Tuesday, December 29, 2009

Sight words

கடந்த ஒரு மாதமாக எழுதவில்லை. சொந்த வேலைகள் அதிகமென்றாலும் எழுத விஷயம் இல்லையென்பதும் ஒரு காரணம். தீஷுவிற்கு இப்பொழுது கற்பதை விட கற்றுக் கொடுப்பதற்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. நேரம் செலவழித்து நாம் தயாரித்து அவள் முன்னால் எடுத்துச் சென்றால், நொடி பொழுதில் அவள் டீச்சராகி அவள் இஷ்டத்திற்கு சொல்லித்தர ஆரம்பித்து விடுகிறாள். முதலில் நாம் சொல்லும் ஆக்டிவிட்டி அவளுக்குக் கடினமானதாக இருக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் அனைத்திற்கும் அவ்வாறே செய்ததால் சில காலம் விட்டுப் பிடிக்கலாம் என்று விட்டு விட்டேன். அவள் நேரம் அவள் பொம்மையுடனே கழிகிறது. அப்பொழுதும் அம்மா விளையாட்டு... அவள் கற்பனைத்திறன் அதிகரிக்கிறது என்று மகிழ்ந்தாலும் அவள் எப்பொழுதும் கற்பனை உலகத்திலிருப்பது நாம் அவளுடன் அதிக நேரம் செலவழிப்பது இல்லையோ என்றும் உறுத்துகிறது.



விருப்பம் காட்டிய சில நேரங்களில் சொல்லித்தந்தவை....

ஆங்கிலம்






Slight words : ஆங்கிலத்தில் சில வார்த்தைகளை phonetics முறையில் கற்க முடியாது. அத்தகைய வார்த்தைகளைப் பார்த்தவுடன் படிக்க வேண்டும். தெளிவாகச் சொன்னால் மனப்பாடம் செய்ய வேண்டும். அவ்வாறுள்ள வார்த்தைகளை Dolch என்பவர் தொகுத்திருக்கிறார். அதில் 220 வார்த்தைகள் உள்ளன. அந்த தொகுப்பு இணையத்தில் கிடைக்கிறது. குழந்தைகள் புத்தக்கத்தில் அவ்வார்த்தைகள் தான் 50 - 75 % வரை இருக்குமாம். Dolch லிஸ்ட்டில் சில வார்த்தைகள் phonetics முறையில் வாசிக்கும் படிதான் இருக்கிறது. அதில் 2 எழுத்து வார்த்தை தொகுப்பு http://www.childcareland.com/ யிலிருந்து எடுத்துக் கொண்டு தீஷுவிற்கு சொல்லிக் கொடுத்தேன். அதில் 16 வார்த்தைகள் இருந்தன். 4 வார்த்தைகள் மட்டும் எடுத்துக் கொண்டோம். மாண்டிசோரி 3 period method முறையில் சொல்லிக் கொடுத்தேன். முதலில் வார்த்தைகளைத் தொட்டு சொன்னேன். பின்பு நான் சொல்ல அவள் எடுத்துக் கொடுத்தாள். பின்பு ஒவ்வொன்றையும் அவள் வாசித்தாள். மற்ற வார்த்தைகளுடன் கலந்தவுடன் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் அதே தளத்திலிருந்து வேறொன்று எடுத்து நான் வாசித்து அவளை மரத்திலுள்ள வார்த்தையின் மேல் பொருத்தச் சொன்னேன். எனக்கு இந்த மனப்பாட முறையில் கற்றுத்தர முடியாது என்று தோன்றுகிறது. ஆனால் இந்த வார்த்தைகளை பொனிடிக்ஸ் முறையிலும் வாசிக்க முடியாது. Bingo போன்ற விளையாட்டு மூலம் கற்றுத்தர முடியுமா என்று பார்க்க வேண்டும்.


கணிதம் :


1. Cuisenaire Rods - Rod டைப் பார்த்தால் அதன் மதிப்பைச் சொல்லக் கற்றுக் கொண்டுவிட்டாள். அதனால் பத்திலிருந்து ஒன்று வரை தலை கீழாக சொல்ல கற்றுக் கொடுத்துள்ளேன். முதலில் பெரியது முதல் சிறியது வரை ராடை அடுக்க வேண்டும். பின்பு அதன் மதிப்பைச் சொல்ல வேண்டும். ராடு இல்லாமல் சொல்லத் தெரியாது. பில்டிங் ஸெட் கொண்டு இது போல் ராடு உருவாக்கி கூட சொல்லிக் கொடுக்கலாம்.


2. Cuisenaire Rod கொண்டு இரண்டு எண்களில் பெரியது சிறியது சொல்வது. இதைப் பழகியவுடன் மூன்று எண்களை சிறியது முதல் பெரியது வரை அடிக்குவதற்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.



3. கூட்டலில் ஆர்வம் வந்திருக்கிறது. இரண்டு கை விரல்களைக் கொண்டு எப்பொழுதும் 3 +3 = என்றும், 4 + 2 = என்றும் அவளாகவே கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஊக்கப்படுத்த செயல்முறைகள் செய்ய வேண்டும்.



அறிவியல் :





1. தாத்தா, வீட்டின் பின் வைத்த தக்காளி செடியில், தக்காளி காய்க்கத் தொடங்கி விட்டது. சில வாண்டுகள் பிஞ்சை எடுத்து மிதித்து, வீண் அடிப்பதால், தாத்தா பிஞ்சை பறிக்க ஆரம்பித்து விட்டார். சிலவற்றை எங்களுக்கு சமைக்கக் கொடுத்தார். மினியேச்சர் தக்காளியைப் பார்த்தவுடன் தீஷுவிற்கு சந்தோஷம். அவளுக்குத் தக்காளி பூவைக் காட்டி பூவிலிருந்து பழம் வருவதைக் காண்பித்தேன். இப்பொழுது தான் சாப்பிடும் ஒரு பொருள் செடியிலிருந்து வருவதை அவள் நேரில் பார்க்கிறாள். வீட்டிற்கு வந்தவுடன் அவளே மூன்று தக்காளிகளை வெட்டினாள். இந்த முறை நான் சமைக்க பயன்படும் கத்தியையே கொடுத்து விட்டேன்.






2. இது அப்பா செய்து காட்டியது. தண்ணீரில் போட்டால் உலர்ந்த திராட்சை மூழ்கிவிடும். அதில் பேக்கிங் சோடா கலந்தவுடன் திராட்சை மிதக்க ஆரம்பித்துவிடும். நன்றாக வரவில்லை. ஆனால் தீஷுவிற்கு நுரை பொங்கும் தண்ணீரில் விளையாட ஆர்வம் அதிகமாகவே இருந்தது.





3. Solid, Liquid, Gas பற்றி சொல்லிக் கொடுத்தேன். ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டோம். Solid என்றேன். அதை அடுப்பில் வைத்து சூடு ஆக்கி தண்ணீர் ஆக்கி Liquid என்றேன். சிறிது நேரம் கழித்து, மீண்டும் தண்ணீரை ஃப்ரிச்சில் வைத்து ஐஸ் கட்டிகள் ஆக்கினோம். பலூன் கொண்டு காற்றினால் பெரிதாகிறது என்று விளக்கினேன்.




Visual discrimination :





1. இது http://www.childcareland.com/ டிலிருந்து எடுத்தது. படங்களை அதன் ஜோடியோடு பொருத்த வேண்டும்

Wednesday, November 25, 2009

மூன்றெழுத்தில்....





தீஷுவின் வாசிப்பு ஆர்வத்திற்கென சில வார்த்தைகளை அதன் படங்களுடன் இணைத்தோம் என்பதை இங்கு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக ஒரு படத்தை ஒரு பேப்பரில் ஒட்டி விட்டு அதன் அடியில் அதன் வார்த்தையை மாக்னெட்டிக் எழுத்துகளைக் கொண்டு வரைந்து விட்டேன். பென்சிலால் அனைத்து வார்த்தைகளையும் வரைந்து முடிந்தவுடன், மார்க்கரால் ஒரு வார்த்தை எழுதி முடித்தவுடன், மற்ற அனைத்தையும் தான் தான் செய்ய வேண்டும் எனச் சொல்லிவிட்டாள். புகைப்படங்கள் படங்கள் ஒட்டும் முன் எடுத்தவை. படத்தைப் பார்த்து எழுத்துக்களை வார்த்தையின் மேல் அடுக்கி வாசிக்க வேண்டும். தீஷு மிகவும் ஆர்வமாகச் செய்யவில்லை.








அடுத்து ஒரு அட்டையில் மூன்று பாகங்களாகப் பேப்பர் ஒட்டிவிட்டேன். இரண்டாம் பாகத்தில் vowels. முதல் மற்றும் மூன்றாம் பாகத்தில் consonants. நான் தேர்ந்தெடுத்த முதல் பாக consonants - B, C, M, H, R, மூன்றாம் பாக consonants - T, P, D, N. படங்களிலுள்ளது போல் அனைத்து வார்த்தைகளுக்கும் அர்த்தம் வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் blend செய்வதற்கு நல்லதொரு பயிற்சியாக அமையும். இந்த ஐடியா நெட்டிலிருந்து எடுத்தது.

Sunday, November 22, 2009

ஸ்பைடர் மேன் ஸ்பைடர் மேன் - பெங்களூர் புத்தகக்கண்காட்சி

சென்ற வாரம் பெங்களூர் புத்தகக் கண்காட்சி சென்றிருந்தோம். காலை முதல் மழை பெய்வது போல் இருட்டிக்கொண்டேயிருந்தது. அப்படித்தான் இருக்கும் ஆனால் பெய்யாது என்று ஒரு நம்பிக்கையில் சாயங்காலம் கிளம்பிவிட்டோம். பாலஸ் கிராவுண்டில் புத்தகக் கண்காட்சி. நாங்கள் பாலஸ் கிராவுண்ட் என்று நினைத்துச் சென்ற இடத்தில் கண்காட்சி நடப்பது போல் ஒரு அறிகுறியே இல்லை. பக்கத்தில் விசாரித்ததில் நேராகச்செல்ல வேண்டும் என்றார்கள். ஆனால் எவ்வளவு தூரம் என்று சொல்லவில்லை. இங்கு அங்கு விசாரித்து, லேஃப்ட் போய், ரைட் போய் என எங்கு வந்திருக்கிறோம் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 30 கிமி. உள்ளே நுழையும் முன்னே மனதில் சின்ன எண்ணம் - கிளம்பும் முன் மழை வந்துவிடக்கூடாது என. நாங்கள் எங்கு இருக்கும் என்று எங்களுக்கேத் தெரியாததால் ஒரு மணி நேரமே இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம்.

முதலில் நுழைந்தவுடனே இடது பக்கத்தில் தமிழ் கடை. அப்பா எங்களை மறந்து விட்டார். புத்தகங்களை அள்ள ஆரம்பித்து விட்டார். சாவியின் வாஷிங்டனில் திருமணம் நான் வாங்கச் சொன்னேன். தீஷு ஆரம்பித்து விட்டாள்.. "அம்மா பசிக்குது..". என்னால் பார்க்கக்கூட முடியவில்லை. அடுத்த கடையில் நான் Chetan Bhagat தின் 2 states வாங்கினேன். Lords of the rings வெகு நேரம் யோசித்து பின்பு இவ்வளவு பெரிய புஃகை என்னைக்கும் படிக்க முடியாது என்று வாங்கவில்லை. அடுத்து ஒரு கடையையும் தீஷு பார்க்க விடவில்லை. அப்பா கையில் புத்தகங்கள் இருந்ததால் நான் அவளை தூக்க வேண்டியிருந்தது. என்னால் தூக்கிக்கொண்டு பார்க்க முடியவில்லை. தீஷுவிற்கு என மூன்று வாசிக்கப்பழக சிறு வாக்கியங்கள் கொண்ட புத்தகங்கள் வாங்கினோம். பின்பு இந்திரா செளந்திர்ராஜனின் சிவம் வாங்கினோம்.

பின்பு ஒரு கடையில் குழந்தைகளின் புத்தகங்கள் பத்து ரூபாய் என பழைய புத்தகங்கள் கிடைத்தன. அதில் வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த முத்துகள் சில கிடைத்தன.

பத்து டாலர் என்று மிரட்டிய புத்தம் - Hush little baby (நூறு தடவைக்கு மேல் வாசித்தாகி விட்டது.)


I Spy ( Library யில் படித்தது இப்பொழுது சொந்தமாக)








புத்தகக் குவியலில் தேடிக்கொண்டிருக்கும் பொழுது தான் தீஷு இத எடுத்துக்கிடவா என்றாள். அவசரத்தில் பார்க்காமல் புத்தகம் தானே என்று சரி என்றேன். பணம் கொடுக்கும் பொழுது தான் பார்த்தேன் அது ஒரு ஸ்பைடர் மேன் புத்தகம். தீஷுவிற்கு பார்னி மட்டுமே முன்பு தெரியும். இப்பொழுது ஸ்பைடர் மிகவும் கவர்ந்து விட்டர். நான் யூ டியூபில் ஆரம்பப்பாடல் காண்பித்தேன். மிகவும் பிடித்து விட்டது. ஸ்பைடர் மேன் பறப்பாரு, இங்க பாரு டிரெஸில் ஸ்பைடர், இவர் மேன் அதனால தான் ஸ்பைடர் மேன் என எனக்குப் பல தகவல்கள் தருகிறாள்.


விகடன் பிரசுரத்தைப் பார்த்தவுடன் கிடைத்த மகிழ்ச்சியை இங்கிருந்த புத்தகங்களால் தக்க வைக்க முடியவில்லை. நான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த கிராமத்து விளையாட்டுகள் கிடைக்கவில்லை. அப்பா விஷ்ணுபுராணம் வாங்க வேண்டும் என்றார். தீஷுவின் நிஜமா சொல்றேன் அம்மா.. ரெம்ப பசிக்குது என்ற வாக்கியம் எங்களை கிளப்பியது. வெளியே சாப்பிடும் இடம் வந்தவுடன் நேரம் பார்த்தல் இரண்டரை மணி நேரம் ஆகி இருந்தது.


மழையின் கவலையுடனும், தீஷுவின் தொல்லையுடனும் எங்கள் முதல் புத்தகக் கண்காட்சி அனுபவம் இனிதே முடிந்தது. அடுத்த வருஷம் உன்னைய யார்கிட்டயாவது விட்டிட்டு தான் வருவோம் என்று அவளே மிரட்டிக்கொண்டும், மழை வரக்கூடாது என வேண்டிக் கொண்டும் வீடு வந்தோம்

ஸ்அன்

தீஷுவிற்கு வாசிப்பதற்கு ஆர்வம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எதைப் பார்த்தாலும் படிப்பது போல் எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டேயிருக்கிறாள். அதனால் அவளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என CVC (Consonants - Vowels - Constants ) வார்த்தைகளும் அதற்குரிய படங்களையும் எடுத்துக் கொண்டு வார்த்தைகளை வாசித்து படங்களுடன் பொருத்தச் சொல்லலாம் என்று படங்கள் தேடிய பொழுது இந்த தளம் கிடைத்தது. ஃப்ரியாக ரிஜிஸ்டர் செய்து கொண்டால் டவுன் லோடு செய்து கொள்ளலாம். மிகவும் உபயோகமான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனக்கும் தளத்தை முழுமையாகப் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. பார்க்க வேண்டும்.


16 படங்களும் வார்த்தைகளும் இருந்தன. தீஷுவே அனைத்தையும் வார்த்தைகள் தனியாகவும் படங்கள் தனியாக வெட்டினாள். பின்பு மூன்று வார்த்தைகளையும் அதன் படங்களையும் எடுத்துக் கொண்டோம். மூன்று படங்களயும் காண்பித்து அதன் பெயர்களைச் சொன்னேன். பின்பு படங்களை வரிசையாக இடமிருந்து வலமாக அடுக்கினோம். பின்பு வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்து அந்த படத்தின் கீழே அடுக்கினோம். தீஷு மூன்று வார்த்தைகள் முடித்தவுடன் அடுத்த மூன்று என அதிகரித்து 16 படங்களையும் செய்தோம். சில வார்த்தைகள் வாசிப்பதற்கு சிரமப்படுகிறாள். உதாரணத்திற்கு S-U-N பார்த்தவுடன் ஸ்-அ-ன் என்று சொல்லி ஸ்அன் என்கிறாள். ஸன் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் வாசித்தவுடன் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்பா வந்தவுடன் சந்தோஷப் பகிர்தல் நடந்தது..

கவர்ந்த தருணங்கள் 22/11/09

1. தீஷு: "அப்பா.. படிச்சிட்டு புஃக்கை புஃக் ஸெல்ப்ல வைக்காம ஸோபாலே வச்சிட்ட பாரு.ஏன்?"
அப்பா : "எடுத்து வைச்சிடுறேன் டா.."
தீஷு : "சரி, எடுத்து வைக்கும் பொழுது கீழ இருக்கிற என் புஃக்கையும் எடுத்து வச்சிடு.."

2. தீஷு ஸட் டவுன் செய்து கொண்டிருக்கும் பொழுது, லாப் டாப்பை மூடப் போனாள்.
அம்மா :"தீஷு, மூடாத..."
தீஷு : "ஏன்?"
அம்மா : "ஸிஸ்டம் கெட்டு போயிடும்"
தீஷு : "சாப்பிடுகிற பொருள் தானே கெட்டு போகும்.. ஸிஸ்டம் எப்படி கெட்டு போகும்?"

3. கடந்த நான்கு தினங்களாக தீஷுவிற்கு கடிமையான ஜுரம். ஒரு நாள் கிட்டத்தட்ட 104C.என்ன மருந்து கொடுத்தாலும் குறையவேயில்லை. ஜுரத்தினால் தூக்கத்தில் அரற்றிக் கொண்டிருந்தாள். அப்பொழுது தனியாக அவளை கவனித்துக் கொண்டிருந்த எனக்கு பயமாக இருந்தது. ஆனால் இப்பொழுது சரியாகி விட்டதால், அவள் தூக்கத்தில் சொன்னது சந்தோஷமாக இருக்கிறது.. அவள் சொன்னது "அம்மா... எனக்குப் புஃக் படிச்சுக் காட்டு.. இன்னொரு புஃக் படிச்சுக் காட்டு.." திரும்ப திரும்ப 10 தடவைக்கு மேல்..

Monday, November 16, 2009

பட்டாம் பூச்சி வந்தது எப்படி?

தீஷுவிற்கு அவளுக்குப் புரியும் வகையில் மாதமொரு அறிவியல் தகவல் சொல்லித்தர வேண்டும் என்று நினைத்திருந்தேன். இரண்டு மூன்று மாதங்களாக ஆபிஸ் வேலையை விட சொந்த வேலைகள் அதிகம். அதில் எனக்குத் தயார் செய்ய நேரம் கிடைக்க வில்லை. இப்படியே விட்டால் எப்பொழுதும் செய்ய முடியாது என்று என்னால் முடிந்த வரை முயற்சி செய்து, பட்டாம் பூச்சியின் வளர்ச்சி படிகள் பற்றி கடந்த ஒரு மாதமாக சொல்லிக் கொடுக்கிறேன்.

1. முதலில் பட்டாம் பூச்சியின் சுழற்சியை விளக்கும் புத்தகமான Caterpillars by Robyn Green வாசித்தோம். The very hungry caterpillar புத்தகம் இல்லை. இருந்திருந்தால் அதை விட நல்ல புத்தகம் கிடையாது.

2. பின்பு நெட்டிலிருந்து படங்கள் எடுத்து வந்து அவளை அடுக்கச் செய்தேன்.

3. பெயிண்ட்டை பேப்பரின் நடுவில் கொட்டி, இரண்டாக பேப்பரை மடித்து, பட்டாம் பூச்சிகள் செய்தோம்.

4. ஸீக்கொன்சிங் கார்டு வைத்து அதன் வளர்ச்சிப்படிகளை வரிசையாக அடுக்கினோம்.


பட்டாம்பூச்சி மையமாக வைத்து எண்ணுதல், கூட்டல்,மாட்சிங் முதலிய அட்டைகள் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. அடுத்த தகவல் படிக்கும் முன் நன்றாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

Sunday, November 15, 2009

பஸில் பாய்




ஞாயிறு அன்று மழை வருவது போல் இருந்ததால் வெளியே செல்ல முடியாமல் மீண்டும் இந்த 100 பீஸ் பஸில் செய்தோம். சென்ற முறை போல் நானும் தீஷுவும் ஒரு டீம், அப்பா தனி டீம். நாங்கள் இருவர் என்பதால் வேகம் அதிகம் என்று நினைக்கக் கூடாது. தீஷுவின் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் பொறுமையை சோதித்துவிடும். இருந்தாலும் எங்கள் கூட்டாணியே பாதிக்கு மேல் சேர்த்தோம். அன்று போல் இன்றும் தீஷு அப்பாவை வெறுப்பேத்திக் கொண்டேயிருந்தாள். சென்ற முறை போட்டோ எடுக்க முடியவில்லை. இந்த முறை போட்டோ எடுக்கும் முன் தீஷு அதன் மேல் படுத்துவிட்டாள். பஸில் கிட்டத்தட்ட நான்கு அடி.








தீஷுவிற்கு இப்பொழுது செயல்முறைகளை விட பேப்பரில் செய்யும் வொர்க் ஸீட்டுகளில் விருப்பமிருப்பதால், http://www.prekinders.com/ மெய்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த Pattern Blocks பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷம். ஏனென்றால் எங்களிடம் இருக்கும் Blocks க்கு இந்த படங்கள் பொருத்தமாக இருக்கும். எங்களிடம் இருக்கும் படங்களில் வண்ணங்கள் இருக்கும். அதனால் வண்ணங்கள் இல்லாத படங்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டோம். தீஷு நன்றாகச் செய்தாள். முடித்தவுடன் படங்கள் இல்லாமல் வடிவங்கள் வைத்து வெவ்வேறு வடிவங்கள் செய்து கொண்டிருந்தோம். Visual discrimination க்கு ஏற்றது

கவர்ந்த தருணங்கள் 15/11/2009

1. தீஷு ஒரு மீன் பொம்மை எடுத்து வ‌ந்து,

"அம்மா, இந்த‌ மீன் பெய‌ர் தெரியுமா?"
"தெரிய‌லையேடா"
"ஸ்வைன் ஃபிஷ்"

2. வீட்டிற்குத் தேவையான‌ பொருட்க‌ள் வாங்க‌ வேண்டிய‌ லிஸ்ட்டை எழுதி வைத்திருப்போம். அதில் தீஷு OPAT என்று எழுதி வைத்திருந்தாள். அப்பா,
"என்ன‌ வாங்க‌ணுமினு எழுதியிருக்க‌?"
"O says ஆ, ஆ வாங்க‌ணுமினு எழுதியிருக்கேன்..
சிறுது நேர‌ங்க‌ழித்து அவ‌ளாக‌வே, O says ஆ.., ஆரெஞ்ச் வாங்கணுமினு எழுதி வைத்திருக்கிறேன் என்றாள்.

3. அப்பா பிரெஷ் செய்து விடும் பொழுது,
"எங்க இரண்டு பேருக்கும்(தனக்கும் தீஷுவிற்கும்) எல்லாம் தெரியும்.. இரண்டு பேரும் நோபல் பிரைஸ் வாங்க போகிறோம்.. ஏண்டா தீஷு"
(எங்கே தன்னை தனியா அனுப்பிவிடுவார்களோ என்று பயந்து) "வாங்க நீயும் கூட வருவியா?"
"ஆமாடா"
"சரி வா..இப்பவே போய் வாங்கிட்டு வந்திடுவோம்"
"சும்மா குடுக்க மாட்டாங்க.. ஏதாவது புதுசா கண்டுபிடிச்சாத்தான் கொடுப்பாங்க"
அனைவரும் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க,சில நிமிடங்களில் தீஷு ஓடி வந்து
"கண்டுபிடிச்சிட்டேன்.. கண்டுபிடிச்சிட்டேன்"
என்ன என்று பார்த்தால், நான் ஒரு புது பஸில் வாங்கி வைத்திருந்த கவர். அவளைப் பொருத்தவரை பார்த்திராத புதிய பொருள்.. கண்டுபிடித்து எடுத்து வந்திருக்கிறாள் நோபால் பரிசு வாங்குவதற்காக..

Monday, November 9, 2009

பென்சில் சீவி விட்டு...

தீஷுவிற்கு ஒவ்வொரு வாரயிறுதியிலும் கலரிங்கோ அல்லது எழுதுவோ கொடுப்பர். இந்த ஞாயிறு அவள் கலர் செய்யும் பொழுது அவள் டப்பாவிலிருந்த அனைத்து கலர் பென்ஸில்களும் கூர்மையாக இல்லாததைக் கவனித்தேன். அனைத்தையும் சீவி முடித்தப்பின் நிறைய துகிள்கள் (Pencil Scrap) இருந்தன. அதை வைத்து கோலாஜ் செய்தோம். முதலில் ஒரு ஹார்ட் வரைந்து கொடுத்தேன். அதன் மேல் அவளை கம் தடவ செய்து, அதன் மேல் தூவி விட்டோம். பின் காகிதத்தைத் தட்டி அதிகமுள்ளதை எடுத்து விட்டோம். தீஷு மேலும் மேலும் பல வடிவங்கள் வரைந்து செய்து கொண்டிருந்தாள். அடுத்து துகிளை வைத்து அதன் ஓரத்திலுள்ள வண்ணத்திலிருந்து அது எந்த பென்ஸிலிலிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் விருப்பமாகச் செய்தாள். மொத்தத்தில் அரைமணி நேரம் சேர்ந்து பொழுதைக்கழிக்க இந்தத் துகிள்கள் உதவின.




தீஷு இன்று Sharper உபயோகிக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள். சீவி முடித்தவுடன், அதை எடுத்துக் கொண்டு, இதே மாதிரி ஒட்ட வேண்டும் என்று நாங்கள் அன்று எவ்வாறு ஆரம்பித்தோமோ அதே வரிசையில் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

Saturday, November 7, 2009

ஆப்பிள் வாங்கலையா ?? ஆப்பிள்...

தீஷுவின் ஆர்வம் இப்பொழுது கற்பனை விளையாட்டுகளின் மேல் (Creative play).அவளின் ஆர்வத்திற்கு தகுந்தாற் போல் எங்கள் விளையாட்டுகளை மாற்றி அமைத்துக் கொண்டோம். அதில் ஒன்று மார்க்கெட் விளையாட்டு. ரூபாய் நூறு, பத்து, ஐந்து, இரண்டு, ஒன்று என்று எடுத்துக் கொண்டோம். சில விளையாட்டு காய்கறி ஆப்பிள், ஆரெஞ்ச், கிரேப்ஸ், முட்டை கோஸ் போன்றன எடுத்துக் கொண்டோம். முதலில் தீஷுவிற்கு வாங்குபவர்கள் பணம் கொடுக்க வேண்டும், விற்பவர்கள் காய்கறி கொடுக்க வேண்டும் என்று புரிய வைக்கவே நேரம் எடுத்தது. அவளுக்கு கைப்பையையும் அவள் எடுத்து வர வேண்டும், பணமும் அவள் கொடுக்க வேண்டும், காயையும் அவள் கொடுக்க வேண்டும். விளக்கியப்பின் நன்றாக விளையாண்டாள். அவள் தான் வாங்குபவள். ஆப்பிள் எவ்வளவு என்றாள். பத்து ரூபாய் என்றவுடன் பத்து ரூபாய் எடுத்துக் கொண்டே "ஆப்பிள் அடிப்பட்டு இருக்கு.. வேற ஆப்பிள் தாங்க.." என்றாள்... பிழைத்துக் கொள்வாள் என்று நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறாக அவள் காய்களை எடுத்துச் சென்று சமைப்பது வரை எங்கள் விளையாட்டு தொடர்ந்தது. இரண்டு ஐந்து பத்து எனவும், ஐந்து ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் என விளக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பணத்தைப் பிரிக்கவும், கேட்கும் பணத்தை சரியாக எடுத்துக் கொடுக்கவும் பழகிக்கொண்டாள். எங்கு சென்றாலும் கார்ட்டு கொண்டு வாங்குவதால், பணம் கொடுத்தால் தான் பொருள் கிடைக்கும் என்பதை விளையாட்டுகள் மூலம் விளக்க வேண்டிய நிலை.. என்ன செய்வது?

இப்பொழுது நாங்கள்...

எதுவும் செய்வதில்லை. தீஷுவிற்கு இப்பொழுது எந்த அக்டிவிட்டீ செய்வதற்கும் விருப்பம் இருப்பதில்லை. நானும் அவளை வற்புறுத்துவதில்லை. குழந்தை எப்பொழுதும் எதையாவது கற்றுக் கொண்டேயிருக்கும். ஒன்றில் விருப்பமில்லையென்றால், அந்த ஒன்று குழந்தைக்கு மிகவும் எளிதாகவோ அல்லது மிகவும் கடினமானதாகவோ இருக்கிறது என்று அர்த்தம். தீஷுவிற்கு மிகவும் கடினம் என்று சொல்ல முடியாது. ஏன்னென்றால் நாங்கள் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் அதிக வேறுபாடுகள் கொண்ட ஆக்டிவிட்டீஸ்களை அறிமுகப்படுத்தவில்லை. ஆகையால் செய்வது அனைத்தும் அவளுக்கு எளிதாக மாறிவிட்டது என்று புரிந்தது.

நான் பெரிதும் பின்பற்றிவது - Basic Montessori activities under Five by David Gettman. முதல் முறை படித்த பொழுது ஒன்றும் புரியவில்லை. ஆனால் நிறைய விஷயம் இருக்கிறது என்று தெரிந்தது. நான்கு ஐந்து முறை படித்தப்பின்பே புரிய ஆரம்பித்தது. ஒரு உதாரணம் - குழந்தைக்குப் புத்தகத்தைப் பாதுக்காப்பாக பயன்படுத்தச் சொல்லிக் கொடுக்க கிட்டத்தட்ட 3 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தக்த்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏழு பிரியடு (period) இருக்கும் எனவும் ஒவ்வொரு பிரியடிலும் என்ன சொல்லித் தரவேண்டும் எனவும் எந்த வரிசையில் சொல்லித்தரவேண்டும் என்றும் விளக்கப்பட்டுயிருக்கும். ஒவ்வொரு பிரியடிலும் Pratical Life, Sensorial, Language, Maths மற்று Culture என ஐந்து பிரிவுகள். நான் அனைத்து ஆக்டிவிட்டீஸின் தலைப்பையும் ஒரு நோட்பாடில் டைப் அடித்து வைத்திருக்கிறேன். ஆனால் அனைத்தையும் இங்கு போடலாமா என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட அனைத்து தகவல்களும் இந்த தளத்திலுள்ளது.

நாங்கள் இப்பொழுது பிரியடு இரண்டில் இருக்கிறோம். பிரியடு ஒன்றில் சில ஆக்டிவிட்டீஸ் செய்து முடிக்கவில்லை. புதிதாக செய்ய ஆரம்பிக்கும் பொழுது தீஷுவிற்கு ஆர்வம் மறுபடியும் வரும் என்று நம்புகிறேன்.

Sunday, October 25, 2009

வ‌டிவேலுவும் நானும்

தீஷுவிடம் இப்பொழுது பல்பு வாங்குவது அதிகரித்துவிட்டது. கிட்டத்தட்ட என் நிலைமை வடிவேலு மாதிரியாகி விட்டது.

"அம்மா, என் விரல் எப்படி இருக்குனு பாரேன்.."

"நீட்டி வச்சியிருக்கியா?"

"இல்லை, எப்படி இருக்குனு சொல்லு.."

"அழுக்கா இருக்கா?"

"எங்க அழுக்கு இருக்கு, எப்படி இருக்குனு சொல்லு"

"பெருசா இருக்கா?"

"இல்ல, எப்படி இருக்குனு சொல்லு"

"சிறுசா இருக்கா?"

"இல்ல, எப்படி இருக்குனு சொல்லு"

(பொறுமை இழந்து )"தெரியலடா.."

"சரி, இங்க இருக்குனு சொல்லு..."

(அப்பாடா தப்பித்தால் போதும் என்று சந்தோஷத்தில்) "இங்க இருக்கு"

"சரி, எப்படி இங்க இருக்குனு சொல்லுற?"

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

***********************************************************

தீஷு ஒரு பேப்பரில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

"தீஷு, பால் குடிக்கிறீயா?"

(நிமிர்ந்து பார்த்து சற்று அதிகார தோரணையில்) "நான் எழுதிட்டு குடிக்கிறேனு எத்தன தடவ சொல்றது? திரும்ப திரும்ப கேட்கக்கூடாது"

"அப்படி சொன்னீயா?" (சொன்னது கேட்கவில்லை என்ற அர்த்தத்தில்)

சிறிது நேரம் யோசித்துவிட்டு, " சரி, நான் இப்பத் தான் சொல்லப் போறேன்.. எழுதிட்டு குடிக்கிறேன். இனிமேல் கேட்கக் கூடாது" (சொல்லவே இல்ல.. அதுக்குள்ள இப்படி ஒரு அதிகாரம்)..

எப்ப இப்படி தாக்கப்போறாளோனு ஒவ்வொரு நிமிஷமும் யோசிச்சுக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு..

வகுப்பறை

கிரஹப்பிரவேசத்திற்குப் போயிருந்தோம். அங்கு தீஷுவிற்கு ஒரு டப்பா கொடுத்தார்கள். தீஷுவிற்கு ஒரே சந்தோஷம் மற்றும் சந்தேகம் - திரும்பவும் வாங்கிவிடுவார்களா என்று. என்னிடம் வந்து, "இது நமக்குத்தானா இல்ல திரும்ப கொடுக்கனுமா" என்றாள். நமக்குத்தான் என்றவுடன் சந்தோஷம். "இத வச்சி டாலுக்கு Game சொல்லிக் கொடுக்கப் போகிறேன்" என்றாள். ஆஹா!! என் பொண்ணும் என்ன மாதிரியே ஆரம்பிச்சிட்டாளே என்று எனக்கு சந்தோஷம்.

வீட்டிற்கு வந்தவுடன், ஆரம்பித்து விட்டாள். நான் அப்பா மற்றும் ஒரு Bear மாணவர்கள். ஆளுக்கு ஒரு Blind Fold கொண்டு வந்து கொடுத்தாள். அந்த டப்பாவில், இரு வகையான பொருட்கள் வைத்து விட்டாள். ஒன்று மண்ணிலான பூந்தொட்டி போன்று miniatures மற்றொன்று மரத்திலான சிறிய படங்கள். அவள் விளையாட்டுப் பொருட்களிலிருந்து, இரண்டு வகை கிண்ணங்கள் எடுத்து வந்தாள். இரண்டு வகைப் பொருட்களில் ஒன்றை எடுத்து அப்பா கையில் கொடுத்து, "Touch and Tell, what is this?", என்றாள். அப்பாவும், "It is the small one".. "Keep it in the small cup" என்றாள். அடுத்து என்னிடம், "what is this?" என்றாள். "It is big" என்றேன். "Keep it in the big cup" என்றாள்.

முடித்தவுடன், எதையோ போய் எடுக்கச் சென்றாள். போகும் முன், "Do not touch these things..I will not send you home" என்றாள். அவள் சென்றவுடன், நான் அப்பாவுடன் ஏதோ சிரித்து பேச, "Why are you smilling?" get up.. go stand in the corner ".. கார்னரில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து, "Want to go home" என்றாள். ஆமாம் என்றவுடன், "ok come"..

தூக்கத்திலிருந்த நான், முடிக்க வேண்டும் என்று, "Aunty, van has come.. Can I go now?" என்றேன். "ok.. go" என்று இரண்டு விநாடிகளில், "Ok.. tomorrow has come..come now" என்றாள். சிரித்து மலுப்பி, முடித்து விட்டோம்.

வெகு நாட்கள் கழித்து, punishment வாங்கி நின்றது முதல் அவளாகவே யோசித்து, அடுத்தவர்களுக்கு ஆக்டிவிட்டீஸ் சொல்லிக் கொடுத்தது வரை அனைத்தும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

இது என்னுடைய இரு நூறாவது பதிவு. இதில் என்னை மிகவும் கவர்ந்த இந்த தருணத்தைப் பற்றி எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வார்த்தை விளையாட்டு

கடந்த‌ ஞாயிறு தீஷுவிற்கும் அப்பாவுக்கும் சேர்ந்து செல‌விட‌ நேர‌ம் கிடைத்த‌து. அப்பா ஒரு வார்த்தைச் சொல்லுவார். அந்த‌ வார்த்தை எந்த‌ ரைமிஸ்ஸில் வ‌ருகிற‌து என்ப‌தை தீஷு க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு Well என்ற‌வுட‌ன், Ding Dong bell, pussies in the well என்று சொல்ல வேண்டும். தீஷு விருப்ப‌மாக‌ விளையாண்டு கொண்டிருந்தாள்.கிட்டத்தட்ட அனைத்து வார்த்தைகளையும் கண்டுபிடித்து விட்டாள். ஆனால் அவ‌ளுக்குத் திரும்ப‌ வார்த்தைகள் சொல்லத் தெரிய‌வில்லை.



அவ‌ர்க‌ள் அடுத்து செய்த‌து இந்தியா ப‌ஸில் மாப். அது ஆறு வ‌ய‌தின‌ருக்குரிய‌து என்ப‌தால், Self correcting கிடையாது. எந்த‌ இட‌த்தில் எந்த‌ பீஸையைப் பொருத்தினாலும் பொருந்தும். இத‌னால் தான் சரியாக‌த்தான் செய்கிறோமா என்று தீஷுவிற்குத் தெரிவ‌தில்லை. என‌க்கு அவ‌ளுக்கு முத‌ல் முறை சொல்லுக்கொடுக்க‌லாம் என்ற‌ எண்ண‌ம். ஆனால் அப்பாவுக்கு அவ‌ளாக‌ செய்ய‌ வேண்டும் என்று. பிற‌கு சிறிது உத‌வி தீஷுவிற்குத் தேவைப்ப‌ட்ட‌து. முடித்துவிட்டாள். ஆனால் இந்த‌ ப‌ஸில் மாப்பில் என‌க்கு திருப்தி இல்லை. ஒவ்வொரு மாநில‌த்திற்கும் ஒவ்வொரு பீஸாக‌ ப‌ஸில் இருந்திருக்கலாம் என்ப‌து என் எண்ண‌ம். இத‌ன் மூல‌ம் திரும்ப‌ திரும்ப‌ கேட்ப‌த‌ன் மூல‌ம் மாநில‌ங்க‌ளின் பெய‌ர்க‌ள் தெரிய ஆர‌ம்பிக்கும். இது மாப் கற்பதற்கு என்றில்லாமல் மற்றொருமொரு பஸில் போலவே இருக்கும்.

Friday, October 23, 2009

ஒன்றில் ப‌ல

தீஷுவிற்குப் போரிங் (Pouring) , ஸ்பூனிங் (Spooning), சார்ட்டிங் (Sorting) போன்ற‌ ஆக்டிவிட்டீஸில் விருப்ப‌மிருப்ப‌தில்லை. அவ‌ள் வ‌ய‌திற்கு அவை எளிமை என்று தோன்றுகிற‌து. அத‌னால் இப்பொழுது இர‌ண்டு மூன்று ஆக்டிவிட்டீஸைச் சேர்த்து கொடுக்க‌ வேண்டியிருக்கிற‌து. அப்ப‌டி செய்த‌வ‌கையில் இர‌ண்டு..




க‌ணித‌த்தில் செய்து வெகு நாளாகிவிட்ட‌து. ஒரு சிறிய‌ பையில் ஒரு பட்ட‌ம்பூச்சி பொம்மை, இர‌ண்டு ஆப்பிள் பொம்மை, மூன்று காரெட், நான்கு.. என்று ப‌த்து சோழிக‌ள் வ‌ரை வைத்து விட்டேன். முத‌லில் தீஷு ஒவ்வொன்றையும் பிரிக்க‌ (Sorting)வேண்டும். பின் ஒன்று முத‌ல் ப‌த்து வ‌ரையிலான‌ ப்ளாஷ் கார்டை எடுத்துக் கொள்ள‌ வேண்டும். ஒவ்வொரு பிரிவாக‌ எண்ணி அத‌ன் பிரிவில் எத்த‌னைப் பொருட்க‌ள் இருக்கின்ற‌ன‌வோ அவ‌ற்றை எண்ணி
(Counting) அந்த‌ எண்ணுள்ள‌ அட்டையை வைக்க‌ வேண்டும். ஆனால் பிரிக்க‌க் கொடுத்த‌ பொருட்க‌ளில் 55 இருந்த‌தால் தீஷுவிற்கு இடையில் சிறிது க‌வ‌ன‌ச் சித‌ற‌ல் ஏற்ப‌ட்ட‌து. எடுத்து வைத்துவிடுவாள் என்று நினைத்தேன். ஆனால் முடித்து விட்டாள். அடுத்து எண்ணி அட்டை வைப்ப‌தை விருப்ப‌மாக‌ செய்தாள். இதில் பிரித்த‌ல், எண்ணுத‌ல், எண்ணைக் க‌ண்டுபிடித்த‌ல் முத‌லிய‌ன‌ இருக்கின்ற‌ன‌.




அடுத்து Transferring & Spooning .. இதில் ஸ்பூனிற்குப் ப‌தில் இடுக்கி கொடுத்து விட்டேன். இடுக்கி மூல‌ம் ஒரு கிண்ண‌த்திலிருந்து மற்றொரு கிண்ண‌த்திற்குக் க‌ற்க‌ள் மாற்ற‌ வேண்டும். தீஷு விருப்ப‌மாக‌ச் செய்ய‌வில்லை. அவ‌ளுக்கு மிக‌வும் க‌டின‌மாக‌ இருந்த‌து. அதில் அவ‌ள் க‌ற்ப‌னையாக‌ அவ‌ள் டாலுக்குச் ச‌மைக்க‌ ஆர‌ம்பித்து விட்டாள்.

Sunday, October 11, 2009

செவிக்குணவு



ஹோமியோபதி மாத்திரை வைத்துக் கொடுத்த டப்பா இரண்டு இருந்தது. அதில் ஒன்றில் மாத்திரையும் மற்றொன்றில் எதுவும் இல்லை. தீஷு அதை குலுக்கிப் பார்த்து, ஸாவுண்டு என்றாள். அடுத்தை எடுத்து நோ ஸாவுண்டு என்றாள். இதைப்போன்று முன்னமே செய்திருக்கிறோம். தீஷு ஸாவுண்டு மாட்சிங் செய்ய ஆர்வம் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. காலியாக இருந்த டப்பாவில் கடுகு நிரம்பிக்கொடுத்தேன். அவளாக ஒன்றைக் குலுக்கிப்பார்த்து லவுடு, மற்றொன்றை (கடுகை) ஸாஃப்ட் என்றாள். அது முடிந்து நான்கு ஐந்து நாட்கள் ஆன நிலையில் இன்று ஸாவுண்டு சார்ட்டிங் கொடுத்தேன். இரண்டு டப்பாவில் கடுகு மற்றும் இரண்டில் மாத்திரை இருந்தது. கடுகுள்ள இரண்டையும், மாத்திரை இருந்த இரண்டையும் இனைக்க வேண்டும். எளிதாகச்செய்தாள். அதிக சத்தம் வரும் இரண்டும் மாத்திரை, மெல்லிய சத்தம் கடுகு என்று கொண்டு பிரிக்க வேண்டும்





தீஷு ஸ்கூலில் வாரம் ஒரு முறை அவளுக்கு வீட்டில் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று டைரியில் எழுதி விடுவர். எப்பொழுதும் இந்த பாட்டுப் பாடுங்கள், ஆங்கிலத்தில் உரையாடுங்கள், காய்கறி கண்டுபிடிக்கப் பழுக்குங்கள் என்று அந்த வாரம் வகுப்பில் என்ன சொல்லிக் கொடுத்தனரோ அதை மீண்டும் வீட்டில் செய்ய சொல்லி இருப்பர். இந்த முறை வித்தியாசமாக தீஷுவிற்கு உவர்ப்பு, இனிப்பு, புளிப்பு சுவைகளைக் கண்டுபிடிக்கப் பழக்குங்கள் என்று வந்திருந்தது. அதனால் இதைச் செய்தோம். மூன்று கிண்ணங்களில் ஒன்றில் சக்கரைத்தண்ணீர், மற்றொன்றில் உப்பு நீர், மூன்றாவதில் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் எடுத்துக் கொண்டோம். முதலில் ஒரு ஸ்பூன் மூலம் அனைத்து தண்ணீரையும் எடுத்துக் கொடுத்து அதன் சுவையைச் சொல்லச் சொன்னேன். தப்பு அதிகமாக இருந்தது. உப்பு நீர் முடித்தவுடன் சக்கரைத் தண்ணீரை எடுத்தால், அதில் உப்பு சுவையும் இருந்ததால், கண்டுபிடிக்கக் கஷ்டமாக இருந்திருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு ஸ்பூனாக மாற்றியவுடன், எளிதாகச் செய்தாள். இவை இரண்டும் மாண்டிசோரியின் முக்கிய கருத்தானப் பூலன்கள் மூலம் கற்றலுக்கு மிகவும் ஏற்றது.

Thursday, October 8, 2009

டோமினோஸ்

யூ.ஸ்.ஸில் தாங்கள் உபயோகப்படுத்தாதப் பொருட்களை Garage Sale என்று விற்கும் வழக்கம் உண்டு. குழந்தைகள் கூட தாங்கள் உபயோகப்படுத்திய தற்பொழுது உபயோகப்படுத்தாத புத்தகங்கள் பொம்மைகள் போன்றவற்றை தங்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து விற்பர்.

கிறிஸ்துமல் சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசு கொடுக்கும் வழக்கம் உண்டு. பிடிக்காத பரிசுடன் பில் இருந்தால் கடையில் திருப்பி கொடுத்து விடுவர். திருப்பிக் கொடுக்க முடியாத ஆனால் தங்களுக்குப் பிடிக்காத பொருட்கள் விற்பனைக்கு வந்துவிடும். எங்காவது செல்லும் பொழுது, Garage Sale பார்த்தால் நிறுத்திப் பார்க்கும் வழக்கம் எங்களுக்கு இருந்தது.


உபயோகப்படுத்தியப் பொருட்கள் வாங்குவது கேவலம் என்ற எண்ணமும் இருந்தது உண்டு. ஆனால் அரிய புத்தகங்கள் நல்ல நிலையில் இருந்தால் வாங்குவோம். சில நேரங்களில் ஃபாக்கிங் கூட கிழிக்காத புத்தகங்கள், பஸில் முதலியன கிடைக்கும். அப்படி வாங்கியது தான் டோமினோஸ். தீஷுவிற்கு அப்பொழுது ஒரு வயது கூட நிரம்பவில்லை. ஆனால் ஃபாக்கிங் கூட கிழிக்காமல் இருந்ததால் அதன் மேல் ஒரு விருப்பம். பின்னர் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று வாங்கி வந்தோம். பெரிய சைஸ் மரக்கட்டைகளில் கலர் புள்ளிகள். அனைத்து கட்டைகளையும் வைப்பதற்கு மரத்திலான ஒரு டப்பா. பார்க்கவே கொள்ளை அழகு.



ஒவ்வொரு முறையும் இந்தியா வரும் பொழுது, எங்களுக்கு அப்பொழுது உபயோகப்படாதப் பொருட்களைக் கொண்டு வந்து, என் தங்கை வீட்டிலோ, அம்மா வீட்டிலோ வைத்து விடுவோம். மொத்தமாக திரும்பி வரும் பொழுது வெயிட் பிரச்சனையை சமாளிக்கவே இந்த யோசனை. டோமினோஸை என் தங்கை வீட்டில் வைத்து விட்டு, மறந்தும் விட்டோம். இந்த முறை சென்னை சென்ற பொழுது, தங்கை வீட்டில் வேறுவொரு பொருள் தேடும் பொழுது டோமினோவைப் பார்த்தேன். தீஷுவிற்கு பார்த்தவுடன் பிடித்து விட்டது. வைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.

பெங்களூருக்கு எடுத்து வந்து, எவ்வாறு அடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். புள்ளிகளை எண்ணி அதற்கு தகுந்தாற்போல் அடுத்தக் கட்டையை எடுத்து வைக்கிறாள். எடுத்தால் வெகு நேரத்திற்கு அவளுக்கு அதன் மேல் ஆர்வம் இருக்கிறது. இப்பொழுது அவள் எண்ணும் திறன் வளர்வதற்கு உதவுகிறது. அடுத்து இதன் மூலம் கூட்டல் சொல்லிக் கொடுக்கும் ஐடியா இருக்கிறது.

Sunday, October 4, 2009

கவர்ந்த தருணங்கள் 04/10/2009

1. தீஷு நான் என் certificates அடுக்கி வைப்பதைப் பார்த்து தனக்கும் certificates வேண்டும் என்றாள். என் கணவர் அவளிடம்

அப்பா : "நீ பெருசா வளர்ந்தவுடனே உனக்கும் certificates கிடைக்கும்"
தீஷு : "எவ்வளவு பெருசா?"
அப்பா : "இந்த Globe இருக்குற ஹயிட் வரைக்கும்"

தீஷு உடனே ஒரு ஸ்டூல் எடுத்துக் கொண்டு வந்து, அதன் மேல் ஏறி நின்று

தீஷு : "Globe வரைக்கும் வளர்ந்துட்டேன்.. இப்ப certificates கொடுங்க" அப்பா : ?????

2. தீஷுவிற்கு இப்பொழுது உடல் உறுப்புகள் பற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கிறது. என்னிடம் வந்து,

தீஷு : "அம்மா, நமக்கு எதுக்கு நெஞ்சு இருக்கு?"
அம்மா : "அங்க தான் ஹார்ட்(Heart) இருக்கு"
தீஷு : "அப்ப கோல்ட் (Cold) எங்க இருக்கு?"
Heartக்கு Hot என்று நினைத்திருக்கிறாள்.

3. ஆஸ்பத்திரி வையிட்டிங் ரூமில் உட்கார்ந்திருந்தோம். ஒரு பெண் எழுந்து வெளியே சென்றாள்.

தீஷு : அவுங்க எங்க போறாங்க?
அம்மா : திரும்பி வந்திடுவாங்க..
தீஷு : நான் அது கேட்கலை... எங்க போறாங்க தான் கேட்டேன்.

அம்மா பதில் தெரியாமல் முழிக்க, பக்கத்தில் இருந்தவர்கள் முகத்தில் சிரிப்பு.

4. தீஷுவும் அப்பாவும் காத்திருந்த நேரத்தில் வாக்கிங் போயிருந்தார்கள். திரும்பி வரும் பொழுது தீஷு வழி சொல்லிக் கொண்டே வந்திருக்கிறாள். வழி எப்பொழுதும் லெஃப்ட்ல போ என்று தான். ஒரு இடத்தில் லெஃப்ட் எடுத்ததால், வழி மாறியிருக்கிறார்கள். உணர்ந்து கொண்ட தீஷு "அப்பா யார்கிட்ட யாவது வழி கேளு.. ஹோமியோ கிளினிக் எங்கயிருக்குனு?"

5. தீஷு தோழி போன் செய்த பொழுது இவள் தூங்கி கொண்டிருந்தாள் (அந்த குழந்தைக்கு இன்னும் மூன்று வயது கூட ஆகவில்லை... அதற்குள் இவுங்க இரண்டு பேருக்கும் போன்). எழுந்தவுடன் சொன்னேன். அப்படியா என்ற தீஷு, எனக்கு அவ நம்பர் தெரியாதே.. எப்படிமா போன் பண்றது என்றாள் கவலையுடன்.

Monday, September 28, 2009

மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்த..

இப்பொழுது எல்லாம் தீஷுவிற்கு செயல்முறை புத்தகங்கள் (Workbooks) மீது விருப்பம் வந்திருக்கிறது. Dot to Dot, colouring, Mazes, Mixed books என எடுத்தால் அரைமணி நேரத்திற்கு குறையாமல் செலவிடுகிறாள். ஒரு புத்தகத்தை ஒரு நாளில் முடித்த சமயங்களும் உண்டு. ஆகையால் புத்தகங்களைத் திரும்ப திரும்ப உபயோகப்படுத்தும் படி மாற்ற எண்ணினேன். பென்சிலில் எழுதி அழித்தாலும், அதன் தடங்கள் போவதில்லை. மற்றும் எனக்கு அழிப்பதற்கும் நேரம் எடுக்கிறது. Sheet protectors வைத்திருந்தேன். ஃபையிலில் certificate வைப்பதற்கு இருப்பது போன்று தெளிவான காகிதம். Mazes புத்தகத்தைக் கிழித்து, ஒவ்வொரு பக்கத்தையும் ஒவ்வொன்றில் வைத்து விட்டேன். அனைத்து பக்கங்களையும் இணைத்து ஒரு உபயோகப்படுத்தாத ஃபையிலில் போட்டு வைத்து விட்டேன். White board marker கொண்டு அதன் மேல் எழுது விட்டு, ஒரு சிறு துணியால் துடைத்து விட்டால், அழகாக போய்விடுகின்றது. மீண்டும் மீண்டும் எழுதிக்கொள்ளலாம். சில காலங்களுக்கு இந்த புத்தகங்களை உபயோகப்படுத்தலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

Saturday, September 26, 2009

ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு

ஏனோ கடந்த இரண்டு மூன்று வாரங்களாக ப்லாக் பக்கம் வர முடியவில்லை - படிப்பதற்கும் சரி.. எழுதுவதற்கும் சரி. ரீடரில் சில பதிவுகள் வாசித்ததோடு சரி. இடையில் இரண்டு நாட்கள் சென்னை சென்றிருந்தோம். சென்ற முறை சென்னை சென்றிருந்த பொழுது, அடுத்த முறை கண்டிப்பாகச் சில பதிவர்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த முறையும் முடியவில்லை. போனது இரண்டு நாட்கள். அதில் ஒரு நாளில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் எங்கள் வீட்டிற்கு புது மெம்பர் வந்துவிட்டார். என் தங்கை குழந்தை 32வது வாரத்தில் பிறந்துவிட்டாள். அவளை வரவேற்கும் டென்ஷனிலேயே எங்கள் சென்னைப் பயணம் இனிதே முடிந்தது. தீஷுவிற்கு சிறு குழந்தையைப் பார்த்தவுடன் ஒரே மகிழ்ச்சி. தூரத்திலிருந்து தான் பார்த்தோம். அதற்கே குட்டிப்பாப்பா வேடிக்கைப்பார்த்தா, கையை ஆட்டினா என்று கதைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.




ஆக்டிவிட்டீஸைப் பொறுத்தவரையிலும் எதுவும் புதிதாக செய்யவில்லை. Cuisenaire rods அதன் மதிப்பின் அடிப்படையில் அடுக்கினோம். நன்றாகச் செய்வதால், அதன் மதிப்புக்களைச் சொல்லிக் கொடுத்தேன். ஒன்றும் இரண்டும் கண்டுபிடிக்கிறாள். அனைத்து கட்டைகளின் எண்களையும் கற்றப்பின் இதன் மூலம் கூட்டல் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.






ஸீகென்ஸிங் செய்வதற்கு விருப்பம் இருக்கிறது. மூன்று அல்லது நான்கு படங்களில் ஒரு செயலின் வெவ்வேறு நிலைகள் இருக்கும். நிலைகளுக்குத் தகுந்த மாதிரி படங்களை அடுக்க வேண்டும். இந்த முறை தீஷு படங்களை அவளே விளக்கி அடுக்கினாள். இது pre reading skillsக்கு ஏற்றது.




தொடுதல் மூலம் வடிவங்கள் கண்டுபிடித்தோம். வடிவத்தை எடுத்து, முதல் இரண்டு விரலால் அதன் ஓரங்களைத் தட்வி, வடிவத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அது புரிந்தவுடன், ஸேப் ஸாட்டரில் கண்னை மூடிக் கொண்டே அதற்குரிய இடத்தில் போட வேண்டும். இதற்கு தொடுதலில் வடிவத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன் பின் அதை மனதில் நிறுத்தி, அதன் இடத்தை விரல்களால் தொட்டு கண்டுபிடித்து அதனுள் போட வேண்டும். இதை முன்பே முயன்று இருக்கிறோம். ஆனால் இப்பொழுது எளிதாக இருக்கிறது.

இதுவும் ஸேப் ஸாட்டர் பீஸ்களைக் கொண்டு செய்தோம். ஒவ்வொரு வடிவத்திலும் ஒரு பீஸ் எடுத்து வைத்துக் கொண்டோம். நான்கு வடிவத்தையும் பார்த்தப்பின் கண்ணை மூடிக் கொள்ள வேண்டும். நான் ஒரு வடிவத்தை எடுத்து ஒளித்து வைத்து விடுவேன். கண்ணைத் திறந்து என்ன ஒளித்து வைத்திருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தவுடன் ஒரே வடிவத்தை இரண்டு கலர்களின் வைத்தேன். கலரையும் வடிவத்துடன் சேர்த்து சொல்ல வேண்டும். இரண்டு வடிவங்கள் இரண்டு கலர்கள் என எட்டு பீஸ்களில் கண்டுபிடிக்கத் தெரிகிறது. அதற்கு மேல் என்றால் கஷ்டப்படுகிறாள். இந்த விளையாட்டை எல்லா விதமான பொருட்கள் மூலமும் செய்யலாம்.

Wednesday, September 2, 2009

Blossom - A treasure house of New titles and second hand books

ஆறு மாத‌ங்க‌ளுக்கு முன் ஒரு நாள் தோழியிட‌ம் புத்த‌க‌ங்க‌ள் ப‌ற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கிடைத்த‌ த‌க‌வ‌ல் ‍ பிலாஷ‌ம். பெங்க‌ளூர் M.G ரோட்டிலுள்ள‌து, பழைய‌ அரிய‌ புத்த‌க‌ங்க‌ள் கிடைக்கும் என்ற‌வுட‌ன் ம‌ற்றுமொரு தோழியுட‌ன் சென்று பார்த்தேன். மூன்று மாடி க‌ட்டிட‌ம் முழுவ‌தும் புத்த‌க‌ங்க‌ள். எதை வாங்குவ‌து எதை விடுவ‌து என்று தெரிய‌வில்லை. மிக‌வும் பிடித்திருந்த‌து. தீஷுவை அப்பாவிட‌ம் விட்டு சென்றுயிருந்த‌தால் நிதான‌மாக‌ பார்க்க‌ முடிய‌வில்லை. ஆனால் தீஷுவிற்கென‌ கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌த்து புத்த‌க‌ங்க‌ள் வாங்கி வ‌ந்தேன். அனைத்தும் ப‌த்து ரூபாய் முப்ப‌து ரூபாய் தான். தோழியும் த‌ன் குழ‌ந்தைக்குப் பல‌ புத்த‌க‌ங்க‌ள் வாங்கினார். அவ‌ரின் பில்லைப் பார்த்து அதிர்ந்து தான் போனோம். ஆயிர‌ம் ரூபாய்க்கு மேல்.

பழைய‌ ம‌ற்றும் புது புத்த‌க‌ங்க‌ள் விற்கிறார்க‌ள். நம‌க்கு புத்த‌க‌ங்க‌ளின் பெய‌ர்க‌ள் தெரி‌ந்தால், அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கிற‌தா இல்லையா என்று பார்க்கும் வ‌ச‌தி உள்ள‌து. வேலை செய்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ன்றாக‌வே உத‌வுகின்ற‌ன‌ர். எவ்வ‌ள‌வு நேர‌ம் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு தேடலாம். ம‌லை போல் குவிந்திருக்கும் புத்த‌க‌க் குவிய‌லில் தெரிந்திருக்காத‌ப் புத்த‌க‌ங்க‌ள் எடுப்ப‌து க‌ஷ்ட‌ம்.

இந்த‌ முறை நாங்க‌ள் மூவ‌ரும் சென்றோம். த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் இல்லை என்ப‌தில் என் க‌ண‌வ‌ருக்கு சிறு வ‌ருத்த‌ம். தீஷுவிற்கு இந்த‌ முறை 17 புத்த‌க‌ங்க‌ள் வாங்கினோம். வாசிக்க‌ப் ப‌ழ‌க வச‌தியாக சிறு வாக்கிய‌ங்க‌ளே கொண்ட‌ Start Reading புத்தக‌ங்க‌ள் ம‌ற்றும் குழ‌ந்தைக‌ளுக்கான அறிவிய‌ல் விள‌க்க‌ புத்த‌க‌ங்க‌ள் இந்த முறை தேர்ந்தெடுத்தேன். எங்க‌ளுக்கு புத்த‌க‌ங்க‌ள் நான்கு வாங்கினோம். இந்த‌ முறை எங்க‌ள் பில் ரூபாய் 570. ஆனால் இந்த‌ விலை ம‌திப்ப‌ற்ற‌ புத்த‌க‌ங்க‌ளுக்குக் கொடுக்க‌லாம். ஞாயிறும் க‌டைத்திற‌ந்திருப்ப‌து ம‌ற்றுமொரு சிற‌ப்ப‌ம்ச‌ம்.

தீஷுவின் க‌மென்ட் : "அம்மா எல்லா புக்கையும் எடுத்திட்டுப் போயிட‌லாமா?"

த‌லைப்பு அவ‌ர்க‌ள் வெப்சைட்டிலிருந்து எடுத்த‌து.


இந்த‌ முறை நாங்க‌ள் க‌ண்யெடுத்த‌ சில‌ முத்துக்க‌ள்:

A Seed grows

How Do You Say It Today Jesse Bear

Amazing Sharks

Monkeys

What do insects do?

A Tiger for Malgudi by R K Narayan

விலாச‌ம்

# 84/6 Church Street, Bangalore, Karnataka 560001
Phone : 080 25320400
www.blossombookhouse.com

M.G ரோடிலிருந்து Brigade ரோடில் நுழைந்த‌வுட‌ன் உள்ள‌ முத‌ல் வ‌லது ச‌ந்தில் Amoeba Bowling centerக்கு எதிரில் உள்ள‌து.

Monday, August 31, 2009

குடும்ப‌த்துட‌ன் இணை

தீஷு எப்பொழுது உருவ‌ங்க‌ள் வ‌ரைந்தாலும் மூன்று வ‌ரைகிறாள். பெரிய‌து அப்பா, ச‌ற்று சிறிய‌து அம்மா, குட்டி பாப்பா.

மாண்டிசோரி ஆக்டிவிட்டீஸ் ப‌ற்றித் தெரிந்து கொள்ள‌வும் ம‌ற்றும் சில‌ மாண்டிசோரி பொருட்க‌ள் வாங்க‌வும் ந‌ல்லதொரு இட‌ம் இந்த‌ த‌ள‌ம். நான் அடிக்க‌டி இந்த‌ த‌ள‌த்தை ஐடியாக‌ளுக்காக‌ப் பார்வையிடுவேன். த‌ள‌த்தில் க‌ர‌டி, சிங்க‌ம், வாத்து ம‌ற்றும் குர‌ங்கு குடும்ப‌த்தை இணைக்கும் இந்த‌ ஆக்டிவிட்டியைப் பார்த்த‌வுட‌ன், தீஷுவிற்கு பிடிக்கும் என‌ பிரிண்ட‌ அவுட் எடுத்துக் கொண்டேன்.


ஒவ்வொரு ப‌ட‌த்தையும் வெட்டி, க‌லைத்துக் கொள்ள‌ வேண்டும். முத‌ல் ப‌ட‌த்தை எடுத்து சிங்க‌ம் என்று சொல்லி வைத்து விட்டேன். அடுத்த‌ ப‌ட‌த்தை எடுத்து குர‌ங்கு, சிங்க‌ம் இல்லை என்று சொல்லி சிங்க‌த்திற்கு கீழே வைத்துவிட்டேன். அடுத்து ம‌ற்றுமொரு சிங்க‌த்தை எடுத்து, சிங்க‌ம் என்று சொல்லி சிங்க‌த்திற்கு அருகில் வைத்துவிட்டேன். இட‌மிருந்து வ‌ல‌மாக‌ வைத்தால் க‌ண்க‌ளை இட‌மிருந்து வ‌ல‌ம் ந‌க‌ர்த்தும் ப‌யிற்சியாக‌வும் இருக்கும். தீஷு எளிதாக‌ச் செய்வாள் என்று நினைத்தேன். ஆனால் அவ‌ளுக்குக் க‌டின‌மான‌தாக‌ இருந்த‌து. சிங்க‌த்தைப் பார்த்து புலி என்றாள் (ஏன் என்று புரிய‌வில்லை). க‌ர‌டியை குர‌ங்கு என்றாள். க‌ருப்பு வெள்ளையில் பிரிண்ட் அவுட் எடுத்திருந்தேன். அது தான் கார‌ண‌மா இல்லை அப்பா, அம்மா, குட்டி போன்ற‌வ‌ற்றின் முக‌ அமைப்பு மாற்றங்க‌ள் குழ‌ப்ப‌மா என்று தெரிய‌வில்லை. சிங்க‌ம் முதலில் இருந்தாலும், ம‌ற்றொருமொரு சிங்க‌த்தை அருகில் வைக்காம‌ல் கீழே வைத்தாள். அவ‌ளுக்குச் செய்வ‌த‌ற்கு விருப்ப‌மில்லையா என்றும் தெரிய‌வில்லை. சிறிது நாட்க‌ள் க‌ழித்து முய‌ல‌ வேண்டும் என்ற‌ லிஸ்ட்டில் இதுவும் சேர்ந்துவிட்ட‌து.

Family Night

க‌ட‌ந்த‌ வார இறுதியில் ம‌ழை பெய்வ‌து போல் இருந்த‌தால் வெளியே போக‌ முடிய‌வில்லை. அத‌னால் அந்த‌ ச‌னி இர‌வை ஃபாம‌லி இர‌வாக‌ மாற்றிவிட்டோம். தீஷுவும் அப்பாவும் பேப்ப‌ர் கிண்ண‌ம் செய்தார்க‌ள். ஐடியா நெட்டிலிருந்து எடுத்த‌து. பேப்ப‌ரை சிறிது சிறிதாக‌ கிழித்துக் கொள்ள‌ வேண்டும். ஒரு கிண்ண‌த்தில் பாலித்தீன் க‌வ‌ர் சுற்ற வேண்டும். பின்பு கிழித்த‌ப் பேப்ப‌ரில் க‌ம் த‌ட‌வி பாலித்தீன் க‌வ‌ர் மேல் தீஷு ஒட்டிக் கொண்டே வ‌ந்தாள். கிண்ண‌த்தைச் சுற்றி ஒட்டி முடித்த‌வுட‌ன், காய‌ வைக்க‌ வேண்டும். ம‌றுநாள் காய்ந்த‌வுட‌ன் மெதுவாக‌ கிண்ண‌திலிருந்து பேப்ப‌ரை எடுத்தால் பேப்பர் கிண்ண‌ம் வ‌ந்துவிடும். தீஷு அதை வைத்து த‌ன் டாலுக்குச் சாத‌ம் ஊட்டிக் கொண்டிருந்தாள்.



100 பீஸ் ப‌ஸில் தீஷு பின்னாளில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌வ‌த‌ற்காக‌ வாங்கிய‌து இருந்த‌து. மூவ‌ருமாக‌ சேர்த்தோம். அப்பா கீழிருந்து செய்தார். தீஷுவும் நானும் மேல் ப‌குதி செய்தோம். ஒர‌ள‌வு முடித்த‌வுட‌ன் இணைத்துவிட்டோம். கீழ் பகுதி முழுவ‌தும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரே மாதிரி இருந்த‌தால் அப்பாவுக்கு நேர‌ம் எடுத்த‌து. தீஷு அடிக்க‌டி "அப்பா பாரு.. நாங்க‌ எவ்வ‌ள‌வு பெரிசா பண்ணிட்டோமினு" என்று சொல்லிக் க‌டுப்ப‌டித்துக் கொண்டேயிருந்தாள். நாங்க‌ள் மூவ‌ரும் செய்ய‌ அரைம‌ணி நேர‌மான‌து. ந‌ல்ல‌தொரு மாலை பொழுது.

Sunday, August 30, 2009

வெளிநாட்டுப் பிரஜை ப‌திவு செய்ய‌

வெளிநாட்டுப் பிரஜைக‌ள் ந‌ம் நாட்டிற்கு எந்த‌ விசாவில் வ‌ந்தாலும் ஆறு மாத‌ங்க‌ளுக்கு மேல் த‌ங்க‌ வேண்டும் என்றால் வ‌சிக்கும் ந‌க‌ர‌த்திலுள்ள‌ Foreigner Registration Officer (FRO) விட‌ம் 180 நாட்க‌ளுக்குள் ரிஜிஸ்ட‌ர் செய்து கொள்ள‌ வேண்டும். 16 வ‌ய‌திற்குற்பட்ட‌ குழ‌ந்தைக‌ள் ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டாம் என்று இமிகிரேஷ‌ன் ஃபாமில் இருந்த‌தால் நாங்க‌ள் தீஷுவை ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டாம் என்று நினைந்திருந்தோம். இந்தியா வ‌ந்து 180 முடிய‌யிருந்த‌ நிலையில் சென்ற‌ வார‌ம் ஒரு நாள் என‌க்குத் தீடீரென்று உறுதிப‌டுத்திக் கொள்ள‌லாம் என்று தோன்றிய‌து. பெங்க‌ளூரில் இன்ஃபான்ட்டிரி
ரோட்டிலுள்ள‌ க‌மிஷி‌ன‌ர் ஆபிஸில் FRO உள்ளார். ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டுமா ம‌ற்றும் ச‌னிக்கிழ‌மை வேலை செய்கிறார்க‌ளா என்று கேட்க‌ போன் செய்தேன். போன் எடுக்க‌ மாட்டார்க‌ள் என்று நினைத்த‌ற்கு மாறாக‌ போனை எடுத்த‌தும் அதிர்ச்சி என‌க்கு. ச‌னி வேலை செய்கிறாக‌ள் என்றும் குழ‌ந்தைக‌ளையும் ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டும் என்ற‌வுட‌ன் ச‌னி அன்று தீஷுவை அழைத்துக் கொண்டு சென்றோம்.

சிவாஜி ந‌க‌ரில் அனைத்து ரோடுக‌ளும் ஒன்வேயாக‌ இருந்த‌தால் அங்கேயே அரை ம‌ணி நேர‌ம் சுற்றிச்சுற்றி வ‌ந்தோம். க‌டைசியில் க‌ண்டுபிடித்து உள்ளே நுழையும் பொழுது உள்ளே பார்க்கிங் செய்ய‌ முடியாது வெளியில் செய்து விட்டு வாருங்க‌ள் என்ற‌வுட‌ன் எங்கு செல்வ‌து என்று அய‌ர்ச்சி. இன்ஃபான்ட்டிரி ரோடில் பார்க்கிங்கா என்று நினைத்துக் கொண்டே சென்று ஒரு ஆஸ்ப‌த்திரி அருகில் பார்க் செய்து (செய்ய‌லாமா என்று தெரியாது)விட்டு வ‌ந்தார். ஆனால் ஆபிஸில் அனைவ‌ரும் ந‌ன்றாக‌ப் பேசவும், உத‌வும் செய்த‌ன‌ர். எல்லா டாகுமென்ட்டுக‌ளையும் ச‌ரி பார்த்து, கையெழுத்து வாங்கி, இன்னொரு க‌வுன்ட‌ரில் கொடுக்க‌ அரை ம‌ணி நேர‌மே ஆனது. அதிலும் க‌வ‌ர்மென்ட் ஆபிஸில் ல‌ஞ்ச‌ம் இல்லாம‌ல். பெங்க‌ளூரில் எந்த‌ ஆபிஸிலும் நாங்க‌ள் ல‌ஞ்ச‌ம் கொடுத்த‌தில்லை. ரேஷ‌ன் கார்டு‌, டிரைவிங் லைச‌ன்ஸ் போன்ற‌வை ம‌துரையில் ல‌ஞ்ச‌ம் இல்லாம‌ல் முடியுமா என்று தெரியாது.ஆனால் இங்கு ஐம்ப‌து ரூபாய் (அர‌சாங்க‌ம் நிர்ண‌ய‌ம் செய்த‌து) செல‌வில் ரேஷ‌ன் கார்டு‌ வாங்கினோம். வெளிநாட்டின‌ரிட‌ம் ல‌ஞ்ச‌ம் வாங்கி ந‌ம் நாட்டு மான‌த்தை வாங்காத‌தில் எங்க‌ளுக்குச் ச‌ந்தோஷ‌ம்.

ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ தேவையான‌வை :

1. குழ‌ந்தையின் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - ‍‍ 2
2. விசா ஜெராக்ஸ் ‍- 2
3. இமிகிரேஷ‌ன் ஸீலுள்ள‌ ப‌க்க‌ம் ஜெராக்ஸ் -‍ 2
4. த‌ந்தை பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - 2
5. தாய் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - 2
6. நாம் குழ‌ந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் த‌குதியுடையவ‌ர்க‌ள் (கொடுமை) என்ப‌த‌ற்குச் சான்றாக‌ நோட்ட‌ரியிட‌ம் கையெழுத்து வாங்கிய‌ 20 ரூபாய் ப‌த்திர‌ம் ம‌ற்றும் அத‌ன் ஜெராக்ஸ்
7. விலாச‌ம் சான்று

க‌ர்நாட‌க‌ வ‌லைத‌ள‌ம் :

http://www.ksp.gov.in/pages/foreigner/foreigners-registration-office-fro/
http://www.ksp.gov.in/pages/foreigner/registration-procedure

Wednesday, August 26, 2009

cuh-auh-tuh..

இரும‌ல் அதிக‌மாக‌ இல்லாம‌ல் இருந்த‌தால் தீஷுவை திங்க‌ள் அன்று ப‌ள்ளிக்கு அனுப்பிவிட்டோம். ப‌ள்ளியிலிருந்து என் க‌ண‌வ‌ரை அழைத்து, தீஷுவிற்கு காய்ச்ச‌ல் இருப்ப‌தால் என்ன‌ ம‌ருந்து கொடுக்க‌ என்று கேட்டுயிருக்கிறார்க‌ள். அடித்துப்பிடித்து நாங்க‌ள் இருவ‌ரும் சீக்கிர‌ம் கிள‌ம்பி வீட்டிற்குச் சென்று, டாக்ட‌ரிட‌ம் அழைத்துச் சென்றோம். ம‌ருந்து கொடுத்து மூன்று நாட்க‌ளுக்கு மேல் காய்ச்ச‌ல் இருந்தால் மீண்டும் அழைத்து வ‌ர‌ச் சொன்னார். செவ்வாய் விடுமுறை எடுத்து விட்டேன். புத‌ன் அன்றும் மூன்று ம‌ணி நேர‌ம் ம‌ட்டும் சென்று வ‌ந்தேன். இன்று கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லை. ப‌ள்ளிக்குச் சென்று இருக்கிறாள்.

செவ்வாய் மாலை எங்க‌ள் இருவ‌ருக்கும் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் வ‌ரை ஆக்டிவிட்டீஸுக்குக் கிடைத்த‌து. நான் செய்ய‌ வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தீஷுவிற்கு பொழுது போக‌வில்லையென்ற‌வுட‌ன் ஏதாவ‌து ஆக்டிவிட்டீஸ் செய்ய‌லாம் என்றாள். ச‌ரி என்று ஆர‌ம்பித்தோம். இது முன்ன‌மே செய்த‌து. CAT,DOG, போன்ற‌ மூன்று எழுத்து ப‌ட‌ங்க‌ளை எடுத்துக் கொண்டோம். "Give me a picture with CUH-AUH-TUH" என்று சொன்னேன். நான் சொல்வ‌தைப்புரிந்து கொண்டு அந்த‌ ப‌ட‌த்தை எடுத்துத்த‌ர‌ வேண்டும். இது வாசிப்ப‌‌த‌ற்குத் தேவையான‌ blending க‌ற்றுத்த‌ருகிற‌து. தீஷு இந்த‌ முறை ச‌ரியாக‌வும் விருப்ப‌மாக‌வும் செய்தாள். மீண்டும் மீண்டும் வேறு வேறு ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் முய‌ற்சித்துக் கொண்டுயிருந்தோம்.

Sorting தீஷுவிற்கு பிடித்த‌ ஒன்று. இந்த‌ முறை category sorting . முத‌லில் மூன்று பொம்மை காரும், மூன்று பொம்மை நாற்காலிக‌ளும் எடுத்துக் கொண்டோம். முத‌லில் காரை எடுத்துக் காண்பித்து "This is a car" என்று சொல்லி த‌னியே வைத்தேன். அடுத்து "This is a chair...Not a car" என்று சொல்லி ச‌ற்றுத்தள்ளி வைத்தேன். மீண்டும் ஒரு நாற்காலி எடுத்து, "This is a chair" என்று சொல்லி அவ‌ள் ப‌திலுக்குக் காத்திருந்தேன். அவ‌ள் காட்டிய‌வுட‌ன் அந்த‌ பிரிவில் வைத்தேன். இது புரிந்த‌வுட‌ன் மீண்டும் மூன்று ம‌னித‌ பொம்மைக‌ளையும், மூன்று வில‌ங்கு பொம்மைக‌ளையும் சேர்த்து "Chair", "Car", "Human being", "Animal" என்று பிரித்தோம்.

Sunday, August 23, 2009

எப்படியோ சமாளிக்கிறோம்...

வேலைக்குச் செல்ல ஆரம்பித்து நான்கு வாரங்கள் முடிந்து விட்டன. நான்கு வாரத்தில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். தீஷு உதவியாளருடன் பழகிவிட்டாள். இது நாள் வரை அவர் லீவு எடுக்கவில்லை. Touch wood. தினமும் காலையில் என்னை ஸ்டாப்பில் இறக்கி விட்டு, கணவர் தீஷுவை பள்ளியில் விட்டுவிடுவார். பின் தீஷு 1:30 மணி அளவில் வீட்டிற்கு வேனில் வரும் பொழுது உதவியாளர் வந்துவிடுவார். பின் அவர் நான் வரும் வரை தீஷுவைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த 20 வேலை நாட்களில், 4 நாட்கள் நான் டிரெயினிங்காக காலையில் சீக்கிரம் செல்ல வேண்டியிருந்தது. பாவம் அப்பா.. தனியே தீஷுவை ரெடியாக்கி (அவளை பள்ளிக்குக் கிளப்புவது தான் காலையில் பெரிய வேலை) பள்ளியில் விட்டுவிட்டார். அவருக்கு இரண்டு நாள் டிரெயினிங். எனக்கு அதே கஷ்டம். நான்கு நாட்கள் தீஷுவிற்கு பள்ளி விடுமுறை (கிருஷ்ண ஜெயந்தி, வர லெட்சுமி, சுதந்திர தினம் மற்றும் ஒரு நாள் பன்றி காய்ச்சல் பயத்தில் நான் அனுப்பவில்லை). உதவியாளர் வேறு வீட்டில் காலையில் வேலை பார்ப்பதால் காலையில் வர முடியாது. நான்கு நாட்களும் உதவியாளரை 12 மணி அளவில் வரச் சொல்லி, அது வரை கணவர் தீஷுவைப் பார்த்துக் கொண்டார். அதில் அவருக்கு ஆடிட் பிரச்சனை வேறு. எப்படியோ நாட்களைத் தள்ளி விட்டோம்.

எங்கள் ஆக்டிவிட்டீஸ் பொருத்தவரை தினமும் அரை மணி நேரம் வரை செலவிட முடிகிறது. ஆனால் எனக்கு prepare பண்ண அதிக நேரம் கிடைப்பதில்லை.

இன்று தீஷுவிற்கு கடுமையான ஜலதோஷம். நாளை திங்கட்கிழமை பள்ளிக்கு அனுப்பமுடியாது. நான் உதவியாளர் வரும் வரை இருக்கவேண்டும் என நினைக்கிறேன். வீட்டில் பெரியவர்கள் இல்லாமல் தீஷுவைப்பார்த்துக் கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று இன்னும் பயம் இருக்கிறது. தீஷுவால் பிரச்சனை இல்லை. ஆனால் சூழ்நிலை சதி செய்கிறது. சமாளித்துக் கொள்ளலாம் என்ற சிறு நம்பிக்கையும் மனதில் உள்ளது. பார்ப்போம்.

Saturday, August 22, 2009

உப்புத்தாள் உலக உருண்டை



தண்ணீரை டிராப்பர் (மருந்து தர பயன்படுத்துவது) உபயோகித்து மாற்றுவது (Transfer). இதைச் சில நாட்களாகச் செய்து கொண்டிருக்கிறோம். முதலில் தீஷுவிற்கு கஷ்டமாக இருந்தாலும் இப்பொழுது வெகு எளிதாகச் செய்கிறாள். மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது நான் சொல்லாமலே தரையில் சிந்தியிருக்கும் தண்ணீரை துடைத்து விடுவது. முதல் நாள் மாப்பை எடுக்கும் பொழுது அவள் சொன்னது "I spilled water.. cleaning.."

மாண்டிசோரியின் முக்கிய பிரிவுகள் : Practical life, Sensorial, English, Maths, Science, Geography (culture). எப்பொழுதும் நாங்கள் செய்வது Practical or Sensorial தான். ஆங்கிலமும், கணிதமும் எப்பொழுதாதவது செய்வோம். அறிவியலும் புவியியலும் தீஷுவிற்கு மூன்று வயதானப்பின் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். இப்பொழுது செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

புவியியலுக்குக் கண்டங்களிலிருந்து (continents) ஆரம்பித்தோம். தீஷுவிற்கு ஏழு கண்டங்கள் பெயர் தெரியும். ஆனால் அவை எங்கிருக்கின்றன எனத் தெரியாது. கற்றுத்தர மாண்டிசோரி உப்புத்தாள் உலக உருண்டை சரியானதாக இருக்கும் எனத் தோன்றியது. Sand paper globe என்பது சாதாரண உலக உருண்டையில் கண்டங்கள் மட்டும் உப்புத்தாளில் இருக்கும். தண்ணீர் பகுதி ஊதா நிறத்தில் இருக்கும். தடவி பார்த்து கண்டங்களின் வடிவங்கள் மூலம் கண்டங்கள் கற்றுக் கொள்ளலாம். நான் Sand paper globeற்குப் பதில் Sandpaper map செய்துள்ளேன். உலக வரைபடத்தை எடுத்து, கண்டங்கள் பகுதியில் மட்டும் உப்புத்தாளால் ஒட்டி விட்டேன்.




கண்டங்களை தடவிக் காட்டி அதன் பெயர்களைச் சொன்னேன். பின்பு தீஷுவிடம் பெயரைச் சொல்லி எங்கிருக்கிறது என்றேன். அதில் தப்புக்கள் வருவதால் மீண்டும் சில நாட்கள் கழித்து முயல வேண்டும்.

Friday, August 14, 2009

சுதந்திர தின வாழ்த்துகள்

தீஷு இந்தியாவில் கொண்டாடும் முதல் சுதந்திர தினம். காலையில் எழுந்தவுடனே தீஷுவும் அவள் அப்பாவும் அப்பார்ட்மென்ட் கொடி ஏற்றத்திற்குச் சென்று விட்டனர். கொடி ஏற்றத்திற்குப் பின், அனைவரும் "பாரத் மாத்தாக்கி ஜே" என்று கூறிக்கொண்டே சுற்றி வந்தனர். கொடியையும் மிட்டாயையும் வாங்கிக்கொண்டு தீஷு வந்து விட்டாள். வீட்டிற்கு வந்தவுடன் தீஷுவும் அவள் அப்பாவும் சேர்ந்து ஒரு தேசிய கொடி செய்தனர்.

ஒரு துணியை சதுரமாக வெட்டிக் கொண்டு, அவள் அப்பா மூன்று பாகமாக பிரித்துக் கொடுத்தார். மேல் பாகத்தில் ஆரெஞ்சும் கீழ் பாகத்தில் பச்சையும் கலர் அடித்தாள் தீஷு. முடித்தவுடன் நடுவில் ஒரு ரூபாய் கொண்டு சக்கரம் வரைந்து கொண்டாள். பின்பு அதில் 24 கோடுகள் வரைந்தனர். பின்பு அப்பா ஒரு கம்பில் கொடியை ஒட்டிக் கொடுத்தார். தீஷு கொடி எடுத்துக் கொண்டு "வந்தே மாதரம்" "வந்தே மாதரம்" என்று கத்திக் கொண்டுயிருந்தாள்.



கொடி அதன் வண்ணங்கள் பற்றிய நல்லதொரு அறிமுகமாக இருந்தது. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

Thursday, August 13, 2009

மாஸ்கிங் டேப் பெயிண்டிங்

என‌க்கு கால‌ணிக‌ளில் அதிக‌ விருப்பம் இருப்ப‌தில்லை. அடுத்த‌வ‌ர் அணிந்திருப்ப‌தைக் க‌வ‌னித்து ஞாப‌க‌ம் வைத்துக் கொள்ளும் ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஆனால் தீஷுவிற்கு உடைக‌ளும் கால‌ணிக‌ளும் மிக‌வும் விருப்ப‌மான‌வை. டிரேஸ் தேர்ந்தெடுப்ப‌தாக‌ட்டும், ஷூ தேர்ந்தெடுப்ப‌தாக‌ட்டும் இர‌ண்டிலும் விருப்ப‌ம் அதிக‌ம். ஏதோ ஒரு உடையைப் பார்த்தால் இது போல் அவ‌ர் வைத்திருக்கிறார் என்பாள். அவ‌ள் சொன்ன‌ப்பின் தான் என‌க்கு ஞாப‌க‌ம் வ‌ரும்.




எப்பொழுதும் போல் இல்லாம‌ல் அவ‌ளுக்கு விருப்ப‌மான‌தில் செய்யலாம் என்று செருப்பு செய்தோம். அவ‌ள் கால்க‌ளை ஒரு அட்டையில் வ‌ரைந்து வெட்டிக் கொண்டேன். க‌ட்டை விர‌ல் அருகில் ஒரு ஓட்டையும், பாத‌ ப‌குதிக்கு அருகில் இரு ஓட்டைக‌ளும் போட்டுக்கொண்டேன். பைப் க்ளீனர் ( செய‌ற்கை செடிக‌ள் செய்ய‌ ப‌ய‌ன்ப‌டுவ‌து என்று நினைக்கிறேன்) கொண்டு மேலிருந்து கீழேயுள்ள‌ ஓட்டையில் மாட்டினேன். இதேப் போல் இன்னொன்றிலும் மாட்டினேன். செருப்பு ரெடி. தீஷுவை சேர்க்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ பைப் க்ளீனர் ம‌ட்டும் முன் அவ‌ளை அட்டையில் க‌ல‌ர் செய்ய‌ சொன்னேன். தீஷுவிற்கு மிக‌வும் பிடித்திருந்த‌து. ஆனால் அதை மாட்டிக்கொண்டு ந‌ட‌க்க‌ அவ‌ளுக்கு க‌ஷ்ட‌மாக‌ இருந்த‌து. இருந்தாலும் விருப்ப‌மாக‌ அணிந்து கொண்டுயிருந்தாள்.



இது ஒரு புத்த‌க‌த்தில் ப‌டித்த‌து. ஒரு பெயிண்ட்டிங் கான்வாஸ் எடுத்துக் கொண்டோம். மாஸ்கிங் டேப் எடுக்கும் பொழுது பேப்ப‌ர் கிழிந்து விடும் என்ப‌தால் கான்வாஸ். மாஸ்கிங் டேப்பை (சாதார‌ண செல்லோ டேப் கூட‌ உப‌யோக‌ப்ப‌டுத்த‌லாம்) கான்வாஸில் ஒட்டி ஏதாவ‌து டிஸேன் உருவாக்க‌ வேண்டும். பின் கான்வாஸ் முழுவ‌தும் பெயிண்ட் செய்ய‌ வேண்டும். செல்லோ டேப்பில் பட்டால் ப‌ர‌வாயில்லை. அத‌ன் வ‌ழியே பெயிண்ட் உள்ளே செல்லாது. பெயிண்ட் காய்ந்த‌வுட‌ன் டேப்பை எடுத்து விட‌ வேண்டும். எடுத்த‌ப்பின் டேப் இருந்த‌ இட‌ம் ம‌ட்டும் வெண்மையாக‌வும், ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் பெயிண்ட்டும் கொண்ட‌ அழ‌கிய‌ பெயிண்ட்டிங் ரெடி. தீஷு கான்வாஸ் முழுவ‌தும் பெயிண்ட் செய்யாம‌ல் இடைப்பட்ட‌ இட‌ங்க‌ளில் ம‌ட்டும் (க‌ல‌ரிங் செய்வ‌து) போல் செய்தாள். மிக‌வும் ந‌ன்றாக‌ வ‌ந்த‌து என்று சொல்ல‌ முடியாது.

Tuesday, August 11, 2009

ப‌ள்ளியில் இன்று

தீஷுவிட‌ம் தினமும் இன்னைக்கு ஸ்கூலில‌ என்ன‌ பண்ணின‌ என்றால் ப‌ஸில் என்று தான் ப‌தில் வ‌ரும். ரைமிஸ் பாடுகிறாள். அவைத்த‌விர‌ அவ‌ள் ப‌ள்ளியில் ந‌ட‌ந்த‌தைத் தெரிந்து கொள்ள‌ முடியாது.

தீஷுவும் நானும் சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் டீச்ச‌ர் மாண‌வி விளையாட்டு விளையாண்டு கொண்டிருந்தோம். எப்பொழுதும் போல் தீஷுவே டீச்ச‌ர். அவ‌ள் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மூல‌மும் வார்த்தைக‌ள் மூல‌மும் அவ‌ள் பள்ளியில் என்ன‌ செய்கிறார்க‌ள் என்ப‌தை ஓர‌ள‌வு புரிந்து கொள்ள‌ முடிந்த‌து.

1. ப‌ள்ளியில் அனைத்து ஆக்டிவிட்டீஸும் சத்த‌மில்லாம‌ல் செய்ய‌ வேண்டும்
2. ஆக்டிவிட்டீஸ் செய்ய‌ "மாட்டில்" ம‌ட்டுமே அம‌ர‌ வேண்டும்
3. வேலையை முடித்த‌வுட‌ன், அனைத்தையும் எடுத்து வைத்த‌வுட‌ன், மாட்டை இர‌ண்டு கையால் சுருட்டி, இர‌ண்டு கையால் எடுத்துக் கொண்டு வைக்க‌ வேண்டும்
4. ஓர‌த்தில் நிற்க‌ வைப்ப‌து தான் த‌ண்ட‌னை. த‌ண்ட‌னையில் இருக்கும் பொழுது யாரும் அவ‌ருட‌ன் பேச‌ மாட்டார்க‌ள்
5. ஆக்டிவிட்டி முடித்த‌வுட‌ன் சைல‌ன்ஸ் டைம்
6. அனைவ‌ரும் லைன் மேல் (லைன் வ‌ரைந்திருக்கிறார்க‌ள்) உட்கார‌ வேண்டும்
7. பிரைய‌ரின் பொழுது கை கூப்பி க‌ண்ணை மூடி வேண்டும்
8. அப்பொழுது அமைதி காக்காம‌ல் க‌த்துப‌வ‌ர்க‌ளை ஆன்ட்டி அழைத்துக் கொண்டு போய் விளையாட‌ விட்டுவிடுவார்
9. "What colour do you like?", "What fruit do you like?" போன்ற கேள்விக‌ள் (அவ‌ள் சொன்ன‌து இவை இர‌ண்டும்) கேட்டு குழ‌ந்தைக‌ளைப் பேச‌ வைக்கிறார்க‌ள்
10. குழ‌ந்தைக‌ள் விரும்பும் பாட‌ல்க‌ள் ம‌ட்டுமே பாடுகின்ற‌ன‌ர்
11. செய‌ல்முறைக‌ளை செய்து காட்டிவிட்டு "Do you want to try?" என்று கேட்கின்றன‌ர்
12. ஆங்கில‌த்தில் ம‌ட்டுமே உரையாடுகின்ற‌ன‌ர்
13. ப‌ஸிலை தூக்கி எறிந்தால் (?) அவ‌ள் சொன்ன‌து புரிய‌வில்லை. திரும்ப‌ கேட்ட‌தில் அவ‌ள் விளையாட்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌தால் அவ‌ளுக்குச் சொல்வ‌தில் விருப்ப‌மிருக்க‌‌வில்லை.

ஓர‌ள‌வு தெரிந்து கொண்ட‌தில் என‌க்கு ம‌கிழ்ச்சி.. சில‌ நேர‌ங்களில் இது போல் விளையாட்டால் ப‌ள்ளியில் ந‌ட‌ப்ப‌தை கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் தெரிந்து கொள்ள‌லாம்.

Monday, August 10, 2009

ஈடுபாடு

கோர்த்த‌ல் (Stringing) க‌வ‌ன‌ ஒருங்கினைப்புக்கு மிக‌வும் ஏற்ற‌து. தீஷு அதில் ஆர்வ‌ம் காட்டுவ‌தில்லை. ஆகையால் ச‌ற்று வித்தியாச‌ப்ப‌டுத்தி கொடுக்க‌லாம் என்று எண்ணி ஒரு க‌ம்பில் கோர்க்க‌ச் சொன்னேன். ஆனால் அவ‌ளுக்கு விரும்ப‌மிருக்க‌வில்லை. பாசிக‌ள் ம‌ர‌த்திலான‌ பெரிய‌ அள‌விலான‌து. முத‌லில் அவ‌ற்றை அத‌ன் வ‌டிவ‌ங்க‌ளின் அடிப்படையில் அடுக்கினாள். பின்பு அவ‌ற்றை வைத்து க‌ட்டிட‌ங்க‌ள் உருவாக்கினாள். பின்பு இர‌ண்டை க‌யிறில் கோர்த்தாள். பின்பு எடுத்து வைத்து விட்டாள். ஆனால் எடுத்து வைக்கும் பொழுது செய்த‌து தான் என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌து.




எழுத‌ ப‌ய‌ன்படுத்தும் முத‌ல் மூன்று விர‌ல்க‌ளை ம‌ட்டும் ப‌யன்ப‌டுத்தி எடுத்தாள். பின்பு ஸ்லோலி அண்ட் ஸாஃப்ட்லி என்று சொல்லிக் கொண்டே மெதுவாக‌ வைத்தாள். அப்பொழுதும் அவ‌ள் வ‌டிவ‌ங்க‌ளின் அடிப்ப‌டையிலேயே அடுக்கினாள். அனைத்தையும் முடித்த‌வுட‌ன், க‌யிறைச் சுற்றுனாள் (அது ச‌ரியாக‌ வ‌ர‌வில்லை). அவ‌ளுக்குச் சுற்றியது போதும் என்று தோன்றிய‌வுட‌ன், ட‌ப்பாவை இர‌ண்டு கைக‌ளால் தூக்கிச் சென்று வைத்து விட்டாள்.



இதை அனைத்தையும் செய்வ‌த‌ற்கு அவ‌ளுக்கு அரை ம‌ணி எடுத்த‌து. அந்த‌ அரை ம‌ணி நேர‌மும் அவ‌ள் நான் அருகில் இருக்கிறேனா என்று க‌வனிக்க‌வில்லை. என்னை அழைக்க‌வும் வில்லை. ஒரு விஷ‌ய‌த்தில் விருப்ப‌த்துட‌ன் ஈடுப‌ட்டால் குழ‌ந்தைக‌ள் எடுத்துக் கொள்ளும் ஈடுபாடு (involvement) என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌து.

Sunday, August 9, 2009

இர‌வா? ப‌க‌லா?

பொதுவாக‌ டே வித் டாடி இரண்டு மூன்று வார‌ங்க‌ளுக்கு ஒரு முறை தான் செய்வார்க‌ள். ஆனால் தொட‌ர்ந்து மூன்று வார‌ங்க‌ளாக‌ செய்து கொண்டிருக்கிறார்க‌ள். என‌க்குத்தான் எழுதுவ‌த‌ற்கு நேர‌ம் கிடைக்க‌வில்லை.

Fountain: இந்த‌ ஐடியா Fun with Science project என்ற‌ புத்த‌க‌த்திலிருந்து வ‌ந்தது. ஒரு பாட்டில் மூடியில் ஓட்டைக‌ள் போட்டுக்கொள்ள‌ வேண்டும். அதில் வெந்நீர் எடுத்துக் கொள்ள‌வும். ஒரு பாத்திர‌த்தில் குளிர்ந்த‌ நீர் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். வெந்நீர் உள்ள‌ பாட்டிலில் ஒரு க‌யிறைக் க‌ட்டி, அதை குளிர்ந்த‌ நீர் உள்ள‌ பாத்திர‌த்தில் இற‌க்க‌ வேண்டும். பாட்டிலிருந்து வெந்நீர் குளிர்ந்த‌ நீரில் க‌ல‌ப்ப‌த‌ற்காக‌ ஓட்டை வ‌ழியாக‌ ப‌வுண்ட‌ன் போல் வ‌ரும். அத‌ன் பின் இருக்கும் அறிவிய‌லை அப்பா தீஷுவிற்கு விள‌க்கும் பொழுது, சாரி.. நான் க‌வ‌னிக்க‌வில்லை. தீஷுவும் அப்பாவின் பொறுமையை சோதிக்கும் ப‌டி அதை போரிங் ஆக்டிவிட்டியாக மாற்றி விட்டாள்.

Bridge: நாம் அடிக்க‌டி சாலைக‌ளின் போகும் பொழுது உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌து பால‌ங்க‌ள். தீஷு எப்பொழுதும் பால‌த்தில் போக‌ வேண்டும் என்பாள். கீழே செல்லுவ‌தைப் பார்ப்ப‌த‌ற்கு அவ‌ளுக்கு மிக‌வும் இஷ்ட‌ம். அத‌னால் அப்பா ட‌ம்ப‌ள‌ர்க‌ளால் பால‌ம் க‌ட்டி, பால‌ங்க‌ளின் ப‌ய‌ன்க‌ளை விள‌க்கினார்.



தீஷுவிற்கு சோலார் ஸிஸ்ட‌ம் ப‌ற்றி சொன்ன‌த்திலிருந்து அவ‌ளுக்கு அதில் விருப்ப‌ம் அதிக‌ம். ஒரு முறை நெட்டிலிருந்து எப்ப‌டி கோள்க‌ள் சூரிய‌னைச் சுற்றி வ‌ருகின‌ற‌ன் என்ப‌தை காண்பித்தேன். அதைப் பார்த்த‌வுட‌ன் அவ‌ளும் சூரிய‌ன் வ‌ரைந்து கோள்க‌ள் சுற்றுவ‌து போல் வ‌ரைந்து காண்பித்தாள். அதை அடிப்ப‌டையாக‌க் கொண்டு, இர‌வு ப‌க‌ல் எவ்வாறு வ‌ருகிற‌து என்ப‌த‌னை அப்பா விள‌க்கினார்.

பூமி (Globe) எடுத்துக் கொண்ட‌ன‌ர். ஒரு இருட்டு அறைக்குச் சென்று, டார்ச் இல்லாத‌தால், மொபைலில் வெளிச்ச‌ம் ஏற்ப‌டுத்தின‌ர். அப்பொழுது இந்தியா உள்ள‌ ப‌குதி ம‌ட்டும் வெளிச்ச‌மாக‌ இருந்த‌து. அது ப‌க‌ல் என்று, பூமியை மெதுவாக‌ச் சுற்றினார். அப்பொழுது இந்தியாவில் இர‌வும் அத‌ன் எதிர்ப‌க்க‌த்தில் ப‌க‌லும் ஆன‌து. தீஷு எளிதாக‌ப் புரிந்து கொண்டாள். திரும்ப‌ திரும்ப‌ செய்து காட்டி விள‌க்கிக் கொண்டிருந்தாள். அவ‌ள் அப்பா சொல்லிக் கொடுத்த‌தில் அவ‌ளுக்கு மிக‌வும் பிடித்த‌து இது தான் என்று நினைக்கிறேன். முடித்த‌ப்பின்னும் அதைப்ப‌ற்றியே பேசிக்கொண்டிருந்தாள். போட்டோ ஃப்ள‌சினால் வெளிச்ச‌மாக‌த் தெரிகிற‌து.

அப்பா என்ன? அம்மா என்ன?

இப்பொழுதெல்லாம் தீஷுவிடம் பல்பு வாங்குவது எங்கள் இருவரும் சாதாரண விஷயமாகி விட்டது. என் நினைவிலிருந்த இரண்டு சம்பவங்கள்:

1.

அம்மா அப்பாவிடம்,

அம்மா: இந்த வீக் எண்டுல பேண்ட் எடுக்கனும்.
அப்பா: ( எப்பொழுதும் போல் சுவாரஸ்யம் இல்லாமல்) ம்ம்ம்ம்ம்...
தீஷு : யாருக்கு பேண்ட்?
அம்மா : எனக்குத்தான்..
தீஷு : உங்கிட்டத்தான் நிறைய இருக்கே? இப்ப எதுக்கு வேஸ்ட்டா?
அம்மா: ????
அப்பாவுக்கு ஒரே சந்தோஷம்.

2.
சென்ற வாரம் ஒரு நாளில் என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு, வீடு திரும்பும் பொழுது, தீஷு வண்டியிலிருந்து இறங்கும் பொழுது ஸைலன்ஸரில் கால் வைத்து விட்டாள். காலில் காயம் ஏற்பட்டுவிட்டது. டாக்டரிடம் மருந்து வாங்கி இருக்கிறோம். ஒரு வாரமாக எங்கள் வீட்டின் முக்கிய டென்ஷன் இது. அப்பா தீஷுவிற்கு புது மருந்து போட கூப்பிட்டார். தீஷு தண்ணீர் கேட்டதால் வெந்நீர் போட்டார். புது மருந்து பார்த்தவுடன் தீஷுவிற்கு அப்பொழுதே போட வேண்டும். அப்பாவுக்கோ வெந்நீர் ஆறி விடும் அதனால் குடித்து முடித்தவுடன் போடலாம் என்று.

அப்பா : இங்க பாரு.. ஆயின்மெண்ட்டில் என்ன எழுதியிருக்குனு.. Drink hot water and then apply ointment..
தீஷு : அப்படியா எழுதியிருக்கு? இல்லையே.. Apply ointment and then drink hot waterனு எழுதியிருக்கு..
அப்பா: ??????

Wednesday, August 5, 2009

வீட்டில் மேஸ்

சில வாரங்களாக எழுத நேரம் இல்லாததால், செய்த அனைத்தையும் எழுத முடியவில்லை. முக்கியமாக கருதிய இரண்டை மட்டும் பதியலாம் என்று நினைக்கிறேன்.





லைனில் நடக்கப் பழக்கலாம் என்று நினைத்து, செல்லோ டேப்பை ஒட்டும் பொழுது, இந்த ஐடியா தோன்றியது. டேப்பை இரண்டு சதுரங்களாக மடக்கி ஒட்டினேன். ஒரு ஒரத்தில் ஆரம்பித்து, டேப்பின் சதுரங்களின் நடுவிற்கு நடந்து செல்ல வேண்டும். கிட்டத்தட்ட மேஸ் போன்றது. தீஷு மிகவும் விருப்பமாக செய்தாள். மாறி மாறி அரை மணி நேரம் விளையாண்டு கொண்டிருந்தோம். அடுத்து டேப்பின் (லைனில்) மேல் நடக்க வைத்தேன். நன்றாக நடக்க ஆரம்பத்தவுடன், கையில் எதையாவது வைத்துக் கொண்டு நடக்கப் பழக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அதன் மூலம் கவனம் அதிகரிக்கும். இன்னும் சில நாட்களுக்கு இந்த செல்லோ டைப்பை எடுக்கப் போவதில்லை.



பெக் பஸில் எனப்படும் எழுத பயன்படும் மூன்று விரல்களால் பஸில் பீசை எடுத்து, மீண்டும் அதன் இடத்தில் பொருத்தும் பஸிலால் மூன்று விரல்களுக்கும் பயிற்சி கிடைக்கிறது. ஆனால் இப்பொழுது தீஷுவிற்கு பெக் பஸில் செய்வதில் விருப்பம் இருப்பதில்லை. ஆகையால் இது போல் மீன் பிடித்து விரல்களுக்கு பயிற்சி கொடுத்தோம்.




மீன் படங்களை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு, தீஷுவை கலர் செய்யச் சொன்னேன். பின் அவற்றைக் கத்தரித்து, சில மீன்களின் பின் பேப்பர் பின் (ஜம்ப் கிளிப்) வொட்ட வைத்தேன். என் ஊதா ஷாலை தண்ணீராக பாவித்து, அதன் மேல் மீனை போட்டுவிட்டோம். கையில் காந்தத்தை (மெக்னெட்டிங் டூடுலுடன் வந்தது) வைத்து மீனை எடுக்க வேண்டும். சில மீன்களில் பின் பேப்பர் பின் ஒட்டவில்லை. அவற்றை எடுக்க முடியவில்லை என்றவுடன், காந்தவியல் பற்றி விளக்கினேன். தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது.



அது முடித்தவுடன், ஒரு கம்பில் மாக்னெட்டை ஒரு நூலில் கட்டி, மீன் பிடிக்க வைத்தேன். தீஷுவிற்கு பிடிக்கவில்லை. இது கை கண் ஒருங்கினைப்புக்கு மிகவும் ஏற்றது.

Sunday, August 2, 2009

நன்றி

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக ப்ளாக் படிப்பதற்கும் சரி, எழுதுவதற்கும் சரி நேரம் கிடைக்கவில்லை. ரீடரிலிருந்த பதிவுகளை படிக்கும் பொழுது தான் தற்பொழுது(?) உள்ள விருதுகள் பற்றி தெரிந்தது.

ஆகாயநதி சுவாரசிய வலைப்பதிவு விருது கொடுத்திருக்காங்க.

அமுதா சுவாரசிய வலைப்பதிவு விருதும், பெஸ்ட் ப்ஃரெண்ட் விருதும் கொடுத்திருக்காங்க.

நன்றிகள் பல.

தீஷுவிற்காகவே இந்த வலைப்பதிவு ஆரம்பித்தேன். பிற்காலத்தில் அவளின் குழந்தை பருவத்தைப்பற்றி அவள் தெரிந்து கொள்வதற்காக. முதலில் வலைப்பதிவை personalஆக வைத்திருக்கவே நினைத்திருந்தேன். பின்னர் அவளின் ஆக்டிவிட்டீஸ் மட்டும் இதில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். வெறும் வெட்டுதல், ஒட்டுதல், கொட்டுதல் மட்டும் எழுதினால் சுவாரசியமாக இருக்காது என்பதும் தெரியும். ஆனால் ஒரு கலெக்ஷனாக இருக்கட்டும் என்று ஆரம்பித்தேன்.

அது எனக்கு நண்பர்கள் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இதுவரை என் வாழ்வில் கம்யூட்டர் சாட் வசதி உபயோகப்படுத்திய தருணங்களை எண்ணிவிடலாம். என் குடும்பத்தாரிடம் தவிர நெருங்கிய நண்பர்கள் ஒர் இருவரிடம் ஒர் இரு முறை பேசி உள்ளேன். இதுவரை ஆர்குட், பேஸ் புக், twitter, கூகுல் சாட் உபயோகப்படுத்தியதில்லை. நண்பர்களிடம் உரையாட விருப்பமில்லை என்பதில்லை. தொலைபேசியில் மட்டுமே பேசும் பழக்கம் உண்டு. சந்திக்க முடிந்த நண்பர்களை நேரில் பார்த்து பேசும் பழக்கம் உண்டு. அப்படி குணமுள்ள எனக்கு வலை மூலம் நண்பர்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது. வலையில் அறிமுகமான சிலரிடம் போனிலும், சிலரிடம் மெயிலிலும் பேசியிருக்கிறேன். சிறு வயதில் பென் பிரெண்ட் கேள்வி பட்டவுடன் கிடைத்த த்ரிலிங், இந்த நட்பு உலகம் கொடுக்கிறது. நன்றிகள்.

விருது வாங்குவது போல் கொடுப்பதும் மகிழ்ச்சி தருவது. ஆனால் நான் ரொம்ப லேட்டா எழுதுறேன். கிட்டத்தட்ட அனைவரும் வாங்கிட்டாங்க. ஆதனால யாருக்கும் கொடுக்க முடியல. மன்னிக்கவும்.

ஆரெஞ்ச் களிமண்


சப்பாத்தி மாவு பிசையும் பொழுதும், தேய்க்கும் பொழுதும் தீஷுவின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அனைத்தையும் தான் செய்ய வேண்டும் என்பாள். அவளிடம் அதே போல் விளையாட்டு பொருட்கள் இருக்கின்றன. ஆனால் நான் உபயோகப்படுத்துவது வேண்டும். அவளுடைய களிமண்ணை (playdough) சமைக்க பயன்படுத்தும் பொருட்களில் வைத்து விளையாடுவதில் எனக்கு விரும்பமிருக்கவில்லை.

ஆகையால் அவளுக்கு மைதா மாவில் playdough செய்து கொடுத்தேன்.

தேவையான பொருட்கள் :

1. மைதா மாவு - 4 ஸ்பூன்
2. தண்ணீர் - 4 ஸ்பூன்
3. உப்பு - 2 ஸ்பூன்
4. எண்ணெய் - 2 ஸ்பூன்
5. Food colouring.

Food colouring தண்ணீரில் சேர்த்துக் கொண்டேன். மைதாமாவு, உப்பு போன்றவற்றை தீஷுவை அளக்க வைத்தேன். அனைத்தையும் ஒரு கிண்ணதில் போட்டு சிறிது சிறிது தண்ணீர் சேர்க்க வைத்தேன். முதலில் அவளாகவே பிசைந்தாள். பின்பு என் உதவி தேவைப்பட்டது. பிசைந்த பொழுதே அவளின் கைகள் சோர்வடைந்து விட்டதால், அவளால் அன்று விளையாட முடியவில்லை. மறுநாள் எடுத்து விளையாண்டாள். செய்து 10 நாட்களாகி விட்டன. பிரிட்சில் வைக்கவில்லை ஆயினும் இன்னும் மாவு கெடாமல், மிருதுவாக இருக்கிறது.

Bubbles

சோப்பு தண்ணீர் ஊதுவது தீஷுவிற்கு மிகவும் பிடித்தது. முன்பு சிறு வயதில் விளையாண்டது போல், சோப்பைக் கரைத்து அவள் அப்பா கொடுத்தார். ஆனால் தொடர்ந்து பபில்ஸ் வராததால் அவளுக்கு வருத்தம். நெட்டில் தேடிய பொழுது கிடைத்தது இந்த முறை.

தேவையான பொருட்கள் :

1. குழந்தைகள் Shampoo - 2 spoon
2. தண்ணீர்
3. Glycerin

Glycerin மருந்து கடைகளில் கிடைக்கிறது. சாம்பூவில் சிறிது சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூனால் கலக்கிவிட வேண்டும். கலக்கும் பொழுது பபில்ஸ் வரக்கூடாது. பின் அதில் சிறிது( ஒரு துளீ) Glycerin சேர்க்க வேண்டும். 8 மணி நேரம் ஊறவிட்டப்பின் எடுத்து ஊதினால் கடையில் வாங்குவது போல் தொடர்ந்து நன்றாக வருகிறது.

Tuesday, July 21, 2009

சின்ன விதை

தீஷுவின் வயதிற்கு ஏற்ப அவளுக்கு அறிவியலை அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு லிஸ்ட் தயாரித்தேன். அதில் முதலில் இருந்தது செடிகளின் வளர்ச்சி.

எங்களிடம் Eric Carle இன் The Tiny seed புத்தகம் இருக்கிறது. அதில் ஒரு பூவின் மகரந்தத்திலிருந்து பறக்கும் விதைகளில் ஒரு சின்ன விதை இருக்கும். பறக்கும் பொழுது ஒரு விதை வெப்பத்தில் எரிந்து விடும், ஒன்று பாலைவனத்தில் விழுந்து விடும், ஒன்று கடலில், ஒன்றை பறவை தின்று விடும், ஒன்றை எலி என்று சில விதைகள் போனப்பின் சில விதைகள் மீதமிருந்து வளரும். வளரும் பொழுது மற்ற செடிகள் பல் வேறு காரணங்களால் மறைய, சின்ன விதை செடி மட்டும் இருக்கும். இது வளர்ந்து பெரிய செடியாக வளர்ந்து, அதன் பெரிய பூவிலிருந்து மீண்டும் விதைகள் பறக்க ஆரம்பிப்பது போன்று மரங்களின் சுழல்ச்சியும், வெவ்வேறு சீதோஷன நிலைகளும் விளக்கப்பட்டுயிருக்கும். அந்த புத்தகத்தை தினம் படித்து, நாங்கள் கப்பில் வளர்த்த செடிகளின் வளர்ச்சியை பார்த்தோம். ஒரளவு அவளுக்கு செடிகள் பற்றி தெரிந்து கொணடவுடன், செடிகளின் வளர்ச்சி பற்றிய சீக்கொன்சிங் கார்ட்ஸ் இங்கிருந்து பிரிண்ட் அவுட் எடுத்து வளர்ச்சிக்கு தகுந்தாற் போல் அடுக்க வைத்தேன்.

அது செடிகள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. விதைகளிலிருந்து மட்டும் தான் வளருமா ஏன் பூ இதழ்களில் வளராதா என்று கேட்டு, கடந்த இரண்டு நாளாக ஒரு பூவின் இதழ்களை மண்ணில் போட்டு வைத்து, அதற்கு தண்ணீரும் ஊற்றுகிறாள். அது அவளுக்கு ஒரு நல்லதொரு பயிற்சியாக இருக்கும்.

Monday, July 20, 2009

கவர்ந்த தருணங்கள் 21/07/09

1.

தீஷு பள்ளி கிளம்பும் முன் என்னிடம்
தீஷு : "பனானா பாஃக்ல வச்சிட்டியா?"
அப்பா : "இதெல்லாம் கேளு.. புக் எடுத்து வச்சிட்டியானு கேட்டியா?"
தீஷு : "புக்கெல்லாம் சாப்பிட முடியாது..."

2.

தீஷு : "அம்மா, பால் குடிக்க கொடுங்க"
அம்மா: " குடுத்தப்ப குடிக்கல..இப்ப எதுக்கு?"
தீஷு : "இப்பத்தான் பால் தாகமா இருக்கு"

3.

தீஷு : "அம்மா, பல் கூசுது"
அம்மா: "இங்க வா, பாப்போம்"
தீஷு : "அதெல்லாம் வேண்டாம், பிஸ்கெட் சாப்பிட்டா சரியா போயிடும்"

4.

தீஷு அழுது கொண்டே எழுந்தாள். கோலத்த அழிச்சியா என்றாள். இல்லையென்றவுடன் அமைதியாகிவிட்டாள். சிறிது நேரம் கழித்து அவள் அப்பாவிடம் "அம்மா ரப்பர் வச்சு கோலத்த அழிச்ச மாதிரி நான் தூங்கிறப்ப என் கண்ணுக்குள்ள தெரிஞ்சிச்சு, அதான் அழுதேன்" என்றாள். எங்களிடம் சொன்ன முதல் கனவு இது.

5.

தீஷு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுது பாடிய வரிகள் ( Where is thumbkin? பாட்டு மெட்டில்)

சுத்தி சுத்தி ஓடி வாடா
தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக்கோடா
இங்க அங்க ஓடாத
இங்கேயே நில்லு.

Thursday, July 9, 2009

புது பயணம்

தீஷு பிறந்தவுடன் எடுத்த லீவை கிட்டத்தட்ட 2.5 வருடங்கள் நீடித்துவிட்டேன். அதன் பின் வேலைக்குப் போக மாட்டேன் என்று கடந்த டிசெம்பரில் ரிஸேன் செய்து விட்டேன். தீஷு பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்ததும் மீண்டும் வேலையில் சேரும் ஆர்வம் ஏற்பட்டது.

திருமணத்திற்கு முன்பு பெங்களூரில் செய்த வேலையை, என் கணவர் யூஸ்ஸில் இருந்ததால் திருமணத்திற்கு பிறகு அங்கு தொடர்ந்தேன். திருமணத்திற்கு முன் ஹாஸ்டல் திரும்ப இரவு 8 மணி ஆகி விடும். அப்பொழுது குழந்தை கவனிப்பு, சமைத்தல் போன்ற வேலைகள் இல்லாததால் பெரிய சுமையாகத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது சீக்கிரம் வீடு வர வேண்டும் என்பது என் எண்ணம். தீஷுவோடு மாலை இல்லையென்றாலும் இரவாவது நேரம் செலவிட வேண்டும்.

முதலில் வீட்டிலிருந்து வேலை செய்ய எண்ணினேன். ஆனால் அது இந்த ரிஸஸனில் சாத்தியமில்லை என்று தெரிந்தது. யூஸ் பிராஜெக்ட் என்றால் திரும்ப நேரமாவதால் யூகே பிராஜெக்ட் கேட்டேன். என் பழைய கம்பெனியும் யூகே பிராஜெட்டில் அலகேட் செய்து ஆஃபரும் கொடுத்து விட்டனர். ஆஃபரைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியை விட பயம் தான் வந்தது. தீஷு எப்படி எதிர்கொள்வாள்?

தீஷுவை மதியம் 1:30 முதல் மாலை நான் திரும்பும் வரை பார்த்துக் கொள்ள ஒருவர் வேண்டும். கடந்த வாரம் இருவரைப் பார்த்து, ஒருவரைத் தேர்வும் செய்துவிட்டேன். நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் அடிக்கடி லீவு போடுவார் என்று தெரிந்தவுடன், என்ன செய்வது என்று தெரியவில்லை. என் அத்தை சிறிது நாட்கள் வந்து தங்குவார்கள். அதுவரை பிரச்சினை இல்லை. அதன் பின் ஊரிலிருந்து யாராவது வேலைக்கு வர சம்மதித்தால் அழைத்து வரும் எண்ணமும் உள்ளது. அது வரை இந்த ஏற்பாடு.

தீஷுவைப் பார்த்தால் ஒரு மாதிரியாக (பயமா, பாவமா என்று தெரியவில்லை) இருக்கிறது. அவள் பள்ளி செல்லும் முன் எப்படி போவாளோ என்று பயந்தது உண்டு. ஆனால் அவள் பழகிக் கொண்டாள். நான் விட்டு செல்வதை எப்படி எடுத்துக் கொள்வளோ என்று பயமாக இருக்கிறது. அவளிடம் நான் ஆபிஸ் போனவுடன் ஒரு ஆன்ட்டி பார்த்துக் கொள்வார் என்று சொன்னேன். அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் புரியும் பொழுது என்ன செய்யப் போகிறாள் என்று தெரியவில்லை.

தீஷுவிற்கு ஐந்து வயதானப்பின் சேரலாம் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய பிரேக் மிகுதி ஆகிவிடும் என்பதால் சேர முடிவு செய்துவிட்டேன். முடிவு சரியானதா என்று எனக்கு இன்னும் புரியவில்லை. சரியானது இல்லை என்று தெரிந்தவுடன் வேலையை மீண்டும் விடும் எண்ணம் உள்ளது. வரும் திங்கள் முதல் ஆரம்பிக்கயிருக்கும் எங்களுடைய இந்தப் புது பயணம் நல்ல படியாக செல்ல வேண்டுமே என்று பயமாக இருக்கிறது. எவ்வாறு செல்கிறது என்பதனைத் தெரிவிக்கிறேன்.

Wednesday, July 8, 2009

தங்கப் பாசி

மீண்டும் odd man out செய்தோம். இந்த முறை இரு கிண்ணங்களும் இரு ஸ்பூன்களும் எடுத்துக் கொண்டோம். முதலில் இரு கிண்ணங்கள் வைத்து சேம் என்றேன். அடுத்து ஒரு கிண்ணமும் ஒரு ஸ்பூனும் வைத்து டிபரெண்ட் என்றேன். அடுத்து இரண்டு கிண்ணங்களும் ஒரு ஸ்பூனும் வைத்து ஆட் மென் அவுட் என்றவுடன், ஸ்பூன் என்றாள். அடுத்து அடுத்து வெவ்வேறு வகையில் பொருட்களை மாற்றினாலும் சரியான பதில் வந்தது. புரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன். நன்றாக செய்தாள். ஒர் இரு மாதங்களுக்கு முன் செய்த பொழுது புரியவில்லை.



மாண்டிசோரி கோல்டன் பீட்ஸ் decimal system விளக்குவதற்கும், 1, 10, 100, 1000 போன்ற எண்களின் மதிப்பை அறிவதற்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒன்றுக்கு ஒரு பாசி, பத்துக்கு ஒரு கம்பியில் கோர்த்த 10 பாசிகள் (line), நூறுக்கு பத்து பாசிகளின் கோர்வை பத்து (10*10) வைத்து ஒரு சதுரம், ஆயிரத்திற்கு 10 நூறு சதுரங்கள் (10*100) வைத்து ஒரு cube என இருக்கும். இதன் மூலம் decimal system, மற்றும் பத்து பத்துக்கள் நூறு என்றும், பத்து நூறுகள் ஆயிரம் என்றும் புரியும். அதன் மதிப்புக்கள் விளங்கும். தீஷு இப்பொழுது இரண்டு, மூன்று இலக்க எண்கள் வாசிப்பதால், இப்பொழுது பீட்ஸ் சொல்லிக் கொடுக்கலாம் என்று பாசிகளைக் கோர்த்துக் கொண்டேன். உதிரி பாசிகள் ஒன்பதும், ஒன்பது 10 பாசிகள் கோர்வை எடுத்துக் கொண்டோம். முதலில் உதிரி பாசிகளை எண்ணச் சொன்னேன். முடித்தவுடன் ஒரு பாசி கோர்வையை எடுத்து எண்ணச் சொன்னேன். அதில் பத்து என்றாள். அதேப் போல் ஒவ்வொரு கோர்வையாக ஒன்பதையும் எண்ணினாள். அடுத்து ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டு, tens, 2 tens, 3 tens என்று 9 tens வரை சொன்னோம் (நடுவில் அவளும் சேர்ந்து கொண்டாள்). அடுத்து 27 என்றால் இரண்டு tens மற்றும் 7 உதிரிகள் என்பதை எண்ணிக் காட்டினேன். விருப்பமாக செய்கிறாள். மெல்ல மெல்ல நூறு மற்றும் ஆயிரங்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் உள்ளது.





தீஷுவிற்குச் செடிகளின் மேல் ஆர்வத்தைக்கொண்டு வரவும், செடிகளின் வளர்ச்சியின் பின்னுள்ள அறிவியலைத் தெரிந்து கொள்ளவும் மிளகாய், தக்காளி போன்றவற்றின் விதைகளை விதைத்திருந்தோம். அவை நன்றாக வளர்ந்து நாற்றுக்களை எடுத்து வேறு இடத்தில் நடயிருந்த நேரத்தில் ஒரு சிறுவன் கொத்தாக எல்லா செடிகளையும் எடுத்து விட்டான். அத்தனை உயிர்களைக் கொன்றதற்காக என் குழந்தையென்றால் அன்று என்னிடம் அடியே வாங்கியிருக்கும். அன்று முழுவதும் மிகுந்த வருத்தம் எனக்கு. அதனால் இந்த முறை கொண்டைக் கடலை, பாசி பயறு போன்றவைகளை ஒரு சிறு கிண்ணத்தில் விதைத்தோம். இது ஒரு வாரத்தில் நன்றாக வளர்ந்து விட்டது. அது வளர்வதைப்பார்த்து தீஷுவிற்கு சந்தோஷம். வாடத்தொடங்கும் சொடிகளை எடுத்து இலை, வேர், தண்டு, கிளைகளை என்று parts of the plant படித்தோம்.

Thursday, July 2, 2009

Metal inset

நாம் மிக எளிதாக நினைக்கும் விஷயங்கள் கூட குழந்தைகளுக்கு எளிதல்ல என்று உணர்த்தியது இந்த செயல்முறை. ஏற்கெனவே ரப்பர் பேண்டை குழலில் மாட்டியிருக்கிறோம். ஆனால் இரண்டு சுற்று (double loop) மாட்டியது இல்லை. அது விரலுக்கு வேலை கொடுப்பதால், அதைச் சொல்லிக் கொடுக்கலாம் என்று ஒரு குழல், ஒரு பெரிய ரப்பர் பேண்ட் எடுத்துக் கொண்டோம். ரப்பர் பேண்ட் வெகு நாட்களாக காகிதகங்களை ஒழுங்குபடுத்தப் பயன்படுத்தப்பட்டுயிருந்ததால் கஷ்டப்பட்டு இழுக்க வேண்டியதில்லை. முதலில் குழலை கையில் எடுத்து, அதன் ஒரு ஓரத்தில் அருகில் நம் கையை வைக்க வேண்டும். மற்றொரு கையால் ரப்பர் பேண்டை குழலில் மாட்ட வேண்டும். மீண்டும் அடுத்த சுற்றுக்கு, ஒரு விரலால் ரப்பர் பேண்டை சுற்றி, குழல் அருகில் எடுத்துச் சென்று மாட்ட வேண்டும். சொல்லிக் கொடுக்க எளிதாகத்தான் இருந்தது. ஆனால் தீஷு இரண்டாவது சுற்று மாட்டும் பொழுது முதல் சுற்று வந்து விடும். வெகு நேரம் முயற்சி செய்து விட்டு முடியவில்லை என்று எடுத்து வைத்து விட்டோம். ஆனால் சில மணி நேரங்கள் கழித்து அவளாக, மாட்ட முயற்சி செய்து கொண்டிருந்தாள். அப்பொழுதும் முடியவில்லை. சில நாட்கள் கழித்து முயல வேண்டும். அல்லது குழலுக்குப் பதில் door knobபில் மாட்டலாம் என்று நினைத்திருக்கிறேன். இதில் பிடிக்க வேண்டியில்லாததால் இரண்டு கைகளையும் பயன்படுத்தலாம்.





Rough & Smooth சொல்லிக் கொடுத்தேன். மாண்டிசோரி Touch board #1 போல் செய்ய ஒரு கனமான அட்டையை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு பாதியில் உப்புத்தாளை ஒட்டி விட்டேன். ஒரு பாதி வழுவழுப்பாகவும், இன்னொரு பாதி ரஃபாகவும் இருக்கும். ஒவ்வொரு பகுதியாக தடவி ரஃப், ஸ்மூத் என்று சொல்லிக் காட்டினேன். இதை முன்பே செய்திருக்க வேண்டும். Touch board #2 வும் செய்யும் ஐடியாவும் உள்ளது.







மாண்டிசோரி Metal insets எழுதுவதற்கு விரல்களை தயார்ப்படுத்துகிறது . அதில் பஸில் போர்ட் போல் ஒரு ஃப்ரேமும், வெவ்வேறு வகையான ஷேப் பிஸுகளுக்கும் இருக்கும். பிஸை எடுத்து விட்டு, ஃப்ரேமை பேப்பரில் வைத்து ஃப்ரேமிலுள் அதன் ஓரங்களை வரைந்து ஷேப் உருவாக்க வேண்டும். பின் அதனுள் கோடுகள் வரையலாம். இவை அனனத்தும் எழுதுவதற்கு தயார்ப்படுத்தும். அதை ஒத்த ஒன்றை செய்வதற்காக ஒரு அட்டையை எடுத்து, அதன் நடுவில் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் போன்றவற்றை வரைந்து வெட்டி விட்டேன். தீஷுவிற்கு செவ்வகமும், வட்டம் மட்டும் கொடுத்தேன். வட்டம் நன்றாக வரைந்தாள். செவ்வகத்திற்கு ஒரு பக்கத்தை விட்டு விட்டாள். வட்டத்தில் கோடுகள் வரைவதற்கு பதில் ஸ்மைலி போடுகிறாள். கொஞ்ச நாளுக்கு இது உபயோகப்படுத்தப்படும்.

Tuesday, June 30, 2009

கை ரேகை

அமித்து அம்மா பதிவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.



தீஷுவிற்கு கைரேகையைப் பற்றி சொல்லிக் கொடுக்கலாம் என்று அவள் இரு கைகளையும் வரைந்து கொண்டேன். இங்க் பேடு இல்லாததால், வாட்டர் கலரில் ஒவ்வொரு விரலாகத் தொட்டு, வரைந்து வைத்துள்ள கையில் அந்த விரலுக்குரிய விரலில் வைக்க வேண்டும். தீஷு ஒவ்வொரு விரலுக்கும் கலர்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டுயிருந்தாள். அவளுக்குப் பிடித்திருந்தது. அவள் பாஸ்போர்ட்டுக்கு அவள் கட்டைவிரல் ரேகையை எடுக்கும் முன் நாங்கள் பட்டபாடு ஞாபகம் வந்தது. அனைத்து விரல்களையும் வைத்து முடித்தவுடன், ரேகைகளை Magnifying glass மூலம் காட்ட எண்ணியிருந்தேன். ஆனால் தண்ணீர் மிகுதியாக வாட்டர் கலரில் பயன்படுத்திவிட்டோம் என்று நினைக்கிறேன். ரேகைகளைப் பார்க்க முடியவில்லை. மீண்டும் இங்க் பேடு வாங்கி செய்து பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

சோழிகளை தினமும் ஒரு முறையேனும் உபயோகப்படுத்தி விடுகிறோம். தற்பொழுது ஆட் / ஈவனுக்கு அடுத்து பிரபலம் இந்த விளையாட்டு. இந்த விளையாட்டில் சோழிகளை குவியலாகப் போட்டு விட்டு, அருகிலுள்ள சோழிகளை இடிக்காமல் ஒவ்வொரு சோழியாக எடுக்க வேண்டும். முறை மாற்றி மாற்றி நாங்கள் இருவரும் விளையாடுவோம். தீஷுவிற்கு சோழிகளை குவிக்கும் பொழுது சோழிகள் மிக அருகில் இல்லாத்தது போல் பார்த்துக் கொள்வேன். மிகவும் விருப்பமாக விளையாடுகிறாள். இது கவன ஒருங்கிணைப்புக்கு ஏற்றது.



இது இன்று நாங்கள் புதிதாக செய்தது. சோழிகளைக் கண்ணாடி கற்களுடன் சேர்த்துக் கொண்டேன். கண்ணை மூடிக் கொண்டு, சோழிகளையும் கண்ணாடி கற்களையும் பிரிக்க வேண்டும். கண்ணாடி கற்கள் சோழிகளுடன் ஒப்பிடும் பொழுது பெரிதாக இருந்ததால் எளிதாகச் செய்தாள். அதைச் செய்தவுடன், சோழிகளுடன் கிட்டத்தட்ட சோழி அளவேயான பாசிகளைக் கொடுத்துப் பிரிக்கச் சொன்னேன். அதுவும் பிடித்திருந்தது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost