Saturday, July 27, 2013

எரிமலையும் செய்யலாம், பலூனும் ஊதலாம்..

வினிகரில் பேக்கிங் சோடா கலந்தால் கார்பன் டை ஆக்சைடு உருவாகும். அதை வைத்து செய்தவை.

எரிமலை செய்த விதம்

போட்டோவில் கிளிக்கவும்



பலூன் ஊதிய விதம்

பாட்டிலில் வினிகர் எடுத்துக் கொண்டோம். ஊதாத பலூனில் பேக்கிங் சோடா போட வைத்துக் கொண்டோம். பலூனின் வாய் பகுதியை இழுத்து, பாட்டின் வாயில் மாட்டி விட்டோம். பலூனிலிருந்து பேக்கிங் சோடா, பாட்டிலினுள்ள வினிகரில் பட்டதும், கார்பன் டை ஆக்சைடு வெளிப்பட்டு, பலூனை ஊதச் செய்யும்.




இந்த முறை செய்தது

ஜிப் லாக் பாகில் காற்று உருவாவதைப் பார்த்தோம்.

தேவையானப் பொருட்கள்

1 ஜிப் லாக் பேக்

2. வினிகர்

3. பேக்கிங் சோடா

4. டிஸ்யூ பேப்பர்

செய்முறை :

1. ஜிப் லாக் பேக்கில் வினிகரை ஊற்றிக் கொள்ளவும்.

2. டிஸ்யூ பேப்பரில் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளவும்.

3. ஜிப் லாக்கை முக்கால் பாகம் மூடி, இடைவெளியில் டிஸ்யூ பேப்பரை உள்ளே போட்டு, முழுவதுமாக மூடி விடவும்.

4. வினிகரில் பேக்கிங் சோடா பட்டவுடன், கார்பன் டை ஆக்ஸைடு வெளிபட்டு, ஜிப் லாக்கை நிரப்பத் தொடங்கும்.

5. காற்றை நிரப்ப முடியாமல் ஒரு நிலையில் ஜிப் லாக் வெடிக்கும்.

மிகவும் எளிதான செய்முறை. ஆனால் விருப்பமாகச் செய்தோம்.

Friday, July 19, 2013

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது..

என் சிறு வயதில் காசு கொடுத்து வாங்கிய விளையாட்டுப் பொருள்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைக்காவது கிடைக்க வேண்டும் என்று தீஷுவிற்கு நிறைய‌ விளையாட்டுப் பொருட்கள் வாங்கி குவித்து, அதனைத் தொடவே மாட்டேனென்கிறாள் என்று நான் குறைப்பட்டதுண்டு.

குறைவு என்பதே நிறைவு என்பது குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களுக்கு முற்றிலும் உண்மை.  சில ஆண்டுகளில் நிறைய விளையாட்டுப் பொருட்கள் குழந்தைக்குத் தேவையில்லை என்பது புரிந்தது. அதனால் இந்த முறை சம்முவிற்கு மிகவும் தேவையானதைத் தவிர வேறு எதுவும் வாங்கவில்லை.

மேலும் அவளிடம் இருக்கும் பொருட்களிலும் இரண்டு மட்டும் அவள் கண்ணில்படும் படி வைத்துவிட்டு மற்றதை உள்ளே எடுத்து வைத்துவிடுவோம். ஒவ்வொரு வாரமும் இரண்டு பொருட்கள் மாற்றி வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் சில நேரங்களில் இரண்டு மூன்று வாரங்களில் தான் மாற்றுகிறோம்.

அவள் விளையாடுவது பொதுவாக விளையாட்டுப் பொருட்களுடன் அல்ல. நான் மிகவும் சாதாரணமாக நினைக்கும் பொதுவான விஷயங்கள் அவளுக்கு விளையாட்டுப் பொருட்கள் கொடுக்காத மகிழ்ச்சி தருகின்றன. அவற்றில் சில.

1. வெளியில் நடந்து செல்வது : பொதுவாக பகல் நேரத்தில் 8 முதல் 10 மணி நேரம் வீட்டில் அடைந்து கிடக்கும் அவளுக்கு மிகவும் விருப்பமானது வாக்கிங். தானாக நடக்க வேண்டும் என்று அடம் பிடித்து நடந்து, ஒவ்வொரு புதிய பொருளுக்கும் நின்று, தொட்டு ரசித்து வருகிறாள். இப்பொழுது எங்களுக்குப் பிடித்த பொழுது போக்கு வாக்கிங்.



2. தண்ணீர் : அவளுக்கு நிறைய தண்ணீர் இருக்க வேண்டும் என்பது கூட இல்லை. வாட்டர் பலூன், பாட்டிலிருந்து வடியும் தண்ணீர், தரையில் தெளித்து இருக்கும் தண்ணீர் என்று அனைத்தும் இஷ்டம்.



3. சோப்பு ஊதி (Bubbles) : அவளால் ஊத முடியாவிட்டாலும், அக்கா ஊதுவதைப் பார்ப்பதிலும் பறக்கும் பபிள்ஸைப் பிடிப்பதிலும் விருப்பம்.

4. வேடிக்கைப் பார்த்தல் : ஜன்னல் வழியாக அசையும் செடிகளைப்  பார்ப்பதில் விருப்பம் அதிகம். அங்கே இருக்கும் பொருட்களின் பெயர்களைச் சொல்ல சொல்ல சில நேரங்களில் ஓரிரு வார்த்தைகள் அவளிடமிருந்து வரும்.



5. புத்தகம் : புத்தகத்தை தலை கீழாக வைத்து படிப்பதில் ஆர்வம் அதிகம். நாங்கள் அருகில் இல்லாவிட்டாலும் அவள் வாசித்துக் கொண்டுயிருக்கிறாள்.

6.பாட்டு : யார் பாடினாலும் (நான் பாடினால் கூட) பிடிக்கும். என்ன பாடினாலும் பிடிக்கும். சம்மு பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஸ்லோகத்தைப் பாடலாகப் பாடி தீஷுவிற்கு கற்றுக் கொடுத்தேன். இன்றும் அந்தப் பாடல் தான் சம்மு தூங்குவதற்கு பாடிக் கொண்டிருக்கிறேன்.

7. சிறு விளையாட்டுக்கள் : முகத்தை கை வைத்து மறைப்பது, ஒளிந்து கொள்ளுதல், பொருட்களை ஒளித்து வைத்து விளையாடுதல், நண்டு வருது நரி வருது போன்ற விளையாட்டுக்கள் விருப்பமானவை. ஆனால் திரும்ப திரும்ப விளையாடி நாங்கள் சோர்ந்து விடுவோம்.

8. சமையலறைப் பொருட்கள்: காலை வேளையில் பெரும்பாலும் கடுகு டப்பாவையோ அல்லது வெந்தய டப்பாவையோ ஆட்டி கிலுகிலுப்பையாக மாற்றிக் கொள்கிறாள். ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த பால், காய்கறித் தோல் போன்றவற்றின் குளிர் பிடிக்கிறது. அவைகளைப் பாத்திரத்தில் போட்டு எடுத்து விளையாடுகிறாள்.

தங்கள் வீட்டுச் சுட்டிகள் வாங்கிய விளையாட்டுப் பொருட்கள் இல்லாமல் எவ்வாறு விளையாடுகிறார்கள்?

Tuesday, July 16, 2013

குழந்தைகள் புத்தகம் ‍- வெறும் குழந்தைகளுக்கானப் புத்தகம் மட்டுமல்ல!!

குழந்தைகள் எழுதிய கதைகளைத் தொகுத்து புத்தகமாக்க விரும்பினேன். அது குறித்து நான் எழுதிய முதல் பதிவு ‍ - குழந்தைக் கதாசிரியர்கள். 4 முதல் 10 வய்து குழந்தைகள் எழுதிய‌ 12 கதைகள் வந்திருந்தன. உண்மையாகவே  குழந்தைகளின் கற்பனைத்திறனைக் கண்டு வியந்து போனேன்.

நான் இ‍‍-புக் செய்வது இது தான் முதல் முறை. எனக்குத் தெரிந்தவர்கள் யாரும் செய்திருக்கவில்லை. நான் எதிர்பார்த்ததை விட நேரம் எடுத்து விட்டது. சரியாக ப்ளான் செய்யவில்லை என்று நினைக்கிறேன். முதலில் text document - டாக உருவாக்கி, PDF வாக மாற்றி, புத்தகம் போல் செய்யலாம் என்று ஆரம்பித்து முடித்தும் விட்டேன். ஆனால் திருப்தியாக இல்லை.

அதனால் இணையத்தில் பேஜ் உருவாக்கும் இலவச மென்பொருள் தேடத் தொடங்கினேன். புத்தகம் உருவாக்கும் அளவிற்கு எந்த மென்பொருளும் இலவசமாக கிடைக்கவில்லை. ஐந்து பக்கங்கள் மட்டும் அல்லது வாட்டர் மார்க் என்று பல இன்னல்கள் இருந்தன. ஒரே ஒரு டிஸைன் டெம்பிளேட் மட்டுமே என் தேவைக்கு ஏற்றது போல் இருந்தது. அதை வைத்து அனைத்துப் பக்கங்களையும் உருவாக்கியுள்ளேன்.

புத்தக வடிவில் வாசிக்க‌


http://data.axmag.com/data/201307/20130717/U104675_F229002/index.html

மேலுள்ள லிங்கை சொடுக்கினால் புத்தக வடிவில் வாசிக்க முடியும். Flash தேவை.



PDF Download

1. டவுன்லோடு செய்ய விரும்புபவர்கள், எனது google docs - லிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

https://docs.google.com/file/d/0B9QoI8U_6Wlmeko1aXFuMDNOQ0E/edit?usp=sharing

Preview not available என்கிற மெஜேஸ் வருகிறது. ஆனால் டவுன்லோடு செய்ய முடிகிறது.

2. www.scribd.com இணையத்தளத்திலும் அப்லோட் செய்திருக்கிறேன். இங்கிருந்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.





நேரம் எடுத்து கதை எழுதிய குழந்தைகளுக்கும், ஆர்வத்துடன் அனுப்பிய பெரியோர்களுக்கும் என் நன்றிகள். முதல் அனுபவம் என்பதால், தவறுகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். தாங்கள் அனுப்பிய கதைகளில் பிழைகள் இருந்தால், சுட்டிக் காட்டுகள். திருத்தி மீண்டும் வலையேற்றுகிறேன்.

நன்றிக‌ள்!!!

Tuesday, July 9, 2013

டிஸ்னி லாண்ட்

கடந்த வார வியாழன் அமெரிக்கச் சுதந்திர தினம். என் கணவருக்கு வியாழன் மற்றும் வெள்ளி விடுமுறை. திங்கள், செவ்வாய் மற்றும் புதன் விடுப்பு எடுத்துக் கொண்டு கடந்த வாரம் முழுவதும், நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டே இருந்த பயணத்தை திடீரென்று முடிவு செய்து மேற்கொண்டோம். சென்ற இடங்கள் டிஸ்னி லாண்ட் (Disney land) மற்றும் சான் டியாகோ. பயந்து விடாதீர்கள், இது பயணக் கட்டுரை அல்ல.  பயணத்திற்கு முன்னும் பின்னும் செய்தவைகள் பற்றிய விவரங்கள். இதுக்குப் பயணக் கட்டுரையே பரவாயில்லை என்று நினைத்து இருப்பீர்கள் :))

டிஸ்னி லாண்டில் அனைத்து இளவரசிகளிடமும் (வேடமிட்டவர்கள் தான்) கையெழுத்து வாங்குவோர் உண்டு. பெதுவாக நான் இது போல் விஷயங்களைப் பெரிதுப்படுத்துவது இல்லை. ஆனால் ஆட்டோகிராப் புக் டிஸ்னி லாண்ட் உள்ளே 25 டாலர் என்று கேள்விப்பட்டதும், இது பெரிய விஷயமாகத் தோன்றியது. அனைவரும் வாங்கும் பொழுது, தீஷுவும் கேட்பாள் என்று தெரியும். அதற்காக 25 டாலர் என்பது too much. வீட்டிலேயே ஆட்டோகிராப் புக் செய்ய முயற்சி செய்யலாம் என்று தோன்றியது.

ஆட்டோகிராப் புக் போன்று ஒரு புத்தகம் கடையில் 50 சென்ட்டுக்கு கிடைத்தது. போட்டோ ஷாப்பில் குழந்தைகளின் படங்கள் மற்றும் பெயர்கள் போட்டு முதல் பக்கத்தை உருவாக்கினேன். ஒரு டாலருக்கு படங்கள் வாங்கி ஒட்டிவிட்டோம். இரண்டு பேருக்கும் சேர்த்து இரண்டு டாலர்கள் மட்டுமே செலவானது. தனித்தன்மையான புத்தகம் ரெடி.




சென்ற அனைத்து இடங்களிலும் பார்க்கிங் டிக்கெட், Map போன்றவற்றை பத்திரப்படுத்தினோம். வந்தவுடன் ஒரு நோட்டில் எங்கள் புகைப்படங்கள், நாங்கள் எடுத்த டிக்கெட் முதல் பத்திரப்படுத்திய அனைத்தையும் ஒட்டி விட்டோம். ஒரு நினைவு பொருள் ரெடி. தீஷு ஒரு பயணக் கட்டுரை எழுதியிருக்கிறாள். அதையும் இணைக்க முடிவு செய்துள்ளேன். செலவு அதிகமில்லாமல் எங்கள் பயணத்தை டாக்குமென்ட் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. Nothing fancy but..










 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost