எனக்குக் குழந்தைப் பருவத்தில் மெமரி கேம் (Memory game) மிகவும் இஷ்டம். தனியாக இருந்தாலும் சீட்டுக் கட்டு (playing cards) வைத்து விளையாண்டு கொண்டு இருப்பேன். தீஷுவிற்கு மெமரி கேம் ஏனோ இவ்வளவு நாள் சொல்லிக் கொடுத்ததில்லை. ஒரு முறை வெகு நாட்களுக்கு முன் சொல்லிக் கொடுக்க முயற்சித்த ஞாபகம். அவளுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. இந்த வாரம் சொல்லிக் கொடுத்தேன். முதலில் 2 ஜோடிகள் எடுத்துக் கொண்டு விளையாண்டோம். இப்பொழுது 10 ஜோடிகள் வரை விளையாடுகிறாள்.அதற்கு மேல் நான் முயற்சிக்கவில்லை. நான் சில விஷயங்களை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. சில படங்கள் அவள் ஞாபகத்தில் இருந்தால், அவற்றை அவள் திரும்ப திரும்பி பார்க்க வேண்டியதில்லை போன்றவை. அவளுக்கு நான் வெற்றி பெற்றால் பிடிப்பதில்லை. வெற்றி தோல்வி பழக்குவதற்கு இது போன்ற விளையாட்டுகள் உதவுகின்றன.
தீஷு விளையாடும் மற்றுமொரு விளையாட்டு tic tac toe. டிக் டாக் டோ என்று சொன்னவுடன், இது என்ன பேரு என்றாள். ஆரம்பித்த பொழுது முதல் படியாக நான் எனது மூன்று காய்களையும் வைத்து விட்டேன். எந்த வரிசையில் வைத்தால் அவளால் மூன்று காய்களை ஒரே வரிசையில் வைக்க முடியுமோ, அந்த வரிசையைத் தேர்ந்தெடுத்து அவள் வைக்க வேண்டும். அதை நன்றாகச் செய்யப் பழகியவுடன், நானும் அவளும் முறை எடுத்து காய்கள் வைத்தோம். அவள் ஒரு வரிசையை நிரப்ப வேண்டும் என்று காயை வைக்க, நான் அவள் வரிசையை நிரப்ப விடாமல் தடுத்து என் காயை வைத்தால், அவள் தன் அடுத்த காயை வேறு வரிசையை நிரப்பும் படி வைக்க வேண்டும். புரிந்து கொண்டாள். நன்றாக விளையாடுகிறாள்.
இவை இரண்டும் தவிர, அடுத்து சிறிய அளவில் சுடோகு சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். அது தவிர அவள் வயதுக்கு ஏற்ற வேறு விளையாட்டுகள் இருந்தால் சொல்லுங்களேன்.
Games to play with 3 year old without anything
2 years ago
No comments:
Post a Comment