Showing posts with label சம்மு. Show all posts
Showing posts with label சம்மு. Show all posts

Wednesday, September 4, 2013

செய்ததும் செய்ய நினைத்ததும்..

சம்மு ஐஸ்ஸை வைத்து விளையாண்ட மறுநாள் காய்ச்சல் வந்து, இரு தினங்களில் சரியானலும், பசியின்மையால் ஒரு வாரம் அவதிப்பட்டு, இன்று மீண்டும் ஜலதோசம். தீஷு பள்ளிக்குச் சென்றவுடன் சம்முவுடன் நேரம் செலவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இரு வாரங்களாக உடம்புப்படுத்துவதால் நினைத்தப்படி விளையாட முடிவதில்லை. சில நாட்களாக நாங்கள் செய்ததும், செய்ய நினைத்தும் இந்தப் பதிவு. இவை கண் கை ஒருங்கிணைப்புக்கு ஏற்ற விளையாட்டுகள்.

கேரெட் ஜூஸ் பெயிண்ட்டிங் 



சம்முவிற்கு ஸேப் ஸாட்டர்ஸ் (Shape sorters) வடிவங்களைப் பிரித்து அதன் குழி வழியே போடுவது கடினமாக இருந்தது. அதனால் ஷூ டப்பாவில் ஒரு வட்டம் வெட்டி, அதில் அனைத்து வடிவங்களும் போட்டு பழகினோம்.



காய்களை உண்டியலில் போட வேண்டும். இது அவளுக்குச் சிறிது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.



ஒரு கண்ணாடி பாட்டிலில் காய்களைப் போட வேண்டும். இது அவளுக்குப் பிடித்திருந்தது.


ஒரு கோப்பையிலிருந்து மற்றொரு கோப்பைக்கு மாற்ற வேண்டும். சற்று கடினம்.


டியூபில் காய்களைப் போட வேண்டும். 




  

Thursday, August 1, 2013

கை விரல்களுக்கு..

இந்த இடுகை சின்னச்சிறு விரல்களுக்கு வேலை கொடுக்க செய்த விளையாட்டுகளின் தொகுப்பு. இவை கடந்த மூன்று மாதங்களில் வெவ்வேறு தருணங்களில் செய்த விளையாட்டுகள். பொருட்களை எளிதாக எடுக்க விடாமல், சற்று அழுத்தி இழுத்து விரல்களுக்கு வேலை கொடுத்தேன்.

1. வெல்கரோ

   சோபாவிலிருந்த வெல்கரோவில் மர விளையாட்டுப் பொருட்களின் வெல்கரோவை ஒட்ட ஒட்ட, எடுக்க வேண்டும். இது அனைத்து விரல்களுக்கும் வேலை கொடுக்கும்.

      

2. செல்லோ டேப் பொம்மைகள்

   பொம்மைகளை செல்லோ டேப்பால் ஓட்டி வைத்து விட்டேன். பொம்மைகளை எடுக்க வேண்டும்.


3. செல்லோ டேப்

   பொம்மைகளை எடுத்தப்பின் மீதமிருந்த செல்லோ டேப்பை எடுப்பதே ஒரு சிறு விளையாட்டானது.


4. காந்த வடிவங்கள்

   இது தீஷுவின் விளையாட்டு சாதனம். காந்த வடிவங்களை இரும்பு தட்டிலிருந்து எடுக்க வேண்டும்.


5. ஃப்ரிட்ஜில் காந்த வடிவங்கள்

    ஃப்ரிட்ஜி கதவில் காந்த வடிவங்களை ஒட்டி வைத்தை எடுக்க வேண்டும். விரல்களுடன் தோள் எலும்புகளுக்கும் வேலை.


6.  பென்சில் டப்பா

    பென்சில் டப்பாவை திறந்து மூடுதல்


7. சிடி 

    அதன் பெட்டியிலிருந்து சிடியை எடுத்தல்.


எனக்கு சம்மு செய்யும் பொழுது படங்கள் எடுப்பது கடினமாக இருக்கிறது. நான் படங்கள் எடுக்கிறேன் என்று தெரிந்தால், அவள் கவனம் சிதறுகிறது. ஆகையால் இனிமேல் அவள் செய்யும் பொழுது எடுக்காமல் உபயோகப்படுத்திய பொருட்களை மட்டும் படம் எடுத்துப் போடுகிறேன்.  


Wednesday, May 15, 2013

ஒண்ணுக்குள்ள ஒண்ணு

ஒரு நாள் அப்பாவின் ஷுவிற்குள் தீஷுவின் ஷு இருந்த‌து. ம‌ற்றொரு நாள் தீஷுவின் தோழியின் ஷுவிற்குள் ஒரு விளையாட்டுப் பொருள் இருந்த‌து. ஒண்ணுக்குள் ஒண்ணு போட்டுப் ப‌ழ‌குவ‌து ஒரு Stage. ச‌ம்மு த‌ற்பொழுது அந்த‌ நிலையில் இருக்கிறாள் என்று புரிந்த‌து.

அத‌ற்கு த‌குந்தாற் போல் விளையாண்டோம். அவ‌ளின் விளையாட்டுப் பொருளைக் கூடிய‌ ம‌ட்டும் உப‌யோக‌ப்ப‌டுத்தாம‌ல், புதுப்புது பொருட்க‌ளை அவ‌ளுக்கு அறிமுக‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என்ப‌து என் ஆசை.

ஒரு ட‌ப்பாவில் பேனாக்க‌ளைப் போடுத‌ல்





ஒரு டிஸ்யூ ரோலில் பேனாக்க‌ளைப் போடுத‌ல். ரோல் சின்ன‌தாக இருந்த‌தால் பேனா முழுவ‌தும் போக‌வில்லை. அவ‌ளுக்குத் திருப்தியில்லை. அவ‌ள் கையில் எடுத்து முயற்சித்துப் பார்த்தாள்.



ப‌ந்தை ட‌ப்பாவில் போடுத‌ல். பேனா மெலிதாக‌ இருந்த‌தால், அடுத்து நான் தேர்ந்தெடுத்த‌து ச‌ற்று அக‌லமான‌ ப‌ந்து.



அந்த‌ப் ப‌ந்தின் ஓட்டையில் பேனாவைப் போடுத‌ல். ப‌ந்தை அவ‌ளைப் பிடித்துக் கொண்டாள்.

ப‌ந்தின் ஓட்டையில் ப‌ஞ்சைப் போடுத‌ல். முத‌லில் சிறிய ப‌ஞ்சுக‌ள் கொடுத்தேன். அத‌னைப் போட்டாள். அடுத்து ச‌ற்று பெரிய‌ ப‌ஞ்சைக் கொடுத்தேன். அழுத்திப் போடும் பொழுது விர‌ல்க‌ளுக்கு வேலை கொடுக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவ‌ளின் ஆர்வ‌ம் புதுப் பொருளான‌ ப‌ஞ்சின் மேல் சென்ற‌து. அத‌னை பிய்த்து பிய்த்து விர‌ல்க‌ளுக்கு வேலை கொடுத்தாள். கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌த்து நிமிட‌ங்க‌ள் பிய்க்கும் வேலையை ம‌ட்டும் செய்தாள்.





இதுப் போல் வெவ்வேறு வ‌டிவ‌ங்க‌ளில் பொருட்க‌ள் கொடுத்து உள்ளே போடுவ‌து செய்கிறோம். அவ‌ளுக்கு ஆர்வ‌ம் இருக்கும் வ‌ரை தொட‌ருவேன்.



Tuesday, May 14, 2013

முத‌ல் ஓவிய‌ முய‌ற்சி

தீஷுவின் பிற‌ந்த‌ நாள் அன்று ஓவிய‌ம் செய்யும் பொழுது, ச‌ம்முவையும் இணைக்க‌லாம் என்று நினைத்திருந்தேன். ச‌ம்மு அனைத்தையும் வாயில் வைப்ப‌தால் அவ‌ளுக்காக‌ வீட்டில் பெயிண்ட் செய்ய‌ வேண்டும். அன்று என‌க்கு நேர‌மில்லை. அத‌னால் நேற்று வீட்டில் செய்த‌ பெயிண்ட் வைத்து ஓவிய‌ம் செய்தோம்.

 ச‌ம்முவின் வ‌ய‌திற்கு ஏற்ற‌து விர‌ல் ஓவிய‌ம். விர‌ல்க‌ளால் வ‌ரைவ‌து. தொடுத‌ல் உண‌ர்ச்சிக்கு ஏற்ற‌து. 


 பெயிண்ட் செய்ய‌ தேவையான‌ பொருட்கள் :

1. Corn flour - அரை க‌ப்

 2. குளிர்ந்த‌ நீர் - கால் க‌ப்

 3. கொதிக்கும் நீர் - ஒரு க‌ப்

 4. Food colouring

செய்யும் முறை :

1. குளிர்ந்த‌ நீரில் Corn flour - ஐ முத‌லில் க‌ரைத்துக் கொள்ள‌ வேண்டும்.

2. பின்பு சிறிது சிறிதாக‌ கொதிக்கும் நீரை ஊற்றிக் க‌ல‌க்கிக் கொண்டே இருக்க‌ வேண்டும்.

3. தேவையான‌ ‍அளவிற்கு கட்டியான‌வுட‌ன் கொதிக்கும் நீர் க‌ல‌ப்ப‌தை நிறுத்தி விட‌ வேண்டும். நான் இங்கு தவ‌று செய்துவிட்டேன். மிக‌வும் க‌ட்டியாகி விட்ட‌து.

4. க‌ல‌ரிங் சேர்க்க‌ வேண்டும்.

Love என்று டேப்பால் நானும் தீஷுவும் எழுதி வைத்திருந்தோம். சிறிது பெயிண்ட் எடுத்து கான்வ‌ஸில் போட்டுக் கொடுத்தோம். தொட்ட‌வுட‌ன் ச‌ம்முவிற்கு பிடிக்க‌வில்லை. எழுந்து சென்று விட்டாள். மீண்டும் சிறிது நேர‌த்திற்கு பின் திரும்ப‌ வ‌ந்து தொட்டுப் பார்த்தாள். பிடிக்க‌வில்லை. முத‌ல் ஓவிய‌ முய‌ற்சி இனிதே இவ்வாறு முடிந்த‌து.



 தீஷு ‌ பெயிண்ட்டை வைத்து விளையாண்டு கொண்டிருந்தாள். விர‌ல்க‌ளால் ஏதோ ஒன்று வ‌ரைந்திருக்கிறாள் ப‌ட்டாம்பூச்சி என்று நினைக்கிறேன்.



ச‌ம்மு சாப்பிட்டு முடித்த‌வுட‌ன், மீத‌மிருக்கும் உண‌வை, அது திர‌வ‌ நிலையிலிருந்தால், விளையாட‌ கொடுப்ப‌து என் வ‌ழ‌க்க‌ம். கீழேயும் மேலேயும் கொட்டி தேய்த்து வ‌ரைந்து கொண்டிருப்பாள். அத‌னால் இது அவ‌ளின் முத‌ல் முய‌ற்சி என்று சொல்ல‌ முடியாது.

சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் மீதமிருந்த‌ க‌ஞ்சியை வைத்து ஸ்டூலில் கொட்டி அவ‌ள் செய்த‌ முதல் ஓவிய‌ம்.





த‌யிர் வைத்து ச‌ப்புக் கொட்டிக் கொண்டு அவ‌ள் செய்த ஓவிய‌ம்.



அடுத்த‌ முறை ச‌ற்று த‌ண்ணீராக‌ பெயிண்ட் வைத்து முய‌ற்சி செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.


Tuesday, April 30, 2013

ப‌ழைய‌ துணிக்கு...

ச‌ம்மு பிற‌ந்ததிலிருந்து செய்த‌வைக‌ளை வ‌ரிசையாக‌ எழுத‌வேண்டும் என்று நினைத்து, போட்டோக‌ளைத் தேடி எடுப்ப‌த‌ற்கு நேர‌மில்லாம‌ல், எழுதாம‌ல் இருக்கிறேன். ஆகையால் த‌ற்பொழுது அவ‌ளுக்குச் செய்வ‌தை எழுத‌லாம், ந‌டுந‌டுவே குழ‌ந்தையாக‌ இருந்த‌ பொழுது செய்த‌தை எழுத‌லாம் என்று நினைத்திருக்கிறேன்.

ச‌ம்முக்கு த‌ற்ச‌ம‌ய‌ம் ஒரு வ‌ய‌து இருக்கிற‌து. தானாக‌வே எதையும் வைத்து விளையாடும் வ‌யது. கிட்ட‌த்த‌ட்ட‌ அனைத்துப் பொருட்க‌ளும் அவ‌ளுக்குப் புதிய‌து. அத‌னால் எதைப் பார்த்தாலும் தொட்டோ சுவைத்தோ பார்ப்பாள். நாம் த‌னியாக‌ எதுவும் செய்யத் தேவையில்லை என்ப‌து உண்மை.ஆனால் நான் அவ‌ளுட‌ன் த‌னியாக‌ விளையாட‌ அவ‌ளுக்காக‌ நேர‌ம் செல‌விட (One to One)‌ வேண்டும் என்ப‌தே என் விளையாட்டுக‌ளின் நோக்கம். மேலும் அவ‌ளுக்கு விருப்ப‌மான‌ நேர‌ம் ம‌ற்றும் அவ‌ள் விரும்பும் வ‌கையில் ம‌ட்டும் விளையாடுவோம். சிறு குழ‌ந்தையிட‌ம் எவ்வித‌மான‌ப் பொருட்க‌ள் கொடுத்தாலும், த‌ய‌வு செய்து முழு நேர‌மும் அருகில் இருங்க‌ள்.

நான் வித‌ வித‌மான‌ காகித‌ங்க‌ளை அவ‌ளிட‌ம் கொடுத்து விளையாட விடுவேன். உதார‌ண‌த்திற்கு பிஸ்க‌ட் க‌வ‌ர், டிஸ்யூ பேப்ப‌ர், கிஃப்ட் ராப், ப‌புள் ராப் போன்ற‌ன‌. ஒவ்வொரு பேப்ப‌ரும் ஒரு வித‌மான‌ த‌ன்மை உடைய‌து. அது தொடும் உண‌ர்ச்சியைத் தூண்டும். ச‌ம்மு எதையும் வாயில் வைப்ப‌தால் என‌க்கு நேர‌ம் இருக்கும் பொழுது தான் குடுப்பேன்.

பொதுவாக‌ ச‌ம்முவிற்காக‌ விளையாட்டுப் பொருட்க‌ள் செய்யும் பொழுது தீஷுவை இணைத்துக் கொள்வேன். இந்த‌ விளையாட்டிற்கு, நாங்க‌ள் ப‌ல‌ வித‌ துணிக‌ள் எடுத்துக் கொண்டோம். ஒரு ட‌ப்பா ம‌ற்றும் அத‌ன் பிளாஸ்டிக் மூடி எடுத்துக் கொண்டோம். பிளாஸ்டிக் மூடியில் உண்டிய‌லில் இருக்கும் அள‌விற்கு ஒரு ஓட்டை க‌த்தியால் வெட்டிவிட்டோம். உள்ளே துணிக‌ளை வைத்து விட்டோம். ஒரு துணி ஓட்டையின் வ‌ழியே வெளியே தெரியும் ப‌டி வைத்து விட்டோம். அந்த துணியை உருவ‌ வேண்டும். உருவும் பொழுது அடுத்த‌ துணி பெரும்பாலான நேர‌ங்க‌ளில் வெளியே வ‌ந்து விடுகிற‌து. தொடுத‌ல் உண‌ர்ச்சிக்கும், கை விர‌ல்க‌ள் வ‌லுப்ப‌டுத்துவ‌த‌ற்கும் இந்த‌ விளையாட்டு மிக‌வும் உத‌வுகிற‌து. ஐடியா ஒரு புத்த‌க‌த்தில் ப‌டித்த‌து. புத்த‌கத்தில் அனைத்துத் துணிக‌ளையும் இணைத்து தைத்து ஒரு முழு நீளத் துணியாக‌க் கொடுக்க‌ச் சொல்லி இருந்தார்க‌ள். அது ச‌ம்முக்கு க‌டின‌ம் என்று என‌க்குத் தோன்றிய‌து.

ஒரு நாள் அந்த‌ ட‌ப்பாவை ச‌ம்முவிட‌ம் கொடுத்த‌வுட‌ன், துணிக‌ளை இழுத்தாள்.



அனைத்துத் துணிக‌ளையும் எடுத்து முடித்த‌வுட‌ன், மூடியைத் திற‌ந்து கொடுத்தேன். மீண்டும் துணிக‌ளை உள்ளே போட‌ முயற்சித்தாள்.


 மூடியை மூட‌ முய‌ற்சித்தாள்.




சில விளையாட்டுப் பொருட்கள் உள்ளே போட்டாள். துணிகளைத் தூக்கி எறிந்தாள்.



 மொத்த‌ம் இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் விளையாண்டாள் :‍)). ஆனால் தின‌மும் வெவ்வேறு நேர‌ங்க‌ள் எடுத்துக் கொடுப்பேன். ஒவ்வொரு முறையும் விளையாடும் முறையும் நேர‌மும் வேறுப‌டும்.

ப‌ழைய‌ துணிக‌ளுக்குப் புதிய‌ வேலை கொடுத்த‌தில் ச‌ந்தோஷ‌ம்.

Friday, March 22, 2013

க‌ருப்பு வெள்ளைப் ப‌ட‌ங்க‌ள்

குழ‌ந்தை பிற‌ப்பத‌ற்கு முன்னால் க‌ருவிலிருந்தே க‌ற்கிறது என்ப‌து நாம் எல்லோரும் அறிந்ததே. குழ‌ந்தை பிற‌ந்த‌ பின் தன் ஐம்புல‌த்தினால் த‌ன்னை சுற்றியுள்ள பொருட்க‌ள் மூல‌ம் க‌ற்றுக் கொண்டே இருக்கும். ஐம்புல‌த்தில் ஒன்றான‌ பார்வை, பிறந்த‌ குழ‌ந்தைக்கு 8 முதல் 15 இன்ச் வ‌ரை ம‌ட்டுமே இருக்கும். அதுவும் க‌ருப்பு வெள்ளை போன்ற‌ கான்ட்ராஸ்ட் (contrast) வ‌ண்ண‌ங்க‌ள் கொண்ட‌ ப‌டங்க‌ள் ஈர்க்கும் என்று ப‌டித்திருந்தேன்.


தீஷுவிற்கு குழ‌ந்தை மேல் பிரிய‌ம் வ‌ர எந்த‌ பொருள் குழ‌ந்தைக்குச் செய்தாலும் தீஷுவை இணைத்துக் கொள்வேன்.முதலில் க‌ருப்பு வெள்ளை ப‌டங்க‌ள் கொண்ட‌ ப‌டங்க‌ள் இணைத்து குழ‌ந்தையின் முக‌த்திற்கு நேர் தொங்க‌ விட‌லாம் என்று
http://www.sleepingbaby.net/jan/Baby/mobile.html

என்ற‌ ப‌க்க‌த்திலிருந்து பிரிண்ட் அவுட் எடுத்து, அட்டையில் ஒட்டி, நூலினால் க‌ட்டிக் கொண்டோம். ஆனால் அட்டையில் ஒட்டிய‌தால், ச‌ற்று க‌ன‌மாக‌ இருந்தது. இங்கு ஆணி அடிக்க‌ முடிய‌வில்லை. தொங்கும் நூலை டேப் கொண்டு ஒட்டி விட்டோம். ஆனால் சிறிது நேர‌த்தில் விழுந்துவிட்ட‌து. முத‌ல் ப்ராஜெட்டே சொத‌ப்ப‌ல்.

தொங்க‌ விட‌ முடிய‌வில்லை என்ப‌தால் மேலும் சில‌ ப‌டங்க‌ள்

http://www.brillkids.com/free-download/infant-stimulation-cards.php

இருந்து பிரிண்ட் அவுட் எடுத்து குழ‌ந்தை ப‌டுத்திருந்த‌ ப‌டுக்கைக்கு அருகிலிருந்த‌ சுவ‌ரில் ஒட்டிவிட்டோம். பிரிண்ட் அவுட் எடுக்க‌ வேண்டும் என்று இல்லை. நாமே கூட‌ வ‌ரைய‌லாம்.

தீஷுவிற்கு நாமே ஏதாவ‌து செய்ய‌ வேண்டும் என்று ஆசை. வெள்ளை க‌ருப்பு பேப்ப‌ர்க‌ளை கொண்டு பேப்ப‌ர் வீவிங் முறையில் ஒரு ப‌டம் செய்து ஒட்டினோம். அது ச‌ம்முவிற்கு மிக‌வும் பிடித்திருந்த‌து.


அவ‌ள் அந்த‌ ஆர்ட்டிட‌ம் பேசும் வீடியோ



தீஷு அவளாக‌வே த‌ங்கைக்குச் சொல்லிக் கொடுக்கும் வீடியோ



முத‌ல் சில‌ மாத‌ங்க‌ளுக்கு முடிந்த‌ வ‌ரை இவ்வாறு ப‌ட‌ங்க‌ள் அவ‌ள் பார்வைப் ப‌டும் இட‌ங்க‌ளில் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost