நான் குழந்தையாக இருந்த பொழுது ஓரிரு பொம்மைகள் தான் வைத்திருந்தேன், தொலைக்காட்சிப் பெட்டி வீட்டில் கிடையாது, புதுத்துணிகள் வெறும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் தான், என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிடுவோம், தொலைபேசி, செல்போன், வீடியோ கேம்ஸ் கிடையாது என்றெல்லாம் உங்கள் குழந்தையிடம் சொல்லிப் பாருங்கள். அப்புறம் எப்படி உயிரோடு இருந்தீர்கள் என்கிற கேள்வி குழந்தையிடமிருந்து வரும். பொருட்கள் இல்லாமல் வாழவே முடியாது என்று பெரும்பாலான இக்கால குழந்தைகள் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் அல்ல பெற்றோர்களாகிய நாம், அரசாங்கம், கம்பெனி முதலாளிகள் மற்றும் ஊடகங்கள்.
தொலைக்காட்சி விளம்பரங்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் தயாரிக்கப்படுகின்றன. வெறும் பொம்மைகள், மிட்டாய்கள், பிஸ்கட்கள் போன்ற குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்கள் மட்டும் குழந்தைகளை ஈர்க்கவில்லை. பெரியர்வர்கள் பயன்படுத்தும் கார், செல்போன், தொலைக்காட்சி போன்ற பொருட்களின் விளம்பரங்களும் குழந்தைகளைக் குறிவைக்கின்றன. ஏனென்றால் தங்கள் செல்வாக்கால் தங்கள் பெற்றோர்களைக் குறிப்பிட்ட பொருளை வாங்கத் தூண்டுபவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். 8 வயது குழந்தை எந்த கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்று சொல்லுவதையும், 12 வயதில் எந்த கார் வாங்க வேண்டும் என்று சொல்லுவதையும் நாம் சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். எல்லா விஷயங்களும் தெரிகிறது என்று மகிழ்ச்சியும் அடைகிறோம்.
இதனால் ஏற்படும் தீமைகளை நாம் யோசிப்பதில்லை.
குழந்தைகள் மனிதர்களை மதிப்பதை விட அவர்கள் வைத்திருக்கும் பொருட்களை மதிக்கக் கற்றுக் கொள்கிறார்கள். என்னிடம் இது இல்லையென்றால் என்னைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். நிலையில்லா வாழ்க்கையில் இன்று கிடைக்கும் பொருள் நாளை கிடைக்காமல் போனால் எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல் வளர்கிறார்கள். நாம் கேட்பது எல்லாம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள, கிடைக்கவில்லை என்றால் தாழ்வு மானப்பானமை அடைக்கிறார்கள்.
நம்மால் ஊடகங்களையோ, அரசையோ, கம்பெனியையோ எளிதில் மாற்ற முடியாது. ஆனால் நம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் எனும் போது நாம் ஏன் நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது?
எனக்குத் தோன்றும் சில யோசனைகள் :
1. நான் இந்தப் பிராண்ட் சட்டை தான் போடுவேன், அந்தப் பிராண்ட் ஷூ தான் போடுவேன் என்று குழந்தைகள் முன்னிலை வாங்கியோ பேசியோ அவர்களை அந்தப் பிராண்ட் அடிமைகள் ஆக்க வேண்டாம்.
2. புது பொருள் சந்தைக்கு வந்திருக்கிறது. நம் பொருளில் அந்த வசதிகள் இல்லை என்று நாம் உபயோகப்படுத்தும் பொருள்களை மாற்றிக் கொண்டே இருந்தால் குழந்தையும் நாளை அதை முறையில் பயணிக்கும்.
3. ஒவ்வொரு முறையும் கடைக்குச் செல்லும் பொழுது கண்டிப்பாக வெளியில் சாப்பிடுவோம் என்பதை விட்டு, மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் ஹோட்டல் என்று குழந்தைக்கு புரிய வைத்து, எந்த ஹோட்டல் என்று அவர்களை தேர்ந்தெடுக்கச் சொல்லலாம்.
4. அவளிடம் அத்தனை டிரெஸ் இருக்கிறது, இவனிடம் இத்தனை பொம்மை இருக்கிறது என்று பிறர் வைத்திருக்கும் பொருளால் தனக்கும் வேண்டும் என்று நினைக்கும் குழந்தையிடம் உனக்கு தேவையென்றால் நாங்கள் கண்டிப்பாக வாங்கித் தருவோம் என்று புரிய வைக்கலாம். மிகவும் தேவையானதை வாங்கித் தந்தால் குழந்தையும் நம்மை நம்பும்.
5.விளம்பரங்களை நம்மால் முற்றிலும் புறக்கணிக்க முடியாது. தொலைக்காட்சி நேரத்தை நாம் குறைத்துக் கொள்வது மூலம் அதன் தாக்கதைச் சற்று குறைக்கலாம. அனைத்து நிகழ்ச்சிகளும் யூடியுப்பில் விளம்பரங்கள் இல்லாமல் வருகின்றன. நெட் வசதி இருந்தால், குழந்தைகள் முன்னிலையில் விளம்பரங்களுடன் தொலைக்காட்சியில் பார்க்காமல், குழந்தைகள் இல்லாத பொழுது விளம்பரங்கள் இல்லாமல் கம்ப்யூட்டரில் பார்க்கலாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் :))
6.குழந்தைகளுக்கு "தேவைகள்" "விருப்பங்கள்" பற்றிய புரிதலை அதிகரிக்கலாம். சற்று பெரிய குழந்தைகளுக்கு நம் பொருளாதார நிலையையும் புரிய வைக்க முயற்சிக்கலாம். கடைகளுக்குச் செல்லும் முன், தேவையான வாங்க வேண்டிய பொருட்களை ஒரு தாளில் எழுதச் சென்று அதை மட்டும் வாங்கலாம்.
7. மகிழ்ச்சி என்பது பொருளில் மட்டும் இல்லை என்பதை புரிய வைக்க வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுடன் நேரம் செலவளிக்கலாம்.
இவை எனக்குத் தோன்றியவை. உங்கள் அனுபங்களை/யோசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன். அனைவருக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்!!
வணக்கம்
ReplyDeleteநல்லா சிந்திக்க வைக்கும் பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மகிழ்ச்சி என்பது பொருளில் மட்டும் இல்லை என்பதை புரிய வைக்க வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அவர்களுடன் நேரம் செலவளிக்கலாம். //
ReplyDeleteதியானா, நீங்கள் சொல்வதை அப்படியே வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.
இப்போது உள்ள சில பெற்றோர், பிள்ளைகள் மனநிலையை அழகாய் படம் பிடித்து காட்டி விட்டீர்கள்.
என் கணவர் எங்களிடம் தேவையான பொருட்களை எழுதி வையுங்கள் எப்போது முடியுமோ அப்போது வாங்கலாம். என்பார்கள். அது போல தக்க சமயத்தில் தேவையானதை வாங்கித் தருவார்கள்.
இப்போது வாங்கும் திறனும் மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. அதற்கேற்றால் போல் விளம்பரங்கள் வேறு.
அருமையான பதிவு.
ஆழமான சிந்தனையுடன் கூடிய
ReplyDeleteஇன்றைய சூழலுக்கு அவசியமான
அருமையான பகிர்வு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteஉண்மைதான். நான் போன ஜெனரேஷன் ஃபோன் வச்சுருக்கேன்னு மகள் சொல்லிவிட்டு அதைப் பார்க்கும் பார்வை இருக்கே... அப்பப்பா......
ReplyDeleteதீபாவளி, பொங்கல். பிறந்தநாள் என்று மூணு செட் உடைகள்தான் கிடைக்கும். பள்ளிக்கூடம் திறக்கும் சமயம் ஒரு நாலு செட் தினசரி பயன்பாட்டுக்கு. அவ்ளோதான் மொத்த வார்ட்ரோபுமே!
இப்பப்பாருங்க......... வீட்டுவீட்டுக்கு கப்போர்ட் நிறைச்சு துணிமணிகள். தேவைன்னு நினைச்சு யாருமே வாங்கறதில்லை. புதுசா வந்துருக்கு மார்க்கெட்டில் என்பதே முக்கியமாப்போச்சு:(
ஒவ்வொரு பெற்றோரும் அறிந்து கொள்ள வேண்டிய யோசனைகள்... நன்றி... பாராட்டுக்கள்...
ReplyDeleteஒரு பென்சில் போதும் என்று இருக்கையில் பல பென்சில்கள். தன தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவனை திருடன் என்பாராம் காந்திஜி. இந்தக் கதையைச் சொன்னால் குழந்தைகள் இருப்பதில் திருப்தி அடைவார்களா?
ReplyDeleteஉங்கள் யோசனை எல்லாமே நன்றாக இருக்கிறது. கேட்பவர்கள் யார் என்றுதான் புரியவில்லை.
உண்மை தியானா! தேவைக்கு வாங்குவது போய் சும்மா வாங்குவது, பொழுதைப்போக்க வாங்குவது என்று மாறிவிட்டது. நீ சொல்வது போல குழந்தைகளுடன் நேரம் செலவிடுதலே நல்லது, ஆனால் அதைச் செய்ய இயலாத பலர் பொருட்களால் ஈடு செய்ய நினைக்கின்றனர் என்பது வருந்த தக்கது. என் வீட்டில் தொலைக்காட்சி இல்லை என்று நீ அறிந்ததே..ஆனாலும் பள்ளியில் இவன் சொன்னான் அவன் சொன்னான் என்று விளம்பரப் பொருட்கள் பற்றி பெரியவன் கேட்கிறான்...விற்பனைக்காக மிகுதியாக ஏதாவது சொல்வார்கள் என்று விளக்கினேன். புரிந்ததா என்று தெரியவில்லை. நிலையாமை ஒன்றே நிலையான உலகில் எந்தச் சூழ்நிலையிலும் வாழக் கற்றுகொடுக்கவேண்டும்..ஆனாலும் அது அவ்வளவு எளிதாக இல்லை..உதாரணத்திற்கு குளிர்சாதனப்பெட்டி போன்றவை..
ReplyDeleteஅருமையான பதிவு தியானா..எப்படி நடைமுறைப்படுத்துவது என்று பார்ப்போம். நான் பழைய பென்சில் பெரிதாக இருக்கும்பொழுதே இன்னொன்றைச் சீவுவதற்கு விடுவதில்லை..
நல்லதொரு யோசனைகள். குழந்தைகளிடம் புரிய வைக்க வேண்டியது நம் கையில் தான் இருக்கிறது...
ReplyDeleteதங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்ட அனைவரும் நன்றிகள்!!
ReplyDeleteநன்றாக எழுதியிருக்கிறீர்கள் தியானா! கிட்டத்தட்ட நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் பின்பற்றுகிறேன். ப்ராண்ட் மோகம் ஒருபோதும் இருந்ததில்லை. குழந்தைகள் அந்த வயதில் குழந்தைகளாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். என் மகனுக்கு நாம் விளம்பரங்களே காட்டுவதில்லை. மற்றப்படி இருப்பதை விட்டு அடிக்கடி தனக்கு வேறு புதிதாக விளையாட்டுச் சாமான்கள் வேண்டுமெனக் கேட்டால் இயலுமானவரை கதைத்துப் புரிய வைக்க முயற்சிப்பேன். அதோடு குழந்தைகள் creative ability மிகுந்தவர்கள். ஒன்றும் இல்லாவிட்டால் கூட ஏதோ கற்பனை செய்து விளையாடக்கூடியவர்கள். அந்த சக்தியை இன்னும் ஊக்குவிக்க முயன்றலும் நல்லது என்று நினைக்கிறேன்.
ReplyDeleteமிகவும் அற்புதமான பதிவு.. தாங்கள் நிச்சயம் ஒரு பொறுப்புள்ள புத்திசாலி பெற்றோர் தான். கடைகளுக்குப் போகும் போது குறிப்பாக காய்கறி போன்ற அன்றாட தேவைகளுக்கான கடைகளுக்கு ஓரளவு வளர்ந்த குழந்தைகளைக் கூட்டிச் செல்வதன் மூலம் விலைவாசி குறித்து அறிவர். வீட்டு வரவு செலவுகள் குறித்து சண்டையிடாமல் இரவு உணவுக்குப் பின் அமர்ந்து கதைத்துக் கொள்ளலாம். குழந்தைகள் தாம் செய்யும் செலவுகளை நோட்டில் குறிக்கச் செய்து மாதம் முடிந்த பின் மொத்த வரவு செலவுகளை அறியச் செய்யலாம். மேல் நாடுகளில் உள்ளது போல ஆண்டுக்கு ஒருமுறை பெற்றோர் பணியிடங்களுக்கு அவர்களை அழைத்துச் செய்ய செய்வதன் மூலம் பிள்ளைகள் பொறுப்பானவர்களாய் ஆவார்கள். தங்களின் இப்பதிவை முகநூலில் பகிர்கின்றேன். நன்றிகள்!
ReplyDelete