Tuesday, June 29, 2010

ரப்பர் பாண்ட் போட்

கடந்த சனி அன்று நல்ல அலைச்ச‌ல். மாலை வீட்டிற்கு வ‌ந்தப் பின் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்பாவும் தீஷுவும் தான். முதலில் சில புத்தகம் வாசித்தனர்.

பின்பு திடீரென்று அப்பாவுக்கு ரப்பர் பாண்ட் பவர்டு போட் (rubber band powered boat) செய்யும் ஆசை வந்து விட்டது. இருவருமாக சேர்ந்து யூ டியூபில் சில வீடியோக்கள் பார்த்தனர். அவர்கள் செய்த போட் இங்கே.


ஒரு அட்டையில் சதுரமாக வெட்டி கொண்டனர். பின்பு இரு ஓரங்கள் முக்கோணங்கள் வெட்டி வீடு வடிவத்திற்கு வெட்டினர். பின்பு அடி பகுதியில் ஒரு சதுரம் வெட்டி, ஒரங்களை இணைத்து ரப்பர் பாண்ட் மாட்டி விட்டனர்.




வெட்டின சதுரத்தை எடுத்து, மேலும் ஒரங்களில் வெட்டி, அதை சற்று சிறிதாக்கினர். பின் அந்த சதுரத்தை, அதை வெட்டி எடுத்த பகுதியில் மாட்டியிருந்த ரப்பர் பாண்டில் சுற்றித் தரையில் விட்டால் போட் நன்றாக ஓடியது.




தண்ணீரில் விட்டாலும் நன்றாக சென்றது. ஆனால் அட்டை தண்ணீரை உரிந்து விட்டது. அதனால் மீண்டும் அதைப் போல் தெர்மோக்கோலில் செய்தார்கள். அது நன்றாகச் சென்றது. அதை வீடியோ எடுத்த‌து ம‌ட்டும் என் வேலை.



தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது.

Monday, June 28, 2010

சிக்க‌(ல்) தீர்

சில மணி நேரங்கள் செலவழித்து ஆக்டிவிட்டீஸ் தயாரித்து தீஷுவிடம் எடுத்துச் சென்றால் அவளுக்குப் பிடிக்காது. நாம் செலவழித்த நேரம் கூட அவள் உபயோகப்படுத்த மாட்டாள். சிலவற்றுக்கு நம் நேரம் ஒரு விநாடி கூட செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் தீஷுவால் திரும்ப திரும்ப விளையாடப்படும். அப்படி ஒன்று இது.

என் ஆபிஸிற்கு தினமும் முக்கால் மணி முதல் ஒரு மணி வரை பயணம் செய்ய வேண்டும். அந்தப் பொழுது புத்தகம் வாசிப்பதிலும் பாட்டு கேட்பதிலும் கழியும். ஒரு முறை என் ஹெட்போன் வயரில் சிக்கு விழுந்து விட்டது. ம‌துரையில் சிக்கு என்று சொல்லுவோம். ச‌ரியான‌ த‌மிழ் வார்த்தை தானா என்று தெரிய‌வில்லை. இதை எடுப்பதற்கு எனக்குக் கிட்டத்தட்ட 10 நிமிடம் ஆனது. அப்பொழுது தோன்றியது தான் இந்த யோசனை.



ஹெட்போன் வயரில் சிக்கு எடுப்பது. பார்க்க எளிமையாகத் தோன்றும். ஆனால் சற்று பொறுமையாக ஒவ்வொரு வயராக எடுத்து அவிழ்க்க வேண்டும். இது கை கண் ஒருங்கிணைப்புக்கு ஏற்றது. தீஷுவிற்கு மிகவும் பிடித்து விட்டது. திரும்ப திரும்ப விளையாண்டு கொண்டிருக்கிறாள். நாங்கள் இப்பொழுது அவிழ்ப்பதற்காக உட்கார்ந்து சிக்கு உண்டாக்க வேண்டியிருக்கிறது.

Sunday, June 27, 2010

Classics

என‌க்குக் குழ‌ந்தைப் ப‌ருவ‌த்தில் மெம‌ரி கேம் (Memory game) மிக‌வும் இஷ்ட‌ம். த‌னியாக‌ இருந்தாலும் சீட்டுக் கட்டு (playing cards) வைத்து விளையாண்டு கொண்டு இருப்பேன். தீஷுவிற்கு மெம‌ரி கேம் ஏனோ இவ்வ‌ள‌வு நாள் சொல்லிக் கொடுத்த‌தில்லை. ஒரு முறை வெகு நாட்க‌ளுக்கு முன் சொல்லிக் கொடுக்க‌ முய‌ற்சித்த‌ ஞாப‌க‌ம். அவ‌ளுக்குப் புரிய‌வில்லை என்று நினைக்கிறேன். சரியாக‌ நினைவில்லை. இந்த‌ வார‌ம் சொல்லிக் கொடுத்தேன். முத‌லில் 2 ஜோடிக‌ள் எடுத்துக் கொண்டு விளையாண்டோம். இப்பொழுது 10 ஜோடிக‌ள் வ‌ரை விளையாடுகிறாள்.அத‌ற்கு மேல் நான் முய‌ற்சிக்க‌வில்லை. நான் சில விஷ‌ய‌ங்க‌ளை ஞாப‌க‌ப்ப‌டுத்திக்கொண்டே இருக்க‌ வேண்டியிருந்த‌து. சில‌ ப‌ட‌ங்க‌ள் அவ‌ள் ஞாப‌க‌த்தில் இருந்தால், அவ‌ற்றை அவ‌ள் திரும்ப‌ திரும்பி பார்க்க‌ வேண்டிய‌தில்லை போன்றவை. அவ‌ளுக்கு நான் வெற்றி பெற்றால் பிடிப்ப‌தில்லை. வெற்றி தோல்வி ப‌ழ‌க்குவ‌த‌ற்கு இது போன்ற‌ விளையாட்டுக‌ள் உத‌வுகின்ற‌ன‌.

தீஷு விளையாடும் ம‌ற்றுமொரு விளையாட்டு ‍tic tac toe. டிக் டாக் டோ என்று சொன்ன‌வுட‌ன், இது என்ன‌ பேரு என்றாள். ஆர‌ம்பித்த‌ பொழுது முத‌ல் ப‌டியாக‌ நான் என‌து மூன்று காய்க‌ளையும் வைத்து விட்டேன். எந்த‌ வ‌ரிசையில் வைத்தால் அவ‌ளால் மூன்று காய்க‌ளை ஒரே வ‌ரிசையில் வைக்க‌ முடியுமோ, அந்த‌ வ‌ரிசையைத் தேர்ந்தெடுத்து அவ‌ள் வைக்க‌ வேண்டும். அதை நன்றாக‌ச் செய்ய‌ப் ப‌ழ‌கியவுட‌ன், நானும் அவளும் முறை எடுத்து காய்க‌ள் வைத்தோம். அவ‌ள் ஒரு வ‌ரிசையை நிர‌ப்ப வேண்டும் என்று காயை வைக்க‌, நான் அவ‌ள் வ‌ரிசையை நிர‌ப்ப விடாம‌ல் த‌டுத்து என் காயை வைத்தால், அவள் த‌ன் அடுத்த‌ காயை வேறு வ‌ரிசையை நிர‌ப்பும் ப‌டி வைக்க‌ வேண்டும். புரிந்து கொண்டாள். நன்றாக‌ விளையாடுகிறாள்.

இவை இர‌ண்டும் த‌விர‌, அடுத்து சிறிய‌ அள‌வில் சுடோகு சொல்லிக் கொடுக்க‌லாம் என்று நினைத்திருக்கிறேன். அது த‌விர‌ அவ‌ள் வ‌ய‌துக்கு ஏற்ற‌ வேறு விளையாட்டுக‌ள் இருந்தால் சொல்லுங்க‌ளேன்.

Thursday, June 24, 2010

ஸில‌ப‌ஸ்

மாண்டிசோரியில் எனக்குப்பிடித்த முக்கிய விஷயம் - Follow the child. குழந்தை இயற்கையாகவே தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடனே இருக்கும். ஒரு விஷயத்தில் குழந்தைக்கு விருப்பம் இல்லையென்றால் - ஒன்று அந்த விஷயம் அதற்கு புரிந்து கொள்ள கடினமானதாக இருக்கும் அல்லது மிகவும் எளிமையானதாக இருக்கும். மாண்டிசோரி பள்ளியில் குழந்தைக்கு விருப்பமானதை பயில்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே ஸில‌ப‌ஸ் பின்பற்றப்படுவதில்லை.

தீஷுவின் பள்ளியில் தீஷுவின் இந்த வருட ஸில‌ப‌ஸை என்னிடம் கேட்டார்கள். தீஷுவிற்கு என்ன தெரியும், எதில் விருப்பம் போன்றவற்றைக் கொண்டு இதை நான் தயாரித்தேன். இதை முழுக்க முழுக்க 100% உபயோகப்படுத்த மாட்டார்கள். அவள் விருப்பத்திற்கு தகுந்தாற் போல் மாற்றப்படும்.

Monday, June 21, 2010

இயற்கை பெயிண்ட்

சமீபத்தில் சிவகாமியின் சபதம் மீண்டும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெண் ஒரு மாபெரும் அழிவிற்கு காரணம் என்ற சிவகாமியின் சபதத்தின் முடிச்சு என்னால் சற்று ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் கல்கியின் அருமையான நடைக்காக மீண்டும் ஒரு முறை வாசித்தேன். அதில் சிவகாமியின் தந்தை அஜந்தா ஒவியங்களில் உள்ளது போல மங்காத கலர் பூச்சுகள் செய்யும் செயல்முறைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு இருப்பார். வீட்டில் நானும் தீஷுவும் சேர்ந்து செய்வது போல ஏதாவது எளிதான வகையில் பெயிண்ட் செய்யலாமா என்று வலையில் தேடிய பொழுது நிறைய தகவலகள் கிடைத்தன. மைதா மாவு, ஃபுட் கலரிங் என்று பல வகை.

நான் மிகவும் எளிதான ஒன்றை தேர்ந்தெடுத்தேன்.

தேவையானவை:
1. புதினா
2. சாக்பீஸ்
3. தண்ணீர்

புதினாவை நன்றாக அரைத்துக் கொண்டோம். வேறு கலருக்குப் பூக்கள் எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் புதினா இருந்ததால் அதனை எடுத்துக் கொண்டோம்.



நன்கு அரைத்த புதினாவுடன், சாக்பீஸ் சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து, தண்ணீர் சேர்த்தால் பெயிண்ட் தயார்.



நல்ல கெட்டியானப்பதத்தில் தாளில் வரைய ஏதுவாக இருந்தது. சில கற்கள் எடுத்து வந்து அதிலும் கலர் செய்தோம். போன‌ஸ் - ‍புதினாவின் ம‌ண‌ம். அரைக்கும் பொழுதும் உப‌யோகிக்கும் பொழுதும் புதினாவின் ம‌ண‌ம் மூக்கைத்துளைத்த‌து.



தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அரைமணி நேரத்திற்கு மேலாக செய்து கொண்டிருந்தாள்.

Sunday, June 20, 2010

அப்பா day

நான்: "அப்பா வ‌ர்‌ற மாதிரி இருக்கு..."
தீஷு: "இவ்வ‌ள‌வு சீக்கிர‌ம் வ‌ர‌ மாட்டாரு.."

எதிர்பாராம‌ல் அப்பா வ‌ந்த‌வுட‌ன்,

"அப்பா உன‌க்குத்தான் நான் ஹார்ட்டு க‌ல‌ர் ப‌ண்ணிக்கிட்டு இருக்கேன். பாக்காதே.. போய் ஒளிஞ்சிக்கோ"

என்று தான் கலர் செய்துக் கொண்டிருந்த‌ காகித‌ குவிய‌லின் மேல் ப‌டுத்துக் கொண்டாள்.

ஞாயிறு காலை எப்பொழுதும் கிரிக்கெட் விளையாண்டு விட்டு ஒன்ப‌து ம‌ணிக்கு வ‌ரும் அப்பா, இரண்டு வாரத்திற்கு முன்னால் வந்த ஞாயிறு அன்று எட்ட‌ரைக்கு வ‌ந்த‌தால் தான் இந்த‌ கலாட்டா. அப்பா வ‌ருவ‌த‌ற்கு நேர‌ம் இருந்ததால் த‌ந்தைய‌ர் தின‌த்திற்காக‌ அவ‌ருக்காக‌ க‌ல‌ரிங் செய்து கொண்டிருந்தோம்.

க‌ட‌ந்த‌ இரு வ‌ருடங்க‌ள் செய்த‌வை இங்கும் இங்கும் இருக்கின்ற‌ன. இந்த‌ முறை மிக‌வும் எளிதாக‌ இருந்தால் தீஷுவே செய்து விடுவாள் என்று நினைத்து இதைத் தேர்ந்தெடுத்தேன். க‌ல‌ரிங் நானும் அவளுடன் சேர்ந்து செய்ய‌ வேண்டும் என்று சொல்லி விட்டாள். வெட்டுதல், ஓட்டைப் போடுதல், கோர்த்தல் என்று அனைத்து வேலையையும் நானே செய்த மாதிரி இருந்தது.




தீஷு அப்பாவிற்கு பாக்ஸில் வைத்து, கிஃப்ட் போல் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாள். பாதர்ஸ் டே என்று சொன்னாலும் , தந்தையர் தினம் என்று சொன்னாலும் கேட்காமல் தொடர்ந்து அப்பா டே என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். பரிசு அப்பாவிற்கும் பிடித்திருந்தது.

Thursday, June 17, 2010

கூட்ட‌லும் க‌ழித்த‌லும்

"ப‌ன்னிரெண்டிலிருந்து ப‌தினொன்று வ‌ர‌வேண்டுமென்றால் என்ன‌ செய்ய‌ வேண்டும்?" என்று அவ‌ள் பில்டிங் ப்ளாக்ஸ் வைத்து விளையாடும் பொழுது கேட்டேன். ஒன்றை எடுக்க‌ வேண்டும் என்றாள். க‌ழித்த‌ல் சொல்லித்த‌ர‌லாம் என்று தோன்றிய‌து .

பில்டிங் ப்ளாக்ஸ் வைத்தே சொல்லித்த‌ர‌லாம் என்று எடுத்துக் கொண்டேன். பில்டிங் ப்ளாக்ஸ் வைத்து முத‌லில் எண்க‌ள் வ‌ரிசையில் அடுக்கி உள்ளோம். க‌ழித்த‌ல் சொல்லித்த‌ரும் முன் அதே பில்டிங் பிளாக்ஸ் வைத்து கூட்ட‌ல் செய்தால் க‌ழித்த‌லுக்கும் கூட்ட‌லுக்கும் உள்ள‌ வித்தியாச‌ம் புரியும் என்று மூன்று கூட்ட‌ல் க‌ண‌க்கு எழுதினேன். கூட்ட‌ல் நன்றாக‌ செய்தாள்.




க‌ழித்த‌ல் க‌ண‌க்கு எழுதி மைன‌ஸ் குறி சொல்லிக் கொடுத்தேன்.அத‌ன் பின் 5 - 3 எழுதி ஐந்து பில்டிங் ப்ளாக்ஸிலிருந்து மூன்று எடுத்து, மீத‌ம் இர‌ண்டு என்று சொன்ன‌வுட‌ன் புரிந்த‌ மாதிரி தான் தெரிந்த‌து. அடுத்து 4 - 2 என்று எழுதிய‌வுட‌ன், இர‌ண்டு விடை வ‌ந்தவுட‌ன், க‌ண‌க்கிலிருந்த‌ இர‌ண்டும், விடையிலிருந்த‌ இர‌ண்டும் ஏதோ குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்தி விட்ட‌து. 6 - 1 க‌ண‌க்கை, ஒன்று வ‌ருவ‌த‌ற்கு என்ன‌ செய்ய‌ வேண்டும் என்று யோசிக்க‌த் தொட‌ங்கினாள். விடை ஒன்று வ‌ர‌ வேண்டாம், ஒன்றை எடுத்தால் போதும் என்று சொன்ன‌ப்பின்பும் புரிய‌வில்லை. திஷுவிட‌ம் இருக்கும் மிக‌ப் பெரிய‌ பிரச்சினை ‍ ஒன்று புரியாவிட்டால் எடுத்து வைத்து விடுவ‌து. போதும் என்று சொல்லி விட்டாள். நானும் சில நாட்க‌ள் க‌ழித்து முய‌ல‌லாம் என்று எடுத்து வைத்து விட்டேன்.

Wednesday, June 16, 2010

ப‌த்து

இது எண் ப‌த்தைப்(10) ப‌ற்றிய‌து

பத்து வரையுள்ள எண்களின் மதிப்பை கற்கள் மூலமாக கற்றோம். ஆனால் பத்திற்கு மேல் நூறு வரையிலான எண்களை பாசி மூலம் சொல்லிக் கொடுத்தேன். பாசி நன்றாக செய்தாள். ஆனால் நாங்கள் தொடரவில்லை. கோர்வையாக சொல்லித்தர வேண்டும் என்று நான் நினைப்பத்தோடு சரி.



இப்பொழுது ஒரு விளையாட்டு உருவாக்கி உள்ளேன்.


தாயக் கட்டைகளை உருட்டி, இதற்கு ஏற்ப சில காய்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். பத்து காய்கள் சேர்த்தவுடன், பத்தையும் கொடுத்து விட்டு,ஒரு பத்து காய்கள் கோர்த்ததை வாங்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு பத்து கோர்வை கிடைத்தவுடன் அதை ஒரு சதுரத்திற்கு (100) மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் நமது decimal systemமின் base 10 கருத்து புரியும் என்று நினைத்தேன்.



அரை இன்ச் * அரை இன்ச் சதுரங்கள் உருவாக்கிக் கொண்டேன். இது போல் பத்து செய்து கொண்டேன். அரை இன்ச் * 5 இன்ச் நீள செவ்வகமும் பத்து எடுத்துக் கொண்டேன். நூறுக்காக ஒரு 5 இன்ச் * 5 இன்ச் செவ்வகமும் செய்து கொண்டேன். காய்கள் நகராமல் இருப்பதற்காக அவற்றின் பின்னால் காந்தம் ஒட்டி விட்டேன்.

தாயக்கட்டைகள் உருட்டி, பத்து வரை விளையாண்டோம். அதற்கு மேல் அவளுக்கு விருப்பமிருக்கவில்லை.

ஆகையால் சற்றே விளையாட்டை மாற்றி விட்டேன். நம்பர் ஃப்ளாஷ் கார்டை எடுத்து, அந்த நம்பருக்கு ஏற்ப காய்கள் வைத்து odd, even கண்டுபிடிக்க வேண்டும். இரண்டு இலக்க எண்களில், இரண்டு எண்களையும் தனித்தனியாக எடுத்து ஆட் அல்லது ஈவன் என்று கண்டுபிடிக்கிறாள். 86, 68 போன்ற எண்களுக்குச் சொல்லத்தெரிகிறது. ஆனால் 96, 47 போன்ற எண்களில் இரண்டும் இருப்பதால், அவளுக்குத் தெரியவில்லை. இந்த விளையாட்டு மூலம் இது புரியும் என்று நினைக்கிறேன்.

Tuesday, June 15, 2010

நூறில் க‌ண்டுபிடி



Hundred Board ஏற்கெனவே தீஷுவிற்கு பழக்கம். இன்னும் நூறு வ‌ரை அடுக்குவ‌த‌ற்கு ச‌ற்று சிர‌மப்ப‌டுகிறாள். ஆனால் அதை வைத்து நிறைய ஆக்டிவிட்டீஸ் செய்துள்ளோம். அதில் சில‌.

1. விளையாட்டு விதிப்ப‌டி ஹண்ரஃடு போர்டில் 1 முதல் 100 வரை எழுதியுள்ள காய்களை ஏற்கெனவே எழுதியிருக்கும் போர்டில் வைக்க வேண்டும். ஆனால் நான் சற்று வேறுபடுத்தி கண்ணாடி கற்களை ஒவ்வொரு கட்டத்திலும் வைக்கச் செய்தேன். ஒவ்வொரு முறை வைக்கும் பொழுதும் அந்த எண்ணை சொல்ல வேண்டும். கல்லை வைப்பதில் விரல்களுக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. காய்க‌ள் என்றால் சரியான எண்ணைப் பார்த்து எடுத்து வைக்க வேண்டும். ஆனால் கண்ணாடி கற்கள் வைக்கும் பொழுது எண்கள் பார்க்கும் பிரச்சினை இல்லையென்பதால் எளிதாக இருக்கிற‌து. அத‌னால் விருப்ப‌மாக‌ விளையாடுகிறாள். இடையில் நீ வை என்பாள், ஒரு க‌ல் வைத்த‌வுட‌ன் மீண்டும் அவ‌ள் செய்ய‌ ஆர‌ம்பித்துவிடுவாள்.

2. நாங்கள் ஹண்ரஃடு போர்டில் அடிக்கடி விளையாடும் இன்னொரு விளையாட்டு எண்கள் கண்டுபிடித்தல். 65 என்றவுடன் 61 இருக்கும் வரிசைக்குச் செல்ல வேண்டும் என்றும் இன்னும் 62, 63, 64 தாண்ட வேண்டும் என்று தெரிய வேண்டும்.

3. இதே போல் அருகிலுள்ள‌ ஜீரோ எண்ணை க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். உதார‌ண‌த்தில் அறுப‌தை ம‌றைத்து விட்டு ஐம்ப‌த்தைந்து என்று சொன்ன‌வுட‌ன் அறுப‌து என்று சொல்ல‌ வேண்டும். இதுவும் அவ‌ளுக்குப் பிடித்திருக்கிற‌து.

4. ம‌ற்றொமொன்று ஒரே ஒரு column ம‌ட்டும் தெரியும் ப‌டி இரு தாள்க‌ள் கொண்டு ம‌றைத்து வைத்து விடுவேன். அந்த‌ column மில் ஒரே ஒரு எண்ணை ம‌றைத்து விட்டு, அந்த‌ ஒரு எண்ணை க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு 79 எண்ணை மூடி விட்டு, இரு தாள்க‌ள் கொண்டு 9ம் colum த‌விர‌ ம‌ற்ற‌ அனைத்து column ம‌றைத்து விட்டேன். 9, 19, 29, 39 என்று வ‌ரிசையாக‌ சொல்லிக் கொண்டு வ‌ந்து 79 என்று க‌ண்டுபிடிக்க‌ வேண்டும்

Thursday, June 10, 2010

கவர்ந்த தருணங்கள் 11/06/2010

1. எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை. அப்பா கிரிக்கெட் பார்ப்பதற்கு எங்கள் வீட்டின் மேல் தளத்திலுள்ள அவர் பாட்டி வீட்டிற்கு செல்வார். அங்கு இரண்டரை வயது குட்டி இருக்கிறான். தீஷுவிற்கு எப்பொழுதும் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். என்னிடம் கேட்டாள். அப்பொழுது தான் அங்கிருந்து வந்திருந்ததால் அப்புறம் போகலாம் என்றேன். மெதுவாக அப்பாவிடம் சென்று
"அப்பா... வர்ரீயா. மேல போய் கிரிக்கெட் பார்ப்போம்"
"கிரிக்கெட் முடிஞ்சி போச்சி"
(ஆச்சரியத்துடன்) "அப்படியா!! எப்ப?"
"போன வாரம்"
(ஏமாற்றத்துடன்)"சரி"
அப்பாவை நேரடியாக கூப்பிடாமல் என்னவொரு வில்லத்தனம்??


2. என் அம்மா வந்திருக்கிறார்கள். தீஷுவும் அவள் தோழியும்
தோழி: "உங்க பாட்டியை share பண்றீயா?.. எங்க பாட்டி ஊர்ல இருக்காங்க"
தீஷு : "சரி"
என்னிடம் தோழி அம்மா சொன்னவுடன், தீஷுவிடம் நான்..
நான்:"Share பண்றேன் சொன்னீயா?"
தீஷு: "ஆமா.. அவளுக்கும் நாலு பேரு வேணுமில"
சினிமா வசனம் அவளுக்கு எப்படி தெரிந்தது என்று யோசிக்கும் பொழுதே, அப்பா, அம்மா, குழந்தை, பாட்டி என்று நான்கு பேர் வீட்டில் இருக்க வேண்டும் என சொல்கிறாள் என்று புரிந்து அதிர்ச்சி நீங்கினேன்.


3. தீஷுவும் அவ‌ள் தோழியும் டாக்ட‌ர் விளையாட்டு விளையாண்டு கொண்டிருந்த‌ன‌ர். ப‌க்க‌த்து வீட்டுப்பாட்டி தீஷுவிட‌ம்

"நீ பெரிய‌வ‌ளான‌வுட‌ன் என்ன‌ ஆவ‌?"
டாக்டர் ஆவேன் என்று சொல்லுவாள் என்று எதிர்பார்த்த‌வ‌ரிட‌ம், தீஷு
"நான் அம்மா ஆவேன்.. த‌ருண் அப்பா ஆவான்..ஏன்னா அவ‌ன் பாய்"


4. அப்பா தீஷுவிற்கு த‌ம்புசாமி என்று ஒரு ந‌கைச்சுவை க‌தை கூறினார். தீஷுவிற்கு அந்த‌க் க‌தை மிக‌வும் பிடித்துவிட்ட‌து. அவ‌ள் திரும்ப‌ திரும்ப‌ சொல்லிக் கொண்டிருந்தாள். தீடீரென்று,

"அப்பா நான் வ‌ம்புசாமி க‌தைச் சொல்ல‌வா?"
ச‌ரி என்ற‌வுட‌ன் த‌ம்புசாமி க‌தையில் த‌ம்புசாமி செய்த‌ அனைத்தையும் வ‌ம்புசாமி செய்தான்.
"என்ன‌டா, இது த‌ம்புசாமி க‌தை போல‌வே இருக்கு.."
"ஆமா.. வ‌ம்புசாமி த‌ம்புசாமியைப் பார்த்து காப்பி அடிச்சிட்டான். அது தான் அவ‌ன் போல‌வே செய்யிறான். "

Wednesday, June 9, 2010

போன மாச பிறந்த நாளைக்கு...

இந்த மாசம் பதிவு போடுகிற ஆள் நானாகத்தான் இருப்பேன். தீஷு தன் நான்காவது பிறந்த நாளை கடந்த மே எட்டாம் தேதி நிறைவு செய்தாள். பிறந்த நாள் அன்று பதியவேண்டும் என்று அவளுக்கு எழுதிய கடிதம் நிறைவு பெறாமல் இன்னும் draftடில் உள்ளது. கண்டிப்பா ஐந்தாவது பிறந்தநாள் முன்னாடி முடிச்சுடுவேனு நினைக்கிறேன்.

தீஷுவின் பிறந்த நாள் பரிசை ஒளித்து வைத்து, Treasure hunt போல் க்ளூ கொடுத்து கண்டுபிடிக்க வைத்தோம். தீஷுவிற்கு Fridge போன்ற வார்த்தைகள் வாசிக்கத்தெரியாது என்பதால், எங்கள் வீட்டிலுள்ள பொருட்களை படம் எடுத்து வைத்துக் கொண்டோம். க்ளூ படங்கள். ஒவ்வொரு படத்தையும் பார்த்து அதில் போய் அடுத்த க்ளூவைத்தேட வேண்டும்.

இந்த முறை பிறந்த நாள் விழாவிற்கான தீம் - Save Earth. எல்லா பிறந்த நாள் விழாவிலும் இருப்பது கேக், கோக், சிப்ஸ், சமோசா. இதில் தீஷு கேக் வேண்டும் என்று ஆசைப்பட்டதால் கேக் வாங்கினோம். உடம்பை கெடுக்கும் சிப்ஸ், சமோசா பதில் என்ன வாங்கலாம் என்று யோசித்த பொழுது தோன்றியது சுண்டல். கொண்டை கடலை சுண்டல் - முழுவதும் protein. நம் நாட்டு வளத்தை எடுத்து நம் உடம்புக்கே கெடுத்தல் செய்யும் கோக்கிற்கு பதில் யோசித்த பொழுது என் சாய்ஸ் கேப்பை கூழ். ஆனால் இதில் அப்பாவிற்கு விருப்பம் இருக்கவில்லை. அடுத்து இளநீர் என்றவுடன், விழாவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் சென்று வாங்க வேண்டும் போன்றவை இடித்தன. அதனால் ஜுஸ் வாங்கினோம்.

மரத்தை வெட்டுவதைக்குறைக்க பேப்பர் கப், பேப்பர் பிளேட் வாங்ககூடாது என்று முடிவு செய்து கொண்டோம். அதற்கு பதில் மண் டம்ளர், மண் தட்டு. விழாவிற்கு வருகின்ற அனைவரும் பயன்படுத்தியப்பின் அவர்கள் டம்ளரையும், தட்டையும் அவர்கள் வீட்டிற்கே எடுத்துச் சென்றால், திரும்ப திரும்ப உபயோகித்துக்கொள்ளலாம் என்று அதன் படி செய்தோம்.

வரும் குழந்தைக்களுக்கு மரக்கன்று கொடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் வாங்க முடியவில்லை. அதனால் மண் உண்டியல் வாங்கினோம். இங்கும் - நோ பிளாஸ்டிக்.

மண் டம்ளரில் ஜுஸ்ஸும், மண் தட்டில் சுண்டலும் கேக்கும் என விழா நன்றாகவே இருந்தது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost