Wednesday, May 27, 2009

மருதாணி


போன வாரம் எதிர் வீட்டிலுள்ள வட இந்திய ஆண்டி மருதாணி இட்டிருந்தார். தீஷுவைப் பார்த்தவுடன் கையைக் காட்டி இந்தியில் அவர் பெண் வந்தவுடன் போட்டு விட சொல்கிறேன் என்றார். அவர் சொன்னது புரியாவிட்டாலும், அவர் கையில் இருந்த சிவப்பு பூக்கள் அவளுக்குப் பிடித்துவிட்டன. அதன் பின் தினமும் அக்கா எப்ப போட்டுவிடுவா என்று கேட்டுக் கொண்டிருந்தாள். நான்கைந்து நாட்களுக்கு முன்னால் மேல் வீட்டில் இருப்பவர் வேறு ஏதோ வீட்டில் அரைத்த மருதாணி தனக்காக வாங்கி வந்ததை எங்களுக்குக் கொஞ்சம் கொடுத்தார். அது தீஷுவிற்கு காலில் மட்டும் போட முடிந்தது. காலில் போட்டு முடித்ததும், தான் மருதாணி போட்டிருப்பதை என் தங்கைக்குப் போன் செய்து சொன்னாள். மருதாணி அவள் காலில் அரிப்பது போல் இருக்கிறது என்று ஒரு மணி நேரத்தில் எடுத்தும் விட்டாள். ஆனால் சிவந்திருந்தது. இவ்வளவு ஆசையாக உள்ளாளே என்று சென்ற வாரயிறுதியில் மருதாணி கோன் வாங்கி வைத்தேன். நேற்று தான் வைக்க நேரமிருந்தது.

வைக்க ஆரம்பித்த சிறிது விநாடிகளில் கையை நீட்டிக் கொண்டேயிருப்பது வலிக்கிறது என்றாள். சரி என்று ஏதோ டிஸேன் போட்டு விட்டேன். இரண்டாவது கையில் பட்டர்ஃபளை போட வேண்டும் என்றாள். பாதத்தில் கூட போட வேண்டும் என்றதால் போடப்பட்டு, தந்தையால் படுக்கைக்குத் தூக்கிச் செல்லப்பட்டாள். கையை தூக்கியே வைத்திருந்தாள். நானும் வலிக்கும் என்று சொல்லிப்பார்த்தேன். பிரயோஜனமில்லை. கையில் முத்தம் கொடுத்தவுடன், விரல் கிட்ட குடுத்திடாத, மருதாணி அழிச்சுடும் என்றாள். இப்படி மருதாணி நினைப்பிலேயே தூங்கிப் போனாள்.

காலையில் எழுந்தவுடன் பச்சையாக இருந்ததைப் பார்த்து அழுகை வந்துவிட்டது. மருதாணியைக் கழுவியவுடன் சிவப்பை பார்க்க பார்க்க முகத்தில் சந்தோஷம். சில நிமிடங்களில் என்னிடம் வந்து "மருதாணி பிடிக்கல.. கையிலிருந்து எடுத்து விடு.. எனக்கு வேண்டாம்" என்று அடுத்த அழுகை ஆரம்பமானது.

4 comments:

  1. /*மருதாணி பிடிக்கல.. கையிலிருந்து எடுத்து விடு.. எனக்கு வேண்டாம்" என்று அடுத்த அழுகை ஆரம்பமானது.
    */
    :-)) யாழும் இப்படி தான் செய்வாள். ஒருமுறை என் தம்பி திருமணத்திற்கு மருதாணி நான் இட்டுக் கொண்டேன். கையில் மருதாணி அழியும் வரை என்னைத் தொட விட மாட்டாள். இப்பொழுது டிசைன் டிசைனாக போடச் சொல்கிறாள்

    ReplyDelete
  2. super :) enjoy! குழந்தைகளின் மனநிலை வினோதமானதுடன் அழகானதும் கூட ;)

    ReplyDelete
  3. ஹஹ்ஹா! பப்பு தானாக ஏதோ இழுத்துக் கொள்கிறாள், கையில், மருதாணி கோன் வைத்து. இலை அரைத்து வைத்துக் கொள்ள ஆசை வந்துவிட்டது!! ;-)

    ReplyDelete
  4. நன்றி அமுதா, ஆகாயநதி, முல்லை...

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost