Showing posts with label புத்தகக்கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தகக்கண்காட்சி. Show all posts

Wednesday, January 26, 2011

குழந்தைகளின் புத்தகத்தில் இந்த வாக்கியங்கள் தேவையா?

"என் அப்பா பயங்கரக் குண்டு"
"இந்தக் குண்டர்கள் எல்லாம் கோழைக் குண்டர்கள்"
"உன் அப்பா ஒரு தடியன்.. மடையன்.."
"கோழைக் குண்டர்கள்"

இவ்வாக்கியங்கள் அனைத்தும் மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான புத்தகமான குட்டிக் குட்டி முயல் புத்தகத்தில் வருவது. பாரதி புத்தகலாயம் வெளியீட்டில் வந்துள்ளது.

குழந்தைகள் புத்தகத்தில் இது போன்ற வாக்கியங்கள் தேவையா? மொழி பெயர்க்கும் பொழுது ஆசிரியர் அவ்வாக்கியங்களை சற்றே மாற்றி இருக்கலாமே.

மேலும் பிற முயல்களை அடித்து வெற்றி (!) பெற்று வரும் தன் குட்டி முயலை அப்பா முயல் பாராட்டுகிறார். பிற முயல்கள் தப்பே செய்திருந்தாலும் அடிப்பது தான் சரியா? நான் வாசிக்கும் பொழுது இவ்வாக்கியங்க்ள் மாற்றியோ அல்லது விட்டு விட்டோ வாசிக்க‌ வேண்டியுள்ள‌து.

புத்த‌க‌க்க‌ண்காட்சியில், குட்டிக் குட்டி முயல் தவிர, பாரதி புத்தகலாயம் வெளியீட்டில் மேலும் சில புத்தகங்கள் வாங்கினோம்.

1.பூனை கணக்குப் படிக்கிறது
2.இனி பால் வேண்டாம் அம்மா
3.வால்களின் கதை
4.நீங்கள் என் அம்மாவா?

போன்றன என் நினைவில் உள்ளன. தேவையற்ற‌ வாக்கியங்கள் இல்லாதது ஆறுதல் அளிக்கிறது. சிறு சிறு கதைகளுடன் புத்தகங்கள் அவளின் ஆர்வத்தைத் தக்க வைக்கின்றன.

தூலிகாவின் Line and Circle தீஷுவிற்கு வாசிக்கப் பழக ஏதுவாக இருக்கும் என்ப‌த‌ற்காக‌ வாங்கினேன். அதிலிருந்த படங்கள் கொள்ளை அழகு. கோடுகளையும் வட்டங்களையும் வைத்து இத்தணை படங்கள் வரைய முடியுமா என்று தீஷுவிற்கு ஆச்சர்யம். படித்த முடித்தப்பின் வேறு என்ன படங்கள் உருவாக்கலாம் என்று விளையாண்டு கொண்டிருந்தோம். பயனுள்ள புத்தகம். ஆனால் விலை சற்று அதிகம் என்பது என் எண்ணம்.

சிபிடி வெளியீட்டில்

1. கிராமத்திற்கு வந்த குரங்குகள்
2. பலூனும் நானும்

வாங்கினோம். அதில் கிராமத்திற்கு வந்த குரங்குகள் சற்று பெரிய கதை. ஒரு வாசிப்பில் அவளுக்கு அந்த புத்தகத்தை வாசிக்க முடியவில்லை.

த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் என்ப‌தால், புத்தகங்களை வாசிக்க வாசிக்க தீஷுவிற்கு புரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வாசித்தவுடன் தீஷு, நல்ல தமிழல(!) திரும்ப சொல்லுங்க என்கிறாள்.

இப்புத்த‌கங்க‌ள் த‌மிழ் புத்த‌க‌ங்க‌ள் ப‌ற்றிய‌ அறிமுக‌த்திற்கு உத‌வுகின்ற‌ன‌.

Sunday, November 22, 2009

ஸ்பைடர் மேன் ஸ்பைடர் மேன் - பெங்களூர் புத்தகக்கண்காட்சி

சென்ற வாரம் பெங்களூர் புத்தகக் கண்காட்சி சென்றிருந்தோம். காலை முதல் மழை பெய்வது போல் இருட்டிக்கொண்டேயிருந்தது. அப்படித்தான் இருக்கும் ஆனால் பெய்யாது என்று ஒரு நம்பிக்கையில் சாயங்காலம் கிளம்பிவிட்டோம். பாலஸ் கிராவுண்டில் புத்தகக் கண்காட்சி. நாங்கள் பாலஸ் கிராவுண்ட் என்று நினைத்துச் சென்ற இடத்தில் கண்காட்சி நடப்பது போல் ஒரு அறிகுறியே இல்லை. பக்கத்தில் விசாரித்ததில் நேராகச்செல்ல வேண்டும் என்றார்கள். ஆனால் எவ்வளவு தூரம் என்று சொல்லவில்லை. இங்கு அங்கு விசாரித்து, லேஃப்ட் போய், ரைட் போய் என எங்கு வந்திருக்கிறோம் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 30 கிமி. உள்ளே நுழையும் முன்னே மனதில் சின்ன எண்ணம் - கிளம்பும் முன் மழை வந்துவிடக்கூடாது என. நாங்கள் எங்கு இருக்கும் என்று எங்களுக்கேத் தெரியாததால் ஒரு மணி நேரமே இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம்.

முதலில் நுழைந்தவுடனே இடது பக்கத்தில் தமிழ் கடை. அப்பா எங்களை மறந்து விட்டார். புத்தகங்களை அள்ள ஆரம்பித்து விட்டார். சாவியின் வாஷிங்டனில் திருமணம் நான் வாங்கச் சொன்னேன். தீஷு ஆரம்பித்து விட்டாள்.. "அம்மா பசிக்குது..". என்னால் பார்க்கக்கூட முடியவில்லை. அடுத்த கடையில் நான் Chetan Bhagat தின் 2 states வாங்கினேன். Lords of the rings வெகு நேரம் யோசித்து பின்பு இவ்வளவு பெரிய புஃகை என்னைக்கும் படிக்க முடியாது என்று வாங்கவில்லை. அடுத்து ஒரு கடையையும் தீஷு பார்க்க விடவில்லை. அப்பா கையில் புத்தகங்கள் இருந்ததால் நான் அவளை தூக்க வேண்டியிருந்தது. என்னால் தூக்கிக்கொண்டு பார்க்க முடியவில்லை. தீஷுவிற்கு என மூன்று வாசிக்கப்பழக சிறு வாக்கியங்கள் கொண்ட புத்தகங்கள் வாங்கினோம். பின்பு இந்திரா செளந்திர்ராஜனின் சிவம் வாங்கினோம்.

பின்பு ஒரு கடையில் குழந்தைகளின் புத்தகங்கள் பத்து ரூபாய் என பழைய புத்தகங்கள் கிடைத்தன. அதில் வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த முத்துகள் சில கிடைத்தன.

பத்து டாலர் என்று மிரட்டிய புத்தம் - Hush little baby (நூறு தடவைக்கு மேல் வாசித்தாகி விட்டது.)


I Spy ( Library யில் படித்தது இப்பொழுது சொந்தமாக)








புத்தகக் குவியலில் தேடிக்கொண்டிருக்கும் பொழுது தான் தீஷு இத எடுத்துக்கிடவா என்றாள். அவசரத்தில் பார்க்காமல் புத்தகம் தானே என்று சரி என்றேன். பணம் கொடுக்கும் பொழுது தான் பார்த்தேன் அது ஒரு ஸ்பைடர் மேன் புத்தகம். தீஷுவிற்கு பார்னி மட்டுமே முன்பு தெரியும். இப்பொழுது ஸ்பைடர் மிகவும் கவர்ந்து விட்டர். நான் யூ டியூபில் ஆரம்பப்பாடல் காண்பித்தேன். மிகவும் பிடித்து விட்டது. ஸ்பைடர் மேன் பறப்பாரு, இங்க பாரு டிரெஸில் ஸ்பைடர், இவர் மேன் அதனால தான் ஸ்பைடர் மேன் என எனக்குப் பல தகவல்கள் தருகிறாள்.


விகடன் பிரசுரத்தைப் பார்த்தவுடன் கிடைத்த மகிழ்ச்சியை இங்கிருந்த புத்தகங்களால் தக்க வைக்க முடியவில்லை. நான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த கிராமத்து விளையாட்டுகள் கிடைக்கவில்லை. அப்பா விஷ்ணுபுராணம் வாங்க வேண்டும் என்றார். தீஷுவின் நிஜமா சொல்றேன் அம்மா.. ரெம்ப பசிக்குது என்ற வாக்கியம் எங்களை கிளப்பியது. வெளியே சாப்பிடும் இடம் வந்தவுடன் நேரம் பார்த்தல் இரண்டரை மணி நேரம் ஆகி இருந்தது.


மழையின் கவலையுடனும், தீஷுவின் தொல்லையுடனும் எங்கள் முதல் புத்தகக் கண்காட்சி அனுபவம் இனிதே முடிந்தது. அடுத்த வருஷம் உன்னைய யார்கிட்டயாவது விட்டிட்டு தான் வருவோம் என்று அவளே மிரட்டிக்கொண்டும், மழை வரக்கூடாது என வேண்டிக் கொண்டும் வீடு வந்தோம்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost