இங்கு வசந்த காலம் தொடங்கி விட்டது. இலைகளின்றி பூக்களின்றி இருந்த மரங்களில் இலைகள் முளைத்துள்ளன, பூக்களுக்கும் அங்காங்கே தென்படுகின்றன. வீட்டில் செடி வைக்க வேண்டும் என்று எங்கள் அனைவரின் ஆசையும் ஏதாவது ஒரு காரணத்தால் முடியாமல் போகின்றது. சரி, வீட்டில் இயற்கை பூக்கள் இல்லையென்றால் என்ன, செயற்கை பூக்கள் செய்யலாம் என்று நானும் தீஷுவும் செய்தோம்.
தேவையான பொருட்கள் :
1. காபி ஃபில்டர் பேப்பர் - காபி மேக்கரில் காபியை வடிகட்ட பயன்படுவது.டிஸ்யூ பேப்பரிலும் செய்யலாம் என்று நினைக்கிறேன்.
2. ஃபுட் கலரிங் அல்லது பெயிண்ட்
3. ஸ்ட்ரா (Drinking straw)
4. ஸெல்லோ டேப் (Cellophane tape)
செய்முறை
1. காபி ஃபில்டரை கலர் செய்ய வேண்டும். சிறிது நீரில் கலரிங் சேர்த்து, நன்றாக கலக்கவும். அதில் ஃபில்டரை போட்டு ஐந்து நிமிடம் ஊற விடவும். ஒரு பூ செய்வதற்கு 3 முதல் ஐந்து ஃபில்டர்கள் தேவை.
2. ஃபில்டரை காய வைக்கவும்.
3. காய்ந்த ஃபில்டரை நடுவில் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு பிடித்து(விரல்களின் நடுவில் சிறிது அளவு மட்டும் வைத்திருக்கவும்), கீழிருந்து மேல் நோக்கி மற்றொரு கையினால் நீவினால் பூ வடிவத்தில் வரும்.
4. பிடித்திருந்த விரல்களை எடுத்து, பிடித்திருந்த இடத்தில் முறுக்கி விடவும்.
5. அடுத்த அடுக்குக்கு, மற்றுமொரு ஃபில்டரை எடுத்து, நடுவில் கத்தரிக்கோல் கொண்டு, சிறு துளை இடவும்.
6. நாம் செய்திருந்த பூவை துளையில் நுழைத்து, மீண்டும் கீழிருந்து மேல் நோக்கி நீவினால் சற்று பெரிய பூ கிடைக்கும். பிடித்திருந்த நுனியில் முறுக்கிவிடவும்.
7 அடுத்த அடுக்குக்கும், மற்றுமொரு ஃபில்டரில் துளையிட்டு, துளையினுள் செய்திருக்கும் பூவை நுழைத்து, கீழிருந்து மேல் நோக்கி நீவி, முறுக்கவும்.
8. முறுக்கி இருக்கும் பகுதியில் டேப்பினால் வெட்டவும்.
9. பூ ரெடி. சற்று பெரிய பூ வேண்டுமென்றால், இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்குக்கு, இரண்டு ஃபில்டர் உபயோகப்படுத்தலாம்.
10. ஸ்ட்ராவில் டேப் வைத்து ஒட்டிவிடவும்.
நாங்கள் கலர் செய்யாத வெள்ளை நிறத்திலும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலும் செய்தோம். இந்த வாடாத வண்ண மலர்கள் தீஷுவிற்கு செய்வதற்கு எளிதாக இருந்தன.
பெரியவர்கள் செய்யும் வண்ணம் சற்று கடினமான செய்முறைகள் உள்ளன. கூகுளின் துணை நாடினால் நிறைய முறைகள் கற்கலாம்.