பப்புவுக்கு
நாலரை வயதாகும் வரை வீட்டில்
தொலைக்காட்சி இருந்தது.
அவளோடு
சேர்ந்து நானும் டோராவெல்லாம்
பார்த்திருக்கிறேன்.
"குளோரியாவின்
வீடு"
பப்புவை
விட எனக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும்,
ஆயாவுக்காக
செய்திகளும்,சீரியல்களும்(ஒன்றிரண்டு),
வீட்டுக்கு
வரும் உறவினர்களுக்காக
அவ்வப்போது பாடல் சேனல்களும்
ஓடிக்கொண்டுதான் இருக்கும்.
ஒருசில
துள்ளல் பாடல்களுக்கு பப்புவும்
குதியாட்டம் போடுவாள்.
பிறகு,
அவளது
விளையாட்டை தொடர்ந்து விளையாடச்
சென்றுவிடுவாள்.
ஆனால்,
அதெல்லாம்
அந்த வயதில் பப்புவை அவ்வளவாக
டிஸ்டர்ப் செய்யவில்லை.அவளது
விளையாட்டின் மீது தான் கவனம்
இருக்கும்.
அப்போதெல்லாம்
பப்புவை கேர் டேக்கர் வைத்துதான்
கவனித்துக்கொண்டேன்.
அவருக்கோ
மதியத்தில் வரும் சீரியல்கள்
பார்ப்பதில் வெகுவிருப்பம்.
மதியம்
பப்பு பள்ளியிலிருந்து
வந்ததும்,
சீரியலை
பார்த்துக்கொண்டே உணவூட்டுவார்
என்று தெரியும்.
ஆனாலும்,
சீரியல்கள்
பார்ப்பதை தடை செய்யவெல்லாம்
நினைத்ததில்லை.
தொலைக்காட்சியை,
பப்பு
ஒரு பொருட்டாக நினைக்கவில்லை
என்பதும் காரணம்.
ஏதோ
ஒரு வாரயிறுதி என்று நினைக்கிறேன்.
பக்கத்துவீட்டு
பெண் வீட்டுக்கு வந்தார்.
அவரை
பார்த்ததும் பப்பு "அவங்க
கெட்டவங்க,
ஆச்சி?"
என்றாள்.
எனக்கோ
அதிர்ச்சி.அவரது
காதில் விழுந்துவிடக்கூடாதே
என்றும் பதட்டம்.
இத்தனைக்கும்,
அவர்
எங்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
"இல்லையே,
ஏன்
அப்படி சொல்றே"
என்றதும்,
"அவங்க
லிப்ஸ்டிக் போட்டிருக்காங்க.முடி
வைச்சிருக்காங்க டீவியில
வர்ற மாதிரியே இருக்காங்க"
என்றாள்.விசாரித்ததும்
உண்மை புலப்பட்டது.
"உதிரிப்பூக்கள்"
என்றொரு
மதிய நேரத்து சீரியல்.
அதில்,
குழந்தையை
கடத்துவதோ அல்லது ஏதோவொன்று...அதில்
வரும் வில்லி கேரக்டர் தலைமுடியை
நேர்ப்படுத்தி (ஸ்ட்ரெய்ட்டன்),முகத்தில்
மேக்கப்போடு வருமாம்.
பக்கத்துவீட்டுப்
பெண்ணும் தலைமுடியை நேர்ப்படுத்தி
விரித்து விட்டிருந்ததையும்,
லிப்ஸ்டிக்
போட்டிருந்ததையும்,
அந்த
வில்லி கேரக்டரையும் பப்பு
தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறாள்.
ஒருவரை
பார்த்ததும் "கெட்டவர்"
என்ற
எண்ணத்தை தோற்றத்தை பார்த்து
சொல்ல,
தொலைக்காட்சி
ஒரு சிறுகுழந்தைக்கும் கூட
கற்றுக்கொடுத்திருக்கிறது
என்பது ஒரு அதிர்ச்சி.
அதைவிட,
மேக்கப்போடு
அல்லது கொஞ்சம் மாடர்னாக
தோற்றத்தில் இருந்தாலும்
அவர்களை ஸ்டீரியோடைப்
செய்வதுபோல் "அவர்
நல்லவர் அல்ல"
என்ற
எண்ணத்தை தோற்றுவிப்பது
அபாயகரமானதாக இருந்தது.
சீரியலை
தொடர்ந்து பார்க்காவிட்டாலும்,
அது
பப்புவை ஈர்த்திருக்கிறது.
முக்கியமாக,
குழந்தைகள்
தொடர்புடைய எதுவாக இருந்தாலும்
அவர்களை ஈர்க்கிறது.
இதை
பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
பப்பு,
கண்ணகி
கதையை அறிந்துக்கொண்டபோது,
கண்ணகி
மதுரையை எரித்தது அவளுக்கு
அறவே பிடிக்கவேயில்லை.
"என்னை
மாதிரி குழந்தைங்களும் செத்து
போயிருப்பாங்களா"
என்பதே
அவளது கவலையாக இருந்தது.
சில
வருடங்களுக்கு முன்,
ஜப்பானில்
சுனாமி தாக்கியபோது,
'ஸ்கூல்ல
ஆன்ட்டி,
குழந்தைங்களோட
இருந்தாலும் அலை அடித்துகொண்டு
போய்விடுமா?
குழந்தைகள்
என்ன ஆவார்கள்,
எப்படி
காப்பாற்றப்படுவார்கள் '
என்பதே
அவளை வருத்தியெடுக்கும்
கேள்விகளாக இருந்தன.
இதில்,
சீரியல்களும்
பிஞ்சு மனதில் தங்கள் பங்குக்கு
விதை விதைப்பதை அனுமதிக்க
முடியவில்லை.
அதுமட்டுமல்ல,
சில
சமயங்களில்,
தொலைக்காட்சி
பார்த்துக்கொண்டே சாப்பிடுவதும்
வழக்கமாகி இருந்தது.
தொலைக்காட்சியை
அப்புறப்படுத்தியதற்கு இவை
மட்டுமே காரணமில்லை.
நான்
வேலையிலிருந்து வர தாமதமானால்,
தொலைக்காட்சி
நிறுத்துவாரற்று ஓடிக்
கொண்டேயிருக்கும்.
சுட்டி
டீவிதான்.
"பப்புதான்
நிறுத்த விடமாட்டேங்குது"
என்று
குற்றப்பத்திரிக்கை வாசிப்பார்
ஆயா.
என்னையும்
நிறுத்த அனுமதிப்பதில்லை.விடுமுறை
நாட்களில்,
உறவினர்கள்
வந்துவிட்டாலோ தொலைக்காட்சியை
கட்டுபடுத்தவே முடியாது.
இவையெல்லாம்
சேர்த்தே அந்த தைரியமான
முடிவை நோக்கி தள்ளின.
:)
இப்போது
கடந்த மூன்று வருடங்களாக
வீட்டில் தொலைக்காட்சி இல்லை.
ஆரம்பத்தில்,
நிறைய
நேரம் இருப்பது போல் இருந்தது.
முக்கியமாக
வீடு அமைதியாக இருந்தது.
நிறைய
பேச்சுகளும்,உரையாடல்களும்
இருந்தன.
முன்பும்
இப்படிதான் என்றாலும்,
தொலைக்காட்சியே
சுத்தமாக இல்லாமல் இருந்து
பார்த்தால் நான் சொல்ல வருவதை
புரிந்துக்கொள்ளலாம்.
தொலைக்காட்சியை
வெறித்துக்கொண்டு அவ்வப்போது
தானாகவே சிரித்துக்கொண்டிருக்காமல்,
சாப்பிடும்
நேரத்தில் பேசிக்கொள்ள
ஆரம்பித்தோம்.
என்ன
சாப்பிடுகிறோம் என்று ருசித்து
சாப்பிட முடிந்தது.
எண்ணங்களை/நிகழ்ச்சிகளை
பகிர்ந்துக்கொள்ளுதல் இயல்பாக
நடைபெற்றது.
வார
நாட்களில் கதை கேட்டுக்கொண்டும்
, வாரயிறுதிகளில்
சிறுவர்மணியின் தொடர்கதை/கதைகளை
வாசிப்பதை கேட்டுக்கொண்டோதான்
சாப்பிட்டாள்.
கடந்த
சில மாதங்கள் வரை தொடர்ந்தது,
இது.
(மாயமோதிரம்
முடிந்துவிட்டது!)
கைவசம்
நிறைய நேரம் இருந்ததால்,
புத்தகங்கள்
வாசித்தோம்.
வெளியே
சுற்றினோம்.
மாடிக்குச்
சென்று நிலவை,வானத்தை,நட்சத்திரங்களை
ரசித்தோம்.
விரைவாக
படுக்கைக்குச் சென்று விடுவதால்
தூங்கும் நேரமும் பாதிக்கப்படவில்லை.
முக்கியமாக
குழந்தைகளுக்கு 12
வயது
ஆகும்வரையாவது எட்டு மணி நேர
தூக்கம் மிக முக்கியம்.
பப்புவை
தூங்கும்போது எப்போதுமே
பாதியில் எழுப்பியதேயில்லை.
இதில்,
ஆயா
ரொம்ப கண்டிப்பானவர்.
அவளாகவே
எழுந்தால் உண்டு.
அதனை இப்போதுவரை
கடைபிடித்து வருகிறோம்.
அதனாலேயே,
அதிகாலையில்
சன்ரைஸ் பார்க்க செல்வதென்றால்
"நீயா
எழுந்தா போகலாம்"
என்று
சொல்லிவிடுவது.
வெளியூருக்குச்
சென்றாலும் இயன்றவரை இதையே
கடைபிடிக்கிறோம்.
ஆனாலும்,
தொலைக்காட்சிதான்
இல்லையேதவிர,
குழந்தைகளுக்கான
படங்களை பார்க்கிறோம்.
பொதுவாக,
இணையத்தில்
விமர்சனம் பார்த்துவிடுவேன்.
இரண்டு
மாதங்களுக்கு ஒரு முறை அல்லது
ஒரு மாதத்துக்கு ஒருமுறை
செல்வதுண்டு.
கடைசியாக,
நாங்கள்
பார்த்தது மான்ஸ்டர்
யுனிவர்சிடியும்,பாக்
மில்கா படமும்.
அதன்பிறகு
ஸ்மர்ஃப் வந்தாலும் நேரம்
கிடைக்கவில்லை.
அதோடு,
ஹார்டு
டிஸ்கில்,
குழந்தைகளுக்கான
கார்ட்டுன் படங்கள் சேகரிப்பும்
உள்ளது.
பப்புவுக்கு
பார்த்த படத்தையே பல தடவைகள்
பார்க்க வேண்டும்.
சில
சமயங்கள் நானும் உடன் இருக்க
வேண்டும்.
படத்தில்
அவளுக்கு பிடித்த இடங்களில்
அவளோடு சிரித்து அல்லது அவளை
திரும்பி பார்த்து புன்னகைத்து
என்று கம்பெனி தர வேண்டும்.
அதோடு,
கம்ப்யூட்டர்
விளையாட்டுகளும் உண்டு.
இவையெல்லாமே,
ஒருமணி
நேரம் அல்லது ஒன்றரை மணிநேரம்
வரை தொடரும்.
ஆனால்,
தினமும்
அல்ல.
வாரத்துக்கு
ஒருமுறை அல்லது இருமுறை.
தொலைகாட்சியை
தடுக்க முடிந்த அளவுக்கு
கம்ப்யூட்டரை தடுக்க முடியவில்லை.
வாரயிறுதிகளில்தான்
தினம் ஒரு மணிநேரம் ஐபேட்
என்ற ஏற்பாடு.
ஆனாலும்
அது ஒருமணிநேரத்தோடு நிற்பதில்லை.
டெம்பிள்ரன்னின்
ஓட்டத்தை பொறுத்து அதைத்
தாண்டியும் செல்வதுண்டு.
ஆனால்,
பலமாதங்கள்
வரை ஐபேட் தொடாமல் இருந்திருக்கிறோம்.
எனவே
ஐபேட் பப்புவின் நேரத்தை
விழுங்குவதில்லை.
ஹார்ட்
டிஸ்கில்,
குழந்தைகளுக்கான
படங்கள் பார்ப்பதை நாங்களே
விரும்பிதான் அனுமதித்திருக்கிறோம்.
தொலைகாட்சியைப்
போல் அதில் கமர்சியல்களோ
அல்லது தொடர்ந்து அடுத்து
பார்க்க வேண்டும் என்ற எண்ணமோ
வருவதில்லை.
முக்கியமாக,
விளம்பரங்களின்
மாயவலைக்குள் இதுவரை
விழாமலிருப்பது நன்மை பயப்பதாகவே
இருக்கிறது.
(எவ்வளவு
நாட்களுக்கென்று தெரியவில்லை!!)
நானும்
பப்புவோடு படம் பார்ப்பதோடு
சரி.பெரிதாக,
ஆர்வமில்லாததால்,
சினிமாவை
பார்ப்பதில்லை.
எனவே,
நானும்
பெரிதாக மிஸ் செய்வதில்லை.
தொலைகாட்சி
இல்லாததால்,
எதையும்
இழந்ததாகவும் நினைக்கவில்லை.
சொல்லப்போனால்,
நிம்மதியாக
இருக்கிறது.
இப்போது,
எங்கள்
வீட்டைப்பார்த்து,
பப்புவின்
நண்பர்கள் வீடுகளிலும்
பின்பற்ற ஆரம்பித்து
இருக்கிறார்கள்.
அவர்களும்,
இங்கு
வந்தால் கம்ப்யூட்டரை,
தொலைக்காட்சியை
தேடாமல் கூடி விளையாடுகிறார்கள்.
இப்படியெல்லாம்
இருப்பதால்,
பப்பு
ஏதோ தொலைக்காட்சியே பார்க்காத
மகாத்மா என்றெல்லாம் பொருளல்ல.
பப்புவுக்கு
சோட்டா பீம் ரொம்ப பிடிக்கும்.
ஊருக்குச்
சென்றால் சோட்டாபீம்தான்.
ஒன்றிரண்டு
நாட்கள்தானே என்று பெரிதாக
கண்டுகொள்வதில்லை.
அதோடு,
வீட்டில்
இருக்கும் நேரமும் குறைவு.
அவளது
இஷ்டத்துக்கு விட்டுவிடுவதால்
'பார்க்கவே
விடுவதில்லை'
என்ற
எண்ணம் பப்புவுக்கு வருவதில்லை.
சிலசமயம்,
யூடியுப்பில்
சோட்டாபீமும் பார்ப்பாள்.
ஆனால்,
யூட்யூபில்
வசதி என்னவென்றால்,
நேரத்தை
விழுங்காது.
அரைமணிநேரம்
என்றால் அவ்வளவுதான்.
இப்போது,
இதை
எழுதிக்கொண்டிருக்கும்போது
கூட அவள் கம்ப்யூட்டரைத்தான்
பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
ஆனால்,
என்ன
பார்க்கலாம் என்பது நம் கையில்
உள்ளது.
தொலைக்காட்சியில்
அப்படி இல்லை.
நாம்/குழந்தைகள்
என்ன பார்க்க வேண்டுமென்பதை
நாம் முடிவு செய்யும் வகையில்
இருப்பதுதான் வசதி.
டீவியில்
வருவதையெல்லாம் காணலாம்
என்பதையோ அல்லது நம் நேரத்தை
வேறுயாரோ எடுத்துக்கொள்வதையோ
அனுமதிக்க முடியவில்லை. மேலும்,
பப்புவுக்கு
எந்த சினிமா நடிகர்களையும்
இதுவரை தெரியாது.
அவளுக்குத்
தெரிந்த ஒரே நடிகர் வடிவேலுதான்.
அதுவும்
பெயரளவில்.
அவர்
எப்படியிருப்பார் என்று கூட
தெரியாது.
கடைசியாக
இருந்த ஒரு கேர் டேக்கர்
'வடிவேலு
இப்படி சொன்னார்,
அப்படி
செய்தார்'
வடிவேலு
ஜோக் சொல்லி உணவூட்டுவார்.
மற்றபடி,
போஸ்டரில்
கூட யாரையும் கண்டுபிடிக்க
தெரியாது.
ஒருமுறை,
'உனக்கு
தனுஷ் பிடிக்குமா?
சூர்யா
பிடிக்குமா'
என்று
யாரோ கேட்டார்கள்.
பப்பு
ஒரே ஙே!
:))))
ஏதாவது
ஹாபி கிளாசுக்குச் சென்றால்,
வெளியில்
அமர்ந்திருக்கும் மற்ற
அம்மாக்களோடு பேசுவதுண்டு.
சிலருக்கு,
இப்படி
தொலைகாட்சி இல்லாமல் வளர்ப்பது
உவப்பாக இருப்பதில்லை.
நேஷனல்
ஜ்யாகிரபி போன்ற சேனல்கள்
இருந்தால் குழந்தைகள் எளிதாக
கற்றுக்கொள்வார்கள்,
மேலும்,
தொலைகாட்சி
பார்ப்பதால்,
மொழியை
ஃபாலோ செய்வது எளிதாக இருக்கும்
என்றும் சொல்வார்கள்.
எனக்குதானே
தெரியும்,
இங்கு
என்னதால் நேஷனல் ஜ்யாகிரபி
இருந்தாலும் ஓடுவது என்னவோ
சுட்டி டீவியாகவோ அல்லது
நிக்காகவோ தான் இருக்கும்
என்று!
எனவே,
இப்போதுவரை
இப்படி இருப்பது நன்றாகத்தான்
இருக்கிறது.
இதைத்தாண்டி,
'தொலைக்காட்சி
வைத்துக்கொள்ளலாம்,
அம்மாவை
நச்சரிக்கலாம்'
என்று
பப்புவுக்கு தெரியவில்லையா
அல்லது இருப்பதே போதும் என்று
புரிந்து ஏற்றுக்கொண்டாளா
என்றும் தெரியவில்லை.
சமீபத்தில்தான்
தெரிய வந்தது,
இப்போதெல்லாம்
வால்மவுண்ட் ஃப்லாட் ஸ்க்ரீன்
டீவிக்கள்தானாமே!!
அந்த
செலவும் மிச்சம் என்று
எண்ணிக்கொண்டேன்.
ஆரம்பத்தில்,
ஆயாவுக்குத்தான்
பொழுது போவது மிகவும் கஷ்டமாக
இருந்தது.
நாள்
முழுக்க தனியாக இருப்பது
கஷ்டம்தானே!
ஆனால்,
ஆயா
பப்புவுக்காக அட்ஜஸ்ட்
செய்துகொண்டார்.
செய்தி
சேனல்களுக்குப் பதில்
செய்தித்தாள்கள் வாசித்தார்.
கதை
புத்தகங்கள் வாசித்தார்.
பப்புவோடு
லாப்டாப்பில் டாம் &
ஜெர்ரி
பார்த்தார்.
முக்கியமான
நேரத்தில் புதிய தலைமுறை
செய்திகளை பார்த்தார்.
ஆங்
சான் சூ கி வீட்டுச் சிறையிலிருந்து
வெளிவந்த போது பார்க்க வேண்டும்
என்று ஆயாவுக்கு அவ்வளவு
ஆசையாக இருந்தது.
நான்
பப்புவை சற்றே பெரியவளாக
இருந்தபோது ஆயாவுடன் அமர்ந்து
மண்டேலா சிறையிலிருந்து
வெளிவந்ததை பார்த்தது நினைவுக்கு
வந்தது.
தொலைக்காட்சியை
மிஸ் செய்தது இது போன்ற
சமயங்களில்தான்.
ஆனால்,
இதையே
எல்லாரும் பின்பற்ற வேண்டும்
என்று சொல்லமுடியாது.
வீட்டில்
நடைமுறையில் இருப்பதை அனுபவமாக
பகிர்ந்துக்கொண்டுள்ளேன்.
உங்களின்
அனுபவங்களையும் கேட்க ஆவலாக
இருக்கிறேன்.
பகிர்ந்துக்
கொள்ளுங்களேன்! பதிவு
எழுதியே கனகாலம் ஆகிவிட்ட
நிலையில்,
எழுதவைத்த
தியானாவுக்கு நன்றிகள்!!
சந்தனமுல்லைக்கு மு(பி)ன்னுரை தேவையில்லை. சித்திரக்கூடம் என்னும் தளத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக எழுதி வருகிறார். தன் மகள் பப்புவை பல புதிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பல புதிய அனுபங்களைக் கற்றுத் தருபவர். சென்ற மாதம் கூட பழங்குடி மக்களான காணி மக்களுடன் இரண்டு நாட்கள் தங்கி அவர்கள் வாழ்க்கை முறையை அறிந்து வந்துள்ளார்கள்.