Friday, August 23, 2013

ஐஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

நேற்று 80F வெயில் அடித்தது. தண்ணீர் மற்றும் ஐஸ் வைத்து விளையாடுவது எப்பொழுதும் குழந்தைகளுக்குப் பிடித்தமான ஒன்று. இந்த வெயிலில் கேட்கவா வேண்டும். சம்முவிற்கு ஐஸ் கட்டிகள் கொடுத்து விளையாட வைத்தேன்.  ஐம்புலனங்களில் ஒன்றான "தொடுதல்" உணர்ச்சி மூலம் புலன் சார்ந்த கற்றலுக்கு ஐஸ் ஏற்றது. 

எவர்சிலவர் பாத்திரம் எளிதில் குளிர்ந்து விடும் என்பதால் விளையாடுவதற்கு எவர்சிலவரைத் தேர்ந்தெடுத்தேன். தண்ணீரை வெறும் ஒரு மணி நேரம் மட்டும் ஃப்ரீசரில் வைத்தேன். அதனால் ஐஸ் எளிதில் உருகுவதற்கு ஏற்றதாக இருந்தது. முதலில் இரண்டு கட்டிகள் மட்டும் கொடுத்தேன்.  அவை கரைந்தவுடன் அவளாகவே ட்ரெயிலிருந்து மீதமிருந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டாள். இரண்டு பாத்திரங்கள் கொடுத்தவுடன் ட்ரான்ஸ்பரிங்(Transferring) செய்தாள். அரைமணி நேரம் விளையாட்டு நீண்டது.


எடுக்க நல்லாயிருக்கே

"G"old....

இரண்டு கையிலும் எடுக்கலாம்

ஈசியா மாற்றலாம்

டிஸ்கி : நேற்று இரவு சற்று இருமினாள். ஐஸ் கொடுத்தனால் தான் என்று நான் பயந்ததை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.


Wednesday, August 21, 2013

பள்ளியில் சேர்ந்த கதை


தீஷு செல்வது மாக்னெட் ஸ்கூல் என்று அழைக்கப்படும் அதிக டிமான்ட் உள்ள ஸ்கூல். பொதுவாக அமெரிக்காவில் நாம் வாசிக்கும் ஸ்கூல் டிஸ்ட்ரிக்ட்டிலுள்ள பள்ளியில் மட்டுமே குழந்தைகளைச் சேர்க்க முடியும். ஆனால் இந்த மாக்னெட் ஸ்கூலில் ஸ்கூல் போர்டில் வரையுறுக்கப்பட்ட அனைத்து பகுதியிலிருந்தும் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். இருக்கும் இடங்களை விட அதிக எண்ணிகையில் விண்ணப்பம் வந்தால் லாட்டெரி முறையில் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் லாட்டெரிக்குச் செல்லும் அளவுக்கு விண்ணப்பம் வந்துவிடும்.

நாங்கள் 2009 ஏப்ரலில் கலிஃபோர்னியாவுக்கு வந்தோம். அந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்க இருந்த கல்வி ஆண்டுக்கு ஜனவரியிலேயே லாட்டெரி முடிந்து இருந்தது. அதாவது லாட்டெரி முடிந்து மூன்று மாதங்கள் கழித்தே நாங்கள் இங்கு வந்திருந்தோம். எங்கள் அபார்ட்மென்ட்டிலிருந்த இரண்டு இந்திய குழந்தைகளுக்கு (தீஷுவின் வகுப்பு தான்) மாக்னெட் பள்ளியில் லாட்டெரியில் இடம் கிடைத்திருந்தது. அவுங்களுக்கு எல்லாம் லக் என்று மற்றவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் எங்கள் டிஸ்ட்ரிக் பள்ளியில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்திருந்தோம். 

சிறிது நாட்கள் கழித்து டிஸ்ட்ரிக் எஜுகேஷன் டிபார்ட்மென்ட்டிலிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் நாங்கள் சேரவிருந்த பள்ளி மாணவர்கள் அதற்கு முந்திய வருடம் அதாவது 2008 கல்வி ஆண்டில் ஆங்கிலத்தில் கலிஃபோர்னியா ஸ்டாண்டார்ட்க்கு மதிப்பெண்கள் பெறவில்லை என்பதால் அந்தப் பள்ளி கிரேட் "பி" யில் உள்ளது என்றும் தரமில்லா பள்ளி என்று எண்ணும் பெற்றோர்கள் அந்த டிஸ்ட்ரிக்கிலுள்ள வேறு பள்ளிக்கு மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று எங்களுக்கு மூன்று பள்ளிகளுக்குச் சாய்ஸ் கொடுத்திருந்தார்கள். அந்த மூன்று பள்ளிகளில் ஒன்று மாக்னெட் பள்ளி. எங்களால் நம்பமுடியவில்லை. மாக்னெட் பள்ளியை முதல் சாய்ஸாகவும், மற்ற இரண்டு பள்ளிகளை இரண்டாம் மூன்றாம் சாய்ஸாகவும்  போட்டு விண்ணப்பித்து இருந்தோம். நாங்கள் எதிர்பார்க்காத முறையில் எங்களுக்கு மாக்னெட் பள்ளியில் இடம் கிடைத்தது. 

வெயிட்டிங் லிஸ்ட்டிலுள்ள எங்களுக்கு அட்மிஷன் போடாமல் உங்களுக்கு எப்படி கொடுத்தார்கள் என்று ஒரு தமிழ் அம்மா என்னிடம் கேட்டார்கள். சத்தியமாக எங்களுக்குத் தெரியவில்லை. யாரோ ஆங்கிலத்தில் குறைவாக மதிப்பெண் எடுத்திருந்ததால் எங்களுக்குப் பள்ளியில் இடம் கிடைத்ததில் எனக்குப் பட்டர்ஃப்ளை எபெக்ட்டில் நம்பிக்கை வந்தது.

டிஸ்கி: இன்று தீஷுவிற்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்துவிட்டது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலில் அவளை இந்தப் பள்ளியில் விட்டது ஞாபகம் வந்ததன் விளைவே இந்தப் பதிவு.

Tuesday, August 13, 2013

முதல் பதிவு

என் முதல் பதிவின் அனுபவம் பற்றி எழுதச் சொல்லி கிரேஸ் என்னைத் தொடர் பதிவில் இணைத்து இருக்கிறார்கள்.  எனக்கு முதல் பதிவு அனுபவம் இரண்டு பதிவுகளால் உண்டு.  

2005 - யில் ப்லாகும், தமிழ்மணமும் எனக்கு என் கணவர் மூலம் அறிமுகமானது. ஆனால் தொடர்ந்து ப்லாக் படிக்கும் வழக்கம் எனக்கு அப்பொழுது இல்லை. என் கணவர் இணைத்தில் நேரம் செலவளிக்கிறார் என்று அவரை திட்டியதும் உண்டு. 

2008 - டில் என் குழந்தையுடன் செலவிடும் நேரத்தையும், அவளுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகளையும் பதிவு செய்ய வழிமுறையை யோசித்த பொழுது என் கணவர் கொடுத்த யோசனை தான் ப்லாக். மிகுந்த யோசனையுடனே ஆரம்பித்தேன். முதலில் ஆங்கிலத்தில் எழுதினேன். என் முதல் பதிவு எதற்கு இந்த ப்லாக் என்று ஒரு அறிமுகப் பதிவு. Little life என்ற பெயரில் எழுதினேன்.    

 "My Preschool daughter's journey" என்ற முதல் பதிவு இது தான்.. 

My 2 years old daugther Dheekshu is going to playschool for 3 half days a week. However I want to be a part of my daughter's learning activities as we both enjoy the same. So we try to spend most of the time together, when she is at house doing some activities. I want to record her activities, challenges, achievements in this blog.

இரண்டு மாதங்களுக்குப் பின்னால் தமிழில் எழுதி தமிழ்மணத்தில் இணைத்தேன். சிலர் படித்தை அறிந்து அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. முதல் பதிவு ‍ தமிழில் என்ற என் முதல் தமிழ் பதிவை இன்று வரை 28 பேர் பார்த்திருக்கிறார்கள் :‍)). ஆங்கிலம், தமிழ் என்று எனக்கு இரண்டு முதல் பதிவுகள் உள்ளன. முதல் பதிவு தமிழில் எழுதி இணைத்துவிட்டதும் ஏதோ பெரிதாக சாதித்த மகிழ்ச்சி.  

இந்த ஐந்து வருட காலத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் சேர்த்து 392 பதிவுகள் எழுதியிருக்கிறேன். எழுத ஊக்கம் அளிக்கும் என் நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிவு எழுதுவதே ஒரு மகிழ்ச்சியான விஷயம். அதிலும் முதல் பதிவு என்பது விசேஷமானது. அதை மனதில் அசைப்போட வைத்த தோழி கிரேஸ் மற்றும் தொடர்பதிவு தொடங்கியவருக்கு என் நன்றிகள். 

யாராவது இதுவரை எழுதாமல் இருந்தால் தொடருங்களேன்.

Thursday, August 1, 2013

கை விரல்களுக்கு..

இந்த இடுகை சின்னச்சிறு விரல்களுக்கு வேலை கொடுக்க செய்த விளையாட்டுகளின் தொகுப்பு. இவை கடந்த மூன்று மாதங்களில் வெவ்வேறு தருணங்களில் செய்த விளையாட்டுகள். பொருட்களை எளிதாக எடுக்க விடாமல், சற்று அழுத்தி இழுத்து விரல்களுக்கு வேலை கொடுத்தேன்.

1. வெல்கரோ

   சோபாவிலிருந்த வெல்கரோவில் மர விளையாட்டுப் பொருட்களின் வெல்கரோவை ஒட்ட ஒட்ட, எடுக்க வேண்டும். இது அனைத்து விரல்களுக்கும் வேலை கொடுக்கும்.

      

2. செல்லோ டேப் பொம்மைகள்

   பொம்மைகளை செல்லோ டேப்பால் ஓட்டி வைத்து விட்டேன். பொம்மைகளை எடுக்க வேண்டும்.


3. செல்லோ டேப்

   பொம்மைகளை எடுத்தப்பின் மீதமிருந்த செல்லோ டேப்பை எடுப்பதே ஒரு சிறு விளையாட்டானது.


4. காந்த வடிவங்கள்

   இது தீஷுவின் விளையாட்டு சாதனம். காந்த வடிவங்களை இரும்பு தட்டிலிருந்து எடுக்க வேண்டும்.


5. ஃப்ரிட்ஜில் காந்த வடிவங்கள்

    ஃப்ரிட்ஜி கதவில் காந்த வடிவங்களை ஒட்டி வைத்தை எடுக்க வேண்டும். விரல்களுடன் தோள் எலும்புகளுக்கும் வேலை.


6.  பென்சில் டப்பா

    பென்சில் டப்பாவை திறந்து மூடுதல்


7. சிடி 

    அதன் பெட்டியிலிருந்து சிடியை எடுத்தல்.


எனக்கு சம்மு செய்யும் பொழுது படங்கள் எடுப்பது கடினமாக இருக்கிறது. நான் படங்கள் எடுக்கிறேன் என்று தெரிந்தால், அவள் கவனம் சிதறுகிறது. ஆகையால் இனிமேல் அவள் செய்யும் பொழுது எடுக்காமல் உபயோகப்படுத்திய பொருட்களை மட்டும் படம் எடுத்துப் போடுகிறேன்.  


சன்டயல் ‍(சுண்டல் அல்ல)

பழங்காலத்தில் சூரியனின் நிலையைப் பொருத்து நேரத்தைக் கணக்கிடம் முறை இருந்தது. சன்டயல் எனும் கருவியால் சூரியனின் நிலையைக் கொண்டு நேரத்தைக் கிட்டத்தட்ட துல்லியமாகக் கணக்கிட முடியும். அதில் பல வடிவங்களும் சிக்கலான பல கணித முறைகளும் உள்ளன. நாங்கள் எளிய முறையில் முயற்சித்தோம்.

ஒரு பேப்பர் தட்டின் நடுவில் சிறு துளையிட்டு பென்சிலை துளையில் நுழைத்து விட்டோம். வெயில் படும் இடத்தில் பேப்பர் தட்டை வைத்து அதைச் சுற்றி சாக்பீஸால் வரைந்து கொண்டோம்.  தட்டு காற்றில் நகராமல் இருக்க ஒரு கல்லைத் தட்டின் மேல் வைத்திருந்தாலும், ஒரு வேளை காற்றில் நகர்ந்து விட்டால் மீண்டும் சரியான இடத்தில் வைப்பதற்காக தான் வரைந்து வைத்தோம். நாங்கள் சரியாக பனிரெண்டு மணிக்கு ஆரம்பித்தோம். 



பென்சிலின் நிழல் தட்டில் படும் இடத்தை குறித்துக் கொண்டு, நேரத்தை எழுதிக் கொண்டோம். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் நிழல் படும் இடத்தைக் குறித்துக் கொண்டோம். இவ்வாறு தொடர்ந்து 5 மணி நேரம் செய்தோம். ஒவ்வொரு மணி நேரத்திலும் நிழல் நகரும் என்று தீஷுவிற்கு தெரிந்திருந்தாலும், நிழலின் நீளமும் மாறியது ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் நிழல் அதே நேரத்தில் அதே இடத்தில் வரும் என்று கணித்தது நடந்ததில் அவளுக்கு மகிழ்ச்சி. வெவ்வேறு பருவத்தில் மாற்றம் இருக்கும் என்று சொன்னதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. வெயில் காலம் முடிந்தவுடன் மீண்டும் அதே தட்டைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.

முன்பு ஒரு முறை எங்கள் நிழல் வைத்துச் செய்திருக்கிறோம். ஒரே இடத்தில் நின்று ஒவ்வொறு மணிநேரம் எங்களின் நிழலை வரைந்து இருக்கிறோம். அதில் நேரத்தைக் கணக்கிட முடியவில்லை என்றாலும் நம் நிழலைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு எளிய முறை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost