1. தீஷு, ஹிந்தி புத்தகத்தை ஷோபாவில் வைத்திருந்தாள். சம்மு, என்னிடம் எடுத்து வந்து, "அம்மா, இந்தா 'தும்' (तुम) புஃக், எடுத்து உள்ள வை"
2. தீஷு காலையில் அப்பொழுது தான் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டிருந்தாள். சம்மு அவளிடம் ஓடி, "அக்கா, நீ தமிழ் ஹோம்வொர்க் செய்யப் போறீயா?" என்றாள். வாரம் ஒரு முறை மட்டும் தான் தமிழ் வீட்டுப்பாடம் என்பதால், என்ன கிழமை என்று தீஷு யோசித்து, "இன்னைக்கு இல்லை, இவ வேற சும்மா" என்றாள் கடுப்புடன்.
3. காந்த ஃப்ளாஸ்டிக் பூஜ்ஜியத்தை எடுத்து இது என்ன என்றேன் சம்முடன், யோசிக்காமல் சொன்னாள், "- 2 (minus 2)"
4. சமையலறையில் வந்து அலமாரிகளை எண்ணிக் கொண்டிருந்தாள், "1, 2,3..", முடித்தவுடன் என்னிடம்,"10 மில்லியன் இருக்கு" என்றாள்.
5. "அம்மா, எனக்கு முருகன் சாப்பிடக் கொடு" என்றாள். சுட்டிக் காட்டியது முறுக்கை.
6. கோயிலில் அப்பா, "சாய் பாபா" என்றவுடன் "ஹாய் பாபா" என்று திரும்ப சொன்னாள்.
7. இரண்டு வயது செக்கப்பிற்கு டாக்டரிடம் கூட்டிப் போகும் முன்,"ஒரு ஆன்ட்டி உன் வெயிட், தலை, ஹையிட் எல்லாம் அளப்பாங்க..நீ சிரிச்சிக்கிட்டே இருக்கணும்" என்று சொல்லி வைத்தேன். பத்து நிமிடம் கழித்து, அவளுக்கு ஷூ போட்டுக் கொண்டே, என்ன செய்வ என்றவுடன், அழுத்தம் திருத்தமாக "அழுவேன்" என்றாள்.