Showing posts with label பிறந்த நாள். Show all posts
Showing posts with label பிறந்த நாள். Show all posts

Thursday, May 9, 2013

பிற‌ந்த‌ நாள்

நேற்று (08/05/2013) தீஷுவிற்கு பிற‌ந்த‌ நாள். இந்த‌ முறை அவ‌ளுக்குத் தெரியாம‌ல், அவ‌ள் தோழிக‌ளை அழைத்து கொண்டாட‌ வேண்டும் என்று முடிவு செய்தோம்.

 ந‌ண்ப‌ர்களின் பெற்றோர்க‌ளுக்கு ஒரு வார‌ம் முன்பு மின் அழைப்பித‌ழ் அனுப்பி, குழ‌ந்தைக‌ளிட‌ம் சொல்ல‌ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். இர‌ண்டு குழ‌ந்தைக‌ள் த‌விர‌ அனைவ‌ரும் தீஷுவின் ப‌ள்ளியில் தான் ப‌டிக்கின்ற‌ன‌ர். ப‌ள்ளியிலிருந்து நாங்க‌ளே குழ‌ந்தைக‌ளை அழைத்து வ‌ந்து விட்டோம். அனைவ‌ரும் வ‌ருகின்ற‌ன‌ர் என்ற‌வுட‌னே, தீஷுவிற்கு தெரிந்து விட்ட‌து. வேறு யார் வ‌ருகிறார்க‌ள், இப்ப‌வே வீட்டிற்கு போக‌ வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வ‌ந்தாள்.

அவ‌ள் ப‌ள்ளிக்குச் சென்ற‌வுட‌ன் வீட்டை அல‌ங்க‌ரித்து வைத்திருந்தோம். வ‌ந்த‌வ‌ளுக்கு ஆச்ச‌ரியம். You are the best Mom என்று க‌ட்டிக் கொண்டாள். சாப்பிட்டு முடித்த‌வுட‌ன் அனைவ‌ரும் சேர்ந்து ஓவிய‌ங்க‌ள் செய்தோம். வித்தியாச‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று பேப்ப‌ரில் செய்யாம‌ல், கான்வாஸில் செய்தோம். ஐந்து முத‌ல் ஒன்ப‌து வய‌து வ‌ரை குழ‌ந்தைக‌ள் இருந்த‌தால், அனைவ‌ரும் செய்ய‌ எளிதான ஓவிய‌மாக‌ இருக்க‌ வேண்டும் என்று யோசித்திருந்தேன்.

முன்பே நாங்க‌ள் செய்திருந்த‌ ஓவிய‌ம் தான்.

ஓவிய‌ம் செய்யும் முறை

தேவையான‌ப் பொருட்க‌ள்:

1. க‌ன‌மான‌ப் பேப்ப‌ர் அல்ல‌து கான்வாஸ்

2. டேப் ‍ ஏதாவ‌து ஒரு வ‌கை

3. பெயிண்ட்

செய்முறை :

டேப்பை பேப்ப‌ரில் ந‌ம‌க்குப் பிடித்த‌ முறையில் ஒட்டி டிஸைன்க‌ள் உருவாக்க‌ வேண்டும். பின் முழு பேப்ப‌ரில் பெயிண்ட் செய்ய‌ வேண்டும். பெயிண்ட‌ ந‌ன்றாக‌ காய்ந்த‌ பின் டேப்பை எடுத்து விட‌ வேண்டும். பெயிண்ட் டேப்பினுள் செல்லாம‌ல், நாம் ஒட்டின டிஸைன் ம‌ட்டும் பேப்ப‌ரின் ஒரிஜின‌ல் க‌ல‌ரில் இருக்கும்.




 குழ‌ந்தைக‌ள் விரும்பி செய்த‌ன‌ர். கிட்ட‌த்தட்ட‌ அனைவ‌ரும் த‌ன் பெய‌ரின் முத‌ல் எழுத்தை டிஸைனாக‌ வ‌ரைந்த‌ன‌ர். ஒரு குழ‌ந்தை, த‌ன் முத‌ல் எழுத்தையும், த‌ன் த‌ம்பியின் முத‌ல் எழுத்தையும் எழுதி நெகிழ‌ வைத்தது. ஒரு குழ‌ந்தை, ம‌த‌ர்ஸ் டேக்கு, த‌ன் தாய்க்கு ஓவிய‌ம் செய்த‌து. அனைவ‌ரும் சிரித்து, பேசி ம‌கிழ்ந்து செய்த‌ன‌ர். தீஷுவிற்கு வீட்டில் குழுவில் செய்வ‌து இது தான் முத‌ல் முறை.

அனைவ‌ரும் தாங்க‌ள் செய்த‌ ஓவிய‌த்தைச் செல்லும் பொழுது எடுத்துக் கொண்ட‌ன‌ர். மேலும் பெயிண்ட், பிர‌ஸ் ம‌ற்றும் ப‌ரிச‌ளித்தோம்.



This is the best Birthday என்றாள் தீஷு அனைவ‌ரும் சென்ற‌ப்பின். பிறந்த‌ நாள் வாழ்த்துக‌ள் க‌ண்ண‌ம்மா!!!

Saturday, May 7, 2011

பிறந்த நாள் வாழ்த்துகள்




அன்பின் தீஷு,

ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் நான், உன்னிடம், "ஓ.. உனக்கு அதுக்குள்ள இவ்வளவு வயசாயிடுச்சா.. இப்போ தான் பிறந்த மாதிரி இருக்கு" என்று கேட்பதே வாடிக்கையாகி விட்டது. இந்த முறை அவ்வாறு கேட்க போவதில்லை. நீ வளர்ந்து கொண்டு இருக்கிறாய். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்.

இப்பொழுது ஐந்து வயது சிறுமி நீ. முழுவதுமாக மழலை மாறி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. அடுத்தவர்களை வாங்க, போங்க என்று மரியாதை கொடுத்து பேசவும் கற்றுக் கொண்டு விட்டாய். பேச்சில் தெளிவு. அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கூடியிருக்கிறது. கூச்சம் குறைந்திருக்கிறது. புதியவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறாய். அனைத்து குழந்தைகளிடமும் சிநேகமாக விளையாடுகிறாய். ஆறு மாத குழந்தையுடன் கூட உன்னால் நேரம் செலவிட முடிகிறது. எந்த நேரமும் ஏதாவது கேட்டுக் கொண்டே இருக்கிறாய். அன்று ஒரு நாள் உன்னிடம் என் மனக்குறையை சொன்னவுடன், என் கை பற்றி, எல்லா சரியா போகும் என்றாய். என் தோழியை உன்னிடம் பார்த்தேன். என் அழுகையை மறைக்க வேண்டி என்னால் என் பதிலை தலை ஆட்டலில் மட்டுமே சொல்ல முடிந்தது.

ஆனால் உன்னிடம் இருக்கும் மிகப்பெரிய குறை - உனக்கு எல்லாவற்றுக்கும் ஒருவர் வேண்டும். சுதந்திரமாக செய்வதற்கு உனக்கு பயம். அப்பா, உன்னிடம் நீயா பண்ணு என்றால் அடுத்த நிமிடம் என்னிடம் உதவிக்கு வருவாய்.. நான் முடியாது என்றால் அப்பாவிடம் போவாய். பார்க்கில் அனைத்து குழந்தைகளும் தனியாக விளையாடும் சின்ன சறுக்கல் போன்றவற்றுக்குக் கூட நாங்கள் அதன் அருகே உனக்காக காத்துக் கொண்டு நின்று கொண்டிருக்க வேண்டும். நீ ஹாலில் ஏதோ செய்து கொண்டிருக்கிறாய் என்று ரூமிற்கு சென்றால், அடுத்த விநாடி என் அருகில் நிற்பாய். இன்னும் சில வருடங்களில் உன்னை என்னருக்கில் அழைத்தால் கூட நீ வருவாயா என்று தெரியாது.. இப்பொழுது இருந்துவிட்டு போகட்டும் என்று உன் அப்பாவிடம் சொல்லுவது உண்டு. ஆனால் அனைத்து குழந்தைகள் புழங்கும் இடங்களிலும் வெறும் குழந்தைகள் கூட்டத்தில் உன்னுடன் நாங்கள் மட்டும் இருப்பது எனக்கு சில நேரங்களில் யோசிக்க வைக்கிறது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நீ மாறி கொண்டிருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.

உன்னிடம் செலவிடும் ஒவ்வொரு நொடியையும் என் மனதில் பத்திரப்படுத்துகிறேன். இப்பொழுதும் அமைதியாக நீ தூங்கிக் கொண்டிருந்தால் என்னால் உன்னை முத்தமிடாமல் அந்த இடத்தை கடக்க முடியாது. என் வாழ்வாகிய உன்னை, நீ என்றும் இதே குறும்புத்தனத்துடன், சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். Happy
Birthday to you Dheekshu!!!!!

Wednesday, June 9, 2010

போன மாச பிறந்த நாளைக்கு...

இந்த மாசம் பதிவு போடுகிற ஆள் நானாகத்தான் இருப்பேன். தீஷு தன் நான்காவது பிறந்த நாளை கடந்த மே எட்டாம் தேதி நிறைவு செய்தாள். பிறந்த நாள் அன்று பதியவேண்டும் என்று அவளுக்கு எழுதிய கடிதம் நிறைவு பெறாமல் இன்னும் draftடில் உள்ளது. கண்டிப்பா ஐந்தாவது பிறந்தநாள் முன்னாடி முடிச்சுடுவேனு நினைக்கிறேன்.

தீஷுவின் பிறந்த நாள் பரிசை ஒளித்து வைத்து, Treasure hunt போல் க்ளூ கொடுத்து கண்டுபிடிக்க வைத்தோம். தீஷுவிற்கு Fridge போன்ற வார்த்தைகள் வாசிக்கத்தெரியாது என்பதால், எங்கள் வீட்டிலுள்ள பொருட்களை படம் எடுத்து வைத்துக் கொண்டோம். க்ளூ படங்கள். ஒவ்வொரு படத்தையும் பார்த்து அதில் போய் அடுத்த க்ளூவைத்தேட வேண்டும்.

இந்த முறை பிறந்த நாள் விழாவிற்கான தீம் - Save Earth. எல்லா பிறந்த நாள் விழாவிலும் இருப்பது கேக், கோக், சிப்ஸ், சமோசா. இதில் தீஷு கேக் வேண்டும் என்று ஆசைப்பட்டதால் கேக் வாங்கினோம். உடம்பை கெடுக்கும் சிப்ஸ், சமோசா பதில் என்ன வாங்கலாம் என்று யோசித்த பொழுது தோன்றியது சுண்டல். கொண்டை கடலை சுண்டல் - முழுவதும் protein. நம் நாட்டு வளத்தை எடுத்து நம் உடம்புக்கே கெடுத்தல் செய்யும் கோக்கிற்கு பதில் யோசித்த பொழுது என் சாய்ஸ் கேப்பை கூழ். ஆனால் இதில் அப்பாவிற்கு விருப்பம் இருக்கவில்லை. அடுத்து இளநீர் என்றவுடன், விழாவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் சென்று வாங்க வேண்டும் போன்றவை இடித்தன. அதனால் ஜுஸ் வாங்கினோம்.

மரத்தை வெட்டுவதைக்குறைக்க பேப்பர் கப், பேப்பர் பிளேட் வாங்ககூடாது என்று முடிவு செய்து கொண்டோம். அதற்கு பதில் மண் டம்ளர், மண் தட்டு. விழாவிற்கு வருகின்ற அனைவரும் பயன்படுத்தியப்பின் அவர்கள் டம்ளரையும், தட்டையும் அவர்கள் வீட்டிற்கே எடுத்துச் சென்றால், திரும்ப திரும்ப உபயோகித்துக்கொள்ளலாம் என்று அதன் படி செய்தோம்.

வரும் குழந்தைக்களுக்கு மரக்கன்று கொடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் வாங்க முடியவில்லை. அதனால் மண் உண்டியல் வாங்கினோம். இங்கும் - நோ பிளாஸ்டிக்.

மண் டம்ளரில் ஜுஸ்ஸும், மண் தட்டில் சுண்டலும் கேக்கும் என விழா நன்றாகவே இருந்தது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost