தீஷுவிடம் சேட்டைகளும் விஷமங்களும் குறைவு. அவள் செய்வது நமக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளுக்கு உணர்த்திவிட்டால் போதும், பொதுவாக அதைச் செய்யமாட்டாள். ஆனால் இப்பொழுது சில நாட்களாக அவளின் சில செயல்களில் மாற்றங்கள் கொண்டுவர முயல்கிறோம். ஆனால் அவளிடம் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை. சில பழக்கங்களில் நாட்கள் போனால் மாற்றம் வரும் என்றாலும் வருமா என்ற சந்தேகமும் உள்ளது.
1. நாங்கள் தீஷுவை டா போட்டுக் கூப்பிடுவது வழக்கம். இப்பொழுது அந்தப்பழக்கம் அவளுக்கு வந்து விட்டது. என்னிடம் வந்து ஒரு தோழி போல் என்னடா ஆச்சி என்பது அழகாய் இருந்தாலும், தன் தந்தையை கவுண்டமணி தோரணையில் டேய் அப்பா எனும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. சொல்லிப் பார்த்தாகி விட்டது. அதுவும் பிறர் முன்னிலை அழைக்கும் பொழுது இன்னும் கஷ்டமாக இருக்கிறது. நானும் அவளை டா போட்டுக் கூப்பிடுவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் அவளிடம் மாற்றம் இல்லை.
2. அனைவரையும் மரியாதை இல்லாமல் வா போ என்றே கூறுவது. அவளுக்கு மரியாதைப் பற்றியெல்லாம் தெரியாது என்றாலும் வயதானோரை அழைப்பது கஷ்டமாக இருக்கிறது. சில நேரங்களில் அவர்கள் முன்னிலையிலேயே மரியாதையாகச் சொல் என்றால் மாட்டேன் என்கிறாள். அது இன்னும் கஷ்டம்.
3. தீஷு யாரிடமும் அதிகமாக பழக மாட்டாள். அதுவும் புதியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவளிடம் கேள்வி கேட்டால், அவள் பதில் சொல்ல வேண்டும் என்பது என் விருப்பம். மிகச் சில நேரங்களில் பதில் சொல்லுவாள். இல்லையேல் நான்கைந்து முறை கேட்டப்பின் வேறு வழி இல்லாமல் நான் பதில் சொல்லுவேன். இப்பொழுது இந்தப் பழக்கம் மிகத் தெரிந்தவர்களிடமும் தொடர்கிறது. நான் என் கணவர் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்கிறாள். பிறர் கேட்டால் அவர்கள் முகத்தையேப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். அவர்கள் பேசுவது புரியவில்லையா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. அவர்கள் கேள்வியை நான் திரும்பக் கேட்டால் என் முகம் பார்த்து பதில் வருகிறது.
4. அவளுடைய பொம்மையைக் குளிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் கையிலேயே வைத்திருக்கிறாள். அந்தப் பொம்மையைத் துவைக்கவும் முடியாது. வாங்கும் பொழுதே அது தான் வேண்டும் என்று வாங்கி விட்டாள். ஒரு முறை என் அம்மா துவைத்தார்கள். ஆனால் அது அடிக்கடி துவைத்தால் தாங்காது. அதில் எத்தனை கிருமிகள் இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது. மேலும் அதை வெளியே எடுத்துச் செல்லும் பொழுது அழுக்கு பொம்மையைப் பார்க்க அசிங்கமாகவும் இருக்கிறது. வேற பொம்மை மாற்றவும் விட மாட்டேன் என்கிறாள். ஒளித்து வைத்தாலும் அவளுக்குத் தெரிந்து விடுகிறது.
தீர்வு சொல்லுங்களேன்.
Games to play with 3 year old without anything
2 years ago