Thursday, October 24, 2013

குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 1

குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்களைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணித்தின் முதல் இடுகை. அழ.வள்ளியப்பாவின் ஐந்து பாடல்களைத் தொகுத்துள்ளேன். இவர் 2000‍க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல் எழுதியிருப்பதாக விக்கி சொல்லுகிறது. ஐந்தாவது பாடல் கழுதையும் கட்டெறும்பும் என்ற பாடல் மட்டும் சற்று நெருடலாக இருந்தது.

1. வட்டமான தட்டு

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு

எட்டில் பாதி விட்டு
எடுத்தான் மீதம் கிட்டு
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு

கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு
மொத்தம் தீர்ந்தது எட்டு
மீதம் காலித் தட்டு!


2. அப்பா தந்த புத்தகம்

அப்பா வாங்கித் தந்தது
அருமையான புத்தகம்
அதில் இருக்கும் படங்களோ
ஆஹா மிக அற்புதம்!

யானை உண்டு, குதிரை உண்டு
        அழகான முயலும் உண்டு
பூனை உண்டு, எலியும் உண்டு
        பொல்லாத புலியும் உண்டு

அப்பா வாங்கித் தந்தது
அருமையான புத்தகம்.

குயிலும் உண்டு, குருவி உண்டு
         கொக்கரக்கோ கோழி உண்டு
மயிலும் உண்டு, மானும் உண்டு
         வாலில்லாத குரங்கும் உண்டு

அப்பா வாங்கித் தந்தது
அருமையான புத்தகம்


3. சிரிக்கும் பூக்கள்

வண்ண வண்ணப் பூக்கள் - ‍ நல்ல‌
மணம் நிறைந்த பூக்கள்.
என்னைப் பார்த்துச் சிரிக்கும் - அவை
இனிய நல்ல பூக்கள்.

நீலம், பச்சை, சிவப்பு - இன்னும்
நிறங்கள் பலவும் உண்டு.
காலை நேரம் வருவேன் - ‍ இந்தக்
காட்சி கண்டு மகிழ்வேன்.

பார்க்கும் போதும் சிரிக்கும் - நான்
பறிக்கும் போதும் சிரிக்கும்.
சேர்த்துக் கட்டும் போதும் - அவை
சிரித்துக் கொண்டே இருக்கும்!


4. தூங்கும் விதம்

ஒட்டைச் சிவிங்கி நின்று கொண்டே
   நன்று தூங்கிடும்.
உயரே வௌவால் தலைகீழாகத்
   தொங்கித் தூங்கிடும்.
சிட்டுக் குருவி ம்ரத்தின் கிளையைப்
   பற்றித் தூங்கிடும்.
சின்னப் பாப்பா தொட்டிலுக்குள்
   படுத்துத் தூங்கிடும்.
கண்ணை மூடி நாமெல்லாரும்
   நன்கு தூங்குவோம்.
கண்ணைத் திறந்தபடியே மீனும்
   பாம்பும் தூங்கிடும்.
  என்ன காரணத்தினாலே
   என்று தெரியுமா?
 இவைகளுக்குக் கண்ணைமூட‌
    இமைகள் இல்லையே!


5. கழுதையும் கட்டெறும்பும்

கட்டெறும்பு ஊர்ந்து ஊர்ந்து
கழுதை அருகில் சென்றதாம்.
கழுதைக் காலில் ஏறி ஏறிக்
காது பக்கம் போனதாம்!

காதில் புகுந்து மெல்ல மெல்லக்
கடித்துக் கடித்துப் பார்த்ததாம்.
காள்காள் என்று கழுதை கத்தக்
கட்டெரும்பு மிரண்டதாம்!

காதிலிருந்து தரையை நோக்கிக்
கர்ணம் போட்டுக் குதித்ததாம்.
அந்தச் சமயம் பார்த்துக் கழுதை
அதன் மேல் காலை வைத்ததாம்!

காலில் சிக்கிக் கொண்ட எறும்பின்
கதை முடிந்து போனதாம்.


13 comments:

  1. அருமையான பாடல்கள் தியானா! நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!
    கழுதை, கட்டெறும்பு கதையில் பிறருக்குத் துன்பம் செய்பவருக்குத் துன்பம் வரும் என்று சொல்கிறார்களோ? வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று..

    ReplyDelete
  2. இன்றுதான் உங்கள் பதிவிற்கு வருகிறேன். சிறப்பான பணி. நன்றி

    ReplyDelete
  3. அழ.வள்ளியப்பா அவர்களின் பாடல்களை பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றி... தொடர்க...

    ReplyDelete
  4. நல்ல தொகுப்பு. தொடர்ந்து தொகுத்து எங்களுக்கும் படித்திட ஏதுவாய் தந்திட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. அழ.வள்ளியப்பாவின் கதைகள், குழந்தைகளுக்கான பாடல்கள் எல்லாமே மிகவும் புகழ் பெற்றவை. கட்டெறும்பு பாடலும் பிறருக்குத் துன்பம் விளைவித்தால் அது தனக்கே பெரும் துன்பமாய் வந்து முடியும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது, அதுவும் மிக எளீமையாக!
    உங்கள் முயற்சிக்கு இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. பாடல் பகிர்வு அருமை.

    ReplyDelete
  7. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள்!!

    @மனோ சாமிநாதன் & கிரேஸ், தங்கள் விளக்கங்கள் அருமை..நன்றி

    ReplyDelete
  8. அழ.வள்ளியப்பாவின் நூல்கள் எல்லாம் இங்கே கிடைக்கிறது http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-35.htm

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நடராஜ். மிகவும் உபயோகமான தளம். தீஷுவிடம் கேட்பதற்காக நான்கைந்து விடுகதைகள் படித்து வைத்திருக்கிறேன் :)). உபயோகமான தளத்தை அறிமுகப்படுத்தியதற்காக மீண்டும் நன்றிகள் உங்களுக்கு !!

      Delete
  9. குழந்தை பருவத்தில் படித்தஒரு பாடல். உடலில் உறுதி உள்ளவரே உலகில் உறுதி உள்ளவராம்;
    இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமா?
    முழு பாடலை நீண்ட நாட்களாக தேடிக் கொண்டு இருக்கிறேன். தங்களிடம் இருந்தால் பகிருங்கள்

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பாடலை கேட்டதில்லையே Vaanadhi. அறிந்தால் கண்டிப்பாக பகிர்கிறேன்.

      Delete
  10. அன்புடையீர்,

    உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

    http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html

    தங்கள் தகவலுக்காக!

    நட்புடன்

    ஆதி வெங்கட்
    திருவரங்கம்

    ReplyDelete
  11. அருமையான பணி

    பயனுள்ள பாடல் தொகுப்பு
    வாழ்த்துக்கள்
    http://www.malartharu.org/2014/01/vikatan-viruthukal.html

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost