1. சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தீஷுவிற்கு தண்ணீர் குடிக்கும் பொழுது புரை ஏறி விட்டது. அவள் போட்டிருந்த துணி நனைந்து விட்டது. அவளை தள்ளி உட்கார வைத்து, துணியை மாற்றி விட்டேன். அதற்கு தீஷு என்னிடம், "அம்மா, இப்ப ஏன் என்னைக் காப்பாத்தின?"
2. தீஷு பள்ளி ஜூனில் தொடங்கிய பொழுது புதிதாகச் சேர்ந்திருந்த குழந்தைகள் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து தீஷு என்னிடம் அவர்களைப் பற்றி கேட்டாள். அவுங்க எல்லாம் சின்ன பாப்பா. கொஞ்சம் பிக் (Big) ஆனவுடன் அவுங்க அம்மா தினமும் வந்து கூட்டிட்டு போயிருவாங்கனு அவுங்களுக்குப் புரிஞ்சவுடன் அழுகையை நிறுத்திடுவாங்க என்று சொல்லி வைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன் தீஷு வந்து என்னிடம் சொன்னாள்..
"முந்தி அழுத ஒரு பொண்ணு இப்ப அழுகையை நிறுத்திட்டா.. ஆனா நீ சொன்ன மாதிரி அவள் பிக்கா ஆன மாதிரி தெரியல.. அதே மாதிரி தான் இருக்கா.. நீ ஏன் அப்படி சொன்ன?"
இன்னைக்குச் சொன்ன பதில் என்னைக்குக் கேள்வியாகத் திரும்ப வருமோ என்று பயமா இருக்கு
3. என் தோழி UK விலிருந்து ஒரு சாக்லேட் பாக்ஸ் வாங்கி வந்திருந்தார்கள். என்னிடம் தீஷு அதிகாலையில் சாக்லேட் கேட்டாள். காலையில் சாப்பிடக்கூடாது என்றேன். சில நாட்கள் கேட்கவும் தொடவும் ஆள் இல்லாமல் பாக்ஸ் கிடந்தது. சில நாட்கள் கழித்து இரவு நேரத்தில் கேட்டாள். இராத்திரியில் சாப்பிடக்கூடாது என்றேன். உடனே தீஷு
"காலைல கேட்டா காலைல சாப்பிடக்கூடாதுனு சொல்லுற.. நைட்டு கேட்டா நைட்டு
சாப்பிடக்கூடாது சொல்லுற.. அப்ப எப்பத்தான் நான் சாப்பிடுறது"
4.என் தோழி பெண்ட் ஹவுஸில்(pent house) இருக்கிறார்கள்.ஒரு நாள் பார்பிக்யு (barbeque)பார்ட்டிக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு வீட்டிற்கு வெளியில் பார்பிக்யு அடுப்பு வைத்து சமைத்துக் கொடுத்தார்கள். நான்கு ஐந்து மாதங்கள் ஆன நிலையில் தீஷு கேட்டாள், "ஏன்மா, அவங்க வீடு ரொம்ப சின்னதா? சமைக்க இடமில்லாமல் பத்திரத்தை வெளியே வைத்து சமைக்கிறாங்க."
5. தீஷுவும் நானும் கடிதம் எழுதி விளையாண்டு கொண்டிருந்தோம். நான் தீஷுவிற்கு, அவளுக்கு வாசிக்க எளிதாக "This is your letter" என்று எழுதிக் கொடுத்தேன். அவளும் அதே மாதிரி அதைப்பார்த்து எழுதிக் கொடுத்தாள். திரும்ப நான் " I love you" என்று எழுதினேன். பதிலுக்கு இந்த முறை நான் எழுதியதைப் பார்க்காமல், அவள் "I low mome" (I love mommy) என்று எழுதியிருந்தாள்.
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment