இதுவரை நீங்கள் புகைப்படங்களில் நான் சொல்வதைச் செய்யும் தீஷுவைப் பார்த்திருப்பீர்கள். நானும் எப்பொழுதும் அவளைப்பற்றிய நல்ல விசயங்களை மட்டும் பதிவு செய்திருக்கிறேன். ஒரு பக்கம் மட்டும் காட்டியிருக்கிறோம். தீஷுவின் மறுபக்கம் இந்த பதிவு.
தீஷு ஒரு ஷை குழந்தை. மற்றவர்களுடன் எளிதில் பழக மாட்டாள். தந்தை, தாய் இருவரும் அவ்வாறு இருக்கையில் அவளை குறை கூற முடியாது. பிறந்த ஐந்து மாதங்கள் எங்கள் இருவரையும் தவிர மற்றவர்களை ஒர் இரு முறை பார்த்திருப்பாள். ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை இந்தியாவில் இருந்தோம். ஐந்து மாதங்களில் குப்புற விழுந்தாள். அதன் பின் எட்டு மாதங்கள் வரை முகம் பார்த்து சிரிப்பாள். பிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ் எதுவும் செய்யவில்லை. ஒன்பதாவது மாதத் தொடக்கத்தில் தவழத் தொடங்கினாள். ஆனால் வீட்டிற்கு யாராவது வந்தாலோ அல்லது நாங்கள் யார் வீட்டிற்கு சென்றாலோ அழுது கொண்டே இருப்பாள்.
ஒரு வயது முடிந்த நிலையில் டாக்டரிடம் கேட்டதற்கு, குழந்தை அடுத்தவரைக் கண்டு அழுவது இயற்கை மற்றும் 20 மாதம் வரை நடக்காத குழந்தைக்கு மட்டுமே வேறு பயிற்சி கொடுக்க வேண்டும். இப்பொழுது ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டார். பதினாங்கு மாதங்களுக்கு பிறகு நடக்கத் தொடங்கினாள். அப்பொழுதும் பிற குழந்தைகளை விளையாட்டு இடங்களில் பார்த்தாலும் அழுவாள் அல்லது எங்களிடம் வந்து ஒட்டிக்கொள்வாள். மற்ற குழந்தைகளிடம் பழக்குவதற்காக தொடர்ந்து மாதம் ஒரு முறையாவது விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்வோம். ஆனால் அழுகையும் தொடர்ந்தது.இது 24 மாதங்கள் வரை தொடர்ந்தது.
மற்ற குழந்தைகளுடன் விளையாட/பழக வேண்டும் என்பதற்காகவே இரண்டு வயதில் மாண்டிசோரி பள்ளியில் சேர்த்தோம். முதல் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிலே அவள் டீச்சர் சொன்னது, அவளுக்கு மற்ற குழந்தைகளைப் பார்த்தால் பயம். டீச்சரே முழு நேரமும் தூக்கி வைத்து இருக்க வேண்டும். வீட்டினருகே ஓர் குழந்தையுடன் மட்டும் விளையாடுவாள். இரண்டே முக்கால் வயதில் மீண்டும் இந்தியா வந்தோம். முதலில் அங்குள்ள குழந்தைகள் பக்கத்தில் வந்தால் அடிக்கத் தொடங்கினாள். ஆரம்பத்தில் நான் டைம் அவுட் கொடுத்தேன். அவர்கள் இவளை ஏதாவது செய்து விடுவார்கள் என்று பயத்தில் அடிக்கிறாள் என்று அப்பா சொன்னவுடன், மற்ற குழந்தைகளுடன் விளையாடும் பொழுது, என் மடியில் அவளை வைத்திருந்து, வெறும் பார்கக மட்டும் செய்வோம். சற்று விளையாட தொடங்கினாள். அதன் பின் அனைவருடனும் பேசவும் செய்தாள். மூன்று வயது ஆனவுடன் சரியாகி விட்டது என்று நினைத்தோம்.
இந்தியாவிலிருந்த அந்த இரண்டு வருடமும் இவளுக்கு வசந்த காலம். பள்ளியிலும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். பெரிய பள்ளியில் சேர்த்தால் பயந்துவிடுவாள் என்று சிறிய மாண்டிசோரி பள்ளியில் சேர்த்தோம். டீச்சர்கள் மிகவும் அன்பாக பழகியதால் பள்ளியிலும் சிறந்து விளங்கினாள். பள்ளியிலும் தன்னம்பிக்கை மிகவும் வளர்ந்து இருக்கிறது என்றும் அவளை இவ்வாறே வழி நடத்துங்கள் என்று நாங்கள் கிளம்பும் பொழுது சொல்லி அனுப்பினர். எங்கள் வீடும் நண்பர்கள், உறவினர்கள் சூழ இருந்ததால், எப்பொழுதும் மக்கள் சூழ மகிழ்ச்சியாக இருந்தாள். ஒரு உயிர் தோழியும் உண்டு. அப்பொழுதும் ஒரு குழந்தை வந்தால் சேர்ந்து விளையாடுவாள். ஒன்று மேல் வந்தால், அவளுக்குப் பிடித்த குழந்தை அவளுடன் விளையாட வேண்டும். அது மற்ற குழந்தையுடன் விளையாட தொடங்கினாள், இவள் சோர்ந்து தனிமைப் பட்டுவிடுவாள்.
இப்பொழுது மீண்டும் தனிமை. இங்கு இரண்டு மூன்று இவள் வயது குழந்தைகள் இருந்தாலும், அவர்களுடன் விளையாடுவதற்கு விருப்பம் இருப்பதில்லை. நாங்கள் இப்பொழுது மொழி காரணம் என்று நினைக்கின்றோம். நாங்கள் வீட்டில் தமிழில் மட்டும் பேசுவதால், ஆங்கிலத்தில் உரையாடத் தெரிந்தாலும், அவர்கள் அளவுக்கு பேச முடியவில்லை. மீண்டும் யாரிடமும் விளையாடுவது இல்லை. யாரும் வீட்டிற்கு வந்தாலும் கடந்த ஒரு மாதமாக அவர்களுடன் விளையாடுவது இல்லை. அவர்கள் இருந்தாலும் இவள் தனியாக விளையாடுகிறாள்.
ஒவ்வொரு குழந்தையும் வித்தியாசமானது என்று தெரிந்து இருந்தாலும், மற்ற சம வயது குழந்தையுடன் ஒப்பிடும் பொழுது அவளுடைய கிராஸ் மோட்டார் ஸ்கில்ஸ் மிகவும் கம்மி. இவள் முன் சொல்வது கிடையாது. சறுக்கலில் ஒருவர் அருகில் நிற்க வேண்டும். சறுக்கல் படிகளில் ஏறி விடுவாள். ஆனால் மேலிருந்து கீழே சறுக்கலில் இறங்குவதற்கு பயப்பட்டு நின்று கொண்டியிருப்பாள். இவள் பின்னால் ஒரு கூட்டம் சேர்ந்து விட்டும். சறுக்கலில் இறங்கவும் முடியாமல், திரும்பவும் முடியாமல் அழ ஆரம்பிப்பாள். கூட்டத்தில் ஐந்து வயது குழந்தை பயத்தில் அழும் பொழுது, எப்படி சமாதானப்படுத்தவது என்றே தெரியாது. மேலும் இங்கு அவள் வயது குழந்தைகளே சற்று பெரிதாக இருப்பதால், பயந்து, அவர்களுக்கு வழிவிட்டு, அந்த விளையாட்டு பொருட்கள் பக்கமே போக மாட்டாள். சில நாட்கள் சைக்கிள் விருப்பமாக ஓட்டுவாள். அடுத்து சில மாதங்களுக்கு அதைப் பார்த்தாலே பயப்படுவாள்.
நீச்சல் வகுப்பில் சேர்த்து விட்டோம் (இவள் ஆசைப்பட்டதால்). முதல் நாள் வந்த டீச்சர் பிடித்து விட்டது. நன்றாக செய்தாள். இந்த எட்டு நாள் வகுப்பில் மூன்று நாட்கள் அந்த டீச்சர் வந்தார். அந்த நாட்கள் மட்டும் நன்றாக செய்வாள். மற்ற நாட்களில் வரும் டீச்சர் கையை விடமாட்டாள். கேட்டால் பயம் என்பாள். மற்றவர் வந்தால் செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டாள். எவ்வளவோ எடுத்துச் சொன்னோம். கேட்கவில்லை.
இப்பொழுது என்னுடைய பயம் பள்ளியை எப்படி சமாளிக்கப் போகிறாள்? இவளுக்கு அன்பாக பேசும் டீச்சர் பிடிக்கும். டீச்சர் பிடித்தால் பள்ளி பிடிக்கும். டீச்சர் பிடிக்குமா? மைதானத்தில் மற்ற குழந்தைகளுக்கு சமமாக விளையாட சற்று நாளாகும். அது வரை என்ன செய்வாள்? இங்கு பேசும் ஆங்கிலம் தனக்கு புரிவதில்லை என்று ஒரு நினைப்பு. அதனால் காது கொடுத்து கேட்பது கூட இல்லை. பள்ளியில் என்ன செய்ய போகிறாள்? மற்ற குழந்தைகளைப் பார்த்து பயப்படாமல் இருப்பாளா? வரும் ஐந்தாம் தேதி பள்ளிக்குச் செல்ல போகிறாள். நினைக்க நினைக்க தலை சுற்றுகிறது. எழுதியது சற்று ஆறுதலாக இருக்கிறது.