சீட்டுக்கட்டுக்கும் எனக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. என் உறவினர்களுடன் இரவு முழுவதும் விளையாடும் வழக்கம் இப்பொழுதும் உண்டு. காசு வைத்து விளையாடும் பழக்கம் இல்லை. ஆனாலும் அலுக்காமல் சளைக்காமல் ஏழு முதல் எட்டு மணி வரை விளையாடுவோம். அதனால் தீஷுவிற்கு சீட்டு பழக்குவதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை.
சீட்டுக்கட்டை குழந்தைகளுக்கு கணிதம் கற்றுக் கொடுக்க உபயோகப்படுத்தலாம். கீழ்க்கண்ட வழிகளில் நானும் தீஷுவும் விளையாண்டு / கணிதம் கற்று இருக்கிறோம். இரண்டு வயது முதல் விளையாடலாம். Ace, King, Queen, Jack போன்ற பட அட்டைகள் வைத்தோ இல்லாமலோ விளையாடலாம்.
1. Sorting : இரண்டு கப்கள் எடுத்துக் கொள்ளவும். சீட்டுக்கட்டை கலைத்துக் கொள்ளவும். 10 அட்டைகள் எடுத்துக் கொள்ளவும் ( வயதுக்கேற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்). அட்டைகள் முகமதிப்பு தெரியாமல் திருப்பி இருக்க வேண்டும். ஒவ்வொரு அட்டைகளாக எடுத்து, கறுப்பு அட்டையை ஒரு கப்பில் போட சொல்லவும், சிவப்பு அட்டையை ஒரு கப்பில் போட சொல்லவும். இது கணிதத்தின் அடிப்படையான Sorting.
2. Advanced Sorting : நிறத்தின் அடிப்படையில் பிரிக்கப் பழகியவுடன், நிறம் மற்றும் பெயர்களின் அடிப்படையில் பிரிக்க வைக்கலாம். கேட்க எளிதாக தோன்றினாலும் கடினமானது.
3. Patterning : இந்த விளையாட்டிற்கு குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப 10 முதல் 20 அட்டைகள் வரை எடுத்துக் கொள்ளவும். அட்டைகளின் மதிப்பு தெரிய வேண்டும். ஒரு கறுப்பு ஒரு சிவப்பு என்று மாறி மாறி வைக்க வேண்டும்.
4. Advanced Patterning: வண்ணங்களின் அடிப்படையில் பாட்டனிங் பழகியவுடன், வண்ணம் மற்றும் பெயர்களின் அடிப்படையில் செய்யலாம்.
5. எண்கள் கற்றல்: 1 முதல் 9 வரை ஒரு பூ அட்டைகள் மட்டும் எடுத்துக் கொள்ளவும். குழந்தையை பத்து அடி தள்ளி நிற்க வைக்கவும். நிற்கும் இடத்திலிருந்து குழந்தைக்கு அட்டையைக் காட்டினால் வாசிக்கத் தெரிய வேண்டும். ஒரு அட்டையை எடுத்து குழந்தையிடம் காட்டவும். எண்ணை சரியாக வாசித்தால் ஒரு அடி முன்னால் வர வேண்டும். தவறாக வாசித்தால் ஒரு அடி பின்னால் சென்று விட வேண்டும். இவ்வாறு வாசித்துக் கொண்டே நம்மிடம் வரும் பொழுது முத்தமோ அல்லது ஒரு சின்ன பரிசோ கொடுக்கலாம். இது பிறந்த நாள் விழா போன்ற விழாகளில் குழுவாகவும் விளையாடலாம். சரியாக எண்ணைக் கண்டுபிடித்த குழந்தை முன்னே வர வேண்டும். மற்றவர்கள் அதே இடத்தில் நிற்க வேண்டும். யார் முதலில் வந்தாலும் அனைவருக்கும் பரிசு.
6. எண்ணப் பழகுதல் : ஒரு பூ அட்டைகள் மட்டும் எடுத்துக் கொள்ளவும். சோழி அல்லது புளியங்கொட்டை போன்ற சிறு பொருள் ஒன்றை 45 எடுத்துக் கொள்ளவும். முதலில் குழந்தை 1 முதல் 9 வரை வரிசையாக அடுக்க வேண்டும். முடித்தவுடன் அட்டைக்கு கீழே அதன் மதிப்புக்கு அந்த சிறு பொருளை வைக்க வேண்டும். உதாரணத்திற்கு: 1 க்கு கீழே ஒரு சோழி, 2 க்கு கீழே இரண்டு சோழி...
7. Number Matching: ஐந்து நிமிடம் டைமரில் வைத்துக் கொள்ளலாம். விளையாடும் அனைவரும் அட்டைகளை சரிசமமாக பிரித்துக் கொள்ளவும். அட்டைகள் முகமதிப்பு தெரியாமல் திருப்பி வைத்திருக்க வேண்டும். வரிசையாக ஒருவர் மாற்றி ஒருவர் ஒரு அட்டை (நாம் சீட்டு விளையாடும் பொழுது போடுவது போல) போட்டுக் கொண்டே வர வேண்டும். எப்பொழுது இரு அட்டைகளின் எண்கள் ஒரு மாதிரி இருக்கிறதோ, அப்பொழுது இரண்டாம் அட்டை போட்டவர் அனைத்து அட்டைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு : நபர் 1, மூன்றாம் எண் அட்டையை போட்டார் என்று வைத்துக் கொள்வோம். நபர் 2 டும் மூன்றாம் எண் அட்டையை போட்டார் என்றால் கீழே இருக்கும் அனைத்தையும் நபர் 2 எடுத்துக் கொள்ள வேண்டும். ஐந்து நிமிட முடிவில் முடித்து விடலாம்.
இன்னும் எத்தணையோ வழிகளில் விளையாடலாம். குழந்தைகள் வெற்றி தோல்வியையும் பழகிக் கொள்வார்கள். சில விதிமுறைகளை பின்பற்றவும் கற்றுக் கொள்வார்கள். சீட்டுக்கட்டை எங்கும் எடுத்துச் செல்வதும் எளிது.
இந்த விளையாட்டுகள் சிறு குழந்தைகளுக்கு ஏற்றது. சற்று பெரிய குழந்தைகளுக்கான (ஆறு வயது முதல்) விளையாட்டுகளை இன்னொரு முறை எழுதுகிறேன். தங்களுக்குத் தெரிந்த கணித சீட்டுக்கட்டு விளையாட்டுகளை மறுமொழியில் சொல்லுங்களேன்.
சீட்டைப் போட்டு கூப்பிட்டால்
ReplyDeleteசிட்டாய் வந்து விளையாடுவேன்
விளையாட்டு என்னிடமே கேட்டால்
சிட்டாய்ப் பறந்தும் விடுவேன்!! :)
சீட்டுக்கட்டில் விளையாட்டுக் கட்டு வைத்து அழகாக செய்முறை விளக்கம் கொடுக்க உன்னால் தான் முடியும் தியானா..கலக்கு கலக்கு :)
சீட்டைப் போட்டு கூப்பிடுகிறேன்
ReplyDeleteசிட்டாய் வந்து விளையாடு
விளையாட்டு உன்னிடம் கேட்க மாட்டேன்
சிட்டாய்ப் பறந்து விடாதே !! :)
கிரேஸ்.. என் கவித, கவித.. எப்படி இருக்கு.. அடிக்க வந்துடாத.. நன்றி உன் வரவுக்கு..
அன்பின் தியானா - அருமையான் விளையாட்டு - பல வகைகளில் சீட்டுக் க்ட்டினை வைத்து விளையாடலாம் - நல்வாழ்த்துகள் - ந்ட்புடன் சீனா
ReplyDelete