Friday, June 28, 2013

பேப்பர் கப்

இந்தப் பேப்பர் கப்பில் உணவு பொருட்கள் உபயோகப்படுத்த முடியாது. ஆனால் பார்ப்பதற்கு அழகான‌வும் செய்வதற்கு எளிதானதும் ஆகும்.




தேவையானப் பொருட்கள் :

1. ஒரு கிண்ணம்

2. பாலிதீன் பேப்பர்

3. செய்தித்தாள்

4. கோந்து

5. பெயிண்ட் (விருப்பப்பட்டால்)

செய்முறை :

1. கிண்ணத்தை பாலிதீன் பேப்பர் சுற்றி வைக்க வேண்டும்.


2. செய்தித்தாளை சிறு சிறு துண்டாகக் கிழித்துக் கொள்ளவும்.

3. கோந்தில் 2 : 1 என்ற முறையில் தண்ணீர் சேர்க்கவும்.

4. பேப்பரை கோந்தில் தொட்டு, பாலிதீன் பேப்பர் மேல் ஒட்டவும்.

5. மூன்று லேயருக்குக் குறையாமல் பேப்பர் ஒட்டவும்.

6. 10 - 12 மணி நேரம் காயவிடவும்

7. காய்ந்தவுடன் மெதுவாக எடுத்தால் பேப்பர் கப் எடுக்க வரும்.



8.  விருப்பப்பட்டால் பெயிண்ட் செய்து அலங்கரிக்கலாம்.





நாங்கள் வெளிபுறம் மட்டும் வண்ணம் தீட்டினோம். கனம் இல்லாத பொருட்கள் வைக்க உபயோகப்படுத்தலாம்.

இதே முறையில் நாங்கள் முன்பே செய்திருந்தவை - Light Shade and பறவைக் கூடு

Light Shade


பறவைக் கூடு


Wednesday, June 26, 2013

டிக்,டிக்,டிக்,டாக்...

பேஸ்புக்கில் வந்த ஒரு கட்டுரை என் கவனத்தைக் கவர்ந்தது. கணிதம் தொடர்பான அந்தக் கட்டுரையில் ஒரு கணித மேதைகள் கூட்டத்தில் டிக் டாக் டோ (Tic Tac Toe) விளையாண்டனர் என்று இருந்தது. ஆனால் சற்று வித்தியாசமாக 3*3 கட்டத்தில், ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு 3*3 டிக் டாக் டோ இருக்கும். ஒரு பெரிய டிக் டாக் டோவில் ஒன்பது சிறு டிக் டாக் டோ இருப்பது போல். நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை, ஆனால் படத்தைப் பார்த்தால் புரியும் என்று நினைக்கிறேன். விளையாட்டில் வெற்று பெற, ஒரு row,  column அல்லது diagonal - லிலுள்ள மூன்று டிக் டாக் - டோ‍வையும் நாம் வென்று இருக்க வேண்டும். நாங்கள் விளையாடும் பொழுது, டை என்றால் இருவரும் வென்றதாக எடுத்துக் கொண்டோம்.




வேறு சில விதிமுறைகளும் இருந்தன. ஆனால் தீஷுவிற்கு அதிகம் என்று நாங்கள் பின்பற்றவில்லை. ஒரு கட்டத்தில் மட்டுமல்லாது, அனைத்து கட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும். எங்களுக்குப் பிடித்திருந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

Monday, June 24, 2013

படங்களின் தொகுப்பு

எழுத நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. சம்முவைப் பற்றி எழுதி பல நாட்களாகி விட்டன. அவளின் புகைப்படங்களில் தொகுப்பு..


 
ஃப்ரெண்டு உடன் விளையாட்டு

வாட்டர் பலூன் எடுப்பதே ஒரு சவால் தான்

 
மஃபின் டின்னில் பிளாக்ஸ்

கலர் முட்டைகளைப் போடுதல்

இலையுடன் ஒரு விளையாட்டு

அக்காவுடன் ம்ர காய்கறிகள்


Saturday, June 22, 2013

தறி

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கூற்றில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தீஷுவிற்கு நூலினால் பின்னுவதற்கு சொல்லிக் கொடுத்தேன். இது கைத்தொழில் என்பதே விட அவளுக்குத் தன்னம்பிக்கை மற்றும் பல விஷயங்கள் கற்றுக் கொடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  

ஒரு 5 * 5 இன்ச் சதுர அட்டை எடுத்துக் கொண்டோம். அதில் அரை இன்ச் இடைவெளியில் நூலால் சுற்றி, தறி செய்து கொண்டோம். அந்தத் தறியில் மற்றொரு நூலினால் பின்னல் செய்ய வேண்டும். தீஷு விடுமுறையில் இருப்பதால், என்னால் பதிவுக்கு நேரம் செலவிட முடியவில்லை. நேரமின்மையால் என்னால் முழுமையாக எழுத முடியவில்லை.





செய்து பார்க்கும் ஆர்வமிருப்பவர்கள் இங்கே சென்றால் படிப்படியான விளக்கம் கிடைக்கும்.


Tuesday, June 18, 2013

பம்ப்..

தண்ணீர் நம் மீது தெறிக்கும் பொழுது நாம் அனைவரும் உற்வாகம் அடைவது உறுதி. மேலிருந்து கீழ் நோக்கி பாயும் தன்மையுடைய தண்ணீரை, கீழே இருந்து மேலே செலுத்த‌ ஒரு சக்தி வேண்டும் என்று புரிய ஒரு சோதனை செய்தோம். இந்தச் சோதனைக்கு வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே தேவை.

தேவையானப் பொருட்கள்:
1. ஸ்ட்ரா ( Drinking Straw)

2. ஒரு கூர்மையான நுனியுடைய குச்சி

3. ஸெல்லோ டேப்

செய்முறை:

1. ஸ்ட்ராவின் நடுவில் துளையிட்டு, அதனுள் குச்சியை நுழைக்க வேண்டும். நாங்கள் சிக்குவாரி உபயோகப்படுத்தினோம்.



2. நுழைத்திருக்கும் பகுதியிலிருந்து இரு பக்கமும் சரியான இடைவெளியில் கத்திரியால பாதி அளவு வெட்ட வேண்டும். முழுதாக ஸ்ட்ராவை வெட்டக் கூடாது. அந்த வெட்டப்பட்ட பகுதியால் இப்பொழுது ஸ்ட்ராவை மடிக்க முடியும்.


3. வெட்டப்பட்ட பகுதியை மடித்து, ஒரங்களை குச்சியுடன் இணைத்து, டேப்பால் ஒட்ட வேண்டும்.





4. இப்பொழுது பம்ப் ரெடி.

5. ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்து, ஒட்டிய பகுதியை தண்ணீரில் போட்டு, குச்சியை மோர் கடைவது போல் உருட்ட வேண்டும். வெட்டிய பகுதியிலிருந்து நீர் தெறிக்கும்.




மிகவும் எளிமையான சோதனை. ஐடியா இந்த வீடியோவிலிருந்து எடுத்தது.

http://www.youtube.com/watch?v=11r3E4eia0U

முயற்சித்துப் பாருங்களேன்.. உங்கள் குட்டீஸுக்கும் பிடிக்கும்.. 

  

Saturday, June 15, 2013

உங்களால் முடியுமா?





நான்கு நாற்காலிகளை இணைத்து, அதன் மேல் பெட்ஷீட்கள் போட்டு ஒரு கூடாராம் செய்து, அதனுள் அமர்ந்து தீஷு டார்ச்லைட் வைத்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள்.  அவள் தோழி வர இருவரும் ஐந்து மணி நேரம் அந்தக் கூடாரத்தில் உட்கார்ந்து எழுதவும் வாசிக்கவும் செய்தனர். ஒரு புது சூழ்நிலை அவர்கள் ஆர்வத்தைத் தக்க வைத்தது.

இந்த இரண்டு மாத விடுமுறையில் தீஷுவை புத்தகம் வாசிக்க வைக்க, இந்த விளையாட்டு ஒரு ஐடியா கொடுத்தது. தீஷுவிற்கு ஒரு சவால். 125 புத்தகங்கள் வெவ்வேறு இடங்களில் (வீடு, Swimming pool, பார்க், ஸ்கூல் போன்றன) அமர்ந்து வெவ்வேறு விதமான புத்தகங்கள் வாசிக்க வேண்டும்.

நான் ஒரு லிஸ்ட் தயார் செய்திருக்கிறேன். யாருக்காவது வேண்டுமென்றால் ஏதாவது File Sharing ஸைட்டில் இணைக்கிறேன்.





உங்களால் 125 புத்தகங்கள் இரண்டு மாதங்களில் படிக்க முடியமா? என்னால் கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் என்னிடம் இரண்டு மாதங்களாக ஒரு புத்தகம் பத்து பக்கங்கள் மட்டும் படிக்கப்பட்டு இருக்கிறது.

தீஷுவிற்கு இந்த ஐடியா அவளால் தோன்றியது என்று தெரிந்தால், இனிமேல் எது செய்வதாக இருந்தாலும் யோசித்துச் செய்வாள் என்பது மட்டும் உறுதி. 


Thursday, June 13, 2013

அமெரிக்கப் பள்ளியில் எனக்குப் பிடித்த விஷயங்கள்

இன்றிலிருந்து   தீஷுவிற்கு கோடை விடுமுறை ஆரம்பமாகப் போகிறது. அவள் பள்ளியில் எனக்குப் பிடிக்காத விஷயங்கள் பற்றி எழுதி இருந்தேன். பள்ளி விடுமுறை விடும் நாளில் அவள் பள்ளியில் எனக்குப் பிடித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

1. D.E.A.R டைம் (Drop Everything And Read Time) : கேட்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது.தினமும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தாலும் நிறுத்தி விட்டு, புத்தகம் வாசிக்கும் நேரம். டியர் டைம் என்று மனதிற்கு நெருக்கத்தை உண்டு செய்யும் இந்த அருமையான பெயர் வைத்தவர் கண்டிப்பாக ரசனை மிகுந்தவராக இருக்க வேண்டும். இந்தச் சொல் வழக்கம் நிறைய பள்ளியில் கேள்விப்பட்டிருக்கிறேன்.


2. Show and Share time : நேரம் கிடைக்கும் பொழுது, தான் செய்த ஒரு பொருளையோ, வரைந்த படத்தையோ, படித்த புத்தகத்தையோ, சென்ற இடத்தையோ என குழந்தைகள் எதைப் பகிர நினைக்கிறார்களோ, அதை மற்ற குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளும் நேரம். தினமும் செய்வதில்லை ஆனால் ஆசிரியையிடம் சொல்லி வைத்தால், நேரம் இருக்கும் பொழுது செய்யவிடுகிறார்கள். வகுப்பிறையில் அனைத்து மாணவர்கள் முன் நின்று பகிர்ந்து கொள்ளுவதில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மற்றும் தன்னம்பிக்கை கிடைக்கிறது

3. Star student of the week : வகுப்புத் தலைவன் போல் ஒரு பதவி. வாரம் ஒரு முறை ஆசிரியையால் தேர்ந்தெடுக்கும் மாணவர் அந்த ஒரு வாரமும் அவருக்கு உதவ வேண்டும். ஒரு வாரத்திற்கு முன் வீட்டிற்கு குழந்தைக்குப் பிடித்தமான விஷயங்கள் பற்றிய கேள்விகள் அனுப்பி இருந்தனர். அந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஒரு சார்ட் பேப்பரில் ஒட்டி அனுப்ப வேண்டும். ஸ்டார் ஸ்டுடெண்டாக இருக்கும் அந்த ஒரு வாரமும் அந்த மாணவரைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்காக வகுப்பறையில் அந்தப் பேப்பரை ஓட்டி வைத்திருப்பர். மேலும் அக்குழந்தையைப் பற்றி மற்ற குழந்தைகள் என்ன நினைக்கிறார்க‌ள் என்பதை ஒரு பேப்பரில் எழுதச் செய்து, தொகுத்து வீட்டிற்கு அனுப்புகிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் எண்ணங்களும், கையெழுத்தும், படங்களும் என‌ அந்தத் தொகுப்பு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. தீஷு மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்தாள்.

4. Parent Volunteer : வகுப்பறையில் அல்லது பள்ளியில் பெற்றோர்கள் Volunteer வேலை செய்யலாம். நமக்கும் திருப்தி மற்றும் குழந்தைக்கும் பெற்றோர் உதவுவதைப் பார்த்து ஒரு பெருமிதம்.

5.புத்தகச் சுமை : அனைத்து புத்தகங்களும் பள்ளியிலேயே வைத்து விடுவதால் புத்தகங்கள் சுமந்து கொண்டு குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை.

6. Walk to School day or Week : பள்ளிக்கு நடந்து வர வலியுறுத்துதல். இதுவும் அனைத்துப் பள்ளிகளிலும் உண்டும். சற்று தூரத்தில் இருப்பவர்கள், காரில் வந்து, காரை பள்ளியிலிருந்து தொலைவிலேயே நிறுத்தி, நடந்து வருவார்கள். எந்த வகுப்பில் நிறைய மாணவர்கள் நடந்து வந்தார்களோ, அவர்களுக்குப் பரிசு உண்டு. அது அனைத்து குழந்தைகளுக்கும் தூண்டுகோலாக இருக்கிறது.

இது என் அனுபவம் மட்டுமே. வேறு ஏதாவது பிடித்த விஷயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்!!

Wednesday, June 12, 2013

ந‌டைபாதை ஓவிய‌ம்

போன‌ வ‌ருட‌க் கோடை விடுமுறையின் பொழுது, தீஷுவின் வகுப்பிலுள்ள‌ குழ‌ந்தைக‌ள் ம‌ற்றும் பெற்றோர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒவ்வொரு பார்க்கில் சந்தித்து வ‌ந்த‌ன‌ர். முடிந்த‌வ‌ர்க‌ள் போக‌லாம். குழந்தைகளைப் பார்க்கில் விளையாட விட்டு பெற்றோர் பேசிக் கொண்டிருப்பர். ஒரு திங்க‌ள் எங்க‌ள் வீட்டின் அருகிலிருந்த‌ பார்க்கில்  காலை ப‌த்திலிருந்து ப‌ணிரெண்டு வ‌ரை ச‌ந்திப்பு. ச‌ம்மு பச்சிள‌ம் குழ‌ந்தை. தூங்க‌ வைத்து விட்டு சென்றால், அவ‌ள் எழுந்து விட்டாள் என் அம்மா போன் செய்தால் 5 நிமிட‌ங்களில் வ‌ந்து விட‌லாம் என்று முடிவு செய்தேன். ச‌ரியாக‌, ப‌த்து ம‌ணிக்குக் கிள‌ம்பி, வீட்டிலிருந்து வெளியேறப் போகிறோம், ச‌ம்மு விழித்து அழ‌த் தொடங்கினாள். அவள் மீண்டும் தூங்கும் பொழுது ம‌ணி ப‌ணிரெண்டு. எல்லாரும் போயிருப்பாங்க‌ என்றாள் தீஷு அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு. யாரும் இல்லாவிட்டால் ப‌ரவாயில்லை, நாம் இருவ‌ரும் விளையாடுவோம் என்று தீஷுவை அழைத்துக் கொண்டு கிள‌ம்பினேன். கொளுத்தும் வெயிலில் அவ‌ளால் விளையாட‌ முடியாது என்று தோன்றிய‌து.சோள‌ மாவு, க‌ல‌ரிங், பெயிண்ட் பிர‌ஸ் , த‌ண்ணீர், சில காலி பாட்டில்கள் எடுத்துக் கொண்டேன்.

எதிர்பார்த்த‌து போல் வெயிலில் அவ‌ளால் விளையாட முடிய‌வில்லை. ‍சோள‌ மாவைத் த‌ண்ணீரில் க‌ரைத்து, க‌ல‌ரிங் சேர்த்து (பால் போன்ற பதத்தில்), சிமெண்ட் த‌ரையில் வ‌ரைய‌ச் செய்தேன். த‌ண்ணீர் ஃப‌வுண்ட‌ன் அருகிலுள்ள த‌ரையைத் தேர்ந்தெடுத்தோம். சுத்த‌ம் செய்வ‌தும் எளிதாக இருந்த‌து. த‌ண்ணீரை ஊற்றி விட்டால் போதுமான‌தாக இருந்த‌து. என‌க்குச் சோள‌ மாவு த‌ண்ணீரில் போய்விடும் என்று தெரியும் ஆனால் க‌ல‌ரிங் த‌ரையில் க‌ரையாக்கி விடுமோ என்று பய‌ம் இருந்த‌தால், முத‌லில் ஒரு சிறு ப‌குதியில் வ‌ரைந்து, த‌ண்ணீர் ஊற்றி அழித்துப் பார்த்தோம். இட‌ம் ப‌ளிச்சென்று ஆன‌தால் தொட‌ர்ந்தோம்.





எப்பொழுதும் போல் தாளில் சிறிய இடத்தில் வரைவதற்கு பதில், ஒரு எல்லையற்ற பெரிய இடத்தில் வரைந்ததில் தீஷுவிற்கு மகிழ்ச்சி. பள்ளி திறந்தவுடன், கோடையில் செய்த பிடித்தமான நிகழ்ச்சியைப் பற்றி எழுதும் பொழுது, இதைத் தான் எழுதியிருந்தாள். 

மொட்டை மாடி அல்ல‌து ந‌டைப்பாதைக‌ளில் பெயிண்ட் செய்து விளையாட விரும்பினால், சோள மாவில் தண்ணீர் கலந்து  முய‌ற்சிக்க‌லாம‌. கலரிங் சேர்ப்பதாக இருந்தால், முதலில் சிறு ப‌குதியில் வரைந்து  கரையாக்குகிறதா என்று பார்த்து விட்டுத் தொட‌ருங்க‌ள். ‌



Monday, June 10, 2013

அட்டைப் பெட்டிகள்..

இப்பொழுது எங்கும் அட்டைப் பெட்டிகள் கிடைக்கின்றன‌. எந்த ஒரு உணவு பொருளும் அட்டைப் பெட்டியில் தான் வருகின்றது. இந்தப் பதிவு அட்டைப் பெட்டிகளைத் தூக்கிப் போடும் முன் வெவ்வேறு தருணங்களில் செய்தவைகளின் தொகுப்பு.

1.  பீட்ஸா பெட்டியில் பில்டிங் செட்

 அட்டையை சதுரமாக வெட்டி, அதின் ஓரங்களில் ஆங்காங்கே 1 இன்ச் அளவிற்கு வெட்டினேன். அந்த வெட்டிய பகுதிகளை இணைத்து விளையாடுதல்





2. கார்ன் பிளேக்ஸ் பெட்டியில் பஸில்  

  பெட்டியின் வண்ணமயமான அட்டையைக் கருத்தில் கொண்டு பஸில் இணைக்க வேண்டும்.




3. கார்ன் பிளேக்ஸ் பெட்டியில் பஸில்

   இரண்டில் உபயோகப்படுத்திய அதேப் பெட்டி தான். ஆனால் அந்த முறையில் உட்புறம் திருப்பி பஸில் இணைக்க வேண்டும். நான் தீஷுவிற்கு கணிதத்திற்கு உபயோகப்படுத்தி இருக்கிறேன். நம் குழந்தைகள் அந்த நேரத்தில் என்ன கற்கிறார்களோ அதை எழுதி பயன்படுத்தலாம்.





4. கார்ன் பிளேக்ஸ் பெட்டியில் ஸ்டென்ஸில்
  
    வெவ்வேறு வடிவங்கள் வரைந்து வெட்டி எடுத்து விட வேண்டும். அதை ஸ்டென்ஸிலாக வைத்து வடிவங்களை பேப்பரில் வரையவோ பெயிண்டோ செய்ய சொல்லாம்.




5.  கார்ன் பிளேக்ஸ் பெட்டியில் தையல்
    நான்கில் வெட்டி எடுத்த வடிவங்களின் ஓரத்தில் சிறு இடைவெளிகளில் ஓட்டைகள் போட்டு வைத்து விட்டேன். தையல் பழக்க வசதியாக இருந்தது.



6.  கார்ன் பிளேக்ஸ் பெட்டியில் வீடு

    நிறைய முறை செய்திருக்கிறோம். ஆனால் படம் கிடைக்க வில்லை. மேல் பகுதியில் வெட்டி வீடு வடிவத்தில் செய்து, குழந்தைகள் சொப்பு சாமான்கள் வைத்து விளையாடவிடுதல்.

7.  டையபர் பெட்டியில் டனல்
 
    தவழும் வயதிலுள்ள குழந்தைக்கு, பெட்டியை இரண்டு பக்கமும் திறந்து, உள்ளே தவழ விடுதல். பெரியவர்கள் கூட முயற்சி செய்யலாம் :‍))



நீங்கள் வேறு ஐடியாக்களைப் பகிருங்களேன்..





Friday, June 7, 2013

பல்பு வாங்கிய (கவர்ந்த) தருணங்கள்

முன்பு கவர்ந்த தருணங்கள் என்று தலைப்பிட்டு தீஷு என்னைக் கவர்ந்த தருணங்களைப் பதிவு செய்தேன். இப்பொழுதும் அவள் அடிக்கடி என்னைக் கவரத் தவறுவதில்லை. ஆனால் ஏனோ இப்பொழுது பதிவு செய்வதில்லை. நேற்று இரவு அரை மணி நேரத்தில் இரண்டு நிகழ்வுகளில் அவளிடம் பேச்சற்று போனேன். (வெட்கமின்றி) பதிகிறேன்.

1. தீஷு தூங்குவதற்கு ரெடியாகிக் கொண்டிருந்தாள். நாங்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்தோம். நான் என் கணவரிடம், சமிக்குட்டியை 24 hours வும் தூக்கிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கு என்றேன்.

தீஷுவிடமிருந்து, "ஏன், பொய் சொல்லுறீங்க?" என்ற கேள்வி.

என்ன தப்பா சொன்னோம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, "நைட் அவ தூங்கறப்ப எங்க தூக்குறீங்க"? ஸோ, 12 hours தூக்குறீங்க" என்றாள்.

"அவ முழிச்சியிருக்கிறப்ப எல்லாம் தூக்கிட்டு இருக்கனும்" என்றேன்.

"அப்படி சொல்லுங்கள், ஏன் 24 hours னு பொய் சொல்லுறீங்க!! என்றாள்.

இப்பவும் அப்படி என்ன தப்பா சொன்னோமென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..




2. தீஷுவிற்கு கதை சொல்லி படுக்க வைத்தாகி விட்டது. தன் தங்கையிடம் முத்தம் வேண்டும் என்றாள். அவளும் ஒரு கன்னத்தில்  நக்கி விட்டாள் (முத்தமிட்டாள்) . தீஷு மறு கன்னத்தைக் காட்டினாள். தங்கை, நக்கியும் அன்பு மிகுந்து கடித்தும் விட்டாள்.

"I do not know how she is going to kiss in her marriage"  என்றாள்.

புரிவதற்கு ஒரு விநாடி எடுத்தது. மூளைக்கு அதிகமாக இரத்ததை ஏற்றி யோசிக்கச் செய்தேன்.

அவளேத் தொடர்ந்தாள்,"I believe she gets better then" என்றாள்.

பேச்சை நிறுத்து, தொடர வேண்டாம் என்று என் மூளை கட்டளையிட, "அதுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு, அப்ப பாப்போம்" என்றேன்.

சொன்னது சரியா அல்லது தப்பா என்று இப்பொழுதும் தெரியவில்லை.
 
 

Thursday, June 6, 2013

குழந்தைக் கதாசிரியர்கள் ‍- Updates

குழந்தைகள் எழுதிய அல்லது சொல்ல கதைகளைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியைப் பற்றி இங்கும் இங்கும் எழுதியுள்ளேன். ஜூன் 15 வரை கதைகளை அனுப்பலாம். இது வரை 7 கதைகள் வந்துள்ளன.

படைப்புகளை dheekshu@gmail.com என்ற முகவரிக்கு Scan செய்தோ அல்லது புகைப்படம் எடுத்தோ (வாசிக்க முடியும் அளவிற்குத் தெளிவாக) அனுப்புங்கள். அனுப்பும் பொழுது ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பும் அனுப்புங்கள்.

வாருங்கள்!!! நாம் நம் குழந்தைகளின் படைப்புகளைப் புத்தகமாக்கி கண்டு மகிழ்வோம்..

Wednesday, June 5, 2013

கேட்பதற்கு எளிது தான்..

மிகப் பிரபலமான விளையாட்டான டிக் டாக் டோ(Tic Tac Toe) விளையாண்டோம். எப்பொழுதும் போல் விளையாடாமல் எண்கள் வைத்து விளையாடி கணிதம் கற்க பயன்படுத்தினோம். இருவர் விளையாடும் இவ்விளையாட்டில், நாம் ஒரு row அல்லது column அல்லது diagonal லில் கூட்டுத்தொகை 15 வரும் படி செய்து வெற்றி பெற வேண்டும். மற்றவர் பெற்ற பெற விடாமல் தடுத்து எண்கள் வைக்க வேண்டும்.


விதிமுறை :

1. 0 முதல் 9 வரை எண்கள் மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.

2. 3 *3 கட்டங்கள் உபயோகப்படுத்த வேண்டும்.

3. ஒருவர் ஒற்றைப்படை எண்களான (Odd Number ) 1, 3, 5, 7, 9 மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.

4. மற்றொருவர் இரட்டைப்படை எண்களான (Even Number ) 0, 2, 4, 6, 8 மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.

5. ஒருவர் ஒரு எண்ணை ஒரு முறை தான் உபயோகப்படுத்த முடியும்.

6. ஒருவர் மாற்றி ஒருவர் எண்கள் வைத்துக் கொண்டே வர வேண்டும்.

7. வெற்றி பெற கூட்டுத் தொகை 15 உருவாக்க வேண்டும்.நாம் வைக்கும் எண்ணால் row அல்லது column அல்லது diagonal லில்கூட்டுத்தொகை 15 வந்தால் நாம் வெற்றி பெறுவோம்.

8. எண்ணைத் தேர்ந்தெடுக்கும் முன் நம்மால் வெற்றி பெற முடியுமா என்று பார்க்க வேண்டும். முடியவில்லை என்றால் எதிராளி வெற்றி பெறும் வாய்ப்பைத் தடுக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அடுத்த முறை வெற்றி பெற வாய்ப்புள்ள எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விதிமுறை ஐந்து தான் மிகவும் முக்கியமானது. அது தான் விளையாட்டை சுவாரஸ்யமாக வைத்தது. எளிதான விதிமுறைக‌ள். ஒரு எண் வைக்கும் முன் ஏற்கெனவே இருக்கும் எண்களைக் கூட்டி, பதினைந்திலிருந்து கழித்து என்று குழந்தைக்குச் சற்று கடினம் தான். ஆனால் அந்தக் கடினம் தான் ஆர்வத்தைத் தக்க வைத்தது.

மூன்று முதல் ஐந்து நிமிடத்திற்குள் விளையாட்டு முடிந்துவிடுவதால், அடிக்கடி விளையாட முடிகிறது. நீங்கள் குழந்தைகளுடன் விளையாடும் கணித விளையாட்டுகளையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்..

Tuesday, June 4, 2013

ஆம்னிபஸ்ஸில் என் இடுகை

க‌தையும் க‌ணித‌மும் என்ற‌ த‌லைப்பில் என் இடுகை இன்று ஆம்னிப‌ஸ் த‌ள‌த்தில் வெளியாகி உள்ள‌து. புத்த‌கத்தையும் எங்க‌ள் க‌தை வாசிக்கும் அனுப‌வ‌த்தையும் பகிர்ந்து இருக்கிறேன்.

தள முகவரி : http://omnibus.sasariri.com/2013/06/blog-post_4.html

வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றிகள்


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost