தீஷு,
நாளை (08/05) உனக்கு மூன்று வயது ஆகிறது. என் வாழ்க்கையை நீ பிறந்ததற்கு முன், பிறந்ததற்கு பின் எனப் பிரித்து விடலாம். நீ பிறந்ததற்கு முன் என் பெயர் முன்கோபி. நீ பிறந்ததற்குப் பின் என் பெயர் பொறுமைசாலி. எல்லோரும் நான் உன் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைப் பார்த்து எனக்கு மிகவும் பொறுமை என்கின்றனர். ஆனால் எனக்கு மட்டும் தான் தெரியும் நான் உன் கேள்விகளால் நிறைய தெரிந்து கொள்கிறேன் என்று. நீ பிறந்ததற்கு முன் நான் படித்த புத்தக வகைகள் - பைனான்ஸ், கனிதம், இயற்பியல் மேலும் பல. பொட்டலம் மடித்து வந்த பேப்பரைக் கூட விட்டு வைத்தது இல்லை. ஆனால் நீ பிறந்ததற்குப் பின் நான் படித்த புத்தக வகைகள் - குழந்தை வளர்ப்பு, மாண்டிசோரி. வீட்டில் தினமும் வந்து விழும் செய்தித்தாளைப் படிப்பதற்குக் கூட நேரமில்லை. எல்லோரும் கேட்கிறார்கள் புத்தகமும் கையுமாக இருந்த நீ இப்பொழுது எப்பொழுதும் குழந்தையும் கையுமாக இருக்கிறாய் என்று. அவர்களுக்குத் தெரியாது நீ புத்தகத்தை விட அதிகம் கற்றுத் தருகிறாய் என்று.
நான் உன்னைச் சுமந்த ஒன்பது மாதங்களில் நீ ஒரு சிரமும் கொடுக்கவில்லை. அப்பொழுது நான் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மே 24 தேதி நீ பிறப்பாய் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர். நானும் மே 12க்கு அப்புறம் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் எனக்குத் தெரிந்து விட்டது நீ என்னைப் பார்க்க சீக்கிரம் வரப் போகிறாய் என்று. ஆகையால் மே 5 வரை மட்டும் வேலை செய்தேன். மே 8 தேதி நீ பிறந்து விட்டாய்.
மே எட்டாம் தேதி அதிகாலையிலேயே எனக்கு வலி வந்து விட்டது. காலை 4 மணிக்கு டாக்டருக்கு போன் செய்தோம். பரிசோத்தித்துப் பார்க்க வரச் சொன்னார்கள். குளித்து முடித்து ஆறு மணிக்கு நானும் அப்பாவும் சென்றோம். அங்கேயே தங்கச் சொல்லினர். என் வயிற்றில் கருவிகள் மாற்றி உன்னை கவனித்துக் கொண்டனர். மதியம் 1:45 மணி அளவில் டாக்டர் ஓடி வந்தார். உன்னிடம் மூச்சு இல்லை என்றார். இரண்டு மணி நேரம் காத்திருக்கிறீர்களா அல்லது ஆபரேஷன் செய்து விடலாமா என்றார். காத்திருந்தால் உன் நிலைமை என்னவாகும் எனத் தெரியாது என்றார். நானும் அப்பாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் கூட இருவரும் ஒரே நேரத்தில் ஆபரேஷன் என்றோம். எமர்ஜென்ஸி ஆபரேஷனில் சரியாக மதியம் 2 மணிக்குப் பிறந்தாய். டாக்டர் மிகவும் வருத்தப்பட்டார். வலி வந்து முடியும் நேரத்தில் இப்படி ஆகி விட்டதே என்று.
எனக்குப் பெண் குழந்தை என்று ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும். இருபதாவது வார ஸ்கேனிலே உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் நீ உன்னைக் காட்ட விரும்பவில்லை. "Beatiful Girl Baby" என்றும் "Your girl is tall" என்றும் என்னைச் சுற்றி மகிழ்ச்சி சத்தங்கள். என்னால் எல்லாவற்றையும் உணர முடிந்தது. ஆனால் தூக்குகிறாயா என்றதற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். மன்னித்துக் கொள். என்னிடம் ஒரு துளி சக்தி கூட இல்லை. உன் அப்பாவிடம் உன்னைக் கொடுத்தனர். அவர் முகத்திலிருந்த பெருமையை நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
நானும் நீயும் ஐந்து மணிக்கு பெட்டுக்கு வந்தோம். ஒன்பது வரை எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால் ஒன்பது மணிக்கு அழ ஆரம்பித்தாய். அழுதாய் அழுதாய் இரண்டு மணி வரை. நர்ஸ், அப்பா, நான் எல்லோரும் உன்னை மாற்றி மாற்றி சமாதானப்படுத்தினோம். இரண்டு மணிக்குத் தூங்கினாய். அதன் பின் இரவு இரண்டு மணி தூக்கம் எங்களுக்குச் சாதாரணமானது. நர்ஸ் "You are going to have nice time with your girl" என்று கிண்டல் அடித்தாள். மே 10தாம் தேதி காலையில் வீட்டிற்கு வந்தோம். அப்பா டென்ஷனாக கார் ஓடியதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.
நீ பிறந்த பொழுது உறவினர்கள் பற்றி சொல்லாததை கவனித்திருப்பாய். இந்தியாவிலிருந்து யாரும் வர முடியவில்லை. நானும் அப்பாவும் உன்னைத் தனியாக தான் வளர்க்க ஆரம்பித்தோம். நாங்கள் அதற்கு முன்னால் பச்சிளம் குழந்தையைத் தூக்கினது கூட இல்லை. நீ தான் அதையும் கற்றுக் கொடுத்தாய்.
இங்கு உன் அப்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டும். நீ Colic Baby. முதல் மூன்று மாதங்களுக்கு தினமும் மாலை ஆறு முதல் எட்டு வரை அழுவாய். முதலில் பயந்தோம். அப்புறம் பழகிக்கொண்டோம். உன் அப்பா ஆபிஸிருந்து வந்தவுடன் எனக்குச் சாப்பிட கொடுத்து விட்டு, உன்னைத் தூக்கிக் கொள்வார். உன் அழுகையை நிறுத்த இரண்டு மணி நேரமும் நடந்து கொண்டே இருப்பார். பின் எனக்குப் பத்திய உணவு தயாரிப்பார். மீண்டும் இரவு நீ அழ ஆரம்பித்தவுடன் உன்னை சமாதானப்படுத்துவார். முதல் மூன்று மாதங்கள் அவர் தூங்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் உன் முகத்தைப் பார்த்து நாங்கள் இருவரும் எங்கள் கஷ்டங்கள் மறந்தோம்.
மூன்று வருடங்களானது போல் தெரியவில்லை. இந்த மூன்று வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள் நம் வாழ்வில். இந்த மூன்று வருடங்களில் நீ இல்லாமல் நானும் அப்பாவும் சேர்ந்து ஒரே ஒரு முறை தான் வெளியே சென்றிருக்கிறோம். அதுவும் ஒவ்வொரு நிமிடமும் உன்னையே நினைத்து உனக்கே பொருட்கள் வாங்கி வந்தோம். அந்த அளவு எங்கள் வாழ்க்கை ஆகி விட்டாய் நீ. நீ என்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ அம்மாவின் வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
உன் அம்மா.
Games to play with 3 year old without anything
2 years ago
:-))
ReplyDeleteஉங்கள் மகள் தீஷுவிற்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீஷூம்மா
ReplyDeleteநான் இவ்வளோ நாள் உங்க எழுத்துக்கள படிச்சிட்டு உங்கள மட்டும்தாஙக் பெருமையா நெனச்சிகிட்டிருந்தேன் தீஷூ அம்மா, ஆனா இப்போ தீஷூ அப்பாவ பத்தி படிச்சபிறகு எனக்கு என்ன எழுதறதுனே தெரியல.....
க்ரேட்.......... இதுதான் சொல்லத்தோணுது.
வாழ்த்துக்கள் தீஷுக்கு மட்டுமில்லங்க, உங்களிருவருக்கும் கூட.
கண்டிப்பா நீங்க தவம் செய்திருக்கீங்க
//உன்னைத் தூக்கிக் கொள்வார். உன் அழுகையை நிறுத்த இரண்டு மணி நேரமும் நடந்து கொண்டே இருப்பார். பின் எனக்குப் பத்திய உணவு தயாரிப்பார். மீண்டும் இரவு நீ அழ ஆரம்பித்தவுடன் உன்னை சமாதானப்படுத்துவார். முதல் மூன்று மாதங்கள் அவர் தூங்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் உன் முகத்தைப் பார்த்து நாங்கள் இருவரும் எங்கள் கஷ்டங்கள் மறந்தோம்//
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தீஷுவுக்கு :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தீஷூ!
ReplyDeleteமிக அருமையாக நினைவுக் கூர்ந்திருக்கிறீர்கள்..very touchy!
டெம்ப்ளேட் அழகா இருக்கு! :-) சொல்ல விட்டுப் போச்சு!
ReplyDeleteரொம்ப டச்சிங். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்து சொன்ன அனைவரும் என் நன்றிகள். ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருப்பதால் தனித்தனியாக நன்றி தெரிவிக்க முடியவில்லை. வருந்துகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் தீஷூ!
ReplyDeleteதீஷூ அம்மாவிற்கும், அப்பாவிற்கும் என் முதல் வாழ்த்து!
ReplyDeleteஒரு கணவர் உணவு மற்றும் பத்திய உணவு தயாரித்து மனைவியைப் பார்த்துக் கொள்கிறார் என்றால் அது அத்துணை சாதாரணமான மேட்டர் இல்ல :)))
தீஷு குட்டிமா உனக்கு ஸ்பெஷல் வாழ்த்து! :)
தீஷுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் :)
ReplyDeleteநான் விடாமல் தொடர்ந்து படிக்கும் வலைத்தள்ம் இது. எனது மனைவியிடமும் தொடர்ந்து படிக்க சிபாரிசு செய்வதும் உண்டு.
ஏற்கெனவே சொன்னதுதான். நீங்கள் இந்த அனுபவங்களையும், படங்களையும் ஒரு புத்தகமாக போட வேண்டும். எங்களைப் போன்ற தாய் தந்தையருக்கு அது மிகவும் வசதியாக இருக்கும். :)
தீஷுவிற்கும், அவளுடைய பெற்றோருக்கும் வாழ்த்துகள்.
தீஷூக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துக்கள். தீஷு :)
ReplyDeleteஉங்கள் மகள் தீஷுவிற்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteதீஷுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநானும் அப்பாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் கூட இருவரும் ஒரே நேரத்தில் ஆபரேஷன் என்றோம்/
ReplyDeleteசும்மா கலக்கிட்டீங்க .உங்க பீலிங்க்ஸ் நாட்கள் கடந்தும் உயிர் துடிப்புடன் உள்ளன .
எனது மகள் பெயர் AMIRTHAVARSHINI
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். பலரின் முதல் வருகைக்கும் நன்றிகள்.
ReplyDelete