Friday, September 6, 2013

நான் கண்காணிக்கப்படுகிறேன்

நான் என் வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் பொழுது, யாராவது என்னைத் தொடர்ந்து கவனித்தால் எனக்குப் பிடிக்காது. கவனிப்பது என்றால் என்னைப் பார்த்துக் கொண்டேயிருப்பது. அப்படி பார்ப்பவர்களை நான் கடிந்து கொள்வதும் உண்டு. நானும் சம்முவும் இருக்கும் பொழுது, அவள் விளையாண்டு கொண்டிருப்பாள். நான் என் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பேன். ஒன்னரை வயது குழந்தை என்னை கவனித்து என்ன செய்துவிடும் என்று நானும் கண்டுகொள்ளுவதில்லை. 

இரு வாரங்களுக்கு முன்பு சமையல் அறையில் சிறிது தண்ணீர் கொட்டி இருந்தது. உள்ளே வராதே தண்ணீர் கொட்டியிருக்கு என்றவுடன், சம்மு நேரே சென்று, நான் துடைக்கும் துணியை எடுத்து வந்து துடைக்கத் தொடங்கினாள். நான் துடைப்பதை என்றோ பார்த்திருக்கிறாள். நேற்றும் அதே போல், கார்ப்பெட்டில் தண்ணீர் கொட்டியவுடன், நேரே சென்று துணி எடுத்து வந்து துடைக்கத் தொடங்கினாள். குழந்தைகள் நம் செயல்கள் மூலம், பேச்சின் மூலம், சூழ்நிலையின் மூலமும் கற்கிறார்கள் என்பதை தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். 

ஒருமுறை தீஷுவிடம் தூங்குகிறாயா என்று கேட்டதற்கு, இரண்டு நிமிடங்கள் கழித்து தூங்குகிறேன் என்றாள். இப்பொழுது வராத தூக்கம் இரண்டு நிமிடங்கள் கழித்து உனக்கு வந்துவிடுமா என்று கேட்டதற்கு, இரண்டு நிமிடம் என்று சொன்னவுடன், அடுத்த வேலைக்குப் போய்விடுவீர்கள் அதனால் 20 நிமிடங்கள் கழித்து தான் அடுத்த முறை தூக்கத்தைப் பற்றி எப்பொழுதும் கேட்பீர்கள் என்றாள். ஒரு முறை கூட நான் அவ்வாறு செய்ததை நான் உணர்ந்தது இல்லை. என் நடவடிக்கைகளை கவனித்து இருக்கிறாள். 

இப்பொழுது என்னால் கடிந்து கொள்ளமுடிவதில்லை. ஆனால் என் செயல்கள் கண்காணிக்கப்படுவதால், நான் என்ன செய்கிறேன் என்று அடிக்கடி யோசித்துக் கொள்கிறேன்.   

12 comments:

  1. :) So true! :)

    Spouses are witnesses of each others life n kids are witnesses of parent's life, at least till they grow up!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மகி.. குழந்தைகள் பெரிதாக ஆனவுடன் நாம் அவர்களை கவனிக்கத் தொடங்கிவிடுவோம் :-))

      Delete
  2. உண்மை தான்... நமக்குத் தெரியாமலே ஒவ்வொரு செயலையும் பேசுவதையும் கண்காணிப்பார்கள்... தீஷு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தனபாலன்..

      Delete
  3. குழந்தைகள் நம் செயல்கள் மூலம், பேச்சின் மூலம், சூழ்நிலையின் மூலமும் கற்கிறார்கள் என்பதை தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள்.
    உண்மைதான் பெரியவர்கள் செய்வதைப்பார்த்து பலவற்றையும் கற்கிறார்கள் என்பதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உண்மை Viya Pathy. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல!!!

      Delete
  4. குழந்தைகளுக்கு நாம்தான் வழிகாட்டி. அதனால்தான் அவர்கள் இருக்கும்போது அது பிடிக்காது, இது பிடிக்காது என்று சொல்வதோ, அவர்கள் இப்படி, இவர்கள் அப்படி என்று பேசுவதோ கூடாது. விவரம் புரியாமலேயே நாம் சொல்வதை அவர்களும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் திருப்பிச் சொல்லும் அபாயம் இருக்கிறது.

    குழந்தைகள் நம்மைக் கண்காணித்து நாம் செய்வதை செய்யும் போது நிச்சயம் மகிழ்ச்சி ஏற்படும்.

    குழந்தைகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை அம்மா. என் தோழி, தன் மகள் முன்னே மற்றொரு தோழியை குறை சொல்ல, வேறொரு சந்தர்ப்பத்தில் மகள் தெரியாமல் அவர்களிடம் தன் அம்மா சொல்லியதைச் சொல்லிவிட பெரிய சிக்கலாகி விட்டது. உங்கள் வருகைக்கு நன்றிகள் அம்மா!!

      Delete
  5. சம்மு கலக்குகிறாள் போ.. :)
    உண்மைதான், குழந்தைகள் நம்மை பின்பற்றுகிறார்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ் வருகைக்கு!!

      Delete
  6. அய்யோ...இந்த அப்சர்வ் பண்றாங்கன்ற உணர்வு இருக்கே....எதையும் சாதாரணமோ செஞ்சுடவோ சொல்லிடவோ முடியாது!! :‍)) தீஷூ சொன்ன பதில் செம!! :‍)

    ReplyDelete
  7. ஆமாம் முல்லை.. யாரோ நம்மைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும்..

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost