Monday, August 31, 2009

குடும்ப‌த்துட‌ன் இணை

தீஷு எப்பொழுது உருவ‌ங்க‌ள் வ‌ரைந்தாலும் மூன்று வ‌ரைகிறாள். பெரிய‌து அப்பா, ச‌ற்று சிறிய‌து அம்மா, குட்டி பாப்பா.

மாண்டிசோரி ஆக்டிவிட்டீஸ் ப‌ற்றித் தெரிந்து கொள்ள‌வும் ம‌ற்றும் சில‌ மாண்டிசோரி பொருட்க‌ள் வாங்க‌வும் ந‌ல்லதொரு இட‌ம் இந்த‌ த‌ள‌ம். நான் அடிக்க‌டி இந்த‌ த‌ள‌த்தை ஐடியாக‌ளுக்காக‌ப் பார்வையிடுவேன். த‌ள‌த்தில் க‌ர‌டி, சிங்க‌ம், வாத்து ம‌ற்றும் குர‌ங்கு குடும்ப‌த்தை இணைக்கும் இந்த‌ ஆக்டிவிட்டியைப் பார்த்த‌வுட‌ன், தீஷுவிற்கு பிடிக்கும் என‌ பிரிண்ட‌ அவுட் எடுத்துக் கொண்டேன்.


ஒவ்வொரு ப‌ட‌த்தையும் வெட்டி, க‌லைத்துக் கொள்ள‌ வேண்டும். முத‌ல் ப‌ட‌த்தை எடுத்து சிங்க‌ம் என்று சொல்லி வைத்து விட்டேன். அடுத்த‌ ப‌ட‌த்தை எடுத்து குர‌ங்கு, சிங்க‌ம் இல்லை என்று சொல்லி சிங்க‌த்திற்கு கீழே வைத்துவிட்டேன். அடுத்து ம‌ற்றுமொரு சிங்க‌த்தை எடுத்து, சிங்க‌ம் என்று சொல்லி சிங்க‌த்திற்கு அருகில் வைத்துவிட்டேன். இட‌மிருந்து வ‌ல‌மாக‌ வைத்தால் க‌ண்க‌ளை இட‌மிருந்து வ‌ல‌ம் ந‌க‌ர்த்தும் ப‌யிற்சியாக‌வும் இருக்கும். தீஷு எளிதாக‌ச் செய்வாள் என்று நினைத்தேன். ஆனால் அவ‌ளுக்குக் க‌டின‌மான‌தாக‌ இருந்த‌து. சிங்க‌த்தைப் பார்த்து புலி என்றாள் (ஏன் என்று புரிய‌வில்லை). க‌ர‌டியை குர‌ங்கு என்றாள். க‌ருப்பு வெள்ளையில் பிரிண்ட் அவுட் எடுத்திருந்தேன். அது தான் கார‌ண‌மா இல்லை அப்பா, அம்மா, குட்டி போன்ற‌வ‌ற்றின் முக‌ அமைப்பு மாற்றங்க‌ள் குழ‌ப்ப‌மா என்று தெரிய‌வில்லை. சிங்க‌ம் முதலில் இருந்தாலும், ம‌ற்றொருமொரு சிங்க‌த்தை அருகில் வைக்காம‌ல் கீழே வைத்தாள். அவ‌ளுக்குச் செய்வ‌த‌ற்கு விருப்ப‌மில்லையா என்றும் தெரிய‌வில்லை. சிறிது நாட்க‌ள் க‌ழித்து முய‌ல‌ வேண்டும் என்ற‌ லிஸ்ட்டில் இதுவும் சேர்ந்துவிட்ட‌து.

Family Night

க‌ட‌ந்த‌ வார இறுதியில் ம‌ழை பெய்வ‌து போல் இருந்த‌தால் வெளியே போக‌ முடிய‌வில்லை. அத‌னால் அந்த‌ ச‌னி இர‌வை ஃபாம‌லி இர‌வாக‌ மாற்றிவிட்டோம். தீஷுவும் அப்பாவும் பேப்ப‌ர் கிண்ண‌ம் செய்தார்க‌ள். ஐடியா நெட்டிலிருந்து எடுத்த‌து. பேப்ப‌ரை சிறிது சிறிதாக‌ கிழித்துக் கொள்ள‌ வேண்டும். ஒரு கிண்ண‌த்தில் பாலித்தீன் க‌வ‌ர் சுற்ற வேண்டும். பின்பு கிழித்த‌ப் பேப்ப‌ரில் க‌ம் த‌ட‌வி பாலித்தீன் க‌வ‌ர் மேல் தீஷு ஒட்டிக் கொண்டே வ‌ந்தாள். கிண்ண‌த்தைச் சுற்றி ஒட்டி முடித்த‌வுட‌ன், காய‌ வைக்க‌ வேண்டும். ம‌றுநாள் காய்ந்த‌வுட‌ன் மெதுவாக‌ கிண்ண‌திலிருந்து பேப்ப‌ரை எடுத்தால் பேப்பர் கிண்ண‌ம் வ‌ந்துவிடும். தீஷு அதை வைத்து த‌ன் டாலுக்குச் சாத‌ம் ஊட்டிக் கொண்டிருந்தாள்.



100 பீஸ் ப‌ஸில் தீஷு பின்னாளில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌வ‌த‌ற்காக‌ வாங்கிய‌து இருந்த‌து. மூவ‌ருமாக‌ சேர்த்தோம். அப்பா கீழிருந்து செய்தார். தீஷுவும் நானும் மேல் ப‌குதி செய்தோம். ஒர‌ள‌வு முடித்த‌வுட‌ன் இணைத்துவிட்டோம். கீழ் பகுதி முழுவ‌தும் கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரே மாதிரி இருந்த‌தால் அப்பாவுக்கு நேர‌ம் எடுத்த‌து. தீஷு அடிக்க‌டி "அப்பா பாரு.. நாங்க‌ எவ்வ‌ள‌வு பெரிசா பண்ணிட்டோமினு" என்று சொல்லிக் க‌டுப்ப‌டித்துக் கொண்டேயிருந்தாள். நாங்க‌ள் மூவ‌ரும் செய்ய‌ அரைம‌ணி நேர‌மான‌து. ந‌ல்ல‌தொரு மாலை பொழுது.

Sunday, August 30, 2009

வெளிநாட்டுப் பிரஜை ப‌திவு செய்ய‌

வெளிநாட்டுப் பிரஜைக‌ள் ந‌ம் நாட்டிற்கு எந்த‌ விசாவில் வ‌ந்தாலும் ஆறு மாத‌ங்க‌ளுக்கு மேல் த‌ங்க‌ வேண்டும் என்றால் வ‌சிக்கும் ந‌க‌ர‌த்திலுள்ள‌ Foreigner Registration Officer (FRO) விட‌ம் 180 நாட்க‌ளுக்குள் ரிஜிஸ்ட‌ர் செய்து கொள்ள‌ வேண்டும். 16 வ‌ய‌திற்குற்பட்ட‌ குழ‌ந்தைக‌ள் ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டாம் என்று இமிகிரேஷ‌ன் ஃபாமில் இருந்த‌தால் நாங்க‌ள் தீஷுவை ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டாம் என்று நினைந்திருந்தோம். இந்தியா வ‌ந்து 180 முடிய‌யிருந்த‌ நிலையில் சென்ற‌ வார‌ம் ஒரு நாள் என‌க்குத் தீடீரென்று உறுதிப‌டுத்திக் கொள்ள‌லாம் என்று தோன்றிய‌து. பெங்க‌ளூரில் இன்ஃபான்ட்டிரி
ரோட்டிலுள்ள‌ க‌மிஷி‌ன‌ர் ஆபிஸில் FRO உள்ளார். ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டுமா ம‌ற்றும் ச‌னிக்கிழ‌மை வேலை செய்கிறார்க‌ளா என்று கேட்க‌ போன் செய்தேன். போன் எடுக்க‌ மாட்டார்க‌ள் என்று நினைத்த‌ற்கு மாறாக‌ போனை எடுத்த‌தும் அதிர்ச்சி என‌க்கு. ச‌னி வேலை செய்கிறாக‌ள் என்றும் குழ‌ந்தைக‌ளையும் ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ வேண்டும் என்ற‌வுட‌ன் ச‌னி அன்று தீஷுவை அழைத்துக் கொண்டு சென்றோம்.

சிவாஜி ந‌க‌ரில் அனைத்து ரோடுக‌ளும் ஒன்வேயாக‌ இருந்த‌தால் அங்கேயே அரை ம‌ணி நேர‌ம் சுற்றிச்சுற்றி வ‌ந்தோம். க‌டைசியில் க‌ண்டுபிடித்து உள்ளே நுழையும் பொழுது உள்ளே பார்க்கிங் செய்ய‌ முடியாது வெளியில் செய்து விட்டு வாருங்க‌ள் என்ற‌வுட‌ன் எங்கு செல்வ‌து என்று அய‌ர்ச்சி. இன்ஃபான்ட்டிரி ரோடில் பார்க்கிங்கா என்று நினைத்துக் கொண்டே சென்று ஒரு ஆஸ்ப‌த்திரி அருகில் பார்க் செய்து (செய்ய‌லாமா என்று தெரியாது)விட்டு வ‌ந்தார். ஆனால் ஆபிஸில் அனைவ‌ரும் ந‌ன்றாக‌ப் பேசவும், உத‌வும் செய்த‌ன‌ர். எல்லா டாகுமென்ட்டுக‌ளையும் ச‌ரி பார்த்து, கையெழுத்து வாங்கி, இன்னொரு க‌வுன்ட‌ரில் கொடுக்க‌ அரை ம‌ணி நேர‌மே ஆனது. அதிலும் க‌வ‌ர்மென்ட் ஆபிஸில் ல‌ஞ்ச‌ம் இல்லாம‌ல். பெங்க‌ளூரில் எந்த‌ ஆபிஸிலும் நாங்க‌ள் ல‌ஞ்ச‌ம் கொடுத்த‌தில்லை. ரேஷ‌ன் கார்டு‌, டிரைவிங் லைச‌ன்ஸ் போன்ற‌வை ம‌துரையில் ல‌ஞ்ச‌ம் இல்லாம‌ல் முடியுமா என்று தெரியாது.ஆனால் இங்கு ஐம்ப‌து ரூபாய் (அர‌சாங்க‌ம் நிர்ண‌ய‌ம் செய்த‌து) செல‌வில் ரேஷ‌ன் கார்டு‌ வாங்கினோம். வெளிநாட்டின‌ரிட‌ம் ல‌ஞ்ச‌ம் வாங்கி ந‌ம் நாட்டு மான‌த்தை வாங்காத‌தில் எங்க‌ளுக்குச் ச‌ந்தோஷ‌ம்.

ரிஜிஸ்ட‌ர் செய்ய‌ தேவையான‌வை :

1. குழ‌ந்தையின் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - ‍‍ 2
2. விசா ஜெராக்ஸ் ‍- 2
3. இமிகிரேஷ‌ன் ஸீலுள்ள‌ ப‌க்க‌ம் ஜெராக்ஸ் -‍ 2
4. த‌ந்தை பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - 2
5. தாய் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் - 2
6. நாம் குழ‌ந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் த‌குதியுடையவ‌ர்க‌ள் (கொடுமை) என்ப‌த‌ற்குச் சான்றாக‌ நோட்ட‌ரியிட‌ம் கையெழுத்து வாங்கிய‌ 20 ரூபாய் ப‌த்திர‌ம் ம‌ற்றும் அத‌ன் ஜெராக்ஸ்
7. விலாச‌ம் சான்று

க‌ர்நாட‌க‌ வ‌லைத‌ள‌ம் :

http://www.ksp.gov.in/pages/foreigner/foreigners-registration-office-fro/
http://www.ksp.gov.in/pages/foreigner/registration-procedure

Wednesday, August 26, 2009

cuh-auh-tuh..

இரும‌ல் அதிக‌மாக‌ இல்லாம‌ல் இருந்த‌தால் தீஷுவை திங்க‌ள் அன்று ப‌ள்ளிக்கு அனுப்பிவிட்டோம். ப‌ள்ளியிலிருந்து என் க‌ண‌வ‌ரை அழைத்து, தீஷுவிற்கு காய்ச்ச‌ல் இருப்ப‌தால் என்ன‌ ம‌ருந்து கொடுக்க‌ என்று கேட்டுயிருக்கிறார்க‌ள். அடித்துப்பிடித்து நாங்க‌ள் இருவ‌ரும் சீக்கிர‌ம் கிள‌ம்பி வீட்டிற்குச் சென்று, டாக்ட‌ரிட‌ம் அழைத்துச் சென்றோம். ம‌ருந்து கொடுத்து மூன்று நாட்க‌ளுக்கு மேல் காய்ச்ச‌ல் இருந்தால் மீண்டும் அழைத்து வ‌ர‌ச் சொன்னார். செவ்வாய் விடுமுறை எடுத்து விட்டேன். புத‌ன் அன்றும் மூன்று ம‌ணி நேர‌ம் ம‌ட்டும் சென்று வ‌ந்தேன். இன்று கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லை. ப‌ள்ளிக்குச் சென்று இருக்கிறாள்.

செவ்வாய் மாலை எங்க‌ள் இருவ‌ருக்கும் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் வ‌ரை ஆக்டிவிட்டீஸுக்குக் கிடைத்த‌து. நான் செய்ய‌ வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தீஷுவிற்கு பொழுது போக‌வில்லையென்ற‌வுட‌ன் ஏதாவ‌து ஆக்டிவிட்டீஸ் செய்ய‌லாம் என்றாள். ச‌ரி என்று ஆர‌ம்பித்தோம். இது முன்ன‌மே செய்த‌து. CAT,DOG, போன்ற‌ மூன்று எழுத்து ப‌ட‌ங்க‌ளை எடுத்துக் கொண்டோம். "Give me a picture with CUH-AUH-TUH" என்று சொன்னேன். நான் சொல்வ‌தைப்புரிந்து கொண்டு அந்த‌ ப‌ட‌த்தை எடுத்துத்த‌ர‌ வேண்டும். இது வாசிப்ப‌‌த‌ற்குத் தேவையான‌ blending க‌ற்றுத்த‌ருகிற‌து. தீஷு இந்த‌ முறை ச‌ரியாக‌வும் விருப்ப‌மாக‌வும் செய்தாள். மீண்டும் மீண்டும் வேறு வேறு ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் முய‌ற்சித்துக் கொண்டுயிருந்தோம்.

Sorting தீஷுவிற்கு பிடித்த‌ ஒன்று. இந்த‌ முறை category sorting . முத‌லில் மூன்று பொம்மை காரும், மூன்று பொம்மை நாற்காலிக‌ளும் எடுத்துக் கொண்டோம். முத‌லில் காரை எடுத்துக் காண்பித்து "This is a car" என்று சொல்லி த‌னியே வைத்தேன். அடுத்து "This is a chair...Not a car" என்று சொல்லி ச‌ற்றுத்தள்ளி வைத்தேன். மீண்டும் ஒரு நாற்காலி எடுத்து, "This is a chair" என்று சொல்லி அவ‌ள் ப‌திலுக்குக் காத்திருந்தேன். அவ‌ள் காட்டிய‌வுட‌ன் அந்த‌ பிரிவில் வைத்தேன். இது புரிந்த‌வுட‌ன் மீண்டும் மூன்று ம‌னித‌ பொம்மைக‌ளையும், மூன்று வில‌ங்கு பொம்மைக‌ளையும் சேர்த்து "Chair", "Car", "Human being", "Animal" என்று பிரித்தோம்.

Sunday, August 23, 2009

எப்படியோ சமாளிக்கிறோம்...

வேலைக்குச் செல்ல ஆரம்பித்து நான்கு வாரங்கள் முடிந்து விட்டன. நான்கு வாரத்தில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். தீஷு உதவியாளருடன் பழகிவிட்டாள். இது நாள் வரை அவர் லீவு எடுக்கவில்லை. Touch wood. தினமும் காலையில் என்னை ஸ்டாப்பில் இறக்கி விட்டு, கணவர் தீஷுவை பள்ளியில் விட்டுவிடுவார். பின் தீஷு 1:30 மணி அளவில் வீட்டிற்கு வேனில் வரும் பொழுது உதவியாளர் வந்துவிடுவார். பின் அவர் நான் வரும் வரை தீஷுவைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த 20 வேலை நாட்களில், 4 நாட்கள் நான் டிரெயினிங்காக காலையில் சீக்கிரம் செல்ல வேண்டியிருந்தது. பாவம் அப்பா.. தனியே தீஷுவை ரெடியாக்கி (அவளை பள்ளிக்குக் கிளப்புவது தான் காலையில் பெரிய வேலை) பள்ளியில் விட்டுவிட்டார். அவருக்கு இரண்டு நாள் டிரெயினிங். எனக்கு அதே கஷ்டம். நான்கு நாட்கள் தீஷுவிற்கு பள்ளி விடுமுறை (கிருஷ்ண ஜெயந்தி, வர லெட்சுமி, சுதந்திர தினம் மற்றும் ஒரு நாள் பன்றி காய்ச்சல் பயத்தில் நான் அனுப்பவில்லை). உதவியாளர் வேறு வீட்டில் காலையில் வேலை பார்ப்பதால் காலையில் வர முடியாது. நான்கு நாட்களும் உதவியாளரை 12 மணி அளவில் வரச் சொல்லி, அது வரை கணவர் தீஷுவைப் பார்த்துக் கொண்டார். அதில் அவருக்கு ஆடிட் பிரச்சனை வேறு. எப்படியோ நாட்களைத் தள்ளி விட்டோம்.

எங்கள் ஆக்டிவிட்டீஸ் பொருத்தவரை தினமும் அரை மணி நேரம் வரை செலவிட முடிகிறது. ஆனால் எனக்கு prepare பண்ண அதிக நேரம் கிடைப்பதில்லை.

இன்று தீஷுவிற்கு கடுமையான ஜலதோஷம். நாளை திங்கட்கிழமை பள்ளிக்கு அனுப்பமுடியாது. நான் உதவியாளர் வரும் வரை இருக்கவேண்டும் என நினைக்கிறேன். வீட்டில் பெரியவர்கள் இல்லாமல் தீஷுவைப்பார்த்துக் கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று இன்னும் பயம் இருக்கிறது. தீஷுவால் பிரச்சனை இல்லை. ஆனால் சூழ்நிலை சதி செய்கிறது. சமாளித்துக் கொள்ளலாம் என்ற சிறு நம்பிக்கையும் மனதில் உள்ளது. பார்ப்போம்.

Saturday, August 22, 2009

உப்புத்தாள் உலக உருண்டை



தண்ணீரை டிராப்பர் (மருந்து தர பயன்படுத்துவது) உபயோகித்து மாற்றுவது (Transfer). இதைச் சில நாட்களாகச் செய்து கொண்டிருக்கிறோம். முதலில் தீஷுவிற்கு கஷ்டமாக இருந்தாலும் இப்பொழுது வெகு எளிதாகச் செய்கிறாள். மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது நான் சொல்லாமலே தரையில் சிந்தியிருக்கும் தண்ணீரை துடைத்து விடுவது. முதல் நாள் மாப்பை எடுக்கும் பொழுது அவள் சொன்னது "I spilled water.. cleaning.."

மாண்டிசோரியின் முக்கிய பிரிவுகள் : Practical life, Sensorial, English, Maths, Science, Geography (culture). எப்பொழுதும் நாங்கள் செய்வது Practical or Sensorial தான். ஆங்கிலமும், கணிதமும் எப்பொழுதாதவது செய்வோம். அறிவியலும் புவியியலும் தீஷுவிற்கு மூன்று வயதானப்பின் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். இப்பொழுது செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.

புவியியலுக்குக் கண்டங்களிலிருந்து (continents) ஆரம்பித்தோம். தீஷுவிற்கு ஏழு கண்டங்கள் பெயர் தெரியும். ஆனால் அவை எங்கிருக்கின்றன எனத் தெரியாது. கற்றுத்தர மாண்டிசோரி உப்புத்தாள் உலக உருண்டை சரியானதாக இருக்கும் எனத் தோன்றியது. Sand paper globe என்பது சாதாரண உலக உருண்டையில் கண்டங்கள் மட்டும் உப்புத்தாளில் இருக்கும். தண்ணீர் பகுதி ஊதா நிறத்தில் இருக்கும். தடவி பார்த்து கண்டங்களின் வடிவங்கள் மூலம் கண்டங்கள் கற்றுக் கொள்ளலாம். நான் Sand paper globeற்குப் பதில் Sandpaper map செய்துள்ளேன். உலக வரைபடத்தை எடுத்து, கண்டங்கள் பகுதியில் மட்டும் உப்புத்தாளால் ஒட்டி விட்டேன்.




கண்டங்களை தடவிக் காட்டி அதன் பெயர்களைச் சொன்னேன். பின்பு தீஷுவிடம் பெயரைச் சொல்லி எங்கிருக்கிறது என்றேன். அதில் தப்புக்கள் வருவதால் மீண்டும் சில நாட்கள் கழித்து முயல வேண்டும்.

Friday, August 14, 2009

சுதந்திர தின வாழ்த்துகள்

தீஷு இந்தியாவில் கொண்டாடும் முதல் சுதந்திர தினம். காலையில் எழுந்தவுடனே தீஷுவும் அவள் அப்பாவும் அப்பார்ட்மென்ட் கொடி ஏற்றத்திற்குச் சென்று விட்டனர். கொடி ஏற்றத்திற்குப் பின், அனைவரும் "பாரத் மாத்தாக்கி ஜே" என்று கூறிக்கொண்டே சுற்றி வந்தனர். கொடியையும் மிட்டாயையும் வாங்கிக்கொண்டு தீஷு வந்து விட்டாள். வீட்டிற்கு வந்தவுடன் தீஷுவும் அவள் அப்பாவும் சேர்ந்து ஒரு தேசிய கொடி செய்தனர்.

ஒரு துணியை சதுரமாக வெட்டிக் கொண்டு, அவள் அப்பா மூன்று பாகமாக பிரித்துக் கொடுத்தார். மேல் பாகத்தில் ஆரெஞ்சும் கீழ் பாகத்தில் பச்சையும் கலர் அடித்தாள் தீஷு. முடித்தவுடன் நடுவில் ஒரு ரூபாய் கொண்டு சக்கரம் வரைந்து கொண்டாள். பின்பு அதில் 24 கோடுகள் வரைந்தனர். பின்பு அப்பா ஒரு கம்பில் கொடியை ஒட்டிக் கொடுத்தார். தீஷு கொடி எடுத்துக் கொண்டு "வந்தே மாதரம்" "வந்தே மாதரம்" என்று கத்திக் கொண்டுயிருந்தாள்.



கொடி அதன் வண்ணங்கள் பற்றிய நல்லதொரு அறிமுகமாக இருந்தது. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

Thursday, August 13, 2009

மாஸ்கிங் டேப் பெயிண்டிங்

என‌க்கு கால‌ணிக‌ளில் அதிக‌ விருப்பம் இருப்ப‌தில்லை. அடுத்த‌வ‌ர் அணிந்திருப்ப‌தைக் க‌வ‌னித்து ஞாப‌க‌ம் வைத்துக் கொள்ளும் ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஆனால் தீஷுவிற்கு உடைக‌ளும் கால‌ணிக‌ளும் மிக‌வும் விருப்ப‌மான‌வை. டிரேஸ் தேர்ந்தெடுப்ப‌தாக‌ட்டும், ஷூ தேர்ந்தெடுப்ப‌தாக‌ட்டும் இர‌ண்டிலும் விருப்ப‌ம் அதிக‌ம். ஏதோ ஒரு உடையைப் பார்த்தால் இது போல் அவ‌ர் வைத்திருக்கிறார் என்பாள். அவ‌ள் சொன்ன‌ப்பின் தான் என‌க்கு ஞாப‌க‌ம் வ‌ரும்.




எப்பொழுதும் போல் இல்லாம‌ல் அவ‌ளுக்கு விருப்ப‌மான‌தில் செய்யலாம் என்று செருப்பு செய்தோம். அவ‌ள் கால்க‌ளை ஒரு அட்டையில் வ‌ரைந்து வெட்டிக் கொண்டேன். க‌ட்டை விர‌ல் அருகில் ஒரு ஓட்டையும், பாத‌ ப‌குதிக்கு அருகில் இரு ஓட்டைக‌ளும் போட்டுக்கொண்டேன். பைப் க்ளீனர் ( செய‌ற்கை செடிக‌ள் செய்ய‌ ப‌ய‌ன்ப‌டுவ‌து என்று நினைக்கிறேன்) கொண்டு மேலிருந்து கீழேயுள்ள‌ ஓட்டையில் மாட்டினேன். இதேப் போல் இன்னொன்றிலும் மாட்டினேன். செருப்பு ரெடி. தீஷுவை சேர்க்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ பைப் க்ளீனர் ம‌ட்டும் முன் அவ‌ளை அட்டையில் க‌ல‌ர் செய்ய‌ சொன்னேன். தீஷுவிற்கு மிக‌வும் பிடித்திருந்த‌து. ஆனால் அதை மாட்டிக்கொண்டு ந‌ட‌க்க‌ அவ‌ளுக்கு க‌ஷ்ட‌மாக‌ இருந்த‌து. இருந்தாலும் விருப்ப‌மாக‌ அணிந்து கொண்டுயிருந்தாள்.



இது ஒரு புத்த‌க‌த்தில் ப‌டித்த‌து. ஒரு பெயிண்ட்டிங் கான்வாஸ் எடுத்துக் கொண்டோம். மாஸ்கிங் டேப் எடுக்கும் பொழுது பேப்ப‌ர் கிழிந்து விடும் என்ப‌தால் கான்வாஸ். மாஸ்கிங் டேப்பை (சாதார‌ண செல்லோ டேப் கூட‌ உப‌யோக‌ப்ப‌டுத்த‌லாம்) கான்வாஸில் ஒட்டி ஏதாவ‌து டிஸேன் உருவாக்க‌ வேண்டும். பின் கான்வாஸ் முழுவ‌தும் பெயிண்ட் செய்ய‌ வேண்டும். செல்லோ டேப்பில் பட்டால் ப‌ர‌வாயில்லை. அத‌ன் வ‌ழியே பெயிண்ட் உள்ளே செல்லாது. பெயிண்ட் காய்ந்த‌வுட‌ன் டேப்பை எடுத்து விட‌ வேண்டும். எடுத்த‌ப்பின் டேப் இருந்த‌ இட‌ம் ம‌ட்டும் வெண்மையாக‌வும், ம‌ற்ற‌ இட‌ங்க‌ளில் பெயிண்ட்டும் கொண்ட‌ அழ‌கிய‌ பெயிண்ட்டிங் ரெடி. தீஷு கான்வாஸ் முழுவ‌தும் பெயிண்ட் செய்யாம‌ல் இடைப்பட்ட‌ இட‌ங்க‌ளில் ம‌ட்டும் (க‌ல‌ரிங் செய்வ‌து) போல் செய்தாள். மிக‌வும் ந‌ன்றாக‌ வ‌ந்த‌து என்று சொல்ல‌ முடியாது.

Tuesday, August 11, 2009

ப‌ள்ளியில் இன்று

தீஷுவிட‌ம் தினமும் இன்னைக்கு ஸ்கூலில‌ என்ன‌ பண்ணின‌ என்றால் ப‌ஸில் என்று தான் ப‌தில் வ‌ரும். ரைமிஸ் பாடுகிறாள். அவைத்த‌விர‌ அவ‌ள் ப‌ள்ளியில் ந‌ட‌ந்த‌தைத் தெரிந்து கொள்ள‌ முடியாது.

தீஷுவும் நானும் சில‌ தின‌ங்க‌ளுக்கு முன் டீச்ச‌ர் மாண‌வி விளையாட்டு விளையாண்டு கொண்டிருந்தோம். எப்பொழுதும் போல் தீஷுவே டீச்ச‌ர். அவ‌ள் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மூல‌மும் வார்த்தைக‌ள் மூல‌மும் அவ‌ள் பள்ளியில் என்ன‌ செய்கிறார்க‌ள் என்ப‌தை ஓர‌ள‌வு புரிந்து கொள்ள‌ முடிந்த‌து.

1. ப‌ள்ளியில் அனைத்து ஆக்டிவிட்டீஸும் சத்த‌மில்லாம‌ல் செய்ய‌ வேண்டும்
2. ஆக்டிவிட்டீஸ் செய்ய‌ "மாட்டில்" ம‌ட்டுமே அம‌ர‌ வேண்டும்
3. வேலையை முடித்த‌வுட‌ன், அனைத்தையும் எடுத்து வைத்த‌வுட‌ன், மாட்டை இர‌ண்டு கையால் சுருட்டி, இர‌ண்டு கையால் எடுத்துக் கொண்டு வைக்க‌ வேண்டும்
4. ஓர‌த்தில் நிற்க‌ வைப்ப‌து தான் த‌ண்ட‌னை. த‌ண்ட‌னையில் இருக்கும் பொழுது யாரும் அவ‌ருட‌ன் பேச‌ மாட்டார்க‌ள்
5. ஆக்டிவிட்டி முடித்த‌வுட‌ன் சைல‌ன்ஸ் டைம்
6. அனைவ‌ரும் லைன் மேல் (லைன் வ‌ரைந்திருக்கிறார்க‌ள்) உட்கார‌ வேண்டும்
7. பிரைய‌ரின் பொழுது கை கூப்பி க‌ண்ணை மூடி வேண்டும்
8. அப்பொழுது அமைதி காக்காம‌ல் க‌த்துப‌வ‌ர்க‌ளை ஆன்ட்டி அழைத்துக் கொண்டு போய் விளையாட‌ விட்டுவிடுவார்
9. "What colour do you like?", "What fruit do you like?" போன்ற கேள்விக‌ள் (அவ‌ள் சொன்ன‌து இவை இர‌ண்டும்) கேட்டு குழ‌ந்தைக‌ளைப் பேச‌ வைக்கிறார்க‌ள்
10. குழ‌ந்தைக‌ள் விரும்பும் பாட‌ல்க‌ள் ம‌ட்டுமே பாடுகின்ற‌ன‌ர்
11. செய‌ல்முறைக‌ளை செய்து காட்டிவிட்டு "Do you want to try?" என்று கேட்கின்றன‌ர்
12. ஆங்கில‌த்தில் ம‌ட்டுமே உரையாடுகின்ற‌ன‌ர்
13. ப‌ஸிலை தூக்கி எறிந்தால் (?) அவ‌ள் சொன்ன‌து புரிய‌வில்லை. திரும்ப‌ கேட்ட‌தில் அவ‌ள் விளையாட்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌தால் அவ‌ளுக்குச் சொல்வ‌தில் விருப்ப‌மிருக்க‌‌வில்லை.

ஓர‌ள‌வு தெரிந்து கொண்ட‌தில் என‌க்கு ம‌கிழ்ச்சி.. சில‌ நேர‌ங்களில் இது போல் விளையாட்டால் ப‌ள்ளியில் ந‌ட‌ப்ப‌தை கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் தெரிந்து கொள்ள‌லாம்.

Monday, August 10, 2009

ஈடுபாடு

கோர்த்த‌ல் (Stringing) க‌வ‌ன‌ ஒருங்கினைப்புக்கு மிக‌வும் ஏற்ற‌து. தீஷு அதில் ஆர்வ‌ம் காட்டுவ‌தில்லை. ஆகையால் ச‌ற்று வித்தியாச‌ப்ப‌டுத்தி கொடுக்க‌லாம் என்று எண்ணி ஒரு க‌ம்பில் கோர்க்க‌ச் சொன்னேன். ஆனால் அவ‌ளுக்கு விரும்ப‌மிருக்க‌வில்லை. பாசிக‌ள் ம‌ர‌த்திலான‌ பெரிய‌ அள‌விலான‌து. முத‌லில் அவ‌ற்றை அத‌ன் வ‌டிவ‌ங்க‌ளின் அடிப்படையில் அடுக்கினாள். பின்பு அவ‌ற்றை வைத்து க‌ட்டிட‌ங்க‌ள் உருவாக்கினாள். பின்பு இர‌ண்டை க‌யிறில் கோர்த்தாள். பின்பு எடுத்து வைத்து விட்டாள். ஆனால் எடுத்து வைக்கும் பொழுது செய்த‌து தான் என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌து.




எழுத‌ ப‌ய‌ன்படுத்தும் முத‌ல் மூன்று விர‌ல்க‌ளை ம‌ட்டும் ப‌யன்ப‌டுத்தி எடுத்தாள். பின்பு ஸ்லோலி அண்ட் ஸாஃப்ட்லி என்று சொல்லிக் கொண்டே மெதுவாக‌ வைத்தாள். அப்பொழுதும் அவ‌ள் வ‌டிவ‌ங்க‌ளின் அடிப்ப‌டையிலேயே அடுக்கினாள். அனைத்தையும் முடித்த‌வுட‌ன், க‌யிறைச் சுற்றுனாள் (அது ச‌ரியாக‌ வ‌ர‌வில்லை). அவ‌ளுக்குச் சுற்றியது போதும் என்று தோன்றிய‌வுட‌ன், ட‌ப்பாவை இர‌ண்டு கைக‌ளால் தூக்கிச் சென்று வைத்து விட்டாள்.



இதை அனைத்தையும் செய்வ‌த‌ற்கு அவ‌ளுக்கு அரை ம‌ணி எடுத்த‌து. அந்த‌ அரை ம‌ணி நேர‌மும் அவ‌ள் நான் அருகில் இருக்கிறேனா என்று க‌வனிக்க‌வில்லை. என்னை அழைக்க‌வும் வில்லை. ஒரு விஷ‌ய‌த்தில் விருப்ப‌த்துட‌ன் ஈடுப‌ட்டால் குழ‌ந்தைக‌ள் எடுத்துக் கொள்ளும் ஈடுபாடு (involvement) என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌து.

Sunday, August 9, 2009

இர‌வா? ப‌க‌லா?

பொதுவாக‌ டே வித் டாடி இரண்டு மூன்று வார‌ங்க‌ளுக்கு ஒரு முறை தான் செய்வார்க‌ள். ஆனால் தொட‌ர்ந்து மூன்று வார‌ங்க‌ளாக‌ செய்து கொண்டிருக்கிறார்க‌ள். என‌க்குத்தான் எழுதுவ‌த‌ற்கு நேர‌ம் கிடைக்க‌வில்லை.

Fountain: இந்த‌ ஐடியா Fun with Science project என்ற‌ புத்த‌க‌த்திலிருந்து வ‌ந்தது. ஒரு பாட்டில் மூடியில் ஓட்டைக‌ள் போட்டுக்கொள்ள‌ வேண்டும். அதில் வெந்நீர் எடுத்துக் கொள்ள‌வும். ஒரு பாத்திர‌த்தில் குளிர்ந்த‌ நீர் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். வெந்நீர் உள்ள‌ பாட்டிலில் ஒரு க‌யிறைக் க‌ட்டி, அதை குளிர்ந்த‌ நீர் உள்ள‌ பாத்திர‌த்தில் இற‌க்க‌ வேண்டும். பாட்டிலிருந்து வெந்நீர் குளிர்ந்த‌ நீரில் க‌ல‌ப்ப‌த‌ற்காக‌ ஓட்டை வ‌ழியாக‌ ப‌வுண்ட‌ன் போல் வ‌ரும். அத‌ன் பின் இருக்கும் அறிவிய‌லை அப்பா தீஷுவிற்கு விள‌க்கும் பொழுது, சாரி.. நான் க‌வ‌னிக்க‌வில்லை. தீஷுவும் அப்பாவின் பொறுமையை சோதிக்கும் ப‌டி அதை போரிங் ஆக்டிவிட்டியாக மாற்றி விட்டாள்.

Bridge: நாம் அடிக்க‌டி சாலைக‌ளின் போகும் பொழுது உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌து பால‌ங்க‌ள். தீஷு எப்பொழுதும் பால‌த்தில் போக‌ வேண்டும் என்பாள். கீழே செல்லுவ‌தைப் பார்ப்ப‌த‌ற்கு அவ‌ளுக்கு மிக‌வும் இஷ்ட‌ம். அத‌னால் அப்பா ட‌ம்ப‌ள‌ர்க‌ளால் பால‌ம் க‌ட்டி, பால‌ங்க‌ளின் ப‌ய‌ன்க‌ளை விள‌க்கினார்.



தீஷுவிற்கு சோலார் ஸிஸ்ட‌ம் ப‌ற்றி சொன்ன‌த்திலிருந்து அவ‌ளுக்கு அதில் விருப்ப‌ம் அதிக‌ம். ஒரு முறை நெட்டிலிருந்து எப்ப‌டி கோள்க‌ள் சூரிய‌னைச் சுற்றி வ‌ருகின‌ற‌ன் என்ப‌தை காண்பித்தேன். அதைப் பார்த்த‌வுட‌ன் அவ‌ளும் சூரிய‌ன் வ‌ரைந்து கோள்க‌ள் சுற்றுவ‌து போல் வ‌ரைந்து காண்பித்தாள். அதை அடிப்ப‌டையாக‌க் கொண்டு, இர‌வு ப‌க‌ல் எவ்வாறு வ‌ருகிற‌து என்ப‌த‌னை அப்பா விள‌க்கினார்.

பூமி (Globe) எடுத்துக் கொண்ட‌ன‌ர். ஒரு இருட்டு அறைக்குச் சென்று, டார்ச் இல்லாத‌தால், மொபைலில் வெளிச்ச‌ம் ஏற்ப‌டுத்தின‌ர். அப்பொழுது இந்தியா உள்ள‌ ப‌குதி ம‌ட்டும் வெளிச்ச‌மாக‌ இருந்த‌து. அது ப‌க‌ல் என்று, பூமியை மெதுவாக‌ச் சுற்றினார். அப்பொழுது இந்தியாவில் இர‌வும் அத‌ன் எதிர்ப‌க்க‌த்தில் ப‌க‌லும் ஆன‌து. தீஷு எளிதாக‌ப் புரிந்து கொண்டாள். திரும்ப‌ திரும்ப‌ செய்து காட்டி விள‌க்கிக் கொண்டிருந்தாள். அவ‌ள் அப்பா சொல்லிக் கொடுத்த‌தில் அவ‌ளுக்கு மிக‌வும் பிடித்த‌து இது தான் என்று நினைக்கிறேன். முடித்த‌ப்பின்னும் அதைப்ப‌ற்றியே பேசிக்கொண்டிருந்தாள். போட்டோ ஃப்ள‌சினால் வெளிச்ச‌மாக‌த் தெரிகிற‌து.

அப்பா என்ன? அம்மா என்ன?

இப்பொழுதெல்லாம் தீஷுவிடம் பல்பு வாங்குவது எங்கள் இருவரும் சாதாரண விஷயமாகி விட்டது. என் நினைவிலிருந்த இரண்டு சம்பவங்கள்:

1.

அம்மா அப்பாவிடம்,

அம்மா: இந்த வீக் எண்டுல பேண்ட் எடுக்கனும்.
அப்பா: ( எப்பொழுதும் போல் சுவாரஸ்யம் இல்லாமல்) ம்ம்ம்ம்ம்...
தீஷு : யாருக்கு பேண்ட்?
அம்மா : எனக்குத்தான்..
தீஷு : உங்கிட்டத்தான் நிறைய இருக்கே? இப்ப எதுக்கு வேஸ்ட்டா?
அம்மா: ????
அப்பாவுக்கு ஒரே சந்தோஷம்.

2.
சென்ற வாரம் ஒரு நாளில் என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு, வீடு திரும்பும் பொழுது, தீஷு வண்டியிலிருந்து இறங்கும் பொழுது ஸைலன்ஸரில் கால் வைத்து விட்டாள். காலில் காயம் ஏற்பட்டுவிட்டது. டாக்டரிடம் மருந்து வாங்கி இருக்கிறோம். ஒரு வாரமாக எங்கள் வீட்டின் முக்கிய டென்ஷன் இது. அப்பா தீஷுவிற்கு புது மருந்து போட கூப்பிட்டார். தீஷு தண்ணீர் கேட்டதால் வெந்நீர் போட்டார். புது மருந்து பார்த்தவுடன் தீஷுவிற்கு அப்பொழுதே போட வேண்டும். அப்பாவுக்கோ வெந்நீர் ஆறி விடும் அதனால் குடித்து முடித்தவுடன் போடலாம் என்று.

அப்பா : இங்க பாரு.. ஆயின்மெண்ட்டில் என்ன எழுதியிருக்குனு.. Drink hot water and then apply ointment..
தீஷு : அப்படியா எழுதியிருக்கு? இல்லையே.. Apply ointment and then drink hot waterனு எழுதியிருக்கு..
அப்பா: ??????

Wednesday, August 5, 2009

வீட்டில் மேஸ்

சில வாரங்களாக எழுத நேரம் இல்லாததால், செய்த அனைத்தையும் எழுத முடியவில்லை. முக்கியமாக கருதிய இரண்டை மட்டும் பதியலாம் என்று நினைக்கிறேன்.





லைனில் நடக்கப் பழக்கலாம் என்று நினைத்து, செல்லோ டேப்பை ஒட்டும் பொழுது, இந்த ஐடியா தோன்றியது. டேப்பை இரண்டு சதுரங்களாக மடக்கி ஒட்டினேன். ஒரு ஒரத்தில் ஆரம்பித்து, டேப்பின் சதுரங்களின் நடுவிற்கு நடந்து செல்ல வேண்டும். கிட்டத்தட்ட மேஸ் போன்றது. தீஷு மிகவும் விருப்பமாக செய்தாள். மாறி மாறி அரை மணி நேரம் விளையாண்டு கொண்டிருந்தோம். அடுத்து டேப்பின் (லைனில்) மேல் நடக்க வைத்தேன். நன்றாக நடக்க ஆரம்பத்தவுடன், கையில் எதையாவது வைத்துக் கொண்டு நடக்கப் பழக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அதன் மூலம் கவனம் அதிகரிக்கும். இன்னும் சில நாட்களுக்கு இந்த செல்லோ டைப்பை எடுக்கப் போவதில்லை.



பெக் பஸில் எனப்படும் எழுத பயன்படும் மூன்று விரல்களால் பஸில் பீசை எடுத்து, மீண்டும் அதன் இடத்தில் பொருத்தும் பஸிலால் மூன்று விரல்களுக்கும் பயிற்சி கிடைக்கிறது. ஆனால் இப்பொழுது தீஷுவிற்கு பெக் பஸில் செய்வதில் விருப்பம் இருப்பதில்லை. ஆகையால் இது போல் மீன் பிடித்து விரல்களுக்கு பயிற்சி கொடுத்தோம்.




மீன் படங்களை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு, தீஷுவை கலர் செய்யச் சொன்னேன். பின் அவற்றைக் கத்தரித்து, சில மீன்களின் பின் பேப்பர் பின் (ஜம்ப் கிளிப்) வொட்ட வைத்தேன். என் ஊதா ஷாலை தண்ணீராக பாவித்து, அதன் மேல் மீனை போட்டுவிட்டோம். கையில் காந்தத்தை (மெக்னெட்டிங் டூடுலுடன் வந்தது) வைத்து மீனை எடுக்க வேண்டும். சில மீன்களில் பின் பேப்பர் பின் ஒட்டவில்லை. அவற்றை எடுக்க முடியவில்லை என்றவுடன், காந்தவியல் பற்றி விளக்கினேன். தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது.



அது முடித்தவுடன், ஒரு கம்பில் மாக்னெட்டை ஒரு நூலில் கட்டி, மீன் பிடிக்க வைத்தேன். தீஷுவிற்கு பிடிக்கவில்லை. இது கை கண் ஒருங்கினைப்புக்கு மிகவும் ஏற்றது.

Sunday, August 2, 2009

நன்றி

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக ப்ளாக் படிப்பதற்கும் சரி, எழுதுவதற்கும் சரி நேரம் கிடைக்கவில்லை. ரீடரிலிருந்த பதிவுகளை படிக்கும் பொழுது தான் தற்பொழுது(?) உள்ள விருதுகள் பற்றி தெரிந்தது.

ஆகாயநதி சுவாரசிய வலைப்பதிவு விருது கொடுத்திருக்காங்க.

அமுதா சுவாரசிய வலைப்பதிவு விருதும், பெஸ்ட் ப்ஃரெண்ட் விருதும் கொடுத்திருக்காங்க.

நன்றிகள் பல.

தீஷுவிற்காகவே இந்த வலைப்பதிவு ஆரம்பித்தேன். பிற்காலத்தில் அவளின் குழந்தை பருவத்தைப்பற்றி அவள் தெரிந்து கொள்வதற்காக. முதலில் வலைப்பதிவை personalஆக வைத்திருக்கவே நினைத்திருந்தேன். பின்னர் அவளின் ஆக்டிவிட்டீஸ் மட்டும் இதில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். வெறும் வெட்டுதல், ஒட்டுதல், கொட்டுதல் மட்டும் எழுதினால் சுவாரசியமாக இருக்காது என்பதும் தெரியும். ஆனால் ஒரு கலெக்ஷனாக இருக்கட்டும் என்று ஆரம்பித்தேன்.

அது எனக்கு நண்பர்கள் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இதுவரை என் வாழ்வில் கம்யூட்டர் சாட் வசதி உபயோகப்படுத்திய தருணங்களை எண்ணிவிடலாம். என் குடும்பத்தாரிடம் தவிர நெருங்கிய நண்பர்கள் ஒர் இருவரிடம் ஒர் இரு முறை பேசி உள்ளேன். இதுவரை ஆர்குட், பேஸ் புக், twitter, கூகுல் சாட் உபயோகப்படுத்தியதில்லை. நண்பர்களிடம் உரையாட விருப்பமில்லை என்பதில்லை. தொலைபேசியில் மட்டுமே பேசும் பழக்கம் உண்டு. சந்திக்க முடிந்த நண்பர்களை நேரில் பார்த்து பேசும் பழக்கம் உண்டு. அப்படி குணமுள்ள எனக்கு வலை மூலம் நண்பர்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது. வலையில் அறிமுகமான சிலரிடம் போனிலும், சிலரிடம் மெயிலிலும் பேசியிருக்கிறேன். சிறு வயதில் பென் பிரெண்ட் கேள்வி பட்டவுடன் கிடைத்த த்ரிலிங், இந்த நட்பு உலகம் கொடுக்கிறது. நன்றிகள்.

விருது வாங்குவது போல் கொடுப்பதும் மகிழ்ச்சி தருவது. ஆனால் நான் ரொம்ப லேட்டா எழுதுறேன். கிட்டத்தட்ட அனைவரும் வாங்கிட்டாங்க. ஆதனால யாருக்கும் கொடுக்க முடியல. மன்னிக்கவும்.

ஆரெஞ்ச் களிமண்


சப்பாத்தி மாவு பிசையும் பொழுதும், தேய்க்கும் பொழுதும் தீஷுவின் தொந்தரவு அதிகமாக இருக்கும். அனைத்தையும் தான் செய்ய வேண்டும் என்பாள். அவளிடம் அதே போல் விளையாட்டு பொருட்கள் இருக்கின்றன. ஆனால் நான் உபயோகப்படுத்துவது வேண்டும். அவளுடைய களிமண்ணை (playdough) சமைக்க பயன்படுத்தும் பொருட்களில் வைத்து விளையாடுவதில் எனக்கு விரும்பமிருக்கவில்லை.

ஆகையால் அவளுக்கு மைதா மாவில் playdough செய்து கொடுத்தேன்.

தேவையான பொருட்கள் :

1. மைதா மாவு - 4 ஸ்பூன்
2. தண்ணீர் - 4 ஸ்பூன்
3. உப்பு - 2 ஸ்பூன்
4. எண்ணெய் - 2 ஸ்பூன்
5. Food colouring.

Food colouring தண்ணீரில் சேர்த்துக் கொண்டேன். மைதாமாவு, உப்பு போன்றவற்றை தீஷுவை அளக்க வைத்தேன். அனைத்தையும் ஒரு கிண்ணதில் போட்டு சிறிது சிறிது தண்ணீர் சேர்க்க வைத்தேன். முதலில் அவளாகவே பிசைந்தாள். பின்பு என் உதவி தேவைப்பட்டது. பிசைந்த பொழுதே அவளின் கைகள் சோர்வடைந்து விட்டதால், அவளால் அன்று விளையாட முடியவில்லை. மறுநாள் எடுத்து விளையாண்டாள். செய்து 10 நாட்களாகி விட்டன. பிரிட்சில் வைக்கவில்லை ஆயினும் இன்னும் மாவு கெடாமல், மிருதுவாக இருக்கிறது.

Bubbles

சோப்பு தண்ணீர் ஊதுவது தீஷுவிற்கு மிகவும் பிடித்தது. முன்பு சிறு வயதில் விளையாண்டது போல், சோப்பைக் கரைத்து அவள் அப்பா கொடுத்தார். ஆனால் தொடர்ந்து பபில்ஸ் வராததால் அவளுக்கு வருத்தம். நெட்டில் தேடிய பொழுது கிடைத்தது இந்த முறை.

தேவையான பொருட்கள் :

1. குழந்தைகள் Shampoo - 2 spoon
2. தண்ணீர்
3. Glycerin

Glycerin மருந்து கடைகளில் கிடைக்கிறது. சாம்பூவில் சிறிது சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூனால் கலக்கிவிட வேண்டும். கலக்கும் பொழுது பபில்ஸ் வரக்கூடாது. பின் அதில் சிறிது( ஒரு துளீ) Glycerin சேர்க்க வேண்டும். 8 மணி நேரம் ஊறவிட்டப்பின் எடுத்து ஊதினால் கடையில் வாங்குவது போல் தொடர்ந்து நன்றாக வருகிறது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost