முத்து போடமாட்டார். இன்று தொலைகாட்சி.ஒற்றுமை,அந்த விளையாட்டு சண்டை,ஒருமுத்து மறைத்து வழித்தல்,அதைக்கண்டு மீண்டும் ஆட்டம் தொடங்குதல் அதெல்லாம் தனி. இன்று தனியான தனிமை.ananthako.blogspot.anandgomu.blogspot;mathinanth.blogspot.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா உங்கள் வருகைக்கு.. நீங்கள் சொல்லியிருக்கும் முறையிலும் விளையாண்டு பார்க்கிறோம்.

      Delete
  5. ஆறு முத்து,பன்னிரண்டு முத்து இதில் பாதி சேர்ந்தால் பசு.
    கட்டாடம்.-எழுமுத்து .நான்குமூலையில் ஏழு முத்து சேர்ந்தால் போடக்கூடாது. குழியில் முத்து போட்டுமுடியும் போது கடைசி முத்து மூலையில் ஏழு சேர்ந்த குழியில் முடிந்தால் ஆட்டக்காரருக்கு அந்த குழி முத்து சொந்தம். எதி ஆட்டக்காரர் கட்டிய குழியில் முத்து போடமாட்டார். இன்று தொலைகாட்சி.ஒற்றுமை,அந்த விளையாட்டு சண்டை,ஒருமுத்து மறைத்து வழித்தல்,அதைக்கண்டு மீண்டும் ஆட்டம் தொடங்குதல் அதெல்லாம் தனி. இன்று தனியான தனிமை.ananthako.blogspot.anandgomu.blogspot;mathinanth.blogspot.

    ReplyDelete
  6. நாங்களும் இதே போல் தான் விளையாடுவோம்...

    ReplyDelete
  7. அமெரிக்காவில் பள்ளியில் பல் வேறு நாடுகளை சார்ந்தவர்களின் விளையாட்டு பற்றி Exhibit வைத்திருந்தார்கள். அதில் பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பல்லாங்குழியை தங்கள் நாட்டு பாரம்பரிய விளையாட்டாக புகை படத்துடன் குறிபிட்டிருந்தார்கள்!

    http://www.wikimanqala.org/wiki/Sungka

    ReplyDelete
    Replies
    1. பல்லாங்குழி பல்வேறு பெயர்களில் பல் நாடுகளில் விளையாடுகிறார்கள். நான் மங்கலா (Mangala) என்ற பெயரில் கடைகளி பார்த்திருக்கிறேன்..நன்றி தங்கள் வருகைக்கு.

      Delete
  8. பல்லங்குழி கட்டை எங்க வீட்டில் இருக்கு. நானும் என் பிள்ளைகளும் நேரம் கிடைக்கும்போது விளையாடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜி.. நீங்கள் எந்த முறையில் விளையாடுவீர்கள் என்பதை எழுதுங்கள்.. நாங்களும் அந்த முறையில் முயற்சி செய்கிறோம்.

      Delete
  9. இதே முறையில்தான் விளையாட வேண்டும் சரியான முறைதானே இது!

    ReplyDelete
  10. நாங்களும் இப்படித்தான் விளையாடியிருக்கிறோம். தாயம், சொட்டாங்கல், பல்லாங்குழி ..இதெல்லாம் இப்பொழுது யார் விளையாடுகிறார்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ் உன் வருகைக்கு.. நிறைய பேர் விளையாடுகிறார்கள் என்பதை கருத்துரையைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறது!!

      Delete
  11. எங்க வீட்டிலும் மீன் வடிவத்தில் மதுரையில் புது மண்டபத்தில் வாங்கியது இருந்தது. நானும் தம்பியும் அம்மாவும் அதில் விளையாடியிருக்கிறோம். இப்போ அது இல்லை...

    இப்போ என் மகளுக்கு வேறு வைத்து சொல்லித் தருகிறேன். நாங்கள் விளையாடுவதில் 6 முத்துக்கள் ஒவ்வொரு குழியிலும் மூன்று வந்தால் பசு...

    இதில் வேறு விதமான ஆட்டங்களும் விளையாடுவோம். அது.....காசி தட்டுதல் (நடுவில் உள்ள குழியில் இருந்து முத்துக்களை எடுக்காமல் சேர்த்து கொண்டு வந்து வருவது. அதில் மற்றவரும் தட்டி எடுத்து கொள்ளலாம் இறுதியில்)

    சீதை ஆட்டம் (இது தனியாகவே விளையாடலாம்)

    கட்டும் பாண்டி (இது ஓரத்தில் கட்டி விளையாடுவது)

    ReplyDelete
    Replies
    1. புதுமண்டபத்தில் இப்பொழுது கிடைக்கலீங்க.. ப்ளீஸ், மற்ற விளையாட்டுக்களைப் பற்றி உங்கள் தளத்தில் எழுதுங்களேன்..எங்களை மாதிரி மறந்த நபர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

      Delete
  12. நல்லா எழுதி இருக்கீங்க! நாலு சோழிகள் அதை "கண்ணு" என்று சொல்வோம். மத்தபடி, விளையாட்டு எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு! பல்லாங்குழியும், புளியங்கொட்டை ஒத்தையா/ரெட்டையா விளையாட்டும் சனி/ஞாயிறுலே கூட விளையாடுவோம். உங்க பதிவை பார்த்துட்டு எப்பவோ எடுத்துவைச்ச ஐஞ்சுகல்லை எடுத்து நேத்து விளையாடினோம்....:‍))

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost