விபத்துப் பற்றிய பதிவில் கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்! இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டியிருக்கிறோம். கார் இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடியாத சின்ன ஊரில் இருப்பதால், மூன்று நாட்களில் புது கார் வாங்கி விட்டோம். சம்மு மறந்து விட்டாள் என்று நினைக்கிறேன். தீஷு தான் எப்போதாவது பேசிக் கொண்டிருப்பாள். எனக்குத் தான் எந்த கார் பக்கத்தில் வந்தாலும் பயமாக இருக்கிறது. என்னால் இப்பொழுது நடக்க முடிகிறது. வலது காலில் வீக்கமும் வலியும் இன்னும் இருக்கின்றன. ஆனால் குறைந்து கொண்டு இருக்கின்றன. முழுவதும் சரியாக ஒன்று இரண்டு வாரங்கள் ஆகலாம்.

போலிஸ் ரிப்போர்ட் வந்துவிட்டது. ஒரு பெண் ஓட்டியிருக்கிறார். ஒரு நொடி கீழே பார்த்தேன், வண்டி அடுத்த லேன் போய் இடித்துவிட்டது என்று குறிப்பிட்டு இருக்கிறார். எங்களை இடித்து விட்டு, இரண்டு மைல்கள் சென்று நிறுத்தி, அரை மணி நேரத்திற்கு பிறகு அவரே போலிஸை அழைத்து இருக்கிறார். அவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் போலிஸ் ரிப்போர்ட்டில் இருக்கிறது. அவற்றைப் பார்த்தவுடன் கோபமாக வந்தது. ஆனால் போலிஸை அழைக்கும் முன், அந்த அரை மணி நேரம் எங்களை விட அவர் பயந்திருப்பார், கலங்கியிருப்பார் என்று நினைத்தவுடன் பாவமாக இருந்தது. அவர் மீது hit and run முத்திரை வேறு விழுந்திருக்கிறது.
விபத்து பற்றி போதும். நல்ல விஷயங்களை பேசுவோமா? நான் மீண்டும் சென்ற வாரம் வேலையில் சேர்ந்து விட்டேன். நானும் என் கணவரும் ஒரே கம்பெனியில் தான் இது வரை வேலை செய்திருக்கிறோம். இப்பொழுதும் ஒரு பில்டிங் தான். ஆனால் நான் அவருக்கு client. வீட்டிலும் அதையே சொல்லி அவரை வெறுப்பேற்றுவதே எனக்கு பொழுதுபோக்காக இருக்கிறது. குழந்தைகளை என் தோழி பார்த்துக் கொள்கிறார். அவரிடம் ஏற்கெனவே பழகி இருப்பதால், குழந்தைகளுக்கு சிரமமாக இல்லை. புதிய சூழ்நிலையை எளிதாக பழகிக் கொண்டார்கள்.
எங்கள் தொட்டித் தோட்டத்தை உங்களிடம் காட்ட வேண்டும்.
 |
புதினா தான் எங்கள் முதல் செடி |
 |
அப்புறம் கொத்தமல்லி |
 |
வெந்தயம் |
 |
வெந்தய அறுவடை |
 |
பீன்ஸ் |
 |
வளர்ந்து வரும் தக்காளி செடி |
அடுத்த வருட கோடையில் எங்கள் தொட்டித்தோ ட்டத்தை விரிவாக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. விரிவு செய்தால் எழுதுகிறேன்.