Tuesday, April 28, 2009

முதல் விடுகதை

உன் கிட்ட இரண்டு தான் இருக்கு. ஆனா ஸ்பைடரிடம் எட்டு, ஆக்டோபஸிடம் எட்டு இருக்கு. அது என்ன? - இது தான் நான் அவளிடம் கேட்ட முதல் விடுகதை. சரியாக கால் என்றாள். இனி இது போல் அவளுக்குத் தெரிந்த விஷயங்களை விடுகதை போல் கேட்கலாம் என்று இருக்கிறேன்.



பத்து நாட்களுக்குப் பின் இன்று தான் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆக்டிவிட்டீஸ் செய்தோம். முதலில் எழுதச் சொன்னேன். முன்பு எப்பொழுதும் எழுதிக் கொண்டேயிருப்பாள். ஆனால் இப்பொழுது எழுதுவதற்கு விருப்பம் இருப்பதில்லை. இங்கு வந்தவுடன் கட்டம் போட்ட நோட் வாங்கி கட்டத்திற்குள் எழுதப் பழக்க ஆரம்பித்தேன். எப்பொழுதும் அவள் விரும்புவதை மட்டும் தான் செய்வோம். ஆனால் அவளாகவே எழுதாததால் நானாக நோட்புக் எடுத்துக் கொடுத்தேன். Upper case, lower case, 1 முதல் 25 எழுதினாள். அவள் பெயரை எழுதச் சொன்னேன். அதையும் செய்தாள். அடுத்து அவள் மூவுக்காக காத்திருந்த பொழுது, கட்டத்திற்குள் இல்லாமல் சும்மா எழுதவா என்றாள். எழுது என்றவுடன் எழுத ஆரம்பித்தாள். எழுதினாள் எழுதினாள் எழுதிக்கொண்டேயிருந்தாள். அவள் கட்டத்திற்குள் எழுதுவதற்கு இப்பொழுது தயாராக இல்லை என்பது புரிந்தது. இனிமேல் சில காலங்களுக்கு சாதாரண நோட் மட்டுமே கொடுக்க வேண்டும்.

எழுதி முடித்தவுடன் ஏதாவது தண்ணீ ஆக்டீவிட்டி செய்யலாம் என்றாள். இப்பொழுது தான் காய்ச்சல் சரியாகி இருப்பதால் சிறிது யோசித்தேன். அப்புறம் உடல் எல்லாவற்றையும் பழகிக்கொள்ளட்டும் என செய்ய ஆரம்பித்தோம். தண்ணீரை ஒரு பத்திரத்திலிருந்து மற்றொரு பத்திரத்திற்கு துணியால் மாற்ற வேண்டும். துணியை முக்கி, அடுத்த பத்திரத்திற்கு மேல் வைத்து கையால் பிழிய வேண்டும். கீழே கொட்டும் தண்ணீரையை மற்றொரு துணியால் இறுதியில் துடைத்து விட வேண்டும். இது கை விரல்களுக்கானப் பயிற்சி. முதலில் ஒரு கையால் செய்தாள். அடுத்து இரண்டு கைகளையும் பயன்படுத்தினாள். தண்ணீர் என்பதால் அவளுக்கு நிறுத்த மனமில்லை. நான்கு முறைக்கு மேல் செய்தாள். சின்னஞ்சிறு கை என்பதால் சற்று நேரத்தில் வலிக்கத் தொடங்கி விட்டது. வலிக்குது என்று சொல்லி மனமில்லாமல் நிறுத்தினாள். இனி அடிக்கடி கேட்பாள் என்று நினைக்கிறேன். நடுவில் எப்படி துணியில் தண்ணீர் வருகிறது என்று பல கேள்விகள். முடித்தவுடன் அவளாகவே தரையைத் துடைத்து விட்டு, துணியை காயவும் போட்டு விட்டாள்.




கார்ட்ஸ் & கவுண்ட்டர்ஸ் (Cards & counters) : எண்களின் மதிப்பு ஒரு abstract concept. ஒன்று முதல் பத்து வரை சொல்லும் குழந்தைகளுக்கு, ஒன்றின் மதிப்போ, பத்தின் மதிப்போ தெரியாது. அதை விளக்கவே இது போன்ற செய்முறைகள். இன்று செய்ததைப் பழக்குவதற்கு முன்னால் இதைச் செய்தோம். அதில் எண்ணும் அதன் மதிப்பும் (எண்ணிற்கு ஏற்றாற் போல் வட்டங்கள்) இருக்கும். அடுத்து இந்த முறை. அதற்கு அடுத்து நாங்கள் இன்று செய்தது. Flash cardsல் ஒன்று முதல் பத்து வரை எடுத்துக் கொண்டு ஒரு கிண்ணத்தில் 55 கண்ணாடிக்கற்கள் கொடுத்தேன். பார்த்தவுடன் புரிந்து கொண்டாள். ஒன்று முதல் பத்து வரை அட்டைகளை அடுக்கினாள். அட்டைகளை இடதிலிருந்து வலதிற்கு வைக்க வேண்டும். அதன் பின் அதன் கீழ் அதன் மதிப்பிற்கு ஏற்ப கற்களை வைக்க வேண்டும். நன்றாக செய்தாள்.

அடுத்து காசுகளைப் பிரித்தோம். யாருக்குப் பணம் கொடுத்தாலும் தீஷு தான் கொடுக்க வேண்டும். கொடுக்கும் முன் அது எத்தனை ரூபாய் என்று கேட்பாள். ரூபாய் நோட்டில் பார் என்று ஒவ்வொரு முறையும் சொல்லுவோம். அதன் மூலம் கிடைத்த ஐடியா இது. நான்கு பேப்பரை எடுத்துக் கொண்டு, அவளை ஒன்று, இரண்டு, ஐந்து மற்றும் ஐம்பது என்று எழுதச் சொன்னேன். அடுத்து காசை எடுத்து, எண்ணை வாசித்து (ரூபாய் என சேர்த்து சொல்ல வேண்டும்), அந்த எண் எழுதியிருந்த பேப்பரில் வைக்க வேண்டும். அவளுக்கு எளிதாக இருந்தது.

Monday, April 27, 2009

கவர்ந்த தருணங்கள்

தருணம் 1: BSNL ஆபிஸ் போயிருந்தோம். அங்கு ஒருவரைப் பார்த்து விட்டு என்னிடம் ஒடி வந்து, "ஏன் அந்த ஆங்கிள் வாயில முடியா வைச்சிருக்கார்" என்றாள். பார்த்தால் அவர் தாடி வைத்திருந்தார். அவளுக்கு அதை விளக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

தருணம் 2 : ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தேன். அதை ஏன் எடுக்குற? அது ஸ்பைடரோட வீடு என்றாள். ஸ்பைடர் வேற வீடு கட்டிட்டு போயிடுச்சி என்று அரைமணி நேரம் விளக்கியப்பின் அரைமனதோடு ஒத்துக்கொண்டாள்.

தருணம் 3: ஒரு நாயை நான்கு ஐந்து பேர் தடவுவதைப் பார்த்து விட்டு, என் கணவரிடம், "நாய் ஒண்ணும் செய்யாதா?" என்றாள். அது நல்ல நாயாயிருக்கும், கடிக்காது என்று அவர் சொன்னவுடன், " கெட்ட நாயாயிருந்தா ஒண்ணும் செய்யும்(ஒண்ணும் செய்யாதுக்கு எதிர்பதம்) என்றாள். அதே போல் பரவாயில்லையா என்றால், பதில் பரவாயில்லை இல்லை என்கிறாள்.

தருணம் 4: அவளுக்குப் பிடித்த போர்டு கேம் விளையாண்டு கொண்டிருந்தோம். அவள் மஞ்சளில் நிற்க வேண்டும். ஆனால் மஞ்சள் கட்டத்தை ஆரஞ்ச் என்று சொல்லி விட்டு, என் காயின்னைத் தாண்டி அடுத்த மஞ்சளில் நிறுத்தினாள். நிறுத்தி விட்டு என்னைப் பார்த்து, "நான் வேணும்னே தப்பா சொல்லல. ஜோக் சொன்னேன்" என்று புன்னகைத்துக் கொண்டாள். இப்படி எல்லாம் பண்ணக்கூடாது என்று ஒரு முறை சொன்னவுடன், "சாரி" என்று சொல்லி விட்டு, சரியான கட்டத்தில் நிறுத்தினாள்.

தருணம் 5: ஆரஞ்ச் சாப்பிடுறியா என்றதற்கு, ஆரஞ்ச எப்படி சாப்பிட முடியும் என்றாள். ஆரஞ்ச் பழம்டா என்றவுடன், பெரிய மனுஷித் தோரணையில்,"ஓ, ஃபூரூட் ஆரஞ்ச் சொல்லுறீயா? என்றாள். தோலை உறித்து முடித்தவுடன், பழத்தைப் பார்த்து, இதப்பார்த்தால் எனக்கு பம்கின் மாதிரி இருக்கு. உனக்கு எப்படி இருக்கு? என்றாள். ஆரஞ்ச் மாதரி தான்டா இருக்கு என்றவுடன், எனக்கு பம்கின் மாதிரி இருக்கு என்றாள். நான் என்ன சொன்னாலும் அது தான் சரி என்று நினைத்தவள், எனக்கும் அவளுக்கும் தனித்தனி எண்ணங்கள் இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டாள்.

Friday, April 24, 2009

செய்தது தான்

தீஷுவிற்கு ஒரு வாரமாய் உடம்பு சரியில்லை. வைரல் ஃபீவர், இருமல் எல்லாம் சேர்ந்து படுத்தி எடுத்துவிட்டது. நாள் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருந்தாள். நேற்று முதல் மருந்தை நிறுத்தியிருக்கிறேன். ஆனால் இன்னமும் இருமலும், அதனால் வாந்தியும் இருக்கிறது. காலை எழுந்தவுடன், சிறிது நேரம் முழிந்திருந்து விட்டு, மீண்டும் தூங்க வேண்டும் என்றாள். ஆனால் தூக்கம் வரவில்லை போலும். சிறிது நேரத்தில் எழுந்து உட்கார்ந்து, ஏதாவது டாய் (மாண்டிசோரி ஆக்டிவிட்டி) பண்ணலாமா என்றாள். நான் தயார் நிலையில் இல்லை. ஆனாலும் ஆரம்பித்தோம்.

எப்பொழுதும் ஆரம்பிக்கும் பொழுது புத்தகங்கள் வாசிப்போம். இன்று ஒரு புத்தகத்துடன் போதும் என்றாள். அடுத்து அவளாகவே பேஃக் பஸில் எடுத்து செய்தாள். குறைந்தது ஆறிலிருந்து ஏழு பஸில் வரை செய்வாள். இன்று மூன்றோடு எடுத்து வைத்து விட்டாள். அடுத்து அவளாகவே பிக்சர் மாட்சிங் செய்ய வேண்டும் என்றாள். ஒரு முறை முடித்துவிட்டு மீண்டும் அடிக்கினாள். திரும்ப செய்யப்போறீயா என்றவுடன், புன்னகையுடன் உன் turn என்றாள். அழகாக இருந்தது. நான் செய்யும் பொழுதே, என் மேல் படுத்துக்கொண்டாள். ரெஸ்ட்டு எடுத்துக்கோ என்றாலும் அவளுக்கு இஷ்டமில்லை. அதனால் நான் படுக்கப்போகிறேன் என்றேன். உடனே தானும் படுக்க வேண்டும் என்றாள்.

அருகில் படுத்துக் கொண்டே, காலைத் தூக்கிக் காட்டி, தனக்கு இரண்டு கால்கள் தான் என்றாள். ஆமாம் என்றவுடன் ஸ்பைடருக்கு எட்டு கால்கள் என்றாள். சிறிது நேரம் கழித்து, லேடி பஃக்குக்கு எத்தனை கால்கள் என்றாள். அம்மாவுக்குத் தெரியல, பாத்துச் சொல்றேன் என்றவுடன் கம்பியூட்டரில் தான பாப்ப என்றாள். அதுல எப்படிப் பாக்கனும் என்றாள். ஸர்ச் பண்ணிப் பாக்கனும் என்றவுடன், தலையைத் தூக்கி, கண்களை உருட்டி, தேடுவது போல் தலையை ஆட்டி "இப்படியா" என்றாள். கூகுள் பற்றித் தெரிந்து கொண்டவுடன், இன்றைய ஸேஸன் முடிந்தது. அதன் பின் பேசிக் கொண்டேயிருந்தாள். ஒரு வாரமாக பேசாமல் இருந்ததற்கு சேர்த்து பேசியது போலிருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரு வித்தியாசமான ஸேஸன்.

பிகு: லேடி பஃக்குக்கு ஆறு கால்கள்.

Sunday, April 19, 2009

முதல் புத்தகம்

தினமும் சில நிமிடங்கள் மேக்னெட்டிக் எழுத்துக்களால் எண்கள் உருவாக்கி விளையாடுகிறோம். இப்பொழுது சிறிது முன்னேற்றம் இருக்கிறது. ஆயினும் சில நேரங்களில், வாசிப்பதை வலதிலிருந்து இடதிற்க்குத் தான் செய்கிறாள். 12 to 19 வரை முதலில் வலதிலிருக்கும் எழுத்துகளின் சத்தம்(twelve, thirteen...) வருவதால் குழப்பம் அதிகமாக இருக்கிறது. ஆனால் விருப்பமாகச் செய்கிறாள். ஆகையால் இன்னும் சில நாட்களுக்குத் தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன்.



தீஷுவிற்கு இப்பொழுது வார்த்தையின் முதல் எழுத்தைக் கண்டுபிடிக்கத் தெரிகிறது. Cup என்றால் C என்ற எழுத்தில் தொடங்குகிறது என்பதை பொனிடிக்ஸ் படி கண்டுபிடித்து விடுகிறாள். ஆனால் முடியும் எழுத்தைச் சொல்லு என்றால், முடியும் எழுத்து என்றால் என்ன என்று புரியவில்லை. ஆகையால் Rhyming words விளையாண்டோம். நான் cat என்றால், rhyming word bat என்று சொல்ல வேண்டும். ஆனால் அவளுக்குப் புரியவில்லை. ஆகையால் rhyming words பத்து படங்களைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டேன். அதை வெட்டி, அவளை வரிசையாக ஒட்டச் சொன்னேன். படத்திற்கு நேராக அந்த வார்த்தைகளை எழுதச் சொன்னேன். நான் எடுத்துக் கொண்ட வார்த்தைகள் : cat, mat, hat, rat, ten, hen, pen, van, can, fan போன்றவை. எழுதின பேப்பரை புத்தக வடிவில் ஒட்டி, முதல் பக்கத்தில் அவள் பெயரை எழுத வைத்தேன். அந்த புத்தகம் அவளால் எழுதப்பட்டது போன்று இருக்கிறது. தினமும் எடுத்து வாசிப்பதால், Rhyming words பற்றியத் தெளிவு கிடைக்கும். தான் எழுதிய புத்தகம் என்ற பெருமையும் அவளுக்கு இருக்கிறது.


ஜலதரங்கம் செய்ய பயன்படுத்திய தண்ணீரை ஐஸ் டிரேயில் அவளை ஊற்றச் செய்திருந்தேன். ஐஸை எடுத்து, சுட வைத்து திரும்பவும் தண்ணீர் ஆவதைக் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவள் எதை ஒரு பத்திரத்திலிருந்து இன்னொரு பத்திரத்திற்கு ஸ்பூனால் மாற்ற வேண்டும் என்றாள். அவள் விருப்பப்படி அதையே செய்தோம்.

வாங்கிய மளிகைப் பொருளை, பாக்கெட்டிலிருந்து பாட்டிலுக்கு மாற்றும் பொழுது, கீழே டிரே வைத்திருந்தால், டிரேயில் கொட்டியப் பொருளை, பாட்டிலுக்கு மாற்றுவது சற்று சிரமமானது. தட்டை பாட்டிலுக்கு நேராகத் திருப்பி கொட்ட வேண்டும். அதேப்போல் தட்டிலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு கற்களை மாற்றச் சொன்னேன். கல் என்பதாலும் தட்டு சிறிதாக இருந்ததாலும் எளிதாகச் செய்தாள். பெரிய டிரேயில், ரவை போன்றவற்றை சிறு வாயுள்ள பாத்திரத்திற்கு மாற்றுவது சிரமமானதாக இருக்கும் என நினைக்கிறேன். சில நாட்கள் கழித்து முயற்சி செய்ய வேண்டும்.

Tuesday, April 14, 2009

ஜலதரங்கம்

மாக்னெட்டிக் நம்பர்ஸில் இரண்டு ஸெட் இருந்தது. அதைக் கொண்டு 11 முதல் 99 வரை எண்கள் உருவாக்கி, தீஷுவிற்குப் பழக்கம் என்று நினைத்தேன். இது மாண்டிசோரியின் Teen board மற்றும் Ten board போன்று இருக்கும் என்பது என் எண்ணம். முதலில் 11 முதல் 19 வரை அடுக்கினேன். சொன்னாள். அடுத்து 21 முதல் 26 வரை வரிசையாக வைத்துக் கொண்டே வந்தேன். அடுத்து 2 மட்டும் எடுத்து விட்டு 3 வைத்து 36 செய்தேன். முப்பது என்றாள். அடுத்து ராண்டமாக அடுக்க ஆரம்பித்தேன். இடதிலிருந்து வலது படிப்பதற்குப் பதில் வலதிலிருந்து இடதுக்கு படித்தாள். 76 வைத்தால், சிக்ஸ்டி என்று ஆரம்பித்தாள். முதலில் 7 இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும் நினைவுப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் ஆர்வமிருப்பதால் தொடர்ந்து ஒர் இரு நாட்களுக்குச் செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.

ஆறு கப்களில் வெவ்வேறு அளவுகளில் தண்ணீர் எடுத்துக் கொண்டேன். அதில் தீஷுவை ஃபுட் கலரிங் சேர்க்கச் செய்தேன். அடுத்து ஸ்பூனால் வரிசையாக கப்புகளைத் தட்டச் சொன்னேன். ஏன் வித்தியாசமாக சத்தம் கேட்கிறது என்று சொல்லி விட்டு, ஸ்பூனுக்குப் பதில் மரக்குச்சியைக் கொண்டு தட்டச் செய்தேன். ஐந்து நிமிடங்களை வரை செய்திருப்பாள். அவளுக்கு ஒரு கப்பியிலிருந்து மற்றொரு கப்பிற்குத் தண்ணீரை மாற்றி விளையாட வேண்டும். சரி என்று சொல்லி விட்டேன். வெவ்வேறு அளவுகளில் தண்ணீர் இருந்ததால், ஒரு கப்பிலிருந்து மற்றொரு கப்பிற்கு ஊற்றினால், அந்த கப் நிறையுமா என்றாள். ஊற்றிப்பார் என்றவுடன், இதிலிருந்து அதில் ஊற்றி, அதிலிருந்து இதில் ஊற்றி என்று வீடு முழுவதும் தண்ணீர்.


நோட் புக்கிற்கு அட்டைப் போடச் சொல்லிக் கொடுத்தேன். அதில் வெட்டுவதற்கும், பேப்பர் ஃபோல்டிங்கும் இருப்பதால் உபயோகமாக இருக்கும் என நினைத்தேன். ஒரளவுக்குச் செய்தாள். கிப்ட் ராப் என்று நினைத்து விட்டாள். டக்குக்கு Birthday என்று விளையாட ஆரம்பித்துவிட்டாள். இனிமேல் அடிக்கடி எங்கள் வீட்டில் Birthday party நடக்கும்.

Monday, April 13, 2009

இன்றைய அப்டேட்

தீஷு ஹண்ரட் போர்ட் விருப்பமாக செய்ததால், இங்கிருந்து இந்த 1-100 மேஸை எடுத்துக் கொண்டேன். 1 முதல் 100 வரை இணைக்க வேண்டும். அடுத்த எண்ணை அருகிலுள்ள கட்டங்களில் மட்டும் தான் தேட வேண்டும் என்பது புரியவில்லை. முழு பக்கத்திலும் தேடினாள். ஆகையால் என் உதவி மிகுதியாக தேவைப்பட்டது. என் உதவி கேட்க நேர்ந்தால், சில நேரங்களில் எடுத்து வைத்து விடுவாள். ஆனால் விருப்பமாக செய்தாள். பிரிண்ட் அவுட் எடுக்கும் பொழுது, இரண்டு பக்கமாக வந்தது. ஆகையால் 60 உடன் நிறுத்தி விடுவாள் என்று நினைத்தேன். ஆனால் என்னை எழுதி தர சொல்லி, 80 வரை செய்தாள். ஆனால் நான் தான் எண்களைக் காட்டினேன்.

நேராக வெட்டப் பழக்குவதற்காக படங்களை இங்கிருந்து எடுத்துக் கொண்டேன். முழுவதும் நேராக வெட்டவில்லை, ஆனால் தன்னால் முடிந்தவரை வெட்டினாள். நான்கு படங்கள் மட்டுமே வெட்டினாள். அதற்குள் ஆர்வம் போய்விட்டது.

பாக்கிங் செய்ய பயன்படும் பபிள் ராப்(Bubble wrap) பயன்படுத்தி பெயிண்டிங் செய்வதைப் பற்றி ஒரு புத்தகத்தில் படித்திருந்தேன். பெயிண்டை Bubble wrapயில் தடவி பேப்பரில் ஒற்றி எடுக்க வேண்டும். நன்றாக வந்திருந்தது. நான் காமிரா எடுத்து வருவதற்குள் தண்ணீரைக் கொட்டி, பிரஸால் தேய்த்து விட்டிருந்தாள். அவளைப் பொறுத்த வரை எல்லாம் பெயிண்டிங் தான்.

ரெட் வேணா

சனிக்கிழமை நடந்த இரண்டு நிகழ்ச்சிகள்

1. தீஷு ஒரு காலி பாட்டிலிருந்து, எண்ணெய் ஊற்றுவது போல் கையில் ஊற்றி, டாலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தாள். முடித்தவுடன் பாட்டிலின் மூடி எங்க என்றாள். தீஷுவிற்கு இது ஒரு பழக்கம். அப்பொழுது வைத்து விளையாண்ட பொருள் காணோம் என்றாலும் தேடுவதற்கு ஒரு ஆள் வேண்டும். வேலையாய்யிருந்த நான், நீ தான திறந்த? எங்க வச்சிருக்கனு பாரு என்று கோபமாகச் சொன்னேன். நான் சொல்வதைக் கேட்டு விட்டு, பொறுமையோடு சொன்னாள், "நான் உன்கிட்ட கேட்கல, டால் கிட்ட கேட்டேன்".

2. பைக்கில் சென்று கொண்டிருந்தோம். தீஷு ரெட் வேணா என்றாள். எந்த ரெட் என்றவுடன், கீழே கை காண்பித்தது போலிருந்தது. ரோட்டில் சிகப்பு கலரில் கோடுயிருந்தது. நான் அவளுக்கு ஏதேதோ விளக்கிக் கொண்டுயிருந்தேன். அதை வேணாமுனுச் சொல்லக்கூடாது என்றெல்லாம் சொன்னேன். அவளும் விடாமல் ரெட் வேணா என்று சொல்லிக் கொண்டிருந்தாள். என் கணவரும் அவர் பங்கிற்கு விளக்கினார். ஆனால் கேள்வி நின்ற பாடில்லை. சிக்னலில் நிற்கும் பொழுது அருகில் நின்று கொண்டிருந்த ஒரு சிகப்பு வேனைக் காட்டி "ரெட் வேனா?" என்றாள். வேன் போன்ற வண்டிகளை இப்பொழுது தான் பார்ப்பதால், எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருப்பாள். அதே போல் கேட்டிருக்கிறாள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குள் நடந்த இரு நிகழ்ச்சிகளும், நான் அவளை இன்னும் குழந்தையாக நினைத்து, நான் என்ன சொன்னாலும் கேட்பாள் என்று நினைக்கிறேனா என்று எண்ணத் தோன்றியது.

Thursday, April 9, 2009

என்ன சத்தம்?



பருப்பு வகைகள் பற்றி சொல்லிக் கொடுத்தேன். மூன்று கிண்ணத்தில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு எடுத்துக் கொண்டோம். முதலில் கடலைப்பருப்பையும், உளுத்தம் பருப்பையும் கொடுத்தேன். மாண்டசோரி Three period Lessonபடி முதலில் இரண்டையும் தொட்டு பெயர் சொன்னேன். அடுத்து நான் பெயர் சொல்லி அவளை காண்பிக்கச் சொன்னேன். அடுத்து நான் தொட்டு காண்பித்து, பெயர் கேட்டேன். முடித்தவுடன் அடுத்து துவரம் பருப்பும் சேர்த்துக் கொண்டேன். இந்த முறை பெயர்களை மாற்றி மாற்றி சொல்ல ஆரம்பித்தாள். நான் கண்ணைக் கட்டி கண்டுபிடிக்கச் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதுவே தப்பாகச் சொன்னதால், இன்னும் சிறிது நாட்கள் கழித்து முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.


ஒரு நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு அப்பொழுது என்ன என்ன சத்தம் கேட்கிறது என்பதை நான் சொன்னேன். இரண்டாவது முறை குயில் கத்துது என்றவுடன் ஏற்கெனவே சொல்லிட்ட என்றாள். அடுத்து அவள் முறை. கண்ணை மூட மாட்டேன் என்று சொல்லி விட்டாள். ஆனால் சத்தங்களைச் சொன்னாள். ஆட்டோ சத்தத்தைக் கூட சரியாக கண்டுபிடித்துவிட்டாள். Since all knowledge begins with sensory perception, this is good for hearing sense. சில நிமிடங்கள் கழித்து, வேறு ஏதோ செய்து கொண்டிருந்தவள், யார் வீட்டு குக்கர் விசிலையோ, விசில் சத்தம் தானே என்றாள்.


இன்று ஷூ பாலீஷ் போட சொல்லிக் கொடுத்தேன். முதலில் பாலீஷ் டப்பாவை திறக்க சொல்லிக் கொடுத்தேன். ஆனால் திறக்கத்தெரியவில்லை. அடுத்து பிரஷில் எடுத்து, எப்படி ஷூவை பிடிக்க வேண்டும், எப்படி பாலீஷ் போட வேண்டும் என்று சொன்னேன். அவளிடம் கறுப்பு ஷூ இல்லாததால், அவள் அப்பா ஷூவை எடுத்துக் கொண்டோம். ஷூவை சரியாக எடுத்தாள். ஆனால் கனம் காரணமாக, பாலீஷ் போடும் பொழுது வேறு மாதிரி பிடித்துக் கொண்டாள். அப்பாவின் இரண்டு ஜோடி கறுப்பு ஷூகளுக்கு இன்று பளபளக்கின்றன.




அவள் அப்பா தினமும் சில்லரை காசுகளை ஒரு கிண்ணத்தில் போட்டுவிடுவார். அதை எடுத்து அவள் உண்டியலில் போட சொன்னேன். நிரம்பியவுடன் பாங்க்கில் போட்டு வைத்து, கொஞ்ச நாளைக்கு அப்புறம் உனக்கு வேண்டியதை வாங்கலாம் என்று சொல்லி விட்டு, உனக்கு என்ன வாங்கனும் என்றவுடன், எனக்கு எதுவும் வேண்டாம் என்று செல்லிவிட்டாள். இப்படியே வளர்ந்த பின்பும் இருந்தால், நல்லாத்தான் இருக்கும்.

Wednesday, April 8, 2009

ஒரு மாண்டிசோரி புத்தகம்

தோழி ஒருவர் மாண்டிசோரி புத்தகம் ஒன்றின் லிங்க் அனுப்பியிருந்தார். இந்த Dorothy Canfield Fisher என்பவரால் 1912டில் எழுதப்பட்டது. இப்பொழுது அச்சில் இல்லை. கூகுள் புக்ஸிலிருந்து எடுத்திருக்கிறார்கள். சில பக்கங்கள் படித்துப் பார்த்தேன். அனைவருக்கும் உபயோகமாகயிருக்கும் என்று தோன்றியது.

புத்தகம் இங்குள்ளது.

Tuesday, April 7, 2009

ஸீக்கொன்ஸிங்

06/04/2009

தீஷுவிற்கு மதியம் 2 முதல் 3 மணி நேரம் தூங்கும் பழக்கம் உண்டு. அந்த நேரம் மட்டும் தான் அவள் அருகிலில்லாமல் நான் இருக்கும் நேரம். சில நாட்களில் அதுவும் கிடைக்காது. அப்பொழுது தான் பிளாக் எழுதுவது, படிப்பது, தீஷு செய்ய வேண்டிய ஆக்டிவிட்டீஸுக்கு தயார் ஆவது, புத்தகம் படிப்பது, என் ஹாபி ஆன தையல்,பெண்டிங் எல்லாம் செய்ய வேண்டும். அவள் எழும் பொழுது முக்கால்வாசி நேரம் இப்பொழுது தைத்துக் கொண்டிருக்கிறேன். அதைப் பார்த்து அவளும் தைக்க வேண்டும் என்றாள். நான் விசாரித்த வரை இங்கு குழந்தைகளுக்குக்கான ஊசி கிடைக்கவில்லை. தீஷு பழைய பள்ளியில் குழந்தைகள் செய்யும் வேலைகளின் புகைபடத்தை ஒவ்வொரு வாரம் அப்டேட் செய்வார்கள். நான் கேட்டுக் கொண்டதற்காக என்னை அந்த குரூப்பிலிருந்து நீக்கவில்லை. அதில் ஒரு குழந்தை துளைகள் இட்ட ஒரு மரப்பலகையில் நூலால் தைத்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் நான் ஒரு பட்டாம் பூச்சி படத்தை எடுத்து Foam Sheetடில் வெட்டி, அதில் துளைகள் போட்டேன். இந்த வேலையை வெள்ளி இரவு செய்து கொண்டிருந்தேன். செய்து முடித்தவுடன் அப்பொழுதே தைக்க வேண்டும் என்றாள். இரவு ஒன்பதரை முதல் பதின்னொன்று வரை செய்து கொண்டிருந்தாள். அது தான் அவள் மிகுந்த நேரம் கவனச்சிதறல் இல்லாமல் செய்த முதல் ஆக்டிவிட்டி.ஆனால் அந்த பட்டாம் பூச்சி கிழிய ஆரம்பித்தது. ஆதனால் வீட்டிலிருந்த ஒரு வெல்வட் துணியில் துளைகளிட்டு கொடுத்தேன். அதையும் விருப்பமாகச் செய்தாள்.



வார விடுமுறையில், குழந்தைகளுக்கு ஷு லேஸ் கட்டுவதற்குப் பழக்குவதற்காக இருந்த சாதனத்தைப் பார்த்தேன். பாதம் போன்ற வடிவிலுள்ள மரப்பலகையில் துளைகள் இருந்தன. அதைப் பார்த்தவுடன் இதை தைப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று வாங்கி வந்தேன். தீஷு மிகவும் விருப்பமாகச் செய்கிறாள். சீக்கிரமாக கற்றுக் கொள்வாள் என்று நினைக்கிறேன். இது கை கண் ஒருக்கிணைப்புக்கு ஏற்றது.



Sequencing Flash card செய்தோம். அதில் ஒரு செயலைக் குறித்த மூன்று அல்லது நான்கு அட்டைகள் இருக்கும். அந்த அட்டைகளை, எந்த வரிசையில் அந்த செயலை செய்வோமோ அந்த வரிசையில் அடுக்க வேண்டும். இந்த முறை விதையிலிருந்து செடி வளர்வது, வண்டுகள் மரத்தில் ஏறுவது போன்வற்றை செய்ய சொன்னேன். விருப்பமிருக்கவில்லை. ஆனால் அட்டைகளை வாங்கி ஒவ்வொரு அட்டையின் படத்தையும் பார்த்து அடுத்த படத்தை யூகித்துக் கொண்டிருந்தாள். இது sequencing மற்றும் கற்பனைத்திறனுக்கு ஏற்றது.

கொஞ்சம் பழசு


1/4/2009

மீண்டும் ஸ்கேலில் கோடு போட வேண்டும் என்றாள். அவளாகவே புள்ளிகளை வரைந்து இணைத்தாள். நான் முக்கோண வடிவில் மூன்று புள்ளிகள் வரைந்து இணைக்கச் சொன்னேன். முக்கோணத்தைப் பார்த்தவுடன், சதுரம் வரைய வேண்டும் என்றாள். நான்கு புள்ளிகளை இணைக்கச் சொன்னேன். ஆனால் எந்த எந்தப் புள்ளிகளை இணைக்க வேண்டும் என்பதை நான் சொல்ல வேண்டியிருந்தது.

இன்று கலரிங், ஒட்டுதல் போன்றவற்றை முடித்தவுடன் வேற ஏதாவது சொல்லிக் கொடு என்றாள். நான் எண்களில் பெரியது சிறியது சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்து, கண்ணாடிக்கற்களை எடுத்துக் கொண்டேன். முதலில் பத்து கற்களை ஒரு புறமும், ஒரு கல்லை மறுபுறமும் வைத்துக் கொண்டு, பத்து தான் பெரியது என்றேன். அடுத்து ஒன்றையும் ஐந்தையும் வைத்து ஐந்து பெரியது என்ற பொழுது அவள் முகத்தில் விருப்பமில்லாலது போன்று இருந்தது. நீ இன்னும் கொஞ்சம் பெரிய பாப்பா ஆனவுடன் பண்ணலாம் என்றவுடன், she felt offended. அழுகை வந்து விட்டது. கோபத்துடன் நீ திரும்பவும் சொல்லிக் கொடு என்றாள். இப்பொழுது தன்னுடைய எல்லா வேலைகளையும் தானே செய்ய வேண்டும், செய்ய முடியவிட்டால் trauma.

நான் என் முறையை மாற்றினேன். நான்கு தாள்களில் ஒன்று முதல் நான்கு வரை எழுதிக் கொண்டேன். இரண்டு கிண்ணங்கள் எடுத்து, கம்பார் பண்ணும் இரண்டு எண்களையும் அந்த கிண்ணத்தின் அருகில் வைத்து விட்டேன். கம்பார் பண்ணும் இரண்டு எண்களுக்கு ஏற்ப அந்த கிண்ணங்களில் கற்களைப் போடச் சொன்னேன். அதன் பின் one-to-one correspondence முறையில் கற்களை வைத்து எந்த கிண்ணத்தில் மீதம் கற்கள் இருக்கின்றனவோ அதுவே பெரியது என்றேன். புரியவில்லை.

கற்களுக்குப் பதில் கறுப்பு மற்றும் சிவப்பு காயின்ஸ் எடுத்துக் கொண்டேன். ஒரு கிண்ணித்தில் ஒரு கலர் மற்றொரு கிண்ணத்தில் வேறு கலர். one-to-one correspondenceக்குப் பதில் AB pattern. கறுப்பு சிகப்பு என்று மாறி மாறி வைத்துக் கொண்டே வரவேண்டும். அது புரிந்தது. இரண்டு எண்களுக்கு சரியாகச் செய்தாள். எங்களுக்கு நேரமாகி விட்டதால் எடுத்து வைத்து விட்டோம். எனக்கும் அவள் confidenceயைக் கெடுக்காததில் நிம்மதி. அவளுக்கும் சந்தோஷம். ஆனால் இதை இன்னும் ஆறு மாததிற்கு எடுக்கக் கூடாது என நினைத்துக் கொண்டேன்.

3/4/2009

தீஷுவிற்கு போர்ட் கேம்ஸ் பழக்கலாம் என்று நினைத்தேன். வாசிப்பதற்கோ அல்லது மிகுந்த விதிமுறைகளை கையாளத் தெரியாததால் எளிமையானதாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். Smart preschoolers early learning gamesக்கு வாசிப்பது தேவையில்லை. நான்கு விளையாட்டுகள் இருக்கின்றன் - கலர், கவுண்டிங், பாட்டன்ஸ், ஷேப்ஸ். கலர் விளையாட்டுக்கு, போர்டில் ஸ்டார்ட்டிலிருந்து முடிவிற்கு போட்டுள்ள பாதையில் ஆறு வண்ணங்களில் படங்கள் வரிசை மாறி மாறி இருக்கும். அதே ஆறு கலர்களுள்ள ஒரு அட்டையில் அம்பு இருக்கும். அம்பைச் சுற்றி, அது குறிக்கும் நிறத்தில் போர்டில் நம் கயின்ஸை வைத்து பாதையில் முன்னேற வேண்டும். முதலில் பாதையைக் கடக்கின்றவர்கள் வெற்றிப் பெற்றவர்கள். கடந்த வாரத்திலிருந்து நாங்கள் இதை முயற்சித்து வந்தோம். இத்தனை நாளாக அவளுக்குப் புரியவில்லை.கலரிலிருந்து ஆரம்பித்தோம். அம்பை சுற்றுவாள், ஆனால் தன் காயின்ஸ் கலர் எதுவோ, அந்த இடத்தில் போர்டில் தன் காயின்ஸை வைப்பாள், பாதையில் பின்னால் வருவாள். ஆனால் விருப்பமாக தினமும் ஒரு முறையேனும் எடுத்து வந்து விளையாட வேண்டும் என்பாள். இன்று போர்டை எடுத்தவுடன், நான் அந்த பாதையை விளக்கினேன். அவளை கையால் வரையச் சொன்னேன். Mazes மாதிரியா என்றாள். ஆமாம் என்றவுடன் பாதை பற்றிய தெளிவு பிறந்தது. முன்னால் மட்டுமே போக வேண்டும் என்று புரிந்தது. கலரில் குழப்பம் இருந்ததால் இன்று கவுண்டிங் போர்டை எடுத்துக் கொண்டோம். புரிந்து கொண்டாள். கிட்டத்தட்ட அரை மணி நேரம் நான்கு விளையாட்டுகளையும் மாறி மாறி விளையாண்டு கொண்டிருந்தோம். போர்டு கேம்ஸ் ஆர்வத்தை இது தூண்டும் என்று நினைக்கிறேன்.

இன்று சைனீஷ் செக்கர்ஸ் காயின்ஸை கலர் மூலம் பிரிக்கச் சொன்னேன். பிரிக்கும் பொழுதே எண்ணத் தொடங்கினாள். பிரித்து முடித்தவுடன் போர்டில் அடுக்கச் சொன்னேன். விருப்பமாக செய்தாள். ஆனால் சரியாக வட்டத்தில் வைப்பதற்கு சிறிது கஷ்டப்பட்டாள். இது கை கண் ஒருங்கினைப்புக்கு ஏற்றது.

Friday, April 3, 2009

மழலை குரலில்

தீஷுவிற்கு இன்னும் மழலை மாறவில்லை. கேட்பவர்கள் எல்லாம் இன்னும் சரியா பேசவில்லையா என்றும், மூணு வயசாக போகுது இன்னும் மழலை மாறவில்லையே என்றும் சொல்கின்றனர். எனக்கோ மாறிவிட்டால் அப்புறம் கேட்டாலும் கிடைக்காத சொத்து மழலை என்று தோன்றுகிறது. அவள் சொல்லும் ஸ்லோகங்கள் இன்னும் சில நாட்களில் இந்த மழலையில் கேட்க முடியாதது என்பதால் இப்பொழுதே பதிவு செய்து வைத்துக் கொண்டேன்.

இது அப்பா சொல்லிக் கொடுத்தது.




இது அம்மா சொல்லிக் கொடுத்தது.

Thursday, April 2, 2009

கவர்ந்த தருணங்கள்

கடந்த ஒரு மாதத்தில் என்னை மிகவும் கவர்ந்த தீஷுவின் செயல்கள்.

1. எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். திடீரென்று என்னிடம் வந்து பால் எப்படி எழுத வேண்டும் என்றாள். சொல்வதற்குள் போன் அடித்ததால் நீ எழுது, அம்மா வருகிறேன் என்றேன். பேசி முடித்து, வந்து பார்த்தால் PAL என்று எழுதி வைத்திருந்தாள். எழுத்துக்களைக் கூட்டி அவளே எழுதியது ஆச்சரியமாக இருந்தது.

2. பள்ளியில் ஏதாவது ஒரு தப்பு செய்தால், தண்டிப்பதற்காக Time out கொடுப்பார்கள். யாரிடமும் பேசாமல் ஒர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். அப்பொழுது நடக்கும் எந்த வேலையும் செய்யாததே அவர்களுக்குத் தண்டனை. அன்று வீட்டில், ஏதோ தப்பு செய்ததால் "Time out" என்றேன். போய் ஸோபாவில் தனியாக உட்கார்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் ஸோபா கூஷன் கவரை சுரண்ட ஆரம்பித்தாள். கோபமான என் கணவர் உனக்கு டைம் அவுட் என்றார். ஏற்கெனவே டைம் அவுட்டில் இருந்த அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அதைப் பார்த்த எனக்கு சிரிப்பு. நான் சிரித்தவுடன்,டைம் அவுட் முடிஞ்சிருச்சி என்று ஓடி வந்து விட்டாள்.

3. என் பக்கத்தில் வந்து படுக்கும் பொழுது என் தலையில் முட்டிவிட்டாள். ஸாரி சொல்லு என்றாள். நீ தான முட்டின, நீ தான் ஸாரி சொல்ல வேண்டும் என்றவுடன், ஒகே என்று சொல்லி விட்டு, வேகமாக ஒரு முட்டு முட்டி ஸாரி என்றாள்.

4. புதுசு, பழசுக்கு பதில் நல்ல என்று சொல்கிறாள். ஹோட்டலுக்குப் போயிருந்தோம். புது ஹோட்டலா என்றாள். நானும் ஆமாம் என்றேன். ஏன் நம்ம நல்ல ஹோட்டலுக்கு வரல என்றாள்.

5. வாசல் அருகே நின்று கொண்டிருந்தாள். ஒரு முறை மட்டும் கூப்பிட்டேன். கேட்காதது போல் நின்று கொண்டிருந்தாள். திடீரென்று என்ன நினைத்தாளோ, என் அருகில் வந்து "நீ கூப்பிட்டது எனக்கு கேட்கல" என்றாள்.

6. எங்கள் நண்பர் ஒருவர் தீஷுவைப் பார்த்தால், காதை இழுத்து அதே நேரத்தில் நாக்கையும் தொங்க விட்டு விளையாட்டு காட்டுவார். காதை இழுப்பதனால் நாக்கு தொங்குவது போல் தோன்றும். தீஷு அதே மாதிரி செய்து கொண்டிருந்தாள்.
"இந்த மாதிரி எந்த ஆங்கிள் பண்ணுவாரு"
"தெரியல.. அவுங்க வீட்டுக்குப் போயிருந்தோம்ல"
"ஆமாம்டா.. அங்க சாப்பிட்டோம்ல"
"ஆமாம்.. காரமா இருந்திச்சு..ஏன் அம்மா?"
"மிளகாய் நிறையப் போட்டுயிருப்பாங்க"
"ஏன் மிளகாய் நிறையப் போட்டுயிருப்பாங்க?"
"டேஸ்ட்காக"
"ஏன் டேஸ்ட்காக?"
"அப்ப தான நல்லா சாப்பிட முடியும்"
"ஏன் நல்லா சாப்பிடனும்?"
"அப்ப தான எனர்ஜி வரும்"
"ஏதுக்கு எனர்ஜி வரனும்?"
"அப்ப தான எல்லா வேலையும் செய்ய முடியும்?"
"ஏன் எல்லா வேலையும் செய்யனும்"
"வேலை செய்யலேனா போர் அடிக்கும்"
"ஏன் போர் அடிக்கும்?"
"சும்மா உட்கார்ந்து இருக்க முடியாதுல"
"ஏன் சும்மா உட்கார்ந்து இருக்க முடியாது?"
"போர் அடிக்கும்"
"ஏன் போர் அடிக்கும்?"
இந்த dead lock situationன எப்படி ஹாண்டில் பண்ண?

7. Astronaut பத்தி ஒரு புத்தகத்தில் இருந்தது. நானும் Astronaut மாதிரி மூனுக்குப் போகனும் என்றாள். நல்லாப் படிச்சி முடிச்சிட்டு போகலாம் என்றவுடன் சரி என்று இருந்து விட்டாள். இரண்டு மூன்று மணி நேரம் கழித்து சாப்பிடும் பொழுது, "நான் Astronaut ஆகி மூனுக்குப் போனால், அங்கப் போய் என்ன செய்யனும்?" என்றாள்.

8. சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். என்னிடம் "வாயில தரவானு கேளு" என்றாள். நானும் வாயில தரவானு கேட்டேன். உடனே சரி என்று சொல்லிவிட்டாள். வாயில் தா என்றால் நான் தர மாட்டேன் என்று என்னை வைத்தே கேள்வி கேட்க வைத்து வேலையை முடித்துவிட்டாள்.

9. தரையில் உட்கார்ந்துக் கொண்டு காலை தூக்கி இடதிலிருந்து வலதுக்கு, வலதிலிருந்து இடதுக்கு என அசைத்துக் கொண்டிருந்தாள். என்ன செய்கிறாள் என பார்த்தவுடன், இது கால் இல்ல.. வைப்பர் (காரில் இருப்பது) என்றாள்.

10. விளையாண்டுக் கொண்டிருந்தவள் திடீரென்று வந்து எனக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். ஆன்ட்டி அப்ப அப்ப வந்து உங்க அம்மாவுக்கு கிஃப்ட் கொடுப்பியா என்றதற்கு கிஃப்ட் கொடுக்க மாட்டேன், வெறும் கிஸ் மட்டும் கொடுப்பேன் என்றாள்.

11. பெசன்ட் நகர் பீச்சிக்குச் சென்றிருந்தோம். தண்ணீரைப் பார்த்து தீஷு பயந்து விட்டாள். தானும் தண்ணீக்கு அருகில் போகவில்லை, எங்களையும் போகவிடவில்லை. இனிமேல் பீச்சிக்கே போகக் கூடாது என்று சொல்லிவிட்டாள். மறுநாள் எங்களுக்கு பீச் ரிசாட் போக வேண்டி இருந்தது. அதனால் போகும் பொழுது, பீச் பற்றி சொல்லிக் கொண்டே போனேன். 'சி' ல (sea) நிறைய தண்ணி இருக்கும் என்றவுடன், 'c'ல மட்டும் தான் தண்ணி நிறைய இருக்குமா இல்ல 'd'லையும் இருக்குமா என்றாள்.

12. நானும் தீஷுவும் வாகிங் போய் கொண்டிருந்தோம். என்ன ஸ்மல் வருது என்றாள். ஏதோ பூவிலிருந்து வருதுடா என்றேன். இல்ல யார் வீட்டிலேயோ வெங்காயம் குக் பண்றாங்க என்றாள்.

13. சென்னையில் கடைக்குச் சென்றிருந்த பொழுது, என் கணவரின் கையை விட்டு விட்டு, தெரியாமல் வேறு ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டாள். வேறு ஒருவர் என்று தெரிந்தவுடன் எங்களைத் தேடினாள். என் கணவர் அவளிடம் இப்படி தொலைந்து விட்டால், அப்பா அம்மாவை கண்டுபிடிக்க பதில் சொல்ல வேண்டியிருக்கும் என சொல்லி உன் பெயர் என்ன? அப்பா பெயர் என வரிசையாகக் கேட்டுக் கொண்டே வந்தார். உங்க வீடு எங்கயிருக்கு கேட்ட என்ன செல்லுவ என்றவுடன்,"ரைட்ல போய் லெஃப்ட்ல திரும்பனுமினு சொல்வேன்" என்றாள்.

14. பாயில் உட்கார்ந்துக் கொண்டு, காலை நீட்டி மடக்கி, காலால் பாயை விரித்து மடக்கிக் கொண்டிருந்தாள். எதற்கு என்றவுடன் பீச்சில் இப்படி தான் (அலை) வந்தது என்றாள்.

Wednesday, April 1, 2009

தொகுப்பு - பாகம் 2

நேற்றைய தொகுப்பின் இரண்டாவது பாகம். பதிவு மிகவும் நீளமானது.

12/03/2009

பைப் கிளினர் என்று ஒரு பொருள். எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியாது. நன்றாக வளையும் கம்பி மேல் Fur இருக்கும். வளைத்தால் நன்றாக வளையும். தீஷுவின் ஆக்டிவிட்டீஸ்க்குப் பயன்படும் என்று வாங்கி வந்தேன். அதை வைத்து பாசிகளைக் கோர்த்தோம். பாசிகளைக் கோர்த்து bracelet செய்து அவள் கைகளில் மாட்டி விட்டேன். நிறைய நேரம் அணிந்திருந்தாள்.

மினி சுடோகு : நான் எப்பொழுது சுடோகு செய்தாலும், ஏதாவது ஒரு நம்பரை எழுது என்று சொல்லிக் கொண்டே இருப்பாள். அதனால் மினி சுடோகு. 2*2 கட்டம் வரைந்து, 1 முதல் 4 நான்கு வரையான நம்பரில், ஏதாவது ஒரு நம்பரை மட்டும் எழுதாமல், மற்ற மூன்று நம்பர்களை எழுதினேன். நான் எந்த நம்பரை எழுதவில்லையோ அதை அவள் எழுத வேண்டும். சரியாகச் செய்தாள். அது தந்த நம்பிக்கையில், அன்றையப் பேப்பரில் மூன்று கட்டங்களில் ஏதோ எண்களை எழுதி வைத்திருந்தாள்.

13/03/2009

Mazes கற்றுக் கொண்டாள். நான் மூன்று மாதங்களுக்கு முன் முயற்சி செய்தேன். அப்பொழுது விருப்பம் இருக்கவில்லை. இன்று விருப்பமாகச் செய்தாள். Kumon my first book of mazes புத்தகம் வாங்கி வந்தோம். அந்த புத்தக்கத்தில் முதலில் எளிதாக ஆரம்பிக்கும் mazes, செல்லச் செல்ல கஷ்டமாக இருக்கிறது. இது pencil skills, concentration, interpretation போன்றவைக்கு ஏற்றது. ஐந்து பக்கங்கள் முடித்து விட்டாள்.

Missing numbers & letters : A _ C D _ _ என்று சில எழுத்துக்களை எழுதிக் கொடுத்தால் Fill பண்ணத் தெரிகிறது. அதே போல் எண்களுக்கும். சில நாட்களாக இதைச் செய்து வருகிறோம். இப்பொழுது what comes afterரும் செய்கிறாள். 7 என்று எழுதினால், அவள் 8 என்று எழுத வேண்டும். இன்று "what comes after 4?" என்றாள். 5 என்றேன். ஒரு நிமிடம் யோசித்து விட்டு, "தப்பாச் சொல்லு" என்றாள். 6 என்றேன். முகத்தில் சந்தோஷம். "No செல்லம். நல்ல யோசித்து கரெக்ட்டாச் சொல்லு, பார்ப்போம்" என்றாள்.

அவள் (பழையப்) பள்ளியில் ஒவ்வொரு வாரம் ஒரு தீம் வைத்திருக்கிறார்கள். அதற்கு தகுந்தாற் போல் கலரிங், பாட்டு, ஸ்டோரி டைம், சர்கிள் டைம் எல்லாம் அமைந்திருக்கும். அதை முதல் வாரமே news letterரில் நமக்கு மெயில் அனுப்பிவிடுவார்கள். நாங்கள் அங்கிருந்த கடைசி வாரத் தீம் Solar system. ஆனால் உடல் நலக் குறைவினால் தீஷுவால் அந்த வாரம் போக முடியவில்லை. எங்களிடம் ஒரு solar system புத்தகமும் ஒரு ஆக்டிவிட்டீஸ் புத்தகம் இருந்தது. புத்தகத்தை படித்துவிட்டு ஆக்டிவிட்டீஸ் புத்தகம் செய்தோம். எவ்வளவு புரிந்தது என்று தெரியவில்லை.

14/03/2009

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னால், குளிர் காலத்தில் உபயோகப்படுத்தும் லெதர் ஜெர்கினின் பட்டன்களை(அது பெரிதாக இருந்ததால்) மாட்டப் பழக்க முயற்சி செய்தேன். அப்பொழுது விருப்பம் இருந்தாலும், அவளால் செய்ய முடியவில்லை. இன்று அவள் அப்பா அணிந்திருந்த சட்டையின் ஒரு பட்டனை அவிழ்த்துத் தரச் சொன்னாள். அவர் செய்ததும், அவளாகவே மாட்டி விட்டாள். மீண்டும் அடுத்த பட்டன் என்று செய்துக் கொண்டுயிருந்தாள்.

16/03/2009

இன்று மீண்டும் ஸோலார் ஸிஸ்டம் புத்தகம் எடுத்து வந்து வாசித்துக் காட்டச் சொன்னாள். ஷெக்கர்ஸ் போர்டில் சிகப்பு, கறுப்பு கட்டத்தில் சிகப்பு கட்டத்தில் சிகப்பு காயின்ஸும், கறுப்பு கட்டத்தில் கறுப்பு காயின்ஸும் வைக்கச் சொன்னேன். சிகப்பு, கறுப்பு கட்டங்கள் அடுத்து அடுத்து வந்ததால் AB Pattern போல் இருந்தது.

அடுத்து அந்த காயின்ஸ்களை தரையில் அதே பேட்டனில் அடுக்க சொன்னேன். இது ஏற்கெனவே செய்திருந்ததால், சரியாகச் செய்தாள். முடித்தவுடன் சிகப்பு காயின்ஸை மட்டும் பக்கத்திலுள்ள காயின்ஸை இடிக்காமல் மெதுவாக எடுக்கச் சொன்னேன். அதுவும் செய்தாள். அடுத்து காயின்ஸை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, விழுந்தவுடன் பாலன்ஸ் இல்ல என்று எடுத்து வைத்து விட்டாள்.

இதற்கு முன் ரப்பர் பாண்டை டியூபில் மாட்டினோம். இன்று ஹேர் பின்னை அட்டையில் சொருகச் சொன்னேன். மெல்லிதான அட்டையில் சொருக முடிந்தது. தடிமான அட்டையில் சொருகத் தெரியவில்லை.

17/03/2008

இன்று மீண்டும் ஸோலார் ஸிஸ்டம் புத்தகம் படிக்க வேண்டும் என்றாள். திரும்ப திரும்பப் படித்ததில் கிரகங்களில் பெயர்களை மானப்பாடம் செய்து விட்டாள். பளப்பள பேப்பரில் கலர் படம் போட்டுள்ள அந்த புத்தகம் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

மருந்து விட பயன்படும் dropperயினால் தண்ணீரை மாற்றினோம். இதே போல் முன்பு இங்க் பில்லர் மூலம் செய்திருக்கிறோம். அவளுக்கு விருப்பமிருக்கவில்லை. அதை pouring ஆக்டிவிட்டியாக மாற்றி விட்டாள்.
Mystery Bag போல் கண்ணைக் கட்டுக் கொண்டு, நான் கேட்கும் பொருளைத் தர வேண்டும். இந்த முறை டால்பின், மீன் உருவங்களை வைத்து விளையாண்டும். முதலில் டால்பின் வழுவழுப்பாகவும், மீன் சொர சொரப்பாகவும் இருப்பத்தைத் தொட்டுக் காட்டினேன். அடுத்து கண்ணைக் கட்டிக் கொண்டு நான் அவள் கையில் கொடுப்பதை என்ன என்று சொல்ல வேண்டும். அடுத்து ஆமையை சேர்த்தேன். ஆமையில் மேல் பகுதி மட்டும் சொர சொரப்பாக இருந்தது. அதை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். அடுத்து மூன்றையும் கீழே வைத்து விட்டு நான் கேட்பதை எடுத்துத் தர வேண்டும். நாலாவதாக நண்டையும் சேர்த்துக் கொண்டோம். விருப்பமாகச் செய்தாள்.

18/03/2009

எண்களில் what comes after போல் what comes before சொல்லிக் கொடுத்தேன். சில எண்களுக்கு சரியாகச் சொன்னாள். ஆனால் முன்னால் வரும் எண்களைச் சொல்வதற்கு பதில் பின்னால் வருவதையே பல நேரங்களில் சொன்னாள். அவளுக்குக் கடினமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். சில நாட்களுக்குப் பிறகு முயற்சி செய்ய வேண்டும்.

மீண்டும் இன்று கண்னைக் கட்டிக் கொண்டு டால்பின், மீன் கண்டுபிடித்தோம். அடுத்து "Can you please give me.." விளையாண்டோம். முடித்தவுடன் என்னிடம் எத்தனை இருக்கிறது, அவளிடம் எத்தனை இருக்கிறது என்று எண்ணச் சொன்னேன். என்னிடம் பத்தும் அவளிடம் ஒன்பதும் இருந்தது. எதுக்கு உன்னிடம் மட்டும் டென் இருக்கு என்றாள். ஒன்பதை விட பத்து அதிகம் என்று தெரியாது. அவளிடம் என்னிடமிருந்த ஒன்றைக் கொடுத்து 9+1 என்ன என்று கேட்டேன். டென் என்றாள் (உதவி: addition table). இப்பொழுது எண்ணிப்பார்.. உன்னிடம் டென் இருக்கும் என்றவுடன் எண்ணிப்பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 1+1 ஆரம்பித்தேன். முதலில் ஒரு டால்பின்னை எடுத்து வைத்துக் கொண்டு இன்னொன்றை எடுத்து வைத்து 1+1 is 2. எண்ணிப்பார் என்றதற்கு, எண்ணாமல் 2+1 is 3 என்று ஒவ்வொன்றாக வைத்துக் கொண்டே வந்து 18+1 is 19 வரை வந்துவிட்டாள். இன்று கூட்டல் குறியின் முதல் கிளாஸ். அவளுக்கு விருப்பமிருந்தால் கூட்டல் பழக்கலாம் என்று இருக்கிறேன். அவளுக்கு அதிகமா என்று முயற்சி செய்தப்பின் தெரியும்.

அடுத்து அந்த டால்பின்களை டைல்ஸ் ஜயின் கோட்டில் வரிசையாக அடுக்கச் சொன்னேன். முடித்தவுடன் கோட்டில் நடக்கச் சொன்னேன். அடுத்து கோட்டில் படாமல் ஓவ்வொரு சதுரத்திலும் குதிக்கச் சொன்னேன். எல்லாவற்றையும் மிகவும் விருப்பமாகச் செய்தாள்.

19/3/2009

இன்று முதல் முறையாக Hundred boardடில் 100 வரை அடுக்கி விட்டாள். நான் பத்து பத்தாக பிரித்துத் தந்தேன். ஆகையால் அவளுக்கு எளிதாக இருந்தது. பிரிக்காமல் இருந்திருந்தால் நிறைய எண்களில் குழப்பம் வந்திருக்கும். உதாரணத்திற்கு 67, 76, 87, 78... போன்று.30 வரை செய்ய வைக்கலாம் என்று தான் நினைத்தேன். செய்து முடித்தவுடன் அடுத்து செய்ய வேண்டும் என்றாள். இப்படியே 100 வரை செய்து விட்டோம். கிட்டத்தட்ட அரை மணி நேரம் எடுத்தது.

இன்று cuisenaire rodடில் திருப்பி அடுக்கச் செய்தேன். பத்து முதல் ஒன்று வரை அடுக்க வேண்டும். எளிதாகச் செய்தாள். முடித்தவுடன் பத்து பெரியதா ஒன்று பெரியதா என்றதற்கு, பத்து என்றாள். எப்படி என்றதற்கு பத்து தான் ஹைட்டா இருக்கு. ஒன்பது பெரியதா பத்து பெரியதா என்றதற்கும் சரியாகச் சொன்னாள். அடுத்து 9+1=10 மற்றும் 1+1=2 செய்து காட்டினேன். பெரிதாக விருப்பமிருக்கவில்லை. ஆகையால் நிறுத்திவிட்டேன். முடித்தவுடன் தூங்கச் சென்றேம். படுத்துக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தாள் ஸிக்ஸை விட ஸவன் பெருசு, ஸவனை விட எயிட் பெருசு. ஸிக்ஸ் பெருசா எயிட் பெருசா என்றதற்கு ஸிக்ஸ் என்றாள்.

30/3/2009

இன்று ஸ்கேலில் கோடு போடுவதற்குச் சொல்லிக் கொடுத்தேன். முதலில் இரு வட்டங்கள் வரைந்து, அந்த வட்டங்களை இணைக்கச் செய்தேன். மிகவும் சிரமப்பட்டாள். ஆகையால் வட்டங்கள் இல்லாமல், வரையச் செய்தேன். அது பழகியவுடன், அவளாகவே வட்டங்கள் வரைந்து இணைக்க வேண்டும் என்றாள். ஆனால் வட்டங்களை இணைப்பதற்குத் தகுந்தாற் போல் அவளுக்கு ஸ்கேலின் திசையை மாற்றத் தெரியவில்லை. அதன் பின் E, F போன்ற எழுத்துக்களை ஸ்கேலினால் வரைந்து காட்டினேன். H தான் எழுதுவதாகச் சொன்னாள். ஆனால் தெரியவில்லை. ஆனால் ஸ்கேலை உபயோகப்படுத்த அவளுக்கு விருப்பமிருக்கிறது. இன்னும் சில நாட்களுக்கு இது அவளுக்கு பிடித்தமானதாக இருக்கும்.

இன்றும் Hundred board செய்தோம். ஆனால் இன்றும் நான் பத்து பத்தாகப் பிரித்து தான் தந்தேன். கிட்டத்தட்ட 90 சதவிகிதம் அவளாகவே செய்தாள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost