தற்கால குழந்தைகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான பள்ளிக்குச் செல்லும் தூரம் பற்றி கிரேஸ் அவர்கள் இங்கு பகிர்ந்திருக்கிறார்கள்.
"நானெல்லாம் ஐந்து மைல் நடந்துபோய்தான் படிச்சேன். அஞ்சு நிமிசம்
நடக்கிறதுக்கு உங்களுக்கு காலு வலிக்குது", பலரும் கேட்டிருக்கும் வசனம்.
"அந்த காலத்துல பஸ்சா காரா, நாங்கல்லாம் நடந்துபோய் தான் படிச்சோம்", பலரின் ஏக்கவசனம்.
இந்த
ரீதியில் பல வசனங்கள், பல சூழ்நிலைகள் சொல்லிக்கொண்டேபோகலாம்.
சரி, நான்
நடந்து போய் படிச்சேன், ஐந்து மைல் அல்ல, ஐநூறு அடி! பள்ளிக்குப்
பக்கத்திலேயே வீடு பார்த்து அதிலும் கொண்டுபோய்விட்டு மீண்டும் அழைத்துக்
கொண்டு வருவார்கள். இன்றைய நிலை என்ன? அதிலும் பெருநகரங்களில் இந்நிலை
எப்படி இருக்கிறது? பெற்றோரும் சிறாரும் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன?
இதைப்பற்றி தான் இப்பதிவு. பள்ளியின் தூரம் பற்றிதான் இப்பதிவு என்றாலும்
ஒரு முன்னுரை தேவைப்படும் என்று நினைப்பதால் சில தகவல்களையும்
பதிவிடுகிறேன்.
நான்
அமெரிக்காவிலிருந்து ஜூலை இறுதியில் இந்தியா வந்தேன். வந்தவுடனே பள்ளி
சுற்றுலா ஆரம்பம். டாக்ஸி வைத்துக்கொண்டு பள்ளி பள்ளியாக இந்த
போக்குவரத்துநெரிசலில் ஏறி இறங்கி..தல சுத்திப் போச்சு..ஏன்டா திரும்பி
வந்தோம்னு தோணிடுச்சு..அப்படி ஒரு வரவேற்பு எங்கும்!!!
அருகில் இருக்கும் எந்தப் பள்ளியும் சேர்த்துக்கொள்ள தயாரில்லை...
1. பள்ளி ஆரம்பித்து இரு மாதங்கள் கழித்து வந்தது காரணம்.
2.
என் பையனுக்கு ஹிந்தி எழுத்துகள் ஓரளவு மட்டுமே தெரியும் என்பது மற்றொரு
காரணம். இங்கு 'மாத்திரை, டானிக்' எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க...எப்படி
எழுத்து மட்டும் வச்சிக்கிட்டு?...இதுக்காக திரும்பியாப் போக முடியும்?
3.
ஒரு பள்ளி தயார் என்றனர், ஆனால் பள்ளியின் தூரம் 25கி.மீ.! அவர்கள் 3
நாட்கள் அவகாசம் கொடுத்தனர். அதற்குள் வீடு பார்த்து எப்படி?????
இந்தச்
சூழ்நிலையில் ஒரு பள்ளி, ஹிந்தி எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்,
அப்படி, இப்படி என்று பேசி..நுழைவுத் தேர்வும் வைத்து, சேர்த்துக்
கொண்டார்கள். முக்கால் மனதாக அங்கு பெரும்தொகை கொடுத்து மூன்றாம்
வகுப்பிற்குச் சேர்த்துவிட்டோம் பெரியவனை. காலையில் 7.20க்குப் பேருந்து
வரும், மாலையில் 4 மணிக்கு வந்துவிடும். மூன்று மணிக்கே பள்ளி முடிவடையும்,
நம்ம போக்குவரத்து நெரிசல் அப்படி!! அப்படி அவ்வளவு தூரம் அனுப்பமுடியாது
என்று ஐந்து வயது சிறியவனை அப்போதைக்கு நிறுத்திக்கொண்டேன்.
பார்த்துக்கொள்ளலாம், என்ன ஆனாலும் என்று!!
சரி,
இப்பள்ளியின் தூரம் 10கி.மீ. பள்ளிப் பேருந்து வருகிறது, அதற்கு ஒரு
கட்டணம். சரி, பள்ளி செல்ல ஆரம்பித்தான். பேருந்திற்கு இந்த தட எண் என்று
சொல்லிவிட்டார்கள். முதல் நாள் நிறுத்தத்தில் காத்துக் கிடக்கிறேன்,
பேருந்து வந்தது, ஆனால் நிற்காமல் சென்று விட்டது. பதறி கணவரைத்
தொலைபேசியில் அழைத்து, அவர் அப்பள்ளிப் பேருந்துகள் ஒருங்கிணைப்பாளரை
அழைத்து...நான் நேராக அவரை அழைக்காததற்கு காரணம் நான் சரளமாக ஹிந்தி
பேசமாட்டேன் என்பதுதான்..அவரோ ஹிந்தி தான் பேசுவார்!!!!! எப்படியோ, தட
எண்ணை மாற்றி வேறு பேருந்தில் வந்து சேர்ந்தான். வாயில் வந்து துடித்த
இதயம் மீண்டும் நெஞ்சுக்கூட்டிற்குள் சென்றது. தூரமாய் சேர்த்ததன் முதல்
நாள் அனுபவம்!!
மறுநாள்
காலையில் பேருந்து வரவில்லை, காணவில்லையே என்று ஒருங்கிணைப்பாளரை
அழைத்தால் ஓட்டுனர் விட்டுச் சென்று விட்டார். சொன்ன நேரத்திற்கு பத்து
நிமிடம் முன்னதாகவே!! கணவர் ஒரு ஆட்டோவைப் பிடித்து (எங்களிடம் காரோ பைக்கோ
எதுவும் இல்லை) எங்கோ பாதிதூரத்தில் வேறு ஒரு தட எண் பேருந்தில் ஏற்றி
விட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தார்! தூரத்தின் இரண்டாவது அனுபவம்!!
மாலையில் எப்படி வருவானோ என்று இரண்டு மணிக்கே இதயம் வாய்க்குப் வர ஆயத்தமாகிவிட்டது. நல்ல வேளை சொன்னபடி வந்து சேர்ந்தான்.
தூரமாய்
செல்வதின் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், சோர்ந்து போய் வருவான்.
வீட்டுப்பாடம் முடித்து விளையாடவோ, வேறு பயிற்சிகளுக்கோ நேரமில்லை!!
சரி,
இப்படியாகச் சென்றது சில நாட்கள்! திடீரென்று நான் நிறுத்தத்தில் காத்துக்
கொண்டிருக்க, அவன் வேறு பக்கத்திலிருந்து நடந்து வருவான். கேட்டால்
இருநூறு அடி தள்ளி விட்டுவிட்டுச் சென்றாராம் ஓட்டுனர். நெரிசல் மிகுந்த
சாலை!!! சரி பார்க்கலாம் என்று நினைத்தால் இதுவே தொடர்ந்தது மறுநாளும்.
நான் கணவரை அழைக்க, அவர் ஒருங்கிணைப்பாளரை அழைக்க, அவரோ "அப்படியா சார்,
நாளைக்கு ஒழுங்கா விட சொல்றேன் சார்" என்று சொல்ல, நானும் வழக்கமான
இடத்தில் காத்திருக்க, பையன் அந்தப் பக்கமிருந்து நடந்து வருகிறான். இது
தினமும் ஒரு நான்கு நாட்கள் நடந்தது. சரி, எங்கு விடுகிறார்கள் காட்டு,
நான் அங்கு வந்து நிற்கிறேன் என்று சொல்லி மறுநாள் அங்கு சென்று நின்றேன்.
ஓட்டுனரிடம் அரைகுறை ஹிந்தியில் விசாரித்தால், "இங்கு தான் விடுவேன்,
யார்கிட்ட வேண்டுமானாலும் புகார் செய்துகொள்ளுங்கள்" என்று சொல்கிறான். அதை
என் கணவரிடம் சொல்ல, அவர் ஒருங்கிணைப்பாளரை அழைக்க, அவர் அதே பதிலைச்
சொல்ல.....இப்படியாக இரு வாரங்கள் ஓடியது.
நேரில்
செல்லலாம் என்று எனக்கு முன்பே தோன்றியிருந்தாலும் செல்ல முடியாத நிலை!!!
கார் வாங்கியிருந்தாலும் இந்தப் போக்குவரத்து நெரிசலில் கார் ஓட்ட எனக்குப்
பயம், மேலும் கணவர் காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்றுவிடுவார்.
வருவதற்கு இரவு பத்து பத்தரை மணியாகும்.
மிகுதியான
மன உளைச்சலில், கணவரிடம் சொல்லி மறுநாள் நேரில் சென்றோம்.
ஒருங்கிணைப்பாளரை அழைத்து என்னதான் நடக்கிறது என்று கேட்டால் அவர் ஓட்டுனரை
அழைத்தார். அவர் வந்து இன்னும் ஒரு வாரம் சார், காலாண்டுப் பரீட்சை
முடிந்தவுடன் மீண்டும் பழைய இடத்தில் விடுகிறேன் என்கிறார். என்னவென்று
கேட்டால் காலாண்டுப் பரீட்சை நடப்பதால் சில மாணவர்கள் காலை பதினொரு மணிக்கே
சென்றுவிடுவராம். அதனால் இரண்டு பேருந்து மாணவர்களை ஒன்றாக ஒரே பேருந்தில்
விட வருவதாலும், எங்கள் பகுதியில் எங்கள் பையன் ஒருவனே அப்பொழுது
வருகிறான் என்பதாலும் ஒரு முக்கில் அவனை விட்டுச் செல்கிறாராம். இதனை
ஒழுங்காகத் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும், நானாவது வந்து நிற்பேன்,
என்று சொல்லி வந்தோம்...அத்தனை நாள் ஒருங்கிணைப்பாளர் என்னதான் கேட்டாரோ,
என்னதான் சொன்னாரோ!!!! இரு வாரங்கள் எனக்கு இருந்த மன உளைச்சல்
வார்த்தைகளால் சொல்ல முடியாது...
ஏது
ஏதோ செய்திகள் எல்லாம் படித்து பயம் வேறு..ஓட்டுனர் இப்படிப்
பேசுகிறாரே..என்ன செய்வாரோ..நாம் என்ன செய்வது..என்று பலவாறு தறிகெட்டு
ஓடிய எண்ணங்கள்!!
இதில்
எனக்கும் கணவருக்கும் வாக்குவாதம் வேறு, அவர்தான், ஒரு நிலையில், இதற்கு
மேலும் பள்ளி பள்ளியாக ஏற வேண்டாம், என்று அப்பள்ளியை முடிவு
செய்திருந்தார். ஆனால் எளிதாக எதற்கும் போகமுடியவில்லை..ஏன் தான் இந்த
பள்ளியில் சேர்த்தோமோ என்று நான் வருந்த அவருக்கு கோபம் வர..தூரத்தால்
எவ்வளவு பிரச்சினைகள்!!!!
இடையில்
ஹிந்தி வேறு, ஆசிரியர் மற்ற மாணவரைப் போலவே இவனும் எல்லாம் எழுதவேண்டும்
என்று எதிர்பார்க்க, அதற்கு ஒரு முறை பள்ளி சென்றோம்...தினமும் ஹிந்தி
மட்டுமே ஒன்றரை மணிநேரம் படிக்கும் பையனிடம் அவனுடைய முன்னேற்றம் கண்டு
ஊக்குவிக்காமல் முழுவதும் தெரிந்திருக்க வேண்டும் என்று மூன்று மாதங்களில்
எதிர்பார்க்கமுடியுமா? அதுவும் இதைப் பற்றி பேசிதான் அப்பள்ளியைத்
தேர்ந்தெடுத்திருந்தோம்!!!
இப்பொழுதும்
முழுவதும் ஓயவில்லை...அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு பள்ளி சேர்த்துக்
கொள்ளுமா? எத்தனை தடவை பள்ளி மாறுவது? எவ்வளவு பணம் அழுவது?? இப்படி
எல்லாம் பல குழப்பங்கள்!
அவ்வளவு தூரம் சென்று வந்து, வீட்டுப்பாடம் முடித்து, அதிகமாக ஹிந்தியைக் கற்று விளையாட்டா என்றும் கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது...
சில
நாட்கள் படித்தது போதும், விளையாடட்டும் என்று சிறிதுநேரம்
விட்டுவிடுவேன்..ஆனால் அதற்கும் தெம்பு இல்லை...பள்ளி அருகில் இருந்தால்
இரு வேளையும் சேர்த்து இரண்டு மணி நேரம் பிரயாணம் செய்யும் நேரம்
மிச்சமாகும், சோர்வாகுதலும் குறையும்..ஆனால் அதற்கு நான் என்ன
செய்வது??????
இதற்கு என்ன தீர்வாக இருக்க முடியும்?
ஒரு பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பள்ளிகள் கண்டிப்பாக இடமளிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்க வேண்டுமோ?
அருகில் பள்ளிகள் இருந்தும் அவை சேர்த்துக் கொள்ளாததால் தூரத்தில் விட்டுவிட்டுத் தடுமாறும் பெற்றோர் எத்தனைபேரோ? நாங்கள் இடையில் வந்ததனால் மட்டும் இல்லை, இங்கு இருப்போருக்கே காரணம்
சொல்லாமல் பள்ளிகள் சேர்த்துக் கொள்வதில்லை...அவர்கள் என்ன செய்வது?
அருகிருக்கும் பள்ளிகளுக்கு சேர்க்கை பாரங்கள் கொடுத்துவிட்டு, சேர்க்கைப்
பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் யாரையும் கேட்க முடியாது. ஏன் இந்த நிலை?
சிறியவனை
இன்னுமொரு மாதம் காத்திருந்து அருகிருக்கும் ஒரு மழலைப் பள்ளியிலேயே LKG
சேர்த்துவிட்டோம்..அதற்கும் அருகிருக்கும் பல பள்ளிகள்
இடமளிக்கவில்லை...ஆனால் மூத்தவனின் பெரிய வகுப்பிற்கு என்னால் ஏதும் செய்ய
இயலவில்லை...
எப்படி விளையாட துள்ளி
பள்ளி இருக்கேத் தள்ளி
விளையாட்டைத் தூரத் தள்ளி
பலபாடம் உள்ளே தள்ளி
நான் எப்படி விளையாட துள்ளி
பள்ளி இருக்கேத் தள்ளி
தமிழ் மீது மிக்க ஆர்வமுடைய கிரேஸ், தேன் மதுரத் தமிழ் தளத்தில் கவிதைகளும் கதைகளும் எழுதி வருகிறார். ஐங்குறுநூற்றுப் பாடல்களுக்கு அவர் கொடுக்கும் எளிய விளக்கங்கள் சங்க இலக்கியங்கள் மீது நமது ஆர்வத்தைத் தூண்டும் என்பதை மறுக்க முடியாது. ஆத்திச்சூட்டியை எளிய கதைகள் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறார்.