Monday, July 28, 2014

ஒரு விபத்தும், மன அமைதியும், வேண்டுகோளும்..

கடந்த சனி எங்களுக்கு எப்பொழுதும் போல் தான் விடிந்தது. பக்கத்திலுள்ள ப்ரிமாண்ட் சென்று சாப்பிட்டு விட்டு, இந்திய மளிகை வாங்கி வரலாம் என்று பதினொறு மணி அளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். கிளம்பி ஐந்து நிமிடங்களில் ஹைவே அடைந்தோம். எப்பொழுதும் ஒரு மணி நேரம் பயணித்தாலும் தூங்காத சம்மு ஐந்து நிமிடங்களில் தூங்கி இருந்தாள். அடுத்த ஐந்து நிமிடங்களில் ஏய் என்று என் கணவர் கத்தும் சத்தம் மட்டுமே எனக்குக் கேட்டது. இடது பக்கத்தில் ஒரு வெள்ளை ராட்சச அளவில் ஒரு வண்டியின் ஒரு ஓரம் மட்டுமே தெரிந்தது. எங்கள் கார் சுற்றத் தொடங்கியது. தாறுமாறாக ஓடியது. ஒர சுவற்றில் மோதியது. மோதிய வேகத்தில் திரும்பி வந்தது, அதுவாகவே நின்றது. ஐந்து விநாடிகள் தான்.

காரின் உள்ளே முழுவதும் புகை. கதவைத் திறந்தேன். வெளியில் இருபது பேர் நின்று இருந்தார்கள். உதவுவதற்காக தங்கள் காரிலிருந்து இறங்கியவர்கள். ஒருவர் நான் இறங்குவதற்கு ஏதுவாக கையை நீட்டினார். என் குழந்தைகளைப் பாருங்கள் என்று கூறி பின்னால் கையை நீட்டினேன். அதற்குள் என் கணவர் இறங்கி அவர்களை கார் சீட்டிலிருந்து இறக்கி இருந்தார். என் வலது காலில் சிறிது வலி. நடக்கச் சற்று சிரமமாக இருந்தது. இடித்த வண்டி ஓடி விட்டது. 

இறங்கியவுடன் மற்ற மூவரையும் கண்டவுடன், உண்மையாகச் சொல்லுகிறேன் மனதில் அப்படி ஒரு அமைதி. இடித்த வேகத்தில் முழித்த சம்மு புகையைப் பார்த்து பயந்திருந்தாள். தீஷு பயத்தில் அழுது கொண்டிருந்தாள். அவர்களை அணைத்துக் கொண்டு தண்ணீர் கொடுத்தேன். யாருக்கும் பெரிய வெளி காயங்கள் இல்லை. யாரோ போலிஸை அழைத்தார்கள். இரண்டு நிமிடங்களில் போலிஸ் வந்தனர். ஆம்புலன்ஸ் வந்தது. எங்களுக்கு ப்ரஷர் போன்றவற்றை செக் செய்து விட்டு ஆம்புலன்ஸ் சென்றுவிட்டது. என்ன நடந்தது என்று பின்னால் இருந்து பார்த்தவர்கள் போலிஸில் தெரிவித்தார்கள். இரண்டு லேன்கள் ஒரே நேரத்தில் கடக்க முயற்சி செய்திருக்கிறார் இடித்தவர். எங்கள் காரை கவனிக்கவில்லை. இடித்து விட்டு சென்றுவிட்டார். 

கார் கதவை அழுத்தி மூடாதே, கார் கண்ணாடியில் ஒரு கீர‌ல் வந்துவிட்டது என்று பார்த்து பார்த்து வைத்திருந்த கார் எங்கள் கண் முன், முன் பாகம் முற்றும் இழந்து சிதறி கிடந்தது. ஆனால் மனதில் ஒரு ஓரத்திலும் வலி இல்லை. என் குழந்தைகளை அணைத்துக் கொள்ளவே தோன்றியது. டிராபிக் ஜாமாகி அனைவரும் எங்களைப் பார்த்துக் கொண்டே சென்றாலும், அதை யோசிக்கக் கூடத் தோன்றவில்லை. வீட்டிற்கு எப்படி செல்வது, சென்றவுடன் குழந்தைகளுக்கு என்ன சாப்பிடக் கொடுக்கலாம் என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன். வெளியில் சாப்பிட ப்ளான் இருந்ததால் ஒன்றும் சமைத்திருக்கவில்லை.

விபத்து முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. என் வலது காலில் சுலுக்கு இருக்கிறது. டாக்டர் முறிவு இல்லை என்று சொல்லிவிட்டார். உடம்பில் ஒவ்வொரு பாகமும் வலிக்கிறது. மூச்சு விட்டால் கூட ஏதோ பாகத்தில் ஒரு வலி. தீஷுவிற்கு சொல்லத் தெரியும். திடீரென்று எங்கோ ஒரு இடத்தில் வலிக்கிறது என்று சொல்லுகிறாள். அப்புறம் சரியாகி விடுகிறது. அது பரவாயில்லை. சம்முவிற்கு சொல்லத் தெரியுமா என்று கூட தெரியவில்லை. ஆனாலும் இந்த விபத்துக் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம். அந்த ஐந்து விநாடிகளில் எங்கள் வாழ்க்கை எப்படியோ மாறி போய் இருக்கலாம். இவ்வளவு தான் வாழ்க்கை. இப்படியொரு நிலையில்லாத வாழ்க்கைக்குத் தான் நாம் இப்படி அலட்டிக் கொள்கிறோம்.

விபத்திற்குப் பின், எங்கள் முன் இருக்கும் முக்கிய சவால், எங்கள் குழந்தைகளின் மன நிலையை மாற்றுவது. கார்ல புகை போயிடுச்சா என்று கேட்கும் சம்முவையும், இனிமே கார்ல ஏற மாட்டேன் என்று இருக்கும் தீஷுவையையும் சமாளிக்க வேண்டும். அவர்களை சிறிது சிறிதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

விபத்தைப் பின்னால் இருந்து பார்த்தவர்களின் கூற்றுப்படி, எங்கள் கார் 360 சுற்றி இருக்கிறது. ஓரத்தில் மோதி, மோதிய வேகத்தில் சற்று பின்னால் வந்து நின்று இருக்கிறது. எங்களுக்கு சிறு கீரல் கூட இல்லாமல் காப்பாற்றிய எங்கள் கார், தூக்கிப் போடும் நிலையில் இருக்கிறது. கார் இவ்வளவு சிதைந்து இருந்தாலும், உள்ளே எங்களைக் காத்தவை - சீட் பெல்ட், கார் சீட், ஏர் பாக். இப்பொழுது இந்தியாவிலும் 100 கி.மி வேகத்திலும் செல்லும் சாலைகள் வந்துவிட்டன். ஆனால் எத்தனை பேர் கார் சீட் அணிகிறோம், எத்தனை பேர் குழந்தைகளை கார் சீட்டில் அமர வைக்கிறோம், எத்தனை காரில் ஏர் பாக் இருக்கிறது? அனைவருக்கும் வேண்டுகோள் - சீட் பெல்டை அணியுங்கள், குழந்தைகளை மடியில் வைப்பதே தவிருங்கள். 

எங்களின் வாழ்க்கைப் பற்றிய பார்வையை கண்டிப்பாக இந்த விபத்து மாற்றி இருக்கிறது. 


31 comments:

  1. Glad to know you are all safe (seat belts and air-bags saved your lives)! I think it will take a little while for the kids to come back from that shock but they will become normal soon. I have never had any serious accidents like this YET. But you never know when will it be my turn!

    The problem here is, you, being a safe driver, does not guarantee your safety all the time. You can be a victim for other driver's fault- just like here. What to do? Life is not fair when you are paying a price for someone's fault! :(

    ReplyDelete
    Replies
    1. Yes Varun. Kids have more mental agony than physical pain. It takes time to heal. My husband's friend used to tell,"You can't be called as a good driver or bad driver. You can be called as a lucky driver as everybody is driving properly when you are driving". It has been made true.

      Delete
  2. படிக்கும்போதே பதறுகிறது. :-(

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீதர்! We had a roller coaster ride :-)

      Delete
  3. Glad that you all are safe. Something similar has happened to us last weekend as well. Once agian, the car seat belts proved its worth.

    ReplyDelete
  4. ////இவ்வளவு தான் வாழ்க்கை. இப்படியொரு நிலையில்லாத வாழ்க்கைக்குத் தான் நாம் இப்படி அலட்டிக் கொள்கிறோம்.//// மிக மிக உண்மையான அனுபவ வரிகள்

    ReplyDelete
  5. இதே அனுபவம் எனக்கும் ஏற்பட்டு இருக்கிறது. எனது குழந்தை 3 வயது இருக்கும் போது ஏற்பட்டது இன்னும் மறக்க முடியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரைத் தமிழன்! மறக்க முடியாத அனுபவம் தான்!

      Delete
  6. இந்தியாவில் பயணம் செய்வதில் உள்ள ஆபத்துகளை அடியொட்டி நிரைய ஆன்மீக வியாபாரம் நடக்கிறது. நான் பார்த்த ஒரு ஆவணபடத்தில், ஒரு சாமியார் இமய மலைக்கு அமெரிக்கர்களை பனியில் இருசக்கர வண்டிகளில் பயணம் செய்யவைத்து அவர்களுக்கு இல்லாத கலவரத்தை ஏற்படுத்தினார்.

    பாதுகாப்பாக பயணம் செய்ய முடிந்தால், இந்தியர்களுக்கு இருக்கும் மன அழுத்தங்களில் பாதியாவது குறையும்.

    ReplyDelete
    Replies
    1. //பாதுகாப்பாக பயணம் செய்ய முடிந்தால், இந்தியர்களுக்கு இருக்கும் மன அழுத்தங்களில் பாதியாவது குறையும்//
      உண்மை குலவுசனப்பிரியன். தங்கள் வருகைக்கு நன்றி!

      Delete
  7. வணக்கம்
    படிக்கும் போது மனதை கலக்கியது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. மிகவும் கடினமான நேரம்.....we must thank to god...

    ReplyDelete
  9. நல்ல வேளை,நான் ..சாரி ..நீங்கள் பிழைத்துக் கொண்டீர்கள் !
    த ம 2

    ReplyDelete
  10. படிக்கும் போதே மனம் பதறுகிறது. அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பி எல்லோரும் நலமாக இருப்பது இறைவனின் அருள். கடவுளுக்கு நன்றி.
    குழந்தைகள் பயம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறும்.

    பாதுகாப்பாக பயணம் செய்ததால் விபத்திலிருந்து தப்பிக்க முடிந்தது.

    ReplyDelete
  11. அடப்பாவமே...நல்ல வேலை ஒன்றும் ஆகவில்லை..போன் பண்ணு

    ReplyDelete
  12. குழந்தைகள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு நேரம் எடுக்கும். இறைவனுக்கு நன்றி

    ReplyDelete
  13. கஷ்டத்திலிருந்து மீட்ட கடவுளுக்கு நன்றி.

    ReplyDelete
  14. விபத்தில் இருந்து மீண்டமைக்கு வாழ்த்துக்கள்! கார் சீட் பெல்ட், ஹெல்மெட் போன்றவை இங்கே கடைபிடிக்காமையால் பல உயிரிழப்புக்கள்! இந்த விழிப்புணர்வு தானாக வரவேண்டும்!

    ReplyDelete
  15. ஓ தியானா!! ரொம்ப பதட்டமாக இருக்கிறது, உங்கள் பதிவை படித்ததும்!!
    ஆனாலும், நீங்கள் ,இந்த இடுகையை மிகுந்த நிதானத்துடனும் அர்த்தத்துடனும் எழுதியிருக்கிறீர்கள்.

    குழந்தைகள் விரைவில் மீண்டுவிடுவார்கள்!! டேக் கேர்!!

    ReplyDelete
  16. விபத்திலிருந்து கடவுள் அருளால் நல்லபடியாக தப்பித்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம். சின்னக் குழந்தைகள் சீக்கிரம் மறந்து விடுவார்கள். நமக்குத்தான் நினைக்கும்போதெல்லாம் வயிறு கலங்கும்.
    எத்தனை விபத்துக்களைப் பார்த்தாலும், கேட்டாலும், செய்தித்தாள்களில் படித்தாலும் 'நமக்கு ஒன்றும் ஆகாது என்ற அலட்சியப் போக்கினால், தங்களுக்கு வரும்போதுதான் அதன் முழு வீச்சு என்ன என்பது ஒவ்வொருவருக்கும் புரிகிறது. அதுவரை யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

    ReplyDelete
  17. ஆண்டவன் புண்ணியத்தில் யாருக்கும் பெரிதாக அடிபட வில்லை.
    தங்களின் இந்த அனுபவத்தை படிப்பவர்கள், கண்டிப்பாக பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள்.

    ReplyDelete
  18. படிக்கும் போதே மனம் பதறுகிறது தோழி. தாங்களும் தங்களது குழந்தைகளும் இந்த அதிர்விலிருந்து மீள இறைவனை வேண்டுகிறேன். எந்நாளும் இறைவன் தங்களுக்கு துணையிருப்பாராக.

    ReplyDelete
  19. கண்ணிமைக்கும் பொழுதில் விபத்து.. மனம் பதறுகிறது.
    விபத்திலிருந்து காத்தருளிய இறைவனுக்கு நன்றி..

    ReplyDelete
  20. மனம் பதறிவிட்டது. ஹப்பா நீங்கள் அனைவரும் சேஃபாக தப்பித்தீர்களே. கலிஃபோரினியாவிலும் விபத்துகள்! அமெரிக்காவில் இந்த மாகாணத்தில்தான் லைசன்ஸ் வாங்குவது கொஞ்சம் கடினம் என்பதும். நீங்கள் இதிலிருந்து மீள நாங்கள் பிரார்த்திக்கின்றோம். நிலையில்லா வாழ்க்கை என்பது நிதர்சனம். நாம் சரியாக ஓட்டினாலும் மற்றவர்களும் அப்படி ஓட்ட வேண்டுமே. அங்கேயே இப்படி என்றால்....இங்கு.....!!?? எங்களுக்கு ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் சென்று வருகின்றோம்...

    இதில் ஒரு ரஷ்ய ஆய்வு சொல்கின்றதாம். இந்தியாவில் தான் சேஃப் ட்ரைவிங்க் என்று.

    ReplyDelete
  21. படிக்கும் போதே மனம் பதைபதைக்கிறது. அந்த கடவுள் அருளால் பெரிய காயங்கள் இல்லாமல் தப்பியது குறித்து ஆறுதலளிக்கிறது.

    ReplyDelete
  22. கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்! நாங்கள் இப்பொழுது நலமாக இருக்கிறோம். ஆம், இறைவனுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  23. பயங்கரமான அனுபவம். என் மனைவி குழந்தைகள் சென்ற வாகனம் இதே போல இரு வருடங்களுக்கு முன் விபத்தை சந்தித்தது. அனைவரும் நலம். ஆனாலும் மனதளவில் பாதிப்பு பல நாட்கள் தொடர்ந்து இருந்தது. மீண்டு விடுவீர்கள். இன்சூரன்ஸ் கிளைம் .. போலிஸ் ரிப்போர்ட்.. எல்லாவற்றையும் சரியான நேரத்தில் செய்து விடுங்கள். ஆம்புலன்ஸ் பில் போன்ற எல்லா மெடிக்கல் பில்களையும் பத்திரமாக வைத்திருங்கள். ஒரு வருடம் கழித்து எங்கள் இன்சுரன்ஸ் கம்பெனி எல்லாவற்றையும் கேட்டார்கள்!

    அதே போல, இரு வருடத்துக்குள் க்ளைம் பண்ணவேண்டும் என்ற விதி இருக்கிறது, கலிபோர்னியாவில்.. (என நம்புகிறேன்) சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost