Tuesday, April 30, 2013

ப‌ழைய‌ துணிக்கு...

ச‌ம்மு பிற‌ந்ததிலிருந்து செய்த‌வைக‌ளை வ‌ரிசையாக‌ எழுத‌வேண்டும் என்று நினைத்து, போட்டோக‌ளைத் தேடி எடுப்ப‌த‌ற்கு நேர‌மில்லாம‌ல், எழுதாம‌ல் இருக்கிறேன். ஆகையால் த‌ற்பொழுது அவ‌ளுக்குச் செய்வ‌தை எழுத‌லாம், ந‌டுந‌டுவே குழ‌ந்தையாக‌ இருந்த‌ பொழுது செய்த‌தை எழுத‌லாம் என்று நினைத்திருக்கிறேன்.

ச‌ம்முக்கு த‌ற்ச‌ம‌ய‌ம் ஒரு வ‌ய‌து இருக்கிற‌து. தானாக‌வே எதையும் வைத்து விளையாடும் வ‌யது. கிட்ட‌த்த‌ட்ட‌ அனைத்துப் பொருட்க‌ளும் அவ‌ளுக்குப் புதிய‌து. அத‌னால் எதைப் பார்த்தாலும் தொட்டோ சுவைத்தோ பார்ப்பாள். நாம் த‌னியாக‌ எதுவும் செய்யத் தேவையில்லை என்ப‌து உண்மை.ஆனால் நான் அவ‌ளுட‌ன் த‌னியாக‌ விளையாட‌ அவ‌ளுக்காக‌ நேர‌ம் செல‌விட (One to One)‌ வேண்டும் என்ப‌தே என் விளையாட்டுக‌ளின் நோக்கம். மேலும் அவ‌ளுக்கு விருப்ப‌மான‌ நேர‌ம் ம‌ற்றும் அவ‌ள் விரும்பும் வ‌கையில் ம‌ட்டும் விளையாடுவோம். சிறு குழ‌ந்தையிட‌ம் எவ்வித‌மான‌ப் பொருட்க‌ள் கொடுத்தாலும், த‌ய‌வு செய்து முழு நேர‌மும் அருகில் இருங்க‌ள்.

நான் வித‌ வித‌மான‌ காகித‌ங்க‌ளை அவ‌ளிட‌ம் கொடுத்து விளையாட விடுவேன். உதார‌ண‌த்திற்கு பிஸ்க‌ட் க‌வ‌ர், டிஸ்யூ பேப்ப‌ர், கிஃப்ட் ராப், ப‌புள் ராப் போன்ற‌ன‌. ஒவ்வொரு பேப்ப‌ரும் ஒரு வித‌மான‌ த‌ன்மை உடைய‌து. அது தொடும் உண‌ர்ச்சியைத் தூண்டும். ச‌ம்மு எதையும் வாயில் வைப்ப‌தால் என‌க்கு நேர‌ம் இருக்கும் பொழுது தான் குடுப்பேன்.

பொதுவாக‌ ச‌ம்முவிற்காக‌ விளையாட்டுப் பொருட்க‌ள் செய்யும் பொழுது தீஷுவை இணைத்துக் கொள்வேன். இந்த‌ விளையாட்டிற்கு, நாங்க‌ள் ப‌ல‌ வித‌ துணிக‌ள் எடுத்துக் கொண்டோம். ஒரு ட‌ப்பா ம‌ற்றும் அத‌ன் பிளாஸ்டிக் மூடி எடுத்துக் கொண்டோம். பிளாஸ்டிக் மூடியில் உண்டிய‌லில் இருக்கும் அள‌விற்கு ஒரு ஓட்டை க‌த்தியால் வெட்டிவிட்டோம். உள்ளே துணிக‌ளை வைத்து விட்டோம். ஒரு துணி ஓட்டையின் வ‌ழியே வெளியே தெரியும் ப‌டி வைத்து விட்டோம். அந்த துணியை உருவ‌ வேண்டும். உருவும் பொழுது அடுத்த‌ துணி பெரும்பாலான நேர‌ங்க‌ளில் வெளியே வ‌ந்து விடுகிற‌து. தொடுத‌ல் உண‌ர்ச்சிக்கும், கை விர‌ல்க‌ள் வ‌லுப்ப‌டுத்துவ‌த‌ற்கும் இந்த‌ விளையாட்டு மிக‌வும் உத‌வுகிற‌து. ஐடியா ஒரு புத்த‌க‌த்தில் ப‌டித்த‌து. புத்த‌கத்தில் அனைத்துத் துணிக‌ளையும் இணைத்து தைத்து ஒரு முழு நீளத் துணியாக‌க் கொடுக்க‌ச் சொல்லி இருந்தார்க‌ள். அது ச‌ம்முக்கு க‌டின‌ம் என்று என‌க்குத் தோன்றிய‌து.

ஒரு நாள் அந்த‌ ட‌ப்பாவை ச‌ம்முவிட‌ம் கொடுத்த‌வுட‌ன், துணிக‌ளை இழுத்தாள்.



அனைத்துத் துணிக‌ளையும் எடுத்து முடித்த‌வுட‌ன், மூடியைத் திற‌ந்து கொடுத்தேன். மீண்டும் துணிக‌ளை உள்ளே போட‌ முயற்சித்தாள்.


 மூடியை மூட‌ முய‌ற்சித்தாள்.




சில விளையாட்டுப் பொருட்கள் உள்ளே போட்டாள். துணிகளைத் தூக்கி எறிந்தாள்.



 மொத்த‌ம் இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் விளையாண்டாள் :‍)). ஆனால் தின‌மும் வெவ்வேறு நேர‌ங்க‌ள் எடுத்துக் கொடுப்பேன். ஒவ்வொரு முறையும் விளையாடும் முறையும் நேர‌மும் வேறுப‌டும்.

ப‌ழைய‌ துணிக‌ளுக்குப் புதிய‌ வேலை கொடுத்த‌தில் ச‌ந்தோஷ‌ம்.

Sunday, April 28, 2013

குழ‌ந்தைக் க‌தாசிரிய‌ர்க‌ள் - அப்டேட்ஸ்

இர‌ண்டு வார‌த்திற்கு முன் குழ‌ந்தைக‌ள் எழுதும் க‌தைக‌ளைப் புத்த‌க‌மாக்குவ‌துப் ப‌ற்றி இங்கு எழுதியிருந்தேன். இதுவ‌ரை ஐந்து க‌தைக‌ள் வ‌ந்துள்ள‌ன‌. ஒவ்வொரு க‌தையும் ஒவ்வொரு த‌ள‌த்தில் மிக‌வும் வித்தியாச‌மாக‌ உள்ள‌து.

க‌தை அனுப்ப‌ விரும்புவோர் க‌தையையும் அத‌ற்கான‌ ப‌ட‌த்தையும் (அல்ல‌து ப‌டங்க‌ளையும்), ஆசிரிய‌ர் ப‌ற்றிய சிறு குறிப்பையும் dheekshu@gmail.com என்ற‌ முக‌வ‌ரிக்கு அனுப்புங்க‌ள்.

க‌தைக‌ள் த‌ந்த‌ உற்சாக‌த்தில் புத்த‌க‌த்திற்கான‌ அட்டையை வ‌டிவ‌மைத்துள்ளேன். அட்டையைப் ப‌ற்றிய‌ உங்க‌ள் விம‌ர்ச‌ன‌ங்க‌ளைச் சொல்லுங்க‌ளேன்.




Thursday, April 25, 2013

சனி ஞாயிறு விடுமுறை விடும் பழக்கம் ஏன் ஏற்பட்டது ‍?

கி.ராஜ‌ நாராய‌ண‌ன் எழுதிய‌ "தாத்தா சொன்ன கதைகள்" சென்ற‌ முறை புத்த‌க‌க் க‌ண்காட்சியில் வாங்கினோம். சிறு க‌தைக‌ளின் தொகுப்பு. அதிலுள்ள‌ அனைத்துக் க‌தைக‌ளையும் சிறுவ‌ர்க‌ளுக்குக் கூற‌முடியாது என்ப‌து என் எண்ண‌ம். அதிலிருந்து ஒரு க‌தை. ப‌டித்து ரொம்ப‌ நாளாகி விட்ட‌தால் க‌தையின் பெய‌ர் நினைவில் இல்லை. அது ஒரு சோகக் க‌தை. ஆனால் என் ம‌க‌ளுக்குச் சொல்லுவ‌த‌ற்காக‌ ம‌கிழ்ச்சியான‌ க‌தையாக‌ மாற்றியுள்ளேன்.

 ஒரு ஊரில் ஒரு எறும்பு இருந்த‌து. ஒரு நாள் ம‌கிழ்ச்சியாக‌ ஆற்றுக்கு த‌ண்ணீர் குடிக்கச் சென்ற‌து. ஏன் ம‌கிழ்ச்சியாக‌ இருக்க‌ என்று ஆறு கேட்ட‌த‌ற்கு, வெகு நாட்க‌ளுக்குப் பிற‌கு என் ந‌ண்ப‌னை இன்று பார்த்தேன் அத‌னால் ம‌கிழ்ச்சியாக‌ இருக்கேன் என்ற‌து. எறும்பின் மகிழ்ச்சி ஆற்றுக்கும் தொற்றிக் கொண்ட‌து.

ஆற்றின் அக்க‌ரையில் இருந்த‌ ம‌ர‌ம், ஆற்றிட‌ம் ஏன் மகிழ்ச்சியாக‌ இருக்க‌ என்று கேட்ட‌த‌ற்கு, அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு வெகு நாட்க‌ள் க‌ழித்து இன்று த‌ன் ந‌ண்ப‌னைப் பார்த்து விட்ட‌து, எறும்பு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. அத‌னால் நான் ம‌கிழ்ச்சியாய் உள்ளேன் என்ற‌து. ஆற்றின் ம‌கிழ்ச்சி ம‌ர‌த்திட‌ம் தொற்றிக் கொண்ட‌து.

 ம‌ர‌த்தின் இலையை உண்ண‌ யானை ஒன்று வ‌ந்த‌து. யானை ம‌ர‌த்திட‌ம் ம‌கிழ்ச்சிக்குக் கார‌ண‌ம் கேட்ட‌வுட‌ன் ம‌ர‌ம், ‍ ஆறு ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து, காரண‌ம் அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. எறும்பிட‌ம் ஆறு கேட்ட‌த‌ற்கு, எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌தால் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌தாக கூறிய‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் நான் ம‌கிழ்ச்சியானேன் என்ற‌து. மர‌த்தின் மகிழ்ச்சி யானையைத் தொற்றிக் கொண்ட‌து.

ப‌சியாறிய‌ யானை ஒரு ப‌சுவைச் ச‌ந்தித்த‌து. ப‌சு யானையிட‌ம் ஏன் மகிழ்ச்சியாக‌ இருக்க‌ என்று கேட்ட‌வுட‌ன் யானை, ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து. கார‌ண‌ம் ஆறு ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து, ஆறு அக்க‌ரையிலுள்ள‌ ம‌கிழ்ச்சியாய் இருந்த‌ எறும்பிட‌ம் கேட்ட‌தற்கு, எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌தால் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌தாக‌க் கூறிய‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌து, ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌தால் நான் ம‌கிழ்ச்சியானேன் என்ற‌து. யானையின் மகிழ்ச்சி மாட்டைத் தொற்றிக் கொண்ட‌து.

 ம‌கிழ்ச்சியாய் இருந்த‌ ப‌சு, த‌ன் வீட்டிற்கு சென்ற‌து. அத‌ன் முத‌லாளி ஒரு விச‌வாயி. அவ‌ன் ப‌சுவிட‌ம் ஏன் ம‌கிழ்ச்சியாய் இருக்க‌ என்று கேட்ட‌த‌ற்கு, யானை ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து கார‌ண‌ம் மர‌ம் ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து, கார‌ண‌ம் ஆறு ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து, கார‌ண‌ம் அக்க‌ரையிலுள்ள‌ எறும்பு த‌ன் ந‌ண்ப‌னை வெகு நாட்க‌ள் க‌ழித்து ச‌ந்தித்த‌து என்ற‌து. எறும்பு ம‌கிழ்ச்சியாக‌ இருந்தால் ஆறு ம‌கிழ்ச்சியான‌து. ஆறு ம‌கிழ்ச்சியான‌தால் ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌து. ம‌ர‌ம் ம‌கிழ்ச்சியான‌தால் யானை ம‌கிழ்ச்சியாய் இருந்த‌து. யானை ம‌கிழ்ச்சியாய் இருந்த‌தால் நான் ம‌கிழ்ச்சியானேன் என்று ப‌சு சொன்ன‌து. ப‌சுவின் மகிழ்ச்சி விவ‌சாயியைத் தொற்றிக் கொண்ட‌து.

விவ‌சாயியிட‌மிருந்து அவ‌ர் ம‌னைவி, ம‌னைவிட‌மிருந்து ம‌க‌ன், மக‌னிடமிருந்து ப‌ள்ளி ஆசிரிய‌ர் ம‌கிழ்ச்சிய‌டைவ‌ர். ம‌கிழ்ந்த‌ ஆசிரிய‌ர், அன்று ச‌னிக்கிழ‌மையான‌தால், அன்று ம‌ற்றும் அத‌ன் ம‌று நாள் கொண்டாட்ட‌ விடுமுறை விட்டுவிடுவார். க‌தை சொல்லும் பொழுது ஒவ்வொரு முறையும் புதுக் க‌தாப‌த்திர‌ங்க‌ள் வ‌ரும் பொழுது முழுத் தொட‌ரையும் சொல்லுவேன். ஆனால் எழுதுவ‌தற்கு முடிய‌வில்லை. :)). உங்க‌ளால் ப‌டிக்க‌வும் முடியாது என்று தெரியும்.

தீஷுவிற்கு மிக‌வும் பிடித்த‌மான‌ க‌தை. பாதியிலிருந்து அவ‌ள் சொல்ல‌த் தொட‌ங்கிவிடுவாள்.

 இந்த‌ க‌தையில் எந்த‌ முறை ம‌கிழ்ச்சி என்ற வார்த்தை வ‌ருகிற‌து என்ப‌தை யாராவ‌து ச‌ரியாக எண்ணிச் சொன்னால் மிக்க‌ ம‌கிழ்ச்சி அடைவேன்..!!!!‌

Tuesday, April 23, 2013

க‌ணக்கு க‌ற்றுக் கொடுக்கும் பிர‌மிட்

பிர‌மிட் ச‌க்தியைப் ப‌ற்றிய‌ ப‌திவில்லை. இது நாம் உருவாக்கி க‌லைக்கும் பிர‌மிட் ப‌ற்றிய‌து. சீட்டுக் க‌ட்டுக் கொண்டு பிர‌மிட் உருவாக்குகிறோம். அத‌ன் மூல‌ம் கூட்ட‌ல் க‌ற்க‌லாம். அட்டைக‌ளை இணைத்து கூட்டுத் தொகை 13 வ‌ந்தால் அவ்வ‌ட்டைக‌ளைக் க‌ழித்து விட‌ வேண்டும். இவ்வாறு 52 அட்டைக‌ளையும் க‌ழிக்க‌ வேண்டும்.

தேவையான‌ப் பொருள்

1. சீட்டுக் க‌ட்டு (52 அட்டைக‌ள். ஜோக்க‌ர் தேவையில்லை)

பிர‌மிட் உருவாக்கும் முறை 
1. ஒரு அட்டையை ம‌திப்பு தெரியும் ப‌டி வைக்க‌வும்.

2. அத‌ன் மேல், முழுவ‌தும் ம‌றைக்காம‌ல், இர‌ண்டு அட்டையை வைக்க‌ வேண்டும். பார்க்க‌ப் ப‌ட‌ம்.



3. அத‌ன் மேல், மூன்றாவ‌து வ‌ரிசையில் , மூன்று அட்டைக‌ள் வைக்க‌ வேண்டும்.

4. இவ்வாறு ஏழு வ‌ரிசைக‌ள் வைக்க‌ வேண்டும். இறுதி வ‌ரிசையில் ஏழு அட்டைகள் இருக்கும்.

5. மீத‌முள்ள‌ அட்டைக‌ளை அருகில் வைத்துக் கொள்ள‌ வேண்டும்.

ப‌ட‌ அட்டைக‌ளின் ம‌திப்பு

Jack -  11

Queen -  12

King - 13

Ace-  1 ‌


விளையாடும் முறை

1. முத‌லில் ஆர‌ம்பிக்கும் பொழுது, இறுதி வ‌ரிசையிலுள்ள‌ ஏழு அட்டைக‌ள் ம‌ட்டுமே உப‌யோக‌ப்ப‌டுத்த முடியும்.

2. அவ்வ‌ரிசையில் ஏதாவ‌து இர‌ண்டு அட்டைக‌ள் இணைத்தால், கூட்டுத் தொகை 13 வ‌ந்தாலோ அல்ல‌து கிங் (ம‌திப்பு 13) இருந்தோ க‌ழித்து விட‌ வேண்டும்.

3. இவ்வாறு க‌ழிக்கும் பொழுது மேல் வ‌ரிசையிலுள்ள‌ அட்டைக‌ள் சில‌வ‌ற்றில், அவ‌ற்றை மூடி இருக்கும் இரு அட்டைக‌ளையும் எடுத்து இருப்போம். அவ்வாறுள்ள‌ அட்டைக‌ளை  இப்பொழுது நாம் உப‌யோக‌ப்ப‌டுத்த‌லாம்.

4. எந்த‌வொரு அட்டையின் மேல் அட்டைக‌ள் இல்லையோ அத‌னை நாம் உப‌யோக‌ப்ப‌டுத்த‌லாம்.

5. பிர‌மிட்டில் ந‌ம‌க்கு உப‌யோக‌ப்ப‌டுத்த முடிந்த‌ அட்டைக‌ளை இணைத்து கூட்டுத் தொகை 13 வ‌ர‌ முடியாவிட்டால், பிர‌மிட்டில் வைக்காம‌ல் அருகில் இருக்கும் அட்டைக‌ளை ஒவ்வொன்றாக திருப்பி, 13 உருவாக்க‌ முயற்சிக்க‌ வேண்டும்.

6. எப்பொழுது மீத‌முள்ள அட்டைக‌ள் வைத்து 13 உருவாக்க‌ முடியாதோ அல்ல‌து அனைத்து அட்டைக‌ளும் முடிந்து விட்டாலோ, விளையாட்டு முடிந்து விடும்.

 மூல‌ம்:

http://en.wikipedia.org/wiki/Pyramid_%28solitaire%29

நான் விதிமுறைக‌ளை தீஷுவின் வ‌ய‌திற்கு ஏற்ப‌ மாற்றியுள்ளேன்.


Sunday, April 21, 2013

குழ‌ந்தையை வ‌ருத்தும் தோல் நிற‌ம்

ச‌ந்த‌ன‌ முல்லை ப‌திவில் குழ‌ந்தைக‌ளைத் துர‌த்தும் கேள்விக‌ள் ப‌ற்றி எழுதி இருந்தார். அதைப் ப‌டித்த‌வுட‌ன் எனக்கு தீஷு கேட்ட‌ கேள்வி ஞாப‌க‌ம் வ‌ந்த‌து.

"ஏன் நான் ப்ர‌வுன் க‌ல‌ரில் இருக்கேன்?"

 "நான் (அம்மா) ப்ர‌வுன் க‌ல‌ரில் இருப்ப‌தால், நீயும் ப்ர‌வுன் க‌ல‌ரில் இருக்க‌" என்றேன்.

 "ஏன் ச‌ம்மு (த‌ங்கை) ம‌ட்டும் பீச் க‌ல‌ரில் இருக்கா?"

 "அவ‌ அப்பா மாதிரி இருக்கா"

அன்றைய‌ உரையாட‌ல் முடிவு பெற்ற‌து. நானும் பெரிய‌ விஷய‌மாக‌ எடுத்துக் கொள்ள‌வில்லை. தோல் நிற‌த்தை எப்பொழுதும் பெரிய‌ விஷ‌ய‌மாக‌ எடுத்துக் கொள்ளாத‌தால். எங்க‌ள் வீட்டில் இதைப் ப‌ற்றி பேசும் ப‌ழ‌க்க‌மும் இல்லை.

 சில‌ நாட்க‌ள் க‌ழித்து தோல் நிற‌ம் ப‌ற்றிய‌ பேச்சு வ‌ந்த‌து ஆனால் இந்த‌ முறை வேறு வ‌டிவ‌த்தில் ..

 "நான் ஹேலிக்கு ஹாய் சொன்னேன்.. அவ‌ளும் சொன்னாமா.. நான் கூட‌ அவ‌ என் கூட பேச‌ மாட்டானு நினைச்சேன்"

 "ஏன் பேச‌ மாட்டானு நினைச்ச?"

"ஏன்னா, நான் ப்ர‌வுன் க‌ல‌ரில் இருக்கேன்ல‌..."

 இது ம‌ன‌தை பாதித்து உள்ள‌து என்ப‌து என‌க்குப் புரிந்த‌து..சில‌ விள‌க்க‌ங்க‌ள் கொடுத்தேன். தோல் நிற‌த்தை வைத்து த‌ன்னைத் தாழ்த்திக் கொள்ள‌க் கூடாது என்று என் வாழ்க்கை நிகழ்ச்சிக‌ள் வைத்து விள‌க்கினேன். விருப்ப‌மாக‌க் கேட்டாள்.

 இன்னும் சில‌ நாட்க‌ள் க‌ழித்து நான் கோப‌ப்ப‌ட்ட‌த‌ற்கு, அவ‌ளிட‌மிருந்து வ‌ந்த‌ சொற்க‌ள், "Nobody likes me because I am dark"

தெளிவாக‌ விள‌க்குவ‌த‌ற்கான‌ நேர‌ம் என‌ப் புரிந்தது. அன்றைய‌ பொழுது விட்டு, அடுத்த‌ நாள் மெதுவாக‌ ஆர‌ம்பித்தேன். யாரும் தோல் நிற‌த்தை வைத்து ம‌திக்க‌ப் ப‌டுவ‌தில்லை என்றேன் (உண்மை சில‌ நேர‌ங்க‌ளில் வேறு வித‌மாக‌ இருந்தாலும்..). உண்மையாக‌வும், நேர்மையாக‌வும், உத‌வுவ‌தையும், தொல்லைக் கொடுக்காத‌வ‌ர்க‌ளையுமே எல்லாருக்கும் பிடிக்கும் என்றேன்.

சின்ன‌ க‌தை ஒன்றே நானே உருவாக்கிச் சொன்னேன்.. "ஒரு சின்ன‌க் குழ‌ந்தை த‌ன் தோல் நிற‌த்தைப் ப‌ற்றி வ‌ருந்தி, தேவ‌தையிட‌ம் சென்று தன்னை வெள்ளையாக‌ மாற்ற‌ச் சொன்ன‌து. தேவ‌தை நீ யார் க‌ல‌ர் போல் ஆக‌ வேண்டும் என்ற‌த‌ற்கு,குழ‌ந்தை மேக‌ம் என்ற‌து. நீ மேக‌த்திட‌ம் சென்று அத‌ன் க‌ல‌ர் அத‌ற்கு பிடிக்குமா என்று கேட்டு வா என்றுது தேவ‌தை. குழ‌ந்தை மேக‌த்திட‌ம் சென்று உன‌க்கு உன் க‌ல‌ர் பிடிக்குமா என்று கேட்ட‌து. அப்பொழுது மேக‌ம், நான் வெண்மையான‌ இருக்கும் பொழுது யாருக்கும் உத‌வ‌ முடியாது, எப்பொழுது என் நிற‌ம் க‌ருமையாக‌ மாறுகிற‌தோ, அப்பொழுது தான் என்னால் ம‌ழை பொழுந்து அனைவ‌ருக்கும் உத‌வ‌ முடியும் என்ற‌து. மேலும், நிற‌த்தில் என்ன‌ இருக்கிற‌து.. உத‌வுவ‌தே முக்கியம் என்ற‌து. குழ‌ந்தைக்கு த‌ன் நிற‌த்தின் மேல் பெருமை உண்டாகிய‌து. தேவ‌தையிட‌ம் த‌ன் நிற‌த்தை மாற்ற‌ வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட‌து"

 இது தான் நான் சொன்ன‌ க‌தை. கேட்ட‌வுட‌ன் என்னைக் க‌ட்டிக் கொண்டாள். அத‌ன் பின் நிற‌த்தைப் ப‌ற்றி பேச‌வில்லை. என் க‌தையைக் கேட்கும் கொடுமைக்கு ப‌ய‌ந்து கொண்டு இருக்கிறாளா என்று தெரிய‌வில்லை. ந‌கைச்சுவைக்குச் சொன்னாலும் என் ம‌ன‌தின் ஓர‌த்தில் என்றாவ‌து ஒரு நாள் திரும்ப‌வும் வ‌ரும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிற‌து.

Friday, April 19, 2013

வ‌ண்ண‌ங்க‌ளின் அணிவ‌குப்பு

ந‌ம் வீட்டில் பெயிண்ட் அடிப்ப‌த‌ற்கு முன், வ‌ண்ண‌ங்க‌ளைத் தேர்ந்தெடுப்ப‌த‌ற்கு ஏதுவாக‌, பெயிண்ட் க‌ம்பெனிக‌ள் வ‌ண்ண‌ அட்டை ஸாம்பிள்க‌ள் வைத்திருப்பார்க‌ள். பெயிண்ட் விற்கும் எல்லா க‌டைக‌ளிலும் கிடைக்கும். நாங்க‌ள் அந்த‌ வ‌ண்ண‌ அட்டைக‌ள் வைத்து க‌ல‌ர் மாட்சிங் ம‌ற்றும் க‌ல‌ர் பிரித்த‌ல் போன்ற‌ன‌ செய்திருக்கிறோம். அந்த‌ முறை வெட்டி ஒட்டினோம்.




தேவையான‌ப் பொருட்க‌ள் :

1. வ‌ண்ண‌ அட்டைக‌ள்

2. க‌த்திரிக்கோல்

3. கோந்து

செய்முறை 1:

1. வ‌ண்ண‌ அட்டைக‌ளை ந‌மக்குப் பிடித்த‌ வ‌டிவ‌த்தில் வெட்ட‌ வேண்டும்.


2. அரை பேப்ப‌ருக்கு கோந்து த‌ட‌வி, வெட்டிய‌ வ‌ண்ண‌ அட்டைக‌ளை ஒட்ட‌ வேண்டும்.


3. முழு பேப்ப‌ருக்கும் அட்டைக‌ள் ஒட்ட‌ வேண்டும் ஆனால் கோந்து காய்ந்து விடும் என்பத‌ற்காக‌ நாங்க‌ள் அரை அரையாக‌ பிரித்துச் செய்தோம்.




செய்முறை 2:

1. இந்த‌ முறை ஒரு இன்ச் ச‌துர‌மாக‌ வெட்டிக் கொள்ள‌ வேண்டும்.

2. ஒரு இன்ச் ச‌துர‌த்தில் ந‌டுவில் வெட்டி (diagonal) இரு முக்கோண‌ங்க‌ளாக‌ ஆகிக் கொண்டோம்.

3. பேப்ப‌ரில் கோந்து ஒட்டி வெட்டிய ப‌குதியை ச‌துர‌ம் வ‌ரும்ப‌டி ஒட்டினோம்.

4. ஒரு இன்ச் ச‌துர‌ம் வெட்டும் பொழுது சில ச‌துர‌ங்க‌ளை நாங்க‌ள் ச‌ரியாக வெட்ட‌வில்லை. தீஷுவிற்கு ஒரு இன்ச் அள‌ப்ப‌தும் சிர‌ம‌மாக இருந்த‌து. அத‌னால் சில‌ இட‌ங்க‌ளில் இடைவெளிக‌ள் உள்ள‌ன‌.


செய்முறை இர‌ண்டில் செய்த‌து என‌க்குப் பிடித்திருந்த‌து. சிர‌ம‌மான‌ வேலை இல்லை. ஆனால் அழகாக‌ இருக்கிற‌து.  


Wednesday, April 17, 2013

இலையில் த‌ண்ணீர் செல்லுமா?

நேற்றைய‌ ப‌திவின் முடிவில் இலையில் த‌ண்ணீர் க‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌தா என்ப‌தை ஒரு சோத‌னையின் மூல‌ம் செய்தோம் என்று செல்லியிருந்தேன். நாங்க‌ள் முன்பே பூக்காம்பு த‌ண்ணீர் க‌ட‌த்துவ‌தை சோதித்திருந்தோம். அதே வ‌ழியில் இலைக்கும் செய்தோம். ஆனால் இந்த‌ முறை ச‌ற்று வித்தியாச‌ப்ப‌டுத்த‌ இலையின் ந‌டுவில் வெட்டிச் செய்தோம்.

தேவையான‌ப் பொருட்க‌ள்:

1. ஒர் இலை ‍- நாங்க‌ள் Lettuce இலை எடுத்துள்ளோம். முட்டைக்கோஸின் இத‌ழ் (இத‌ழ் என்றா சொல்ல வேண்டும்?) கூட‌ எடுத்துக் கொள்ள‌லாம்.

2. த‌ண்ணீர்

3. இர‌ண்டு கோப்பைக‌ள்

4. க‌ல‌ரிங்

செய்முறை:


1. இர‌ண்டு கோப்பைக‌ளிலும் த‌ண்ணீர் எடுத்து, வெவ்வேறு வ‌ண்ண‌ க‌ல‌ரிங் சேர்க்க‌வும். நாங்க‌ள் ப‌ச்சை ம‌ற்றும் ஊதா எடுத்துக் கொண்டோம்.

2. இலையின் ந‌டுப்ப‌குதியில் க‌த்தியால் வெட்ட‌வும். இர‌ண்டாக இலையைப் பிரிக்க‌ வேண்டாம். இறுதியில் 2 இன்ச் விட்டு விட‌வும். இலை பிரிந்து இருக்கும், ஆனால் இர‌ண்டு துண்டுக‌ளாக இருக்காது.

3. பிரிந்த‌ ப‌குதியை கோப்பைக்குள் விட‌வும். இர‌ண்டு கோப்பைக்குள்ளும் இலை இருக்கும்.


4. ஆறு ம‌ணி நேர‌த்தில் ப‌ச்சை நிற‌த் த‌ண்ணீரிலிருந்த‌ இலை பாக‌த்தில் ப‌ச்சை நிற‌ப் புள்ளிக‌ள் தோன்றின‌. ஊதா நிற‌த் த‌ண்ணீரிலிருந்த‌ இலை பாக‌த்தில் ஊதா நிற‌ப் புள்ளிக‌ள் தோன்றின‌.

5. நாங்க‌ள் மூன்று நாட்க‌ள் வைத்திருந்தோம். இலைக‌ளிலும் த‌ண்ணீர் செல்வ‌தை அறிந்து கொண்டோம்.

புகைப்ப‌ட‌த்தில் நிற‌ங்க‌ள் ந‌ன்றாகத் தெரிய‌வில்லை... அப்ப‌டிச் சொல்லிச் சமாளிச்சுக்கிறேன்...போட்டோ எடுக்க‌த் தெரிய‌லையேனு யாரும் சொல்ல‌க்கூடாது பாருங்க‌..




விள‌க்க‌ம்:

விளக்க‌ம் ஆங்கில‌த்தில் கொடுப்ப‌து எளிதாக‌ இருக்கிற‌து.
  
Veins of the leaves are made up of bundles of vascular tubes. There are two types of vascular tubes -  xylem tubes and a phloem tubes. Xylem tubes transport water and minerals upward from the roots through the plant. Phloem tubes transport water and food manufactured in the plant's leaves throughout the plant. In this experiment, we saw the results of colored water moving through xylem tubes.
 
இந்த‌ இரு எளிமையான‌ சோத‌னைக‌ள் மூல‌ம் நிறைய‌ தெரிந்து கொண்டோம்.

Tuesday, April 16, 2013

அறிவிய‌ல் சோத‌னைக‌ளும் வ‌ண்ண‌ங்க‌ளும்

ப‌ள்ளியிலோ க‌ல்லூரியிலோ அறிவிய‌ல் பாட‌ப்பிரிவு எடுத்திருந்தால் வேதிய‌ல் லாபில் உப்பின் பெய‌ரை க‌ண்டுபிடித்திருப்போம். அப்பா.. அது ப‌டுத்தும் பாடு இருக்கிற‌தே.. உப்பைப் பார்க்கும் பொழுது, ச‌ற்று சிவ‌ப்பு நிற‌த்தில் இருந்தால் இரும்பு உள்ள‌து என்று தெரிந்து விடும். முட்டை போன்று ம‌ண‌ம் இருந்தால் ஹைட்ர‌ஜ‌ன் சல்பெட். உப்பின் பெய‌ரை இப்ப‌டிப் பார்த்த‌வுட‌ன் க‌ண்டுபிடிக்க‌ முடியாவிட்டால், நாம் ஆஸிட் ஊற்றிக் கண்டுபிடிக்க‌ வேண்டும். ஆஸிட் அள‌ப்ப‌த‌ற்கு பிப்ப‌ட்டில் மெதுவாக‌ உறுஞ்சினால் தேவையான ஆஸிட் வ‌ராது. வேக‌மாக‌ உறுஞ்சினால் ந‌ம் வாய்க்குள் போய்விடும். ஒருவ‌ழியாக‌ ஆஸிட் ச‌ரியாக‌ எடுத்து உப்பின் மேல் ஊற்றினால் உப்பு நினைத்தால் த‌ன் நிற‌த்தை மாற்றும். நிற‌ மாற்ற‌த்திற்கு காத்துக் கொண்டு இருப்போம். அறிவிய‌ல் சோத‌னைக‌ளும் வ‌ண்ண‌ங்க‌ளும் பிரிக்க‌ முடியாத‌து.


ந‌ல்ல‌ வேளை, நாங்க‌ள் செய்த‌ சோத‌னைக‌ள் அவ்வ‌ள‌வு தூர‌ம் எங்க‌ளைப் ப‌டுத்த‌வில்லை. நாங்க‌ள் த‌ண்ணீர் க‌டத்திக‌ள் ப‌ற்றிப் ப‌டித்தோம்.


 தேவையான‌ப் பொருட்க‌ள்:

1. த‌ண்ணீர்

 2. இர‌ண்டு அல்ல‌து மூன்று க‌ண்ணாடி ட‌ம்ள‌ர்

3.  பேப்ப‌ர் ட‌வ‌ல்

செய்முறை:

ஒரு க‌ண்ணாடி ட‌ம்ள‌ரில் த‌ண்ணீர் எடுத்துக் கொள்ள‌வும். நாங்க‌ள் சிறிது க‌ல‌ரிங் க‌ல‌ந்து கொண்டோம். இன்னொரு ட‌ம்ள‌ர் காலியாக‌ ப‌க்க‌த்தில் வைக்க‌வும். பேப்ப‌ர் ட‌வ‌ல் எடுத்து ஒரு ட‌ம்ள‌ரிலிருந்து இன்னொரு ட‌ம்ள‌ருக்குள் விட்டோம்.


சிறிது நேர‌த்தில் பேப்ப‌ர் ட‌வ‌ல் க‌ல‌ர் த‌ண்ணீரை உறுஞ்சி க‌ட‌த்த‌த் தொட‌ங்கிய‌து. ஒரு ம‌ணி நேர‌ம் க‌ழித்து காலி ட‌ம்ள‌ரில் த‌ண்ணீர் சிறிது இருந்த‌து. நான்கு ம‌ணி நேர‌த்தில் முத‌ல் ட‌ம்ள‌ரிலும் காலி ட‌ம்ள‌ரிலும் ச‌ரி  அள‌வு த‌ண்ணீர் இருந்த‌து.


ச‌ற்று வித்திய‌ச‌ப்ப‌டுத்த‌ இர‌ண்டு ட‌ம்ள‌ரில் இரு நிற‌ங்க‌ளில் த‌ண்ணீர் எடுத்துக் கொண்டோம். காலி ட‌ம்ப‌ள‌ரை ந‌டுவில் வைத்து விட்டோம்.   பேப்ப‌ர் ட‌வ‌ல்க‌ளை இர‌ண்டு ட‌ம்ள‌ரில் இருந்தும் காலி ட‌ம்ள‌ருக்குள் வைத்தோம்.



சிறிது நேர‌த்தில் காலி ட‌ம்ள‌ரில் இர‌ண்டு ட‌ம்ள‌ர்க‌ளிலிருந்தும் த‌ண்ணீர் வ‌ர‌த் தொட‌ங்கிய‌து. நிற‌ங்க‌ள் க‌ல‌க்க‌த் தொட‌ங்கின. நாங்க‌ள் எடுத்திருந்த‌ இரு நிற‌ங்க‌ளும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒன்று போல் இருந்த‌தால் வித்தியாச‌ம் ந‌ன்றாக‌த் தெரிய‌வில்லை. வேறு நிற‌ங்க‌ள் எடுத்திருக்க‌ வேண்டும்.



எத‌னால் த‌ண்ணீர் க‌ட‌த்தப்ப‌டுகிற‌து ?

எனக்கு த‌மிழில் விள‌க்க‌த் தெரிய‌வில்லை. ம‌ன்னித்துக் கொள்ளுங்க‌ள்.

Cohesive forces are the intermolecular attractive forces exist between molecules of the same substance -  Water in our experiment

Adhesive forces are the attractive forces between unlike molecules and in this example - water & paper towel.

In our case, the adhensive forece is stronger than the cohesive forece. The adhesive forces between water and towel are strong enough to pull the water molecules and hold them to the paper towel. Water moves along the gaps in the paper towel. This process is called capillary action.

The relative strengths of the cohesive and adhesive forces acting on a liquid determine the shape it will take and about wetting the surface. If the adhesive forces between a liquid and a surface are stronger, they will pull the liquid down, causing it to wet the surface. However, if they cohesive forces among the liquid itself are stronger, they will resist  and cause the liquid to retain a spherical shape and bead the surface.


அதே போல் தான் மர‌ வேர்களும் த‌ண்ணீரை உறுஞ்சி க‌டத்துக்கின்ற‌ன‌. இலைக‌ளும் த‌ண்ணீரைக் க‌டத்துமா? விடையை வேறொரு சோத‌னை மூல‌ம் க‌ண்டுபிடித்தோம். ப‌திவு பெரிதாகி விட்ட‌து. அதை நாளைப் ப‌கிர்கிறேன்.

Sunday, April 14, 2013

குழ‌ந்தைக் க‌தாசிரிய‌ர்கள்

ச‌த்குரு ஜ‌க்கி வாசுதேவின் உரையை ஒரு முறை தொலைக்காட்சியில் சில‌ நிமிடங்க‌ள் பார்த்தேன். அதில் அவ‌ர்  ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌து ப‌ற்றி பேசிக் கொண்டிருந்தார். குழ‌ந்தைக‌ள் எப்பொழுதும் ம‌கிழ்ச்சியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள். ஏதாவ‌து அவ‌ர்க‌ளுக்குப் பிடிக்காத‌து ந‌ட‌க்கும் பொழுது தான் ம‌கிழ்ச்சி நிலையிருந்து வ‌ருத்த‌ நிலைக்குச் செல்வார்க‌ள். ஆனால் பெரிய‌வ‌ர்க‌ள் நாம் அனைவ‌ரும் ஏதாவ‌து ந‌மக்குப் பிடித்தது ந‌டக்கும் பொழுது தான் ந‌ம் இய‌ல்பு நிலையிலிருந்து ம‌கிழ்ச்சி நிலைக்குச் செல்கிறோம் என்றார். அது உண்மை என்று என‌க்குத் தோன்றிய‌து. நாம் வ‌ள‌ரும் பொழுது நாம் வ‌ள‌ர்கிறோம் -  ‍உட‌ல‌ள‌விலும் ம‌ன‌ம‌ள‌விலும். ஆனால் வ‌ள‌ரும் பொழுது நிறைய‌ இழ‌க்கவும் செய்கிறோம். அவ‌ற்றில் ஒன்று க‌ற்ப‌னைத் திற‌ன்.

குழ‌ந்தைக‌ள் க‌தை சொல்லிக் கேட்டிருப்போம். அதில் தொட‌க்கம் இருக்கும், முடிவு இருக்காது. நீண்டு கொண்டே இருக்கும். லாஜிக் இருக்காது, ஆனால் க‌ற்ப‌னைக் கொட்டி இருக்கும். குழ‌ந்தைக‌ள் த‌விர‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளால் அதை யோசிக்க‌க் கூட‌ முடியாது. ஏன்னென்றால் ந‌ம்மால் அவ‌ர்க‌ள் உல‌க‌த்திற்குள் நுழைய‌ முடியாது.

என் ம‌க‌ள் கூறும் க‌தைக‌ளை ஒரு இட‌த்தில் எழுதி வைக்க‌ வேண்டும் என்று நினைப்பேன். எழுதியும் வைப்பேன், ஆனால் ப‌ல இட‌ங்க‌ளில். ஒரு நாள் அவ‌ள் ப‌டிக்க‌ வேண்டும் என்று கேட்டால் என்ன‌ செய்வ‌து என்று நான் யோசிக்கும் பொழுது தோன்றிய‌து ‍ e-book. ஆனால் ஒரே குழ‌ந்தை க‌தாசிரிய‌ராக‌ இருப்ப‌தை விட‌, ஏன் குழ‌ந்தைக‌ளை இணைக்க‌க் கூடாது என்று தோன்றிய‌து.

குழ‌ந்தைக‌ள் கூறும் க‌தைக‌ளை, அவ‌ர்க‌ளே வ‌ரைய‌ செய்து புத்த‌க‌மாக‌லாமே. அவ‌ர்க‌ள் பெய‌ர் க‌தாசிரிய‌ராக‌வும், ஓவிய‌ராக‌வும் பார்த்தால் அவ‌ர்க‌ளுக்கு ம‌கிழ்ச்சியாக‌ இருக்குமே. செய்யலாமா ந‌ண்ப‌ர்க‌ளே!!!

என‌க்குத் தோன்றிய‌ வ‌ழி :

1. விருப்ப‌முடைய‌ குழ‌ந்தைக‌ள் க‌தைக‌ள் எழுதி , அத‌ற்கு ஓவிய‌ம் வ‌ரைந்து என்னிட‌ம் அனுப்பலாம்.

2. நான் தொகுத்து (எந்த‌ ஒரு மாற்ற‌மும் செய்யாம‌ல்) ஒரு புத்த‌கமாக்குகிறேன்.

3. க‌தைக்கு முன்னால் குழ‌ந்தையைப் ப‌ற்றிய‌ சிறு குறிப்பு எழுத‌லாம்.

எந்த‌ ஒரு விதிமுறையும் இல்லை. குழ‌ந்தைக்கு எழுத‌த் தெரியாவிட்டால், பெற்றோர் குழ‌ந்தையின் க‌தையை எழுத‌லாம். க‌தை ஆங்கில‌த்தில் இருத்த‌ல் ந‌ல‌ம். இல‌க்க‌ண‌ம், எழுத்துப் பிழைக‌ள் ப‌ற்றி க‌வ‌லை வேண்டாம்.

க‌தைக‌ளை அனுப்புவ‌த‌ற்கு இறுதி தேதி வைத்துக் கொள்ள‌லாம். இல்லையென்றால் புத்த‌கமாக்குவ‌து க‌டின‌ம். நான் ஜுன் 15 இறுதி தேதியாக‌ நினைத்திருக்கிறேன். வேண்டுமென்றால் மாற்றிக் கொள்ள‌லாம்.

நம் குழ‌ந்தைக‌ளின் கற்பனைத் திற‌னைக் க‌ண்டுக‌ளிக்க‌ இணையலாமா ந‌ண்ப‌ர்க‌ளே!!!

Friday, April 12, 2013

நட்ச‌த்திர‌ ஜ‌ன்ன‌லில்..

 எங்க‌ வீட்டுக் க‌ண்ணாடி க‌த‌வுக்கு நாங்க‌ள் செய்யிற‌ கொடுமை இருக்கே? அது வாய் இருந்தாலும் அழுதுவிடும். நாங்க‌ள் ஏதாவ‌து ஆர்ட் வொர்க் க‌ண்ணாடியில் ஒட்ட வேண்டுமென்றாலும், அந்த‌ க‌ண்ணாடிக்கு வ‌ந்த‌து சோத‌னை. சில‌ நேர‌ங்க‌ள் எங்க‌ளைத் த‌விர‌ வேறு யாரும் பார்க்க‌ முடியாத‌ நிலையிலிருக்கும் ஆர்ட் வொர்க்கால் அந்தக் க‌த‌வை அல‌ங்க‌ரிப்போம்(!). ஆனால் இந்த‌ முறை க‌ண்ணாடி க‌த‌வில் நாங்க‌ள் ஒட்டியிருப்ப‌து உண்மையாக‌வே அதை அல‌ங்க‌ரிக்கிற‌து.

க‌த‌வில் இருப்ப‌து ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் - காகித‌ ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் / பூக்க‌ள். சூரிய‌ ஒளி அத‌ன் மேல்ப‌டும் பொழுது அத‌ன் அழ‌கு ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ரிப்ப‌த்தாக என‌க்குத் தோன்றுகிற‌து. செய‌ல்முறை ஒரு புத்த‌க்த்திலிருந்து எடுத்த‌து. நாங்க‌ள் நான்கு முறையில் செய்தோம். ஓட்டியிருக்கும் பெரிய‌ பூவின் செய்முறை இங்கு உள்ள‌து. ப‌டித்துப் பார்த்தால் செய்முறை மிக‌வும் க‌டின‌ம் போல் தோன்றும். ஆனால் செய்வ‌து மிக‌வும் சுல‌ப‌ம்.



செய்வ‌த‌ற்கு தேவையான‌வை:

1. க‌ல‌ர் டிஷ்யூ பேப்ப‌ர் (டிரேஸிங் பேப்ப‌ர் போன்று மெலிதாக‌ இருக்கும்)

2. ப‌சை

3. ஸ்கேல் (பேப்பரை கிழிப்ப‌த‌ற்கு)

செய்முறை:

1. நாங்க‌ள் வாங்கிய‌ டிஷ்யூ பேப்ப‌ர் 20 இன்ச் * 20 இன்ச் இருந்த‌து. அதை 10 இன்ச் * 10 இன்சாக‌ கிழித்துக் கொண்டோம். அள‌வு முக்கிய‌மில்லை. ச‌துர‌மாக‌ இருக்க‌ வேண்டும். ந‌மக்கு எட்டு அல்ல‌து ப‌தினாறு பேப்ப‌ர்க‌ள் வேண்டும்.

2. ச‌துர‌ப் பேப்ப‌ரை ஒரு முறை ம‌டித்து, ஸ்கேலால் வெட்டிவிட்டோம். கத்திரியால் வெட்டும் பொழுது சில‌ நேர‌ங்க‌ளில் நேராக‌ வ‌ராது. இப்பொழுது ந‌ம்மிட‌ம் ஒரு செவ்வ‌க‌ம் இருக்கும்.


3. செவ்வ‌க‌த்தை மேலும் ஒரு முறை ம‌டிக்க‌ வேண்டும். அழுத்தித் தேய்க்க‌ வேண்டாம். ந‌ம‌க்கு ந‌டுப்புள்ளித் தெரிவ‌த‌ற்காக‌ ம‌டித்து இருக்கிறோம்.



4. ம‌டித்த‌தை விரித்து, ஒரு ஓர‌த்தை ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும்.


  5. அதேப் போல், அடுத்த‌ ஓர‌த்தையும் ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும்.


6. எதிர்ப்புற‌ ஓர‌ங்க‌ளையும் இவ்வாறு ம‌டிக்க‌வும்.

7. ம‌டித்த‌ ஓர‌த்தை மீண்டும் ந‌டுவிற்கு கொண்டு வ‌ர‌வும். ஒரு ப‌க்க‌த்திற்கு ம‌ட்டும் செய்தால் போதும். இத‌னை இத‌ழென‌க் கொள்வோம்.


8. இதுப் போல் 16 இத‌ழ்க‌ள் செய்ய‌ வேண்டும். நாங்க‌ள் ம‌ஞ்ச‌ளில் எட்டும், சிவ‌ப்பில் எட்டும் செய்து கொண்டோம்.

9. ப‌சை கொண்டு தூக்கியிருக்கும் ப‌குதிக‌ளை ஒட்டிவிட‌வும். ஒட்ட‌ வேண்டும் என்று அவ‌சிய‌மில்லை. ஒட்டினால், குழ‌ந்தைக‌ளுக்கு செய்வ‌த‌ற்கு எளிதாக இருக்கும்.

10. ந‌ட்ச‌த்திர‌ம் போல் செய்வ‌த‌ற்கு, ஒரு முறை ம‌ட்டும் ம‌டித்திருக்கும் ஓர‌ங்க‌ளை இணைக்க‌ வேண்டும்.

11. ஒரு இத‌ழின் ந‌டுக்கோட்டில் ம‌ற்றொரு இத‌ழின் ஒரு ப‌க்க‌த்தை வைக்க‌ வேண்டும். பார்க்க‌ப் ப‌டம்.



12. இவ்வாறு எட்டு இத‌ழ்க‌ளைவும் ஒட்ட‌ வேண்டும். எட்டாவ‌து இத‌ழ் ஒட்டும் பொழுது, ஏழாவ‌து இத‌ழ் மேல் ஒரு பக்க‌மும் முத‌ல் இத‌ழின் அடியில் ஒரு பக்க‌ம் இருக்க‌ வேண்டும். இப்ப‌டி ஒட்டினால் எதில் ஆர‌ம்பித்து எதில் முடித்தோம் என்று தெரியாது.

13. இதுவே பார்ப்ப‌த‌ற்கு ந‌ட்ச‌த்திர‌ம் போல் தான் இருக்கும். போதும் என்ப‌வ‌ர்க‌ள் நிறுத்திக் கொள்ள‌லாம்.



14. ப‌தினாறு இத‌ழ்க‌ள் செய்வ‌த‌ற்கு, வேறொரு வ‌ண்ண‌த்தில் இத‌ழை எடுத்து, ஒட்டுயிருக்கும் இர‌ண்டு இத‌ழ்க‌ளுக்கு ந‌டுவிலேயே ஒட்ட‌ வேண்டும்.

15. அடுத்த‌ இத‌ழ் ஒட்டுவ‌த‌ற்கு, ந‌டுவில் ஒரு இத‌ழை விட்டுவிட‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு இத‌ழ் 1க்கும் இத‌ழ் 2க்கும் இடையில் ஒட்டியிருந்தால், இத‌ழ் 2யும் இத‌ழ் 3யும் விட்டு இத‌ழ் 3றுக்கும் இத‌ழ் 4ழுக்கும் இடையில் ஒட்ட‌ வேண்டும். பார்க்க‌ப் ப‌ட‌ம்.


16. நான்கு இத‌ழ்களை இவ்வாறு ஒட்டிய‌வுட‌ன், இடையில் விடுப்ப‌ட்டு இருந்த‌ இத‌ழ்க‌ளின் ந‌டுவில் மீதியிருக்கும் நான்கு இத‌ழ்க‌ளை ஒட்ட‌வும்.

அழ‌கிய‌ பூ ரெடி.

 
இந்த‌ மாதிரி நட்ச‌த்திர‌ங்க‌ளின் விலை $15. http://www.etsy.com/listing/70910111/rainbow-mandala-window-star-sun-catcher.வாங்குவ‌தை விட செய்வ‌தில் ம‌கிழ்ச்சி அதிக‌ம் என்ப‌து என் எண்ண‌ம். ‌ செய்து பார்த்துச் சொல்லுங்க‌ளேன்...

Thursday, April 11, 2013

மெழுகு ஆறு

சிறிதான‌ அல்ல‌து வ‌ண்ண‌ம் தீட்ட‌ முடியாத‌ க்ரையான்ளைத் தூக்கிப் போட‌ ம‌ன‌ம் ஒப்புவ‌தில்லை. முன்பே க்ரையான்க‌ளை உருக்கி உருமாற்றியுள்ளோம். இந்த‌ முறையும் உருக்கினோம், ஆனால் உருமாற்றாம‌ல் பேப்ப‌ர் மேல் வைத்து உருக்கி மெழுகினால் வண்ண‌ம் தீட்டினோம். அழ‌கிய‌ ஓவிய‌ங்க‌ள் கிடைத்த‌ன. ஐடியா இணைத்தில் எடுத்த‌து. நான் ச‌ற்று மாற்றியுள்ளேன்.

க்ரையானுக்குத் த‌மிழ் வார்த்தைத் தெரிய‌வில்லை. தெரிந்த‌வ‌ர்க‌ள் செல்லுங்க‌ளேன்.

தேவையான‌ப் பொருட்க‌ள்

1. க்ரையான்க‌ள்  (Crayons)

2. ஹேர் டிரைய‌ர் (Hair dryer)

3. ஒரு அக‌ல‌மான‌ அட்டைப் பெட்டி (மெழுகு த‌ரையில் வ‌டியாம‌ல் இருக்க‌)

 செய‌ல்முறை:

1. க்ரையான்க‌ள் மேலுள்ள‌ காகித‌த்தை எடுக்க‌ வேண்டும். எடுக்க‌ க‌டின‌மாக‌ இருந்தால், சிறிது நேர‌ம் வெந்நீரில் போட்டால் எளிதாக‌ எடுக்க‌ வ‌ரும்.

2. ஒரு அட்டை பெட்டியில் காகித‌த்தை வைத்து, நான்கு ஓர‌ங்க‌ளில் டேப்பினால் ஒட்ட‌வும்.

3. ஒரு க்ரையானை எடுத்துப் பேப்ப‌ரின் ந‌டுவில் வைத்து டேப்பினால் ஒட்ட‌வும். ஒட்டாம‌ல் விட்டால் ஹேர் டிரைய‌ர் காற்றில் க்ரையான்  ஓடும். உருக்குவ‌து க‌டின‌ம்.

4. ஹேர் டிரைய‌ரை ஹையில் வைத்து க்ரையான் நோக்கி வைத்திருக்க‌வும்.

5. அரை நிமிட‌த்திற்குள் க்ரையான் உருகத் தொட‌ங்கும்.


6. இப்பொழுது க்ரையான் மேலுள்ள‌ டேப்பை எடுத்து விட‌வும்.

7. க்ரையான் காற்றினால் பேப்ப‌ரில் இங்கும் அங்கும் ஓடி வண்ண‌ம் தீட்ட‌த் தொட‌ங்கும்.

8. முழுதாக‌ உருகிய‌வுட‌ன் ம‌ற்றொரு வண்ண‌த்தில் க்ரையான் எடுத்து இதே போல் செய்யவும்.


9. இறுதியில் பேப்ப‌ரை அட்டையிலிருந்து எடுக்க‌வும்.

இர‌ண்டாவ‌து முறை


இரண்டாவ‌து ஓவிய‌த்திற்கு பேப்ப‌ரின் மேல் ப‌குதியில் எல்லா க்ரையான்க‌ளையும் டேப்பினால் ஒட்டி, டிரைய‌ர் கொண்டு உருக்க‌வும். டேப்பை இறுதியில் எடுத்தால் போதும். ஒரே இட‌த்திலிருந்து க்ரையான்க‌ள் உருகும். அந்த‌ ஓவிய‌மும் அழகாக‌ இருக்கிற‌து.


செய்துப் பார்த்துச் சொல்லுங்க‌ளேன்!!!

Tuesday, April 9, 2013

உப்புச் செல்லும் பாதை

ப‌னிப் பொழிவு முடிந்த‌வுட‌ன், ப‌னியை உருக்குவ‌த‌ற்கு உப்புத் தூவுவ‌தைப் பார்த்திருப்போம். உப்பு ப‌னியை/ஐஸை உருக்கும் த‌ன்மையுடைய‌து.

இங்கு நாங்க‌ள் இருக்கும் க‌லிபோர்னியா ப‌குதியில் ப‌னிப் பொழிவு இல்லை. தீஷு ப‌ள்ளியில் வாசித்த‌ ஒரு புத்த‌கத்தில் உப்புத் தூவுவ‌து இருந்தது என்றும், தூவினால் எல்லா ப‌னியும் போய்விடுமா என்று கேட்டாள். ஒரு அறிவிய‌ல் புத்த‌கத்தில் நாங்க‌ள் ப‌டித்திருந்த‌ இந்த‌ சோத‌னையை செய்து பார்க்க‌லாம் என்று முய‌ற்சித்தோம்.

தேவையான‌ப் பொருட்க‌ள் :

1. ஐஸ் க‌ட்டிக‌ள்

2. ஃபுட் க‌ல‌ரிங் / பெயிண்ட்

3. உப்பு

செய்முறை :

1. முத‌ல் நாள் இர‌வில் மூன்று கிண்ண‌ங்க‌ளில் த‌ண்ணீர் ஊற்றி ஃப்ரீச‌ரில் வைத்து விட்டோம்.

2. ம‌றுநாள் ஒரு த‌ட்டில் ஐஸ் க‌ட்டிக‌ளை எடுத்து வைத்துக் கொண்டோம். த‌ட்டின் ஓர‌ம் ச‌ற்று தூக்கினாற் போல் இருத்த‌ல் ந‌ல‌ம். இல்லையென்றால் ஐஸ் உருக ஆர‌ம்பித்த‌வுட‌ன் த‌ண்ணீர் கீழே கொட்டிக் கொண்டே இருக்கும்.

 3. த‌ண்ணீரில் ஃபுட்‌ க‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டோம்.

4. சிறிது உப்பை ஐஸ்ஸின் மேல் தூவினோம்.

4. உப்பு ஐஸ்ஸின் மேல் ப‌குதியை உருக்கி, உள்ளே சென்று, அப்ப‌குதியையும் உருக்கி, ஐஸ்ஸினுள் பாதைக‌ளை உருவாக்கிக் கொண்டே இருந்த‌து.

 5. ஐஸ்ஸின் மேல் க‌ல‌ர் த‌ண்ணீர் தெளித்தோம் / கொட்டினோம்.




6. சிறிது வாட்ட‌ர் க‌ல‌ரும் தெளித்தோம்.

 7. க‌ல‌ர் தண்ணீர், உப்பு உருவாக்கிய‌ பாதையில் சென்ற‌தால், பாதை தெளிவாக‌த் தெரிய‌த் தொட‌ங்கிய‌து.


அடுத்த‌ அரை ம‌ணி நேர‌த்திற்கு ஒ..இங்க‌ பாருங்க, இங்க‌ போயிருக்கு.. என்ற‌ க‌த்த‌ல் கேட்டுக் கொண்டேயிருந்த‌து. குழ‌ந்தைக‌ளுக்கு ஏதுவான‌ செய்முறை மற்றும் க‌ல‌ர் த‌ண்ணீர், ஐஸ் போன்ற‌ன‌ அவ‌ர்க‌ள் ஆர்வ‌த்தைத் த‌க்க‌ வைக்கின்ற‌ன.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost