Monday, November 11, 2013

குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடல்கள் - 2

சென்ற "தமிழ்ப் பாடல்கள்" இடுகையில் திரு.நடராஜ் அவர்கள், அழ.வள்ளியப்பாவின்  நூல்கள் இருக்கும் தளத்தைத் தந்திருந்தார்கள். அனைவரும் பயன்படும் என்று இங்கு தந்திருக்கிறேன். நன்றி நடராஜ்!!

இந்த முறையும் ஐந்து பாடல்கள் தொகுத்து இருக்கிறேன்..

1. ஓடி விளையாடு பாப்பா!

ஓடி விளையாடு பாப்பா! ‍ நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா! ஒரு 
குழந்தையை வையாதே பாப்பா!

சின்னஞ் சிறு குருவிபோல நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா!

காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு;
மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா!

‍ - சுப்பிரமணிய பாரதியார்


2. நடுக்கடலில்

நடுக்கடலில் நின்று கொண்டு
நடனம் ஆடுது - படகு
நடனம் ஆடுது

நடுக்கமின்றி அலையினோடு
நடனம் ஆடுது ‍- படகு
நடனம் ஆடுது

உயர்ந்து தாவும் அலைக்கு மேலே
ஓங்கித் தாவுது - படகு
ஓங்கித் தாவுது

பயந்திடாமல் அலையினோடு
பாய்ந்து மேவுது - படகு
பாய்ந்து மேவுது

அலையை முட்டி மோதித் தாவி
ஆடிக் களிக்குது ‍‍- படகு
ஆடிக் களிக்குது

நிலையில்லாமல் தாவிக் குதித்து
நீந்தி வருகுது - படகு
நீந்தி வருகுது

-செல்ல கணபதி 

3. பள்ளிக்கூடப் பை

பள்ளிக்கூடப் பையிலே
  பாடப் புத்தகம் இருக்குது
  பாடப் புத்தகம் இருக்குது
பலகை ஒன்றும் இருக்குது

பையைத் தோளில் மாட்டுவேன்
  பள்ளிக்கூடம் செல்லுவேன்
  பள்ளிக்கூடம் செல்லுவேன்
படித்த பாடம் சொல்லுவேன்

ஆண்டுதோறும் தேறுவேன்
  அறிஞனாக மாறுவேன்
  அறிஞனாக மாறுவேன்
அனைவருக்கும் உதவுவேன்!

- அழ. வள்ளியப்பா

4. ஒன்றிலிருந்து பத்துவரை

ஒன்று, யாவருக்கும் தலை ஒன்று
இரண்டு, உடம்பில் கை இரண்டு
மூன்று, முக்காலிக்கு காலி மூன்று
நான்கு, நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து, ஒரு கை விரல் ஐந்து
ஆறு, ஈயின் கால் ஆறு
ஏழு, வாரத்தின் கிழமைகள் ஏழு
எட்டு, சிலந்தியின் கால்கள் எட்டு
ஒன்பது, தானிய வகை ஒன்பது
பத்து, இருகை விரல் பத்து

5. என் பொம்மை

பொம்மை நல்ல பொம்மை
அம்மா தந்த பொம்மை

கண்ணை மூடித் திறக்கும்
கல கல என்று சிரிக்கும்

தத்தித் தத்தி நடக்கும்
தொட்டால் உடனே நிற்கும்

அம்மா தந்த பொம்மை
அழகு மிக்க பொம்மை


7 comments:

  1. எளிமையாகச் சொல்வது
    அதுவும் குழந்தைகளுக்கு
    ஏற்றார்ப்போலச் சொல்வது
    எத்தனை கடினம் என்பது
    முயன்று பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்
    அற்புதமான கவிதைகளை
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பல நல்ல பாடல்களுக்கு நன்றி தியானா!

    ReplyDelete
  3. அனைத்தையும் ரசித்தேன். ஒன்றிரண்டு பாடல்கள் இதுவரை படித்திராதவை.....

    தொடரட்டும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கான பாடல்கள்!!!!

    ReplyDelete
  4. :‍) திரட்டியமைக்கு நன்றி, தியானா!

    ReplyDelete
  5. தியானா ,இன்றைய வலைச்சரத்தில் இந்த அருமையான் பாடல்கள்.
    வாழ்த்துக்கள்.

    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html

    ReplyDelete
  6. செய்தி தெரிவித்தமைக்கு நன்றிகள் கோமதி அம்மா, தனபாலன்!!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost