கடந்த சனி எங்களுக்கு எப்பொழுதும் போல் தான் விடிந்தது. பக்கத்திலுள்ள ப்ரிமாண்ட் சென்று சாப்பிட்டு விட்டு, இந்திய மளிகை வாங்கி வரலாம் என்று பதினொறு மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். கிளம்பி ஐந்து நிமிடங்களில் ஹைவே அடைந்தோம். எப்பொழுதும் ஒரு மணி நேரம் பயணித்தாலும் தூங்காத சம்மு ஐந்து நிமிடங்களில் தூங்கி இருந்தாள். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஏய் என்று என் கணவர் கத்தும் சத்தம் மட்டுமே எனக்குக் கேட்டது. இடது பக்கத்தில் ஒரு வெள்ளை ராட்சச அளவில் ஒரு வண்டியின் ஒரு ஓரம் மட்டுமே தெரிந்தது. எங்கள் கார் சுற்றத் தொடங்கியது. தாறுமாறாக ஓடியது. ஒர சுவற்றில் மோதியது. மோதிய வேகத்தில் திரும்பி வந்தது, அதுவாகவே நின்றது. ஐந்து விநாடிகள் தான்.
காரின் உள்ளே முழுவதும் புகை. கதவைத் திறந்தேன். வெளியில் இருபது பேர் நின்று இருந்தார்கள். உதவுவதற்காக தங்கள் காரிலிருந்து இறங்கியவர்கள். ஒருவர் நான் இறங்குவதற்கு ஏதுவாக கையை நீட்டினார். என் குழந்தைகளைப் பாருங்கள் என்று கூறி பின்னால் கையை நீட்டினேன். அதற்குள் என் கணவர் இறங்கி அவர்களை கார் சீட்டிலிருந்து இறக்கி இருந்தார். என் வலது காலில் சிறிது வலி. நடக்கச் சற்று சிரமமாக இருந்தது. இடித்த வண்டி ஓடி விட்டது.
இறங்கியவுடன் மற்ற மூவரையும் கண்டவுடன், உண்மையாகச் சொல்லுகிறேன் மனதில் அப்படி ஒரு அமைதி. இடித்த வேகத்தில் முழித்த சம்மு புகையைப் பார்த்து பயந்திருந்தாள். தீஷு பயத்தில் அழுது கொண்டிருந்தாள். அவர்களை அணைத்துக் கொண்டு தண்ணீர் கொடுத்தேன். யாருக்கும் பெரிய வெளி காயங்கள் இல்லை. யாரோ போலிஸை அழைத்தார்கள். இரண்டு நிமிடங்களில் போலிஸ் வந்தனர். ஆம்புலன்ஸ் வந்தது. எங்களுக்கு ப்ரஷர் போன்றவற்றை செக் செய்து விட்டு ஆம்புலன்ஸ் சென்றுவிட்டது. என்ன நடந்தது என்று பின்னால் இருந்து பார்த்தவர்கள் போலிஸில் தெரிவித்தார்கள். இரண்டு லேன்கள் ஒரே நேரத்தில் கடக்க முயற்சி செய்திருக்கிறார் இடித்தவர். எங்கள் காரை கவனிக்கவில்லை. இடித்து விட்டு சென்றுவிட்டார்.
கார் கதவை அழுத்தி மூடாதே, கார் கண்ணாடியில் ஒரு கீரல் வந்துவிட்டது என்று பார்த்து பார்த்து வைத்திருந்த கார் எங்கள் கண் முன், முன் பாகம் முற்றும் இழந்து சிதறி கிடந்தது. ஆனால் மனதில் ஒரு ஓரத்திலும் வலி இல்லை. என் குழந்தைகளை அணைத்துக் கொள்ளவே தோன்றியது. டிராபிக் ஜாமாகி அனைவரும் எங்களைப் பார்த்துக் கொண்டே சென்றாலும், அதை யோசிக்கக் கூடத் தோன்றவில்லை. வீட்டிற்கு எப்படி செல்வது, சென்றவுடன் குழந்தைகளுக்கு என்ன சாப்பிடக் கொடுக்கலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன். வெளியில் சாப்பிட ப்ளான் இருந்ததால் ஒன்றும் சமைத்திருக்கவில்லை.
விபத்து முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. என் வலது காலில் சுலுக்கு இருக்கிறது. டாக்டர் முறிவு இல்லை என்று சொல்லிவிட்டார். உடம்பில் ஒவ்வொரு பாகமும் வலிக்கிறது. மூச்சு விட்டால் கூட ஏதோ பாகத்தில் ஒரு வலி. தீஷுவிற்கு சொல்லத் தெரியும். திடீரென்று எங்கோ ஒரு இடத்தில் வலிக்கிறது என்று சொல்லுகிறாள். அப்புறம் சரியாகி விடுகிறது. அது பரவாயில்லை. சம்முவிற்கு சொல்லத் தெரியுமா என்று கூட தெரியவில்லை. ஆனாலும் இந்த விபத்துக் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம். அந்த ஐந்து விநாடிகளில் எங்கள் வாழ்க்கை எப்படியோ மாறி போய் இருக்கலாம். இவ்வளவு தான் வாழ்க்கை. இப்படியொரு நிலையில்லாத வாழ்க்கைக்குத் தான் நாம் இப்படி அலட்டிக் கொள்கிறோம்.
விபத்திற்குப் பின், எங்கள் முன் இருக்கும் முக்கிய சவால், எங்கள் குழந்தைகளின் மன நிலையை மாற்றுவது. கார்ல புகை போயிடுச்சா என்று கேட்கும் சம்முவையும், இனிமே கார்ல ஏற மாட்டேன் என்று இருக்கும் தீஷுவையையும் சமாளிக்க வேண்டும். அவர்களை சிறிது சிறிதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
விபத்தைப் பின்னால் இருந்து பார்த்தவர்களின் கூற்றுப்படி, எங்கள் கார் 360 சுற்றி இருக்கிறது. ஓரத்தில் மோதி, மோதிய வேகத்தில் சற்று பின்னால் வந்து நின்று இருக்கிறது. எங்களுக்கு சிறு கீரல் கூட இல்லாமல் காப்பாற்றிய எங்கள் கார், தூக்கிப் போடும் நிலையில் இருக்கிறது. கார் இவ்வளவு சிதைந்து இருந்தாலும், உள்ளே எங்களைக் காத்தவை - சீட் பெல்ட், கார் சீட், ஏர் பாக். இப்பொழுது இந்தியாவிலும் 100 கி.மி வேகத்திலும் செல்லும் சாலைகள் வந்துவிட்டன். ஆனால் எத்தனை பேர் கார் சீட் அணிகிறோம், எத்தனை பேர் குழந்தைகளை கார் சீட்டில் அமர வைக்கிறோம், எத்தனை காரில் ஏர் பாக் இருக்கிறது? அனைவருக்கும் வேண்டுகோள் - சீட் பெல்டை அணியுங்கள், குழந்தைகளை மடியில் வைப்பதே தவிருங்கள்.
எங்களின் வாழ்க்கைப் பற்றிய பார்வையை கண்டிப்பாக இந்த விபத்து மாற்றி இருக்கிறது.