நாளைக்கு இங்கிருந்து கிளம்புகிறோம். ஒரு வாரமா பெட்டி அடுக்குகிறோம் அடுக்குகிறோம் அடுக்கிக் கிட்டே இருக்கிறோம். எவ்வளவு பொருட்கள் சேர்த்து இருக்கிறோமா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பொருட்கள் வாங்கிறப்ப எல்லாம் என் கணவர் கேட்பார் "உபயோகமாக இருக்குமா?" என்று. மண்டையை ஆட்டிக் கொண்டே வாங்கியதன் பலன் கிட்டத்தட்ட 20 மூட்டை பொருட்களைத் தூக்கி போட்டு ஆகிவிட்டது. இன்னும் நான்கு ஐந்து மூட்டைகள் போட வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். உணவு பொருட்கள், தீஷு பொம்மைகள் போன்றவை நண்பர்களுக்கு கொடுத்து விட்டோம். அதனால் யாரோ உபயோகப்படுத்துகிறார்கள் என்ற எண்ணம். ஆனால் புது புது டிரெஸ் எல்லாம் தூக்கி போடும் பொழுது மனதில் சங்கடம். நம் நாட்டில் எத்தனையோ பேர் மாற்று துணி இல்லாமல் இருக்கிறார்கள் நாம் எப்படி புதியதைத் தூக்கிப் போடுகிறோமே என்று. வேறு வழியில்லை. ஒவ்வொரு முறையும் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். கடைசியில் அவரையே (கொலு பொம்மை, வழிப்பாட்டு உருவங்கள்) போய் கோயிலில் வைத்து விட்டு வந்து விட்டோம்.
தீஷுவின் பொம்மைகளைக் கொடுக்கும் பொழுது எனக்கே வருத்தமாக இருந்தது. அவள் பார்த்துக் கொண்டே இருந்தாள். நம்ம வேற வாங்கலாம் என்றவுடன் சரி என்று சொல்லிவிட்டாள். எதற்காக இவ்வளவு பொம்மைகள் வாங்கினோம் என்றே எனக்குத் தெரியவில்லை. ஸோபா எடுத்துக் கொண்டு போகும் பொழுது, "அங்கிள் வீட்டில் ஸோபா இல்லையா அம்மா?" என்றாள். ஆமாம் என்றவுடன், எடுத்துக் கொள்ளட்டும் என்று சொல்லிவிட்டாள்.
தீஷுவிற்கு ஒரு வாரமாக உடம்பு சரியில்லை. வாந்தி, ஜலதோஷம், இருமல் என மிகவும் கஷ்டப்படுகிறாள். ஒரு வாரமாக வெறும் விட்டமின் தண்ணி மட்டுமே ஆகாரம். Flightடில் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. அதற்குள் சரியாக வேண்டும் என்று நினைக்கிறேன்.
இருபத்தி எட்டாம் தேதி காலையில் பெங்களூர் வந்து விடுவோம். வந்தவுடன் மதுரை போய்விடுவேன் என்று நினைக்கிறேன். அதற்கு அப்புறம் நெட் கனெக்ஷன் வந்தவுடன் தான் எழுத முடியும். எப்படியும் ஒரு மாதமாகலாம் என்று நினனக்கிறேன். A short break..
Games to play with 3 year old without anything
2 years ago