தற்கால சந்ததியினர் மட்டுமல்லாது நாம் அனைவரும் தற்பொழுது இந்தப் பொருளால் அதிகம் பாதிக்கப்படுகிறோம். அந்தப் பொருள் இரசாயனம் (கெமிக்கல்ஸ்).
நாம் உட்கொள்ளும் உணவினால் மட்டுமல்லாது நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் மூலமாகவும் நம்முள் செல்கிறது. ரசாயனத்தால் பெரியவர்களே பாதிக்கப்படும் பொழுது குழந்தைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
இராசயனத்தைப் பற்றிய விழிப்புணர்வு சமீபத்தில் அதிகரித்து வருகிறதால் நாங்களும் சில மாற்றங்கள் செய்து கொண்டோம். உண்ணும் உணவிற்கு முடிந்த வரை ஆர்கானிக்ஸ் பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். ப்ளாஸ்டிக் உபயோகித்தால் தீமை என்று குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் டப்பா வரை கண்ணாடியில் மாற்றிவிட்டேன். டிபன் பாக்ஸ் எவர்சிலவர், தண்ணீர் பாட்டில் அலுமினியம் என்று பயன்படுத்துவதால் ரசாயனத்திலிருந்து முடிந்தவரை என் குழந்தைகளை காத்து வருகிறோம் என்று நினைத்திருந்தேன். பல வகைகளில் அவர்கள் ரசாயனத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்திருந்தாலும் நம்மால் முடிந்தவரை செய்திருக்கிறோம் என்கிற திருப்தி இருந்தது.
சமீபத்தில் தீஷுவை டாக்டரிடம் அழைத்துச் சென்று இருந்தோம். அவளுக்கு லாவண்டர் மணத்தில் எந்த பொருளும் உபயோகப்படுத்த வேண்டாம் என்று எங்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். நான் தீஷுவிற்கு ஜான்சன் & ஜான்சன் ஆறு வயது வரை பயன்படுத்தி வந்தேன். அதில் அதிக அளவில் ரசாயனம் இருப்பது தெரிந்தவுடன் அவினோவிற்கு (Aveeno) மாறி திருப்தி அடைந்துவிட்டேன். ஜான்சன் & ஜான்சனில் லாவண்டர் (Lavender) மணத்தில் தான் பயன்படுத்தினோம். அப்பொழுது ஆறு வருடங்கள் பயன்படுத்திய பொழுது அவளுக்குள் என்ன என்ன தீமைகள் செய்திருக்குமோ என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. நாம் உபயோகப்படுத்தும் ஷாம்பூ, சோப், க்ரீம் முதலியன நம் உடம்பிற்குள் செல்கின்றன. உணவில் இருக்கும் ரசாயனத்திற்கு கொடுக்கும் அவசியத்தை அழகு சாதனப் பொருட்களுக்குக் கொடுப்பதில்லை. அது நம் உடம்பிற்குள் நேரடியாக செல்லாத்தால் வரும் மெத்தனமாகவும் இருக்கலாம்.
சம்முவிற்கும் அவினோ உபயோகப்படுத்தி வந்தேன். இப்பொழுது அவினோவிலும் அதிக இராசனம் என்று கேள்விப்பட்டேன். சம்முவின் தோல் சற்று வித்தியாசமானது. தலையில் தேங்காய் எண்ணெய் தேய்தாலும் உடம்பு முழுவதும் பொரி பொரியாக வந்து தடித்துவிடும். தேங்காய் எண்ணெயினால் வருகிறது என்பதை கண்டுபிடிக்க எங்களுக்கு ஒரு வருடம் ஆனது. தெரியாததால் எண்ணெய் தேய்துக் கொண்டே உடம்பிற்கும் க்ரீம் தடவி வந்தோம். சில மாதகங்கள் முடிக்கு எண்ணெய் காட்டாமல் இருந்தோம். இப்பொழுது ஆலிவ் ஆயில் ஒத்துக் கொள்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறோம்.
சம்முவின் இந்தத் தோல் பிரச்சனையினால் என்னால் பயத்த மாவு என்று முழுதாக இயற்கைக்குப் போக முடியாது. இங்குள்ள சீதோஷன நிலைக்கு சீயக்காய் முதலியன உபயோகப்படுத்த முடியவில்லை.அழகு சாதனப்பொருட்களிலும் ஆர்கானிக் தேடத் தொடங்கினேன்.
அப்பொழுது தான் டீப் ஸ்கின் டேட்டாபேஸ்( Deep Skin database) என்னும் இணையதளத்தைப் (http://www.ewg.org/skindeep/) பற்றி தெரிந்து கொண்டேன். அழகு சாதனப் பொருட்களுக்கு, அதன் ரசாயனத்தின் அடிப்படையில் மதிப்பெண் கொடுத்திருக்கிறார்கள். 0 முதல் 10 வரை கொண்ட பட்டியலில் 0 என்றால் உடம்பிற்கு கெடுத்தலான இராசயனம் இல்லை என்று அர்த்தம்.
அதில் தேடி, உபயோகித்தவர்களின் கருத்துகள் படித்து Earth mam angel baby Shampoo ,California baby Shampoo மற்றும் Babo botanicals தேர்தெடுத்தோம். அதில் தேங்காய் மற்றும் லாவண்டர் இருக்கக் கூடாது என்று முடிவு செய்து Babo botanicals ஆர்டர் செய்தாகிவிட்டது. இதற்கு எங்களுக்கு இரு வாரங்கள் ஆனது.
வீட்டில் ஒருவர் உபயோகப்படுத்தும் சோப்பிற்கு மட்டுமே இந்த மெனக்கிடல் என்றால் ஒவ்வொருத்தர் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் மாற்ற வேண்டும் என்றால் யோசித்துப் பாருங்கள்!
நான் உபயோகப்படுத்திய தள முகவரி மீண்டும் ஒரு முறை : http://www.ewg.org/skindeep/
இராசயனத்திலிருந்து உங்கள் குழந்தைகளையும் குடும்பத்தவரையும் எவ்வாறு பாதுகாக்கிறீர்கள்?
எங்களின் முந்தைய அனுபவ பகிர்தல்கள்
1. தொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை
2. குழந்தைகள் நுகர்வுச்சந்தை
1. தொலைக்காட்சி அனுபவங்கள் by சந்தனமுல்லை
2. குழந்தைகள் நுகர்வுச்சந்தை