Thursday, September 30, 2010

ஷு டப்பாவும் பந்தும்

தீஷுவுடனான என்னுடைய விளையாட்டுகளைப் பதிய ஆரம்பித்த பொழுது அவளுக்கு வயது இரண்டு. அவளுக்கு ஒன்பது மாதமான நிலையில், அவள் நன்றாக உடகார ஆரம்பித்தவுடன் அவளுடன் நான் இது மாதிரி விளையாடத் தொடங்கினேன். ஆனால் ஏனோ அவற்றை எழுத தோன்றவில்லை. எப்பொழுதும் என் பதிவு தீஷு என்ன செய்தாள், எப்படி செய்தாள், அவளுக்குப்பிடித்ததா என்பதைச் சுற்றியே இருக்கும். அதை விட்டு நான் என் சொந்த விசயங்கள், பொதுவான அம்சங்கள் பகிர்ந்தது மிகவும் குறைவு. இப்பொழுது சில செயல்முறைகள் தீஷு முன்பு செய்தது அல்லது அவளுடன் நான் செய்ய வேண்டும் என்று நினைத்து செய்யாதது அல்லது சில நாடகள் கழித்து தீஷுவுடன் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறதையும் பதியலாம் என்று நினைத்திருக்கிறேன்.

என்னைப் பொருத்த வரை கற்றல் என்பது A,B,C & 1,2,3 மட்டும் அல்ல. கற்றல் என்பது ஏதாவது கற்க வேண்டுமென்று எப்பொழுதும் ஆர்வத்தோடு இருக்கும் குழந்தைக்கு, அதன் ஆர்வத்திற்கு ஏற்பக் கற்றுக் கொடுத்து, அதன் ஆர்வத்தைத் தக்க வைத்தல். நான் எப்பொழுதும் என் குழந்தையிடம் அது மாதிரி நடந்து கொள்கிறேனா என்றால் இல்லை என்பேன். ஆனால் அவளுக்குப் பிடிக்காததை அவளிடம் திணித்தால் அதன் நெகடிவ் எபெக்ட் தெரிந்ததால், ஆர்மில்லாததைத் திணிப்பதை முடிந்தவரை குறைத்திருக்கிறேன்.

குழந்தைகளின் கற்கும் முறை பெரியவர்களின் கற்கும் முறையை விட மிகவும் வித்தியாசமானது. குழந்தை தன் இடத்திலிருந்து சுற்றி இருப்பவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேயிருக்கிறது. நான் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன் - எவ்வாறு குழந்தை பேசக் கற்றுக் கொடுக்காமலே பிறர் பேசுவதிலிருந்தே கற்றுக் கொள்கிறதோ அதே போல் நாம் சொல்லிக் கொடுக்காமலே தன்னிடம் வாசித்துக் காட்டப்படும் வார்த்தைகளை வைத்தே வாசிக்கக் கற்றுக் கொள்ளும் தன்மை உடையது. குழந்தைகளின் உலகம் அழகானது. அது வெறும் A,B,C யில் கழிய வேண்டாமே.

இந்த பயிற்சி உட்கார பழகிய குழந்தையுடன் செய்யலாம். ஒரு ஷு டப்பாவில் ஒரு வழியை சொல்லோ டேப் போட்டு ஒட்டி விடவும். மேல் பகுதியில் ஒரு பந்து அளவு ஒட்டை போடவும். குழந்தையை அழைத்து பந்துடன் சில நேரம் விளையாடவிடவும். cause & effort பழகிக் கொள்ளட்டும். முடித்தவுடன் பந்தை ஒட்டை வழியில் உள்ளே போடவும். In என்று சொல்லவும். மீண்டும் வெளியே எடுத்து out என்று சொல்லவும். குழந்தை செய்ய தொடங்கியவுடன் இன், அவுட் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டுயிருக்க வேண்டும். ஒன்றரை வயதிற்கு மேற்பட்ட குழந்தை என்றால் இரண்டு பந்துகள் வெவ்வேறு நிறத்தில் எடுத்துக் கொண்டு கலர் சொல்லி, ரெட் பால் இன், ப்ளூ பால் அவுட் என்று கலர் சொல்லிக் கொடுக்கலாம். இந்த பயிற்சி கை கண் ஒருங்கிணைப்புக்கு மிகவும் ஏற்றது. கவன ஒருங்கிணைப்புக்கும் ஏற்றது. கலர் சொல்லிக் கொடுக்க, ஷேப் சொல்லிக் கொடுக்க பயன்படுத்தலாம்.

இந்த வயது குழந்தைக்கு வெகு நேரம் ஒரு இடத்தில் இருக்க முடியாது. அதனால் அவர்கள் செய்யும் நேரம் இரண்டு நிமிடங்கள் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்களின் செய்யும் நேரம் அதிகரிக்கும். இதை நான் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு குழந்தையும் சற்று வித்தியாசமானது. சில குழந்தைகள் செய்யும். சில குழந்தைகள் செய்யாது. அவர்கள் ஆர்வத்திற்கு விட்டுவிடுவோம்.

1 comment:

  1. மிகவும் உண்மைதான் தியானா.
    தினமும் ஒரு புத்தகம் கதை வாசிப்பதையும் சேர்த்துக் கொள்ளலாமென்று நினைக்கிறேன். அவளுக்கு புரியாவிட்டாலும் கூட, வாசித்து அல்லது ஆக்‌ஷன்களுடன் சொல்லும்போது கற்பனைத் திறன் வளர்வதை கண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், சிறிது நாட்களில் அது பழக்கமாக ஆகிவிடும்.

    நல்ல இடுகை. பேரண்ட்டிங் பற்றிய உங்கள் எண்ணங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost