Tuesday, July 27, 2010

கவர்ந்த தருணங்கள் - 28/07/10

1. தீஷுவிற்கு ஜலதோஷம் பிடித்திருந்தது. இரவு நேரத்தில் தண்ணீரில் விளையாட வேண்டும் என்றாள். என் அம்மா,

"தண்ணீல விளையாண்டா நாளைக்கு கோல்ஃட் வந்திடும்.."
"இப்பவே இருக்கு.. அப்புறம் எப்படி திரும்ப வரும்?"

2. தூங்காமல் மீண்டும் மீண்டும் வேறு கதை வேண்டும் என்று படுத்துக்கொண்டு நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தாள். அரை மணி நேரம் சொல்லியாகிவிட்டது. எனக்கோ தூக்கம். அவளை தூங்கவைப்பதற்காக நான்,

"சீக்கிரம் தூங்குடா, யார் முதல்ல தூங்குறாங்கனு பார்ப்போம்"
"தூங்கினத்துக்கு அப்புறம் யார் முதல்ல தூங்குனாங்கனு எப்படி தெரியும்?"

3. தீஷுவும் அவ‌ள் ப்ரெண்டும் பொம்மைக‌ள் வைத்து விளையாண்டு கொண்டிருந்த‌ன‌ர்.

தீஷு த‌ன் பொம்மையிட‌ம்,

தீஷு :"அழாத‌டா... அம்மா வ‌ர்றேன்.."
ப்ரெண்டு : "அது அழ‌வே இல்லை"
தீஷு : "அழ‌லைனாலும் சும்மா அதுக்கிட்ட‌ பேசிக்கிட்டே இருக்க‌னும்.. அப்ப‌த்தான் அது பெரிசானாவுட‌ன் ந‌ல்லா பேசும்"

யார்கிட்ட‌ இருந்து இதெல்லாம் க‌ற்றுக் கொள்கிறாள்.

4. தீஷுவிற்கு வீட்டுப்பாட‌ம் கொடுத்து இருந்த‌ன‌ர். ஒரு க‌ல‌ரிங், இர‌ண்டு ப‌க்க‌ம் எழுத‌ வேண்டும். க‌ல‌ரிங்கும், ஒரு ப‌க்க‌மும் முடித்து விட்டாள். நானே போதும், இன்னொரு ப‌க்க‌த்தை நாளைக்கு எழுதிக் கொள்ள‌லாம் என்று சொல்லி விட்டேன். ம‌றுநாள் ஆன்ட்டி இன்னொரு புக் எங்கே என்று கேட்டியிருக்கிறார்க‌ள். நீ என்ன‌ சொன்ன‌ என்ற‌த‌ற்கு "I will do one by one only" என்றாலாம்

ஆன்ட்டி ப‌க்க‌த்தில் இருந்த‌வ‌ரிட‌ம் சொல்லிச் சிரித்தார்க‌ளாம். என் டீச்ச‌ரிட‌ம் நான் இப்ப‌டி ப‌தில் சொல்லியிருந்தால்?

Monday, July 26, 2010

மூணு முக்கோண‌ங்க‌ள் சேர்த்தால்

பாட்டன்ஸ் ப்ளாக்ஸ் (Pattern Blocks) வாங்கும் பொழுது அதன் முழு உபயோகமும் தெரிந்திருக்க வில்லை. படங்களில் மேல் காய்களை முதலில் பொருத்தப்பழக்கலாம் என்றும், பழகியவுடன் தானாக படங்களை உருவாக்கப்பழக்கலாம் என்று நினைத்துத்தான் வாங்கினேன். அப்பொழுது தீஷுவிற்கு இரண்டு வயது தான் ஆனது.

இப்பொழுது தான், காய்களின் அளவைப் பார்த்தேன். ஆறு முக்கோணங்கள் ஒரு ஹெக்ஸகனில் பொருந்துகிறது, மூன்று முக்கோணங்கள் டிரப்பிஸெயத்திலும், இரண்டு டைமண்டிலும் பொருந்துகிறது. தீஷுவிற்கு முக்கோணங்களை ஹெக்ஸகனில் பொருத்திக்காட்டினேன். அவளாகவே டிரப்பிஸெயமும், முக்கோணமும், டைமண்டும் முக்கோணமும் என்று பல வகைகளில் பல வடிவங்கள் உருவாக்கிக்கொண்டுயிருந்தாள்.



அப்பொழுது தான் எனக்கு இந்த யோசனைத் தோன்றியது. ஆனால் என்னால் செயல் வடிவம் கொடுக்க முடியவில்லை. என் வழக்கப்படி வலையில் தேடினேன். அது போல் கிடைக்கவில்லை. அப்பாவிடம் சொன்னவுடன் வரைந்து கொடுத்தார். ஒரு பெரிய ஹெக்ஸகனை முக்கோணம் கொண்டு உருவாக்குவது. அப்பா எங்களிடம் இருந்த முக்கோண அளவை கணக்கில் கொண்டு வரைந்தார்.



அந்தப்படத்தை வெவ்வேறு வடிவங்கள் கொண்டு உருவாக்குகிறோம். இப்பொழுது சைனீஸ் செக்க‌ர்ஸ் போர்டில் ஆறு முக்கோண‌ங்க‌ளைச் சேர்த்து ஹெக்ஸ‌க‌ன் என்று சொல்லும் அள‌விற்கு தீஷுவிற்கு புரிந்து இருக்கிறது.

Thursday, July 22, 2010

ம‌ர‌த்தை வெட்டி சேர்

தீஷுவிற்கு மரங்கள் எவ்வாறு வளர்கின்றன மற்றும் அதன் வளர்ச்சிப்படிகள் தெரியும். மரங்களின் பாகங்கள் சொல்லிக்கொடுக்கலாம் என்று நினைத்தேன். சில நாட்களுக்கு முன் வாக்கிங் போகும் பொழுது ஒவ்வொரு மரமாக சென்று ஸ்டெம், பிராஞ்ச், லீவ்ஸ் என்று கற்றோம். பொம்மைக்கடையில் சென்ற வாரம் மரம் பாகங்களை விளக்கும் ஒரு பஸில் பார்த்தேன். வேர், கிளைகள் எனப் பிரித்து பிரித்து பஸில் பீஸ்கள் செய்திருந்தார்கள். அதன் பாகங்களும் குறிக்கப்பட்டு இருந்தன. விலை முந்நூறு ரூபாய் என நினைக்கிறேன். அந்த ஐடியா பிடித்திருந்தது.

நெட்டில் தேடியபொழுது மரமும் அதன் பாகங்களும் கொண்ட படங்கள் கிடைத்தன. அவற்றை இரண்டு பிரிண்ட் அவுட் எடுத்து கலர் செய்து கொண்டேன். ஒன்றை பஸில் பீஸ்கள் போல் வெட்டி விட்டேன். வெட்டிய பாகங்களில் பின் ஒரு சிறு காந்தம் ஒட்டிவிட்டேன். மற்றொன்றை வெட்டவில்லை. அது சாம்பிள். அதைப்பார்த்து தீஷு வெட்டிய பஸிலை செய்ய வேண்டும்.






வெறும் பேப்பர் என்பதால் அதன் ஆயுள் அதிகமாக இருக்காது. கண்ணால் பார்ப்பதை விட கையால் செய்வது கற்றலுக்கு நல்லது. தீஷுவிற்கு கையால் பாகங்களை இணைக்கும் பொழுது பாகங்களின் பற்றிய விளக்கங்களும் அதன் பயன்பாடும் நன்றாக புரியும் என்பதால் இது போன்ற பஸில் அவளுக்கு உபயோகமாக இருக்கும் என்பது என் எண்ணம்.

Wednesday, July 21, 2010

க‌வ‌ன‌ச்சித‌ற‌ல்

இன்று காலையில் ஆபிஸ் சென்று கொண்டிருந்த‌ பொழுது க‌ண்ட‌ காட்சி. டிராபிக்கில் ப‌ஸ் நின்று கொண்டிருந்த‌து. ரோட்டில் ஏதோ வேலை ந‌ட‌ந்து கொண்டிருந்தது. பிளாட்பார‌ம் ச‌ரி செய்கிறார்க‌ள் என்று நினைக்கிறேன். ஒரு ப‌த்து வ‌ய‌து பையன் ம‌ண்ணை ம‌ண் வெட்டியால் எடுத்து த‌ட்டில் போட்டுக் கொண்டிருந்தான். அருகில் ஒரு பெண் குழ‌ந்தை, தீஷு வ‌ய‌து இருக்கும். வேறு யாரும் அங்கு இல்லை.

அந்த‌ நான்கு வ‌ய‌து குழ‌ந்தை, ஒரு பெஸ்ஸி பாட்டிலில் ம‌ண்ணை நிர‌ப்பிக் கொண்டிருந்த‌து. நான் பார்க்க‌ ஆர‌ம்பித்த‌ பொழுது கால் பாட்டி நிர‌ப்பியிருந்த‌து. பின் கைக‌ளால் அள்ளிப்போட்டே முழு பாட்டிலையும் நிர‌ப்பி விட்ட‌து. டிராபிக் ஜாம், வெயில் என‌ சுற்றி ந‌ட‌ந்த‌ ஒன்றும் அத‌ன் க‌வ‌ன‌த்தைத் திசைத் திருப்ப‌ முடிய‌வில்லை. அத‌ன் க‌வ‌ன‌ம் முழுவ‌தும் பாட்டிலும், ம‌ண்ணிலும். எத்த‌னை விச‌ய‌த்தை அக்குழ‌ந்தைக் க‌ற்று இருக்கும். காலி பாட்டில், நிறைந்த‌ பாட்டில், நிறைந்த‌ பாட்டிலில் ம‌ண் போட‌ முடிய‌வில்லை, கை க‌ண் ஒருங்கிணைப்பு போன்ற‌வை..

சில‌ நாட்க‌ளுக்கு முன் புத்த‌க‌த்தில் ப‌டித்த‌து. குழ‌ந்தைக‌ளுக்கு பிற‌க்கும் பொழுதுதே க‌வ‌ன‌ச்சித‌ற‌ல் அதிக‌ம் இருப்ப‌தில்லை. க‌ற்க‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லும் அதிக‌ம். க‌வன‌ சித‌ற‌லை நாம் அதிக‌ப்ப‌டுத்துகிறோம். குழ‌ந்தை ஆழ்ந்து ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, நாம் கிள‌ம்ப‌ வேண்டும் என்றால், ந‌ம் அவ‌ச‌ர‌த்தை அக்குழ‌ந்தையிட‌ம் காண்பித்து அத‌ன் க‌வ‌ன‌த்தைச் சித‌ற‌டிப்போம். குழ‌ந்தை த‌ன‌க்குப்பிடித்த‌ ஆனால் முடிக்க‌ முடியாத‌ வேலையை பாதியிலேயே விட்டு விடும். எடுத்த‌ வேலையை முடிக்க‌ வேண்டிய‌தில்லை என்றும் ப‌ழ‌குகிற‌து. அத‌னாலேயே மாண்டிசோரி ப‌ள்ளிக‌ளில் குழ‌ந்தையை வ‌ற்புறுத்துவ‌தில்லை. ஒரு வேலையை ஒரு குழ‌ந்தை எவ்வ‌ள‌வு நேர‌ம் வேண்டுமானாலும் செய்யலாம். இத‌ன் மூல‌ம் அத‌ன் ம‌னதிற்கு பிடித்த‌தைச் செய்த‌ திருப்தி கிடைக்கிற‌து. அந்த மகிழ்ச்சி குழந்தையின் மன வளர்ச்சிக்கு ஏற்றது.

நாம் கவனச்சிதறல் அதிகப்ப‌டுத்திவிட்டு பின்னாளில் அவர்களிடம் குறைப்பட்டு என்ன லாபம்?

Tuesday, July 20, 2010

ம‌ண‌ல் த‌ட்டு

சில வருடங்களுக்கு முன் மணலில் எழுதிப்பழகினர். நம் தாத்தா, பாட்டியே கூட அவ்வாறு கற்று இருக்கலாம். நம் காலத்தில் சிலேட்டில் எழுதினோம். இப்பொழுது சிலேட்டைப் பார்க்க முடிவதில்லை. இதுவரை தீஷு படித்த இரண்டு பள்ளிகளிலும் சிலேட் இல்லை. ஆரம்பிக்கும் பொழுதே நோட் புக் தான்.

மணல் மிருதுவாக இல்லாமல் சற்று சொரச்சொரப்பாக இருக்கும். தொடுதல் உணர்ச்சிக்கு ஏற்றது. அது ஒரு sensorial ஆப்ஜெக்ட்.

தீஷு எழுத ஆரம்பித்த பொழுது, அவளுக்கு ரவை மூலம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அப்பொழுது மணலும் கிடைக்கவில்லை. மேலும் சிந்தும் மணலை எடுத்துப் போடுவது அங்கு கஷ்டம். இப்பொழுது அந்த இரு பிரச்சினைகளும் இல்லாததால் மணல் தட்டு செய்யலாம் என்று நினைத்தேன்.

நானும் தீஷுவும் எங்கள் அப்பார்ட்மெண்ட் பார்க்க்குச் சென்று மணல் எடுத்து வந்தோம். அந்த மணலை சல்லடைக் கொண்டு சலித்தோம். தீஷுவிற்கு தான் செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால் முதல் நாள் மழை பெய்திருந்ததால் மணலின் ஈரம் கனத்தைக்கூட்டி விட்டது. அவளால் செய்ய முடியவில்லை. பின்பு சிந்திய மணலை சுத்தம் செய்து (எத்தனை மாண்டிசோரி பயிற்சிமுறைகள்), மீதி மணலை மீண்டும் பார்க்கில் போட்டு, சல்லடையைச்சுத்தம் செய்தோம். அரை வாலி தண்ணீரையும் சல்லடையையும் கொடுத்து விட்டேன். தீஷுவிற்கு அரைமணி நேரம் பொழுது போனது. அவளுக்குச் சளித் தொந்தரவு அதிகம் என்பதால், அப்பா சுத்தம் செய்தது போதும் என்று வாங்கி வைத்து விட்டார். இல்லையென்றால் இன்னும் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் விளையாண்டு இருப்பாள்.



அந்த மணல் தட்டில் எழுதிப் பழகினோம். தீஷுவின் ஸிலபஸ் படி அவளுக்கு cursive writting ஆரம்பித்துவிட்டனர். a, c, t முதலியன எழுதுகிறாள். மீண்டும் மீண்டும் எழுதுவதற்கு மணல் உபயோகமாக இருக்கிறது. எழுத்துகள், வார்த்தைகள், படங்கள் என்று அழித்து அழித்து எழுதுவதற்கு மணல் தட்டு வசதியாக இருக்கிறது.



ஒரு பக்கம் எழுதிய தாள்கள் தான் இதுப் போன்றவைகளுக்கு நாங்கள் உபயோகப்படுத்தினாலும் எழுதப்பழகும் பொழுது நிறைய தாள்கள் வீணடிப்போம். இந்த முறையில் வீணடித்தல் தடுக்கப்படுகிறது. மணல் தட்டு இல்லையென்றாலும் சிலேட்டிலாவது இனிமேல் எழுத வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஏதோ பூமித்தாய்க்கு நம்மால் முடிந்த உதவி.

Monday, July 19, 2010

சுத்தி எடு

தீஷு ஹாமரிங் (Hammering) ஆக்டிவிட்டீ வெகு நாட்களாக கேட்டுக்கொண்டிருந்தாள். பள்ளியில் செய்துயிருக்கிறாள் போல.

மரத்தில் ஹாமரிங் செட் கடைகளில் கிடைக்கிறது. ஆனால் ஒரு இரு முறை செய்து விட்டு தீஷு தொடவே மாட்டாள். ஆகையால் வாங்குவதற்கு பதில் வீட்டிலேயே செய்து விடலாம் என்று நினைத்தேன்.



வீட்டில் ஒரு பெரிய சுத்தியல் இருக்கிறது. நல்ல கனம். நல்ல பெரிய சைஸ் ஆணி 10 மற்றும் பழைய ஷூ டப்பா எடுத்துக் கொண்டேன். தீஷுவிற்கு பார்த்தவுடன் புரிந்துவிட்டது. ஆணியை ஷூ டப்பாவில் வைத்து, சுத்தியலால் அடிக்க வேண்டும். நமக்கு இதில் என்ன என்பது போல் தோன்றுகிறது. ஆனால் ஒவ்வொரு ஆணி அடுத்து முடித்தவுடன் தீஷுவிடம் தான் எத்தனை சந்தோஷம். மீண்டும் ஒரு முறை செய்தாள். அடுத்து அரை மணி நேரம் கழித்து ஒரு முறை எடுத்து செய்தாள்.

சமீபத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த ஆக்டிவிட்டி என்று நினைக்கிறேன். என் கணவரின் பாட்டியிடம் போய் தான் ஹாமரிங் செய்ததாகச் சொன்னாள். என் அம்மாவிடம் போனில் சந்தோஷமாகச் சொன்னாள். ஆனால் பெரிய சைஸ் சுத்தியல் மற்றும் நீள ஆணி அவள் செய்யும் பொழுது அவள் பக்கத்தில் என்னை உட்கார வைத்திருக்கின்றன.

Wednesday, July 14, 2010

வ‌ர‌வு செல‌வு

நான் : "சாப்பாட வேஸ்ட் பண்ணக்கூடாது, நிறைய பேரு சாப்பாடு கிடைக்காம இருக்காங்க"

தீஷு : "அவுங்க எல்லாம் டேய்லி ஹோட்டலில் போய் சாப்பிடுவாங்களா"

நான் : "ஹோட்டல்ல சாப்பிட மாட்டாங்க.. அவுங்க கிட்ட பணம் இல்லை.. பசியோடையே இருப்பாங்க"

தீஷு: "ஏன் பணம் இல்லை.. அவுங்க பாண்ட் (Pant) போடலையா? (அப்பா பர்ஸை பாண்ட் பாக்கெட்டில் வைத்திருப்பார்)

நான் : "இல்லை..அவுங்க கிட்ட கொடுக்க பணம் இல்லை"

தீஷு : "ஏன் அவுங்க பாங்க்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாமே?"

தீஷுவிற்கு உணவு வீணாக்கக்கூடாது என்று புரியவைக்க ஆரம்பித்த உரையாடல் இவ்வாறு நீண்டு கொண்டே போனது.

அப்பாவிற்கு தீஷுவிற்கு பாங்க் பற்றியும், பணத்தின் அருமையையும், நமக்கு பணம் கிடைக்கும் வழியையும் ஒரு விளையாட்டு மூலம் சொல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றியது.

ஒரு காலெண்டர், கண்ணாடி கற்கள் போன்றவை எடுத்துக் கொண்டனர். ஒரு மாதம்
வேலை செய்தால் தீஷுவிற்கு ஐந்து கற்கள் சம்பளம். அதைப் பாங்க்கில் போட்டு வைத்திருந்தாள். அரிசி, உடை போன்ற செலவிற்கு அதிலிருந்து எடுத்துச் செலவழித்தாள். மீண்டும் ஒரு மாதம் ஆனவுடனே அடுத்த சம்பளம் வரும், இதுவரை இருக்கும் பணத்தை வைத்தே செலவு செய்ய வேண்டும் என்று புரிந்தது.

"அப்பா, சட்டை மூணு ரூபா.. ஆனா என்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே" என்று வருத்தம் வேறு. வரவு, செலவோடு கணிதத்தையும் சேர்த்துக் கற்றாள்.

அன்று இரவு, பீட்ஸா வேண்டும் என்றாள். அப்பா, இது ரொம்ப காஸ்ட்லி, அவ்வளவு பணம் உன்கிட்ட இருக்கா என்றவுடன், "இல்ல, அப்புறம் வாங்கிக்கிடலாம்" என்று சொல்லி விட்டாள்.. ஆகா!!! இது கூட நல்லாயிருக்கே...

Tuesday, July 13, 2010

கை ரேகை

ந‌ம் உட‌ம்பைப் ப‌ற்றி திஷுவிற்கு சொல்லிக்கொடுக்க‌ ஆர‌ம்பித்து இருக்கிறேன். இது கை ரேகைப் ப‌ற்றி ப‌டித்த‌ பொழுது செய்த‌து. கைரேகைப்பற்றி முன்பே தீஷுவிற்கு சொல்லியிருக்கிறேன். ஆனால் அப்பொழுது பெயிண்ட் கொண்டு செய்திருந்ததால், நன்றாகத் தெரியவில்லை. தீஷுவின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்டாப் ஸெட்(Stamp set) பரிசாக அவளுக்குக் கொடுத்தோம். அதிலுள்ள இங்க் பாட் கொண்டு கை ரேகை எடுக்கலாம் என்று முன்பு போல் தீஷுவின் கைகளை வரைந்து கொண்டோம். ஒவ்வொரு விரலையும் இங்க்கில் தொட்டு, வரைந்த விரலில் வைத்தோம். இந்த முறை பரவாயில்லாமல் தெரிந்தது.

வேறு ஒரு முறையில் முயற்சித்தோம். இது சிறு வயதில் எங்கள் பள்ளியில் செய்தது.

1. பென்சிலால் சற்று அடர்த்தியாக வரைந்து கொள்ள வேண்டும்



2. அதை நம் விரலால் அழுத்தித் தொட வேண்டும்



3. அந்த விரலை செல்லோ டேப்பின் (cellotape) பிசுப்பிசுப்பு பக்கத்தில் வைக்க வேண்டும்.

4. ஒரு வெள்ளைத்தாளில் அந்த செல்லோ டேப்பை ஒட்டினால் அதில் ரைகை நன்றாக தெரியும்.

இப்பொழுது தீஷுவிற்கு கை ரைகைப்பற்றி ஓரளவு புரிந்திருக்கிறது.

Monday, July 12, 2010

என்னால் எல்லாம் முடியும்..

கல‌ரை‌த் தொட்டு அந்த‌ க‌ல‌ர் என்ன‌ என்று க‌ண்டுபிடிக்க‌ முடியும் என்று தீஷு உறுதியாக‌ இருந்தாள். சென்னையில் மின்சார‌ இர‌யில் டிக்கெட் ஆறில் மூன்று ஒரு நிறமாக‌வும், மூன்று சற்று வித்தியாச‌மாக‌வும் இருந்த‌ன‌. க‌ண்ணை மூடிக்கொண்டு க‌ல‌ர் அடிப்ப‌டையில் பிரி என்ற‌வுட‌ன் பிரித்தும் விட்டாள். அவ‌ள் பார்த்த‌ மாதிரி தெரிய‌வில்லை. டிக்கெட் தொடுவ‌த‌ற்கும் ச‌ற்று வித்தியாச‌மாக‌ இருந்திருக்க‌ வேண்டும். அப்பொழுது பை அடுக்கிக் கொண்டு இருந்தேன். ஊருக்குக் கிள‌ம்பும் அவ‌ச‌ர‌ம் வேறு. புரிய‌ வைக்க‌ முடிய‌ நேர‌மில்லை.



பெங்க‌ளூர் வ‌ந்த‌வுட‌ன் அவ‌ள் ஸ்ஷேப் ஸாட்ட‌ர்ஸ் எடுத்துக் கொண்டேன். அதில் நான்கு வ‌ண்ண‌த்தில் நான்கு வ‌டிவ‌ங்க‌ள் ஒரு பையில் வைத்து விட்டேன். அதே நான்கு வ‌டிவ‌ங்க‌ள் அவ‌ள் அருகில் வைத்து விட்டு, ட்ரையாங்கிள் என்ற‌வுட‌ன் முக்கோண‌ம் எடுத்துக் கொடுத்தாள். அவ‌ள் அருகில் இருந்த‌ முக்கோண‌த்திற்கு அருகில் வைக்க‌ச்சொன்னேன். செய்தாள். இவ்வாறு நான்கு வ‌டிவ‌ங்க‌ளும் முடித்த‌வுட‌ன், அவ‌ள் அருகிலிருந்த‌ எட்டையும் பையில் போட்டேன். இப்பொழுது ஊதா சதுர‌ம் என்ற‌வுட‌ன், ஒரு ச‌துர‌த்தை எடுத்தாள். ப‌ச்சை ச‌துர‌ம் (ந‌ல்ல‌ வேளை.. ஊதா வ‌ர‌வில்லை..) மீண்டும் கையை பையில் விட்டு ஊதா எடுக்க‌ முய‌ன்றாள். க‌ல‌ரைத் தொட்டுப்பார்த்து எடுக்க‌ முடியாது என்றேன். லேசாக‌ த‌லையை அசைத்தாள்.

மீண்டும் பில்டிங் செட் வைத்து விளையாடும் பொழுதும் இதேப் பேச்சு. உண‌ர்த‌லில் க‌ல‌ர் க‌ண்டுபிடிக்க‌ முடியும் என்றாள். இந்த‌ முறை நான் க‌ண்டுபிடிக்கும் வேலையை எடுத்துக் கொண்டேன். என்னால் அத‌ன் அள‌வு க‌ண்டுபிடிக்க‌ முடியும் ஆனால் க‌ல‌ர் முடியாது என்றேன். அவ‌ள் கல‌ர் சொல்லி அந்த‌ க‌ல‌ர் தான், சொல் என்றாள். என‌க்குப் புரிய‌ வைக்க‌ முடியவில்லை.அவளால் சிலவற்றை நம்மால் செய்ய முடியாது என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

அப்பொழுது தான் அப்பா உத‌விக்கு வ‌ந்தார். நீ எப்ப‌டி மாடிக்கு போவ‌ என்ற‌வுட‌ன் ப‌டி ஏறி என்றாள். புறா எப்ப‌டி போகும் என்ற‌வுடன் யோசித்து விட்டு, ப‌டி ஏறித் தான் என்றாள். மேலும் சில‌ நிமிட‌ங்க‌ள் பேசிய‌ப்பின் புறா ப‌ற‌க்கும் ஆனா என்னால‌ ப‌ற‌க்க‌ முடியாது என்றாள்.

என‌க்கு என்னமோ இந்த‌ப்பேச்சு முடிந்த‌ மாதிரி தெரிய‌வில்லை. முயல்வது நன்று. ஆனால் முடியவே முடியாத விஷயத்தை என்னால் முடியாது என்பதை ஒத்துக்கொள்ளாமல் இருப்பது என்னைப் பொறுத்த வரை தவறு. வேறு வகையில் தீஷுவிற்கு புரியவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

Sunday, July 11, 2010

மேலும் சில

ஹண்ரட் போர்ட் விளையாட்டுகள் பற்றி இங்கே எழுதியிருந்தேன். அதை வைத்து மேலும் சில விளையாட்டுகள் விளையாண்டோம்.

Counting by 2: எந்த எண்ணிலிருந்து ஆரம்பிக்கிறமோ, அதன் ஒன்று விட்ட எண்களைச் சொல்லிக் கொண்டே வர வேண்டும். உதாரணத்திற்கு 7 என்றால், 9, 11, 13 என்று சொல்ல வேண்டும். இதன் மூலம் நான் ஒற்றை எண்ணில் (odd number) ஆரம்பித்தால் தானும் ஒற்றை எண்ணாக சொல்கிறோம் என்றும் இரட்டை எண் (even number) ஆரம்பித்தால் இரட்டை எண்ணாகச் சொல்கிறோம் என்று புரிந்து கொள்வாள் என்று நினைத்தேன். ஆனால் தீஷுவிற்கு புரியவில்லை. சற்று பெரிய குழந்தைகளுக்கு counting by 5, 6 என்று சற்று கடினமாக்கலாம்.



ஒரு எண்ணைச் சொன்னால் அதைக் கண்டுபிடிப்பது பற்றி எழுதியிருந்தேன். ஒரு நாள் கையை வைத்து காட்டாமல் அந்த எண்ணை மீது கண்ணாடி கற்களை வைக்கச் சொன்னேன். முடித்த எண்களின் மீதிருந்த கற்களை எடுக்காமல் அடுத்து அடுத்து வைத்துக் கொண்டே வந்தோம். அப்பொழுது நான் இந்த ஐடியா தோன்றியது. எண்ணை கண்டுபிடித்து வைக்கும் அந்த கற்களைக் கொண்டு ஏதாவது படம் உருவாக்கலாம் என்று. இணையத்தில் தேடியதில் சில படங்கள் உருவாக்க எண்கள் கிடைத்தன. ஆனால் அவற்றில் எண்கள் கண்டுபிடிக்கும் க்ளூகள் சற்று கடினமாக இருந்தது. நான் தீஷுவிற்கு தகுந்தாற் போல் மாற்றி அமைத்துக் கொண்டேன். உதாரணத்திற்கு 6 என்று சொல்வதற்கு பதில் 3+3, 45க்கு பதில் Number comes after 44 போன்றன. After எண் சொல்லத் தெரிகிறது. Before தெரியவில்லை.

கற்கள் வைத்தால் படங்களை அவளால் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அந்த கட்டங்கள் மீது கலர் செய்ய சொன்னேன். நன்றாக வந்தது. ஒரே போர்டை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்த இங்கே செய்தது போல் sheet protectors உபயோக்கித்துக் கொண்டேன்.

Missing Numbers: சில எண்களை எழுதாமல் போர்டை எடுத்துக் கொண்டேன். அந்த எண்களை தீஷு நிரப்ப வேண்டும். ஆனால் அவளுக்கு விருப்பமிருக்கவில்லை. சில நாட்கள் கழித்து முயல வேண்டும்.

Wednesday, July 7, 2010

Moveable alphabets

வாசிக்கப்பழகுவதற்கும், வார்த்தை உருவாக்கப்பழகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. வார்த்தை உருவாக்கப் பழக்குவதற்கு மாண்டிசோரியில் உபயோகப்படுத்தப்படும் முக்கிய கருவி - moveable alphabets. எழுதத் தெரியாத குழந்தை முதலில் வார்த்தை உருவாக்கப்பழகினால் இது மிகவும் உபயோகமாக இருக்கும். அனைத்து எழுத்துக்களும் தனித்தனி பிரிவுகளில் அடுக்கப்பட்டு இது போல் இருக்கும்.

தீஷுவிற்கு வார்த்தை உருவாக்கப் பழக்கிக்கொண்டு இருக்கிறேன். வார்த்தைகள் உருவாக்கும் பொழுது எழுதவும் சொன்னால் இரு செயல்களில் கவனம் இருப்பதால் கடினமானதாக இருக்கும் என்று எண்ணி மாக்னெட்டிக் எழுத்துக்கள் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தோம். ஆனால் moveable alphabets செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். எதில் எழுத்துக்களை சேமிப்பது என்று தெரியவில்ல. Ferrero Rocher காலி டப்பாவைப் பார்த்தவுடன், எழுத்துக்களை வைப்பதற்கு நல்ல இடம் கிடைத்து விட்டது என்று தோன்றியது.



வலையிலிருந்து பிரிண்ட்-அவுட் எடுத்து, எழுத்துக்களை கத்தரித்து வைத்து விட்டேன். ஆனால் இதில் எழுத்துக்களை தேடுவது தீஷுவிற்கு கடினமானதாக இருக்கிறது. புதிதாக இருந்த அன்று 3 - 4 வார்த்தைகள் உருவாக்கினாள். அதன் பின் உபயோகப்படுத்தவில்லை. தொட‌ர்ந்து உப‌யோக‌ப்ப‌டுத்த‌ ஊக்குவிக்க‌ வேண்டும்.

Monday, July 5, 2010

மீண்டும் வேறு முறையில்



சென்ற முறை தீஷுவிற்கு கழித்தல் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவ‌ளுக்குத் தெளிவாக‌ப் புரிய‌வில்லை. மீண்டும் முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். இந்த முறை வேறு முறையில் செய்தோம்.

நான் ஒரு வட்டம் வரைந்து, அதை நீல நிறத்தில் கலர் செய்து கொண்டேன். இது குளம். எங்களிடம் இருந்த மீன் பொம்மைகள் கிண்ணத்தில் எடுத்து கொண்டோம். கழித்தலில் முதல் எண்ணின் அளவு மீனை குளத்தில் வைக்க வேண்டும். இரண்டாம் எண்ணின் அளவு மீனை குளத்திலிருந்து எடுத்து ஊருக்கு அனுப்பிவிட வேண்டும். விடையை எழுதியவுடன் அனைத்தையும் கிண்ணத்தில் வைத்து விட வேண்டும். மீண்டும் அடுத்த கணக்கு.

தீஷுவிற்கு புரிந்துவிட்டது. பிடித்தும் விட்டது. தினமும் மூன்று நான்கு கழித்தல் கணக்குகள் செய்கிறோம்.

Thursday, July 1, 2010

மாஸ்ட‌ர் பீஸ்(ஸ‌ஸ்)

சென்ற‌ முறை செய்த‌ இய‌ற்கை பெயிண்ட் எங்க‌ள் வீட்டில் மிக‌வும் பிர‌ப‌ல‌ம். தீஷுவிற்கு பிடித்திருந்த‌தால் ம‌ற்றொரு முறையில் பெயிண்ட் செய்ய‌லாம் என்று நினைத்தேன்.

தேவைப்ப‌டுப‌வை :

1. மைதா மாவு ‍ 4 ஸ்பூன்
2. த‌ண்ணீர்
3. Food Colouring



மைதா மாவில் 8 ஸ்பூன் த‌ண்ணீர் விட்டு, க‌ட்டி இல்லாம‌ல் பிசைய‌ வேண்டும்.

6 ஸ்பூன் தண்ணீரை கொதிக்க‌ வைக்க‌ வேண்டும். கொதிக்கும் நீரில் மைதா மாவு க‌ல‌வையைப் போட்டு க‌ட்டி இல்லாம‌ல் கிண்ட‌ வேண்டும். ஒர் இரு விநாடிக‌ளில் மாவு ஓர‌ங்களில் ஒட்டாம‌ல் வ‌ரும். அடுப்பை அணைத்து விட‌ வேண்டும்.



வெவ்வேறு கிண்ண‌ங்க‌ளில் மாவை ஊற்றி கல‌ரிங் சேர்த்து க‌ல‌ந்தால் பெயிண்ட் த‌யார்.

தீஷுவிற்கு பேப்ப‌ர், ப்ரெஷ், தெர்மோ கோல், அட்டை என்று வித்தியாச‌மான பொருட்க‌ள் கொடுத்தேன். அவ‌ளும் அதில் இதில் பெயிண்ட் செய்ய‌ என்று ஆர‌ம்பித்து இறுதியில் Finger paintவும் ஆர‌ம்பித்து விட்டாள்.



அவ‌ளுக்கு மிக‌வும் பிடித்திருந்த‌து. அவ‌ளின் சில‌ பெயிண்ட்டிங்ஸ். மைதா மாவு இருப்ப‌தால் வெகு நாட்க‌ளுக்கு வைத்திருக்க‌ முடியுமா என்று தெரிய‌வில்லை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost