Showing posts with label நான்கு வயது. Show all posts
Showing posts with label நான்கு வயது. Show all posts

Saturday, May 7, 2011

பிறந்த நாள் வாழ்த்துகள்




அன்பின் தீஷு,

ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் நான், உன்னிடம், "ஓ.. உனக்கு அதுக்குள்ள இவ்வளவு வயசாயிடுச்சா.. இப்போ தான் பிறந்த மாதிரி இருக்கு" என்று கேட்பதே வாடிக்கையாகி விட்டது. இந்த முறை அவ்வாறு கேட்க போவதில்லை. நீ வளர்ந்து கொண்டு இருக்கிறாய். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்.

இப்பொழுது ஐந்து வயது சிறுமி நீ. முழுவதுமாக மழலை மாறி ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. அடுத்தவர்களை வாங்க, போங்க என்று மரியாதை கொடுத்து பேசவும் கற்றுக் கொண்டு விட்டாய். பேச்சில் தெளிவு. அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கூடியிருக்கிறது. கூச்சம் குறைந்திருக்கிறது. புதியவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்கிறாய். அனைத்து குழந்தைகளிடமும் சிநேகமாக விளையாடுகிறாய். ஆறு மாத குழந்தையுடன் கூட உன்னால் நேரம் செலவிட முடிகிறது. எந்த நேரமும் ஏதாவது கேட்டுக் கொண்டே இருக்கிறாய். அன்று ஒரு நாள் உன்னிடம் என் மனக்குறையை சொன்னவுடன், என் கை பற்றி, எல்லா சரியா போகும் என்றாய். என் தோழியை உன்னிடம் பார்த்தேன். என் அழுகையை மறைக்க வேண்டி என்னால் என் பதிலை தலை ஆட்டலில் மட்டுமே சொல்ல முடிந்தது.

ஆனால் உன்னிடம் இருக்கும் மிகப்பெரிய குறை - உனக்கு எல்லாவற்றுக்கும் ஒருவர் வேண்டும். சுதந்திரமாக செய்வதற்கு உனக்கு பயம். அப்பா, உன்னிடம் நீயா பண்ணு என்றால் அடுத்த நிமிடம் என்னிடம் உதவிக்கு வருவாய்.. நான் முடியாது என்றால் அப்பாவிடம் போவாய். பார்க்கில் அனைத்து குழந்தைகளும் தனியாக விளையாடும் சின்ன சறுக்கல் போன்றவற்றுக்குக் கூட நாங்கள் அதன் அருகே உனக்காக காத்துக் கொண்டு நின்று கொண்டிருக்க வேண்டும். நீ ஹாலில் ஏதோ செய்து கொண்டிருக்கிறாய் என்று ரூமிற்கு சென்றால், அடுத்த விநாடி என் அருகில் நிற்பாய். இன்னும் சில வருடங்களில் உன்னை என்னருக்கில் அழைத்தால் கூட நீ வருவாயா என்று தெரியாது.. இப்பொழுது இருந்துவிட்டு போகட்டும் என்று உன் அப்பாவிடம் சொல்லுவது உண்டு. ஆனால் அனைத்து குழந்தைகள் புழங்கும் இடங்களிலும் வெறும் குழந்தைகள் கூட்டத்தில் உன்னுடன் நாங்கள் மட்டும் இருப்பது எனக்கு சில நேரங்களில் யோசிக்க வைக்கிறது. ஆனால் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நீ மாறி கொண்டிருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.

உன்னிடம் செலவிடும் ஒவ்வொரு நொடியையும் என் மனதில் பத்திரப்படுத்துகிறேன். இப்பொழுதும் அமைதியாக நீ தூங்கிக் கொண்டிருந்தால் என்னால் உன்னை முத்தமிடாமல் அந்த இடத்தை கடக்க முடியாது. என் வாழ்வாகிய உன்னை, நீ என்றும் இதே குறும்புத்தனத்துடன், சந்தோஷத்துடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். Happy
Birthday to you Dheekshu!!!!!

Wednesday, May 4, 2011

Strokes of colours

இந்த முறை நாங்கள் வந்த விமானம் லேட் ஆனதால், அடுத்து பிடிக்க வேண்டியிருந்த விமானத்தைப் பிடிக்க முடியாமல் ஆனது. அடுத்த விமானம் அடுத்த நாள் என்பதால் ஹோட்டலில் தங்கி இருந்தோம். எங்கள் விமானத்தில் வந்திருந்த ஒரு பெண் தனியாக வந்திருந்ததால், எங்களுடன் சேர்ந்து கொண்டார். எங்கள் பக்கத்து அறையில் தங்கியிருந்தார். மறுநாள் அவருக்கு எங்களுக்கு முந்திய விமானத்தில் இடம் கிடைத்ததால், எங்கள் முன்னே கிளம்பிவிட்டார். அவர் சீக்கிரமே கிளம்பிவிடுவார் என்பதை புரிந்து கொண்ட தீஷு,அவளாகவே ஒரு தாளில் எதையோ ஹோட்டல் போனா கொண்டு வரைந்து கொடுத்தாள். அவருக்கு மிகுந்த சந்தோஷம். யாராவது பிரிகிறார்கள் என்றால் தீஷுவை பொருத்த வரை அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும். ஒரிரு மணி நேரம் பழகியதற்கு கிஃப்ட் கொடுக்கிறாள் என்று சந்தோஷமாக சொன்னார்கள்.




நாங்கள் இங்கு வந்த பொழுது எங்களுக்கு உதவி செய்தவர்கள் கடந்த வாரம் இந்தியா கிளம்பினார்கள். தீஷுவாகவே அவரிடம், நீங்கள் போகும் பொழுது உங்களுக்கு ஒரு பெயிண்டிங் கிஃப்ட் கொடுக்க போகிறேன் என்று கூறிவிட்டு, தினமும் என்னிடம் என்ன செய்யலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தாள். மார்பிள் பெயிண்டிங் செய்யலாம் என்று தோன்றியது. ஆனால் எங்களிடம் கோழிகுண்டு இல்லை. ஆகையால் கற்கள் எடுத்து வந்தோம். ஆனால் கற்கள் உருண்டையாக இல்லாததால், நன்றாக உருளவில்லை. அதனால் ஒரு ஜாரில் காகிதத்தை வைத்து, கற்களை பெயிண்ட்டில் உருட்டி, ஜாரில் போட்டு, ஜாரை மூடி, குலுக்கினோம். ஜார் மூடியிருந்ததால் அவளால் நன்றாக குலுக்க முடிந்தது. கற்களும் உருண்டு நல்லதொரு பெயிண்டிங் செய்திருந்தன.





Crayons மெழுகு என்பதால் ஏதாவது சூடான பொருள் மேல் காகிதத்தை வைந்து வரைந்தால், மெழுகு உருகி, நல்ல கலர் கிடைக்கும் என்று படித்திருக்கிறேன். ஆனால் தீஷு சூடான பொருளை லேசாக தொட்டு விட்டால் அடுத்த முறை crayons கூட தொட மாட்டாள் என்று தெரிந்து இருந்ததால், முயற்சி செய்யாமல் இருந்தேன். வரைந்து சூடான பொருளை தொடும் சாத்தியத்தை தடுக்கும் பொருட்டு Crayons சீவி கொண்டோம். கற்கள் எடுத்து வந்து, அவற்றை தோசை கல்லில் சூடாக்கிக் கொண்டோம். தோசை கல்லிருந்து எடுத்தவுடன், சூடான கற்களின் மேல் crayons துருவலை தூவினோம். crayons உருகி ஓடி, பல கலர்கள் கலந்து, கற்களை அழகாக கலர் செய்தன. மிகவும் அழகாக இருக்கிறது. அந்த கற்கள் ஒரு கண்ணாடி கிண்ணத்தில், ஹாலை அலங்கரித்து கொண்டிருக்கிறன.

Tuesday, May 3, 2011

மஞ்ச பொண்ணு

நேற்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று தீஷு, ஏதாவது கதை சொல்லுங்கள் என்றாள். நான் உடனே, விடுகதை கேளுங்கள் என்று என் கணவரிடம் சொன்னேன். தீஷுக்கு புரியும் அளவுக்கு நாங்களாக தயாரித்து மாறி மாறி கேட்டோம். அவற்றில் சில,

1. This person is yellow in colour. If you remove his skin, he becomes white. - Banana

2. If you put this boy inside the sand, after few days his legs and hands come out the sand. Who is he? - Seed

3. I am cirlce in shape. I reduce my size everyday and vanish one day. And start to grow from the next day into full circle.

இவ்வாறு பத்து வரை கேட்டுயிருப்போம். அவளுக்கு அனைத்திற்கும் க்ளூ கொடுத்து கண்டுபிடிக்க வைத்தோம். சாப்பிட்டு முடித்தவுடன் தீஷு சொன்னாள். இப்ப என் turn. அவள் கேட்ட விடுகதை.

இந்த பெண் நல்ல மஞ்சளாக இருப்பாள். பல் வெள்ளையாக இருக்கும். அவள் யார்? நாங்களும் மாம்பழம் என்று பல மஞ்சள் பொருட்களை சொல்லிப் பார்த்தோம். அவள் விடை : பழைய பள்ளியில் படித்த ஜூஹி. எங்கள் விடுகதையில் பையன், மனிதன் என்று உபயோகித்ததால், அவள் நிஜமாகவே ஒரு பெண்ணை கண்டுபிடிக்க சொல்லி இருக்கிறாள்.

நாங்கள் எங்களுக்குத் தெரிந்த பொருள்களாகத் தான் விடுகதையில் இருக்க வேண்டும் என்றவுடன், அவள் கேட்டது, "இது ஷார்பாக இருக்கும்.. ஆனால் காய் வெட்ட முடியாது.. கையில் குத்தும்.. என் டால் ஹவுஸில் இருக்கு..". அப்பாவின் பதில், "மிக்ஸி பிளேடு".. எனக்கு அவள் உலகத்திலிருந்து தான் கேட்டியிருக்க வேண்டும் என்று புரிந்திருந்தது. என் சரியான பதில், "விளையாட்டுக் குக்கர்". அது ஒரு நாள் அவள் கையில் குத்திவிட்டது.

அவள் அந்த பக்கம் போனப்பின் அப்பா மெதுவான குரலில் என்னிடம் கேட்டார், " எல்லா அஞ்சு வயது பசங்களும் இப்படித்தானா.. இல்ல இவ மட்டும் தான் ஸ்லோ பிக்கெப்பா"..

Sunday, May 1, 2011

பொம்மைக்கு ஷால்

என் அம்மாவின் அம்மாவிடமிருந்து நான் சிறுமியாக இருந்த பொழுது நிறைய விஷயங்கள் கற்றுயிருக்கிறேன். ஒரிகமி ( கப்பல், சட்டை, பெட்டி, கப் போன்றன), பல்லாங்குழி, காலால் பூ கட்டுவது, நூல் வேலைகள், வரைந்தல், ஸ்வெட்டர், கூடை பின்னுதல் போன்றன. அந்த அடிப்படைகள் பின் நாட்களில் எனக்குப் பல விதத்தில் உதவின. ஒவ்வொரு விடுமுறையின் போதும் நானாகவே எதையாவது தேடி தேடி பழகிக் கொள்வேன். என் அம்மாவுக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லையென்பதால், என் பாட்டியிடம் நான் பழகியதை என் மகளுக்கு நான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பின்னாளில் அவளுக்கு விருப்பமிருந்தால் அவள் தொடர்ந்து கொள்ளலாம. பல்லாங்குழி வாங்கி வந்திருக்கிறோம். அதில் அனைத்து விளையாட்டுகளும் நினைவில் இல்லை. என் சித்தியிடம் எனக்கு நினைவூட்ட சொல்லி இருக்கிறேன். அவர் சொன்னவுடன் தீஷுவிற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.





இப்பொழுது என்ன சொல்லிக் கொடுக்கலாம் என்று யோசித்தவுடன், என் நினைவில் வந்தது கையால் woolen பின்னுதல். ஊசியின் மூலம் பின்னுதல் தீஷுவின் வயதிற்கு அதிகமாக இருக்கும் என்று தோன்றியது. கையினால் பின்னுவது மிகவும் எளிமையானது. தீஷுவிற்கு நான்கு ஐந்து தடவை சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. மிகவும் விருப்பமாக செய்யவில்லை. ஆனால் அவள் பொம்மைக்கு ஒரு ஷால் செய்திருக்கிறாள்.

செய்முறை இந்த லிங்கில் உள்ளது.

Sunday, April 24, 2011

Matter Matters

ஒரு நாள் தீஷுவிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது liquid என்றாள். அப்படி என்றால் என்றவுடன் நீங்கள் தண்ணீர் போன்றது என்று ஒரு நாள் எனக்கு சொல்லிக் கொடுத்தீர்கள் என்றாள். வேற என்ன தெரியும் என்றவுடன் அவ்வளவு தான் என்றாள். மீண்டும் ஒரு முறை Solid, liquid and Gas பற்றி சொல்லிக் கொடுத்தேன்.

இப்பொழுது புரிந்து கொள்ளும் வயது என்பதால் என்னை சற்று தயார் படுத்திக் கொண்டேன். லைப்பேரேரிலிருந்து அது சம்மந்தமான புத்தகங்கள் எடுத்து வந்தோம்.
புத்தகங்கள் வாசித்து முடித்தவுடன், தண்ணீர் என்ன ஸ்ஷேப் என்றவுடன் எதில் ஊற்றுகிறோமோ அந்த ஸ்ஷேப் என்றாள். ஆஹா.. நம்ம சொல்லிக் கொடுத்து இவ்வளவு புரிஞ்சிடுச்சா என்று ஆச்சரியம். எப்படி தெரியும் என்றவுடன், ஏற்கெனவே இதெல்லாம் ஸ்கூல சொல்லிக் கொடுத்திருந்தாங்க என்றாள். அதான பார்த்தேன்..

தண்ணீரை ஒரு டம்பளரில் ஊற்றி ஐஸ் செய்தோம். மறுபடியும் அதை சூடாக்கி தண்ணீர் மற்றும் நீராவி செய்தோம். மீண்டும் ஐஸ் செய்தோம். இரண்டு மூன்று நாட்களுக்கு பொழுது போனது.



இந்த முறை ஓபிலேக் (Oobleck) செய்தோம். எடுப்பதற்கு தண்ணீர் போல் இருந்தாலும், இறுக்கி பிடித்தால், கட்டியாக (Solid) மாறும். தண்ணீர், கான் பிலார் மற்றும் புஃட் கலரிங். எவ்வாறு செய்வது என்பது இங்கு உள்ளது. தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவளுக்கு அன்று கையில் சிறு புண் இருந்தது. இது எரிச்சல் உண்டாக்கிறது என்று எடுத்து வைத்து விட்டாள். மறுநாளும் அதில் தண்ணீர் கலந்து விளையாண்டோம். கொட்டும் பொழுது சிங்க்கில் கொட்டாமல் குப்பைத் தொட்டியில் போடவும். பைப்பை அடைத்துக் கொள்ளும்.

வாசித்த புத்தகங்கள்

What is the world made of?

Solids, liquids and gases

Pop! A book about bubbles

Thursday, April 14, 2011

நாடோடிக‌ள்

அடுத்த‌ மாத‌ம் தீஷுவிற்கு ஐந்தாவ‌து பிற‌ந்த‌ நாள். இந்த‌ ஐந்து வ‌ருட‌த்திற்குள் நான்காவ‌து வீடு / இடம் மாறி விட்டோம். வீடு கட்டி முடித்த‌வுட‌ன் புது வீட்டிற்கு போவோம் என்று ஒரு மாற்ற‌த்தை எதிர்பார்த்து இருந்தாலும், சொந்த‌ வீடு என்ப‌தால் அதிலிருந்து மாற‌ வேண்டியிருக்காது என்ப‌தால் நிர‌ந்த‌ர மாற்ற‌மாக‌ இருக்கும் என்று நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் மீண்டும் ஒரு த‌ற்கால‌ மாற்ற‌ம். மீண்டும் அமெரிக்காவிற்கு செல்ல‌ வேண்டிய‌ சூழ்நிலை.

ஒவ்வொரு மாற்ற‌மும் தீஷுவை க‌ண்டிப்பாக‌ பாதித்து இருக்கும். ஆனால் அவ‌ள் எப்பொழுதும் நேராக‌ காண்பித்த‌த்தில்லை. போன முறை நியூ ஜெர்ஸியிலிருந்து இந்தியா திரும்பிய‌ பொழுது, தீஷுவிற்கு இர‌ண்டே முக்கால் வ‌ய‌து. இட‌மாற்ற‌ம் பெரிதாக‌ புரிய‌வில்லை. ஆனால் இப்பொழுது ந‌‌ன்றாக‌ விவ‌ர‌ம் புரியும் வ‌ய‌து. பெங்க‌ளூரில் ந‌ண்ப‌ர்க‌ள் / உற‌வின‌ர்க‌ளுட‌ன் விளையாடி, வாழ்ந்து ப‌ழ‌கிவிட்டாள். என்ன‌ செய்ய‌ போகிறாள் என்று தெரிய‌வில்லை. இங்கு வ‌ந்து 10 நாட்க‌ள் ஆகிவிட்டன‌. பெரிதாக‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ற்றி கேட்க‌வில்லை. ஆனால் அவ‌ள் ப‌ள்ளியைப் ப‌ற்றி பேசிக்கொண்டே இருக்கிறாள். மாற்ற‌த்தை ஏற்று கொண்டாள் என்றே நினைக்கிறோம். இப்ப‌டியே நாங்க‌ள் மாறிக் கொண்டே இருப்ப‌தால் நிலையான‌ ஒரு ந‌ண்ப‌ர் கூட்ட‌ம் அவ‌ளுக்குக் கிடைப்ப‌தில்லை. நினைத்தால் வ‌ருத்த‌மாக‌த்தான் இருக்கிற‌து.

மீண்டும் இர‌ண்டு வ‌ருட‌த்தில் இந்தியா திரும்பும் யோச‌னை இருப்ப‌தால், கிள‌ம்பும் முன் தீஷுவின் ப‌ழைய‌ இந்திய‌ ப‌ள்ளி ஆசிரிய‌ரை ச‌ந்தித்து பேசினோம். ஹிந்தி க‌ண்டிப்பாக‌ வீட்டில் சொல்லித்த‌ர‌ வேண்டும். ஐந்தாம் வ‌குப்பு முத‌ல் மூன்றாம் மொழி க‌ற்க‌ வேண்டும் என்ப‌தால், அதிக‌ப‌ட்ச‌மாக‌ அவ‌ள் மூன்றாம் வகுப்பு முடித்த‌வுட‌ன் வ‌ந்தால் எளிதாக‌ இருக்கும் என்றார்க‌ள். U.K.G ம‌ற்றும் ஒன்றாம் வ‌குப்பு பாட‌ புத்த‌க‌ங்க‌ள் கொடுத்து இருக்கிறார்க‌ள். தீஷு ப‌ள்ளியில் வெறும் மாண்டிசோரி ம‌ட்டும் தான். ஒன்றாம் வ‌குப்பு என்று த‌னியாக‌ கிடையாது. ஆனால் எங்க‌ளுக்காக‌ ம‌ற்ற‌ ப‌ள்ளியிலிருந்து புத்த‌க‌ங்க‌ள் வாங்கி கொடுத்திருக்கிற‌ர்ர்க‌ள். எவ்வாறு சொல்லித்த‌ர‌ வேண்டும் என்று என‌க்கு அரை ம‌ணி நேரம் விள‌க்கினார்க‌ள். என்ன‌ செய்ய‌ போகிறேன் என்றே தெரிய‌வில்லை.

தீஷுவிற்கு இங்கு ப‌ள்ளி ஆகெஸ்ட்டில் தான். பொழுது போகாம‌ல் வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். திரும்பி இந்தியா போகும் பொழுது இன்னும் வ‌ய‌து அதிக‌மாகிவிடும் என்பதால் அந்த‌ மாற்ற‌த்தை எப்ப‌டி எடுத்துக் கொள்வாளோ என்று இப்பொழுதே ப‌ய‌மாக‌ இருக்கிற‌து.

Tuesday, March 29, 2011

ந‌ம்ப‌ர் லைன்

C.B.S.C ஸில‌ப‌ஸ் U.K.G க‌ணித‌ப்புத்த‌க‌த்தில் ந‌ம்ப‌ர் லைன் (Number line) வைத்து கூட்ட‌ல், க‌ழித்த‌ல் செய்வ‌து இருந்த‌து. ந‌ம்ப‌ர் லைன் என்பது ஸ்கேல் போன்று இருக்கும். ஒன்று, இர‌ண்டு என்று வ‌ரிசையாக‌ எழுதி இருக்கும். 3 + 2 என்று கூட்ட‌ல் செய்வ‌த‌ற்கு, முத‌ல் எண் மூன்றிற்கு சென்று, பின் இர‌ண்டாம் எண் இர‌ண்டிற்கு இர‌ண்டு எண்க‌ள் முன்னால் சென்று 5 என்று விடை காண‌வேண்டும். தீஷுவிற்கு பேப்ப‌ரில் ந‌ம்ப‌ர் லைன் வைத்து செய்வ‌தை விட‌ குதிக்கும் ஆக்டிவிட்டியாக‌ மாற்றி விட்டேன்.

தீஷுவை 0 முத‌ல் 10 வ‌ரை வ‌ரிசையாக‌ டைல்ஸ்ஸில்(த‌ரையில்) எழுத‌ச் சொன்னேன். 3 + 2 என்ப‌த‌ற்கு முத‌லில் 0விலிருந்து மூன்று முறை குதித்து மூன்றாம் எண் டைல்ஸ் சென்றாள். அடுத்து இர‌ண்டு என்று சொன்ன‌வுட‌ன் இர‌ண்டு முறை குதித்து 5 என்று விடை எழுதினாள். இவ்வாறு இர‌ண்டு மூன்று முறை கூட்ட‌ல் செய்த‌வுட‌ன், க‌ழித்த‌ல் செய்தோம். 9 - 3 என்ற‌வுட‌ன் ஒன்ப‌தாம் எண்ணிற்கு சென்றாள். மைன‌ஸ் மூன்று என்ற‌வுட‌ன், ஒரு நிமிட‌ம் அவ‌ளாக‌வே யோசித்து பின்னால் வ‌ர‌ வேண்டும் என்று கூறி விட்டு விடை க‌ண்டுபிடித்தாள். கூட்ட‌ல் என்றால் என்ன‌, க‌ழித்த‌ல் என்றால் என்ன‌ என்று அவ‌ளுக்குப் புரிந்து இருப்ப‌தைக் க‌ண்டு என‌க்கு ம‌கிழ்ச்சி.

ந‌ம்ப‌ர் லைன் இவ்வாறு த‌ரையில் எழுதி செய்த‌தில் வேக‌மாக‌ சோர்வடைந்து விட்டாள். ஆனால் மிக‌வும் விருப்ப‌மாக‌ விளையாண்டாள்.

Wednesday, March 23, 2011

தூக்கிப்போடும் முன்

என் வாழ்நாளை தீ.மு, தீ.பி என பிரித்துவிடலாம். தீமு - தீஷுவிற்கு முன், தீபி - தீஷு பிறந்ததற்குப் பின். முன்பு எனக்கு வீட்டில் தேவையில்லாத பொருள் இருக்கக்கூடாது. ஆனால் இப்பொழுது எந்த பொருளைத் தூக்கிப் போடும் முன்னும் அதை வைத்து தீஷு விளையாடுவாளா என்று ஒரு நிமிடம் தோன்றி மறு நிமிடம் சேர்த்து வைத்து, வீடு முழுவதும் ஒரே பொருட்களின் குவியல்.

வீடு கட்டும் பொழுது, டைல்ஸ் தேர்ந்து எடுப்பதற்கு கொடுத்த புத்தகங்கள் இரண்டு மூன்று புத்தக அலமாரியில் இருந்தன. எதற்கு வைத்திருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. தூக்கிப் போடும் இவற்றைச் செய்தோம்.




ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பெரிய படமும், அதன் கீழே அந்த படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருந்த டைல்ஸுகளின் சிறிய படங்களும் கொடுக்கப்பட்டு இருந்தன. ஐந்து பெரிய படங்களையும், அந்த படங்களின் சிறிய அளவு டைல்ஸையும் வெட்டி எடுத்துக் கொண்டேன். பெரிய படங்களை வரிசையாக தரையில் அடுக்கி வைத்துக் கொண்டோம். ஒவ்வொரு சிறிய படங்களாக எடுத்து அது எந்த பெரிய படத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பொருத்தினோம். தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்து மீண்டும் மீண்டும் விளையாண்டு கொண்டிருந்தாள்.

மற்றொரு புத்தகத்தில் இடை இடையே பெரிய அழகிய படங்கள் இருந்தன. அவற்றை 8 முதல் பத்து பஸில் பீஸாக வெட்டி கொண்டோம். வெட்டிய பகுதிகளை இணைத்து மீண்டும் பெரிய படம் உருவாக்க வேண்டும் (பஸில் போல).

தீஷு இர‌ண்டு மூன்று நாட்க‌ள் திரும்ப‌ திரும்ப‌ எடுத்து விளையாடி ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்தினாள். இதேப் போல் பழைய‌ காலெண்ட‌ர்க‌ளிலும் செய்ய‌லாம்.

Tuesday, March 22, 2011

ஒற்றையா இர‌ட்டையா?

விளையாடுவ‌து குழ‌ந்தைக‌ளின் விருப்ப‌மான‌ வேலை. விளையாட்டின் மூல‌ம் அவ‌ர்க‌ளுக்கேத் தெரியாம‌ல் நிறைய‌ க‌ற்றும் கொள்வார்க‌ள். சிறு வ‌ய‌தில் என் விருப்ப‌மான‌ விளையாட்டுக‌ளில் ஒன்று ஒற்றையா, இர‌ட்டையா.

புளிய‌ங்கொட்டைக‌ள் வைத்து விளையாடுவோம். இருக்கும் புளிய‌ங்கொட்டைக‌ளை ச‌ம‌மாக‌ பிரித்துக் கொள்ள‌ வேண்டும். ந‌ம் ப‌ங்கில் சிறிதை கையில் எடுத்து ந‌ம் அருகில் இருப்ப‌வ‌ரிட‌ம் ஒத்தையா இர‌ட்டையா என்று கேட்க‌ வேண்டும். அவ‌ர் சொன்ன‌வுட‌ன், ந‌ம் கையில் இருக்கும் கொட்டைக‌ளை இர‌ண்டு இர‌ண்டாக‌ வைக்க‌ வேண்டும். அவ‌ர் சொன்ன‌து ச‌ரியாக‌ இருந்தால், ந‌ம் கையில் எடுத்த‌ அனைத்தையும் கொடுத்து விட‌ வேண்டும். த‌வ‌றாக‌ இருந்தால் அவ‌ரிட‌ம் அதே அள‌வு பெற்றுக் கொள்ள‌ வேண்டும்.


தீஷுவிற்கு Counting by 2 சொல்லிக் கொடுப்ப‌த‌ற்கு ஒற்றையா இர‌ட்டையா விளையாட‌ ஆர‌ம்பித்தோம். இர‌ண்டு இர‌ண்டாக‌ வைப்ப‌த‌ற்கு ப‌திலாக‌ இர‌ண்டு இர‌ண்டாக‌ எண்ண‌ வேண்டும். இந்த‌ எளிதான‌ விளையாட்டு மூல‌ம் மிக‌வும் எளிதாக‌ இர‌ண்டு இர‌ண்டாக‌ எண்ண‌ ப‌ழ‌கிக் கொண்டாள். அது ம‌ட்டும் இல்லாம‌ல், நிறைய‌ க‌ற்ற‌ல்க‌ள் இந்த‌ விளையாட்டில் உள்ளன‌. காய்க‌ளை இருவ‌ருக்கு அல்ல‌து மூவ‌ருக்குப் பிரித்த‌ல் (வ‌குத்த‌ல்), இர‌ண்டு இர‌ண்டாக‌ எண்ணுத‌ல், வெற்றி தோல்வி, ஒரிரு காய்க‌ள் விளையாட்டின் ந‌டுவில் ந‌ம்மிட‌ம் இருந்தாலும் இறுதியில் வெல்லுத‌ல் போன்ற‌ன. தீஷுவிற்கும் விருப்ப‌மான‌ விளையாட்டுக‌ளில் ஒன்று.

Monday, March 21, 2011

த‌வ‌று

நான் Progress Report, Interested in Origami என்ற‌ த‌லைப்புக‌ளில் எழுதியிருந்த‌ இரு இடுகைக‌ளும் நான் என் ப்ரைவேட் ப்ளாகில் எழுதுவ‌த‌ற்கு ப‌திலாக‌ த‌வ‌றாக‌ இந்த‌ ப்ளாகில் எழுதி விட்டேன். ப்ரைவேட் ப்ளாக் பின்னாளில் தீஷு அவ‌ள் குழ‌ந்தைப்ப‌ருவ‌த்தைத் தெரிந்து கொள்வ‌த‌ற்காக‌ நாங்க‌ள் எழுதுவ‌து. நான் எழுதிய‌தை ப்ளாகில் ப‌டிக்கும் வ‌ழ‌க்க‌ம் இல்லாத‌தால் க‌மென்ட்ஸ் பார்த்த‌வுட‌ன் தான் நான் செய்த‌ த‌வ‌று புரிந்த‌து. இரு இடுகைக‌ளிலும் பிரெஸ்ன‌லாக‌ எதுவும் இல்லை என்றாலும், என் ம‌க‌ளுக்காக‌ எழுதிய‌தை இங்கு வைத்திருப்ப‌தில் என‌க்கு விருப்ப‌மில்லை. ஆகையால் எடுத்து விட்டேன். க‌மென்ட்ஸ் எழுதிய‌வ‌ர்க‌ள் புரிந்து கொள்வீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன். ந‌ன்றி.

Thursday, March 3, 2011

களிமண்

நாங்கள் சிறுவயதில் மதுரையில் இருந்தபொழுது களிமண் வைத்து விளையாண்டது நினைவில் உள்ளது. எங்கிருந்து எடுப்போம் என்று ஞாபகம் இல்லை. ஆனால் களிமண்ணால் அம்மி செய்தது, பூ ஜாடி செய்தது போன்றது நினைவில் உள்ளது.

தீஷுவிற்கு மண் அலர்ஜி. களிமண் தெரியவில்லை. மண்ணில் விளையாண்ட அதே நாளில் அவளுக்குக் கொம்பங்கள் வருவதால் களிமண் கொடுத்து சோதிக்க மனம் இருக்கவில்லை. கடையில் வாங்கிய Playdough சற்று நாட்களாகிவிட்டாலும் தீஷுவிற்கு அலர்ஜி உண்டாக்குகிறது. ஆகையால் வீட்டில் செய்வதே எங்களின் சாய்ஸ்.

களிமண் முன்பே செய்திருக்கிறோம். வெவ்வேறு கலரில் செய்ய வேண்டும் ஆனால் ஒரே தடவை மாவு பிசைவது போல் இருந்தால் தீஷுவிற்கு எளிதாக இருக்கும் என்று இணையத்திருந்து இந்த செய்முறை எடுத்தேன்.

தேவையானவை:

1 கப் கோதுமை மாவு / மைதா
1 கப் தண்ணீர்
சிறிது எண்ணெய்
Food colouring

கோதுமை மாவு, தண்ணீர், எண்ணெய் மூன்றையும் கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும். கலவையை ஒரு தவாவில் ஊற்றி அடுப்பில் வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரங்களில் ஒட்டாமல் வரும் பொழுது (கிட்டத்தட்ட ஒரிரு நிமிடங்கள் கழித்து), அடுப்பிலிருந்து எடுத்து, மாவை மிருதுவாக பிசைய வேண்டும். எங்களிடம் நான்கு கலர்கள் இருந்தன. மாவை ஐந்தாக‌ப் பிரித்துக் கொண்டோம். கலரில் சிறிது தண்ணீர் ஊற்றி, மாவின் ஒரு பாகத்தில் ஊற்றி மீண்டும் நன்றாக பிசைய வேண்டும். பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரெஞ்ச், கரும் பச்சை என ஐந்து கலர் உருண்டைகள் செய்தோம். இதுவரை இவ்வளவு மிருதுவான playdough செய்தது இல்லை.

தீஷு மனிதன், காரெட், கத்தரிக்காய், பாம்பு என இரண்டு மணி நேரம் செய்து கொண்டிருந்தாள். விளையாண்டு முடித்தவுடன் பழைய playdough டப்பாவின் போட்டு ஃப்ரிட்சில் வைத்து விட்டேன்.அன்று என்னிடம் காமெரா இல்லை. இன்று பத்து நாட்கள் ஆகி விட்டன. ஒரு நாள் மூன்று குழந்தைகள் அனைத்து கலர்களை கலந்து ஒரு மணி நேரம் விளையாண்டப்பின் சிறிதை கீழே போட்டுவிட்டேன். மீதமிருப்பது கீழே புகைப்படத்தில் உள்ளது.

மிருதுவாகவும் ப‌ல‌ வ‌ண்ண‌ங்க‌ளில் இருந்தாலும் இயற்கை களிமண்ணுக்கு ஈடாகாது என்பது என் எண்ணம்.

Monday, February 28, 2011

கவர்ந்த தருணங்கள் 1/3/2011

1. தீஷு சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தாள். நான் அவள் அருகில் நடந்து வந்து கொண்டிருந்தேன். ஒரு வளைவில் ஒரு கார் மிகவும் மெதுவாக திரும்பியது. உடனே தீஷு, "கார் ஏன் இவ்வளவு ஸ்லோவா போகுது? L போர்டா என்ன?"

2. என் கஸின் CAT ட்டில் நல்ல ச‌த‌விகித‌ம் பெற்றிருந்தும், எந்த நல்ல காலேஜிலும் இடம் கிடைக்காது என்றதை என் கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே தீஷு, "அம்மா, CAT ஈஸி தானே.. C-A-T னு எழுதி காலேஜில சேர்ந்திட வேண்டியது தானே"

3. பால் பாத்திரத்தில் பால் காய்ச்சியவுட‌ன் ஏற்பட்ட கறுப்பு புள்ளியைக் காட்டி "ஏன் பாக்யா பாட்டி நல்லா க்ளீன் பண்ணல"
"அப்படி சொல்லக்கூடாது.. அவுங்க நல்லாத்தான் க்ளீன் பண்ணி இருந்தாங்க.. அவுங்க கேட்டா கஷ்டப்படப் போறாங்க"
"எதுக்குக் கஷ்டப்படப் போறாங்க?"
"அவுங்க நல்லாப் பண்ணினத குறை சொல்லக்கூடாது..நீ அழகா எழுதியிருக்கிறப்ப நல்லா எழுதலனு சொன்ன உனக்கு எப்படி இருக்கும்?"
"கஷ்டமா இருக்காது.. இன்னும் நல்லா எழுதிக்காட்டனுமினு நினைச்சுக்குவேன்"

4. வாக்கிங் போய் கொண்டிருந்தோம். ஒரு சில‌ந்தி தரையில் கிட‌ந்தது. அருகில் சென்று தீஷு அத‌ன் கால்க‌ளை எண்ணி, "அம்மா, எட்டு கால் இருக்கு.. அக்டோப‌ஸ் கிட‌க்கு மா"

5. தீஷு, ஒரு இர‌வில் தூங்கும் முன், "அம்மா, இன்னைக்கு நான் ந‌ல்லா பிகேவ் ப‌ண்ணினேன்ல‌, அத‌னால‌ நாளைக்கு என‌க்கு ஒரு கிஃப்ட் கொடுங்க‌"

"என்ன‌ கிஃப்ட் வேணும்"

"அத‌ நான் சொல்ல‌க்கூடாது. அப்புற‌ம் என்ன‌ கொடுக்க‌ப்போறீங்க‌னு தெரிஞ்சிடுமே.. (அடுத்த விநாடி அவ‌ளாக‌வே) ச‌ரி..கேட்கிற‌துனால‌ செல்லுறேன்.. நாளைக்கு வேணா ப‌ன்னீர் டிக்கா ம‌சாலா ச‌மைச்சிடுங்க‌.."

6. தீஷுவை ம‌திய‌த்தில் பார்த்துக் கொண்டிருந்த‌ உத‌வியாள‌ருக்குக் குழ‌ந்தைப் பிற‌ந்திருக்கிற‌து. பத்து மாத‌மும் தீஷுவை அவ‌ர்க‌ள் பார்த்துக் கொண்டிருந்த‌தால், அவர்கள் மாற்றத்தைப் பார்த்து, தீஷு குழ‌ந்தைப் பிற‌ப்ப‌து ப‌ற்றி ஏதாவ‌து கேட்டுக் கொண்டிருப்பாள். சில‌ நாட்க‌ளுக்கு முன் என்னிட‌ம், "அம்மா நான் பிஃகான‌வுட‌ன் என‌க்குப் பாப்பா பிற‌க்கும்ல‌" என்றாள். சில‌ விநாடிக‌ள் யோசித்து விட்டு நான், "ஆமாம்" என்றேன். "பிறந்தப்பிறகு நாம பாப்பாவுக்கு அப்பாவ‌ எங்கிருந்து கூட்டிக்கிட்டு வர்றது?".

Sunday, February 27, 2011

பொம்மை உணவில் கூட்டலும் கழித்தலும்

என் அம்மா வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த வெத்தலை பெட்டியை எடுத்துக் கொண்டோம். கண்ணாடி கற்களை ஒவ்வொரு இர‌ண்டடி தூரத்திற்கு ஒன்றாக வைத்திருந்தேன். கண்ணாடி கற்கள் அல்ல அவை. அவை தீஷுவின் பொம்மைகளின் உணவு. தீஷுவும் பொம்மைகளுக்கு உணவு எடுப்பதற்காக பறந்து பறந்து ஒவ்வொரு கண்ணாடி கற்களாக எடுத்து பெட்டிக்குள் வைத்துக் கொண்டே வந்தாள். கண்ணாடி கற்கள் எடுக்கும் பொழுது ஒவ்வொன்றாக கூட்ட வேண்டும். பெட்டியில் கற்கள் அதிகமாயின. அவள் எடுப்பதற்காக 10 கற்கள் அவ்வாறு வைத்திருந்தேன். அனைத்தையும் எடுத்து வந்தப்பின், வரும் வழியில் ஒரு நாய் பொம்மை அவளிடம் உணவு கேட்கும், தீஷுவும் கொடுப்பாள். ஒரு உணவு குறைந்தது. இப்பொழுது ரிவர்ஸ் கவுண்ட்டிங் ஆரம்பம். அவளிடமிருந்த உணவு குறைய ஆரம்பித்தது. கழித்தல் மற்றும் மைனஸ் போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்திக் கொண்டே இருந்தேன். இவ்வாறு அவள் எடுத்த உணவில் 8 பேருக்குக் கொடுத்து விட்டு, இரண்டு தன் இரண்டு பொம்மைகளுக்கு எடுத்துச் சொன்றாள்.

பொதுவாக‌ கூட்டல் கற்கும் பொழுது, முதல் எண்ணுக்கு நேராக, அதன் மதிப்புக்கு கோடோ அல்லது வட்டமோ வரைந்து, இரண்டாவது எண்ணுக்கு நேராக, அதன் மதிப்புக்கு கோடோ அல்லது வட்டமோ வரைந்து கூட்டும் பொழுது அனைத்து கோடுகளையும் கூட்டி விடை எழுதுவோம். கழிக்கும் பொழுது முதல் எண்ணின் கோடுகளை இரண்டாவது எண்ணின் கோடுகள் அளவு அடித்து விட்டு விடை எழுதுவோம்.

நானும் தீஷுவும் கூட்டல் வெவ்வேறு முறையில் முன்பே செய்திருக்கிறோம். இங்கும், இங்கும் காணலாம். கழித்தல் கற்றது பற்றி இங்கே காணலாம். ஒரளவு கூட்டல் என்றால் என்ன என்பதை தீஷு புரிந்து கொண்டப்பின் எப்பொழுதும் கற்கும் கோடுகள் முறையில் சொல்லிக் கொடுத்தேன். ஒவ்வொரு கோடாக போடுவதில் அவளுக்கு அதிக நேரம் எடுத்தது. அவள் வேகத்தை அதிகரிக்க, கூட்டல் கணக்கில் இருக்கும் முதல் எண்ணை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது எண்ணை விரல்களில் வைக்க வேண்டும். மனதிலுள்ள எண்ணிற்கு அடுத்த எண்ணிலிருந்து விரல்களை எண்ண வேண்டும். தீஷுவிற்கு இது எளிதாக இருந்தது.

அதேப் போல் கழித்தல் செய்யும் பொழுது மனதிலுள்ள எண்ணிற்கு முந்திய எண்ணிலிருந்து ரிவர்ஸ் கவுண்ட்டிங் செய்ய வேண்டும். தீஷுவும் செய்கிறாள். ஆனால் கூட்டலுக்கு ஏன் அதிகப்படுத்துகிறோம் என்றும் கழித்தலுக்கு ஏன் குறைக்கிறோம் என்று அவளுக்குப் புரிந்ததா என்று எனக்கு ஒர் எண்ணம். அதற்காகத் தான் இந்த விளையாட்டை விளையாண்டோம்.

மீண்டும் ஒரு முறை விளையாட‌ வேண்டும் என்று பிரிய‌ப்ப‌ட்டு விளையாண்டாள்.

Monday, February 21, 2011

அம்புலிமாமா

அம்புலிமாமா ப‌ழைய‌ ப‌திப்புக‌ளை இணையத்தில் பார்த்தவுடன் மகிழ்ச்சி. தமிழ் புத்தகங்கள் 1947 முதல் 2005 வரை கிடைக்கின்றன. தமிழ், ஆங்கிலம், கன்னட, மலையாளம், பெங்காலி, மராட்டி, ஒரியா போன்ற முக்கிய மொழிகள் அனைத்திலும் கிடைக்கின்றன. எனக்குத் தான் இது புதிய தகவலா என்று தெரியவில்லை. என் பால்யத்தில் முக்கிய இடம் கண்டிப்பாக அம்புலிமாமாவுக்கு உண்டு. http://www.chandamama.com/archive/storyArchive.htm வில் அனைத்து பழைய எடிசன்கள் உள்ளன. விளம்பரங்களும் தனியாக உள்ளன.

Sunday, February 20, 2011

குழந்தைகளுக்கான உலக மனக்கணக்குப் போட்டி



மார்ச் ஒன்றாம் தேதி உலக கணித நாள். அதை முன்னிட்டு உலக மனக்கணக்குப் போட்டி நடைபெற உள்ளது. பள்ளி ஆசிரியர் வகுப்பையோ அல்லது பெற்றோர் தன் குழந்தையையோ ரிஜிஸ்டர் செய்யலாம். போட்டி மார்ச் ஒன்றாம் தேதி நடைபெறும். 48 மணி நேரத்தில் 100 விளையாட்டுக்களுக்கு விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு விளையாட்டுக்கும் 60 வினாடிகள் கொடுக்கப்படும். வயது வரம்பு 4-7, 8-10, 11 - 13 மற்றும் 14-18.

மேலும் தகவல் மற்றும் ரிஜிஸ்டர் செய்ய இங்கே செல்லவும்.

Saturday, February 19, 2011

One more transferring

வெகு நாட்களுக்கு முன் செய்த ஆக்டிவிட்டி இது.

Tongs மூலம் மாற்றுதல் தீஷுவின் பழைய மாண்டிசோரி பள்ளியில் பார்த்து இருக்கிறேன். முன்பே முயற்சி செய்தோம். ஆனால் அப்பொழுது அளவு சரியாக இல்லாததால், அவளுக்குச் செய்ய விருப்பமிருக்கவில்லை. புருவம் திருத்த பயன்படும் கருவி பயன்படுத்தலாம் என்று அதை வாங்கினோம்.



பாசியை ஒரு தட்டிலிருந்து மறு தட்டிற்கு மாற்றச் சொன்னேன். தீஷு விருப்பமாக செய்தாள். தட்டு இலை வடிவில் இருந்தது. இலையின் நரம்புகள் போல் கோடுகளும் இருந்தன. அவளாகவே அந்த கோட்டின் மேல் வைத்துக் கொண்டே வந்தாள். அவள் ஆர்வத்தைத் தக்க வைத்தது.

இது எழுத பயன்படும் விரல்களுக்கானப் பயிற்சி.

Friday, February 18, 2011

ஒரு சிறு விளையாட்டு

தீஷுவிற்கு பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் ஸிலபஸ் எனக்குத் தெரியும் என்பதால், ஒரளவு அவளுக்கு வீட்டியேலே சொல்லிக் கொடுத்துவிடுவேன். அவளுக்கு அது பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் பொழுது மிகவும் எளிதாக இருக்கிறது. அவர்கள் சொல்லிக் கொடுக்கும் முறை வேறு மாதிரி இருந்தாலும், நான் அவளுக்குப் பொருட்கள் வைத்து சொல்லிக் கொடுப்பது அவளுக்குப் பிடித்திருப்பதாக அவளே சொல்லுவதால் இம்முறை தொடருகிறது.

தீடீரென ஒரு நாள் இரண்டு இலக்க கூட்டல் வீட்டுப்பாடமாக வந்தது. இரண்டு இலக்க கூட்டல் ஸிலபஸில் இல்லை. தீஷு வயதிற்கு அது அதிகம் என்று நானும் சொல்லிக் கொடுத்ததில்லை. இரண்டு இலக்க கூட்டலுக்கு முன் ஒன்ஸ், டென்ஸ் தெரிந்து இருக்க வேண்டும். ஏனென்றால் எண்களை வாசிக்கும் பொழுது இடமிருந்து வலம் வாசிக்கும் நாம், கணக்கை கணிக்கும் பொழுது வலமிருந்து இடமாக செய்ய வேண்டும். முதலில் ஒன்ஸை கூட்டி, அடுத்து டென்ஸை கூட்ட வேண்டும். அது ஏன் என்று தீஷுவிற்கு புரிய வேண்டும் என்று நினைத்தேன்.

ஒரு தட்டில் பாசிகளும், நான்கு கிண்ணங்களும் எடுத்துக் கொண்டோம். ஒரு தாளை மூன்றாக கோடிட்டு பிரித்து Tens, Ones & Number என்று எழுதிக் கொண்டேன். முதலில் பாசியை எடுத்துக் கொள்ள வேண்டும். Ones கட்டத்தில் ஒவ்வொன்றாக வைத்துக் கொண்டே வர வேண்டும். பத்து வந்தவுடன் கிண்ணத்தில் போட்டு, கிண்ணத்தை Tens கட்டத்தில் வைத்து விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு கிண்ணத்தில் போட வேண்டும். பத்து பத்தாகத் தான் கிண்ணத்தில் போடுவதால், மீதம் இருக்கும் ஒன்றை எண் பாசிகள் ones கட்டத்திலேயே இறுதியில் இருந்து விடும். இருபது பாசிகள் அளவில் மட்டுமே தீஷுவால் அள்ள முடிந்ததால், அவள் விரும்பும் வரை எடுத்து கிண்ணங்களில் போட சொன்னேன்.

அனைத்து அள்ளிய பாசிகளையும் இவ்வாறு போட்டப் பின் கிண்ணங்களை எண்ணும் பொழுது 1 டென்ஸ், 2 டென்ஸ் என்று எண்ண வேண்டும். மொத்தம் எடுத்த பாசிகள் எவ்வளவு என்பதை கண்டுபிடித்து நம்பர் கட்டத்தில் எழுத வேண்டும். மொத்தம் எடுத்த பாசிகள் கிண்ணங்களின் எண்ணிக்கை * 10 + ஒன்ஸ் கட்டத்தில் இருக்கும் பாசி.

இதன் மூலம் ஒன்ஸ், டென்ஸ் புரிந்தது. ஏன் ஒன்ஸ் கூட்டி முடித்து டென்ஸ் செய்கிறோம் என்றும் புரிந்தது. அடுத்து carry over கூட்டல் செய்யும் பொழுது எதற்கு carry over செய்கிறோம் என்றும் புரியும் என்று நினைக்கிறேன்.

Wednesday, February 2, 2011

Magic drawing

இப்பொழுது மாஜிக் டிராயிங் (Magic drawing) புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒரு வெள்ளை குச்சியால் முதலில் வரைய வேண்டும். வரைந்தது தெரியாது. அதன் மேல் பெயிண்ட் செய்தால், வரைந்த படம் தெரிய ஆரம்பிக்கும். படம் பெயிண்ட்டை தன் மேல் படர விடாமல் தனியாகத் தெரியும்.


அந்த வெள்ளை குச்சி மெழுகு. வெள்ளை கிரையான் கொண்டும் செய்யலாம். இந்த technique பெயர் crayon resist. தீஷுவிற்கு 5 *5 ஆக இருபத்து ஐந்து கட்டங்கள் வரைந்து கொடுத்தேன். A முதல் Z வரை மெழுகால எழுத சொன்னேன். Y & Z ஒரே கட்டத்தில் எழுதினாள். எழுதியது கூர்ந்து பார்த்தால் மட்டுமே தெரிந்தது.




அதன் பின் என் வாட்டர் கலர் எடுத்துக் கொடுத்தேன். பெயிண்ட் அடித்தும் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை. என் வாட்டர் கலரில் வண்ணத்தின் அளவு அதிகமாக இருப்பது காரணமாக இருக்கும் என நினைத்து தீஷுவின் வாட்டர் கலர் எடுத்துக் கொடுத்தேன். அப்பொழுது நன்றாகத் தெரிந்தது.



தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது.

Wednesday, January 26, 2011

குழந்தைகளின் புத்தகத்தில் இந்த வாக்கியங்கள் தேவையா?

"என் அப்பா பயங்கரக் குண்டு"
"இந்தக் குண்டர்கள் எல்லாம் கோழைக் குண்டர்கள்"
"உன் அப்பா ஒரு தடியன்.. மடையன்.."
"கோழைக் குண்டர்கள்"

இவ்வாக்கியங்கள் அனைத்தும் மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான புத்தகமான குட்டிக் குட்டி முயல் புத்தகத்தில் வருவது. பாரதி புத்தகலாயம் வெளியீட்டில் வந்துள்ளது.

குழந்தைகள் புத்தகத்தில் இது போன்ற வாக்கியங்கள் தேவையா? மொழி பெயர்க்கும் பொழுது ஆசிரியர் அவ்வாக்கியங்களை சற்றே மாற்றி இருக்கலாமே.

மேலும் பிற முயல்களை அடித்து வெற்றி (!) பெற்று வரும் தன் குட்டி முயலை அப்பா முயல் பாராட்டுகிறார். பிற முயல்கள் தப்பே செய்திருந்தாலும் அடிப்பது தான் சரியா? நான் வாசிக்கும் பொழுது இவ்வாக்கியங்க்ள் மாற்றியோ அல்லது விட்டு விட்டோ வாசிக்க‌ வேண்டியுள்ள‌து.

புத்த‌க‌க்க‌ண்காட்சியில், குட்டிக் குட்டி முயல் தவிர, பாரதி புத்தகலாயம் வெளியீட்டில் மேலும் சில புத்தகங்கள் வாங்கினோம்.

1.பூனை கணக்குப் படிக்கிறது
2.இனி பால் வேண்டாம் அம்மா
3.வால்களின் கதை
4.நீங்கள் என் அம்மாவா?

போன்றன என் நினைவில் உள்ளன. தேவையற்ற‌ வாக்கியங்கள் இல்லாதது ஆறுதல் அளிக்கிறது. சிறு சிறு கதைகளுடன் புத்தகங்கள் அவளின் ஆர்வத்தைத் தக்க வைக்கின்றன.

தூலிகாவின் Line and Circle தீஷுவிற்கு வாசிக்கப் பழக ஏதுவாக இருக்கும் என்ப‌த‌ற்காக‌ வாங்கினேன். அதிலிருந்த படங்கள் கொள்ளை அழகு. கோடுகளையும் வட்டங்களையும் வைத்து இத்தணை படங்கள் வரைய முடியுமா என்று தீஷுவிற்கு ஆச்சர்யம். படித்த முடித்தப்பின் வேறு என்ன படங்கள் உருவாக்கலாம் என்று விளையாண்டு கொண்டிருந்தோம். பயனுள்ள புத்தகம். ஆனால் விலை சற்று அதிகம் என்பது என் எண்ணம்.

சிபிடி வெளியீட்டில்

1. கிராமத்திற்கு வந்த குரங்குகள்
2. பலூனும் நானும்

வாங்கினோம். அதில் கிராமத்திற்கு வந்த குரங்குகள் சற்று பெரிய கதை. ஒரு வாசிப்பில் அவளுக்கு அந்த புத்தகத்தை வாசிக்க முடியவில்லை.

த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் என்ப‌தால், புத்தகங்களை வாசிக்க வாசிக்க தீஷுவிற்கு புரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வாசித்தவுடன் தீஷு, நல்ல தமிழல(!) திரும்ப சொல்லுங்க என்கிறாள்.

இப்புத்த‌கங்க‌ள் த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் ப‌ற்றிய‌ அறிமுக‌த்திற்கு உத‌வுகின்ற‌ன‌.

Monday, January 24, 2011

Hundreds



சென்ற‌ ச‌னிக்கிழ‌மை க‌ர்நாட‌க‌ ப‌ந்த். எங்கும் வெளியே போக‌ முடிய‌வில்லை. வெகு நாட்க‌ளாக‌ தீஷுவிற்கு ப‌த்து பாசிக‌ள் கோர்த்த‌து போல் நூறு நூறாக‌ செய்ய‌ வேண்டும் என்று நினைத்திருந்தேன். முத‌லில் ப‌த்து ப‌த்தாக‌ ப‌த்து (ஸ்..ப்பா.. எத்த‌ண ப‌த்து) செய்து இணைத்து விட‌லாம் என்று நினைத்தேன். ஆனால‌ அது ச‌ரியாக‌ நிற்க‌ வில்லை. சிறு வ‌ய‌தில் சிறு சிறு பாசிக‌ளை இணைத்து WELCOME என்று எழுதிய‌ நினைவு. ஆனால் அத‌ன் பின்ன‌ல் நினைவில் இல்லை. பின்பு இணைய‌த்தில் தேடி பின்ன‌ல் க‌ற்றேன்.

இவ்வாறு ஒரு நூறு பாசிக‌ள் சேர்க்க‌ கிட்ட‌த்த‌ட்ட‌ அரைம‌ணி நேர‌ம் ஆன‌து. அவ்வாறு ப‌த்து நூறுக‌ள் கோர்த்து இருக்கிறேன். ச‌னி, ஞாயிற்றில் கிட்ட‌த்த‌ட்ட‌ ஆறு ம‌ணி நேர‌ம் இத‌ற்கே ஆனது. இது வ‌ரை தீஷுவின் ஆக்டிவிட்டி தயார் செய்ய‌ இவ்வ‌ள‌வு நேர‌ம் செல‌விட்ட‌து இல்லை. முன்பு ஸாண்ட் பேப்ப‌ர் (Sandpaper) எழுத்துக‌ள் வெகு நேர‌ம் செல‌விட்டு செய்தேன். தீஷு தொட‌வே இல்லை. இவை தீஷுவிற்கு ஆர்வ‌ம் உண்டாக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க‌ வேண்டும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost