Showing posts with label Sensorial. Show all posts
Showing posts with label Sensorial. Show all posts

Tuesday, July 20, 2010

ம‌ண‌ல் த‌ட்டு

சில வருடங்களுக்கு முன் மணலில் எழுதிப்பழகினர். நம் தாத்தா, பாட்டியே கூட அவ்வாறு கற்று இருக்கலாம். நம் காலத்தில் சிலேட்டில் எழுதினோம். இப்பொழுது சிலேட்டைப் பார்க்க முடிவதில்லை. இதுவரை தீஷு படித்த இரண்டு பள்ளிகளிலும் சிலேட் இல்லை. ஆரம்பிக்கும் பொழுதே நோட் புக் தான்.

மணல் மிருதுவாக இல்லாமல் சற்று சொரச்சொரப்பாக இருக்கும். தொடுதல் உணர்ச்சிக்கு ஏற்றது. அது ஒரு sensorial ஆப்ஜெக்ட்.

தீஷு எழுத ஆரம்பித்த பொழுது, அவளுக்கு ரவை மூலம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அப்பொழுது மணலும் கிடைக்கவில்லை. மேலும் சிந்தும் மணலை எடுத்துப் போடுவது அங்கு கஷ்டம். இப்பொழுது அந்த இரு பிரச்சினைகளும் இல்லாததால் மணல் தட்டு செய்யலாம் என்று நினைத்தேன்.

நானும் தீஷுவும் எங்கள் அப்பார்ட்மெண்ட் பார்க்க்குச் சென்று மணல் எடுத்து வந்தோம். அந்த மணலை சல்லடைக் கொண்டு சலித்தோம். தீஷுவிற்கு தான் செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால் முதல் நாள் மழை பெய்திருந்ததால் மணலின் ஈரம் கனத்தைக்கூட்டி விட்டது. அவளால் செய்ய முடியவில்லை. பின்பு சிந்திய மணலை சுத்தம் செய்து (எத்தனை மாண்டிசோரி பயிற்சிமுறைகள்), மீதி மணலை மீண்டும் பார்க்கில் போட்டு, சல்லடையைச்சுத்தம் செய்தோம். அரை வாலி தண்ணீரையும் சல்லடையையும் கொடுத்து விட்டேன். தீஷுவிற்கு அரைமணி நேரம் பொழுது போனது. அவளுக்குச் சளித் தொந்தரவு அதிகம் என்பதால், அப்பா சுத்தம் செய்தது போதும் என்று வாங்கி வைத்து விட்டார். இல்லையென்றால் இன்னும் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் விளையாண்டு இருப்பாள்.



அந்த மணல் தட்டில் எழுதிப் பழகினோம். தீஷுவின் ஸிலபஸ் படி அவளுக்கு cursive writting ஆரம்பித்துவிட்டனர். a, c, t முதலியன எழுதுகிறாள். மீண்டும் மீண்டும் எழுதுவதற்கு மணல் உபயோகமாக இருக்கிறது. எழுத்துகள், வார்த்தைகள், படங்கள் என்று அழித்து அழித்து எழுதுவதற்கு மணல் தட்டு வசதியாக இருக்கிறது.



ஒரு பக்கம் எழுதிய தாள்கள் தான் இதுப் போன்றவைகளுக்கு நாங்கள் உபயோகப்படுத்தினாலும் எழுதப்பழகும் பொழுது நிறைய தாள்கள் வீணடிப்போம். இந்த முறையில் வீணடித்தல் தடுக்கப்படுகிறது. மணல் தட்டு இல்லையென்றாலும் சிலேட்டிலாவது இனிமேல் எழுத வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஏதோ பூமித்தாய்க்கு நம்மால் முடிந்த உதவி.

Friday, May 21, 2010

வித்தியாசம் கண்டுபிடி

குழந்தைகளுக்கான பயிற்சி புத்தகங்களில் மட்டுமில்லாது பெரியவர்களுக்கான புத்தகங்களிலும் இரண்டு படத்தில் வித்தியாசம் கண்டுபிடித்தல் மிகவும் பிரபலம்.

புத்தகங்களில் வித்தியாசம் கண்டுபிடிப்பது போல், ஒன்று போலுள்ள இரண்டு பொருட்களுக்கு வித்தியாசம் கண்டுத்தோம். அதில் நிறைய நன்மைகள் உள்ளன. படத்தில் காண்பதில், புலன்களில் கண்களுக்கு மட்டுமே வேலை உள்ளது. ஆனால் பொருட்களில் கண்டுபிடிப்பதில் மற்ற புலன்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன.



உதாரணத்திற்கு நாங்கள் இரண்டு மஞ்சள் பந்துகள் எடுத்துக் கொண்டோம். ஒன்று பிளாஸ்டிகாலானது. மற்றொன்று சற்று மிருதுவானது. மிருதுவான பந்தில் ஒரு ஸ்மைலி இருந்தது.

வித்தியாசம் கண்டுபிடிக்க, முதலில் ஸ்மைலியைச் சொன்னாள். பின்பு அதிலிருந்த எழுத்துக்களை சொன்னாள். நான் கேள்வி கேட்க கேட்க மற்ற வித்தியாசங்கள் கண்டுபிடித்தாள். அளவு (கண்கள்), ஹார்ட் & ஸாஃப்ட் (தொடுதல்), தூக்கி போட்டு சத்தம் கண்டுபிடித்தல் -பிளாஸ்டிக்கிலிருந்து சத்தம் வரும், மற்றதில் வராது (காது) முதலியன பயன்படுத்தப் படுகின்றன.

வித்தியாசம் கண்டுபிடிக்க வெவ்வேறு பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் வெவ்வேறு புலன்களுக்கு வேலை கொடுக்கலாம். வெந்நீரை ஒரு எவர்சில்வர் டம்ளரிலும், குளிர்ந்த நீரை ஒரு கண்ணாடி டம்ளரிலும் வைத்து வித்தியாசம் கண்டுபிடிப்பது ஒரு உதாரணம். சில நாட்களுக்கு எங்கள் வீட்டில் இந்த விளையாட்டு பிரபலமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Wednesday, August 26, 2009

cuh-auh-tuh..

இரும‌ல் அதிக‌மாக‌ இல்லாம‌ல் இருந்த‌தால் தீஷுவை திங்க‌ள் அன்று ப‌ள்ளிக்கு அனுப்பிவிட்டோம். ப‌ள்ளியிலிருந்து என் க‌ண‌வ‌ரை அழைத்து, தீஷுவிற்கு காய்ச்ச‌ல் இருப்ப‌தால் என்ன‌ ம‌ருந்து கொடுக்க‌ என்று கேட்டுயிருக்கிறார்க‌ள். அடித்துப்பிடித்து நாங்க‌ள் இருவ‌ரும் சீக்கிர‌ம் கிள‌ம்பி வீட்டிற்குச் சென்று, டாக்ட‌ரிட‌ம் அழைத்துச் சென்றோம். ம‌ருந்து கொடுத்து மூன்று நாட்க‌ளுக்கு மேல் காய்ச்ச‌ல் இருந்தால் மீண்டும் அழைத்து வ‌ர‌ச் சொன்னார். செவ்வாய் விடுமுறை எடுத்து விட்டேன். புத‌ன் அன்றும் மூன்று ம‌ணி நேர‌ம் ம‌ட்டும் சென்று வ‌ந்தேன். இன்று கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லை. ப‌ள்ளிக்குச் சென்று இருக்கிறாள்.

செவ்வாய் மாலை எங்க‌ள் இருவ‌ருக்கும் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் வ‌ரை ஆக்டிவிட்டீஸுக்குக் கிடைத்த‌து. நான் செய்ய‌ வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தீஷுவிற்கு பொழுது போக‌வில்லையென்ற‌வுட‌ன் ஏதாவ‌து ஆக்டிவிட்டீஸ் செய்ய‌லாம் என்றாள். ச‌ரி என்று ஆர‌ம்பித்தோம். இது முன்ன‌மே செய்த‌து. CAT,DOG, போன்ற‌ மூன்று எழுத்து ப‌ட‌ங்க‌ளை எடுத்துக் கொண்டோம். "Give me a picture with CUH-AUH-TUH" என்று சொன்னேன். நான் சொல்வ‌தைப்புரிந்து கொண்டு அந்த‌ ப‌ட‌த்தை எடுத்துத்த‌ர‌ வேண்டும். இது வாசிப்ப‌‌த‌ற்குத் தேவையான‌ blending க‌ற்றுத்த‌ருகிற‌து. தீஷு இந்த‌ முறை ச‌ரியாக‌வும் விருப்ப‌மாக‌வும் செய்தாள். மீண்டும் மீண்டும் வேறு வேறு ப‌ட‌ங்க‌ள் மூல‌ம் முய‌ற்சித்துக் கொண்டுயிருந்தோம்.

Sorting தீஷுவிற்கு பிடித்த‌ ஒன்று. இந்த‌ முறை category sorting . முத‌லில் மூன்று பொம்மை காரும், மூன்று பொம்மை நாற்காலிக‌ளும் எடுத்துக் கொண்டோம். முத‌லில் காரை எடுத்துக் காண்பித்து "This is a car" என்று சொல்லி த‌னியே வைத்தேன். அடுத்து "This is a chair...Not a car" என்று சொல்லி ச‌ற்றுத்தள்ளி வைத்தேன். மீண்டும் ஒரு நாற்காலி எடுத்து, "This is a chair" என்று சொல்லி அவ‌ள் ப‌திலுக்குக் காத்திருந்தேன். அவ‌ள் காட்டிய‌வுட‌ன் அந்த‌ பிரிவில் வைத்தேன். இது புரிந்த‌வுட‌ன் மீண்டும் மூன்று ம‌னித‌ பொம்மைக‌ளையும், மூன்று வில‌ங்கு பொம்மைக‌ளையும் சேர்த்து "Chair", "Car", "Human being", "Animal" என்று பிரித்தோம்.

Thursday, July 2, 2009

Metal inset

நாம் மிக எளிதாக நினைக்கும் விஷயங்கள் கூட குழந்தைகளுக்கு எளிதல்ல என்று உணர்த்தியது இந்த செயல்முறை. ஏற்கெனவே ரப்பர் பேண்டை குழலில் மாட்டியிருக்கிறோம். ஆனால் இரண்டு சுற்று (double loop) மாட்டியது இல்லை. அது விரலுக்கு வேலை கொடுப்பதால், அதைச் சொல்லிக் கொடுக்கலாம் என்று ஒரு குழல், ஒரு பெரிய ரப்பர் பேண்ட் எடுத்துக் கொண்டோம். ரப்பர் பேண்ட் வெகு நாட்களாக காகிதகங்களை ஒழுங்குபடுத்தப் பயன்படுத்தப்பட்டுயிருந்ததால் கஷ்டப்பட்டு இழுக்க வேண்டியதில்லை. முதலில் குழலை கையில் எடுத்து, அதன் ஒரு ஓரத்தில் அருகில் நம் கையை வைக்க வேண்டும். மற்றொரு கையால் ரப்பர் பேண்டை குழலில் மாட்ட வேண்டும். மீண்டும் அடுத்த சுற்றுக்கு, ஒரு விரலால் ரப்பர் பேண்டை சுற்றி, குழல் அருகில் எடுத்துச் சென்று மாட்ட வேண்டும். சொல்லிக் கொடுக்க எளிதாகத்தான் இருந்தது. ஆனால் தீஷு இரண்டாவது சுற்று மாட்டும் பொழுது முதல் சுற்று வந்து விடும். வெகு நேரம் முயற்சி செய்து விட்டு முடியவில்லை என்று எடுத்து வைத்து விட்டோம். ஆனால் சில மணி நேரங்கள் கழித்து அவளாக, மாட்ட முயற்சி செய்து கொண்டிருந்தாள். அப்பொழுதும் முடியவில்லை. சில நாட்கள் கழித்து முயல வேண்டும். அல்லது குழலுக்குப் பதில் door knobபில் மாட்டலாம் என்று நினைத்திருக்கிறேன். இதில் பிடிக்க வேண்டியில்லாததால் இரண்டு கைகளையும் பயன்படுத்தலாம்.





Rough & Smooth சொல்லிக் கொடுத்தேன். மாண்டிசோரி Touch board #1 போல் செய்ய ஒரு கனமான அட்டையை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு பாதியில் உப்புத்தாளை ஒட்டி விட்டேன். ஒரு பாதி வழுவழுப்பாகவும், இன்னொரு பாதி ரஃபாகவும் இருக்கும். ஒவ்வொரு பகுதியாக தடவி ரஃப், ஸ்மூத் என்று சொல்லிக் காட்டினேன். இதை முன்பே செய்திருக்க வேண்டும். Touch board #2 வும் செய்யும் ஐடியாவும் உள்ளது.







மாண்டிசோரி Metal insets எழுதுவதற்கு விரல்களை தயார்ப்படுத்துகிறது . அதில் பஸில் போர்ட் போல் ஒரு ஃப்ரேமும், வெவ்வேறு வகையான ஷேப் பிஸுகளுக்கும் இருக்கும். பிஸை எடுத்து விட்டு, ஃப்ரேமை பேப்பரில் வைத்து ஃப்ரேமிலுள் அதன் ஓரங்களை வரைந்து ஷேப் உருவாக்க வேண்டும். பின் அதனுள் கோடுகள் வரையலாம். இவை அனனத்தும் எழுதுவதற்கு தயார்ப்படுத்தும். அதை ஒத்த ஒன்றை செய்வதற்காக ஒரு அட்டையை எடுத்து, அதன் நடுவில் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் போன்றவற்றை வரைந்து வெட்டி விட்டேன். தீஷுவிற்கு செவ்வகமும், வட்டம் மட்டும் கொடுத்தேன். வட்டம் நன்றாக வரைந்தாள். செவ்வகத்திற்கு ஒரு பக்கத்தை விட்டு விட்டாள். வட்டத்தில் கோடுகள் வரைவதற்கு பதில் ஸ்மைலி போடுகிறாள். கொஞ்ச நாளுக்கு இது உபயோகப்படுத்தப்படும்.

Monday, June 29, 2009

இரு கை வட்டம்

தீஷுவிற்கு டிரேஸிங் செய்ய இப்பொழுது மிகுந்த ஆர்வம் இருக்கிறது. ப்ரொஜக்டரில் ஸ்லைட் (தீஷுவைப் பொருத்தவரை இது சி.டி) போட்டு, ஸ்லைட் படத்தைப் பெரிதாக்கி, படத்தை டிரேஸ் செய்வதை விருப்பமாக செய்ததால் நான் டிரேஸிங் பேப்பரால் செய்யக் கொடுத்தேன். கலரிங் செய்வதற்காக பிரிண்ட் அவுட் செய்ய வைத்திருந்த பூவை டிரேஸ் செய்ய வைத்தேன். ஓரளவு பூ வந்திருந்தது.



அடுத்து அந்த பூவின் வரை கோடுகளில் (outline) ஸேப்டி பின்னால் ஒட்டைப் போட்டாள். கையில் பேப்பரை வைத்துக் கொள்ள சிரமமாக இருந்ததால் தெர்மோக்கோல் மேல் பேப்பரை வைத்து விட்டேன். விருப்பமாக செய்யவில்லை. ஆனால் பென்சிலால் தெர்மோக்கோலில் வரைய பிடித்திருந்தது. அதை விருப்பமாக செய்தாள்.



மாண்டிசோரியின் தெர்மிக் பாட்டில்கள் போல் செய்ய வைக்கலாம் என்று தோன்றியது. பாட்டில்களை சூட்டின் அளவில் பிரிக்க வேண்டும் என்பது அதன் அடிப்படை. ஒரே வகையான ஆறு டம்ளர்களை எடுத்துக் கொண்டு, வெந்நீரை இரு டம்ளர்களிலும், தண்ணீரை இரு டம்ளர்களிலும், குளிர்ந்த நீரை இரு டம்ளர்களிலும் வைத்து விட்டேன். ஒரு டம்ளரைத் தொட்டு பார்த்து, அதன் ஜோடியைக் கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் விருப்பமாக திரும்ப திரும்ப செய்து கொண்டுயிருந்தாள். ஆனால் வெந்நீரில் சூடு தணிய ஆரம்பித்ததும், அதை ஊற்றும் (Pouring) ஆக்டிவிட்டியாக மாற்றிவிட்டாள். அதை மிகவும் விரும்பமாக செய்தாள். சலிக்காமல் டம்ளர்களிலும் பாட்டிலும் மாற்றி மாற்றி ஊற்றுவதை எப்படித்தான் ஒரு மணி நேரம் அவளால் செய்ய முடிந்ததோ.



இது ஒரு புத்தகத்தில் படித்தது. இரு கைகளிலும் பென்சிலைக் கொடுத்து வரைய செய்தல். இரண்டு கைகளும் எதிர் திசையில் வரைய வேண்டும். நிறைய வட்டங்கள் வரைந்தோம். ஆனால் சில நிமிடங்களில் ஆர்வமிருக்கவில்லை.

Tuesday, May 26, 2009

கண்டுபிடி...

சப்பாத்தி மாவு பதத்திற்கு கோதுமை மாவை பிசைந்து கொண்டேன். சோழி, புளிங்கொட்டை, உளுத்தம் பருப்பு, சிறிய பொட்டு, பூண்டு போன்றவற்றை இரண்டு இரண்டாக எடுத்துக் கொண்டேன். அனைத்திலும் ஒன்றை மாவில் ஒளித்து வைத்து விட்டேன். மற்றொன்றை தட்டில் வைத்து விட்டேன். மாவிலுள்ளதை கண்டுபிடிக்க வேண்டும். மாவினுள் என்ன இருக்கிறது என்று தெரிவதற்குத் தட்டில் அதன் ஜோடியை வைத்திருந்தேன். நான் பொட்டு கண்டுபிடிப்பது கஷ்டம் என்று நினைத்திருந்தேன். ஆனால் பருப்பைக் கண்டுபிடிக்கத் தான் கஷ்டமாக இருந்தது அவளுக்கு. தீஷு திரும்ப திரும்ப கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் செய்திருப்பாள். நேற்று முழுவதும் அதைப் பற்றி தான் பேச்சு. இன்று காலை எழுந்தவுடன் முதல் கேள்வி - பால் குடிச்சி முடிச்சவுடனே மாவில கண்டுபிடிப்போமா? என்று. இது கை விரலுக்கான பயிற்சி.

இது துணி வகைகளைப் பொருத்தியது போன்றது. உப்புத்தாளில் வெவ்வேறு வகையில் எடுத்து இரண்டு இரண்டு சதுரமாக வெட்டிக் கொண்டேன். அவளே அவள் வேலையை சரி செய்து கொள்வதற்காக ஜோடிகளின் பின்னால் ஒத்த வடிவத்தை வரைந்து கொண்டேன். ஒரே வகையான தாளைப் பொருத்த வேண்டும். விருப்பமாக செய்தாள் என்று சொல்ல முடியாது. ஒரு முறை பொருத்தி முடித்தவுடன், சரியாக செய்திருக்கிறாளா என்று பின்னால் வரைந்திருந்த வடிவங்களை வைத்து பார்க்கச் சொன்னேன். அடுத்த முறை பொருத்துவதற்கு முன்னாலே வடிவத்தைப் பார்க்க ஆரம்பித்து விட்டாள். இது தொடு உணர்வுக்கானப் பயிற்சி.

Thursday, May 21, 2009

காந்தவியல்

தீஷு இரண்டு இலக்க எண்களை வாசிப்பதால், இன்று அதற்கு அடுத்த படி செய்தோம். எப்பொழுதும் நான் மாக்னெட்டிக் எழுத்துக்களால் எண்களை வைத்து, அவளை வாசிக்கச் சொல்வேன். ஆனால் இன்று நான் சொல்லும் எண்னை அவள் வைக்க வேண்டும். முதலில் இரண்டாவது இலக்கத்தை முதல் இலக்கமாக வைத்தாள். சொன்னதும் புரிந்து கொண்டாள். கிட்டத்தட்ட 15 எண்கள் வரை செய்திருப்போம். அனைத்தையும் சரியாக செய்தாள்.



மாக்னெட்டிக் எழுத்தை வைத்தே பொருட்களை magnetic / non-magnetic என பிரித்தோம். நான் பொருட்களைத் தட்டில் எடுத்துத் தராமல், வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் காந்தத்தால் தொட்டு, magnetic / non-magnetic என சொல்லச் செய்தேன். சரியாக செய்தாலும் மாக்னெட்டிக் என்ற வார்த்தையை சொல்லத் தெரியவில்லை.



மாண்டிசோரி முறையில் அனைத்து புலங்களின் மூலம் கற்கிறோம் என்பது அடிப்படை. தொடு புலனுக்கு இந்தப் பயிற்சி மாண்டிசோரி புத்தகங்களின் இருந்தது. வெவ்வேறு வகையான துணிகளை(தையல் கடையில் கேட்டு வாங்கினேன்), ஒவ்வொரு வகையையும் இரண்டு 15cm சதுரங்களாக வெட்டிக் கொண்டேன். இரண்டு கிண்ணிங்களில் வைத்து விட்டேன். கண்னைக் கட்டிக் கொண்டு, முதல் கிண்ணத்திலிருந்து ஒரு துணியை எடுத்து, அடுத்த கிண்ணத்திலிருந்து அதற்கு இணையானதை எடுக்க வேண்டும். முதலில் இரண்டு வகையான துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு இணைத்தோம். புரிந்து கொண்டவுடன் 4 வகை செய்தோம். அடுத்து நான் ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு துணி கொடுத்தவுடன், இரண்டும் ஒரே வகையா இல்லையா என்று சொல்ல வேண்டும் என்றேன். அனைத்தையும் விருப்பமாக செய்தாள். முடித்தவுடன் அனைத்துத் துணிகளையும் எடுத்து, எல்லா துணியும் காஞ்சிருச்சு, மடித்து வைத்து விடுகிறேன் என்று மடித்து வைத்து விட்டாள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost