Wednesday, November 25, 2009

மூன்றெழுத்தில்....





தீஷுவின் வாசிப்பு ஆர்வத்திற்கென சில வார்த்தைகளை அதன் படங்களுடன் இணைத்தோம் என்பதை இங்கு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக ஒரு படத்தை ஒரு பேப்பரில் ஒட்டி விட்டு அதன் அடியில் அதன் வார்த்தையை மாக்னெட்டிக் எழுத்துகளைக் கொண்டு வரைந்து விட்டேன். பென்சிலால் அனைத்து வார்த்தைகளையும் வரைந்து முடிந்தவுடன், மார்க்கரால் ஒரு வார்த்தை எழுதி முடித்தவுடன், மற்ற அனைத்தையும் தான் தான் செய்ய வேண்டும் எனச் சொல்லிவிட்டாள். புகைப்படங்கள் படங்கள் ஒட்டும் முன் எடுத்தவை. படத்தைப் பார்த்து எழுத்துக்களை வார்த்தையின் மேல் அடுக்கி வாசிக்க வேண்டும். தீஷு மிகவும் ஆர்வமாகச் செய்யவில்லை.








அடுத்து ஒரு அட்டையில் மூன்று பாகங்களாகப் பேப்பர் ஒட்டிவிட்டேன். இரண்டாம் பாகத்தில் vowels. முதல் மற்றும் மூன்றாம் பாகத்தில் consonants. நான் தேர்ந்தெடுத்த முதல் பாக consonants - B, C, M, H, R, மூன்றாம் பாக consonants - T, P, D, N. படங்களிலுள்ளது போல் அனைத்து வார்த்தைகளுக்கும் அர்த்தம் வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் blend செய்வதற்கு நல்லதொரு பயிற்சியாக அமையும். இந்த ஐடியா நெட்டிலிருந்து எடுத்தது.

Sunday, November 22, 2009

ஸ்பைடர் மேன் ஸ்பைடர் மேன் - பெங்களூர் புத்தகக்கண்காட்சி

சென்ற வாரம் பெங்களூர் புத்தகக் கண்காட்சி சென்றிருந்தோம். காலை முதல் மழை பெய்வது போல் இருட்டிக்கொண்டேயிருந்தது. அப்படித்தான் இருக்கும் ஆனால் பெய்யாது என்று ஒரு நம்பிக்கையில் சாயங்காலம் கிளம்பிவிட்டோம். பாலஸ் கிராவுண்டில் புத்தகக் கண்காட்சி. நாங்கள் பாலஸ் கிராவுண்ட் என்று நினைத்துச் சென்ற இடத்தில் கண்காட்சி நடப்பது போல் ஒரு அறிகுறியே இல்லை. பக்கத்தில் விசாரித்ததில் நேராகச்செல்ல வேண்டும் என்றார்கள். ஆனால் எவ்வளவு தூரம் என்று சொல்லவில்லை. இங்கு அங்கு விசாரித்து, லேஃப்ட் போய், ரைட் போய் என எங்கு வந்திருக்கிறோம் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 30 கிமி. உள்ளே நுழையும் முன்னே மனதில் சின்ன எண்ணம் - கிளம்பும் முன் மழை வந்துவிடக்கூடாது என. நாங்கள் எங்கு இருக்கும் என்று எங்களுக்கேத் தெரியாததால் ஒரு மணி நேரமே இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டோம்.

முதலில் நுழைந்தவுடனே இடது பக்கத்தில் தமிழ் கடை. அப்பா எங்களை மறந்து விட்டார். புத்தகங்களை அள்ள ஆரம்பித்து விட்டார். சாவியின் வாஷிங்டனில் திருமணம் நான் வாங்கச் சொன்னேன். தீஷு ஆரம்பித்து விட்டாள்.. "அம்மா பசிக்குது..". என்னால் பார்க்கக்கூட முடியவில்லை. அடுத்த கடையில் நான் Chetan Bhagat தின் 2 states வாங்கினேன். Lords of the rings வெகு நேரம் யோசித்து பின்பு இவ்வளவு பெரிய புஃகை என்னைக்கும் படிக்க முடியாது என்று வாங்கவில்லை. அடுத்து ஒரு கடையையும் தீஷு பார்க்க விடவில்லை. அப்பா கையில் புத்தகங்கள் இருந்ததால் நான் அவளை தூக்க வேண்டியிருந்தது. என்னால் தூக்கிக்கொண்டு பார்க்க முடியவில்லை. தீஷுவிற்கு என மூன்று வாசிக்கப்பழக சிறு வாக்கியங்கள் கொண்ட புத்தகங்கள் வாங்கினோம். பின்பு இந்திரா செளந்திர்ராஜனின் சிவம் வாங்கினோம்.

பின்பு ஒரு கடையில் குழந்தைகளின் புத்தகங்கள் பத்து ரூபாய் என பழைய புத்தகங்கள் கிடைத்தன. அதில் வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த முத்துகள் சில கிடைத்தன.

பத்து டாலர் என்று மிரட்டிய புத்தம் - Hush little baby (நூறு தடவைக்கு மேல் வாசித்தாகி விட்டது.)


I Spy ( Library யில் படித்தது இப்பொழுது சொந்தமாக)








புத்தகக் குவியலில் தேடிக்கொண்டிருக்கும் பொழுது தான் தீஷு இத எடுத்துக்கிடவா என்றாள். அவசரத்தில் பார்க்காமல் புத்தகம் தானே என்று சரி என்றேன். பணம் கொடுக்கும் பொழுது தான் பார்த்தேன் அது ஒரு ஸ்பைடர் மேன் புத்தகம். தீஷுவிற்கு பார்னி மட்டுமே முன்பு தெரியும். இப்பொழுது ஸ்பைடர் மிகவும் கவர்ந்து விட்டர். நான் யூ டியூபில் ஆரம்பப்பாடல் காண்பித்தேன். மிகவும் பிடித்து விட்டது. ஸ்பைடர் மேன் பறப்பாரு, இங்க பாரு டிரெஸில் ஸ்பைடர், இவர் மேன் அதனால தான் ஸ்பைடர் மேன் என எனக்குப் பல தகவல்கள் தருகிறாள்.


விகடன் பிரசுரத்தைப் பார்த்தவுடன் கிடைத்த மகிழ்ச்சியை இங்கிருந்த புத்தகங்களால் தக்க வைக்க முடியவில்லை. நான் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த கிராமத்து விளையாட்டுகள் கிடைக்கவில்லை. அப்பா விஷ்ணுபுராணம் வாங்க வேண்டும் என்றார். தீஷுவின் நிஜமா சொல்றேன் அம்மா.. ரெம்ப பசிக்குது என்ற வாக்கியம் எங்களை கிளப்பியது. வெளியே சாப்பிடும் இடம் வந்தவுடன் நேரம் பார்த்தல் இரண்டரை மணி நேரம் ஆகி இருந்தது.


மழையின் கவலையுடனும், தீஷுவின் தொல்லையுடனும் எங்கள் முதல் புத்தகக் கண்காட்சி அனுபவம் இனிதே முடிந்தது. அடுத்த வருஷம் உன்னைய யார்கிட்டயாவது விட்டிட்டு தான் வருவோம் என்று அவளே மிரட்டிக்கொண்டும், மழை வரக்கூடாது என வேண்டிக் கொண்டும் வீடு வந்தோம்

ஸ்அன்

தீஷுவிற்கு வாசிப்பதற்கு ஆர்வம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். எதைப் பார்த்தாலும் படிப்பது போல் எழுத்துக் கூட்டி வாசித்துக் கொண்டேயிருக்கிறாள். அதனால் அவளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என CVC (Consonants - Vowels - Constants ) வார்த்தைகளும் அதற்குரிய படங்களையும் எடுத்துக் கொண்டு வார்த்தைகளை வாசித்து படங்களுடன் பொருத்தச் சொல்லலாம் என்று படங்கள் தேடிய பொழுது இந்த தளம் கிடைத்தது. ஃப்ரியாக ரிஜிஸ்டர் செய்து கொண்டால் டவுன் லோடு செய்து கொள்ளலாம். மிகவும் உபயோகமான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனக்கும் தளத்தை முழுமையாகப் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. பார்க்க வேண்டும்.


16 படங்களும் வார்த்தைகளும் இருந்தன. தீஷுவே அனைத்தையும் வார்த்தைகள் தனியாகவும் படங்கள் தனியாக வெட்டினாள். பின்பு மூன்று வார்த்தைகளையும் அதன் படங்களையும் எடுத்துக் கொண்டோம். மூன்று படங்களயும் காண்பித்து அதன் பெயர்களைச் சொன்னேன். பின்பு படங்களை வரிசையாக இடமிருந்து வலமாக அடுக்கினோம். பின்பு வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்து அந்த படத்தின் கீழே அடுக்கினோம். தீஷு மூன்று வார்த்தைகள் முடித்தவுடன் அடுத்த மூன்று என அதிகரித்து 16 படங்களையும் செய்தோம். சில வார்த்தைகள் வாசிப்பதற்கு சிரமப்படுகிறாள். உதாரணத்திற்கு S-U-N பார்த்தவுடன் ஸ்-அ-ன் என்று சொல்லி ஸ்அன் என்கிறாள். ஸன் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் வாசித்தவுடன் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்பா வந்தவுடன் சந்தோஷப் பகிர்தல் நடந்தது..

கவர்ந்த தருணங்கள் 22/11/09

1. தீஷு: "அப்பா.. படிச்சிட்டு புஃக்கை புஃக் ஸெல்ப்ல வைக்காம ஸோபாலே வச்சிட்ட பாரு.ஏன்?"
அப்பா : "எடுத்து வைச்சிடுறேன் டா.."
தீஷு : "சரி, எடுத்து வைக்கும் பொழுது கீழ இருக்கிற என் புஃக்கையும் எடுத்து வச்சிடு.."

2. தீஷு ஸட் டவுன் செய்து கொண்டிருக்கும் பொழுது, லாப் டாப்பை மூடப் போனாள்.
அம்மா :"தீஷு, மூடாத..."
தீஷு : "ஏன்?"
அம்மா : "ஸிஸ்டம் கெட்டு போயிடும்"
தீஷு : "சாப்பிடுகிற பொருள் தானே கெட்டு போகும்.. ஸிஸ்டம் எப்படி கெட்டு போகும்?"

3. கடந்த நான்கு தினங்களாக தீஷுவிற்கு கடிமையான ஜுரம். ஒரு நாள் கிட்டத்தட்ட 104C.என்ன மருந்து கொடுத்தாலும் குறையவேயில்லை. ஜுரத்தினால் தூக்கத்தில் அரற்றிக் கொண்டிருந்தாள். அப்பொழுது தனியாக அவளை கவனித்துக் கொண்டிருந்த எனக்கு பயமாக இருந்தது. ஆனால் இப்பொழுது சரியாகி விட்டதால், அவள் தூக்கத்தில் சொன்னது சந்தோஷமாக இருக்கிறது.. அவள் சொன்னது "அம்மா... எனக்குப் புஃக் படிச்சுக் காட்டு.. இன்னொரு புஃக் படிச்சுக் காட்டு.." திரும்ப திரும்ப 10 தடவைக்கு மேல்..

Monday, November 16, 2009

பட்டாம் பூச்சி வந்தது எப்படி?

தீஷுவிற்கு அவளுக்குப் புரியும் வகையில் மாதமொரு அறிவியல் தகவல் சொல்லித்தர வேண்டும் என்று நினைத்திருந்தேன். இரண்டு மூன்று மாதங்களாக ஆபிஸ் வேலையை விட சொந்த வேலைகள் அதிகம். அதில் எனக்குத் தயார் செய்ய நேரம் கிடைக்க வில்லை. இப்படியே விட்டால் எப்பொழுதும் செய்ய முடியாது என்று என்னால் முடிந்த வரை முயற்சி செய்து, பட்டாம் பூச்சியின் வளர்ச்சி படிகள் பற்றி கடந்த ஒரு மாதமாக சொல்லிக் கொடுக்கிறேன்.

1. முதலில் பட்டாம் பூச்சியின் சுழற்சியை விளக்கும் புத்தகமான Caterpillars by Robyn Green வாசித்தோம். The very hungry caterpillar புத்தகம் இல்லை. இருந்திருந்தால் அதை விட நல்ல புத்தகம் கிடையாது.

2. பின்பு நெட்டிலிருந்து படங்கள் எடுத்து வந்து அவளை அடுக்கச் செய்தேன்.

3. பெயிண்ட்டை பேப்பரின் நடுவில் கொட்டி, இரண்டாக பேப்பரை மடித்து, பட்டாம் பூச்சிகள் செய்தோம்.

4. ஸீக்கொன்சிங் கார்டு வைத்து அதன் வளர்ச்சிப்படிகளை வரிசையாக அடுக்கினோம்.


பட்டாம்பூச்சி மையமாக வைத்து எண்ணுதல், கூட்டல்,மாட்சிங் முதலிய அட்டைகள் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. அடுத்த தகவல் படிக்கும் முன் நன்றாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

Sunday, November 15, 2009

பஸில் பாய்




ஞாயிறு அன்று மழை வருவது போல் இருந்ததால் வெளியே செல்ல முடியாமல் மீண்டும் இந்த 100 பீஸ் பஸில் செய்தோம். சென்ற முறை போல் நானும் தீஷுவும் ஒரு டீம், அப்பா தனி டீம். நாங்கள் இருவர் என்பதால் வேகம் அதிகம் என்று நினைக்கக் கூடாது. தீஷுவின் தான் எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம் பொறுமையை சோதித்துவிடும். இருந்தாலும் எங்கள் கூட்டாணியே பாதிக்கு மேல் சேர்த்தோம். அன்று போல் இன்றும் தீஷு அப்பாவை வெறுப்பேத்திக் கொண்டேயிருந்தாள். சென்ற முறை போட்டோ எடுக்க முடியவில்லை. இந்த முறை போட்டோ எடுக்கும் முன் தீஷு அதன் மேல் படுத்துவிட்டாள். பஸில் கிட்டத்தட்ட நான்கு அடி.








தீஷுவிற்கு இப்பொழுது செயல்முறைகளை விட பேப்பரில் செய்யும் வொர்க் ஸீட்டுகளில் விருப்பமிருப்பதால், http://www.prekinders.com/ மெய்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த Pattern Blocks பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷம். ஏனென்றால் எங்களிடம் இருக்கும் Blocks க்கு இந்த படங்கள் பொருத்தமாக இருக்கும். எங்களிடம் இருக்கும் படங்களில் வண்ணங்கள் இருக்கும். அதனால் வண்ணங்கள் இல்லாத படங்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டோம். தீஷு நன்றாகச் செய்தாள். முடித்தவுடன் படங்கள் இல்லாமல் வடிவங்கள் வைத்து வெவ்வேறு வடிவங்கள் செய்து கொண்டிருந்தோம். Visual discrimination க்கு ஏற்றது

கவர்ந்த தருணங்கள் 15/11/2009

1. தீஷு ஒரு மீன் பொம்மை எடுத்து வ‌ந்து,

"அம்மா, இந்த‌ மீன் பெய‌ர் தெரியுமா?"
"தெரிய‌லையேடா"
"ஸ்வைன் ஃபிஷ்"

2. வீட்டிற்குத் தேவையான‌ பொருட்க‌ள் வாங்க‌ வேண்டிய‌ லிஸ்ட்டை எழுதி வைத்திருப்போம். அதில் தீஷு OPAT என்று எழுதி வைத்திருந்தாள். அப்பா,
"என்ன‌ வாங்க‌ணுமினு எழுதியிருக்க‌?"
"O says ஆ, ஆ வாங்க‌ணுமினு எழுதியிருக்கேன்..
சிறுது நேர‌ங்க‌ழித்து அவ‌ளாக‌வே, O says ஆ.., ஆரெஞ்ச் வாங்கணுமினு எழுதி வைத்திருக்கிறேன் என்றாள்.

3. அப்பா பிரெஷ் செய்து விடும் பொழுது,
"எங்க இரண்டு பேருக்கும்(தனக்கும் தீஷுவிற்கும்) எல்லாம் தெரியும்.. இரண்டு பேரும் நோபல் பிரைஸ் வாங்க போகிறோம்.. ஏண்டா தீஷு"
(எங்கே தன்னை தனியா அனுப்பிவிடுவார்களோ என்று பயந்து) "வாங்க நீயும் கூட வருவியா?"
"ஆமாடா"
"சரி வா..இப்பவே போய் வாங்கிட்டு வந்திடுவோம்"
"சும்மா குடுக்க மாட்டாங்க.. ஏதாவது புதுசா கண்டுபிடிச்சாத்தான் கொடுப்பாங்க"
அனைவரும் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க,சில நிமிடங்களில் தீஷு ஓடி வந்து
"கண்டுபிடிச்சிட்டேன்.. கண்டுபிடிச்சிட்டேன்"
என்ன என்று பார்த்தால், நான் ஒரு புது பஸில் வாங்கி வைத்திருந்த கவர். அவளைப் பொருத்தவரை பார்த்திராத புதிய பொருள்.. கண்டுபிடித்து எடுத்து வந்திருக்கிறாள் நோபால் பரிசு வாங்குவதற்காக..

Monday, November 9, 2009

பென்சில் சீவி விட்டு...

தீஷுவிற்கு ஒவ்வொரு வாரயிறுதியிலும் கலரிங்கோ அல்லது எழுதுவோ கொடுப்பர். இந்த ஞாயிறு அவள் கலர் செய்யும் பொழுது அவள் டப்பாவிலிருந்த அனைத்து கலர் பென்ஸில்களும் கூர்மையாக இல்லாததைக் கவனித்தேன். அனைத்தையும் சீவி முடித்தப்பின் நிறைய துகிள்கள் (Pencil Scrap) இருந்தன. அதை வைத்து கோலாஜ் செய்தோம். முதலில் ஒரு ஹார்ட் வரைந்து கொடுத்தேன். அதன் மேல் அவளை கம் தடவ செய்து, அதன் மேல் தூவி விட்டோம். பின் காகிதத்தைத் தட்டி அதிகமுள்ளதை எடுத்து விட்டோம். தீஷு மேலும் மேலும் பல வடிவங்கள் வரைந்து செய்து கொண்டிருந்தாள். அடுத்து துகிளை வைத்து அதன் ஓரத்திலுள்ள வண்ணத்திலிருந்து அது எந்த பென்ஸிலிலிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் விருப்பமாகச் செய்தாள். மொத்தத்தில் அரைமணி நேரம் சேர்ந்து பொழுதைக்கழிக்க இந்தத் துகிள்கள் உதவின.




தீஷு இன்று Sharper உபயோகிக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள். சீவி முடித்தவுடன், அதை எடுத்துக் கொண்டு, இதே மாதிரி ஒட்ட வேண்டும் என்று நாங்கள் அன்று எவ்வாறு ஆரம்பித்தோமோ அதே வரிசையில் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

Saturday, November 7, 2009

ஆப்பிள் வாங்கலையா ?? ஆப்பிள்...

தீஷுவின் ஆர்வம் இப்பொழுது கற்பனை விளையாட்டுகளின் மேல் (Creative play).அவளின் ஆர்வத்திற்கு தகுந்தாற் போல் எங்கள் விளையாட்டுகளை மாற்றி அமைத்துக் கொண்டோம். அதில் ஒன்று மார்க்கெட் விளையாட்டு. ரூபாய் நூறு, பத்து, ஐந்து, இரண்டு, ஒன்று என்று எடுத்துக் கொண்டோம். சில விளையாட்டு காய்கறி ஆப்பிள், ஆரெஞ்ச், கிரேப்ஸ், முட்டை கோஸ் போன்றன எடுத்துக் கொண்டோம். முதலில் தீஷுவிற்கு வாங்குபவர்கள் பணம் கொடுக்க வேண்டும், விற்பவர்கள் காய்கறி கொடுக்க வேண்டும் என்று புரிய வைக்கவே நேரம் எடுத்தது. அவளுக்கு கைப்பையையும் அவள் எடுத்து வர வேண்டும், பணமும் அவள் கொடுக்க வேண்டும், காயையும் அவள் கொடுக்க வேண்டும். விளக்கியப்பின் நன்றாக விளையாண்டாள். அவள் தான் வாங்குபவள். ஆப்பிள் எவ்வளவு என்றாள். பத்து ரூபாய் என்றவுடன் பத்து ரூபாய் எடுத்துக் கொண்டே "ஆப்பிள் அடிப்பட்டு இருக்கு.. வேற ஆப்பிள் தாங்க.." என்றாள்... பிழைத்துக் கொள்வாள் என்று நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறாக அவள் காய்களை எடுத்துச் சென்று சமைப்பது வரை எங்கள் விளையாட்டு தொடர்ந்தது. இரண்டு ஐந்து பத்து எனவும், ஐந்து ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் என விளக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பணத்தைப் பிரிக்கவும், கேட்கும் பணத்தை சரியாக எடுத்துக் கொடுக்கவும் பழகிக்கொண்டாள். எங்கு சென்றாலும் கார்ட்டு கொண்டு வாங்குவதால், பணம் கொடுத்தால் தான் பொருள் கிடைக்கும் என்பதை விளையாட்டுகள் மூலம் விளக்க வேண்டிய நிலை.. என்ன செய்வது?

இப்பொழுது நாங்கள்...

எதுவும் செய்வதில்லை. தீஷுவிற்கு இப்பொழுது எந்த அக்டிவிட்டீ செய்வதற்கும் விருப்பம் இருப்பதில்லை. நானும் அவளை வற்புறுத்துவதில்லை. குழந்தை எப்பொழுதும் எதையாவது கற்றுக் கொண்டேயிருக்கும். ஒன்றில் விருப்பமில்லையென்றால், அந்த ஒன்று குழந்தைக்கு மிகவும் எளிதாகவோ அல்லது மிகவும் கடினமானதாகவோ இருக்கிறது என்று அர்த்தம். தீஷுவிற்கு மிகவும் கடினம் என்று சொல்ல முடியாது. ஏன்னென்றால் நாங்கள் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் அதிக வேறுபாடுகள் கொண்ட ஆக்டிவிட்டீஸ்களை அறிமுகப்படுத்தவில்லை. ஆகையால் செய்வது அனைத்தும் அவளுக்கு எளிதாக மாறிவிட்டது என்று புரிந்தது.

நான் பெரிதும் பின்பற்றிவது - Basic Montessori activities under Five by David Gettman. முதல் முறை படித்த பொழுது ஒன்றும் புரியவில்லை. ஆனால் நிறைய விஷயம் இருக்கிறது என்று தெரிந்தது. நான்கு ஐந்து முறை படித்தப்பின்பே புரிய ஆரம்பித்தது. ஒரு உதாரணம் - குழந்தைக்குப் புத்தகத்தைப் பாதுக்காப்பாக பயன்படுத்தச் சொல்லிக் கொடுக்க கிட்டத்தட்ட 3 பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தக்த்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏழு பிரியடு (period) இருக்கும் எனவும் ஒவ்வொரு பிரியடிலும் என்ன சொல்லித் தரவேண்டும் எனவும் எந்த வரிசையில் சொல்லித்தரவேண்டும் என்றும் விளக்கப்பட்டுயிருக்கும். ஒவ்வொரு பிரியடிலும் Pratical Life, Sensorial, Language, Maths மற்று Culture என ஐந்து பிரிவுகள். நான் அனைத்து ஆக்டிவிட்டீஸின் தலைப்பையும் ஒரு நோட்பாடில் டைப் அடித்து வைத்திருக்கிறேன். ஆனால் அனைத்தையும் இங்கு போடலாமா என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட அனைத்து தகவல்களும் இந்த தளத்திலுள்ளது.

நாங்கள் இப்பொழுது பிரியடு இரண்டில் இருக்கிறோம். பிரியடு ஒன்றில் சில ஆக்டிவிட்டீஸ் செய்து முடிக்கவில்லை. புதிதாக செய்ய ஆரம்பிக்கும் பொழுது தீஷுவிற்கு ஆர்வம் மறுபடியும் வரும் என்று நம்புகிறேன்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost