Friday, July 19, 2013

நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைகளுக்காவது..

என் சிறு வயதில் காசு கொடுத்து வாங்கிய விளையாட்டுப் பொருள்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நமக்குக் கிடைக்காதது நம் குழந்தைக்காவது கிடைக்க வேண்டும் என்று தீஷுவிற்கு நிறைய‌ விளையாட்டுப் பொருட்கள் வாங்கி குவித்து, அதனைத் தொடவே மாட்டேனென்கிறாள் என்று நான் குறைப்பட்டதுண்டு.

குறைவு என்பதே நிறைவு என்பது குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களுக்கு முற்றிலும் உண்மை.  சில ஆண்டுகளில் நிறைய விளையாட்டுப் பொருட்கள் குழந்தைக்குத் தேவையில்லை என்பது புரிந்தது. அதனால் இந்த முறை சம்முவிற்கு மிகவும் தேவையானதைத் தவிர வேறு எதுவும் வாங்கவில்லை.

மேலும் அவளிடம் இருக்கும் பொருட்களிலும் இரண்டு மட்டும் அவள் கண்ணில்படும் படி வைத்துவிட்டு மற்றதை உள்ளே எடுத்து வைத்துவிடுவோம். ஒவ்வொரு வாரமும் இரண்டு பொருட்கள் மாற்றி வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் சில நேரங்களில் இரண்டு மூன்று வாரங்களில் தான் மாற்றுகிறோம்.

அவள் விளையாடுவது பொதுவாக விளையாட்டுப் பொருட்களுடன் அல்ல. நான் மிகவும் சாதாரணமாக நினைக்கும் பொதுவான விஷயங்கள் அவளுக்கு விளையாட்டுப் பொருட்கள் கொடுக்காத மகிழ்ச்சி தருகின்றன. அவற்றில் சில.

1. வெளியில் நடந்து செல்வது : பொதுவாக பகல் நேரத்தில் 8 முதல் 10 மணி நேரம் வீட்டில் அடைந்து கிடக்கும் அவளுக்கு மிகவும் விருப்பமானது வாக்கிங். தானாக நடக்க வேண்டும் என்று அடம் பிடித்து நடந்து, ஒவ்வொரு புதிய பொருளுக்கும் நின்று, தொட்டு ரசித்து வருகிறாள். இப்பொழுது எங்களுக்குப் பிடித்த பொழுது போக்கு வாக்கிங்.



2. தண்ணீர் : அவளுக்கு நிறைய தண்ணீர் இருக்க வேண்டும் என்பது கூட இல்லை. வாட்டர் பலூன், பாட்டிலிருந்து வடியும் தண்ணீர், தரையில் தெளித்து இருக்கும் தண்ணீர் என்று அனைத்தும் இஷ்டம்.



3. சோப்பு ஊதி (Bubbles) : அவளால் ஊத முடியாவிட்டாலும், அக்கா ஊதுவதைப் பார்ப்பதிலும் பறக்கும் பபிள்ஸைப் பிடிப்பதிலும் விருப்பம்.

4. வேடிக்கைப் பார்த்தல் : ஜன்னல் வழியாக அசையும் செடிகளைப்  பார்ப்பதில் விருப்பம் அதிகம். அங்கே இருக்கும் பொருட்களின் பெயர்களைச் சொல்ல சொல்ல சில நேரங்களில் ஓரிரு வார்த்தைகள் அவளிடமிருந்து வரும்.



5. புத்தகம் : புத்தகத்தை தலை கீழாக வைத்து படிப்பதில் ஆர்வம் அதிகம். நாங்கள் அருகில் இல்லாவிட்டாலும் அவள் வாசித்துக் கொண்டுயிருக்கிறாள்.

6.பாட்டு : யார் பாடினாலும் (நான் பாடினால் கூட) பிடிக்கும். என்ன பாடினாலும் பிடிக்கும். சம்மு பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஸ்லோகத்தைப் பாடலாகப் பாடி தீஷுவிற்கு கற்றுக் கொடுத்தேன். இன்றும் அந்தப் பாடல் தான் சம்மு தூங்குவதற்கு பாடிக் கொண்டிருக்கிறேன்.

7. சிறு விளையாட்டுக்கள் : முகத்தை கை வைத்து மறைப்பது, ஒளிந்து கொள்ளுதல், பொருட்களை ஒளித்து வைத்து விளையாடுதல், நண்டு வருது நரி வருது போன்ற விளையாட்டுக்கள் விருப்பமானவை. ஆனால் திரும்ப திரும்ப விளையாடி நாங்கள் சோர்ந்து விடுவோம்.

8. சமையலறைப் பொருட்கள்: காலை வேளையில் பெரும்பாலும் கடுகு டப்பாவையோ அல்லது வெந்தய டப்பாவையோ ஆட்டி கிலுகிலுப்பையாக மாற்றிக் கொள்கிறாள். ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த பால், காய்கறித் தோல் போன்றவற்றின் குளிர் பிடிக்கிறது. அவைகளைப் பாத்திரத்தில் போட்டு எடுத்து விளையாடுகிறாள்.

தங்கள் வீட்டுச் சுட்டிகள் வாங்கிய விளையாட்டுப் பொருட்கள் இல்லாமல் எவ்வாறு விளையாடுகிறார்கள்?

9 comments:

  1. உங்கள் குழந்தையைக் கண்டு வியக்கிறேன், சிறு வயதிலேயே ஆரோக்கியமாக நடை பயில்கிறாள், இயற்கையை ரசிக்கிறாள். மேலும் ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி மற்றும் உளப்பயிற்சி சார்ந்த விளையாட்டுக்களை ஊக்குவிக்கலாம், வீடியோ கேம்கள், தொலைக்காட்சி பழக்கத்தை குறைத்து கொடுக்க வேண்டும். சின்னஞ் சிறுசுகளின் உலகம் உண்மையில் ரெம்ப பெரிசு தான்..

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை நிரஞ்சன் தம்பி. உங்கள் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி..

      Delete
  2. ரசனையை ரசித்தேன்... ஒரு சில வயதிற்கு மேல் விளையாட்டுப் பொருட்கள் பிடிப்பதில்லை என்பதும் உண்மை... அவர்கள் போக்கிலே நாமும் குழந்தை ஆகி விட்டால், அவர்களுக்கு அதை விட சந்தோசம் எதுவுமில்லை என்பதும் உண்மை...

    ReplyDelete
  3. என் குழந்தைகளுக்கு சமையலறையே விளையாட்டு மைதானம் ..

    அவர்களுக்காக அவர்களுக்கு எட்டும் தொலைவு வரை காலியாக வைத்திருப்பேன் ..

    அதில் ஒளிந்து விளையாடுவார்கள்..

    பாத்திரங்களை எடுத்து தண்ணீர் உற்றி கரண்டியால் தட்டி ஜலதரங்கம் வாசித்து விளையாடுவது அவர்களுக்கு மிகவும் இஷ்டம் ..

    வாங்கிய விளையாட்டுப் பொருட்கள் சீண்டப்படாமல் கிடக்கும் ..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா தங்கள் வருகைக்கு.. உங்கள் அனுபவத்திலிருந்து எங்களைப் போன்றவர்கள் கற்றுக் கொள்ள அதிகம் இருக்கிறது.

      Delete
  4. எனது மகள் தவழ ஆரம்பித்ததில் இருந்தே நேரே செல்லும் இடம் சமையலறை.... பாத்திரங்களை இழுத்து வந்து அதனுடன் விளையாடிக்கொண்டிருப்பாள்..... ஒரு முறை வாணலியை பிடித்து இழுத்து வந்து அதால் டி.வி. ஸ்டேண்ட் [கண்ணாடி] அடித்துக் கொண்டிருந்தாள்....:)

    குழந்தைகள் விளையாட்டு உலகம் அலாதியானது..... எதைக் கொண்டும் விளையாட அவர்களுக்குத் தெரிகிறது! :)

    ReplyDelete
    Replies
    1. //ஒரு முறை வாணலியை பிடித்து இழுத்து வந்து அதால் டி.வி. ஸ்டேண்ட் [கண்ணாடி] அடித்துக் கொண்டிருந்தாள்....:)//

      ஆமாம் வெங்கட். இது போல் ஏதாவது செய்து நம் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து விடுவார்கள்.

      //எதைக் கொண்டும் விளையாட அவர்களுக்குத் தெரிகிறது! :)//

      உண்மை வெங்கட்.. நன்றி உங்கள் வருகைக்கு..

      Delete
  5. என் பிள்ளைக்கு காபி பில்டர் ரொம்பப் பிடிக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர். காபி பில்டர் இருந்தால் போதும். தண்ணீரைக் கொட்டி அது இறங்குவதைப் பார்த்துக் கொண்டே இருப்பான். எனக்கு ஒரு டம்ப்ளர் காபி கிடைக்கும் அவ்வப்போது!
    அடுத்தாற்போல அரிசி, அளக்க ஆழாக்கு!

    Follow by email - gadjet சேருங்கள் ப்ளீஸ். என்னுடைய ஈமெயில் கொடுத்தால் உங்கள் பதிவுகள் எனக்கு வந்துவிடும். நிறைய படிக்காமல் விட்டிருக்கிறேன். தொடர்ந்து படிக்க சௌகரியமாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நானும் காபி பில்டர் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. செய்து விடுகிறேன்.இமெயிலில் பெற சேர்த்துவிட்டேன். நன்றி அம்மா!!!

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost