Tuesday, December 6, 2011

ஓவிய‌ப் போட்டி

தீஷுவின் ப‌ள்ளியில் போட்டிக‌ள் அறிவித்து இருந்தார்க‌ள். அதில் தீஷுவின் ஓவிய‌த்திற்கு முத‌ல் இட‌ம் கிடைத்திருக்கிற‌து!! ஓவிய‌ப் போட்டி, புகைப்ப‌ட‌ம் எடுத்த‌ல், வீடியோ எடுத்த‌ல், க‌ட்டுரை எழுதுத‌ல் போன்ற‌ போட்டிக‌ள் என் நினைவில் உள்ள‌ன. நான் இது க‌லிஃபோர்னியாவில் ம‌ட்டும் ந‌டைபெறுவ‌து என்று நினைத்திருந்தேன். ஆனால் என் தோழியிட‌ம் பேசும் பொழுது தான் ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளிலும் ந‌டைபெற்ற‌தை அறிந்து கொண்டேன். ஒவ்வொரு வ‌ருட‌மும் ந‌டைபெறுகிற‌து. இந்த‌ வ‌ருட‌த்திற்கான‌ தீம் - Diversity

நேற்று மாலை அனைத்து ஓவிய‌ங்க‌ளும் பார்வைக்கு வைக்க‌ப்ப‌ட்டு இருந்த‌ன. K - 2 (கிண்ட‌ர் கார்ட‌ன் முதல் இர‌ண்டாவ‌து வ‌குப்பு வ‌ரை)பிரிவில் தீஷுவின் ஓவிய‌ம் இருந்தது. அந்த‌ பிரிவில் கிட்ட‌த்த‌ட‌ட‌ நாற்ப‌து ஓவிய‌ங்க‌ள் வ‌ரை இருந்த‌ன‌.

நான் தீஷுவிட‌ம் அனைத்து போட்டிக‌ளையும் விள‌க்கிவிட்டு என்ன செய்கிறாய் என்றவுட‌ன், ப‌ட‌ம் வ‌ரைவ‌தாக‌வும், புகைப்ப‌டம் எடுப்ப‌தாக‌வும், ஒரு க‌தை எழுதுவ‌தாக‌வும் சொன்னாள். டைவ‌ர்ஸிட்டி என்றால் என்ன‌ என்று விள‌க்கிய‌வுட‌னே, அவ‌ள் சொன்ன‌து ‍ ஒரு அர‌ண்ம‌னையும், ஒரு வான‌வில்லும் வ‌ரைய‌ வேண்டும். எவ்வாறு அது டைவ‌ர்ஸிட்டி என்று கேட்ட‌வுட‌ன், அர‌ண்ம‌னை அமைப்பில் நிறைய க‌ல‌ர்க‌ளும், வ‌டிவ‌ங்க‌ளும் இருக்கின்றன, ஆனால் அது ஒரே க‌ட்டிட‌ம். அதே போல் வான‌வில்லில் நிறைய‌ க‌ல‌ர்க‌ள் இருந்தாலும் இது ஒன்று தான் என்றாள்.

1. உன‌க்கு என்ன‌ பிடிக்கிற‌தோ அதே வ‌ரை என்றேன். அர‌ண்ம‌னை பென்சிலில் வ‌ரைந்து, மார்க்க‌ரால் பென்சில் மேல் வ‌ரைந்து, ஆயில் பாஸ்ட‌ல் கொண்டு க‌ல‌ர் செய்தாள்.

த‌லைப்பு என்ன எழுத‌ வேண்டும் என்ற‌வுட‌ன், "Diversity in shapes - Beautiful castle" என்றாள்.

விள‌க்க‌ம் என்ற‌வுடன், "Diversity is in castle because it has lots of colours and shapes, but it is one building" என்றாள்






2. அடுத்து வான‌வில் வ‌ரைவ‌த‌ற்கு, ச‌ற்று வித்தியாச‌ப்ப‌டுத்த‌லாம் என்று வாட்ட‌ர் க‌ல‌ரில் செய்ய சொன்னேன். முத‌லில் ப‌ச்சை நிற‌ம் கொண்டு புல் வ‌ரைய‌ சொன்னேன். வானவில்லை பென்சிலில் வ‌ரையாம‌ல் நேராக‌வே வ‌ரைய‌ செய்தேன். இத‌ன் மூல‌ம் வான‌வில்லின் வ‌ண்ண‌ங்க‌ள் ஒன்றோடு ஒன்று க‌ல‌ந்து ந‌ன்றாக இருக்கும் என்று தோன்றிய‌து. வான‌வில்லை முடித்த‌வுட‌ன் நீல நிற‌ம் அடித்து விட்டோம். காய்ந்த‌வுட‌ன் மேக‌மும் சூரிய‌னும் வ‌ரைய‌ வேண்டும் என்று விருப்ப‌ப்ப‌ட்டாள். ஆகையால் அதையும் வ‌ரைந்தாள்.

த‌லைப்பு : Diversity in colours - Amazing rainbow

விள‌க்க‌ம் : Single colour rainbow would have been beautiful, but the different colours make the rainbow amazing







3. அடுத்து அவ‌ளுக்கு வித‌ வித‌ மீன்க‌ள் வ‌ரைய‌ தெரியும் என்றாள். ஆகையால் மீன்க‌ளும், சில பூக்க‌ளும் பென்சிலில் வ‌ரைந்து, அயில் பாஸ்ட‌ல் கொண்டு வ‌ண்ண‌ம் தீட்டி, அத‌ன் மேல் நீல‌ நிற‌ வாட்ட‌ர் க‌ல‌ர் அடித்து விட்டோம். இது முன்ன‌மே ஓவிய‌ர் ப‌ற்றி ப‌டித்த‌ பொழுது செய்த செய்முறை தான். இந்த‌ ஓவிய‌த்திற்கு ப‌ள்ளியில் முத‌ல் இட‌ம் கிடைத்திருக்கிற‌து.

த‌லைப்பு : Diversity in species - Deep sea life

விள‌க்க‌ம் : Diversity in shapes, colours and sizes of different fishes and plants make the ocean life beautiful











4. ம‌ர‌ங்க‌ளில் க‌ல‌ர் க‌ல‌ர் இலைக‌ளை புகைப்ப‌டமாக‌ எடுக்க‌ வேண்டும் என்றாள். ஆனால் அந்த‌ வார‌ம் ம‌ழை பெய்து கொண்டிருந்ததால் வ‌ரைந்து விட‌லாம் என்றேன். இரு ம‌ர‌ங்க‌ள் அயில் பாஸ்ட‌ல் கொண்டு வ‌ரைந்து க‌ல‌ர் செய்து கொண்டாள். கீழ் ப‌குதியில் ப‌ச்சை நிற‌மும், மேல் ப‌குதியில் நீல நிற‌மும் வாட்ட‌ர் க‌ல‌ர் கொண்டு தீட்டினாள். காய்ந்த‌வுட‌ன் சாதார‌ண பெயிண்ட்டால், பிர‌ஸ் பின் ப‌குதி கொண்டு சிவப்பு, ம‌ஞ்ச‌ள், பச்சை ம‌ற்றும் ஆரெஞ்ச் கொண்டு புள்ளிக‌ள் வைத்து விட்டோம்.

த‌லைப்பு : Diversity in colours - Fall trees

விள‌க்க‌ம் : Diversity in leaf's colours make the fall trees and season beautiful and complete





ப‌ள்ளியில் எடுத்த‌ இர‌ண்டு புகைப்ப‌ட‌ங்க‌ள் த‌விர‌ இணைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ற்ற‌ ப‌டங்க‌ள் எடுத்த‌து. அவ‌ள் ஓவிய‌ங்க‌ளின் த‌லைப்பு ம‌ட்டும் எழுதினாள். நான் விள‌க்க‌ங்க‌ள் எழுதினேன்.

தீஷுவின் ஓவிய‌த்திற்கு முத‌ல் இட‌ம் கிடைத்த‌தில் எங்க‌ளுக்கு ம‌கிழ்ச்சி.

Monday, December 5, 2011

Paper Weaving

வெகு நாட்க‌ளாக‌ செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த‌ பேப்ப‌ர் வீவிங், சென்ற‌ வார‌ம் ஒரு நாளில் செய்ய முடிந்த‌து.

1. ஒரு க‌ல‌ர் பேப்ப‌ரை ஒரு ஓர‌த்திலிருந்து அக‌ல‌ வாக்கில் ஒரு இன்ச் அள‌ந்து ஒரு கோடு வ‌ரைந்து கொண்டேன்.

2. அதே பேப்ப‌ரில் நீள வாக்கில் ஒரு இன்ச் இடைவெளி விட்டு கோடுக‌ள் வ‌ரைந்து கொண்டேன்.

3. தீஷுவிட‌ம் கொடுத்து கோடுக‌ள் மேல் வெட்ட சொன்னேன். முழூ தாளையும் வெட்டாம‌ல் முத‌ல் அக‌ல‌ வாக்கு கோட்டிற்கு மேல் வெட்ட‌க்கூடாது. ப‌டத்தில் உள்ள‌ நீல‌ நிற‌ பேப்ப‌ர்.


4. ம‌ற்றுமொரு க‌ல‌ரில் ஒரு தாளை எடுத்து நீள‌ வாக்கில் ஒரு இன்ச் ப‌ட்டைக‌ளாக வெட்ட‌ச் செய்தேன். ப‌டத்தில் உள்ள‌ ப‌ச்சை நிற‌‌ பேப்ப‌ர்.


5. இப்பொழுது முத‌ல் தாளில் வெட்ட‌ப்ப‌டாத‌ ப‌குதியின் அருகில் இர‌ண்டாவ‌து தாளைக் கொண்டு பின்ன‌ல் செய்ய‌ வேண்டும்.

6. மேல், கீழ், மேல், கீழ் என்று மாற்றி ப‌ட்டைக‌ளை இணைக்க‌ வேண்டும்.

7. அனைத்து பட்டைக‌ளையும் இணைத்த‌வுட‌ன், ப‌ச்சை ஓர‌ங்க‌ளை நீல‌ அள‌விற்கு வெட்டி அத‌னுட‌ன் ஒட்டி விட்டேன்.



தீஷுவிற்கு மிக‌வும் பிடித்திருந்த‌தால் மீண்டும் ம‌றுநாள் செய்ய‌ வேண்டும் என்றாள். இந்த‌ முறை ச‌ற்று வித்தியாச‌ப்ப‌டுத்த‌ தாளை அள‌க்காம‌ல் மேலும் நேராக‌ இல்லாம‌ல் கோண‌லாக‌ வெட்டிக் கொண்டோம். இர‌ண்டு க‌ல‌ருக்கு ப‌திலாக‌ மூன்று உப‌யோக‌ப்ப‌டுத்தினோம். செய்முறை ஒன்றே. ஆனால் என‌க்கு இர‌ண்டாவ‌து முறையில் செய்த‌து மிக‌வும் பிடித்திருந்த‌து.





Saturday, November 19, 2011

க‌வ‌ர்ந்த‌ த‌ருண‌ங்க‌ள் 11/19/2011

தின‌ச‌ரி காலெண்ட‌ரை கிழித்த‌வுட‌ன், ராஜீவ் காந்தி பிற‌ந்த‌ நாள் என்று அவ‌ர் புகைப்ப‌ட‌ம் இருந்த‌து.



தீஷு : யாருமா இது?

அம்மா : ராஜீவ் காந்தி, இந்தியாவோட‌ ப‌ழைய‌ ப்ரைம் மினிஸ்ட‌ர்

தீஷு : ஏன் U.S  ப்ரைம் மினிஸ்ட‌ர் போட்டோவெல்லாம் வ‌ர‌ மாட்டேங்குது?

அம்மா: இது இந்தியாவில‌ வாங்கின‌துனால‌

தீஷு : அடுத்த‌ காலெண்ட‌ர் ந‌ம்ம‌ இங்க‌ வாங்குவோமா?

அம்மா : ச‌ரி

தீஷு : அம்மா,  Costco (மொத்த க‌டை‍. ‍அனைத்துப் பொருட்க‌ளும் மிகுந்த‌ அள‌விலேயே கிடைக்கும்) வாங்க‌ வேண்டாம். காலெண்ட‌ர் பெரிசா இருக்கும். அப்புற‌ம் ஒரு நாள் தேதியை கிழிக்க‌ ந‌ம‌க்கு இர‌ண்டு நாள் ஆகும்.(சிரித்துக் கொண்டாள்)


காரில் சென்று கொண்டிருந்தோம். தீஷு ஏதோ சிரிக்கும் ப‌டி சொல்லிக் கொண்டே வ‌ந்தாள். சிரித்து முடித்த‌வுட‌ன், "அம்மா, ஜோக்கு கேட்டு சிரிச்சாச்சா.. இப்ப‌ தூங்க‌ ஆர‌ம்பிங்க‌". நான் என்ன‌ செய்ய‌ணும் என்று இவ‌ளைத்தான் கேட்க‌ வேண்டும்.


அப்பா : இந்த‌ டையினிங் டேபிலுக்கு இவ்வள‌வு விலையா?
தீஷு: அப்பா, அவுங்க‌ மொதல‌ டேபில் செய்ய‌ணும், அப்புற‌ம் லாரில‌ க‌டைக்குக் கொண்டு வ‌ர‌ணும், யாராவ‌து தின‌மும் துடைக்க‌ணும். இதுக்கு உங்க‌ளுக்கு $10, $20 டால‌ருக்கு கொடுக்க‌ முடியுமா? இது தான் விலை. வேணும்னா வாங்குங்க‌.

காலையில் எழுந்த‌வுடன், அம்மா, நீங்க‌ எப்ப‌ செத்து போவீங்க‌?
(அதிர்ச்சியாக‌) என்ன‌து?
When will you die?
(ப‌ய‌த்துடன்) 100 வ‌ய‌சுல‌
நோ.. நீங்க‌ தெள‌ச‌ண்டு(thousand) இய‌ர்ஸ் இருக்க‌ணும். ஏன்னா என‌க்கு உங்க‌ள‌ ரொம்ப‌ பிடிக்கும்.
ஓ இதுக்கு தானா.. ஸ்..அப்பா..


Friday, November 11, 2011

வீட்டில் செய்தது

எந்த‌ ஒரு விளையாட்டு பொருளைப் பார்த்தாலும், அதை வீட்டில் செய்ய‌ முடியுமா என்று யோசிப்ப‌து என் வ‌ழ‌க்க‌ம். தீஷு, எந்த‌ ஒரு விளையாட்டு பொருளையும் வாங்கிய‌ இர‌ண்டு மூன்று நாட்க‌ள் ம‌ட்டும் வைத்து விளையாடுவாள். அதன் பின் தொட‌ ஆள் இல்லாம‌ல் கிட‌க்கும். செய்தது என்றால் தூக்கிப் போட்டு விட்டு போய்விடலாம். ச‌மீப‌த்தில் செய்த‌வை இவை இர‌ண்டும்.

1. Constructive triangles

மாண்டிசோரி சாத‌ன‌ம் அது. பொதுவாக‌வே மாண்டிசோரி சாத‌ன‌ங்க‌ளின் விலை அதிக‌ம். தீஷு ப‌ய‌ன்ப‌டுத்துவாளா என்று தெரியாம‌ல் வாங்க‌ இஷ்ட‌மில்லை. இந்த‌ சாத‌ன‌த்தின் ப‌ய‌ன்பாடு முக்கோண‌ங்க‌ள் கொண்டு எந்த‌ ஒரு சம‌ த‌ள வ‌டிவ‌த்தையும் (plane geometric figures) செய்து விட‌லாம் என்று குழ‌ந்தைக‌ளுக்குப் புரிய வைப்ப‌து.

டெம்பிளேட் இந்த‌ த‌ள‌த்திலிருந்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். முதலில் அட்டையில் செய்ய‌லாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஃபெல்ட்டில் செய்தால் சிறிது காலத்திற்கு வைத்து விளையாடலாம் என்று ஃபெல்ட்டில் செய்தேன்.

ச‌துர‌ங்க‌ள் போன்ற‌ எளிய‌ வ‌டிவ‌ங்க‌ள் செய்த‌பின் நாங்க‌ள் செய்த‌வை.



ஜியோ போர்டு (Geoboard)

ஜியோ போர்டைப் பார்த்த‌வுட‌ன் அத‌ன் ப‌ய‌ன்பாடு மிக‌வும் பிடித்திருந்த‌து. விர‌ல்க‌ளுக்கு நல்ல‌ வேலை கொடுக்கும். எளிதாக‌ செய்துவிட‌லாம் என்று தோன்றியது. ஒரு க‌னமான‌ அட்டையில் பென்சிலால‌ க‌ட்ட‌ங்க‌ள் வ‌ரைந்து கொண்டேன். ஒவ்வொரு ஒரங்க‌ளிலும் வீட்டிலிருந்த‌ பின்க‌ளை குத்தி வைத்து விட்டேன். வீட்டிலிருந்த‌ ர‌ப்ப‌ர் பேண்ட் சிறிதாக‌ இருந்தாலும் தீஷுவிற்கு விளையாட‌ பிடிந்திருந்தது.



Thursday, August 25, 2011

க‌ணித‌ விளையாட்டு - 5

மூன்று இல‌க்க‌ எண்ணை ஒருவ‌ர் நினைத்துக் கொள்ள‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் க‌ண்டுபிடிக்க‌ வேண்டும். எண் நினைத்து கொள்ளும் பொழுது ஒரு விதிமுறை பின்ப‌ற்ற‌ வேண்டும். மூன்று இலக்க‌ எண்ணில் இருக்கும் அனைத்து எண்க‌ளும் வித்தியாச‌மாக‌ இருக்க‌ வேண்டும். உதார‌ண‌த்திற்கு 311, 121 போன்ற‌ எண்க‌ளில் இர‌ண்டு முறை 1 இருப்ப‌தால் அந்த‌ எண்க‌ளை எடுத்துக் கொள்ள‌க் கூடாது.

விளையாட்டு ஆர‌ம்பிக்கும் முன்பே மூன்று வார்த்தைக‌ள் (Code words) யோசித்து வைத்துக் கொள்ள‌ வேண்டும். கோட் வார்த்தைக‌ள் வைத்து தான் ப‌தில் சொல்ல‌ வேண்டும். நான் எடுத்து இருக்கும் மூன்று கோட் வார்த்தைக‌ள் ‍பேனா, பென்சில் ம‌ற்றும் புத்தக‌ம். அத‌ன் விள‌க்க‌ங்க‌ள் வ‌ருமாறு :

பேனா ‍ - சொன்ன‌தில் ஒரு எண்ணும் நினைத்த‌தில் இல்லை
பென்சில் - சொன்ன‌தில் ஒரு எண் உண்டு ஆனால் ச‌ரியான‌ இட‌த்தில் இல்லை
புத்த‌க‌ம் - சொன்ன‌தில் ஒரு எண் ச‌ரியான‌ இல‌க்க‌த்தில்(இட‌த்தில்) இருக்கிறது

எண்ணை க‌ண்டுபிடிப்ப‌வ‌ர் சொல்லும் எண்ணில் நாம் நினைத்த‌ எந்த‌ எண்ணும் எந்த‌ இல‌க்க‌த்திலும் இல்லை என்றால் பேனா என்று சொல்ல‌ வேண்டும். இத‌ன் மூல‌ம் அந்த‌ மூன்று எண்க‌ளும் நினைத்த எண்ணில் இல்லை என்று புரிந்து கொள்ள‌லாம். ஒரு எண் ச‌ரியான‌ இட‌த்திலும் ம‌ற்றுமோர் எண் த‌ப்பான‌ இட‌த்தில் இருந்தால் பேனா பென்சில் என்று சேர்த்துச் சொல்ல‌ வேண்டும்.

உதார‌ண‌ம்

183 என்ற‌ எண்ணை நினைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

முத‌ல் யூக‌ம் : 675

ப‌தில் : பேனா

(6, 7, 5 என்ற‌ எண்க‌ள் எந்த‌ இட‌த்திலும் இல்லை. மீத‌ம் உள்ள‌ எண்க‌ள் 0, 1, 2, 3, 4, 8, 9)

இர‌ண்டாவ‌து யூக‌ம் : 128

ப‌தில் : பென்சில் புத்த‌க‌ம்

(எண் 1 ச‌ரியான‌ எண் ச‌ரியான‌ இட‌த்தில் இருக்கிற‌து. அத‌னால் புத்த‌க‌ம். எண் 8 ச‌ரியான‌ இட‌த்தில் இல்லை என்ப‌தால் பென்சில்). யூகிப்ப‌வ‌ருக்கு ஒரு எண் ச‌ரியான‌ இட‌த்தில் இருப்ப‌து தெரியும். ஆனால் அது ஒன்றா அல்ல‌து இர‌ண்டா அல்ல‌து எட்டா என்று தெரியாது

மூன்றாவ‌து யூக‌ம் : 194

ப‌தில் : புத்த‌க‌ம்

இப்பொழுது எண் 1 ச‌ரியான‌ இட‌த்தில் இருப்ப‌து தெரிந்து விட்ட‌து. மீண்டும் இர‌ண்டாவ‌து யூக‌ அடிப்ப‌டையில் எண் இர‌ண்டா அல்ல‌து எட்டா என்று க‌ண்டுபிடிக்க‌ வேண்டும்

நான்றாவ‌து யுக‌ம் : 124

ப‌தில் : புத்த‌க‌ம்

எண் 1 ச‌ரி, எண் 2 இல்லை.ஆகையால் எண் எட்டாக‌ இருக்க‌ வேண்டும். இர‌ண்டாம் யூக‌ அடிப்ப‌டையில் 8 ச‌ரியான‌ இட‌த்தில் இல்லை. ஆகையால் எண் 18 என்று இருக்கும் என்று க‌ண்டுபிடித்து விட்டோம். மூன்றாம் ம‌ற்றும் நான்காம் யூக‌ங்க‌ளில் அடிப்ப‌டையில் 2, 4 எண்க‌ளும் நினைத்திருக்கும் எண்ணில் இல்லை என்று க‌ண்டுபிடித்திருப்போம்.

ஐந்தாவ‌து யூக‌ம் : 189

பதில் : புத்தக‌ம், புத்த‌க‌ம்

இப்பொழுது எண் 9 த‌வ‌று என்ப‌தால் மூன்றாக‌ இருக்க‌ வேண்டும்.

ஆறாவ‌து யூக‌ம் : 183

ப‌தில் : புத்த‌க‌ம், புத்த‌க‌ம், புத்த‌க‌ம்

கோட் வார்த்தைக‌ளை ஒரு முறை முடிவு செய்து விட்டால் மாற்ற‌ வேண்டாம். அடிக்க‌டி மாற்றினால் குழ‌ப்ப‌மாக‌ இருக்கும். புரியும் ப‌டி விள‌க்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

Saturday, August 20, 2011

Simple but superb

ந‌மக்கு எளிதாக‌வும் சாதார‌ணமாக‌வும் தெரியும் விஷ‌ய‌ங்க‌ள் குழ‌ந்தைக்கு ஆச்ச‌ரிய‌த்தையும் ச‌ந்தோஷ‌த்தையும் த‌ருவ‌தை க‌ண்டிப்பாக‌ அனைவ‌ரும் பார்த்திருப்போம். இந்த‌ வார‌த்தில் எங்க‌ள் வீட்டில் செய்த‌ மிக‌வும் எளிமையான‌ ஆனால் பெரிதும் விரும்ப‌ப்ப‌ட்ட‌ ஆக்டிவிட்டீஸ்.






~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



1. இது குழ‌ந்தையாக‌ இருந்த‌ பொழுது செய்து விளையாண்ட‌து. அறிவிய‌ல் புத்த‌கத்தில் கூட‌ செய்முறை இருக்கும். வீட்டுத் தொலைபேசி. இரு பேப்ப‌ர் ட‌ம்ளர்க‌ளை ஒரு நூலினால் இணைக்க‌ வேண்டும். ஒருவ‌ர் ஒரு ட‌ம்ள‌ரில் பேசும் பொழுது ம‌ற்ற‌வ‌ர் ம‌ற்ற‌ ட‌ம்ள‌ர் வ‌ழியாக‌ கேட்க‌ வேண்டும். ஒருவ‌ர் ஒரு ட‌ம்ள‌ரில் பேசும் ஒலி ம‌ற்ற‌வ‌ருக்கு ம‌று ட‌ம்ள‌ருக்கு நூலில் வ‌ழி செல்லுகிற‌து என்ப‌தே ஒரு ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்தது. மிக‌ நீள‌மான‌ நூலாக‌ இருந்த‌தால் ப‌க்க‌த்து ப‌க்க‌த்து அறைக‌ளில் அம‌ர்ந்து மெல்லிதாக‌ பேசினாலும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு கேட்ட‌து. ஒருவ‌ர் ட‌ம்ள‌ரில் பேசும் பொழுது ம‌ற்ற‌வ‌ர் காதில் வைக்க‌ வேண்டும். அத‌ற்காக‌ பேசி முடித்த‌வுட‌ன் "ஓவ‌ர்" என்று சொல்ல‌ வேண்டும் என்ற‌து தான் இதில் விருப்ப‌மான‌ விஷ‌ய‌மான‌து.  

சில‌ ச‌ம‌ய‌ம் Over என்ப‌த‌ற்கு ப‌திலாக‌ End என்று சொல்வ‌து, இருவ‌ருமே ஒரே ச‌ம‌ய‌த்தில் பேசுவ‌து, இருவ‌ரும் காதில் வைத்துக்கொண்டு முழிப்ப‌து போன்றவைக‌ளும் ந‌ட‌க்க‌லாம்!!


ஆனால் இர‌ண்டு மூன்று நாட்க‌ள் ஒவ்வொரு நாளும் அரை ம‌ணி நேர‌த்திற்கு மேல் இப்ப‌டியாக‌ பேசும் ப‌டி ஆன‌து.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



2. ஒரு ஜிப் லாக் பாகில் (Ziplock) எண்ணெய் ம‌ற்றும் த‌ண்ணீர் சேர்த்துக் கொண்டோம். அதில் இர‌ண்டு க‌ல‌ர் பெயிண்ட் சேர்த்துக் கொண்டோம். எண்ணெய் இருப்ப‌தால் இரு க‌ல‌ரும் சேராது என்று நினைத்திருந்தேன். ஆனால் சிக‌ப்பும், வெள்ளையும் சேர்ந்து வெளீர் பிங்க் ஆன‌து. அதை ந‌ன்றாக மூடி, டேப்பை வைத்து மேலும் வாயை ந‌ன்றாக‌ மூடி வைத்து விட்டோம். அதில் விர‌ல்க‌ள் கொண்டு உருவ‌ங்க‌ள்/எழுத்துக்கள்/ஓவிய‌ங்க‌ள் உருவாக்கினோம். விர‌ல்க‌ளால் பெயிண்ட்டைப் பிரித்தாலும் மீண்டும் சேர்வ‌து பார்ப்ப‌த‌ற்கு ஒரு ந‌ல்ல‌ அனுப‌வ‌மாக‌ அமைந்த‌து.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



3. ஐஸ் பெயிண்ட்டிங்: த‌ண்ணீரில் க‌ல‌ர் க‌ல‌ந்து, ஐஸ் உருவாக்கினோம். பிடித்து வ‌ரைவ‌த‌ற்கு ஏதுவாக ந‌டுவில் குச்சி வைத்துவிட்டோம். ஐஸ் உருகும் நிலை பொருத்து வெவ்வேறு வ‌கையான ஓவிய‌ங்க‌ள் தோன்றின். முத‌லில் ஐஸ் உருகாம‌ல் இருந்த‌ பொழுது ச‌ற்று அழுத்தி வ‌ரைய‌ வேண்டி இருந்தது. ஆனால் உருக‌த் தொட‌ங்கிய‌வுட‌ன் எளிதாக இருந்த‌து. ச‌ற்று த‌ண்ணீர் ஆன‌வுட‌ன் காகிதத்தை ஈர‌மாக்கிவிட்ட‌து.

Thursday, August 18, 2011

ஓவிய‌ர் & ஓவிய‌ம் - 6

ஜாக்ஸ‌ன் பால‌க் (Jackson Pollock) ப‌ற்றி இந்த‌ முறை ப‌டித்தோம். அமெரிக்காவில் 1912 யில் பிற‌ந்த‌ இவ‌ர், உருவ‌மில்லாம‌ல் ப‌ட‌ம் வ‌ரைவ‌தில் வ‌ல்ல‌வ‌ர். இவ‌ர் பெயிண்ட்டில் பிர‌ஸ்ஸை ந‌னைத்து, கான்வாஸ்ஸில் தெளித்தோ, வ‌டித்தோ ப‌டங்க‌ள் உருவாக்கினா‌ர். சில‌ ப‌ட‌ங்க‌ளை பெயிண்ட் ட‌ப்பாவிலிருந்து நேர‌டியாக‌ கொட்டியும் உருவாக்கியுள்ளார். இவ‌ரின் லாவெண்ட‌ர் மிஸ்ட்(Lavendar Mist) என்ற புகைப்ப‌ட‌த்தை எடுத்துப் ப‌டித்தோம்.

ஓவிய‌த்தை உருவாக்குவ‌த‌ற்கு

1. முத‌லில் பெயிண்ட்டில் த‌ண்ணீர் க‌ல‌ந்து, பிர‌ஸ்ஸினால் தெளித்துப் பார்த்தோம். ஆனால் தீஷுவிற்கு அதில் விருப்ப‌மிருக்க‌வில்லை. ப‌ட‌த்தில் க‌ல‌ர் அட‌ர்த்தியாக‌ இல்லை என்றாள்.


2. ஆகையால் கான் மாவையும்(Corn Flour) த‌ண்ணீரையும் ச‌ரி அள‌வில் க‌ல‌ந்து கொண்டோம்.

3. அதில் பெயிண்ட் சேர்த்துக் கொண்டோம்.



4. தெளித்த‌ பொழுது க‌ல‌ர் ந‌ன்றாக தெரியாவிட்டாலும் எளிதாக‌ தெளிக்க‌ முடிந்த‌து.

5. தீஷு தெளித்த‌து ம‌ட்டும் போதாது. வீடும் வ‌ரைய வேண்டும் என்று ஆசைப்ப‌ட்டாள். எங்க‌ள் ஓவிய‌ம்.




Monday, August 15, 2011

வ‌ண்ண‌க்கோல‌ங்க‌ள்

முடிவு இப்ப‌டித்தான் இருக்க‌ப் போகிற‌து என்று தெரியாத‌ ஓவிய‌ வ‌ழிமுறைக‌ளில் எப்பொழுதும் ஓர் ஆர்வ‌ம் உண்டு. முறைக‌ளை ச‌ற்று வித்தியாச‌ப் ப‌டுத்தினாலும் முடிவு மாறி வ‌ருவ‌து ஆச்ச‌ரிய‌மான‌ விஷ‌ய‌ம்.



இங்கு காபி பில்ட‌ர் (coffee filter) என்று காபி மேக்க‌ரில் காபியை வ‌டிக் க‌ட்ட ப‌ய‌ன்ப‌டும் பேப்ப‌ரில் ஒரு நாள் வாட்ட‌ர் க‌ல‌ர் கொண்டு க‌ல‌ர் செய்தோம். டிஷ்யூ பேப்ப‌ரிலும் செய்ய‌லாம். டிராப்ப‌ர் (dropper) என‌ப்ப‌டும் ம‌ருந்து கொடுக்க‌ப் ப‌ய‌ன்ப‌டுவ‌தை வைத்து செய்தோம். வித்தியாசமான‌ அனுப‌வ‌மாக‌ இருந்தாலும் க‌ல‌ர் ந‌ன்றாக‌த் தெரிய‌வில்லை. எங்க‌ள் க‌ண்ணாடி க‌த‌வில் பூ மாதிரி செய்து ஒட்டி வைத்திருந்தோம். ஏதோ குறைந்தது போல் இருந்த‌து.



இரு மாத‌ங்க‌ளான நிலையில் ஏன் வேறு ஒரு முறையில் முய‌ற்சிக்க‌க் கூடாது என்று தோன்றிய‌து. தூணிகளுக்கு டிசைன் செய்ய‌ ப‌ய‌ன்ப‌டும் முறையான‌ Tie dye முறையில் முய‌ற்சிக்க‌லாம் என்று முய‌ற்சித்தோம். காபி பில்‌ட‌ரை வெவ்வேறு முறையில் ம‌டித்துக் கொண்டோம். உதார‌ணத்திற்கு

1. வ‌ட்ட‌மாக‌ இருக்கும் பில‌ட‌ரை, அரை வ‌ட்ட‌மாக‌ ம‌டித்து, மீண்டும் கால் வ‌ட்ட‌மாக‌ வ‌டித்தால், முக்கோண‌ வ‌டிவ‌ம் வ‌ரும். மீண்டும் முக்கோண‌ வ‌டிவ‌த்தை அரையாக‌ ம‌டித்த‌ல்

2. நீள‌ வாக்கில் முன்னால் ஒரு ம‌டிப்பு, பின்னால் ஒரு ம‌டிப்பு என்று ம‌டித்து ஒரு செவ்வ‌க‌மாக‌ மாற்ற‌ வேண்டும். மீண்டும் மீண்டும் ம‌டித்து சிறு செவ்வ‌க‌மாக‌ மாற்றுத‌ல்.




இவ்வாறு வெவ்வேறு முறைக‌ளில் ம‌டிக்கும் பொழுது ஒவ்வொரு முறையிலும் வெவ்வேறு டிசைன் வ‌ரும். ம‌டித்த‌ப்பின் பேப்ப‌ரை வாட்ட‌ர் க‌ல‌ரில் முக்கி எடுக்க‌ வேண்டும். ஒவ்வொரு ஓரங்க‌ளிலும் ஒவ்வொரு க‌ல‌ர் அல்ல‌து வெறும் இர‌ண்டு க‌ல‌ர்க‌ள் என்று கொண்டு செய்தோம்.

இந்த‌ முறையில் க‌ல‌ர் செய்த‌ பொழுது சென்ற‌ முறையை விட‌ க‌ல‌ர் ந‌ன்றாக‌ தெரிந்த‌து. டிஷ்யூ பேப்ப‌ர் ம‌ற்றும் கிச்ச‌ன் ட‌வ‌ல் கூட‌ ப‌ய‌ன்ப‌டுத்திப் பார்த்தோம். அனைத்திலும் ந‌ன்றாக வ‌ந்த‌து. காய்ந்த‌ பின் பேப்ப‌ரை பிரித்து இருந்தால் இன்னும் ந‌ன்றாக‌ இருந்து இருக்கும். ஆனால் எங்க‌ளுக்கு டிசைன் பார்ப்ப‌தில் அவ‌ச‌ர‌ம். காயும் முன்னே பிரித்து விட்டோம்.



அழ‌காக‌ இருக்கின்ற‌ன‌. இந்த‌ பேப்பர்க‌ளை வைத்து ஏதாவ‌து செய்ய‌ வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறோம்.

Tuesday, August 9, 2011

ப‌ய‌ண‌த்திற்கு ஏற்ற‌ கணித‌ விளையாட்டுக்க‌ள்

நீண்ட தூர‌ப் ப‌ய‌ண‌த்திற்கு கிள‌ம்பும் பொழுது த‌ண்ணீர், சாப்பாடு போன்று உட‌ன் ப‌ய‌ணிக்கும் குழ‌ந்தையின் நேர‌த்தை எவ்வாறு போக்குவ‌து என்று யோசிக்க‌ வேண்டி உள்ள‌து. ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளுட‌ன் விளையாடிக் கொண்டே என் சிறு வ‌ய‌து ப‌ய‌ண‌ங்க‌ள் அமைந்த‌ன‌. ஆனால் இப்பொழுது த‌னியாக‌ கார் சீட்டில் க‌ட்டிப் போட்டுள்ள‌ குழ‌ந்‌தையை எத்த‌ணை ம‌ணி நேர‌ம் தான் வெளியில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வ‌ர‌ சொல்வ‌து. காரில் செல்லும் பொழுது விளையாட சில‌ க‌ணித‌ விளையாட்டுக‌ள்:

1. என் அலுவ‌ல‌க‌ ட்ரெயினிங்கிற்கு வ‌ந்த‌ ஆசிரிய‌ரிட‌மிருந்து க‌ற்ற‌து. குழுவாக‌ விளையாடுவ‌து. 1,2,3 என்று ஒருவ‌ர் மாற்றி ஒருவ‌ர் வ‌ரிசையாக‌ சொல்லிக் கொண்டே வ‌ர‌ வேண்டும். ஆனால் 7, 14, 21 போன்று ஏழின் பெருக்குத்தொகை வ‌ரும் பொழுதும் 17,27,37 என்று ஏழில் முடியும் எண் வ‌ரும் பொழுதும் கைத் த‌ட்ட‌ வேண்டும். வாயால் சொல்லக் கூடாது. கேட்க‌ எளிதாக‌த் தோன்றும். ஆனால் வேகமாக‌ சொல்லும் பொழுது க‌டின‌மாக‌ இருக்கும். குழ‌ந்தைக‌ளின் வ‌ய‌திற்கு ஏற்ப‌ இந்த‌ விளையாட்டை வித்தியாச‌ப்ப‌டுத்த‌லாம்.

உதார‌ண‌த்திற்கு இர‌ண்டின் அல்ல‌து ப‌த்தின் பெருக்குத் தொகை ம‌ற்றும் 3,13,23 என்று மூன்றில் முடிவ‌ன போன்ற‌ன‌.

2. இது க‌ணித‌ விளையாட்டு என்ற‌ த‌லைப்பில் எழுதிய‌து தான். இர‌ண்டு ந‌ப‌ருக்கு மேல் விளையாடுவ‌தால், ப‌த்திற்கு ப‌தில் இருப‌து என்று வைத்துக் கொள்வோம். 20 திலிருந்து த‌லைகீழாக‌ சொல்லிக் கொண்டே வ‌ர‌ வேண்டும். ஒருவ‌ர் ஒரு எண்ணோ, இரு எண்ணோ சொல்லலாம். இறுதியில் யார் ஒன்றாம் எண் சொல்லுகிறாரோ அவருக்கு ஒரு பாயிண்ட்.

உதார‌ண‌த்திற்கு மூன்று பேர் விளையாடுகிறார்க‌ள் என்று வைத்துக் கொள்வோம்.

முத‌ல் ந‌பர் : 20

இரண்டாம் ந‌ப‌ர் : 19, 18

மூன்றாம் ந‌ப‌ர் : 17

மீண்டும் முத‌ல் ந‌ப‌ர் : 16,15

இவ்வாறு சொல்லிக் கொண்டு வ‌ரும் பொழுது யார் ஒன்று என்று சொல்லுகிறார்க‌ளோ அவ‌ருக்கு ஒரு பாயிண்ட்.

3. ஒருவ‌ர் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ள‌ வேண்டும். குழ‌ந்தையின் வ‌ய‌திற்கு ஏற்ப‌ 1 இலக்க‌, 2 இல‌க்க‌, 3 இலக்க‌ எண் என‌ மாற்றிக் கொள்ள‌லாம‌. ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கேள்விக‌ள் கேட்டு அந்த‌ எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். ம‌னதில் நினைத்த‌வ‌ர் ஆம் இல்லை என்று ம‌ட்டும் சொல்ல‌லாம். ஒருவ‌ர் மாற்றி ஒருவ‌ர் கேட்க‌ வேண்டும். ச‌ரியாக‌ க‌ண்டுபிடிப்ப‌வ‌ருக்கு 1 பாயிண்ட்.

உதார‌ண‌த்திற்கு 97 என்று மன‌தில் நினைத்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

கேள்வி 1 : 50 க்கு மேலா?
ப‌தில் : ஆம்

கேள்வி 2 : 90 க்கு கீழா?
ப‌தில் : இல்லை.

இவ்வாறு கேள்விக‌ள் கேட்டு க‌ண்டுப்பிடிக்க‌ வேண்டும்.

4. குழ‌ந்தை த‌ற்பொழுது க‌ற்றுக் கொண்டு இருக்கும் க‌ணித‌ த‌லைப்பைக் கொண்டு விளையாட்டை உருவாக்க‌லாம்.

உதார‌ண‌த்திற்கு நாம் எந்த‌ எண்ணைக் கூறுகிறோமோ, அதில் ப‌த்தைக் கூட்டி சொல்ல‌ வேண்டும். (Counting by 10)
கூறும் எண்ணை மீண்டும் அந்த‌ எண்ணுட‌ன் கூட்டுச் சொல்ல‌ வேண்டும்(Doubles)
பெரிய‌ எண், சிறிய எண் க‌ண்டுபிடித்த‌ல்
எளிய கூட்ட‌ல், க‌ழித்த‌ல் ம‌ன‌க் க‌ண‌க்குக‌ள்

5. ஒருவ‌ர் நூறுக்குள் மூன்று எண்க‌ளை இரு முறை சொல்ல‌ வேண்டும். ம‌ற்ற‌வ‌ர் அந்த‌ மூன்று எண்க‌ளையும் அதே வ‌ரிசையில் திரும்ப‌ சொல்ல‌ வேண்டும். வ‌ய‌திற்கேற்ப எண்க‌ளையோ இல‌க்க‌ங்க‌ளையோ அதிக‌ அல்ல‌து குறைக்க‌லாம்.

உங்க‌ளுக்குத் தெரிந்த‌ விளையாட்டுக‌ளையும் ப‌கிர்ந்து கொள்ளுங்க‌ளேன்

Friday, August 5, 2011

ஈச‌ல்



ப‌டம் :ikea.com


ஓவிய‌ர்க‌ள் உப‌யோக‌ப்ப‌டுத்தும் ஈச‌ல் (Easel) குழ‌ந்தைக‌ள் அளவில் கிடைப்ப‌தை குழ‌ந்தைக‌ள் உப‌யோகித்தால் ந‌ன்மைக‌ள் உண்டு என்று ப‌டித்தேன்‌. இது செக்குத்தாக‌ இருக்கும். குழ‌ந்தைக‌ள் கையைத் தூக்கி வ‌ரைவ‌தால், அவ‌ர்க‌ளின் தோல் எலும்புக‌ள் ப‌ல‌ப்ப‌டும். அது அவ‌ர்க‌ள் எழுதுவ‌த‌ற்கு மிக‌வும் அவ‌சிய‌ம் என்று ப‌டித்த‌திலிருந்து ஈச‌ல் மேல் ஒரு க‌ண். ஆனால் வீட்டில் வைப்ப‌த‌ற்கு இட‌மில்லை. அத‌னால் சுவ‌த்தில் ஒரு நீண்ட‌ பேப்ப‌ரை ஓட்டிக் கொடுத்தேன். ஆனால் அதில் பெயிண்ட் செய்யும் பொழுது சுவ‌த்தில் ப‌ட்டு விடுமோ என்று ப‌ய‌ம் இருந்து கொண்டிருந்த‌து. சுவ‌த்தில் பெயிண்ட் போகவில்லை என்றால் காலி ப‌ண்ணும் பொழுது இருக்க‌ப் போகும் செல‌வை நினைத்துப் பேப்ப‌ரை எடுத்து விட்டேன்.

அத‌ன் பின் கண்ணாடி கத‌வு எங்க‌ள் ஈச‌ல் ஆன‌து. கண்ணாடியில் வ‌ரைய‌ கரையான்ஸ் கிடைத்தாலும், துடைத்தால் க‌லர் முழுவ‌துமாக‌ போகுமா என்று தெரியாத‌தால் அதை முய‌ற்சி செய்ய‌வில்லை. ஒரு முறை டேப்பைக் கிழித்து ஒட்டினோம். அது தீஷுவிற்கு மிக‌வும் பிடித்திருந்த‌து.

பின்பு ஒரு முறை ஃபோம் வ‌டிவ‌ங்க‌ளை த‌ண்ணீர் தொட்டு ஒட்டினோம். வ‌டிவ‌ங்க‌ள் த‌ண்ணீர் காயும் வ‌ரை ஒட்டியிருந்த‌ன‌. ஒட்டுவ‌த‌ற்கு அரை ம‌ணி நேர‌த்திற்கு மேல் ஆன‌து.





ஒரு க‌ன‌‌மான‌ பெரிய‌ அட்டை ட‌ப்பா கிடைத்த‌து. இப்பொழுது அது தான் எங்க‌ள் ஈச‌ல். மூன்று ப‌க்க‌ங்க‌ள் மூடியும் ஒரு ப‌க்க‌ம் மூடாம‌ல் இருக்கும் ஒரு திறந்த‌ ட‌ப்பா. அத‌ன் திற‌ந்த‌ ப‌க்க‌த்தை க‌த‌வின் ஹாண்டிலில் மாட்டி விட்டேன். பின் ப‌குதியில் பேப்ப‌ர் குத்திவிட்டேன். அதில் வ‌ரைய‌லாம். பெயிண்ட் ப‌ட்டு விட்டாலும் ட‌ப்பாவை மாத்தி விட‌லாம். எப்பொழுதும் உட்கார்ந்து கொண்டு குனிந்து வ‌ரையும் தீஷுவிற்கு நின்று கொண்டே வ‌ரைவ‌து பிடித்திருந்த‌து. ஒரு ஒட்ட‌க‌ச்சிவிங்கி நின்று ஒரு பூவை வேடிக்கைப்பார்ப்ப‌து போன்று வ‌ரைந்திருந்தாள்.





இதுவும் ஒரு நிர‌ந்தர‌ தீர்வு இல்லை. ஆனால் ஈச‌லின் ந‌ன்மைக்காக‌ செங்குத்தான‌ பொருட்க‌ளில் வேலை செய்வ‌தை வெவ்வேறு வ‌ழிக‌ளில் ஊக்குவிக்க‌ நினைத்திருக்கிறேன்.

Wednesday, August 3, 2011

Aqua fresh

சிறு வ‌ய‌தில் த‌ண்ணீரில் விளையாண்டு திட்டு வாங்கிய‌ அனுப‌வ‌ம் அநேக‌மாக‌ எல்லோருக்கும் இருக்கும். அனைத்து குழ‌ந்தைக‌ளுக்கும் விருப்ப‌மான‌ ஒன்றும் கூட‌. ஒரு அக‌ண்ட‌ பாத்திர‌த்தில் த‌ண்ணீர் கொடுத்து, அதில் விளையாடுவ‌த‌ற்கு ஐந்து ஆறு ஓட்டையிட்ட‌ ஒரு வாட்ட‌ர் பாட்டில், ட‌ம்ப‌ள‌ர், ஃப‌ன‌ல்(funnel), ஸ்பான்ச் முத‌லியன‌ கொடுத்தேன்.




1. ஃப‌ன‌ல் மூல‌ம் பாட்டிலில் த‌ண்ணீர் ஊற்றுத‌ல் (Funnelling)

2. ஸ்பான்ச்சை பாட்டிலுல் பிழிந்து நிர‌ப்புத‌ல் (Transferring water using sponge)

3. ட‌ம்ப‌ள‌ரால் த‌ண்ணீர் ஊற்றுத‌ல் (Wet pouring)

4. பாட்டிலில் ஓட்டை வ‌ழியாக‌ த‌ண்ணீர் வ‌ருவ‌தைப் பார்த்த‌ல் என கிட்ட‌த்த‌ட்ட‌ முக்கால் ம‌ணி நேர‌ம் விளையாண்டு கொண்டிருந்தாள்

அனைத்து விச‌ய‌ங்க‌ளையும் இவ்வாறு செய்ய‌ வேண்டும் என்று நாம் சொன்னால், குழ‌ந்தையின் க‌ற்ப‌னைத் திற‌ன் வ‌ள‌ராது என்ப‌து என் எண்ண‌ம். பொருட்க‌ளைக் கொடுத்து விட்டு நாம் ந‌க‌ர்ந்து விட்டால், அதை வைத்து அவ‌ர்க‌ளே க‌ற்று கொள்கிறார்க‌ள். அத‌னால் இது போன்ற‌ ஒப்ப‌ன் எண்டட் ஆக்டிவிட்டீஸ் என‌து விருப்ப‌மும் கூட‌.

முடித்த‌வுட‌ன் தீஷு சொன்ன‌து, "Best activity. I liked it very much".

பாட்டிலில் த‌ண்ணீர் இல்லாவிட்டால் மித‌ந்து ந‌க‌ர்கிற‌து அத‌னால் நிறுத்துவ‌த‌ற்கு த‌ண்ணீர் உற்ற‌ வேண்டும், ஃப‌னலில் ஒரு ஓட்டை ம‌ட்டும் இருப்ப‌தால் ஓட்டையை மூடினால் த‌ண்ணீர் போவ‌தை த‌டுத்து விட‌லாம் ஆனால் பாட்டிலில் அது முடியாது என்று முடித்த‌வுட‌ன், நான் கேட்காம‌லே ஒவ்வொன்றாக‌ சொல்லிக் கொண்டிருந்தாள்.

த‌ண்ணீரால் ந‌ம்மை உற்சாக‌ப்ப‌டுத்த‌ முடியும். அந்த‌ உற்சாக‌ம் போன‌ஸ்!!

Monday, August 1, 2011

க‌ணித‌ விளையாட்டு - 4

10 முக‌ம் கொண்ட‌ தாய‌க்க‌ட்டைக‌ளை இர‌ண்டு முறை உருட்ட‌ வேண்டும். வ‌ரும் இர‌ண்டு எண்க‌ளில் பெரிய‌ எண்ணை ப‌த்திலும் சிறிய‌ எண்ணை ஒன்றிலும் வைத்து இர‌ண்டு இல‌க்க‌ எண் உருவாக்க‌ வேண்டும். விளையாடும் அனைவ‌ரும் அதே மாதிரி செய்ய வேண்டும். சுற்றின் முடிவில் பெரிய‌ எண் பெற்ற‌வ‌ருக்கு ஒரு பாயிண்ட். ஒருவ‌ர் 10 பாயிண்ட் எடுத்த‌வுட‌ன் விளையாட்டை நிறுத்தி விடலாம். 3 முறை போட்டு 3 இல‌க்க‌ எண் அல்ல‌து 1 இல‌க்க‌ எண் என்று வ‌ய‌திற்கு ஏற்ப மாற்ற‌லாம். ஆறு முக‌த் தாய‌க்க‌ட்டையும் உப‌யோகிக்க‌க்கலாம். ஆனால் அதில் பெரிய‌ எண் 66 தான் வ‌ரும். 10 முக‌ம் என்றால் 99 வ‌ரை வ‌ரும்.

பய‌ன்க‌ள் :
1.ஒன்று ப‌த்து அறித‌ல்
2.பெரிய எண் சிறிய‌ எண் க‌ண்டுபிடித்த‌ல்

Wednesday, July 27, 2011

ஓவிய‌ர் & ஓவிய‌ம் - 5

இந்த‌ முறை எங்க‌ள் ஓவிய‌ர் & ஓவிய‌ம் வாசிப்பிற்கு நாங்க‌ள் எடுத்துக் கொண்ட‌து ‍ஜேம்ஸ் விஷ்ட்ல‌ரின் (James Whistler) த‌ ஃபாலிங் ராக்கெட் ஓவிய‌ம் (The falling rocket). அமெரிக்காவில் பிற‌ந்த‌ இவ‌ர், ஒருவ‌ர் இவ‌ரின் ஓவிய‌த்தை இகழ்ந்த‌தால் அவ‌ர் மேல் கோர்ட்டில் கேஸ் போட்டு அனைத்து சொத்தையும் இழ‌ந்த‌வ‌ர். இவ‌ரின் முழு விவ‌ர‌ம் இங்கே காண‌லாம்.

ஓவிய‌ம் இருட்டில் ஒரு மாத்தாப்பு வெடிப்ப‌து போல் இருந்த‌து. நாங்க‌ள் பின்பற்றிய‌ வ‌ழிமுறை:

1. காகித்தை இர‌ண்டாக‌ பிரித்துக் கொண்டோம். கீழ் ப‌குதி சிறிய‌தாக‌ இருக்க‌ வேண்டும். அந்த‌ ப‌குதி த‌ண்ணீர் ப‌குதி

2. பாத்திர‌ம் துல‌க்க‌ ப‌ய‌ண்ப‌டும் ஸ்பான்ச்சால் ஒரு சில‌ இட‌ங்க‌ளில் சிவ‌ப்பு, ஆரென்ச் பெயிண்ட் கொண்டு ஒற்றி எடுக்க‌வும். இது மாத்தாப்பு வெடிக்கும் பொழுது வ‌ரும் எபெக்ட்டுக்காக‌.

3. பேப்ப‌ர் இருக்கும் அதே க‌ல‌ர் பெயிண்ட் எடுத்துக் கொள்ள‌வும். ஸ்பான்ச்சால் பெயிண்டில் தேய்த்து, கோட்டிற்கு மேல் ப‌குதியில் க‌ட்டிட‌ங்க‌ள் போல் ச‌துர‌மாக‌ வ‌ரைய‌ வேண்டும். கீழ் ப‌குதியிலும் அதே பேல் செய்ய‌ வேண்டும். கீழ் ப‌குதி மேலுள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ளின் பிர‌திப‌‌லிப்பு.



4. ஒரு ப‌ஞ்சில் வெள்ளை பெயிண்ட்டை எடுத்து மேல் ப‌குதியில் புகை போல் வ‌ரைய‌ வேண்டும்



5. அத‌ன் மேல் ப‌ல் துல‌க்க‌ ப‌ய‌ன்ப‌டும் பிர‌சைக் கொண்டு சிவ‌ப்பு ம‌ற்றும் ஆரெஞ்ச் பெயிண்ட‌ ஸ்பெரே செய்து விடவும்.

எங்க‌ளின் ஓவிய‌ம்

Sunday, July 24, 2011

ஐஸ் ஹ‌ண்டிங்

த‌ண்ணீர், ஐஸ் போன்ற பொருட்க‌ளுட‌ன் விளையாட எந்த‌ குழ‌ந்தைக்குத் தான் ஆசை இருக்காது? நாங்க‌ள் முன்பே செய்திருந்த‌ ஐஸ் ஹ‌ண்டிங் மீண்டும் செய்தோம். இப்பொழுது இருக்கும் 94 வெயிலுக்குச் சிற‌ந்த‌ ஒரு ஆக்டிவிட்டி.

ஒரு பாத்திர‌த்தில் அரை பாத்திர‌ம் அள‌வில் த‌ண்ணீர் நிர‌ப்பி, அதில் சிறு பொருட்க‌ளைப் போட்டு உறைய‌ வைத்து விட‌ வேண்டும். அது உறைந்த‌வுட‌ன், மேலும் சிறு த‌ண்ணீர் விட்டு அதில் சிறு பொருட்க‌ள் போட்டு உறைய‌ வைக்க‌ வேண்டும். நான் இர‌ண்டாவ‌து முறை த‌ண்ணீர் ஊற்றும் பொழுது சிறிது க‌ல‌ரிங் சேர்த்துக் கொண்டேன்.



ஐஸ் க‌ட்டியிலிருந்து பொருட்க‌ளை எடுக்க‌ வேண்டும். பொருட்க‌ளை எடுக்க இடுக்கி, Screw driver போன்ற‌ன‌ கொடுத்தேன். தீஷு விருப்ப‌மாக‌ விளையாண்டாள். க‌ல‌ர் ப‌குதியில் இருந்த‌ ஐஸ் மீது பேப்ப‌ர் த‌ட‌வி க‌லரிங் செய்தாள். பொருட்க‌ளை எடுத்த‌ப்பின் இருந்த‌ க‌ல‌ர் த‌ண்ணீரில் சூப் செய்து எங்க‌ளுக்கு ப‌ரிமாறினாள். குழ‌ந்தைக‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ ஒரு விருப்ப‌மான‌ விளையாட்டாக‌ இருக்கும்.

Friday, July 22, 2011

தொகுப்பு

தின‌மும் அரை ம‌ணி நேர‌மாவ‌து ஓவிய‌ம் வ‌ரைய‌ வேண்டும் தீஷுவிற்கு. என்ன‌ செய்ய‌லாம் என்றால் யோசிக்காம‌ல் பெயிண்ட்டிங் என்று சொல்லுகிறாள். இப்பொழுதெல்லாம் பெயிண்ட்டை அவ‌ளிட‌ம் கொடுத்து விட்டு அந்த‌ இட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்து விடுகிறேன்.

அவ‌ளின் ப‌டைப்புக‌ள்

உப்பு, கோந்து, வாட்ட‌ர் க‌ல‌ர்




க‌ட்ட‌ம் வ‌ரைந்து உள்ளே க‌ல‌ர் செய்திருக்கிறாள். ஊதா பேப்ப‌ர் ப‌ச்சை நிற‌மாக மாறியுள்ள‌து.



மீண்டும் வீடும் மேக‌மும்




ஃபைன் கோன் பெயிண்ட்டிங்




வ‌ட்ட‌த்திற்குள்ளும் செவ்வ‌க‌த்திற்குள்ளும் புள்ளிக‌ள்




மார்க்க‌ரால் க‌ட்ட‌ங்க‌ள் வ‌ரைந்து வாட்ட‌ர் க‌லர் வ‌ண்ண‌ம்




தாளை வைத்து அத‌ன் மேல் வ‌ண்ண‌ம்




புரிய‌வில்லை :-)). நான்கைந்து வண்ண‌ங்க‌ளின் க‌ல‌வை




வீடுக‌ள், ம‌ர‌ங்க‌ள், மேக‌ங்க‌ள் ‍வாட்ட‌ர் க‌ல‌ர்


Monday, July 18, 2011

க‌ணித‌ விளையாட்டு ‍- 3

ஒரு தாளில் 1 முத‌ல் 12 வ‌ரை எழுதிக் கொள்ள‌ வேண்டும். விளையாடும் அனைவ‌ருக்கும் த‌னித்த‌னி பேப்ப‌ர். அதே போல் த‌னித்த‌னியாக‌ 12 காய்க‌ள் எடுத்துக் கொள்ள‌ வேண்டும். இர‌ண்டு தாய‌க் க‌ட்டையை உருட்ட‌ வேண்டும். ந‌ம் காயை எடுத்து தாய‌க்க‌ட்டைக‌ளில் விழுந்த‌ கூட்டுத்தொகையை நம் காகித்தில் அதே எண்ணின் மேல் வைக்க‌லாம் அல்ல‌து எந்த‌ எந்த‌ எண்க‌ளை கூட்டினால் அந்த‌ எண் வ‌ருமோ, அத‌ன் மேலும் வைக்க‌லாம். உதார‌ண‌த்திற்கு நாம் உருட்டிய‌ எண் 9 என்றால், 9 எண் மீது காய் வைக்க‌லாம், அல்ல‌து 1 மேல் ஒரு காயும் 8 மேல் ஒரு காயும் வைக்க‌லாம் ( 1+8 = 9 என்ப‌தால்), அல்லது 1 மேல் ஒரு காய் + 5 மேல் ஒரு காய் + 3 மேல் ஒரு காய் இப்ப‌டியாக‌. ஒரு எண்ணின் மேல் ஏற்கென‌வே காய் இருந்தால் அத‌ன் மேல் மீண்டும் வைக்க‌க் கூடாது. நாம் உருட்டிய‌ எண்ணை வைக்க‌ முடியாவிட்டால், நாம் விளையாட்டிலிருந்து நீங்கி விட‌ வேண்டும். எத்த‌ணை எண்க‌ள் விடுப‌ட்டுள்ள‌தோ, அது ந‌ம் ஸ்கோர். குறைந்த‌ ஸ்கோர் எடுத்த‌வ‌ர் வெற்றி பெறுவ‌ர். ஆகையால் ஒரு எண்ணை எவ்வ‌ள‌வு பிரிக்க‌ முடியுமா அந்த‌ அள‌வு பிரித்து அதிக‌ எண்க‌ளின் மேல் காய்க‌ள் வைப்ப‌தால் ஸ்கோர் குறையும். இந்த‌ விளையாட்டின் மூல‌ம் ப‌ல எண்க‌ளைக் கூட்ட‌ எளிதாக‌ ப‌ழ‌கிக் கொள்வ‌ர்.

ஐடியா Family Math புத்த‌க‌த்தில் எடுத்த‌து. ஆனால் நான் ச‌ற்று மாற்றியிருக்கிறேன்.

Saturday, July 16, 2011

Giant Bubbles

குழ‌ந்தைப் ப‌ருவ‌த்தில் துணி துவைக்கும் சோப்பைத் த‌ண்ணீரில் க‌ரைத்து, ஸ்ட்ரா(Straw) வைத்து ஊதி முட்டை (த‌ற்பொழுது குழ‌ந்தைக‌ள் கூறுவ‌து Bubbles) விடுவோம். தீஷுவிற்கும் ப‌பிள்ஸ் மிக‌வும் பிடிக்கும்.

அறிவிய‌ல் க‌ண்காட்சியில் ஜெய‌ன்ட் ப‌பிள்ஸ் (Giant Bubbles) என்று இர‌ண்டு க‌ட்டைக‌ளில் இரு க‌யிறுக‌ள் க‌ட்டி அத‌ன் ந‌டுவில் மிக‌ப் பெரிய‌ ப‌பிள்ஸ் வ‌ருவ‌து போல் செய்திருந்த‌ன‌ர். அதை வீட்டில் செய்யலாம் என்று முய‌ற்சித்தோம். மேலும் எப்பொழுதும் போல் ஸ்ட்ரா அல்ல‌து குச்சி வைத்து ஊதாம‌ல், வேறு சில‌ ஊதுவான்க‌ளும் முயற்சித்தோம்.



எங்க‌ளிட‌ம் க‌ட்டைக‌ள் இல்லை. இர‌ண்டு க‌ர‌ண்டிக‌ளை எடுத்துக் கொண்டோம். அவ‌ற்றை உல்ல‌ன் நூல் கொண்டும் இணைத்துக் கொண்டோம். நூலின் இடைவெளியில் ப‌பிள்ஸ் வ‌ரும் என்ப‌து ஐடியா. மேலும் ஒரு பிளாஸ்டிங் மூடியின் ந‌டுப்ப‌குதியில் ஒரு வ‌ட்ட‌ம் வெட்டி எடுத்து ஒரு ஊதுவானும், ஒரு ச‌துர‌ ட‌ப்பாவில் ஒரு ச‌துர‌ ப‌குதையை வெட்டி எடுத்து ஒரு ச‌துர‌ ஊதுவானும் த‌யாரித்துக் கொண்டோம். ச‌துர‌ துளை வ‌ழியாக‌ வ‌ரும் ப‌பிள்ஸ் எந்த‌ வ‌டிவ‌த்தில்‍ இருக்கும் என்று காண‌ ஆசை :-)).

சோப்புக் கல‌வை நாங்க‌ள் முன்ன‌மே வீட்டில் செய்திருக்கிறோம். இப்பொழுது கிளிச‌ரின் இல்லாத‌தால் வெறும் ப‌த்திர‌ம் துல‌க்கும் சோப்பும் (Dish washing liquid) த‌ண்ணீரும் க‌ல‌ந்து சோப்புக் க‌ல‌வை செய்தோம். சோப்பு க‌ல‌வையை ஒரு அக‌ல‌மான‌ பாத்திர‌த்தில் எடுத்துக் கொண்டோம். நூலுட‌ன் க‌ர‌ண்டியை க‌ல‌வையில் வைத்து, வெளியில் எடுத்து, க‌ர‌ண்டியை மெதுவாக‌ எதிர்புற‌த்தில் இழுத்து நூலைப் பிரிக்க‌வும். நூலுக்கு ந‌டுவில் சோப்பு மெல்லிய‌ இழையாக‌த் தெரியும். அத‌ன் மேல் ஊத‌வேண்டும். நாங்க‌ள் உல்ல‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌தால் நூலைப் பிரிப்ப‌த‌ற்காக‌ எளிதாக‌ இல்லை. ச‌ண‌ல் ப‌ய‌ன்ப‌டுத்தி இருந்தால் எளிதாக‌ இருந்திருக்கும்.

மிக‌ப் பெரிய‌ ப‌பிள்ஸ் வ‌ர‌வில்லை. ஆனால் பெரிய‌து வ‌ந்த‌து.

உல்ல‌ன் ஒட்டிக் கொண்டதால் நூலைப் பிரிக்க‌ முடியாத‌தால் வெறும் சிறு இடைவெளியே கிடைத்த்து



மீண்டும் க‌ல‌வையில் விழுந்த‌ ஒரு ப‌பிள்ஸ்




ச‌துர‌ துளை வ‌ழியாக‌வும் வ‌ட்ட‌மே வ‌ரும்




எதிர்பார்த்த‌து போல் வ‌ராவிட்டாலும் ந‌ல்ல‌வொரு முய‌ற்சியாக‌ அமைந்த‌து.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost